சாகித்திய மண்டலப் பரிசு (சிறுகதை)

சாகித்திய மண்டலப் பரிசு (சிறுகதை)

சாகித்திய மண்டலப் பரிசு (சிறுகதை)

இந்தக் கதையின் முடிவை நீங்கள் தீர்மானித்து விட்டால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல.

இலக்கிய உலகத்தைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கின்றீர்கள் என்று உங்கள் தோள்களை நீங்களே தட்டிக் கொள்ள வேண்டும்.

*

”இந்த ஆண்டு சாகித்தியப்பரிசு உங்கள் மகன் கணேசனுக்குத்தான்;”

ஐவரும் ஒருமித்துச் சொன்ன பொழுது என்னால் நம்ப முடியவில்லை.

*

காலைமை தொடக்கம் காகம் கரைந்து கொண்டே இருந்தது.

மனைவியும் அதனை விரட்டி விரட்டி கலைத்துக் கொண்டிருந்தாள்.

”யாரோ வரப்போகினமப்பா?”

”இப்போதைக்கு யார் வர இருக்கு?…. மூத்தவளும் இளையவளும் பிள்ளைகளுடன் கடைக்குட்டி கணேசனின் கல்யாணத்திற்கு வந்து நின்று விட்டு போன கிழமைதான் சுவிசுக்கும் பிரான்சுக்கும் போனவை. இனி கணேசனும் மலைநாட்டுப் பக்கம் ஹனிமூன் என்று போனவன். அவனும் அடுத்த கிழமைதான் வருவான்….”

”சம்பந்தபகுதி ஏதாவது திடீரென வருவினமோப்பா”

மனைவி சொல்ல என் உதட்டுக்குள் சிரிப்பு வந்தது.

”தாலி ஏறும் வரை சம்பந்தபகுதி. இனி அவையும் தாங்கள் இலண்டன் போற அலுவல்களைப் பார்க்கத் தொடங்கி விடுவினம். அவைக்கு இதுக்கெல்லாம் நேரமிருக்காது”

”ஓமப்பா… கண்டியாலை வர தம்பியையும் இலண்டன் எம்பசிக்கு ஏதோ கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று சொன்னவை”

இனி நாலைந்து மாதத்துக்குள் கணேசனும் இலண்டன் போயிட்டால், நாங்கள் இரண்டு கிழடுகளும்தான் இங்கே.

மூத்தவளும் இளையவளும் எத்தனையோ தடவை கூப்பிட்ட பொழுது கணேசனைச் சாட்டி தட்டிக் கழித்தோம்.

இனி ஏதாவது ஒரு புதுக்காரணத்தைக் கண்டு பிடிக்க வேணும்.

அது முடியாது!

ரூரிஸ்ட் விசாவிலை 3 மாதம் நின்று விட்டு ஓடி வந்தது போதும்.

இளசுகள் வேலைக்கு போகும்… வருங்கள்… எவ்வளவு நேரம் ரி.வி.யைப் பார்த்துக் கொண்டும்… குந்தி இருக்கிறதுக்கு பதிலாக கதிரையிலை இருக்கிற மாதிரி இருந்து கொண்டும்… ரிசூவாலை துடைச்சுக் கொண்டும்… பிறகு போய் குளிச்சுக் கொண்டும்… இதெல்லாம் வேண்டாம்.

காகம் தொடர்ந்து கரைந்து கொண்டு இருந்தது.

காகம் அழைத்து வருவதற்கு யாரும் காத்திருப்பதாய் என் நினைவுக்கு யாரும் இல்லை.

இப்போ சரஸ்வதி பூஜை முடிந்து… கௌரி விரதம் நடக்குது… இனி கந்தசஷ்டி… இந்த நாட்களில் கல்யாண நாட்கள் வருவது குறைவு.

போன மாதம் மட்டும் ஆறு கலு;யான வீடுகள் –  மகன் கணேசனுடையதையும் சேர்த்து.

இப்போ கல்யாண நாட்களும் முடிந்து விட்டது.

இனி ஏதாவது கருமாரி நடந்தால் தான்.

அதுவும் முந்தியப் போல் எங்கள் காரைநகர் உறவினர்கள் காரில் வந்து சொல்வதில்லை.

எல்லாம் கைத்தொலைபேசி… முகநூல்… இணையத்தளங்கள்… லங்காசிறி… வானெலி செய்தி… தொலைக்காட்சி செய்தி… உதயன் அல்லது வீரகேசரி மூலம் தான் மரணச் செய்திகள் வருவது.

ஊரடங்கு சட்டங்கள் வந்ததுடன் எங்கள் ஊரில் அதிகாலையில் இழவு சொல்லுதலும் நின்று விட்டது.

திருவெம்பாவுக்கு பாட்டுப் பாடுவதும் கூட நிலம் வெளித்தபின்பு தான் நடந்தது.

பெரிய ஒரு கொட்டாவி வந்து போனது.

”மதி… உந்தக் கதை எழுதுற கொப்பியை மாலுக்கை மற்ந்து வைச்சிட்டு வந்திட்டன். ஒருக்கா எடுத்து தா. அதோடை அந்த முதுகு சொறியுற தடியைக் காணேல்லை அதைக் கண்டனியோ”

”எல்லாத்துக்கும் ஒரு பெண்டாட்டி வேணும்”

வழமையான புறுபுறுப்புடன் மாலுக்குள் போய் சிறிது நேரத்தில் இரண்டுடனும் வந்தாள்.

கைத்தொலை பேசி அழைத்தது.

காகம் விருந்தினர்களை கைத்தொலைபேசி வழியே அழைத்து வரப்போகுதோ என்ற ஐயத்தில் அதனைத் தூக்கினேன்.

மறுமுனையில் கணேசன்தான்.

”என்னடா…”

”கடைசி அத்தியாயத்தை சீக்கிரம் எழுதி அனுப்பட்டாம். சீவ் எடிட்டர் ரொம்ப நெருக்கிறார் என பானு மடம் போன் பண்ணுறா”

”சரி… நான் பார்க்கிறன். நீ வை போனை”

“இல்லையப்பா… இது 53வது கடைசி அத்தியாயம்;. ஒரு வருட தொடர். எல்லோரும் ஆவலோடை எதிர்பார்க்கிறார்கள். இந்த மாதத்தோடையே புத்தகத்தை அடிச்சு வெளியிட்டு விட்டால் சாகித்திய மண்டலப் பரிசு இதுக்குத்தான் என எல்லோரும்…” அவனின் குரலில் அவசரம் தெரிந்தது.

“பொறுக்கப்பபா அவா வாறா… பிறகு கதைக்கிறன்”

தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

நான் உதட்டுக்குள் சிரித்துக் கொண்டேன். மனுசிக்காரி கிட்ட வந்திட்டா போலும்.

என்ன அவசரம் அவனுக்கு!

கதை எழுதும் கொப்பியை என் மடிமீது வைக்கும் பலகை மீது வைத்துக் கொண்டு வடிவாக சுவரில் சாய்ந்து கொண்டேன்.

கைத்தொலைபேசியை முற்றான அணைத்து விட்டு அறைக்குள் மனைவி பார்த்துக் கொண்டிருக்கும் சரவணன்-மீனாட்சியின் சத்தத்தையும் குறைக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

சரவணன் தன் சத்தத்தைத்தைக் குறைத்துக் கொண்டான்.

மீனாட்சியின் விசும்பல் மெதுவாகவே கேட்டது.

என் மனைவிக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும்.

கதை எழுத நான் தொடங்கி விட்டால் அது ஒரு தவநிலைதான்.

எந்தச் சூறாவளியோ… சுனாமியோ என்னை ஏதும் செய்து விட முடியாது.

நடைபயிலும் ஒரு குழந்தையின் கைகளைப் பிடித்தபடி… அல்லது ஒரு பாலிய வயதுத் தோழனின் தோளில் கைகளைப் போட்டபடி நடந்து கொண்டு செல்வது போல சென்று கொண்டிருப்பேன்.

காடுகள்… மலைகள்… ஆறுகள்… கடல்கள்… பாலை வனங்கள்… எலலாத்தையும் தாண்டிக் கொண்டு சென்று கொண்டிருப்பேன்.

இது கடவுளாக எனக்கு தந்த கொடை.

எந்தப் பள்ளியிலும் இந்தக் கலையைக் கற்கவில்லை.

எவரிடமும் போய் முன்னுரைக்காக கெஞ்சியதில்லை.

கண்ணை மூடினால் தோன்றும் அத்தனையையும் காட்சிப்படுத்துகிறன்.

அது கதையாக வளருகிறது.

ஒரு நேர்காணலில் சத்தியத்தின் பெயரால் சொன்ன பதில்தான் என்னை இலக்கிய உலகம் தூக்கி எறிந்தது.

கேள்வி: ”நீங்கள் எதுக்காக சிறுகதை உலகினுள் வந்தீர்கள்?

பதில்: ”நல்ல இரண்டொரு கதைகளை நான் வாசிக்க வேண்டும்”

அடுத்து அடுத்து வந்த வார இதழ்கள் எல்லாம் என்னை திட்டி தீர்த்து இருந்தது. என் இலக்கிய நண்பர்கள் கூட புனை பெயர்களில் என்னை வாங்கு வாங்கென்று வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

அதுவே என்னுள் ஒரு தீயை வளர்த்தது.

எழுத்துகள் சுவாலையாக இலங்கைப் பத்திரிகைகள் என்னை சாதிப் பிரதிஷ்டை செய்ய இந்தியப் பத்திரிக்கைகள் சில என்னை சுவீகாரம் எடுத்துக் கொண்டது.

அப்பொழுதான் அந்தச் சம்பவம் நடந்தது.

அது நடந்திருக்வே கூடாது என இன்றும்… இப்போதும்… இந்த கடைசி அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது நினைத்துக் கொண்டு இருக்கின்றேன்.

ஒரு நாள் கணேசன் தான் ஒரு கதை எழுதியிருப்பதாய் கொண்டு வந்து காட்டினான்.

நல்லாய்தான் எழுதியிருந்தான்.

40 மார்க்ஸ் போடலாம்.

அதனை நான் கொஞ்சம் திருத்தி மெருகேற்றிக் கொடுத்தேன்.

80 மார்க்ஸ் போடலாம் போல் இருந்தது.

ஒரு பத்திரிகைக்கு அனுப்பினான்.

அந்த மாதத்தின் சிறந்த கதை என்ற அங்கீகாரம் அவனுக்கு கிடைத்தது.

எழுத்துலகில் தெரியத் தொடங்கினான்.

அவன் இன்னும் அதிக அதிக கதைகளுடன் என்னிடம் வந்தான்.

”தந்தை மகனுக்காற்றும் உதவி போல….” எனது மெருகூட்டலில் அவன் மேலும் மேலும் வளர்ந்தான்.

பத்திரிகையில் தொடர் எழுத அவனுக்கு வாய்ப்பு கிடைத்தது.

மீண்டும் அவனது பிள்ளையை நான் வளர்ப்பது போலத்தான்.

கதை மிகவும் பிரபலமாக… அவன் இன்னும் பிரபலமானான்.

அப்போதுதான திருமணமும் கூடி வந்தது.

கதாசிரியர் என்பது அவனுக்கு எக்ஸ்ரா குவாலிட்டியானது.

ஆனால் கல்யாண நேரத்தில் கடைசி 9 அத்தியாயத்தையும் நானே தொடர்ந்து எழுத வேண்டி இருந்தது.

இன்று கடைசி அத்தியாயம்.

முடிவை அனைவருமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இன்னும் சுவரில் லாவகமாக சாய்ந்து கொண்டு இறுதி அத்தியாயத்தை எழுதத் தொடங்கினேன்.

வாசலில் கார் ஒன்று வந்து நின்ற சத்தம் கேட்டது.

என் மனைவியும் வெளியில் வந்து எட்டிப் பார்த்தாள்.

எனக்கு தெரிந்த… அல்லது நான் புறக்கணிக்கப்படக் காரணமாய் இருந்த நாலைந்து இலக்கியவாதிகள் வந்திருந்தார்கள்.

“வாங்கோ”

“தம்பி கணேசனின் கல்யாணத்துக் வர முடியாது போச்சு… கம்பன் கழகவிழா அன்று.. அதுதான் பார்த்து விட்டு போவோம் என்று”

மனைவி திருமணப் பலகாரங்களையும் தேனீரையும் தட்டில் கொண்டு வந்தாள்.

“நீங்கள்தான் எழுத்துலகில் இருந்து ஒதுங்கினாலும் கணேசன் நல்ல பிரகாசமாக வந்து கொண்டிருக்கிறார்”

என் மடியில் இருந்த கதைக் கொப்பியை மெதுவாக கீழை வைத்தேன்.

”இந்த ஆண்டு சாகித்தியப்பரிசு உங்கள் மகன் கணேசனுக்குத்தான்;”

ஐவரும் ஒருமித்துச் சொன்ன பொழுது என்னால் நம்ப முடியவில்லை.

“எப்பிடிச் சொல்லுறியள்?… கதை இன்னும் முடியேல்லை… புத்தமாய் போடேல்லை…”

“இப்பிடி ஒரு கதை இதுவரை வந்ததில்லை. முடிவும் அந்தமாதிரி கணேசன் எழுதிப் போடுவர்… இனி நாங்கள் வேறு இருக்கிறம் தானே”

“நீங்கள் சொல்லுறது புரியேல்லை?”

எனக்கு உண்மையாகவே புரியவில்லை.

“என்ன அண்ணை எவ்வளவு காலம் இந்த துறைககுள் இருக்கிறியள்?”… ஒருவர்  கேட்க மற்றவர் தொடர்ந்தார்.

“முதல் இரண்டாவது தெரிவுக்கை எப்பிடியும் கணேசனின் கதை வந்திடும். இறுதிச் சுற்றுக்கு நாங்கள் 5 பேரும் சொன்னால் எல்லாம் நடக்கும். 50 வீதத்தை எங்களுக்கு தந்தால் நாங்கள் ஆளுக்கு 10 வீதத்தை எடுப்பம்”

“இலண்டன் மாப்பிள்ளைக்கு இதெல்லாம் பெரிய காசில்லை… அங்கை போனாலும் பேரும் புகழும் நிலைக்கும்… ஏதாவது இரண்டொரு பேப்பரின்ரை போட்டோகிராவ்காரன்களுக்கு கையிலை 2-3யை வைச்சால் பிறகு சப் எடிட்டர்மார் களைகட்ட வைச்சிடுவினம்”

எனக்கு நா வறண்டு கொண்டு வந்தது.

கைகளில் சின்ன நடுக்கம் கண்டது.

ஆனாலும் இந்த தப்பு நிலை வர நானும் காரணமாகி விட்டேன் என மனம் உறுத்தியது.

எதையுமே வெளிக்காட்டாமல் தம்பி வந்ததும் சொல்லுகின்றேன் என வழி அனுப்பி வைத்தேன்.

அவர்கள் போன பின்பு கதை எழுத கொப்பியை எடுத்தேன்.

ஏனோ மனத்தைத ஒரு நிலைப்படுத்த முடியவில்லை.

எழுந்து போய் மாமரத்தின் கீழ் பறித்திருந்த விறகு கும்பலில் இருந்து ஒரு சிகரட்டை மூட்டினேன்.

சிந்தனை எல்லாத் திசைகளிலும் ஓடியது.

அணில்கள் கொப்புகளில் தாவிச் தாவிச் சென்றன.

இன்னொன்று மாதுளையை கட்டியிருந்த சிரட்டையை தன் பாரத்தால் வளைத்து வைத்துக் கொண்டு கொறித்தது – எவ்வாறு அணை கட்டினாலும் எங்கேயோ வரும் ஓட்டை போல்.. அல்லது போடப்படும் ஓட்டைகள் போல…

சிகரட் எரிந்து வந்து என் நுனி விரலைச் சுட்டது.

அதில் இன்னோன்றையும் மூட்டினேன்.

அதனை இம்முறை வாயில் வைக்கவில்லை.

அது கருகி எரிந்து கொண்டு வருவதை பார்த்துக் கொண்டே இருந்தேன்.

நுனி கருகி கருகி பின்னால் வர வர எனக்குள் ஒரு தெளிவு வருவது போல இருந்தது.

இறுதியாக இரு இழுப்புக்கு போதியவு இடம் இருந்த பொழுது அதனை நன்கு உறிஞ்சி எடுத்து விட்டு கட்டையை காலினுள் போட்டு நசித்து விட்டு மீண்டும் வீட்டினுள் வந்து கதைக் கொப்பியை எடுத்தேன்.

இறுதி அத்தியாயம்!

இறுதிப் போரில் தந்தையே மகளை ஆமிக்காரனிடம் கொடுத்துவிட்டு தானும் இரண்டம் தார மனைவியும் தப்புவது போல கதையை முடித்து தபாலில் சேர்த்திருந்தேன்.

முதலில் யோசித்திருந்த முடிவு மகளைக் காட்டி தன் மகனைக் கொன்ற ஆமிக்காரனை வீட்டினுள் அழைத்து கொல்வதாய் இருந்தது.

அடுத்த வாரம் கதை பிரசுரமானது.

ஆனால் பரிசு தேர்வுக் குழுவின் முதலாவது படி நிலையிலேயே அது நிராகரிக்கப்பட்டிருந்தது.

இதனைத்தான் நானும் எதிர்பார்த்திருந்தேன்.

 

*

இந்தக் கதையின் முடிவை கதையோடிக் கொண்டு இருக்கும் பொழுது நீங்கள் தீர்மானித்து இருந்தால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல.

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)