சிறையுடைப்பு – சிறுகதை
என் பெயர் பஞ்சவர்ணம். ஆனால் என் முதலாளி என்னை அழைப்பது பஞ்சவர்ணம்மா என்றுதான்.
பெயருக்கு ஏற்றமாதிரி என் நிறம் பஞ்சவர்ணம்அல்ல. தென்னங்கீற்று பச்சை நிறம். கழுத்தில் தெளிவாக தெரியக் கூடிய ஒரு ஆரம். அதனில் என் கழுத்து நோகாத அளவு எடையுள்ள ஒரு சின்ன மணி.
மதுரை மீனாட்சி அம்மனின் கையில் நாங்கள் அமர்ந்திருப்பது பற்றி எனக்கு எப்பவுமே ஒரு பெருமை.
என் முதலாளியும் மஞ்சள் தலைப்பாகை அணிந்து நெற்றியில் சந்தனமும் பெரிய குங்குமமும் வைத்திருப்பார்
வாரத்தின் முதல் நான்கு நாட்களும் சிறங்கூன் வீதியில் அமைந்துள்ள சவரம் செய்யும் கடை வாசலிலும்,வெள்ளிக் கிழமைகளில் வீரமாகாளியம்மன் வாசலிலும், சனி ஞாயிறுகளில் தேக்கா சந்தையின் முகப்பு வாசலை ஒட்டியப படிக்கட்டுகளுக்கு பக்கத்திலும் எங்கள் தொழில் நடைபெறும்.
அடுத்து தனது முறைவரும்வரை சவரக்கடையினுள் காத்திருக்க பொறுமை இல்லாதவர்கள்,சிறங்கூன் வீதியில்அவசர வேலை இல்லாதவர்கள், முதன் முதலாக கிளி ஜோசியம் என்றால் இதுதான் என பெற்றார்களால் அறிமுகம் செய்யப்படும் வெளிநாட்டுத் தமிழ்க் குழந்தைகளும் அவர்தம் பெற்றோர்களும் சவரக்கடை வாசலில் என் சொண்டு கொண்டு எடுக்கப்படும் சீட்டுக்கு காத்திருப்பவர்கள்.
வீரமாகாளியம்மன் கோயிலுக்கு முன்னால் உள்ள சின்ன பெட்டிக்கடையில் விற்பனையாகும் புத்தகங்களில் அதிக விற்பனை ஆகுவது எது என்று பார்த்தால் ஜோசியம்,குரு பெயர்ச்சி,சனி மாற்றம்,புது வருட பலன்கள் இத்தியாதி இத்தியாதி ஆரூடப் புத்தகங்கள். அதனை வாங்கியவர்கள் அடுத்து வருவது எங்களிடம் தான். மனிதர்களுக்கு தங்களை நம்புவதைவிட அப்படி ஜோசியத்தின் மீது ஒரு நம்பிக்கை. அவ்வகையில் வெள்ளிக்கிழமை எப்போதும் என் முதலாளிக்கு கனகதாரா ஸ்தோத்திர மந்திரத்தைச் உச்சரித்த பலன்தான். வெற்றிலைக்காவிபடிந்த அவரின் பற்கள் அன்று துலக்கமாக தெரியும்.
சனி,ஞாயிறு இரண்டு தினங்களும் சான்சே இல்லை. அவ்வளவு சனக்கூட்டமாய் இருக்கும். அதிகமாக இந்தியா,இலங்கையில் இருந்து வந்து தொழிற்சாலைகளிலும்,கட்டிட பணிகளிலும்,வீடுகளில் வேலை பார்ப்பவர்களுக்கும் சனி அல்லது ஞாயிறு அல்லது இரண்டு தினங்களும் விடுமுறைநாட்களாக அமைவதால் அப்படி ஒரு சனக்கூட்டமாய் இருக்கும். இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தனியாக வாழ்பவர்களாயும் தங்கள் தனிமைக்கு தற்காலிக அல்லது நிரந்தர துணை தேடுபவர்களாயும் மேலாக தங்கள் தாய்மொழியில் பேசி மகிழக்கூடிய ஒரு நண்பனை அல்லது நண்பியைத் தேடி வருவார்கள். அன்று தேக்கா சந்தையின் சாப்பாட்டுக் கடைகள் ஆயினும் சரி,மதுபானக் கடைகளாயினும் சரி,புடவைக்கடைகள் ஆயினும் சரி நிரம்பி வழியும்.
அன்று எங்களை நாடி வருபவர்களில் யாராவது புதிய காதலர்கள் போலத் தெரிந்தால் சீட்டுக்கட்டில் நான் கடைசிச் சீட்டை இழுத்தெடுக்க கூடியவாறு என் முதலாளி என் முன்னே பரப்பி விடுவார்.
அல்லது வந்தவரின் பெயரைச் சொல்லி”பச்சைக் கிளியே…என் பஞ்சவர்ண அம்மாவே…. கல்யாணக்களைகட்டும் இந்த கர்ணபிரபுக்கு கடதாசிசீட்டு ஒன்று எடுத்து தா”என்றவாறே நான்கைந்து நெல்மணிகளை வைத்து ருத்திராட்ச கொட்டைகளை ரிஷிகள் உருட்டுவது போல மெதுவாக உருட்டுவார். உருட்டும் பொழுது நான் சீட்டுகளை புறக்கணிக்கக வேண்டும். உருட்டல் நிற்கும் போது நான் சீட்டை எடுக்க வேண்;டும். பொதுவான ராமரின் மார்பில் தோளிள் சாய்ந்த சீதையை வில்லுடன் கூடிய கரத்தால் இணைத்து வைத்திருக்கும் படமே வரும்.
ஜோசியம் பார்க்க வந்திருந்தவர்களை மகிழ்வுடன் பார்த்து புன்னகை செய்வார். அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். ”இராமர் வில்லொடித்து சீதையைக் கரம் பிடிக்கும் காலம் இங்கே வந்து விட்டது என்று அவர் வாசிக்கத் தொடங்குவார். இறுதியில் ஐந்து வெள்ளிக்குப் பதிலாக பத்து வெள்ளிவரை தட்சணை கிடைக்கும்.
எனக்கு அவர்களைப் பார்க்க பாவமாய் இருக்கு.
நானும் எனது எஜமானுக்கு விசுவாசமாக இருப்பேன். அன்றைய தினங்களில் எனக்கு இரண்டொரு வாழைப்பழங்கள் அதிகமாகவே கிடைக்கும்.
அவ்வாறே கவலை தோய்ந்த முகத்துடன் யாராவது வந்தால் அவரின் கைங்கரியத்தால் என் சொண்டில் சீதை சிறைப்பிக்கப்பட்ட படம் வரும்.
”ஜனக மகராசனின் மகளும் இராமபிரானின் மனைவியுமான சீதா பிராட்டிக்கே சோதனை வரும் பொழுது அற்ப மனித ஜென்மங்கள் எம்மாத்திரம். கலங்காதே மனித மனமே! உன் கஷ்டங்களை நீக்க அனுமார்படையுடன் இராமர் வருவார். முடிந்தால் அடுத்த ஐந்து வெள்ளியும் ஸ்ரீநிவாச பெருமாளிட்டை போய் இராமருக்கு துளசிபோட்டு வணங்கு. அப்பிடியே வலது கை மூலையில் உள்ள ஆஞ்சனேயரையும் கும்பிடு. கஷ்டம் எல்லாத்தையும் போக்கிடுவான். பிணிதீர்க்கும் மலையை தூக்கி வந்தவனுக்கு உன் கவலைகள் எம்மாத்திரம்?”என ஜோசியமும் சொல்லி அதற்கான பரிகாரமும் சொல்லி அனுப்பவார்.
”இப்பவே இதிலை வாற பஸ்சில் போறன் ஐயா”
“பஸ்சில் போகாதே. இரண்டு தரிப்புகள்தானே. ராமநாமத்தைச் சொல்லியபடியே நடந்து போ…மனத்துக்கு ஆறுதலாய் இருக்கும்”
கஷ்டங்கள் எல்லோருக்கும் எப்போதும் நிரந்தரம் இல்லை…என்றோ ஒருநாள் தீரும் பொழுது அவர்கள் நன்றிக்கடனுடன் மீண்டும் வருவார்கள் என என் எஜமானுக்குத் தெரியும் – கள்ள எஜமான்!
*
தங்கள் தாத்தா பாட்டி காலங்களில் எல்லாம் இப்போதைய அளவிற்கு விவாகரத்துகள் வந்ததில்லையாம் என சனங்கள் என்னைத் தாண்டி கதைத்துக் கொண்டு போது எனக்கு காதில் விழும். அந்தக் காலத்தில் ஆங்காங்கே சில சின்னவீட்டுச் சமாச்சரங்களும்…சின்ன சின்ன அனுசரிப்பும் இருந்ததோடை வாழ்க்கை ஓடி விட்டதாம். இப்போ கணனியும் கைத்தொலைபேசியும் இணையத்தளங்களும் முகநூலும் வந்தபிறகு கல்யாணங்கள் என்றாலும் சரி…விவாகரத்து என்றாலும் சரி…. எல்லாமே வேகமாக போகத் தொடங்கி விட்டது.
பிள்ளைப்பேறு ஒன்றுதான் ஆறுதலாக நடக்குதாம் என கிழடு கட்டைகள் கவலைப்படுகிறார்கள். உலகம் ரொம்பத்தான் மாறிப் போய்விட்டது.
மாறுதல்களும் தேவைதான்.
அப்பிடி ஒரு மாறுதல்தான் எனக்கும் வந்தது. அதைத்தான் விதி என என் முதலாளி தினம் தினம் ஆட்களுக்கு சொல்லிக் கொண்டு இருக்கின்றார்.
இராமசாமி முதலில் ஜோசியம் கேட்கத்தான் முதன்முதலில் வந்தார். வயது 53 அல்லது 54 இருக்கும். டாக்ஸி ஓடுவதுதான் அன்றாடப் பிழைப்பு. பின்பு முடிவெட்ட வரும் பொழுது…காருக்கு சில்லு மாற்ற பக்கத்து கடைக்காரனிடம் வரும் பொழுது…அல்லது பொழுது போவதற்காக வந்து என் எஜமானுடன் பேசிக் கொண்டு இருப்பார்.என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் பணம் போதாது என்ற ஒப்பாரிதான். உழைத்து உழைத்து வீட்டு கடனுக்கு வங்கிக்கு பணம் கட்டுவது பற்றியே அதிகமாக விசனப்படுவார். சிலவேளை எனக்கு சிறிய தானியங்களும் பழங்களும் கொண்டு வந்து தருவார்.
அப்படித் தொடங்கிய நட்புத்தான் அவருடனானது.
ஒருநாள் அவர் கேட்டார்,”ஐயா இந்தக் கிளி ஆணா? அல்லது பெண்ணா?”
”பெயரைப் பார்க்கத் தெரியேல்லையா? பஞ்சவர்ணம்மா பெண்பிள்ளைதான்…. ஏன் டக்ஸிக்கார சாமிக்கு இந்த ஆராய்ச்சி?”
”இல்லை…என்ரை வீட்டிலை ஒரு ஆண்கிளி இருக்கு. தனியன். இப்ப நாலைந்து நாளாய் அதின்ரை செட்டை அடிப்பும் சத்தமும் வித்தியாசமாய் இருக்கு”
”கவனம் சாமி! கூட்டைத் திறந்து விட்டுடாதையும்…துணைதேடிப் பறந்திடும்”
”அதுக்கு கூடு ஒன்றும் இல்லை. எங்கடை வீடு முழுக்க சுதந்திரமாய் பறந்து திரியும். அறைகள் குசினி ஹோல் எல்லாம் அதின்ரை இராச்சியம்தான். உங்கடை பஞ்சவர்ணம்மா மாதிரி இந்தக் கூட்டுக்கை சிறைவாழ்க்கை இல்லை”
எனக்கு மனத்தினுள் சின்ன ஒரு வலி!
அன்று இரவு முழுக்க என்னால் தூங்கமுடியவில்லை.
அதுவரை ஒரு ஆண் துணை பற்றி நான் நினைத்திருக்கவில்லை. அதற்கான வயது நெருங்கிக் கொண்டிருந்ததை உணர்ந்து கொண்டு இருந்தேன் என்பதை அறிவேன். ஆனால் அதற்கான தேடல் என்னிடம் இருக்கவில்லை.
மேலாக நான் சிறைவாழ்க்கை வாழ்கின்றேன் என்ற நினைப்பு என்னுள் இருக்கவில்லை. என்னை நான் ஒரு கைதியாக உணர்ந்த நாள் அன்று.
என் மனதினுள் சிறையுடைப்பு என்ற எண்ணம் சிறிதாக முளைவிடத் தொடங்கியது.
தினம் தினம் ஏதோ ஒருநாட்டில் நடக்கும் சிறையுடைப்பு பற்றி தமிழ்முரசு பத்திரிகைகளில் வாசிப்பதும் அது பற்றி சலூன் வாசலில் விவாதிப்பதும் நடக்கும் ஒன்றுதான். ஆனால் அதன் ஆழஅகலம் பற்றி நான் அறிந்திருக்கவில்லை அல்லது நினைத்திருக்கவில்லை. ஆனால் என் வாழ்வடன் அந்தச் சொல் பிணைக்கப்பட்ட பொழுதுதான் அதன் கணதி நன்கு புரிந்தது.
திட்டவட்டமாக முடிவெடுத்தேன்.
ஒன்று இந்தக் கூட்டில் இருந்து தப்புவது. இரண்டாவது அந்த ஆண்கிளியைச் சந்திப்பது. அதனுடன் நான் எதிர்காலத்தில் இணைவேனா? அல்லது அது வெறும் ஒரு சந்திப்பு மட்டும் தானா?? எதையும் அதனைச் சந்தித்த பின் பார்ப்போம் என்ற எண்ணத்தில் இராமசாமி ஐயாவின் வருகைக்காக காத்திருந்தேன்.
மூன்று அல்லது நான்கு நாட்கள் சென்றிருக்கும்.
இராமசாமி மனைவி சகிதம் வந்திருந்தார். தெய்வீககளை வீசும் முகம் அந்த அம்மாவுக்கு.
”அம்மாக்கும் கிளி ஜோசியம் பார்க்க வேணுமா?”
”இல்லை ஐயா…எனக்கு இதிலை எல்லாம் நம்பிக்கை இல்லை…என்ரை கடமையள் தான் என்ரை வாழ்க்கை…”
என் முதலாளிக்கு முகம் கொஞ்சம் சுருங்கியது.
”ஆனாலும் எதிர்காலம் பற்றி தெரிந்திருந்து ஆகவேண்டியதுகளைச் செய்தால் கொஞ்சம் கஷ்டங்கள் குறையுமல்லவா”முதலாளி விட்டுக் கொடுக்கவில்லை.
”ஆகப்பட்ட அந்த இராமபிரானுக்கும் சீதா பிராட்டிக்கும் வராத சோதனையா?”என பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு அந்த அம்மா கூட்டருகே வந்து என் சொண்டைத் தன் விரலால் அன்பாக தொட்டுப் பார்த்தார்.
”முதல்தரம் இரண்டு பேருமாய் வந்திருக்கிறியள். பால் கோப்பி வாங்கிவருகிறன்…என் பஞ்சவர்ணம்மாவைப் பார்த்துக் கொள்ளுங்கள்”என்றவாறு தனது இருக்கையை விட்டு எழுந்தார் என் முதலாளி.
”இல்லை வேண்டாம்! உங்களுக்கேன் சிரமம்”என இராமசாமி ஐயாவும் அம்மாவும் சொன்னதைக் கேட்காது கோமளாவிலாஸ் பக்கம் விரைந்தார்.
அம்மா பக்கத்தில் வந்து என்னைத் தடவுவதற்காக மெதுவாக என் கூட்டு வாசலை திறந்து தனது கையை அன்பாக மேலும் உள்ளே விட்டார்.
”கவனம் கிளி பறந்திடும். பிறகு ஜோசியக்காரருக்கும் கிளி இல்லாமல் போயிடும். எங்கள் வீரனுக்கும் பெண்டாட்டி இல்லாமல் போயிடும்”
அவர் சொல்லி முடிப்பதற்குள் சிறையுடைப்பு நடந்து விட்டது.
நேராக பறந்து போய் சலூக்கு முன்னால் உள்ள பெரிய மரத்தின் கிளைகளுள் ஒளிந்து கொண்டு என்ன நடக்குது என கீழே பார்த்தேன்.
இராமசாமி ஐயாவினதும் அவர் மனைவியினதும் படபடப்பு…என் முதலாளியினது கோபம், ஆவேசம், ஆத்திரம்…. சனங்களின் கூட்டம்…அவரவர் தங்களுக்கான நியாயங்களுடன் கூச்சல்கள்….
எனக்கு இருபகுதியினரையும் பார்க்க கவலையாக இருந்தது.
சிறிது நேரத்தில் சனம் கொஞ்சம் கொஞ்சமாக கலைய ஆரம்பித்தார்கள்.
என் முதலாளி குனிந்த தலையுடனும் வெறுங்கூட்டுடனும் முஸ்தபா அங்காடிப் பக்கம் செல்ல இராமசாமியும் அவரின் மனைவியும் தங்கள் டக்ஸிக்குள் வந்து ஏறினார்கள்.
தருணம் இதுவே என நான் நேராகப் பறந்து போய் திறந்திருந்த யன்னல் வழியாக முன்சீற்றில் அமர்ந்திருந்த அந்த அம்hவின் மடியில் உட்கார்ந்து கொண்டேன்.
”கடவுளே…இங்கே பார்த்தீர்களா”
”இப்ப ஜோசியக்காரன் என்னைக் கண்டால் பொலிசிட்டைதான் பிடித்துக் கொடுப்பான்”என்று சொல்;லிக் கொண்டே இராமசாமி டக்ஸியின் விரைவாகச் செலுத்தினார்.
*
தொடர்மாடிக்கட்டத்தின் 14ம் மாடியை லிவ்ற் மூலம் மூவரும் அடைந்தது வீட்டு வாசல் கதவை நாங்கள் அடைந்த காலடிச் சத்தம் கேட்ட பொழுது வீரனின் பறப்பும் “கீ.. கீ…”சத்தமும் அதிகமாகவே கேட்டது.
என் தலையைத் தடவியபடியே, “பார்த்தியா நீ வருவது வீரனுக்குத் தெரிந்து விட்டது”என்றார் இராமசாமி அம்மா.
கதவைத் திறந்ததும் வீரன் வந்து இராமசாமியின் தோளில் அமர்ந்து கொண்டது.
“பார்த்தியா…உன் பெண்டாட்டியை”இராமசாமி என்னைச் சுட்டிக் காட்டியதும் அது ஆனந்தத்தில் வீடு முழுக்க சுற்றி ஒரு தரம் தனது கீ கீ பாடலுடன் சுற்றிப் பறந்து வந்தது. பின் என் பக்கத்தில் வந்து அமர்ந்தது.
தோற்றத்தில் அது என்னை விடப் மிகப் பெரியது. எனக்கு கொஞ்சம் பயம் வேறு வந்தது. அது என் அருகே வந்தது தன் செட்டையால் என்னைத் தட்டியது. நான் கொஞ்சம் ஒதுங்கி அமர்ந்தேன்.
என்னிடம் ஏதும் பேசாது கொள்ளாது இவ்வாறு உரசுவது மனத்துக்குள் சின்ன அருவருப்பாய் இருந்தது. மேலாக என் உடம்பு நடுக்கம் கண்டது.
“இங்கே பாரும். வீரன் பொம்பிளைக்கு பக்க்தல் போய் இருந்திட்டார்”, இhமசாமி கெக்கட்டம் விட்டபடி சிரித்துக் கொண்டு தன் மனைவியை அழைத்தார்.
கதவு மணி அடிக்கும் சத்தம் கேட்டது.
இரமசாமி கதவைத் திறந்ததும் அதிர்ந்தவர் போல் நின்றார்.
அவரின் ஒரே மகள் சுவாதி கையில் பெட்டியுடன் நின்றார்.
“உனக்குப் பிள்ளை படிச்சு படிச்சு சொன்னனான் பிள்ளை…அவசரப்பட்டு வீட்டை விட்டு வந்திடாதை என்று…”தாய் கலங்கி நின்றாள்.
சுவாதியின் திருமணக்கதையை பல தடவை இராமசாமி என் முதலாளிக்கு சொல்லும் பொழுது கேட்டிருக்கிறன்.
ஒரு வருடத்துக்கு முதல் காதலித்து முதலில் வீட்டார் சம்மதிக்காத பட்சத்தில் வீட்டை விட்டு ஓட வெளிக்கிட பின் இரு வீட்டாரும் இறங்கி வந்து பேசிச் செய்த திருமணம் அது.
பின்பு சின்ன சின்ன பிரச்சனைகள் வந்த பொழுது இராமசாமியும் மனைவியும் புத்திமதிகள் சொல்லி சொல்லித்தான் இந்த வருடமும் பிடித்திழுத்து வைத்திருந்தார்கள்.
“இனியும் அந்த சிறைக்குள்ளை என்னாலை இருக்கேலாது”பெரிதாக கதறிக் கொண்டு தாயின் மடியில் தலையை குப்பிறப் போட்டுக் கொண்டு அழுதாள். “சிறைக்குள்ளை”என்று அவள் கதறியது எனக்கு எங்கேயோ குற்றியது. தாய் தலையை வருடிக் கொண்டு இருந்தாள்.
“இனி என்னப்பா செய்கிறது?”இராமசாமி தலையைத் தொங்கப் போட்டபடி மௌனமாக கேட்டார்.
“அவளுக்கு அங்கை இருந்து வெளிக்கிட வேண்டும் என்றுதான் தோன்றியிருக்;கே தவிர இனி என்ன செய்வது என்று தெரியவில்லை. எங்களை நம்பி வந்திருக்கிறாள் இந்தக் கிளி போலை…பார்ப்போம்”
எனக்கு கண்கள் கலங்கியது.
சுவாதியின் அழுகையால் வீரனும் கொஞ்சம் அமைதியாகத் தான் இருந்தான். வீடும் மயான அமைதி காத்தது. அவன் மெதுவாக அறைகளுக்குள்ளும் குனினியுள்ளும் ஹோலினிள்ளும் பறந்து கொண்டிருந்தான்.
மாலையாகிய பொழுது மேல்மாடியில் பிள்ளைகள் விளையாடும் சத்தம் பலமாக கேட்டது. வீரனும் கொஞ்சம் அமைதியில்லாத மாதிரிப பறந்தான். இடைக்கிடை என் பக்கத்தில் வந்து அமர்ந்தான். பின் எழுந்து பறந்தான்.
இராமசாமி அம்மா மேலே போய் அங்கே குடியிருந்தவர்களிடம் சம்தம் போட்டாள், “கீழே நாங்கள் அமைதியாக வசிக்கிறதில்லையா?”என்று.
சத்தம் கொஞ்சம் குறைந்தது.
அரை மணித்தியாலம் தான். பின் மீண்டும் தொடங்கியது.
சுவாதியும் தன் கணவனுடன் தொலைபேசியில் பலத்து சத்தம் போட்டு அழுது வெடித்து சத்தமாக கதைத்தாள்;.
“என்னை உங்க அம்மா அப்பா எல்லாம் சேர்ந்து சிறை வைச்சமாதிரி இருக்கு. நீங்களும் எதுவும் கண்டு கொள்ளுறதில்லை”
“சுவாதி! எதையும் நீ வீட்டை விட்டு வெளிக்கிட முதல் கதைத்திருக்க வேணும். இப்போ நீ விட்டு வெளிக்கிட்டு போனதாலை இங்கே நிலைமை இன்னும் மோசமாக இருக்கு”
“என்ன மோசமாய்…?”
“இனி உன்னை ஏற்கிறமாதிரியும் இல்லை. என்னை உன்னோடை சேர்ந்து வாழ விடுறமாதிரியும் இல்லை”
“எதையும் செய்யுங்கோ…கெற் லொஸ்ற்”கோபத்தில் கதறியவளின் கை தொலைபேசியை தூக்கி நிலத்தில் அடித்தது.
அடுத்த ஓரிரு நிமிடங்களில் கீழ் வீட்டுக்காரன் மேலே வந்து சத்தம் போட்டுச் சென்றான்.
எனக்கு எல்லாமே சூனியமாய் இருந்தது.
எனக்கு ஒரு பெரிய சிறையுள் இருப்பது போல இருந்தது.
இந்த மாடியின் நிலம் இன்னொருவனின் கூரையாய் இருக்கிறது. இதன் கூரை இன்னொருவனின் நிலமாய் இருக்கிறது. வீட்டின் பத்திரம் வங்கியிடம் இருக்கிறது.
வீரன் அதிகமாக பறந்தாலும் இதுவும் ஒரு சிறைதான்.
சுவாதியும் இப்போ அதனுள்ளே.
எனக்கு மீண்டும் என் முதலாளியிடம் போக வேண்டும் போலிருக்கின்றது.
“பஞ்சவர்ணம்மா…இந்த தருமதேவதைக்கு நல்ல ஒரு சீட்டு எடுத்துதா…. “அவர் அழைப்பது போன்றிருக்கிறது.
இந்த வீட்டின் யன்னல்கதவு, அல்லது வாசல் கதவு திறக்கும் வரை காத்திருக்கின்றேன் – இன்னோர் சிறையுடைப்பிற்காக!
ஒரு கிளியின் சிந்தனையாக எங்கள் எண்ணங்களையும் நிதர்சனத்தையும் கூறியிருக்கின்றீர்கள்.வாழ்த்துக்கள்.