சின்னத்தங்கமக்கா சிறுகதை
சின்னத்தங்கமக்கா – சிறுகதை
எனக்கு என்னைப் பற்றி யோசிக்கும் பொழுதெல்லாம் ஐரிஸ் எழுத்தாளர் ஜேம்ஸ் ஜோய்ஸின் ஞாபகமும் அவர் எழுதிய ”வெள்ளம்” என்ற சிறுகதையும் ஞாபகத்திற்கு வந்து வந்து போகும்.
அந்தச் சிறுகதையில் வரும் பேராசியர் மிகவும் தற்பெருமை கொண்டவர். அவரை விட ஏழையான… ஆனால் அவரை விட மிகவும் அழகான அவர் மனைவியின் மனத்தில் இடம் பெற்றிருந்த இறந்துபோன ஒரு ஏழைப்பள்ளித் தோழன் பற்றி அறியும் பொழுது… அவர் தன்னைச் சுற்றி எழுப்பியிருந்த கோட்டை கொத்தளங்கள் எல்லாம் உடைந்து சிதறியது போல உணர்ந்தது போலவே எனக்கும் நேர்ந்தது.
பல தடவைகள் எனக்கு என் மனைவி சொல்லிக் கொண்டே வந்திருக்கின்றாள் ”உங்கள் கல்வியும் உங்கள் வாழ்வனுபவமும் உங்களுடையது மட்டுமே. அதனை வைத்துக் கொண்டு நீங்கள் மற்றவர்களின் வாழ்க்கையை அளக்காதீர்கள்” என்று.
ஆனால் இந்த ”நான்” அதுகளை எல்லாம் கேட்காது.
காலை தொடங்கி மாலை வரை பல்கலைக்கழகத்தில் மனோதத்துவப் பிரிவு வகுப்புகளும்….
பின்பு வீட்டுக்கு வந்தாலும் அரசியல்வாதிகள் – இலக்கியகர்த்தாக்களின் சந்திப்புகளும்…. ஊர் பொது விடய வேலைகளும் என ஒரு நாளின் 24 மணித்தியாலமும் காலில் சில்லைக் கட்டிக் கொண்டு ஓடி விட… மறுநாள் வந்து காலையில் எழுப்பும் – கடிகார ஒலி மூலம்.
குசினியுள் தோசையை சுட்டுக் கொண்டோ… அல்லது இடியப்பத்தை பிழிந்து கொண்டோ அவளும் அன்றைய வீட்டு வேலைகளை அடுக்கிக் கொண்டே இருப்பாள்.
நானும் பத்திரிகையில் இருந்து கண்களை வெளியே எடுக்காது கடைசியாக ”சிதம்பர அண்ணையிட்டை சொல்லி செய்” என்று விட்டு குளிப்பதற்காக கிணற்றடிப் பக்கம் எழுந்து போய் விடுவன்.
அவளும் ”நான் உங்களைக் கட்டினனா அல்லது சிதம்பர அண்ணையைக் கட்டினானா” என செல்லமாக கோபித்தபடி மதிய சாப்பாட்டு பாசலை தந்தபடி வாசலுக்கு வந்து… ”கவனமாய் காரை ஓட்டிக் கொண்டு போப்பா” என ரைவரிடம் சொல்லியபடியே என்னை வழி அனுப்பி அனுப்புவாள்.
சிதம்பர அண்ணை எங்களுக்கு தூரத்து உறவு.
99 இடம்பெயர்வுடன் எங்கள் வீட்டுப் பின் காணியில் உள்ள கொட்டில் வீட்டில் சின்னத்தங்கமக்கா என நானும் என் மனைவியும் அழைக்கும் தனது மனைவி சின்னத்தங்கத்துடனும் மகள் கார்த்திகாவுடனும் வசிக்கின்றார்.
முன்பு நான் ரியூசன் சொல்லிக் கொடுப்பதற்காக போடப்பட்டிருந்த பெரிய தென்னோலைக் கொட்டில் அது.
சுற்றிவர மண்ணினால் அரைக்குந்து போடப்பட்டிருந்தது.
போர்க்காலத்தில் ஒருநாள் ஆமி சுற்றி வளைத்து ஒரு மாணவனை கைது செய்து கொண்டு போன பின்பு அந்த வீட்டு ரியூட்டறிக்கு மூடுவிழா நடாத்தி விட்டேன்.
வளவில் நின்ற தென்னை மரங்களில் இருந்து காவோலைகள் விழும் பொழுது… தானே சேகரித்து ஒன்றிரண்டாய் பின்னி சேர்த்து… பின்பு ஆட்களைப் பிடித்து மேய்ந்து அந்தக் கொட்டிலை என் மனைவி அழிந்து விடாமல் பாதுகாத்து வந்தாள்.
பின்பு அவர்கள் வந்து அதற்கு சுவர்கள் எழுப்பி படுக்கை அறையாகவும் மிகுதியை முன் விறாந்தையாக்கியும் தாழ்வாரத்தை இறக்கி குசினியாக்கியும் அங்கேயே வாழ்கிறார்கள்.
பகலில் அச்சுக் கூடத்தில் வேலை அவருக்கு. பின்நேரத்தில் வீட்டைச் சுற்றியிருந்த இரண்டு ஏக்கர் காணியையும் தன் விருப்பத்தின்படியே தோட்டமாக்கி தானே கவனித்துக் கொள்வார்.
நான் சரி… மனைவி சரி எதுவும் சொல்வதில்லை.
காலையில் சரி அல்லது மாலையில் சரி ஏதாவது தோட்டத்தில் இருந்து கொண்டு வந்து தருவார். அதிகமாக விளைபவற்றை சந்தையில் கொண்டு போய் விற்பார்.
குத்தகை மாதிரி ஏதாவது தரவோ என இரண்டொரு தடவை கேட்ட பொழுது நாங்கள் இருவரும் வேண்டாம் என்று சொல்லி விட்டோம்.
சிதம்பர அண்ணைக்கு ஒரே மகள். உயர்தரம் இரண்டாவது வருடம் படிக்கின்றாள். மகளை என்னை மாதிரி பெரிய படிப்பு படிப்பீத்து விரிவுரையாளராக்க வேண்டும் என்பது தான் அவர் கனவு.
அவரின் மனைவி பெயரில் இருந்த தங்கம் அந்த அம்மாவின் குணத்திலும் இருந்தது. என் மனைவியின் வலது கை. நான் வேலைக்கு போன பின்பு வீட்டுக்கு வந்து என் மனைவிக்கு வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்துவிட்டுத்தான் பின் தனது வீட்டுக்கு போய் உலை மூட்டுவா.
எந்த படிப்பறிவும் இல்லாத பாமரத்தன்மை கொண்ட சின்னத்தங்கக்காவின் மீது எப்போதும் என் மனைவிக்கு இனம் புரியாத பாசம் இருந்து கொண்டே இருந்ததை நான் நன்கு அறிவேன்.
அதேமாதிரித் தான் சிதம்பர அண்ணையும். எங்கள் வீட்டிற்கு என்ன என்ன தேவையோ அதனை என்னை விட நன்கு உணர்ந்து அத்தனையையும் என் மனைவிக்கு ஒத்தாசையாக செய்து கொடுப்பார்.
சென்ற ஆண்டு இறுதியில் எங்கள் மூத்த மகனின் கலியாணம் இலண்டனில் நடந்த பொழுது எவ்வளவோ நானும் என் மனைவியும் சொல்லியும் கேளாமல் நாம் வரவழைத்திருந்த அத்தனை விருந்தினருக்கும் பயற்றம் பணியாரம் – பருத்திதுறை வடை – றவா லட்டு அத்தனையும் செய்து எங்களை கொழும்பு விமானநிலையம் வந்து வழி அனுப்பி வைத்தவர்.
எம்மிடம் ஒரு காசு கூட வாங்கவில்லை.
அத்தனைக்கும் நன்றிக் கடனாக அவர்களின் மகளின் கல்யாணத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நானும் மனைவியும் பேசிக் கொள்வோம்.
இலண்டனில் என் மகன் வாங்கித் தந்த ஐபோனை மட்டும் அவர்கள் மகளுக்கு கொடுத்திருந்தோம்.
அவளுக்கும் அவர்களுக்கும் அது மிகவும் சந்தோசம்.
”உதை வாங்கித்தந்து அவைதான் உன்னைப் பழுதாக்கிப் போட்டினம். அதுக்குள்ளையே தலையை புதைச்சுக் கொண்டு 24 மணித்தியாலமும் இரு”, என சின்னத்தங்கம்மக்காவின் ஏச்சு கார்த்திகாவுக்கு விழுவது சிலவேளை கேட்கும்.
இப்போதும் நேர்வேயில் உள்ள என் இரண்டதாவது மகனின் திருமணத்தை இலங்கையிலேயே செய்யும்படியும் தாமே அனைத்தையும் முன்னின்று நடாத்தி தருவதாயும் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.
எனது படிப்பு, தொழில், சமூக அந்தஸ்து காரணமாகவோ என்னவோ அதிகம் அவர்கள் என்னிடம் பேசமாட்டார்கள். எனக்கோ அவர்களுடன் பேசுவதற்கு எந்த சங்கோஜமோ தயக்கமோ இல்லாவிட்டாலும் ஆறுதலாக இருந்து பேசுவதற்கு சரி… பழகுவதற்கு சரி நேரம் இருப்பதில்லை.
எல்லாம் என் மனைவியுடன் தான்.
அவள் மூலம் தான் எனக்கு அவர்களது புதினங்கள் வரும் – இரவில் அல்லது அதிகாலையில்!
ஒருநாள் என் மனைவியே கேட்டாள் கார்த்திகா நன்கு படித்து மேலே உயர்ந்த நிலைக்கு வந்தால் எங்கள் இரண்டாவது மகனுக்கு திருமணம் செய்து வைக்கலாமா என்று.
அவளிடம் இருந்து அப்படி ஒரு கேள்வி வரும் என நான் எதிர்பார்க்கவே இல்லை.
நிமிர்ந்து அவளை பார்த்தேன்.
அவள் தன் தலையைக் குனிந்து கொண்டாள்.
”யாழ்ப்பாண சமுதாயத்திலை கல்யாணம் என்பது இரண்டு குடும்ப சம்மந்தப்பட்ட விடயம் என்பதை நீ மறந்திடாதை” என்று சொல்லி விட்டு பல்கலைக் கழகம் போய்விட்டேன்.
வழி அனுப்ப வந்த அவளின் கண்கள் மட்டும் கலங்கியிருந்தது போல இருந்தது இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கு!
*
ஒரு நாள் நான் வேலையால் வரும் பொழுதுசிதம்பர அண்ணையின் வீட்டிற்கு அதிகம் பேர் வந்திருந்தார்கள்.
அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது.
என்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மனைவி நான் காரால் இறங்கி வீட்டிற்கு போக முதல் கார்த்திகா உயர்தரப் பரீட்சையில் அதிக புள்ளிகள் எடுத்திருந்தாள் என்ற கற்கண்டு செய்தியை சொன்னாள்.
எனக்கும் மிக மகிழ்வாக இருந்தது.
சமூக முன்னேற்றம் சரி.. சமத்துவம் சரி… கல்வியால் மட்டுமே சர்தியம் ஆகும் என தினம் தினம் வகுப்பெடுக்கும் எனக்கு அவள் சாட்சிக் கையெழுத்துப் போட்டது போல இருந்தது.
“நான் இதை அவளுக்கு பரிசாக கொடுக்கட்டா” என தன் கழுத்தில் இருந்த சங்கிலியை காட்டிக் கேட்டாள்.
என் புன்னகையாலேயே அவளுக்கு என் சம்மதத்தைச் சொன்னேன்.
என் கையை மிகவும் அழுத்தி தன் நன்றியை எனக்கு தெரிவித்தாள்.
அவர்கள் வீட்டிற்கு போன பொழுது எல்லோரும் எழுந்து நின்று எங்களுக்கு மரியாதை செலுத்தி வரவேற்றார்கள்.
கார்த்திகா ஓடி வந்து என் மனைவியை கட்டிக் கொண்டாள்.
மனைவி தன் தங்கச் சங்கிலியை அணிந்த பொழுது சின்னத்தங்கமக்காவின் கண்களில் கண்ணீர் ஓடியது.
சிதம்பர அண்ணை எங்களை நன்றியுடன் பார்த்துக் கொண்டு நின்றார்.
அதனைத் தொடர்ந்து தினமும் நான் பல்கலைக்கழத்தால் வந்து தேனீர் குடித்த கையுடன் அவர்கள் மூவரும் வந்து எந்த பல்கலைக்கழகத்தில் என்னமாதிரியான வசதிகள்… என்ன மாதிரியான படிப்புகள்.. அதன் காலங்கள்.. எதிர்காலங்கள்… தொழில் வாய்ப்புகள் அனைத்துப் பற்றியும் விசாரிப்பார்கள்.
கடைசியாக யாழ். பல்கலைக்கழகத்திலேயே அவளது படிப்பைத் தொடர்வது என்றும்… தினமும் சென்று வருவது சிரமமாக இருக்கும் என்பதால் பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் தங்கிப் படிப்பது என்றும்… என் கண்காணிப்பு அவளுக்கு பல்கலைக்கழகத்தில் இருப்பது பாதுகாப்பு என்றும் நம்பியதால் அதுவே முடிவானது.
அதிகமாக திங்கள் காலைகளில் அவள் என்னுடனேயோ வருவாள்.
வெள்ளி மாலைகளிலும் என்னுடனேயே திரும்பி வருவாள்.
ஏதாவது கரணத்தால் சனி ஞாயிறுகளில் வர முடியாதிருந்தால் சின்னத்தங்கமும் சிதம்பர அண்ணையும் மூட்டை முடிச்சுகள் நிறைய சாப்பாட்டு சாமான்கள், வளவிற்குள் உள்ள பழவகை அனைத்துடனும் அங்கு போய் விடுவார்கள்.
என் மனைவி அடிக்கடி என்னை சீண்டுவாள், “நீங்களும் தான் எப்பிடி உங்கடை பிள்ளைகளை இலண்டனுக்கும் நோர்வேக்கும் அனுப்பி போட்டு இப்பிடி இருக்கிறியளோ” என்று.
“அப்பா அம்மா பாசம் என்பது சாப்பாட்டிலை காட்டுறதில்லை” என அவள் வாயை அடைத்துப் போடுவேன்.
அவளும் வழமை போல திருப்பி எதுவும் கதைப்பதில்லை.
*
அடுத்த ஆண்டு திருவெம்பாவை நேரம்.
ஐரோப்பாவில் கிறிஸ்மஸ் விடுமுறை நேரம்.
சொல்லாமல் கொள்ளாமல் எங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் தருவதற்காக இளையவன் நோர்வேயில் இருந்து வந்திருந்தான்.
ஆனியில் படிப்பு முடிய சம்மர் லீவுக்கே வருவான் என நினைத்திருந்தோம்.
அவன் வந்தது தொடக்கம் சின்னத்தங்கமக்கா காலையில் ஏதாவது பலகாரம் அவனுக்கும் எங்களுக்கும் செய்து கொண்டு வந்து தருவா.
ரொம்ப சங்கடமாய் இருக்கும்.
சொன்னாலும் கேட்கமாட்டா.
எனது மனைவி அவனைத்துளைத்தெடுத்துக் கொண்டு திரிந்தாள், “உனக்கு ஏதாவது தமிழ் பெட்டையள் இருக்கா?… நோர்வே பெட்டையள் இருக்கா??” என்று.
அவன் என்னைப் போல் அதிகமாக கேள்விகளுக்கு புன்னகைத்துக் கொண்டே செல்வான்.
“உங்களை மாதிரிப் பெத்து வைச்சிருக்கிறியள்” என எனக்கும் இரண்டு திட்டு விழும்.
அதுக்கும் பதில் என் புன்சிரிப்புத்தான்.
எனக்கு மனதிலுள் சின்ன ஒரு பயம் மனைவிக்கு இப்போதும் “கார்த்திகா கனவு” இருக்கா என்று?
ஆனால் அது பற்றியும் ஏதும் அவளிடம் பேசவில்லை.
கிறிஸ்மஸ்; முடிந்து புதுவருடத்திற்கு முதன்நாள்; வெளியே போய் சாப்பிட்டு வந்தால் நன்றாய் இருக்கும் என என் மகன் அபிப்பிராயப்பட யாழ்ப்பாண ரவுணில் உள்ள “ரில்கோ” ஹோட்டலுக்கு சென்று வெவ்வேறு நூடிலஸ் வகைகளை வரவழைத்துச் சாப்பிட்டோம்.
பில்லைப் பார்த்ததும் மனைவி பயந்து விட்டாள்.
“இதைவிட சின்னத்தங்கமக்காவின் சாப்பாடு ருசி” என தொடங்கி விட்டாள்.
எனக்கு “காக்கா முட்டை” பட ஞாபகம் வந்தது.
“அம்மா அடிக்கடி கதைக்கிற சின்னத்தங்க அன்ரியின் மகள் கார்த்திகா அவ்வளவு வடிவா?” அவன் கேட்க எனக்கு ‘திக்’ என்றது.
“இலட்சுமியடா” என பயந்து கொண்டே சொன்னாள்.
நான் ஏதும் சொல்லவில்லை.
“இன்றைக்கு பின்நேரம் அவள் வீட்டை வாறாள்…. அந்தப் பிள்ளைக்கும் இந்த சாப்பாட்டு பாசல் ஒன்று வாங்கி கொண்டு போவமா?”
அவனுக்கு பதிலும் என்னிடம் ஆலோசனையும் கேட்டாள்.
“இல்லை… அவை மூன்று பேருக்கும் வாங்குவோம்”
அவள் கண்கள் சிரித்தன.
*
வீட்டை கார் நெருங்கசிதம்பர அண்ணைவீடு அல்லோலகல்லுப்பட்டது.
நானும் மகனும் தயங்கியபடி எங்கள் வீட்டு வாசலில் நிற்க மனைவியை ஓடி வந்த சின்னத்தங்கமக்கா கட்டிக் கொண்டு அழத்தொடங்கினாள்.
“கார்த்திகா நாலுமாதக் கற்பமாம்… பேஸ் புக் தொடர்பாம்… பொடியன் இலண்டனில் பெரிய வியாபாரியின் மகனாம்… ஒவ்வோர் 3 மாதத்துக்கு ஒருமுறை வியாபார விடயமாக இலங்கை வந்து போகிறவனாம்”
அன்று முழுக்க சிதம்பர அண்ணையின் வீடு சாவீடு போலத்தான்.
எந்தச் சட்டி எப்போது கருகும்?… எங்கு அவல் கிடைக்கும் மெல்லுவதற்கு?? எனக் காத்திருந்த அனைவருக்கும் அன்று நல்ல தீனி!
நாங்கள் மூவரும் கூட ஒருவருடன் ஒருவர் நன்கு பேசிக் கொள்ளவில்லை.
ஏதோ ஒரு சோகம் அதிகமாக அழுத்திக் கொண்டு இருந்தது.
அன்றிரவு ஊர் எல்லாம் பட்டாசு கொளுத்தி மகிழ்ந்து கொண்டு இருந்தார்கள்.
நாங்கள் எதுவும் கொண்டாடவில்லை.
அடுத்தநாள் அதிகாலையிலேயேசிதம்பர அண்ணையும் சின்னத்தங்கமக்காவும் அழுது வீங்கிய முகத்துடன் வந்தார்கள்.
யாருடன் யார் என்ன ஏது கதைப்பதென்று புரியவில்லை.
மனைவி தேநீர் கொடுக்க மௌனமாக குடித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த மௌனம் என்னை என்னவோ செய்தது.
இந்தக் கர்ப்பவிடயம் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு முதல் தெரிந்திருந்தால் அதனைக் கலைத்துவிட்டு கார்த்திகாவின் படிப்பு முடிந்த பின்பும் அவர்கள் காதல் உண்மையான காதல் என்றால் எல்லோரின் சம்மமத்துடன் திருமணத்தைச் செய்து கொடுத்திருக்கலாம் என என் அறிவு சொன்னது.
மனதும் அதனை ஆமோதித்தது.
அங்கு நிலவிய மௌனத்தைக் கலைக்கும் பொருட்டு சிதம்பர அண்ணையிடமும் சின்னத்தங்கமக்காவிடமும்,
“இப்போ நாலு மாதமாய் போயிட்டுது… இனி ஒன்றுமே செய்ய ஏலாது… ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் என்றால் ஏதாவது செய்திருக்கலாம்…..” என நான் சொல்லி முடிக்கவில்லை….
சின்னத்தங்கமக்கா ஆவேசப்பட்டபடி….
“தம்பி! அதுக்கும் நான் விட்டிருக்கமாட்டன். அதுவும் ஒரு உயிர்தானே…”. சொல்லி முடித்த பின்பும் அவாவின் மூச்சு மேலும் கீழும் வாங்கியது.
நான் உறைந்து போனோன்.
தனது மகள் வயிற்றில் வேண்டி வந்ததால் அவளின் எதிர்காலம்… அவளுக்கு சமுதாயத்தில் வர இருக்கும் அவப்பெயர்… கார்த்திகாக்கு மட்டுமல்லை முழுக்குடும்பத்தையுமே ஊர்நாக்கு வளைக்கும் என்ற அச்சம்… எதையும் பொருட்படுத்தாது ஒரு உயிரை அழிப்பதை ஏற்றுக் கொள்ளாத சின்த்தங்கம்மாக்கா முன் நான் பல்கலைக்கலைக் கழகத்தில் இருந்து இறங்கி வந்து அரிவரி வகுப்பில் உட்கார்ந்தது போல இருந்தது.
மேலாக சின்னத்தங்கம்மக்காவின் ஆவேசம் என் கன்னத்தில் அறைந்தது போல இருந்தது.
*
எனக்கு என்னைப் பற்றி யோசிக்கும் பொழுதெல்லாம் ஐரிஸ் எழுத்தாளர் ஜேம்ஸ் ஜோய்ஸின் ஞாபகமும் அவர் எழுதிய தமிழில் வெள்ளம் என்ற சிறுகதையும் ஞாபகத்திற்கு வந்து வந்து போகும்.
அந்தச் சிறுகதையில் வரும் பேராசியர் மிகவும் தற்பெருமை கொண்டவர். அவரை விட ஏழையான… ஆனால் அவரை விட மிகவும் அழகான அவர் மனைவியின் மனத்தில் இடம் பெற்றிருந்த இறந்துபோன ஒரு ஏழைப்பள்ளித் தோழன் பற்றி அறியும் பொழுது… அவர் தன்னைச் சுற்றி எழுப்பியிருந்த கோட்டை கொத்தளங்கள் எல்லாம் உடைந்து சிதறியது போல உணர்ந்தது போலவே எனக்கும் நேர்ந்தது.
பல தடவைகள் எனக்கு என் மனைவி சொல்லிக் கொண்டே வந்திருக்கின்றாள் ”உங்கள் கல்வியையும் உங்கள் வாழ்வனுபவமும் உங்களுடையது மட்டுமே. அதனை வைத்துக் கொண்டு நீங்கள் மற்றவர்களின் வாழ்க்கையை அளக்காதீர்கள்” என்று.
ஆனால் இந்த ”நான்” அதுகளை எல்லாம் கேட்காது.
(முற்றும்)
Skriv et svar