சொல்லாத சேதிகள்… (சிறுகதை)
ரோகிணி:
போனமாதம்;தான் எங்கள் இருபத்தைந்தாவது திருமணநாள் மிகச் சிறப்பாக நடந்தது.
எல்லாவற்றையும்; ரஞ்சனிதான் முன்னின்று நடத்தினவள்.
அப்பிடி ஒரு விழாவாக எங்களுக்கும் சொல்லாமல் தன்னுடைய பாடசாலை நண்பர்களுடனும் நண்பிகளுடன் சேர்ந்து அதனைச் செய்திருந்தாள்.
யாரின் கண்கள் பட்டதோ தெரியாது இந்த ஒரு மாதமும் எனக்கு மனம் சரியே இல்லை.
ரஞ்சனி எங்களுக்கு பத்து வருடம் பிந்தி பிறந்த தெய்வக் குழந்தை.
ஒரே குழந்தை.
போகாத கோயில்கள் இல்லை…பார்க்காத வைத்தியங்கள் இல்லை…. அந்தப் பத்து வருடமும் ஒவ்வொரு மாதமும் இந்த முறை வந்துவிடக் கூடாது என்ற பிரார்த்தனையும்.. பின்பு அவை உடைவதும்…நான் கண்ணீர் சிந்துவதும்…அவர் ஆறுதல் படுத்துவதும் மாதம் மாதம் நடக்கும் நிகழ்வாகவே இருந்து வந்தது.
அவரின் குடும்பத்தில் ஐந்து பேரும் ஆண்பிள்ளைகள். அவர்களுக்கு பிறந்ததும் ஆண்பிள்ளைகள். அவர் கடைசி. இவருக்கு கிடைத்த நாலு அண்ணிமாரும் தெய்வங்கள் போல. எங்களுக்கு நம்பிக்கையூட்டி ஊட்டி அந்த பத்து வருடமும் தைரியமாக வைத்திருந்தார்கள்.
நிச்சயமாக அவர்களின் ஆறுதல் இல்லாமல் போயிருந்தால் நாங்கள் உடைந்து போயிருப்பம்.
இவர் எந்த மனக் கவலைகளையும் வெளியில் காட்டிக் கொள்ளமாடாட்டார். அதுக்காக இறுக்கமாக கல்லுப் போலவும் இருக்க மாட்டார்.
எல்லாம் ஒரு நிமிடம் தான். ஆழமாக சிந்திப்பார். பின்பு, ”இது இதுப்படித்தான் நடக்கும்…அல்லது நடக்க வேண்டும்”, என்று சொல்லிவிட்டு தனது வேலைகளைக் கவனிக்குத் தொடங்கி விடுவார்.
கிழமையில் ஆறுநாளும் இவர்மாதிரி கடினமாக உழைத்த எந்த ஆண்களையும் நான் கண்டதில்லை.
ஆனால் ஞாயிறு கிழமை என்பதனை முதல் பத்து வருடமும் எனக்காகவும் பின் வந்த பதினைந்து வருடத்தையும் எனக்காகவும் ரஞ்சனிக்காகவுமே வைத்திருந்து எங்களை எந்தக் குறையும் இல்லாது பார்த்துக் கொள்வார்.
இந்த ஞாயிறு இப்படி இருக்கும் என்று சொல்லமாட்டார். ஆனால் ஞாயிறு வந்து எங்களை மகிழ்ச்சியால் சிதறடிடுத்து விடும்.
அப்பிடி எங்களைக் கவனித்துக் கொள்வார்.
எங்களை மட்டும் இல்லை. தனது நாலு சகோதரங்களின் குடும்பங்களில் என்ன பிரச்சனை என்றாலும் இளையவன் என்றாலும் எல்லாமும் இவரின் ஆலோசனைப்படி தான் நடக்கும்.
அப்படி ஒருவரை என் பக்கத்தில் வைத்து இருந்தாலும் இந்த ஒரு மாதமாய்; நான் படுகிறபாடு எனக்குத்தான் தெரியும்.
எனக்கு அவருடன் இதுபற்றிக் கதைக்க பயமாக இருக்குது. அல்லது ஏன் இப்படி எல்லாம் உனக்கு மூளை வேலை செய்யுது என்று கேட்டு விடுவாரோ என கூச்சமாய் இருக்குது.
எங்கள் இருபத்தைந்தாவது திருமணநாளில் இருந்து ரஞ்சனியின் நடத்தையில் எனக்கு சந்தேகமாய் இருக்கிறது.
அவளுக்கும் எனக்கும் இந்த பதினைந்து வருடத்தில் இதுவரை எந்த ரகசியங்கள் ஒழிவு மறைவுகளும் இல்லை.
பாடசாலையில் இருந்து வந்து ஒரு தாயிடம் சொல்லக் கூடாத கதைகள் எல்லாம் சொல்லியிருக்கின்றாள். அப்படி எந்த ஒளிவு மறைவில்லாமல் இருந்தவள் இந்த ஒரு மாதமாய்; ஏதோ ஒன்றை மறைக்கின்றாள் என என் மனதுக்குபடுகிறது.
நானும் எதுவுமே அவளுக்கு எதையும் மறைக்காமல் வாழ்வின் நன்மை தீமைகள் பற்றி சொல்லிக் கொண்டே இருப்பன்.
ஆனால் இந்த ஒரு மாதமும்;….அவள் அங்கு வந்திருந்த யாரோ ஒருவனை விரும்புகின்றால் போல் என் மனதுக்குபடுகிறது.
பதினைந்து வயது தன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வயதில்லை என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.
அவள் பன்னிரண்டு வயதில் ருதுவான பொழுது அவளுக்கு வாழ்வின் நெளிவுகள்…சுழிவுகள்…போராட்டங்கள் பற்றி எல்லாம் சொல்லிக் கொடுத்து இருக்கின்றன்.
ஆனாலும் ஒரு பயம்…அப்படி ஒரு பயம்….
என் பிள்ளையும் அறியாத வயதில் நான் செய்த மாதிரி ஒரு தப்பைச் செய்து போடும் என்று ஒரு பயம்.
அந்தத் தப்புதான் பின்பு எனக்கு பத்து வருடமு; பிள்ளைவராது போனதுக்கு காரணமோ என்று கூட மனம் கிடந்து சஞ்சலப்படும்.
அம்மா உயிருடன் இருந்தவரை எனக்கு சொல்லிக் கொண்டே இருந்தா, ”நீ மனதால் தப்புச் செய்hதவரை உடலால் நடந்தது எதுவுமே தப்பு இல்லை என்று. நான்தான் உனக்கு உலக நடப்புகளைச் சொல்லித் தந்திருக்க வேண்டும். அது என் தப்புத்தான் மகளே…உன் தப்பு இல்லை என்று…. வீட்டுக்குள்ளை ரியூசன் வாத்தி என்று ஒருத்தரை விட்ட பொழுது அவர் ஒரு ஆண்பிள்ளை என்று நினைக்காதது எனதும் உன் அப்பாவினதும் தப்புத்தான். அதைவிடவும் உன்னையும் ரியூசன் வாத்தியையையும் தனியே விட்டு விட்டு அன்று கோயில் தேர்த்திருவிழாக்கு போனது அதைவிட பெரிய தப்பு”
அம்மா சொன்னதுகளை மனம் நூறு வீதம் ஏற்றாலும்…அல்லது நியாயப்படுத்தினாலும்…எனக்கு அவருடன் வாழ்ந்த முதல் பத்து வருடமும் அவருக்கு அது பற்றி எதுவும் சொல்லாதது உறுத்தலாகவே இருந்தது. ரஞ்சனி பிறந்து அவளே உலகம் என்றான பிறகுதான் அது கொஞ்சம் கொஞ்சமாக மறைநதது. ஆனாலும் சிலவேளை தலையை நீட்டி எள்ளி நகையாடி விட்டுப் போகும்.
நான் செய்ததுகளை என் பிள்ளை செய்யும் என்றோ அல்லது எனக்கு நடந்தவைகள் என் பிள்ளைக்கு நடந்து விடுமோ என்று பயப்பிடுவதில் எந்த நியாயமும் இல்லை என அறிவுக்கு தெரிந்தாலும் ஒரு தாய்மனதுக்கு புரியுதில்லை.
அதனால்தான் இந்தத் தவிப்பு.
ஆனால் அவர் வழமைபோல எதுவுமே தெரியாத மாதிரி திரிகிறார்.
அவருக்கு ரஞ்சனியில் ஏற்பட்டிருக்கிற மாற்றம் எதுவும் அவர் கண்களுக்குத் தெரியவில்லையா?
வீட்டுக்குள் இருந்து படித்துக் கொண்டு இருப்பவள் கைத் தொலைபேசி அடித்தவுடன் பின் வாழைத்தோட்டத்துக்கு கொண்டு சென்று கதைத்துக் கொண்டிருப்பததை நான் மட்டும்தான் கவனிக்கிறனா? அல்லது அவர் கவனித்தும் கவனிக்காத மாதிரி இருக்கின்றாரா?
எனக்கு என் அண்ணி உறவுகளைத் தவிர தோழி என்று யாருமே இல்லை. ஆனால் ரஞ்சனி பிறந்த பிறகு அவள்தான் தோழி போலை.
இவரே சிரிப்பார், ”நீங்கள் தாயும் மகளுமா?… அல்லது தோழிகளா”என்று.
றோட்டால் போகும் பொழுது தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் இது தாய் மகள் என்று. மற்றுவர்கள் சகோதரங்கள் என்று தான் நினைப்பார்கள். சிலவேளை தோழிகள் என்றும் நினைக்க கூடும். அப்படித்தான் தோற்றமும்.
ஆனால் இந்த ஒரு கிழமையும் அதில் ஒரு கீறல் விழுந்த மாதிரி.
அவள் எதையும் எனக்கு காட்டிக் கொள்ளவில்லை. அல்லது காட்டிக் கொள்ளக் கூடாது என்று கவனமாக இருக்கின்றாள் போலும்.
மனம் கனக்கின்றது.
மன்றாடுகிறது.
ரஞ்சனி!
உன் அம்மாவிடம் எதையும் மறைத்து விடாதே.
எங்களுக்கு இடையில் எந்த இடைவெளியும் வந்து விட வேண்டாம்.
நீ யாரையாவது காதலித்தால் அவனையும் எனக்கு காட்டு.
உனது எந்தச் சின்னச் சின்ன சந்தோசங்களும் சிதறிவிடாமல் விலகியே இருந்து உன்னையும் உன்னவனையும் நான் ரசிப்பேன்.
*
இராமநாதன்:
இந்த ஒரு மாதமாக ரோகிணி படும்பாடு எனக்கு நன்கு தெரியும்.
ஆனால் அதனை நான் கண்டு கொள்ளவே இல்லை.
அவளும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
எனக்குத் தெரிந்தது என்று நானாக காட்டிக் கொண்டால் பின்பு என்னை அமைதியாக இருக்க விடமாட்டாள்.
ரோகிணி சொல்வது போல இது உண்மையாயின் ரஞ்சனி நிச்சயமாகச் தானாக என்னிடமும் அவளிடமும் சொல்லுவாள் அதுவரை அது ரஞ்சனியின் அந்தரங்க விடயமாகவே இருக்கட்டும்.
ரோகினி என்னை நூறு வீதம் நேசித்தாலும் ரஞ்சனியில் ஆயிரம் மடங்கு உயிரையே வைத்திருத்திருக்கின்றாள். அந்த உரிமையில் அவள் ரஞ்சனியின் சின்ன சின்ன விடயங்களில் அதிகமாகவே தலையிடுகிறாள் என்று எனக்குத் தெரியும்.
ஆனால் ஒருவரின் இரகசியங்களும் சேர்த்ததுதான் வாழ்வு என்பதனையும்…அதுவே வாழ்விற்கு அழகு சேர்க்கும் என்று எப்படி அவளுக்கு நான் விளங்கப்படுத்துவேன்.
நீரோடையாக ஓடும் இந்த இனிமையான இருபத்தைந்து வருட தாம்பத்தியத்துக்கு முன்பு எனது பதினெட்டாவது வயதின் அத்தியாயங்கள் இன்றுவரை ரோகிணிக்குச் தெரியாது.
தெரிய வேண்டும் என்றும் அல்லது தெரியப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புவதில்லை.
அது எனக்கான ஆட்டோகிராவ். அதில் கௌரியின் கை எழுத்து மட்டுமே உண்டு.
எதற்காக தானாக என்னிடம் வந்தாள்…எதற்காக என்னுடன் உயிராக இருந்தாள்… எதற்காக எதுவும் சொல்லாது என்னை விட்டு விட்டுப் போனால் என்று எந்த ஆராய்ச்சியும் நான் செய்வதில்லை. ஆனால் அந்த இரண்டு வருடமும் அவள் எனக்கு தந்த இனிமையான நினைவுகளுக்காகவே நான் அவளை மறப்பதில்லை…. திட்டுவதில்லை…. சபிப்பதில்லை.
அந்த நினைவுகள் மயிலிறகால் இதயத்தை வருடுவது போல சுகமாக இருக்கும்.
இந்த இருபத்தைந்து வருடம் ரோகிணியுடன் வாழும் வாழ்க்கை தரும் சந்தோசமும் …. பதினைந்து வருடமாக ரஞ்சனியுடன் வாழும் வாழ்க்கை தரும் சந்தோசமும்;…. எனக்கு தந்து கொண்டிருக்கின்ற மகிழ்ச்சியை கௌரியைக் காதலித்த அந்த இரண்டு வருடமும் தந்தது என்பதும் மறுக்க முடியாத ஓர் உண்மை.
ஆனால் அதுக்காக இன்று அதனை இழந்து தவிக்கின்றேன் என்றோ ரோகிணியில் சரி ரஞ்சனியில் சரி ஒரு துளியேனும் அன்பு பாசம் குறைந்த வாழ்வு என்றோ அர்த்தம் இல்லை.
அது ஒரு கடந்த காலம்.
இது ஒரு நிகழ்காலம்.
இரண்டுமே மகிழ்வானது என்பதுதான் உண்மை.
*
வழமையான நீண்ட நேர ஞாயிறு கிழமை நித்திரை இராமநாதனுக்கு உடம்பிலும் மனதிலும் ஒரு புது உற்சாகத்தைக் கொடுத்தது போல இருந்தது.
ரஞ்சனி தனது வகுப்புத் தோழியின் தங்கைக்கு முதல் நன்மைக்கான அழைப்பு வந்தது என்று அதிகாலையே ஆட்டோ பிடித்துக் கொண்டு அந்தோனியார் கோவிலுக்குப் போய் விட்டாள்.
ரோகிணிக்கு மட்டும் மனதுள் ஒரு கலக்கம், ”ரஞ்சனி அங்குதான் போகின்றாளா அல்லது வேறு எங்காவது?… வேறு யாருடனாவது?”என்று.
வெள்ளிக்கிழமை காலைகளில் பக்கத்தே இருக்கும் கோவிலுக்கு வா என்றால் போர்வைக்குள் மேலும் குறுகிக் கொள்ளும்; ரோகிணி இன்று அதிகாலையிலே எழுந்து அந்தோனியார் கோவிலுக்கு போகின்றால் என்றால் அதுக்கு தோழிவீட்டு விழா மட்டும் தானா காரணம்?…அல்லது வேறு ஏதாவது?…. மனம் சுவர்மணிக்கூட்டின் பென்டூலமாக முன்னேயும் பின்னேயுமாக ஆடியது.
அந்த நினைப்பு தந்த படபடப்பினால் ரோகிணி குசினியுள் ஒரு கிளாசைத் தவற விட்டு விட்டாள்.
”என்னப்பா…காலைமையே…”இராமநாதன் படுக்கையில் இருந்தபடியே பஞ்சி முறித்தார்.
”உங்களுக்கு என்னப்பா?…பூமி நடுக்கம் வந்தாலும் மற்றப்பக்கம் திருப்பி படுக்கிற ஆள் நீங்கள்…உங்களுக்கு என்ன கவலை?… நான் தான் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுக் கொண்டு தள்ளாடுறன்.”
”ரோகிணி…இதிலை வந்து பக்கத்திலை இந்தக் கட்டிலை இரு”
தலைமாட்டில் வந்து கட்டிலின் ஓரமாய் இருந்தாள்.
“இந்த ஒரு கிழமையாய் நீ படுகிறபாட்டைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறன்”
“பார்த்து சந்தோசப்பட்டுக் கொண்டா இருந்தனீங்கள்?… தகப்பன் என்ற ஒரு பொறுப்பாவது உங்களுக்கு இருக்கா?”
“ஹமோன் மை டியர்…முதலில் உன் படபடப்பை நிற்பாட்டு”என்றவாறு அவளின் மடியில் தன் தலையை வைத்துக் கொண்டார்.
அவளுக்கு அது கொஞ்சம் இதமாக இருந்தது.
ஆனாலும் “குழந்தை இல்லாத வீட்டில் கிழம் கூத்தடிக்குது”என்று சீண்டினாள்.
“ரோகிணி”
“சொல்லுங்கோ”
“இப்ப நாங்கள் கலியாணம் செய்து எத்தனை வருடங்கள்?”
“இதென்ன கேள்வி?… போனமாதம் தான் ஊரைக்கூட்டி இருபத்தைந்தாவது திருமணநாள் கொண்டாடினாங்கள்.”
“ஊம்…தெரியும்”
“ரஞ்சனிக்கு இப்ப எத்தினை வயது?”
“என்னப்பா உங்களுக்கு நடந்தது?”
”இல்லை…நீ சொல்லு”
“பதினைந்து வயது”
“ஊம்…இந்த இருபத்தைந்து வருடத்தில் நீ எனக்கு!… நான் உனக்கு!!…. என்று சந்தோசமாய்தானே வாழுறம்”
”உண்மையாய் சொல்லுங்கோ! உங்களுக்கு என்ன நடந்தது?”
”சொல்லுறன்…என்னதான் உயிராய் நாங்கள் வாழ்ந்தாலும் உனக்குத் தெரியாத விடயங்கள் என் வாழ்விலும்…எனக்குத் தெரியாத விடயங்கள் உன் வாழ்விலும் நடந்திருக்கலாம் தானே?”
ரோகிணிக்கு உடம்புக்குள் உதறல் எடுத்தது.
”என்னப்பா சொல்லுறியள்?”
”நடந்தது என்று சொல்லவில்லை…நடந்திருந்தாலும் இந்த இருபத்தைந்து வருடத்தில் எல்லாத்தையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் தானே?”
இராமநாதனின் முகத்தைப் பார்க்காமல் கட்டிலில் இருந்தபடியே யன்னலுக்கு வெளிNயு பார்த்தபடியே “ஊம்…”கொட்டினாள்.
முனம் பயத்தில் உறைந்தது போல இருந்தது.
”இப்படி இருக்கும் பொழுது பதினைந்து வருடம் மட்டும் எங்களுடன் வாழுற எங்கடை பிள்ளை எல்லாத்தையும் உனக்கு சொல்ல வேண்டும் என்று எப்பிடி நீ எதிர்பார்ப்பாய்?”
ரோகிணியின் கன்னங்கள் வழியே கண்ணீர் ஓடியது.
இராமநாதனின் கை அவளின் விரல்களை இறுக அணைத்தது.
விரல்களின் சமிக்ஞையினூடு இராமநாதன் சொன்ன சொல்லாத சேதிகளின் அர்த்தம் ரோகிணிக்கு நன்கு விளங்கியது.
அவனி;ன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
அவனின் கைகள் அவளது தலையை ஆதரவாக தடவியது.
Skriv et svar