சுனாமி 2014 – சிறுகதை
சுனாமி 2014 – சிறுகதை
இன்னமும் பத்து நாட்களே பாக்கி இருக்கின்றது.
ஒரு பழக்கத்தினுள் எங்களை முற்றாக ஐக்கியமாக்கிக் கொள்வதற்கு அல்லது அதிலிருந்து விடுதலை பெற்றுக் கொள்வதற்கு 21 நாட்கள் கணக்கு என்ற ஒன்றை மனோதத்துவ உலகம் வைத்திருக்கின்றது. இந்த 21 நாட்களுக்கு பின்னால் அது பழக்கமாகி விட்டுவிடும்.
மரணவீட்டின் கவலைகள்… திருமணவீட்டின் களைகள்…. குழந்தைப் பேறின் வலிகள் அத்தனைக்கும் இந்த 21 நாட்கள்தான் கணக்கு. அதிலிருந்து தேறிச் செய்யும் சடங்குகள் தான் இந்த 31நாள் கணக்குகள். அந்தியேட்டி… தாய்வீடு செல்லல்…. துடக்குகழிவு…இன்னும் பல இவ்வாறு தொடரும்.
இந்தக் கணக்கு உண்மையானால் எனக்கு இன்னமும் பத்து நாட்கள் மட்டுமே உண்டு – வைதேகியின் நினைவுகளை நான் மறப்பதற்கு!
11 நாட்கள் போய்விட்டது. அல்லது போக்கடித்து விட்டேன்.
இன்னும் பத்து நாட்கள் கடந்து விட்டால் எல்லாமே என்றிருந்தது எதுவுமே இல்லாமல் போய்விடும் என்று நம்புகின்றேன்.
அப்படியே போய் விடவும் வேண்டும் என விரும்புகின்றேன்.
ஏன் சுனாமி வந்தது?… ஏன் பிரளயம் வந்தது?… ஏன் பூமி நடுக்கம் வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம் பார்க்க முடியாதோ அவ்வாறுதான் இந்த முகநூல் காதல் எனக்கும் வந்தது.
35 வயது. 3 பிள்ளைகளின் தந்தை. பாடசாலையின் உப அதிபர்;. அது கொடுத்த மடிக்கணனி எக்ஸ்செற்றா… எக்ஸ்செற்றா வசதிகள்….
பத்து வருடத்திற்கு முன் சாதி பார்த்து… சாதகம் பார்த்து… சீதனம் பார்த்து… பெண்பார்த்து… அம்மி மிதித்து அருந்ததி பார்த்து கோகிலாவுடன் செய்த திருமணம்தான் எனது.
முதல் 5 வருடங்களுள் மூன்று பிள்ளைகளின் பிறப்பு வளர்ப்பு என்று மாறி மாறி ஓடிக்கொண்டிருந்தாலும் அடுத்த 5 வருடங்கள் எந்த சந்த மாற்றங்களும் இன்றி தாம்பரம் பீச் மின்சார றெயின் மாதிரி காலையும் மாலையும மாறி மாறி ஓடிக்கொண்டு இருந்தது.
மாதச்சம்பளம் மாதம்; 25ம் திகதியே முடிந்து விட பால்காரன், கீரைக்காறி, மளிகைக் கடன்காரன் என்று கடைசி ஐந்து நாட்களும் கடனிலும்… ”அப்பா முதலாம் திகதிக்கு முதல் ரூர் போற காசு கட்ட வேண்டும்… ரியூசன் ரீச்சர் காசுக்கு நெருக்குகின்றா… ” என்று சின்னத் சின்னத் தவணைக் கடன்களும் கழுத்தை நெருக்க சாப்பாடு தொண்டைக் குழிக்குள் இறங்குவது கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கும்.
பொழுது போக்குகிற்கு ஒரு சினிமாப்படமோ அல்லது மெரீனா பீச்சுக்கோ செல்வதற்கு கூட வீட்டின் எந்த மூலையைத் தடவினாலும் சில்லறைக் காசுகள் கூட இராது. முன் தெருவைக் கடந்து கொஞ்சம் சென்றால் இருக்கும் கற்பகவிநாயர் கோயிலடிக்கு காலாற நடந்து சென்று வந்தாலும் அங்கு காணும்; நண்பர்களுடன் எத்தனை நேரம்தான் சல்லாபித்துக் கொண்டு நிற்பது.
அவ்வழியால் செல்லும் பால்காரன் சரி, கீரைக்காறி சரி சர்வசாதாரணமாகப் பார்த்துச் சிரித்தாலும் ஏதோ கடன்காரர்களைப் பார்த்து தலை குனிவது போலத் தோன்றும்.
இந்த சின்ன சின்ன சினப்புகள் மூட்டும்; சின்ன சின்ன பொறிகள் சிலவேளை எனக்கும் கோகிலாக்கும் இடையில் இலகுவில் பற்றி எரியத் தொடங்கும். பின் அது அணைய அடுத்த இரண்டு மூன்று நாட்கள் ஆகும். அல்லது அடுத்து முதலாம்; திகதி ஆகும்.
வருமானத்துக்கு எந்த புது வழியும் இல்லாது… செலவு மட்டும் அதிகரித்துக் கொண்டு செல்லும் என் போன்ற நடுத்தர குடும்பங்களின் பொழுதுபோக்கு நண்பனாக… அல்லது நண்பியாக அமைந்ததுதான் இந்த இன்ரநெற்… முகநூல்… ரிவிற்றர் எல்லாமே.
முகநூல்!
புதுப்புது நண்பர்கள்.. புதுப்புது அனுபவங்கள்.. புதுப்புது தகவல்கள்… புதுப்புது பரிமாற்றங்கள்… இரத்த நாள நாடிகளில் புது வெள்ளம் பாய்ந்தது போல அப்படி ஒரு அனுபவமாய் இருந்தது.
முப்பது நிமிட மதிய இடைவெளியை பத்து நிமிடத்துள் குறைத்துக் கொண்டு மற்ற இருபது நிமிடமும் கணனி உலகத்துள்ளும் என் முகநூல் நண்பர்களுடனுன் சற்தான்;.
முன்பெல்லாம் என் காலை மாலைப் புகையிரதப் பயணத்தின் பொழுது போக்கு யன்னல் கரைச் சீற்றும் அதில் இருந்தபடி வயல்கரைகளையும் பார்த்தபடி… அங்கிருந்து கை காட்டும் சிறுவர்களை ரசித்தபடி செல்வதும் தான். அல்லது கையில் ஒரு கல்கியினுள்ளேயோ அல்லது குமுதத்தினுள்ளேயோ மூழ்கியிருப்பேன்.
இப்போது எல்லாம் ஐபோனும் அதில் என் முகநூல்; நண்பர்களும் நண்பிகளும் தான்.
நான் வேலைக்குச் செல்லும் பொழுது என் அமெரிக்க முகநூல் நண்பர்கள் தூங்கிக் கொண்டு இருப்பார்கள். அவுஸ்திரேலிய நண்பர்கள் மதிய உணவு இடைவேளைக்குப் போய் இருப்பார்கள்.
என் புதிய போக்கு வீட்டுக்குள் ஒரு புது அமைதியை கொண்டு வந்ததை கோகிலா கண்டும் காணாமலும் இருந்தாலும் ஒருநாள் அவளே சொன்னாள், ”கவனமப்பா.. உந்த பேஸ்புக்ஸால் அதிக பிரச்சனைகள் வருகுதாம்”, என்று.
அதில் ஒரு எச்சரிக்கையும் என்மீது அக்கறையும்; இருந்தது.
ஆனால் அது கூட எனக்கு எரிச்சல் ஊட்டுவதாய் இருந்தது.
கோகிலாவை அழைத்து எனது தோழர் தோழிகள் விபரங்களை காட்டினேன்.
”பார்த்தியா?… உலகத்தில் எத்;தனை பெரிய மனிதர்கள்… எத்தனை படித்தவர்கள்… ”
அத்தபேரின் விபரங்களைக் காட்டிய பொழுது மௌனமானவே அவள் அவ்விடத்தில் இருந்து விலகி விஜய் ரி.வி.யின் மாகாபாரத்துனுள் மூழ்கினாள்.
மீண்டும் நான் கணனியுள் மூழ்கிய பொழுது நண்பர் இணைப்புக் கோரி ஒரு விண்ணப்பம் வந்திருந்தது. பெயர் வைதேகி. அரசு உயர் அதிகாரி. கணவன் வைர வியாபாரத்தில் நொடித்துப் போன ஒது துணிக்கடை வியாபாரி. நான்கு பிள்ளைகள்.
அழைப்பை ஏற்ற மறுகணமே வைதேகி எனக்கு மாலை வணக்கம் சொல்லிக் கொண்டு கணனித்திரையின் மூலையில் நின்றிருந்தாள்.
நானும் பதில் வணக்கம் சொல்லிக் கொண்டேன்.
சாதாரணமாக தொடங்கிய உரையாடல் முடியும் தறுவாய் வந்த பொழுது நாகரீகம் காரணமாக ஆங்கிலத்தில் ”றிகாட்ஸ் யுவர் பெற்ற காவ் (உங்கள் வாழ்வின் சரிபாதி உடையவருக்கு எனது வாழ்த்துகள்)” என ஓர் இடுகையை இட்டிருந்தேன்.
அடுத்த கணமே ”எனது வாழ்க்கையில் அது கால்பகுதி மட்டுமே;” என பதில் வந்;திருந்தது.
”ஏன்”
”அது தான் என் விதி”
எனக்குள் ஒரு குறுகுறுப்பு.
”உங்கள் திருமணம் காதல் திருமணமா?”
”இல்லை… பேசிச் செய்தது… ஏமாந்து விட்டேன்.. பிள்ளைகளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்”
”மன்னியுங்கள்.. உங்கள் சொந்த வாழ்வைக் கேட்டு மனதை நோகடித்து விட்டேன்”
”இல்லை.. உங்களைப் போல் நல்ல மனிதர்களின் வார்த்தை எனக்கு ஆறுதலைத் தருகின்றது”
”நன்றி.. இரவு பத்தரை மணியாகின்றது.. நாளை தொடர்வோம்…”
”சுவீற் றீம்ஸ்” என்றவாறு அவள் விடைபெற்றக் கொண்டாள்.
எனக்குள் ஒரு கேள்வி!
கோகிலா செய்த எச்சரிக்கை இது தானா?
திரும்பி கோகிலாவைப் பார்த்தேன்.
அவள் மகாபாரத்தினுள் தன்னை மறந்திருந்தாள்;.
பாஞ்சாலி ஐவருக்குமே என குந்தி சொல்லிக் கொண்டிருந்தை கிருஷ்ணர் விளக்கிக் கொண்டிருந்தார்.
கணனியை அணைத்து விட்டுக் கட்டிலில் போய் படுத்துக் கொண்டேன்.
கண்ணை மூடிய பொழுது சுவீற் றீம்ஸ் என்ற எழுத்துகள் கண் முன்னேயும் காதுக்குள் அதன் குரலும் ஒலித்துக் கொண்டிருந்தமாதிரி ஒரு பிரமை.
கண்கள் தூங்க மறுத்த இரவு அன்று.
ழூ
யாரும் எடுத்த எடுப்பில் சிகரட்டை வாயில் வைத்து சுரள் சுருளாக வளையம் விடுவதில்லை. கட்டாயம் முதல் சிலநாட்கள் பிரக்கேறியிருக்கும்.
அவ்வாறே யாரும் எடுத்த எடுப்பில் ஒரு ரம்ளர் தண்ணீரை உதட்டில் படாமல் தொண்டையினுள் ஊற்றிக் கொள்வது போல சாரயத்தை எடுத்து யாரும் வாயில் ஊற்றிக் கொள்வதில்லை.
அவ்வாறுதான் இந்த சற் சம்பாஷணைகளும்.
சின்ன சின்ன தகவல்கள்.. சின்ன சின்னத் திகட்டல்கள்… சின்ன சின்ன எதிர்பார்ப்புகள்.. சின்ன வார்த்தை விளையாட்டுகள்.. வார்த்தைகளில் உரசல்கள்.. அவை தரும் ஸ்பரிசங்கள்…. ஏன்னை நான் அதனுள் இழந்து கொண்டு போய்க் கொண்டிருப்பது எனக்கே நன்;கு தெரிந்தது.
ஆனாலும் ஏதோ ஒரு எச்சரிக்கை மணியும் சிவத்த சமிக்கை விளக்கும் என்னை எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தது.
மனம் இழந்து கொண்டு போனாலும் வார்த்தைகளை இழக்காமல் ஒரு கயிற்றுழுத்தல் போட்டி போல் சம்பாசணை நடந்து கொண்டே இருந்தது – கால நேரம் தெரியாமல்…. காதலுக்கும் காமத்துக்கம் வேறுபாடு தெரியாமல்…. அது தொடர்ந்தது.
வைதேகியை முற்று முழுதாக நம்புவதா இல்லiயா என தினம் தினம் யோசித்து பொழுது அன்றைய அவளின் வார்த்தைப் பரிமாற்றம்; அவளை மேலும் நம்புமாறு இருக்கும்.
தான் என்னைப் போன்ற ஒருவரை எத்தனையோ வருடங்கள் தேடிக் கொண்டு இருந்தாளாம்.
மீண்டும் மீண்டும் கேட்டேன் – இத்துடன் உன் தேடல் முடியுமா என்று.
இமயத்தின் உச்சியில் நின்று இனி எதைத் தேடுவேன் என என் கால்களில் சரணடைந்தாள்.
அவளுக்கு தெளிவாகச் சொன்னேன்.
எனக்கு இது முதலும் முடிவும் என்று.
எனக்கு இது இறுதியும் முடிவும் என்று சத்தியம் செய்தாள்.
கணனித் திரையை கிழித்;துக் கொண்டு இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டோம்.
மாலை மாற்றிக் கொண்டேன்.
ஒரு மாதம் சென்ற போது, தான் முழுகாமல் இருப்பதாகச் சொன்னாள்.
நான் பயந்து போனேன்.
”ஹ… ஹ… ஹ… ஹ… ஹ”, எனச் சிரித்தாள்.
”என்று உங்களை என் மனத்தில் சுமந்தேனோ அன்றிலிருந்து உங்கள் பிள்ளையை என் வயிற்றில் சுமக்கின்றேன்” கணனியில் எழுதியிருந்தாள்.
கவிதையின் இரு இறக்கைகள் என்னைத் தூக்கிச் சென்று இமயத்தின் எச்சியில் வைத்தது போல உணர்ந்தேன்.
ஒரு பெண்ணின் முதல் ஸ்பரிசம் போல அந்த வரிகள் என் உயிரின் அடி வேரைத் தொட்டு என்னை குளிர வைத்தது.
அவளுடன் நான் கணனியுள் சம்பாசிக்கும் நேரம் அதிகமாகத் தொடங்கியது.
கோகிலா பிள்ளைகளின் பாடசாலை வேலைகளுடனும் மகாபாரத மற்றும் தாயுமானவன், தெய்வம் தந்த வீடு தொடர்களுடன் நடு கோலில் தனது காலத்தில் கழித்துக் கொண்டு இருந்தாள்.
இரவு தூங்கச் செல்லும் பொழுதும் கோகிலாவின் வார்த்தைகளின் ஊடாக வைதேகியின் குரலே எனக்கு கேட்டது.
கோகிலாவின் அணைக்கும் போது அது வைதேகியைச் சிறைப்பிடிப்பது போலவே உணர்ந்தேன்.
பாவம் கோகிலா!
ழூ
முகம் தெரியாத முகநூல் காதலின் அடுத்து படிக்கு மனம் தாவியது – வைதேகியின் முகத்தைப் பார்க்க மனம் ஏங்கியது.
கை விரல்கள் கணனியில் விண்ணப்பத்தை அனுப்பியது.
”படத்தைப் பார்த்ததும் என்னை வேண்டாம் என்று சொல்லி விடுவீர்களா”
”வாயும் வயிற்றோடை இருக்கிற பெண்ணை எப்படி வேண்டாம் என்று சொல்வது?”
மீண்டும் அதே ஹ… ஹ… ஹ எனச் சிரிப்பு.
அடுத்த சில வினாடிகளின் மௌனம் என்னைத் துறுதுறுக்க வைத்தது.
”என்ன மௌனம்”
”பொறுங்க கணனியில்;; என்படத்தை தேடிக்கிட்டு இருக்கிறன்”
”ஆறு வயதுப் படம் எல்லாம் அனுப்பறதில்லை”
”உங்களுக்கு ரொம்ப குசும்பு!”
”உங்களுடன் தானே… குசும்பு பண்ணக் கூடாதா”
”இல்லை… இல்லை.. நீங்க பண்ணலாம்”
அதே பதிலுடன் அவளது படம் வந்திருந்தது.
ஆபீசுக்கும் வீட்டுக்கும் ஓடி ஓடி தன்வாழ்வை கடமைகளுடனும் களையுடனும் கழித்து விட்டு ஒரு நடுத்தர குடும்பத்தின் படம் வந்திருந்தது.
”படம் வந்தது”
”பிடித்ததா?”
” ஊம்”
”என்ன பதிலில் உற்சாகம் இல்லையே”
”பின்னே எப்பிடிச் சொல்வது?”
”நல்லாய் பிடிச்சிருக்கு என்று சொல்லுவிங்கள் என்று எதிர்பார்த்தேன்… இல்லாட்டி இத்துடன் சற்றை முடித்துக் கொள்வீர்கள் என்று நினைத்தேன்”
”எதுக்காகா இப்படி தாழ்வு மனப்பான்மை… நீங்கள் விரும்பியிருந்தால் வேறு ஒரு பெண்ணின் படத்தை அனுப்பி இருக்கலாம். நாங்கள்தான் எப்போதும் சந்திக்கப் போவதில்லையே”
”இல்லேப்பா… நேர்மையையை உங்களிடம் இருந்துதானே கற்றுக் கொண்டேன்”
மனச்சாட்சி குற்றியது – ஹோலில் பிள்ளைகளுடன் இருக்கும் கோகிலாவை மறந்து அறையுள் இருந்து ஒரு பெண்ணுடன் சற் பண்ணும் என்னிடம் என்ன நேர்மையை அவள் கற்றுக் கொண்டாள்?
ஆனாலும் வைதேகியிடம் இருந்து விடுபடமுடியவில்லை.
”ஒரு நாளைக்கு இந்த நேர்மை உங்களை காலால் உதைக்கும் பொழுது தெரியும்” என எழுதினேன்.
”அது பறவாயில்லை… இப்படி ஒரு பிறண்ட்சிப்பை எத்தனையோ வருடமாய் தேடிக் கொண்டு இருந்தேன் தெரியுமா?”
”ஆனால் நான் யாரையும் தேடவில்லை… நீங்களாக வந்தீர்கள். நீங்கள்தான் எனக்கு முதல் சற்தோழி”
”நீங்கள்தான் எனக்கு கடைசி சற்தோழன்”
மனம் குளிர்ந்தது.
அவளது படத்தை மீண்டும் மீண்டும் கண்கள் பார்த்தது.
என் மனமும் சற் உலகத்தில் இதுதான் எனக்கும் முதலும் முடிவும் என உறுதிசெய்தது.
அதை அவளுக்கு தெரிவித்த பொழுது, ”இப்பவே நான் செத்திடணுமப்பா” உருகினாள்.
நானும் உருகினேன்.
பின்பென்ன வீட்டில்.. ஒவ்வீசில்… புகையிரதத்தில் போகும் போது எல்லாம் சற்! சற்!! சற்!!!
ழூ
என்னதான் கடுகதியில் செல்லும் புகையிரதம் என்றாலும் எங்கேயோ ஒரு புகையிரநிலையத்தில் டீசல் நிரப்ப நிற்பது போல எனதும் வைதேகியின் இந்த விரைவுப் பயணத்தில் முதலில் எங்கேயோ ஒன்று இரண்டு நிலையத்தில் நின்று செல்லும் வண்டியாக சென்ற எங்கள் சற் பயணம் பின்பு நீராவி இயந்திர புகையிரதம் போல எல்லா எல்லா ஸ்டேசன்களிம் நின்று நீர் நிரப்பி… கரி நிரப்பிச் செல்லும் புகையிரத வண்டி போல உணரத் தொடங்கினேன்.
ஒரு செய்திக்கும் அடுத்த செய்திக்கும் அதிக நேரம் எடுத்தது.
“ஏன்?”
“ரொம்ப கெவி வேர்க்… இதைவிட எம்.டி. பக்கத்தில்….”
“ஓ… அப்படியா…”
“சொறி டியர்.. நான் என்ன செய்ய”
நான் அதற்கு பதில் போட முதல் மறைந்து விடுவாள்.
பின் நான் எதிர்பார்க்காத சமயத்தில் கையில் தாமரையுடன் வந்து என்னை மகிழ்விப்பாள்.
“எனக்கு பொறுமையில்லை”
“எனக்கு மட்டுமா?… நானும் விரும்பியா??”
”இது எனக்கு புது உலகம் வைதேகி… எனக்கு காத்திருக்க முடியாமல் இருக்கின்றது என்பதுதான் உண்மை”
”அப்படி என்றால் உங்கள் பாடசாலைக்கு நான் ரீச்சர் வேலை தேடி வரவேணும்”
”சுத்தம்! என்னை நேரில் பார்க்காமலேயே என் பிள்ளையை வயிற்றில் சுமக்கின்றீர்கள். நாங்கள் இருவரும் சந்தித்தால் எங்கள் பிள்ளைகளாலேயே வகுப்ப அறை நிறைந்து விடும்.”
மீண்டும் ஹ… ஹ… சிரிப்பு.
வரும் போது ஆசையாக நாலு வார்த்தை பேசி என்னைக் குளிர வைத்தாலும் அடுத்த நாலு வார்த்கைகளுக்காக அடுத்த நாலு மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
அதுவே ஒரு நாள் எங்களுக்குள் சண்டையாக வெடித்தது.
பயங்கரச் சண்டை.
எனக்கு என்ன உரிமை இருக்கிறது… அவளை நான் கோபிக்க?
ஆனாலும் கோபித்தேன்!
நீரோடையாக ஓடிக்கொண்டிருந்த என் வாழ்வில் தானாக நுழைந்து என்னுள் அவளாகி விட்ட பொழுது என்னை அவளுக்கு கொடுத்த உரிமையில் கோபித்தேன் போலும்.
அந்த சனி, ஞாயிறு நாங்கள் இருவரும் சற் பண்ணிக் கொள்ளவில்லை.
திங்கள் கிழமைகாலை இருவரும் வெள்ளைக் கொடியுடனும் வெள்ளைப் புறாக்களுடன் களம் இறங்கினோம்.
ஆளை ஆள் கட்டித் தழுவி அணைத்து ஆதரவு கொடுக்கும் அத்தனை அரவணைப்பும் எங்கள் வார்த்தைகளில் பொங்கி வழிந்தது.
அன்று முழுக்க கிட்டத் தட்ட சற்றில் இருந்தோம்.
அன்றைய நாள் முடிவில் நான் உங்களுக்கு ஒன்று சொல்லப் போறன் என்று ஒரு பீடிகையுடன் வந்தாள்.
”சொல்லுங்கோ”
”சொன்னப் பிறகு கோபிக்க மாட்டீங்களே”
”இல்லைச் சொல்லுங்கோ”
”உம்….”
”சொல்லுங்கோ….”
”பயமாய் இருக்கு….”
”இல்லைச் சொல்லுங்கோ….”
”நான் ஒருவருடன் மின்னஞ்சல் சற்றில் 8 வருடமாய் இருக்கிறன்…. பல தடவை எங்கள் உரையாடல் எல்லை தாண்டிப் போயிருக்கு. நேரில் சந்திக்க மனம் ஏங்கிய சந்தர்ப்பங்கள் அதிகம். அது ஏதாவது தப்பில் முடியும் என்றதாலை விடுபடவும் முடியாமல் ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் கஷ்;ரப்பட்டுக் கொண்டு இருந்தேன்”
தனது மற்றைய முகநூல் நண்பர் ஒருவரிடம் தன்னை இழக்க இருந்ததை என்னிடம் சொல்லி என்னிடம் பாவமன்னிப்புக் கேட்டாள்.
எனக்கு உடம்பு எரிந்தது.
”நீங்கள் கடைசிவரை அவரை சந்திக்கவேயில்லையா”
”இந்தப் பாவத்தை மட்டும் நான் செய்யேல்லை… செய்திருந்தால் என்னை நான் இழந்திருப்பேன்”
”இப்போது எதுக்காக எனக்கு இதைச் சொல்லுறியள்…”
”முதலில் என்னை மன்னித்து விட்டேன் என்று சொல்லுங்கள்”
நானும் பாதிரியார் போல பாவமன்னிப்புக் கொடுத்தபடியே பாவக்கிணற்றில் இறங்கிக் கொண்டு இருந்தேன்.
”என்னை உண்மையாகவும் உரிமையாகவும் நேசிக்கிற ஒருவருக்கு நான் எல்லா உண்மையைச் சொல்லி பழைய எல்லாவற்றிலும் இருந்து வெளியேற வேணும்”
”வெளியேறுவதும் விடுவதும் உங்கள் விருப்பம் தானே”
”அவரிடம் இருந்து விலகுவதில் ஒரு சின்னச் சிக்கல் இருக்கு”
”என்ன சிக்கல்?….”
”அவரிடம் கொஞ்சம் பணம் கடன் பட்டிருக்கிறன்… அதைக் கொடுக்க வேணும்”
எனக்கு எங்கேயோ இடித்தது.
என் விரல்கள் பதிலை யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுது அவளிடம் இருந்து, ”ஆனால் இந்தப் பணத்தை உங்களிடம் வாங்கப் போவதில்லை”
”எப்படிக் கொடுப்பீர்கள்”
”பாங்கில் லோன் கேட்டிருக்கின்றேன்…..அது இந்தக் கிழமையுள் கிடைத்து விடும்”
இதன்பின் எனது ஆண்மை அவளைச் சந்தேகிக்க இடம் கொடுக்கவில்லை.
“நான் இப்போதே தருகின்றேன். திருப்பி தருவது பற்றி பின்பு யோசிப்போம்”
”இல்லை பிளீஸ்… எனக்கு உங்களின் காசு வேண்டாம்;”
ஆனாலும் நான் கேட்கவில்லை.
அன்று வங்கிக்குப் போய் விட்டு சைக்கிளை மிக விரைவாகவே மிதித்து வீட்டுக்கு வந்து கணனியைத் திறந்தேன்.
”உங்க மகன் சந்தோசத்தினால் ரொம்ப வயிற்றில் உதைக்கிறான்… இப்படி ஒரு அப்பாவா அவனுக்கு என என் மனம் ஆனந்திக்கிறது” என்று இருந்தது.
வானத்தில்; ஆனந்தத்தில் மிதந்த நாள் அது.
ழூ
நேற்று பாடசாலையில் மாணவர்களுக்கு இறுதிப் பரீட்சை.
அவசரவசரமாக வெளிக்கிட்டுக் கெண்டிருந்தேன்.
கோகிலா எனது சாப்பாட்டுப் பாசலைத் தந்து விட்டு ஒரு நிமிடம் நில்லுங்கள் என்றாள்.
என்ன என்று பார்ப்பது போல நிமிர்ந்து பார்த்தேன்.
இன்று சுமங்கலி பூஜை. தாலி மாற்றிக் கோர்க்க இருக்கிறன். அதுதான் என்னை ஆசீர்வதித்துவிட்டுப் போங்கள் என என் காலில் விழுந்து கும்பிட்டாள்.
மனச்சாட்சி எங்கே உறுத்த அவளை குனிந்து தூக்கி நெற்றியில் முத்தமிட்டு விட்டு வெளியேறினேன்.
வைதேகியிடம் இருந்து ஒரு தொலைபேசி வந்தது.
“நான் அவசர அவரமாய் வீட்டை போறன். மகள் வயதுக்கு வந்து விட்டாள் என்று தொலைபேசி வந்திருக்கு. ஓவ்வீசில் வடிவாய் கம்பியூட்டரிரைப் பூட்டினனானோ தெரியவில்லை. என்ரை பாஸ்வேட்டைத் தாறன். எங்கள் சற்றை தயவு செய்து அழித்து விடுங்கள்.”
“எப்படி என்னை நம்பி உங்கள் பாஸ்வேர்டைத் தருகிறிங்கள்?”
“வேறு யாரை இனி உலகத்தில் நம்புறது?”
“ஓகேடா! நீங்கள் போய் மகளின் அலுவல்களைப் பாருங்கள்… நான் சற்றை அழித்து விடுகின்றேன்”
பாடசாலை வரும்வரை நான் நானாக இல்லi.
எப்படி ஒருத்தி என்னை நம்பி தனது பாஸ்வேர்டைத் தந்தாள்? அவளையா காசு விடயத்தில் சந்தேகிக்க இருந்தேனே என்னையே நான் நொந்து கொண்டேன்.
மனச்சாட்சி உறுத்தியது.
அவளின் பேஸ்புக்கைத் திறந்து அவளும் நானும் முதல் நாள் செய்த சற்றை மீண்டும் ஒரு தடவை வாசித்துவிட்டு அழித்து விட்டு அவளின் முகநூல் பக்கத்தில் வெளியேற முயன்ற போது அவளுக்கு ஒரு நண்பரின் அழைப்பு வந்தது.
“ஏன் வைதேகி கைத்தொலைபேசியை எடுக்கவில்லை… சற்றிலும் இவ்வளவு நேரம் காணவில்லை… உங்களுக்குத் தெரியும்தானே இந்தநேரம் நான் பார்த்துக் கொண்டு இருப்பேன் என்று”
அதிர்ந்து போனேன்.
“நேற்றில் இருந்து உங்களுக்கு “ஏ” ஜோக்கு சொல்லக் காத்திருக்கின்றேன்” அவளது நண்பன் சற்பொக்ஸ்சினுள் தகவலை அனுப்பிக் கொண்டு இருந்தான்.
என்னையும் அறியாமல் என் கண்கள் அவளின் நண்பர்களின் வட்டத்தையும் அவளின் நண்பர்களுடன் அவள் செய்த சற்றையும் படிக்க மனம் ஏகியது.
சரி.. பிழை.. தவறு என்றதைத் தாண்டி அவளின் நண்பர்களுடன் அவள் செய்த சம்பாசணைகளை வாசிக்கத் தொடங்கினேன்.
கைகள் நடுங்கியது.
மனம் படபடத்தது.
நான் அவளுடன் சற் பண்ண முடியாது தவித்த வேலைகளில்… குறிப்பாக வேலை ரொம்ப கெவி… எம். டீ. நின்றிருன்கிறார் என்று பதில் போட்ட வேளைகளில் அவள் வேறு பலருடன் சற் செய்து கொண்டு இருந்திருக்கின்றாள்.
பலரிடம் எட்டு வருடக் கதை உருண்டிருக்கிறது.
நீங்கள்தான் என் தேடலின் முடிவு என்று சொல்லப்பட்டிருந்தது.
கணவன் கையால் ஆகாதவன் என்ற புராணம் ஓதப்பட்டு இருந்தது.
எனக்கு அதுக்கு மேல் எதுவும் செய்யத் தோன்றவில்லை.
எனது முகநூலில் இருந்து அவளை நீக்கி விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தேன்.
கோயிலால் கோகிலா வந்திருந்தாள்.
கையில் குங்குமத்துடன் சோபாவில் அமர்ந்திருந்தாள்.
மாற்றிக் கட்டிய புதுநூலில் அவளின் பழைய தாலி மினுங்கிக் கொண்டிருந்தது.
எனக்கு கண்கள் கலங்கிக் கொண்டு வந்தது.
“என்ன நடந்தது”
“ஒன்றுமில்லை”
சோபாவில் போய் அவளருகே பக்கத்தில் அமர்ந்திருந்த நான் எனக்குள் புழுங்கிக் கொண்டு இருந்தேன்.
பி;ள்ளைகள் ரியூசனுக்குப் போய் இருந்தால் வீடும் மிக அமைதியாக இருந்தது.
கோகிலாவிற்று நான் தன்னிடம் சொல்லாத ஒன்றிற்காக சங்கடப்படுகின்றேன் என்று புரிந்திருக்க வேண்டும்.
புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு, ”மடியில் படுங்கள்” என்றாள்.
அது எனக்கு பெரிய ஆறுதலாக இருந்தது.
என் தலையைக் ஒரு கையால் கோதி விட்டபடியே மறு கையில் தனது கையில் வார இதழை வாசித்துக் கொண்டு இருந்தாள்.
நான் அவளது முழக்காலை இறுகக் கட்டியபடி சோபாவில் படுத்திருந்தேன்.
எனது படபடப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டு வந்தது போலிருந்தது.
ழூ
எனக்கு ஒன்று மட்டும் இன்றுவரை புரியவே இல்லை.
எதற்காக என்னிடம் தனது பாஸ்வேர்டைத் தந்து தனது முகநூலுக்குள் செல்ல அனுமதித்தாள்?
எதற்காக அவள் மற்றவர்களுடன் செய்திருந்த சற்றை அழிக்காமல் இருந்தாள்??
எதற்காக என்னிடம் காசுவேண்டாம் என்று சொன்னாள்??? அல்லது அது ஒரு தொழில்நுட்பமா????
என்னை அவள் தொடர்ந்தும் ஏமாற்ற விரும்பவில்லையா… அல்லது எல்லாவற்றிற்கும் விடை தெரியாது இருப்பதுதான் இந்த வாழ்வின் தார்ப்பரியமா?????
ஆனால் அவள் இப்போது என்முகநூல் நண்பி இல்லை.
மாமிசம் சாப்பிடுவதை நிறுத்திய பின்பு என்றே ஒரு நாள் நல்ல மீன் குழம்புடன் சோறு உண்ண மனம் ஏங்குவது போல… மதுபானம் அருந்துவதை நிறுத்திய பின்பும் என்றோ ஒருநாள் கோடை வெயில் காலத்தில் குளிர்ந்த பியரை மனம் நாடுவது போல இப்பவும் என் மனம் இடைக்கிடை வைதேகியின் முகப்புத்தகத்தை மனம் நாடத்தான் செய்கிறது.
அதில் அவளது நண்பர்களின் தொகை கூடிக்கொண்டே இருந்தது. அதிகமானோர் மிகவும் நாகரீகமானவர்களாய் இருந்தார்கள்… தொழில் அதிபர்கள்… படித்தவர்கள்… பக்திமான்கள்…
இன்னமும் பத்து நாட்களே பாக்கி இருக்கின்றது.
ஒரு பழக்கத்தினுள் எங்களை முற்றாக ஐக்கியமாக்கிக் கொள்வதற்கு அல்லது அதிலிருந்து விடுதலை பெற்றுக் கொள்வதற்கு 21 நாட்கள் கணக்கு என்ற ஒன்றை மனோதத்துவ உலகம் வைத்திருக்கின்றது. இந்த 21 நாட்களுக்கு பின்னால் அது பழக்கமாகி விட்டுவிடும்.
இந்தக் கணக்கு உண்மையானால் எனக்கு இன்னமும் பத்து நாட்கள் மட்டுமே உண்டு – வைதேகியின் நினைவுகளை நான் மறப்பதற்கு. 11 நாட்கள் போய்விட்டது. அல்லது போக்கடித்து விட்டேன். இன்னும்பத்துநாட்கள் கடந்து விட்டால் எல்லாமே என்றிருந்தது எதுவும் இல்லாமல் போய்விடும் என்று நம்புகின்றேன். அப்படியே போய் விடவும் வேண்டும் என விரும்புகின்றேன்.
ஏன் சுனாமி வந்தது?… ஏன் பிரளயம் வந்தது?… ஏன் பூமி நடுக்கம் வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம் பார்க்க முடியாதோ அவ்வாறுதான் இந்த முகநூல் காதல் எனக்கு வந்ததும்!… பின்பு அதே வேகத்தில் என்னை விட்டுச் சென்றதும்!!
ஆனால் அழிவின் சுவடுகள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றது.
(முற்றும்)
வணக்கம் அண்ணா – நல்ல ஆக்கம் நீட்சி கூடி விட்டது – வாழ்க நலம்