சுருதிபேதம்

சுருதிபேதம்

அக்கினியை வலம் வந்து முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக நடைபெறும் திருமணமானாலும் சரி…

பிதா,  சுதன்,பரிசுத்த ஆவியின் பெயரால் இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்திருப்போம்என தேவாலயத்தில் செய்யப்டும் திருமணமானாலும் சரி…

‘‘அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாவின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்”என்ற குரான் வாசகத்தைச் சொல்லியபடி ஆரம்பிக்கும் திருமணங்கள் ஆனாலும்சரி…. எந்தச் சமய சடங்குகளும் தேவையில்லை…அதில் நம்பிக்கை இல்லை என்றுவிட்டு சட்டத்தின் சாட்சியாக நகர மண்டபங்களில் செய்யப்படும்திருமணங்கள் ஆனாலும்சரி….

உனக்கு நானும் எனக்கு நீயும் உண்மையாக வாழ வேண்டும் என்ற அதிகுறைந்த உத்தரவாதத்தில் தான் (மினிமம் கறண்ரி) அதிகமானோர்திருமணவாழ்க்கையுள் காலடி எடுத்து வைக்கின்றார்கள்.

*

சண்முகலிங்கம் மாஸ்டருடன் 16 வருட திருமண வாழ்க்கை. தங்கையின் பிள்ளை சுஜித்தாவை இலங்கையில் இருந்து தத்தெடுத்து வளர்த்து இப்போ பெரியவளாகி சென்றவருடம் அவளுக்கு விமரிசையாக சாமத்தியவீடு நடாத்தப்பட்டது. அவள் இப்போதும் சண்முகலிங்கம் மாஸ்டரையும்; சாரதாவையும் தான் தகப்பன் தாய் என நம்பிக் கொண்டு இருக்கின்றாள்.

குழந்தைகள் காப்பகத்தில் இருந்து கிரியை நடக்கும் இடத்துக்கு சுஜித்தா வந்த பொழுது சண்முகலிங்கம் மாஸ்டர் தன்னையும் மீறி வெம்பி வெடித்து, சாரதாவைப் பார்த்து ”என்ரை பிள்ளையை நடுறோட்டிலை விட்டுட்டியே” என அழுதிராது விட்டால் சவப்பெட்டியினுள் எல்லாம் போட்டு மூடப்பட்டது போலிருந்திருக்கும்.

*
ஊரில் ரியூசன் சொல்லிக் கொடு;த்ததால் சண்முகலிங்கம் மாஸ்டர் என அன்பாக அனைவராலும் அழைக்கப்பட்ட சண்முகலிங்கம் பல நாடுகளுக்கு ஊடகவும்;, சாரதா சவுதி அரேபியாவில் வேலைபார்த்து விட்டு நேரடியாக 89இன் கடைசியில் அகதி அந்தஸ்துக்கோரி டென்மார்க்கிற்கு வந்தவர்கள்.

அகதி அந்தஸ்த்திற்காக காத்திருப்பில் செஞ்சிலுவைச் சங்கமுகாமில் காத்திருந்த பொழுதுதான் யாருக்கும் காத்திராத காலம் போல இவர்களுக்குள்ளும் ஒரு கவர்ச்சி வந்தது.

பின்பென்ன?… அவர்கள் இருந்த கட்டடத்தில் வசித்த இரண்டொரு தமிழர்கள், ஆப்கானிஸ்தர்கள், ஆபிரிக்காவினர், டெனிஷ் ஊழியர்கள் முன்னிலையில் இருவரும் மோதிரமும் மாற்றிக் கொண்டார்கள்.

தனித்தனியே அறையில் வாழ்ந்த இவர்களுக்கு தனி அறை கொடுக்கப்பட்டு இரண்டு கட்டில்கள் ஒன்றாக இணைக்கப்பட்டன.
கட்டில்கள் இணைந்தளவிற்கு சாரதாவுடன் தன்னால் இணையமுடியவில்லை என சண்முகலிங்க மாஸ்டர் உணர்ந்த பொழுது முதன் முதலாக தலை குனிந்தார்.

சாரதா அழுது கொண்டே இருந்தாள்.

அடுத்தநாள் மிக அமைதியாக சாரதாவிடம் எடு;துச் சொன்னார் விலகிவிடுவோம் என்று.

சாராதா சம்மதிக்கவே இல்லை.

”எந்த தமிழ்ச் சென்ரிமென்ரல்களுக்கும் இடம் கொடுத்து உனது வாழ்க்கையை வீணடிக்காதே”

”குழந்தை பெறுவது மட்டும்தான் வாழ்க்கையா?”

”குழந்தை பெறுவது இரண்டாம் பட்சம். இது உனக்கான சந்தோசங்கள்… தேவைகள்… அதுகளை நீயாக சிதறடிக்காதே….”

“இல்லை அப்பிடி எதுவும் எனக்கு இல்லை”

“உன் அறிவும் மனதும் சொல்லுறதை எப்போதும் உன் உடம்பு கேட்கும் என்று இல்லைச் சாரதா”

“அப்பிடி ஒரு நிலை வந்தால் நிச்சயம் உங்களுக்குச் சொல்லி விட்டு நான் போறன். சரியா?”

அத்துடன் அன்றைய சம்பாஷணை முடிந்தது.

அடுத்தடுத்த வருடம் சுஜித்தாவை தத்தெடுத்துக் கொண்டார்கள்.

*
இலைதளிர், கோடை, இலையுதிர், பனிகாலம் என நான்கு கால ஒட்டத்தில் வருடங்களும் ஓடிக்கொண்டு இருந்தது.

சுஜித்தாவும் வளர்ந்து கொண்டு இருந்தாள்.

இரவு பகல் பாராத சண்முகலிங்கம் மாஸ்டரின் கடின உழைப்பு தொடர்மாடிக் கட்டடத்;தில் இருந்த அவர்களவு வாழ்வுதனை புதிகக் கட்டிய பெரிய பங்களாற்கு மாற்றியது. சாரதாவும் இ;ப்போது பகுதி நேர வேலைக்குப் போகத் தொடங்கி இருந்தாள்.
வீட்டிற்கு முன் இப்போது இரண்டு கார்கள்.

சாரதா வீட்டில் இருக்கும் பொழுது சண்முகலிங்கம் மாஸ்டர் வேலைக்குப் போயிருப்பார் அவர் வேலையால் வரும் பொழுது சாரதா தன் வேலைக்களையினால் தூங்கிக் கொண்டிருப்பாள்… அல்லது வேலைக்குப் போயிருப்பாள். ஆனால் சுஜித்தாவிற்கு அவர்கள் இருவரும் எந்தக் குறையும் விடவில்லை. அப்பா அம்மா பாசம் நிறையவே கிடைத்தது.

சாராதாவின் வேலையிடத்து புதுச் சினேகிதங்கள புது உலகத்தை அவளுக்கு காட்டத் தொடங்கியது. மனம் சொல்வதை உடல் கேட்காத திசையை நோக்கி வாழ்வு கண் சிமிட்டுவதை பார்த்திபன் மூலம் உணர்ந்தாள்.

சிரிக்க சிரிக்க பேசுவான். என்ன உதவி என்றாலும் சாரதாவுக்கு ஓடி ஒடிச் செய்வான். ஒரு டெனிஷ் பெண்ணைத் திருமணம் செய்து விவாகரத்துப் பெற்றவன் என்பதெல்லாம் அவனைத் தகுதிக் குறைவாக சாரதாவுக்கு காட்டவில்லை.

நெருக்கி வருகின்றான் என்பதும் நெருங்கிச் செல்கின்றேன் என்பதும் சாரதா உணர்ந்த பொழுது ஒரு சனி இரவு தலைகுனிந்தவாறு சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்தாள்.

“என்ன?” சண்முகலிங்க மாஸ்டர் கேட்டார்.

அவள் கண்கள் கலங்கியது.

“சொல்லு”

“எனக்கு பயமாய் இருக்கு”

“எதுக்கு?”

“உங்களை விட்டுப் போய்விடுவோனோ என்று”

சண்முகலிங்கம் மாஸ்டருக்கு எல்லாம் புரிந்து விட்டது.

ஒரு கிளாஸ் குளிர் தண்ணீரை எடுத்துக் குடித்தார்.

“சுஜித்தா மட்டும் இல்லாவிட்டால் இப்பவே போ என வாசல்கதவைத் திறந்து விடுவன்”

“இல்லை… அப்பிடி நான் பிள்ளையை உங்களிட்டை இருந்து எடுத்துக் கொண்டு போக விரும்பேல்லை”

“அப்பிடி என்றால்..”

அவள் கண் கலங்கினாள்.

“சரி… நீ விரும்பிய நேரம் போயிட்டு வா” சொல்லி விட்டு காரை எடுத்துக் கொண்டு கடற்கரை வீதியில் நேரம் போவது தெரியாமல் போய்க் கொண்டு இருந்தார்.

மனமும் உடலும் களைத்த போது காரை வீதியோரமாக நிறுத்தி விட்டு அன்றிரவு காரினுள்ளேயே தூங்கி விட்டார்.

உண்மைகள் சுடத்தான் செய்கின்றன வாழ்வில்.

*
அடுத்த நாள் முதல் வீட்டில் ஏதும் நடக்காதது போல வாழ்வு நகரத் தொடங்கி இருந்தது.

சாரதா பார்த்திபன் வீட்டை போய் வருவதும்… சுஜித்தாவும் சண்முகலிங்கம் மாஸ்டரும்; இல்லாத சமயத்தில் பார்த்திபன் சாரதா வீட்டிற்கு வந்து போவதும் ஒரு அன்றாட நிகழ்வாக நிகழத் தொடங்கியது.

கடை வீதியில் சுஜித்தாவும் சாரதாவும் பாhத்திபனை சந்திக்க வேண்டி வந்த பொழுது   “பார்த்திபன் மாமா” என சாரதாவால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டிருந்தாள்.

கோடுகளை போட்டுக் கொண்டு திக்குமுக்காடும் வாழ்வு பெரிதா… கோடுகளை தகர்த்தெறிந்து விட்டு வாழ்வினை அதன்வழியில் ஏற்று வாழ்வது சரியா என்ற போராட்டம் இடைக்கிடை சாராதாக்கு சரி சண்முகலிங்க மாஸ்டருக்கு சரி எழாமல் இல்லை. ஆனால் அதற்கு விடை தேடினால்  இன்று உள்ள நிம்மதி இல்லாமல் போய்… இருவரும் உண்மையாக இருக்கும் வாழ்வு பொய்யாகப் போய்விட வேண்டாம் என்று அமைதியாகவே இருந்தார்கள்.

அப்போதுதான் ஒரு நாள் காலை வேலைக்கு வந்து இறங்கிய பொழுது தொழிற்சாலை கலபுலப்பட்டது. இரண்டு பொலிஸார் பார்த்திபனை கை விலங்கிட்டு கூட்டிச் சென்று கொண்டு இருந்தார்கள். பலர் பலமாதிரியும் குசுகுசுத்தார்கள். சாராதாவைக் கண்டதும் குரல்கள் தாழ்ந்து கொண்டது.
அடுத் சில வினாடிகளில் சண்முகலிங்கம் மாஸ்டருக்கும் சாரதாவுக்கும் சுஜித்தாவின் பாடசாலையில் இருந்து தொலைபேசி வந்தது –

இருவரையும் உடனடியாக பள்ளிக் கூடம் வரும்படி.

இருவருமே பகுதி நேர லீவு எடுத்துக் கொண்டு போன போது அதிர்ந்து விட்டார்கள்.

சுஜித்தா அதிபரின் அறையுள் அழுது கொண்டிருந்தாள்.

பக்கத்தில் வகுப்பாசிரியர்.

“உங்கள் வீட்டுக்கு வந்து போகும் பார்த்திபன் என்பவர்….”

அதுக்கு பின்பு எதையும் கேட்க இருவரின் காதும் மறுத்து விட்டது.

“உங்களின் பிள்ளைக்கு உங்களின் வீடு பாதுகாப்பான ஒரு இடமாக இல்லை எனக் கருதுவதால் நகரசபை அவரை குழந்தைகள் பாராமரிப்பதில் வைத்து பாராமரிப்பதே அவரின் எதிர் காலத்திற்கு நல்லது எனத் தீhமானிக்கின்றது” – அன்று மாலையே நகரசபை எடுத்த முடிவு அவர்கள்

இருவரையும் அதிர வைத்தது.

அதுவே சாரதாவின் தற்கொலைக்கும் காரணமாகியது.

*
“ஏனப்பா அம்மா உங்களுக்கு துரோகம் செய்தவா…. ஏனப்பா பார்த்திபன் மாமா அப்பிடி எனக்குச் செய்தவர்” என சுஜித்தா கேட்ட பொழுது பதில் சொல்லத் தெரியாது சண்முகலிங்கம் மாஸ்டர் அழுது கொண்டே இருந்தார்.
 *

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)