சண்டியனும் சண்டிக்குதிரையும் – சிறுகதை
விமானம் இலங்கையில் இருந்து டென்மார்க்கிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தது.
அவள் தவறியது தொடக்கம் நேற்று மாலை எங்கள் வீட்டு முற்றத்தில் நடந்த அனைத்தையும் மனது சுய விசாரணணை நடாத்திக் கொண்டுவந்தது
*
நீயில்லாது விட்டால் இந்த உலகமே இல்லை என்றிருந்து….
நீயும் நானும் வாழ்ந்தது போல எவரும் வாழவில்லை என்றிருந்து….
நீயில்லாத உலகத்தில் இயற்கை சீக்கிரமாக என்னை அழைத்துக் கொண்டு போய்விடும் என்றிருந்து…
பூவுடனும் பொட்டுடனும்…
மார்பில் வந்த ஒரு சிறுகட்டியுடனும்…
அவள் போன பின்பு அவள் இல்லாமல் இன்னமும் நான் உயிர்வாழ்கின்றேன் என்பது தான் நிஜம்.
ஐந்து வருடக் காதல்… வீட்டை விட்டு ஓடி விடக்கூடாது என்ற போராட்டங்கள்…. வெளிநாட்டுக்கு வந்ததால் மாப்பிள்ளை என்ற கௌரவம்… மிகச் சிறப்பாக செல்லச் சந்நிதியில் திருமணம்….. ஈர் ஐந்து வருட தாம்பத்தியம்… இதில் பிள்ளை வரம் கேட்டு மீண்டும் தென்னிந்தியாவில் கோயில்களுடனும்… மகப்பேறு மருத்துவநிலையங்களுடனும் மூன்று நான்கு வருடங்கள் கழிந்தது போக…. மிகுதியான கால கட்டத்தில் இவர்கள் இல்லாத காலகட்டத்தில் இவர்களின் சொத்துகள் யாருக்கு என்ற அன்பான உறவுகளின் கேள்விகளுடனும் அக்கறையுடனும் கழிய….அவளுடனான 15 வருட நினைவுகள் மட்டும் இன்று என்னுடன்.
முதல் ஐந்து வருடம் விதைத்த காதலை சிறுக சிறுக அறுவடை செய்தது தான் நாமிருவரும் ஒன்றாக வாழ்ந்த அந்த ஈர் ஐந்து வருடங்ககளில் தான்.
பனி உருகத் தொடங்க நிலத்தில் இருந்து வெடித்து கிளம்பும் சின்ன சின்ன பூக்களை பிடிங்கி சின்ன சின்ன சாடிகளில் யன்னல்களில் வைத்து அழகு பார்த்து….
தொடர்ந்து வரும் கோடையில் சனநடமாட்டம் இல்லாத கடற்கரைகள் தேடி தேடி நாமிருவரும் மணிக்கணக்காக நீராடி பின் முற்றாக துவட்டாத தலையுடனும் உலராத உடம்புடன் இருந்து வீட்டில் இருந்து கொண்டு சென்ற குழையல் சாதத்தை சுவைத்து ….
இலைகள் பழுத்து உதிரத் தொடங்கும் காலத்தில் கைகளைக் கோர்த்தபடி காடுகளின் நடுவில் நடந்து நடந்து வெவ்வேறு நிறம் கொண்ட காளான்களை பிடிங்கி சேகரித்து….
பனி பெய்யத் தொடங்க குழந்தைப் பிள்ளைகள் போல பனிகளை உருட்டி வளவு முழுக்க உருவங்கள் செய்து கொண்டும் ஆளுக்;கால் பனியை அள்ளி எறிந்தபடியும்….
இலைதளிர், கோடை, இலையுதிர். பனி காலம் என நாலு காலமும் கால்களில் சக்கங்களை கட்டிக் கொண்டு ஓடுவது போல ஈர் ஐந்து வருடங்கள் ஓடிப்போயிற்று.
இந்த வீட்டில் உள்ள ஒவ்வோர் இடத்திலும் அவள் தனது அடையாளங்களை பிடுங்க முடியாத ஆணி கொண்டு அறைந்து விட்டுப் போயிருக்கின்றாள்.
அவையுடன் குசுகுசுத்தபடி தண்ணீர் விடும் ஓர்க்கிட் மலர் செடிகள் ஆகட்டும்… சுப்பிரபாதத்தை உச்சரித்தபடி எல்லாக் கடவுள்களுக்கு ஏற்றும் சின்ன சின்ன காமாட்சி விளக்குகள் என்றாலும் சரி…. காலைச்சூரியன் கட்டிலில் விழாது அறைமுழுக்க பரவும் வண்ணம் அறைக்கு அவள் தைத்துப் போட்டிருக்கும் திரைச்சீலைகள் சரி… எங்கு திரும்பினாலும் அவளை நினைவூட்டிக் கொண்டேயிருக்கும்.
”பெரிய கம்பியூட்டர் ஆள் என்றுதான் பெயர்… வாசிங்மெசினுக்குள்ளை உடுப்பும் சோப்பும் போட்டு சரியாக திருகி விடத்தெரியாது” என என் கால்களை வாருவதிலும் சரி…
38 வயதுக்கை நரை வந்திட்டுது என்று பார்த்து பார்த்து தன் ஐடெக்ஸ் மையால் மெல்ல அரும்பும் வெள்ளை முடிகளை கறுப்பாக்கும் அக்கறையிலும் சரி….
எத்தனை சேலைகள் இருந்தாலும் இதனை உடுக்கவா – அதனை உடுக்கவா என எனது முழச்சம்மதத்தையும் கேட்டு… என்னைக் கொண்டே பின்னால் சேலையை சட்டையுடன் இணைத்துக் ஊசியால் குற்றிவித்து என்னுடன் காரில் வந்து ஏறுவதில் தான் அவளுக்கு எத்தனை திருப்தி.
”நேரத்திற்கு வெளிக்கிட்டு ஒரு விழாக்கு நேரத்திற்கு போகத் தெரியாது” என்று என்னதான் நான் திட்டினாலும் ”அங்கை போய் நீங்களா குத்து விளக்கு கொளுத்தப் போறீர்கள்… பத்துமணி என்று காட்டில் போட்டால் பதினொருமணி என்றுதான் அர்த்தம்” என கணகச்சிதமாய் போய் இறங்குவாள்.
பெயருக்கு குடும்பத்தலைவன் – அனைத்திற்கும் கணிணி – அவளுடையதும் சேர்ந்து அனைத்து வங்கி அட்டைகளும் என் கையில் இருந்ததே தவிர குடும்பத்தின் தலை அவள்தான்.
அவளுக்கு என்றுமே காசுத்தேவை இருந்ததில்லை.
தேவைப்படுவது எல்லாம் சில்லறைக் காசுகள் மட்டும் தான்.
காணுகின்ற சின்ன சின்ன செடிகளை வீட்டுக்கு வாங்கி வந்து அவற்றைப் பெரிதாய் வளர்ப்பதுக்கு மட்டும் தான் அவளுக்கு காசு வேண்டும்.
மற்றப் பெண்கள் சின்ன தொகையில் சீட்டுப் போடக்கேட்கும் பொழுது அவள் ”என்ன தேவை எண்டாலும் அவர் வாங்கித் தருகிறார். நான் ஏன் பிறம்பாய் சேர்க்க வேணும்” என மற்றவர்களை அவள் மறுதலிப்பதும் …. ”நீ சரியான லூசு” என அவர்களிடம் கிடைக்கும் திட்டை சிரித்தபடி வாங்கிக் கொள்வதிலும் அவளுக்கு திருப்தி தான்.
எனது பிறந்தநாளுக்கு கூட என்னிடமே காசு வேண்டி எனக்கு உடுப்பு வாங்கி வருவாள்.
அவளுக்கு பிறந்தநாள் என்றாலும் காசைக் கொடுப்பேன். அவளே வாங்கிக் கொள்வாள்.
அதனிடையே, ”மனுசிக்கு என்ன பிடிக்கும் என்று ரகசியமாய் வாங்கித்தரத் தெரியாத ஒரு மக்கைக் கட்டியிருக்கிறன்”, என்று என் மீதான விமர்சனம் வேறு.
எல்லாமும் இருந்தும்… அவளுக்கு நானும் எனக்கு அவளுமாய் இருந்தும்… பிள்ளை என்ற ஒன்று இனி இல்லை என்ற பொழுது கூட ’எவரில் குறையிருந்தது?’ என இருவருமே அறிய விரும்பவில்லை.
சென்ற ஆஸ்பத்திரிகளில் எல்லாம் முதன் நாளே சொல்லி விடுவோம் ”எங்கள் இருவருக்கும் ஒரு பிள்ளை வேண்டும். ஆனால் இது இல்லாத பட்சத்தால் இதனால் தான் பிள்ளை இல்லை என்று அறிய விரும்பவில்லை” என்று.
இலங்கையில் இருந்த இருவரின் பெற்றோர் – சகோதரங்களுக்கு கூட அதனை அறிய பெரு விருப்பம் இருந்ததை நாம் இருவருமே அறிவோம்.
ஓர் நாள் விளையாட்டாகவே கேட்டாள் ”என்னில் குறை இருக்கிறது என்றால் என்ன செய்வீர்கள்?” என்று.
”இன்னும் நல்ல வடிவான பெண்ணாய் பார்த்து திருமண….” சொல்லி முடிக்கவில்லை அவளது கையில் இருந்த உருளைக் கிழங்கு என் நெற்றியைப் பதம் பார்த்தது.
ஓடி வந்து அணைத்து குளிர் தண்ணீரால் ஒத்தடம் கொடுக்க தொடங்கினாள்.
அன்றிலிருந்து விளையாட்டுக்கு கூட அந்த விடயத்தை தொடுவதில்லை.
பிராயச் சித்தம் செய்ய முடியாத நதிமூலம் ரிஷிமூலத்தை அறிவதில் எந்த பிரயோசனமும் இல்லை.
இதனை இருவருமே நன்கு உணர்ந்திருந்தோம்.
ஆனால் அத்தனையும் இன்று…. எல்லாமுமாய் இருந்து பின் எதுவுமாய் இல்லாமல் போய் விட்டது.
ஒரு சிறிய செடியின் வேர் மலையையே பிளப்பது போலத்தான் அவளுக்கு வந்த சின்னக் கட்டியும்.
காய்ச்சலும் தலையிடியும் தலைச்சுற்றும் இடைக்கிடை வந்து போனபோது எனக்கு எதுவும் சொல்லாது இஞ்சி போட்டு தேனீரும் கொத்த மல்லி அவித்து தன்பாட்டில் வைத்தியம் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறாளே தவிர எனக்கு எதுவும் சொல்லவேயில்லை.
ஆனால் பின்பு தான் தெரிய வந்தது அந்தக் கட்டிகள் போல் பல சிறிய கட்டிகள் கண்ணுக்கு தெரியாத அளவில் உடலின் பல பாகங்களில்… உள்ளேயும் வெளியேயும்…
எங்கள் கண்ணுக்கு தெரிந்தது அத்திலாந்திச் சமுத்திரத்தில் மிதந்து வரும் பனிப்பாறைகளின் மேடுகள் மட்டும் தான்.
தோலின் கீழ் புற்று வியாபித்திருந்தது.
மாதக்கணக்கில் வாரக்கணக்கில் என்றில்லாது நாட்கணக்கில் நேரம் குறித்து தந்து விட்டார்கள்.
அவளின் பெற்றார்களையோ… சகோதரங்களையோ… இங்கு வரவழைக்க…. விசா அது இதுகளுக்கு கால அவகாசம் இருக்கவே இல்லை.
என்னைச் சமாதானப்படுத்தச் சொன்னாளோ… அவளாக சொன்னாளோ தெரியாது.
அவள் அமைதியாக சொன்னாள் ”இது நான் உங்களைப் பார்த்துக் கொண்டு உங்களோடை இறுதிவரை இருக்கப் போற தருணங்கள்…. நிறைய ஆக்கள் வந்து சுற்றி நின்று அழுது கொண்டு இருக்க உங்களோடை நான் தனிமையிலை இருக்கிற தருணங்கள் இல்லாமல் போய் விடும்”.
என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை.
அவளின் உள்ளங்கையை வாங்கி அதில் என் தலையைப் புதைத்துக் கொண்டேன்.
என் கண்கள் அவளின் கையை ஈரமாக்கியயை உணர்ந்த பொழுது தன் கையை இழுத்து என்னைக் குட்டி விட்டு என் தலையை வருடியபடியே சொன்னாள், “பார்த்தீங்களா… கடவுள் எவ்வளவு கிரேட் என்று”.
”ஏன்” என் கண்களாலேயே கேட்டேன்.
”எங்களுக்கு ஒரு பிள்ளை இருந்திருந்தால் அதையும் தானே நான் இன்று அநாதையாக்கி விட்டுப் போயிருப்பன்”
அவளின் வாயை என் கைகளால் பொத்தினேன்.
மெதுவாய் என் கைகளை விலக்கியபடி… ”உண்மைதான்… அதுவும் ஒரு பெண் பிள்ளையாய் இருந்திருந்தாள் அது வயதுக்கு வரும் பொழுது யாரிடம் சொல்லும்… நாளைக்கு திருமணமாகிப் போகேக்கை யார் அவளுக்கு எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்கிறது… கட்டி தனிய போனாலும் தினமும் பிள்ளைக்கு தேவையானதுகளை யார் சொல்லிக் கொடுக்கிறது….நாளை அவளுக்கு பிள்ளை பிறந்தால் அதைப் பார்க்கிறதுக்கு அம்மம்மா போல ஒன்று வருமா….”
”கொஞ்சம் சும்மா இருக்கிறியா” என அதட்டினேன்.
சிறிது வினாடிகளுள் மீண்டும் தொடர்ந்தாள்.
”நான் செத்த பிறகு எனக்கு துரோகம் செய்கிறன் அது இது என்றில்லாமல் நீங்கள் யாரையாவது கட்டி நல்லாய் இருங்கள்…”
முறைத்துப் பார்த்தேன்.
”நீ கள்ளனடா.. நான் சொல்லாட்டியும் நீ யாரையாவது விழுத்திப் போடுவாய்… இல்லாட்டி உன்னிலை வந்து யாராவது விழுந்திடுவாளவை” தனக்குள் புன்னகைத்தாள்.
”கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு இருக்கிறியா?”
எனது குரல் உயர்ந்ததை நானே உணர்ந்தேன்.
”என்ன சண்டியர் குரல் உயருது?” என்றபடி என் கரங்களை இறுக்கி அழுத்தினாள்.
என் மீது உள்ள காதலின் உச்சத்தில் அவள் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் அது.
பல நாட்கள் அவளின் வாயிலிருந்து கேட்காமல் மறந்து போயிருந்த வார்த்தை அது.
”என்ன என் சண்டிக்குதிரையே!…. என்னுடன் சண்டித்தனம் பண்ணணுமா?” மெதுவாகக் கேட்டேன்.
”ஆம்” எனத் தலையாட்டினாள்;.
அப்பிடியே அவளை அணைத்துக் கொண்டேன்.
சிறிது நேரத்தில் மூச்சுத் திணறிது போல இருந்தது.
பக்கத்தில் இருந்த சிவப்புக் கயிற்றை இழுத்தேன்.
நேர்ஸ்மாரும் டாக்டரும் ஓடி வந்தார்கள்.
ஆனால் அவள் போய் இருந்தாள்.
எனக்கு எதுவுமே செய்யத் தோன்றவில்லை.
ஒரு நேர்ஸ் வந்து யன்னல்களை நன்கு திறந்து விட்டாள்.
ஆவி போக வழி வேண்டும் என்பது அவர்களின் ஐதீகம்.
இன்னொரு நேர்ஸ் வந்து ஒரு மெழுகுதிரியை ஏற்றி வைத்தாள்.
“இன்னும் ஆறு மணித்தியாலத்தின் பின்பே மரண உறுதி பத்திரம் தருவோம். அதுவரை இதே வார்ட்டில் வைத்திருக்கலாம். அல்லது கீழே தனியறைக்கு கொண்டு போய் வைத்திருப்போம்”
“இல்லை… இங்கேயே அவளுடன் இருக்கிறன்”
“உங்களுக்கு ஆறுதலுக்கு யாரையாவது அழைத்து….” நேர்ஸ் இழுத்தாள்.
“வேண்டாம்! இந்த ஆறு மணித்தியாலமும் அவளும் நானும் தனித்திருக்க வேணும்.
யாராவது விசிட்டேர்ஸ் வந்தாலும் இன்று பார்க்கேலாது என்று சொல்லி விடுங்கள்”
“ஐ கான் அன்டர்ஸ்ரண்ட்” என்று சொல்லி விட்டு கதவுகளை மிகவும் மெதுவாக சாத்தியபடி வெளியேறினாள்.
கிட்டத்தட்ட பதினைந்து பதினாறு வருட உறவு இன்னும் ஆறு மணித்தியாலத்தில் அவளை பிரேத அறையிலும் என்னை தனியாக என் கட்டத்திலும் சிறை வைக்கப் போகின்றது.
நினைக்கவே பயமாய் இருக்கு!
வீட்டின் கதவைத் திறக்க முதலே ”தேத்தண்ணி வைக்கவா? சாப்பாட்டைப் போடவா? குளிக்குப் போறியளா? இனி எங்கையாவது வெளியில் போற வேலை இருக்கா?” என்று என் பதிலை எதிர்பாராமல் அடுக்கிக் கொண்டே வரும் கேள்விகளை கேட்பதற்கு யார் அங்கு இருக்கின்றார்கள்?
அவள் முகத்தை உற்றுப் பார்க்கின்றேன்.
முகத்தில் எந்தக் கவலையும் இல்லை.
சனி ஞாயிறுகளில் அதிக நேரம் தூங்குவது போலவே தூங்கிக் கொண்டு இருக்கின்றாள்.
எந்த அசுமாத்தமும் இல்லாமல் தூங்குவது போலவே தூங்கிக் கொண்டு இருக்கின்றாள்.
எப்படியும் அடுத்த சனியோ ஞாயிறோ இப்டியே இவளைத் தூக்கி மின் அடுப்பு வாசலில் வைத்து பட்டனை அழுத்தப் போகின்றேன்.
அதன் பின் எதுவுமே எஞ்சப் போவதில்லை.
கிரியைகள்… சுண்ணப் பாடல்கள்… கூடிநின்ற கூட்டங்கள்… வாசித்த கண்ணீர் அஞ்சலிகள்… மலர் வளையங்கள்… எல்லாமே நினைவில் நின்று மறைந்து விடும்.
எட்டுச் செலவு…. அந்தியேட்டி….ஆட்டத்திவசம்… புரட்டாதி மாலையம் என அனைத்தும் என்னை அவளிடம் இருந்து அன்னியப்பட வைக்கப் போகின்றது.
வீட்டையே சுற்றி சுற்றி வந்தவளை கண்ணாடிச் சட்டத்தினுள் சந்தனமாலைபோட்டு மின்விளக்கு பூட்டி வைக்கப் போகின்றேன்.
அதன் பின்?
எனக்கு எதுவுமே தெரியுதில்லை!
சிந்தனை என்பது ஒரு எல்லைவரை தான் போலும்!!
அவளின் அருகே எழுந்து போகின்றேன்.
“சண்டியனை விட்டுட்டு தனிய போயிட்டியா?” நான் மெதுவாய் சொல்ல முதல் கதறி அழத் தொடங்கி விட்டேன்.
என்னால் அடக்க முடியவில்லை.
அறையை விட்டு வாசல் நடைமுழுக்க என் குரல் கேட்டிருக்க வேண்டும்.
நேர்ஸ்மார் வந்து என்னை ஆசுவாசப்படுத்திருக்கிறார்கள் போல் தெரிகிறது.
என்னால் முடியவில்லை!
எதுவுமே முடியவில்லை!!
*
இந்த ஒரு வருடமும் நான் அனுபவித்த வேதனைகளைத் தான் ஒரு ஆயுள்கைதி தன் வாழ்நாள் முழுக்க அனுவிப்பான் போலும்!
அவ்வளவு வேதனை!
உள்ளேயும் வெளியேயும்!!
நன்கு பழகினவர்கள் எல்லோரும் ஏதோ தள்ளிப் போனது போல…
ஒரு விதவையை ஒதுக்கி வைப்பது போலத் தான் இதுவும் ஒதுக்காமல் ஒதுக்குவது.
இந்த ஒரு வருடமும் எந்த நல்ல விடயங்களுக்கும் போகவில்லை.
கெட்டதுக்குப் போனாலும் ஒரு சம்பிருதாயமான தலையாட்டல் தான்.
அவள் இருந்த பொழுது “அண்ணா அண்ணா” என்ற பெண்கள் கூட ஒரு தலையாட்டல் தான்.
அவளின் மரணத்தால் எனக்கு பெரும் தொகையான இன்சூரன்ஸ் காசு வந்திருந்தது.
அதுவே பெரிய குசுகுசுப்பாய் இருந்தது – வேண்டுமென்றே அவளின் நோயை முற்ற விட்டேன் என்று.
ஆட்டத்திவசத்தை மட்டும் ஊரில் வந்து செய்யும் படி எங்கள் வீட்டிலும் அவள் வீட்டிலும் பெரிய கோரிக்கைகள்.
என்னிலிருந்து தள்ளி நிற்கும் உலகத்தை இழுத்து வந்து அவளின் காரியங்களைச் செய்யாமல் அவளின் மண்ணில் அவளினதும் எனதும் உறவுகளுடன் ஆட்டத்திவசம் செய்ய அங்கே போயிருந்தேன்.
கீரிமலையில் தர்ப்பணம் செய்து எல்லாம் நன்கு முடிந்து புறப்படுவதற்கு நாலு நாட்கள் இருந்த பொழுதுதான் இரு வீட்டாரும் ஒரு செக்கல் பொழுதில் ஒன்றாக எங்கள் வீட்டு முற்றத்தில் கூடினார்கள்.
”35 வயதில் தனித்துப் போயிருக்கிறனாம்”
”கட்டாயம் கல்யாணம் செய்ய வேணுமாம்”
”பின்னடிக்கு தனியே தூர தேசத்தில் இருக்க முடியாதாம்”
”35 வயதெல்லாம் ஓர வயது இல்லையாம்”
எல்லா நியாயங்களும் நியாயங்களாகவே பட்டது.
ஆனாலும் மறுதலித்தேன்.
எத்தனையே பிள்ளைகள் கல்யாணம் செய்யாமல் இருக்குதுகள்… புண்ணியமாய் போகும் என்று வேறு தார்மீக வழியில் வாதங்கள் வேறு!
ஊர் வாயை அடைக்கவாவது கல்யாணம் செய் என்றார்கள்.
என்ன என்று கேட்டேன்.
“ஐரோப்பாவிலை தனிய இருக்கிறவன்கள் எல்லாம் ஊர் உலகத்துக்க தெரியாமல் வைச்சிருக்கறான்களாம்…. ஒன்றில் வெள்ளைக்காரியை… அல்லது விட்டவன் பெண்டில்மாரை… பேஸ்;புக்குக்குள்ளாலை கணக்க நடக்குதாம்…. அது இது என்று வளர்த்துக் கொண்டே போனார்கள்….”
அங்குதான் தனிய வாழுறவனை தள்ளி வைக்கிறார்கள் என்றால்…. இங்கு வேறு ஒரு சாயம் – வேறு ஒரு நிறத்தில்!!
அவளின் சிறியதாயின் மகள் வேறு தயாராய் இருந்தாள்… ஐந்து வயதுதான் வித்தியாசம் என்றார்கள். தமக்கை தவறினால் தங்கச்சியை கட்டுறது வழமைதான் வக்காளத்து வேறு.
அந்தப் பெண்ணும் வாசல்படியில் நின்றிருந்தாள்.
ஆழமாகவே யோசித்தேன்.
பின்பு “சரி! செய்கிறன்…. “ என்றேன்.
எல்லோரினது முகமும் மலர்ந்தது.
“ஆனால் எதிர்காலத்தில் குழந்தை பிறக்கிற ஆசை இருக்க கூடாது”
இதனை யாருமே எதிர்பார்க்வில்லை
“தம்பி என்ன கதை இது”
”குழந்தை ஒன்று பிறந்தால் செத்தவளை நீங்கள் எல்லாரும் மலடி ஆக்கிப் போடுவியள்…. பிறக்காவிட்டால் நீங்கள் இன்னெருமுறை என்னை மலடன் ஆக்கிப் போடுவியள்”
இரு பகுதியும் மூச்சு விடவில்லை.
நான் சொன்னதுக்கு அவர்களிடம் எந்தவித மறுதலிப்பும் இருக்கவில்லை.
மெதுமெதுவாக எழுந்து தங்கள் தங்கள் வீடுகளுக்குப் போனார்கள்.
வாழ்வில் தற்காலிகமாக தோன்றும் இடர்ப்பாடுகளை தவிர்ப்பதற்காக…. குறுக்கு வழிகளை தேர்வு செய்து… அதில் பயணம் செய்து… தற்காலிகமாக பெறும் வெற்றிகளை வாழ்வின் தர்மமாக ஏற்றுக் கொள்ளப்படும் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதனை நான் நன்கு அறிந்திருந்தேன்.
நான் கிணற்றுக் கட்டில் போய் அமந்திருந்தேன்.
நிலவு நன்றாக காய்ந்து கொண்டிருந்தது.
திருமணமான புதிதில் நிலவு வெளிச்சத்தில் இந்தக் கிணற்றுக் கட்டிலில் அதிக நாட்கள் இருந்திருக்கின்றோம்.
சண்டியனாகவும்… சண்டிக்குதிரையாகவும்….
அவளின் இந்தச் சண்டியனுள் இருக்கிற அந்த மலடன்….அல்லது எனது அந்த சண்டிக்குதிரைக்குள் இருக்கிற மலடி எங்கள் இருவருடன் மட்டுமே இருக்கட்டும் – டென்மார்க் போன பின்பும்!
*
விமானம் பறந்து கொண்டிருந்தது.
” ”நீ கள்ளன்! யாரையும் கூட்டி வந்துவிடுவாய் என்றுதான் நானும் நினைச்சனான்… நீ அநியாத்துக்கும் நல்லவனாய் இருக்கிறாய்”
அவள் என்னைச் சீண்டியபடியே இருந்தாள்.
Skriv et svar