சங்கானைச் சண்டியன்

சங்கானைச் சண்டியன்

(பாகம் 1)

 

கிறிஸ்த்துவிற்கு முன், கிறிஸ்த்துவிற்கு பின் என்பது போல இலங்கையில் ஆயுத போராட்டத்திற்கு முன். . .ஆயத போராட்டத்திற்குப் பின். . .மேலும் ஆயதங்கள்

மௌனமாகி விட்ட காலம் என மூன்று காலகட்டங்களாக பிரித்துக் கொள்ளமுடியும்.

அவ்வகையில் இது ஆயுத போராட்டத்திற்கு முன்னான கதை!

 

அனைத்துத் தொகுதிகளிலும், எங்களையே அனுப்புங்கள். . . உங்களுக்கு தனித்தமிழ்நாட்டைப் பெற்றுத் தருவோம், என தமிழர்கூட்டணியினர் வாக்குறுதியளித்து பாராளுமன்றம் சென்ற கால கட்டத்தில் நடந்ததாக புனையப்பட்ட கதை!!

 

அவளுடைய வீடு ஒழுங்கையின் கடைசியில் இருந்தது.

 

வந்தவன் தகராறு செய்து கொண்டிருப்பது அக்கம் பக்கத்திற்கு கேட்டது.

 

இரவு நேரங்களில் ஒழுங்கைக்குள்; சைக்கிள்கள் வருவதும். . . நாய்கள் குலைப்பதும் . . .பின் அவை அடங்கி விடுவதும். . . பின் வந்த சைக்கிள்கள் திரும்பி போகும் போது நாய்கள் குலைப்பதும். . . இந்த ஒழுங்கையுள் வசிப்பவர்களுக்கு ஒன்றும் புதிதில்லை.

 

ஆனால் இன்று வழமைக்கு மாறாக. . . சத்தங்கள் கேட்டுக் கொண்டு இருந்தது.அவள் ஏசுவதும். . .வந்தவன் அடிப்பதும். . .கொடுத்த காசைக் கேட்டு தகராறு பண்ணுவதும். . .நாய்கள் குலைப்பதும். . .ஊளையிடுவதும். . . அக்கம் பக்கத்தினரால் நிம்மதியாக தூங்கவே முடியவில்லை.

 

சின்னராசாவின் நாலாம் சடங்கிற்கு வந்து தண்ணியும் நன்கு அடித்து. . . அச்சுவேலிக்கு செல்லும் கடைசி பஸ்ஸை விட்டு விட்டு. . .சின்னராசா தனது வீட்டில் படுத்துவிட்டு அடுத்த நாள் போகலாம் எனச் சொல்லக் கேளாமல் அவளைப் பற்றிக் கேள்விப்பட்டு அங்கு அவன் வந்திருந்தான்.

 

மணித்தியாலத்துக்கு இவ்வளவு, ஒரு இரவுக்கு இவ்வளவு என்று பேரம் பேசி சுபுகமாக ஆரம்பித்த உறவு தான். ஆனாலும் அன்று முழக்க அவன் அளவுக்கு மீறிக்குடித்திருந்ததால் அவளால் அவனுக்கு எந்த விதத்திலும் உதவ முடியவில்லை.

 

ஆண்மை என்பதற்கு அவர் அவர்கள் அகராதியில் அர்த்தங்கள் வேறு. அவனைப் பொறுத்த வரை இது அவனது ஆண்மைக்கு வந்த தோல்வியாகவே பட்டது. ஆனால் அவனது அச்சுவேலிச் சண்டித்தனம் தனது தோல்வியைத் தாங்க இடம் கொடுக்கவில்லை.

 

எனவே கொடுத்த பணத்தை கீழே வை என அடம் பிடித்தான்.

 

அவள் மறுத்த பொழுது அவனது கையும் காலும் வாயும் அளவுக்கதிகமாகவே பேசத் தொடங்கியது.

அவளை மட்டுமில்லை சங்கானை இதர பெண்களையும் இழுத்துப் பேசத் தொடங்க அக்கம் பக்கத்தால் பொறுத்துக் கொண்டிருக்கவில்லை.

 

சண்டியனைத் தேடினார்கள்.

 

பொதுவாக கொழும்புக்கு சாமான் லொறிகள் வெளிக்கிடும் வரை அவன் சந்தையடியிலேயே நிற்பான்.

இன்று சனிக்கிழமை.

அடுத்தநாள் பெற்றாவில் சந்தை கூடுவதில்லை ஆதலால் அன்று கொழும்பு லொறிகள் போகவில்லை.

எங்கே போயிருப்பான் எனத் தேடிய பொழுது இரண்டாவது ஆட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று யாரோ ஆருடம் சொன்னார்கள்.

 

சைக்கிள்கள் தியேட்டரை நோக்கி விரைந்தன.

விசயத்தை சொல்லி அவனை தியேட்டருக்கு வெளியே கூட்டி வந்து, வரும் வழியிலேயே தேத்தண்ணிக் கடை செல்லத்துரையண்ணையை தட்டி எழுப்பி அவரின் பின் கட்டிலிருந்த முழச்சாராயப் போத்தலை வேண்டிக் கொடுத்து கூட்டி வந்தார்கள்.

 

ஒழுங்கையில் இறங்கிய போது ஆரவாரம் குறையவில்லை அது இன்னமும் அதிகமாகவும் அதை மீறி அவளின் அழுகையும் பெரிதாக கேட்டது.

சண்டியன் உள்ளே போனதும் ஏன் எது என்று எதுவுமே கேட்கவில்லை.

ஒரே விளாசல் தான்.

அச்சுவேலியான் திகைத்துப் போனான்.

 

திகைப்பிலிருந்து விடுபட முதல் அவனின் சேட்டு சாரம் எல்லாம் கிழிய கிழிய. . .முகம் வீங்கிப் போகும் வரை. . ..

 

அண்ணை விட்டு விடு. செத்துப் போனால் பிரச்சனைஎன்று யாரோ சொல்லியும் கேட்காமல் சண்டியன் அவனை உதைத்துப் போட்டுக் கொண்டு இருந்தான்.

 

கடைசியில் அச்சுவேலியான் பின் வேலியால் ஓடிதப்பிய பொழுது தான் சங்காரம் முடிவுக்கு வந்தது.

 

**

ஊருக்கொரு கோயில். . .ஊருக்கொரு பாடசாலை. . .ஊருக்கொரு விதானை. . .அதேமாதிரி ஊருக்கு ஒரு சண்டியன்!

இந்த சண்டியர்களுக்கு பொதுவாக அவர்கள் ஊர்ப்பெயர்கள், அல்லது ஏதாவது பட்டப்பெயர்கள் அவர்களை மற்ற ஊர்ச் சண்டியர்களிடமும் இருந்து பிரித்தறிய உதவும்!

அவ்வகையில் இவன் சங்கானைச் சண்டியன்.

 

மோகனராசு என அளவெட்டி வினாசித்தம்பி சாத்திரியாரைக் கொண்டு நாள் சட்சத்திரம் எல்லாம் பார்த்து ஒரு பெயர் வைத்தவர்கள் தான் – இது பாடசாலை இடாப்பில் இருந்து தினம் தினம் காலையில் வகுப்பாசிரியர் கூப்பிட்டதுடன் முடிந்து விட்டது.

பின் கூப்பன் புத்தகத்திலும், வாகு;காளர் அட்டையிலும் தான் தன் பெயரை தானே பார்த்ததாக ஞாபகம்.

ஐந்தாம் வகுப்பிலேயே அவன் பள்ளிக்கூட சண்டியன் ஆகி விட்டான்.

பள்ளிக்கூடங்களில் அதிகமாக சண்டைகள் விடுமுறை விடும் நாட்களில் தான் நடக்கும் – காரணம் அடுத்த நாள் வகுப்பாசிரியரிடம் முறையிட்டு முண்டிக்காலில் நிற்கவிட முடியாது என்பதினால்.

கடைசிநாள் பாடசாலை மைதானம் . . . .பாடசாலை ஒழுங்கை எல்லாம் புளுதி பறக்கும். சண்டியன் தனது கணக்கையும், தனது நண்பர்களின் கணக்கையும் சேர்த்து தீர்த்துக் கொண்டு நிற்பான்.

இந்த சண்எத்தனம் எட்டாம் வகுப்பில் தானாகவே பள்ளிக்கூடத்தால் நிற்கும் வரை தொடர்ந்து கொண்டு இருந்தது.

 

இவனைச் சங்கானை மட்டும் அறிந்திருக்கவில்லை. யாழ்குடா நாட்டில் எங்கெங்கு சண்டித்தனத்தால் காரியங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமோ அங்கெல்லாம் இவன் உதவி தேவைப்படும் பொழுது அங்கும் நிற்பான். ஆனால் எவரும் சங்கானையுள் வந்து சண்டித்தனம் விட அவன் அனுமதித்தது இல்லை. அவதனால் சங்கானையும் அவனை அங்கீகரிக்காமல் அங்கீகரித்திருந்தது.

 

முழங்கைக்கு மேல் மடித்து விடப்பட்ட சேட்டு. . . அதே மாதிரி முழங்காலுக்கு மேல் உயர்த்திக் கட்டிய சாரம். . . காலில் பாட்டா சிலிப்பர். . . வாயில் எப்பொழுதும் ஒரு சிகரட்! அதை ஊதி முடியும் தருணத்தில் யாரின் பொக்கற்றுள் சிகரட்டைக் காண்கின்றானோ அது அவன் பொக்கற்றுக்குள் போகும் – யாரும் ஏன் ஏது என கேட்ட முடியாது. . . மறுத்தால் சிகரட் பக்கற்றுடன் சேர்ந்து பொக்கற்றுள் இருக்கும் காசுகளும் போகும். . எனவே ஏன் பிரச்சனை என கொடுத்து விட்டுப் போக வேண்டியது தான். அதையும் மீறி நியாயம், அனியாயம் கேட்க வெளிக்கிட்டால் அங்கே ஒரு களரி தான் – அதன் பருமன் மூளாய் பரியாரின் பத்திலிருந்து யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் சத்திரசிகிச்சை செய்து கிப்ஸ் போடும் அளவுக்கு மாறுபடும். இதனால் தான் அனேகமானோர் அவனில் முட்டுப்படாமல் விலத்தியே போய்க் கொண்டு இருந்தார்கள்.

 

இதனையும் மீறி சட்டத்திடம் போகலாம் – சங்கானையில் பொலிஸ் ஸ்டேசனும் இருந்தது நீதிமன்றமும் இருந்தது தான்!

 

பொலிஸில் யாரும் முறையிட்டால் தானே அவன் மீது நடவடிக்கை எடுக்க முடியும்!!

 

பொலிசும் தன்பாட்டில் காணிவழக்கு, சின்ன சின்ன திருட்டுகள், தவறணைக்கும் கள்ளு கொடுக்காமல் தமக்கும் தராது வீட்டில் வைத்து விற்ற வழக்குகள், சைக்கிளில் இரவில் லைற் இல்லாமல் போனாலோ அல்லது டபிள் போனால் இரண்டு சில்லுகளிலும் காற்றைப் பிடுங்கி விடுதல், சாந்தி தியேட்டரில் இரண்டாவது ஆட்டம் சினிமாவை இலவசமாகப் பார்த்தல் என கஞ்சி போட்டு தோய்த்து அயன் பண்ணிய காக்கி உடுப்புடன் தங்கள் கடமையை கண்ணும் கருத்துமாக நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.

 

காலையில் ஐந்து மணிக்கு சந்தை கூடும் பொழுது அவனும் வந்து விடுவான்.

ஒன்பது பத்து மணிக்கு சந்தை கலையும் வரை சந்தையடியிலும், பின் பஸ் ஸ்டாண்டின் மறுபுறம் இருந்த மீன் சந்தையடியிலும் நடமாடிக் கொண்டு இருப்பான்.

 

தரகு செய்தால் தான் தரகர்மாருக்கு தரகுகூலி.

 

இவனுக்கு அப்படி அல்ல.

 

அன்று என்ன சமையல் தன் வீட்டில் நடக்க வேண்டும் என்று நினைக்கின்றானோ அந்த அந்தப் பொருட்களை வியாபாரிமாரிடம் எடுத்துக் கொண்டு போய்க்கொண்டிருப்பான்.

 

வியாபாரிகளும் மனத்தில் திட்டியபடியும் எடுங்கோ தம்பி என்ற வலிந்திழுத்த புன்னகையுடனும் பேசாமல் இருப்பார்கள். அல்லது அவர்கள் கோபத்தை பக்கத்தில் நிற்கும் தங்கள் மனைவிமாரிடம், அல்லது பிள்ளைகளிடம், அதுவுமில்லாவிட்டால் சந்தைக்குள் ஓடித்திரிந்து கொண்டிருக்கும் கட்டாக்காலி மாடு, நாய்களிடம் காட்டுவார்கள்.

 

இதை கப்பம் என்றாலும் சரி. . .மற்ற ஊராக்கள் சங்கானையாரிலை கை வைக்காமல் இருப்பதற்கு ஊரே செலுத்தும் காணிக்கை என்றாலும் சரி. . .எது எப்படியோ அது அங்கு எழுதப்படாத சட்டம். அதில் ஏற்படும் நட்டங்களை வியாபாரிமார்கள் சங்கானைச் சனங்களின் தலையிலேயே கட்டி விடுவார்கள்.

 

வசூலித்த எல்லாப் பொருட்களையும் சங்கானையில் இருந்து தொட்டிலடி, மாசியப்பிட்டி, சுன்னாகம் ஊடாக அச்சுவேலிக்கு போகும் பஸ்ஸில் றைவரின் சீற்றுக்கு பக்கத்தில் வைத்து விடுவான். றைவர்மாரும்; சங்கானையின் எல்லையில் இருந்த அவன் வீட்டுக்கு முன்னால் பஸ்சை நிறுத்தி அவனது பையை வைத்து விட்டுப் போவார்கள். இறங்க வேண்டிய பஸ் தரிப்பிற்கு கிட்டாவாக வந்து பெல்லை அழுத்தினால் அடுத்த பஸ்ஸ்ரொப்பில் பஸ்சை நிறுத்தும் இ.போ.ச. ஊழியர்கள் இந்த சண்டியனுக்கு மட்டும் அவ்வளவு அடக்கம்.

 

அவனின் வீடு என்பது பெரிய மாடமாளிகை இல்லை. பழைய ஒரு சிங்கப்பூர் பென்சனியர் 1920ல் கட்டியவீடு. 58 கலவரத்திற்குப் பின் அவர் மலேசியாவில் குடியேறப் போன பொழுது சண்டியனின் தகப்பனை காவலுக்கு வைத்து விட்டுப் போன வீடு. சண்டியனின் தாய் தான் பென்சனியரின் மனைவிக்கு எல்லாமே அவர்களின் குடிமனை ஆட்கள் போல. பென்சனியரின் மனைவிக்கு பாரிசவாதம் வந்து கடைசியாக படுக்கையில் விழுந்த பொழுது பென்சனியருக்கும் அவனின் தாயே எல்லாமே என்று சில உபகதைகள் இப்பொழுதும் ஊரில் உலாவுகிறது.

 

மலேசியாவிற்கு போன பென்சனியரும் திரும்பி வரவில்லை. இவனும் வீட்டை அவரின் உறவினரிடம் கொடுக்கவில்லை. அவர் மலேசியாவிற்கு போவதற்கு முதல் கடைசியாக அடித்த பெயின்றுக்கு பிறகு அந்த வீட்டின் சுவர்களுக்கு சுண்ணாம்பு வாசம் படவேயில்லை. படிப்படியாக கறை பெயர்ததும். . . .கறையான்களினால் வேலிகள் பாறிப்போக பென்சனியர் நட்டு வைத்த கொங்கீற்றுத் தூண்கள் மட்டும் வளவின் நான்கு மூலையிலும . . .ஒரு மூலையின் பழையகால கதவு வீழ்ந்து விட்டதால் சாக்குத் துணியால் மறைக்கப்பட்ட சீமெந்துக் கக்கூசு.

 

சண்டியனின் மனைவி தவத்துக்கும் இத்தனை மணி பஸ்ஸில் மத்தியானச் சமையலுக்கு சாமான்கள் வரும் என துல்லியமாகத் தெரிந்திருக்கும். கண நாட்களாக பற்றி போடாததால் மணிக்கூட்டு பழுதாகிப் போய்விட்டதால்; தன் நிழலை தன் காலால் அளந்து மணியை முன் பின்னாக கணக்கிட்டு வைத்திருப்பாள். ஒரு பத்து நிமிடம் கூடலாம். . .அல்லது குறையலாம். . . அவ்வளவு தான்.

 

தவம் வீட்டு வாசலில் இல்லாவிட்டாலும் அவன் கொடுத்து விட்டிருக்கும் பையினுள் உள்ள மீனை அல்லது இறைச்சியை நாய்கள் இழுத்துக் கொண்டு போய் விடாமல் இருப்பதற்காக வேலியில் கொழுவி விட்டுப் போவார்கள். அவளும் ஒற்றைக் கையுடன் கஷ்டப்பட்டு எடுத்துக் கொண்டு போவாள்.

 

பருவத்தில் தோன்றும் உணர்ச்சியை காமம் என்று குறைத்து மதிப்பீட்டாலும், காதல் என்ற புனிதமான உறவு என பூஜித்தாலும் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையேயான இனக்கவர்ச்சி சண்டியனையும் விட்டு வைக்கவில்லை. அதிலும் வட்டுக் கோட்டைத் தொகுதியிலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் எப்பவுமே பெண்களுக்காக சைக்கிள் ஓட்டப் போட்டியில் முதலாவக வரும் தவத்தின் அழகும் உடல் வாலிப்பும் சங்கானையில் அதிகம் பேரைக்கிறங்கடித்திருந்தது.

ஆனாலும் காதலை வெளிப்படுத்த அவனுக்கு தெரிந்த ஒரு பாஷை – ஆளைத் தூக்குவம் என்பது தான். தூக்குவோம் என்பதற்கு பிற்காலத்தில் இன்னும் பல அர்த்தங்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவியிருந்தாலும்

சண்டியன் காலத்தில் வலுக்கட்டாயமாக ஒருவரைக் கடத்திச் சென்று காரியமாக்க முயல்வது தான் அதன் அர்த்தமாய் இருந்தது.

அதற்கான நாளையும் தவம் பள்ளிக்கூடத்தால் வரும் நேரத்தையும் கணக்குப் பார்த்துக் கொண்டு ஆலடிச்சந்தியில் வெங்காயம் கட்டும் வானையும் வைத்துக் கொண்டு நின்ற பொழுது தவம் தனது ஒன்று விட்ட தமையனுடன் வந்து கொண்டிருந்தாள்.

இதை சண்டியன் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஆனாலும் சண்டியனுக்கு பொறுமை இல்லை.

கிட்ட வந்ததும் தூக்குவம் என முயன்ற பொழுது தடுத்த தமையன்காரனுக்கு ஓங்கிய வெட்டருவாள் எதிர்பார்க்காமல் தவத்தின் கையில் விழுந்தது. கையும் விழுந்தது. வானும் தவத்தடன் மறைந்தது.

சங்கானையே அன்று ஸ்தம்பிப்போயிருந்தது.

சந்தையடி. . .கோயிலடி. . . சாந்தி தியேட்டரடி. . .சந்தியடி தேத்தண்ணிக்கடை. . .அரசடிப் பள்ளிக்கூடம் எல்லாம் இதே கதைதான் – ஆனால் குரல்கள் பெரிதளவில் வெளியே வராமல்.

தவத்தின் குடும்பத்தினர் மட்டும் பெரிதாக குத்தி முறிந்தார்கள் – ஆனால் என்ன செய்து விட முடியும். இயலாமை!

பொலிசுக்கு போனார்கள் – உன்ரை பெட்டையும் விருப்பப்பட்டுத் தானாம் போனது. வந்ததும் விசாரிக்கிறம் என்று பதில் வந்தது. மீண்டும் இயலாமை!!

இந்த இயலாமையும் அடக்கு முறைகளும் அளவுக்கதிகமாக ஜனநாயகக்குடியியல் உரிமை பேசுகின்ற தென்கிழக்காசிய நாடுகளில் தொடங்கி உலக ஜனநாயகத்திற்கு ஏகாதிபத்தியாக விளங்கும் அமெரிக்கா வரை பொருந்தும். அப்படி இருக்கும் பொழுது சங்கானைப் பொலிஸ் ஸ்டேசன் மட்டும் என்ன? வெறும் தூசு.

ஒன்று. . . இரண்டு . . மூன்று. . .கிழமையாயிற்று.

தவத்தைப் பற்றியோ அன்றில் சண்டியனைப் பற்றியோ எந்த தகவல்களும் வரவில்லை.

நாலாவது கிழமையின் நடுப்பகுதியில் தின்னவேலி தனியார் ஆஸ்பத்திரியில் தவம் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள் என்ற செய்தி வர தவத்தின் பெற்றரும் அக்கம் பக்கத்தாரும் சேர்ந்து சந்தையடி சிவத்தின் மினிவானைப் பிடித்துக் கொண்டு ஓடினார்கள்.

இவர்களை தூரத்தில் கண்டதும் சண்டியன் ஆஸ்பத்திரியின் பின்பக்கத்தில் உள்ள வாழைத்தோட்டத்தின் ஊடாக பின் ஒழுங்கையில் உள்ள கள்ளுத் தவறணைக்குப் போய்விட்டான்.

வாட்டுக்குள் போன தவத்தின் குடும்பம் முழுக்க நிலை குலைந்தது போல நின்றார்கள்.

கழுத்திலை தாலியும் கைகளில் கட்டும் போடப்பட்டிருந்தது – இடது முழங்கைக்கு கீழ் எதுவும் இல்லை. தவம் அவர்களைக் கண்டதும் பெரிதாகக் கத்தத் தொடங்கினாள். பெண்டுகளும் தங்கள் தங்கள் பங்கிற்கு தவத்துடன் சேர்ந்து கொண்டார்கள். ஆண்கள் அவனை எப்படியும் உள்ளே தள்ளி எட்டு வருஷமாவது வேண்டிக் கொடுக்க வேண்டும் ஆவேசப்பட்டுக் கொண்டார்கள்.

வாட் நேர்ஸ் வந்து கொஞ்சம் சமாதானப்படுத்திய பின்புதான் அவர்கள் அமைதியானார்கள். நேர்ஸ் கட்டைப் பிரித்து தையல் காய்ந்து இருக்கின்றதா என பார்த்தாள் – மற்றவர்களும் நேர்ஸை இடித்துத் தள்ளுமாப் போல் பார்த்தார்கள். தையல் நன்கு காய்ந்திருந்தது.

அடுத்தநாள் இழையை வெட்டலாம் என்றும் அதற்கு அடுத்தநாள் வீட்டைக் கூட்டிக் கொண்டு போகலாம் எனச் சொல்லி விட்டு வெளியேறினாள்.

துண்டு வெட்டிய பின் தாங்களே வந்து கூட்டிச் செல்லுகின்றோம் என்ற பொழுது முதன் முதலாய் தவம் மாட்டேன் எனத் தலையாட்டினாள்.

எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

ஐயோ என்ரை பிள்ளைக்கு ஏதோ குடுத்துப் புத்தியை மாத்திப் போட்டான் என தவத்தின் தாய் தலைதலையாய் அடிக்கத் தொடங்கினாள்.

தவம் எதுவுமே பேசவில்லை.

கையை வெட்டியதும், வெங்காய வானின் தூக்கிச் சென்றதும் அவனை ஒரு முழுமுழு அயோக்கியனாக காட்டியிருந்தாலும், இந்த இருபத்தைந்து நாளும் தவத்துக்கு ஒரு தகப்;பனாய், தாயாய் இருந்து கவனித்த கவனிப்பில் தவத்திற்குள்ளே இருந்த பாறாங்கல்லு மெல்ல மெல்ல கரைய முதன்நாள் இரவுதான் அவனை அவள் கணவனாய் ஏற்றிருந்தாள். அல்லது தன்னை அவனிடம் அர்ப்பணிந்திருந்தாள்.

முடிவாய் என்ன சொல்லுறாய் என எல்லோரும் கேட்டுப் பார்த்தார்கள்.

தவத்தின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

மனித மனங்களில் ஏற்படும் மாற்றங்களை எப்பொழுதும் எல்லோராலும் புரிந்து கொள் முடிவதில்லை அவர் அவர்கள் தங்கள் தங்கள் கண்ணாடிகளினூடு பிரச்சனைகளை பார்ப்பதாலோ என்னவோ!

அத்துடன் அவளைத் தலை முழுகு என்றவாறு தாயை இழுத்துக் கொண்டு சுற்றம் முற்றம் போய்விட்டது.

அதன் பின் தவம் சண்டியனுடனேயே போய்விட்டாள்.

மழைவிட்டாலும் விடாத தூவானம் போல,; சங்கானையில் சாதிக்கலவரம் ஏற்பட்ட பொழுது தமக்கு சண்டியனால் ஏற்பட்ட காயங்களுக்கு இந்த சந்தர்ப்பத்தை வைத்து அவனை கோட்டுக்கு இழுக்கலாம் என தவத்தின் தகப்பனுக்கு பலர் தூபம் போட தொடங்கினார்கள்.

சண்டியன் தான் மகளின் கையை வெட்டியது என வழக்குப் பதிவானது.

கோடு கச்சேரி என்பது பணம் சம்மந்தப்பட்ட விடயம். வென்றவனை தோற்றவன் போலவும், தோற்றவனை செத்தவன் போலவும் ஆக்கி விடும் அந்த கண்கட்டித் தராசு.

 

தவத்தின் தகப்பன் பகுதிக்கு இரண்டு வட்டாரங்கள் பின்னால் நின்றது. சங்கானையில் சாதிப்பிரிவினால் தான் வட்டாரங்கள் வரையறுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. நீங்கள் எந்த சாதி என்று அநாகரீகமாக கேட்கத் தேவையில்லை – பதிலாக நீங்கள் எந்த வட்டாரம் என நாகரீகமா கேட்டால் போதும். அந்த வகையில் மூன்றாம் வட்டாரமும் ஐந்தாம் வட்டாரமும் கச்சேரிச் செலவுக்கு கை கொடுத்தது.

சண்டியனுக்கு யாருமே கை கொடுக்க தயாராயில்லை சாதிக்கலவரம் நடந்த பொழுது தேவைக்கு அவனைப் பாவித்தது உண்மை தான் என்றாலும், தேவை முடிந்த பொழுது சம்மந்தப்பட்ட இரு பகுதியும் அரசியலில் நல்ல நண்பனும் இ;ல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்ற சந்தர்ப்பவாத கோட்பாடுகளை தாங்கித் திரிவது போல இன்று இரு பகுதியும் சந்தையடியில் நின்று கூடிக்கும்மாளம் அடிக்கும் பொழுது சண்டியனுக்காக யாரும் காசு செலவு செய்ய தயாராக இருக்கவில்லை.

அண்டாவில் போட்ட கறி வேப்பிலையாக தூக்கி எறிந்தாகி விட்டது.

பொலிஸ் பாதுகாப்புடன் போன பிரேத ஊர்வலத்தை குலைக்க பனைவெளிகளுக்குள் நின்று கல்லால் எறிந்தவர்களுக்கு, பாடையை இறக்கி வைக்காமலேயே சவப்பெட்டியினுள் ஒளித்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டு விரட்டி பிரேதத்தை ஒழுங்காக சுடலை வரை கொண்டு போக காசு கொடுத்த எல்லோரும்;, நாங்களோ பொம்பிளை தூக்கச் சொன்னனாங்கள் என இப்பொழுது விலகிக் கொண்டார்கள்.

சண்டியன் மனத்துக்குள் கறுவிக் கொண்டே இருந்தான்.

வழக்கில் இருந்து முதலில் தப்புவோம். . .இது தான் அவன் எண்ணமாய் இருந்தது.

அவனின் நல்ல காலமோ. . .அன்றில் சங்கானையின் கெட்ட காலமோ. . . சங்கானைக்கு பட்டினசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

தேர்தலுக்கு சண்டியன் தேவைப்பட்டான் – சண்டியனுக்கு தேர்தலில் சேர்மன் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் வக்கீல்; தேவைப்பட்டார்.

 

தான் நேரடியாக சண்டியனுக்காக வாதிட்டால் பல தொகுதிகளில் அவரின் ஆதரவாளர்கள் தங்கள் வாக்குகளை இழக்க வேண்டி வரும் என்பதால் சாவகச்சேரியில் வசித்த தன் சக தோழன் ஒருவன் சண்டியனுக்கு உதவுவதாக இரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டது.

பின்பென்ன? ஆளுக்கால் கை குலுக்கி கொண்டார்கள

ஏன்தான் இலங்கையில் தழிழ் அரசியல்வாதிகள் பலர் வக்கீல்களாய் இருந்தார்களோ தெரியவில்லை. வக்கீல்கள் தான் தேர்தலில் நிற்க முடியும் என எந்த யாப்பிலும் இருந்ததாக தகவல்கள் இல்லை. ஆனாலும் நிஜம் அது தான்.

வழக்கு யாழ். நீதிமன்றத்திற்கு வந்தது.

கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு கம்பீரமாக நின்ற வக்கீல்கள் பாதி ஆங்கிலத்திலும் பாதி அதிசுத்த தமிழிலும் கேட்ட கேள்விகளில் சங்குமார்க் சாரங்களுடனும் பாட்டா செருப்புகளுடனும் கூனிக்குறுகி நின்ற அனைத்து சாட்சிகளும் ஒவ்வொன்றாக கூட்டிலிருந்து இறக்கப்பட்டு, கடைசியாக தவத்தின் ஒன்றுவிட்ட அண்ணன் சண்டியனை நோக்கி வீசிய கத்தியே தவறுதலாக தவத்தின் கையில் விழுந்தது என கணம் தங்கிய நீதிபதி அவர்கள் தனது தீர்ப்பை வழங்கினார்.

தீர்ப்பை வழங்குவதற்கு முதல் தவத்தை நேரடியாக விசாரிக்க வேண்டும் என்று எதிர்தரப்பு வக்கீல் கேளாமல் இருக்கவில்லை. அந்த கேள்வியை எதிர்பார்த்திருந்த சண்டியனின் வக்கீல் தவம் சித்த சுவாதீனம் காரணமாக மந்தியை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்ட்டு வைத்தியம் செய்யப்பட்டுக் கொண்டிருப்பதற்கான கடிதத்தை நீதியிடம் கையளித்தார்.

அதிகமான உரையாடல்கள் ஆங்கிலத்தில் நடந்ததால் தவத்தின் பகுதி ஆட்களுக்கு அங்கு என்ன நடந்தது என்று கூடத் தெரியவில்லை.

தீயதைப் பேசாதே! தீயதைப் பார்க்hதே!! தீயதைக் கேட்காதே!!!

சிரிப்புடன் கூடிய பொக்கைவாய் காந்தியின் படம் கோட்டுகளுக்குள் இல்லாவிட்டாலும், கோட்டுக்கு வெளியே குனிந்த தலையுடன் கம்பை ஊன்றிக் கொண்டு செல்லும் சிலை நன்கு பொருத்தமானதாகவே இருந்தது.

சண்டியனின் ஆட்கள் நீதிமன்றத்துக்கு முன் பட்டாசு வெடித்து ஆரவாரித்தார்கள்.

வெற்றிப் பெருமிதத்துடன் சண்டியன் வீட்டைவர தவம் சத்தி எடுத்தக் கொண்டிருந்தாள்.

இந்த மாதம் தள்ளிப்போயிருந்தது.

சண்டியன் இரட்டைச் சந்தோஷத்தில் மிதந்தான்.

*

பட்டினசபைத் தேர்தல் நன்கு சூடுபிடிக்கத் தொடங்கியது.

வழமைபோல பழைய சேர்மன் முதலாம் வட்டாரத்தில் போட்டியிட்டார்.

 

ஏழாம் வட்டாரத்திற்கு சங்கானையின்; பழைய சாராய வியாபாரியின் மகனும், இந்த நாளில் கொழும்பில் பிரபலமாய் இருந்த ஒரு வக்கீல் சங்கானைப் பகுதிக்கு வேட்பாளாராக நிறுத்தப்பட்டிருந்தார். மனைவி ஆட்கள் கொழும்பில் பிரபலமான துணிக்கடைக்காரர்.

 

பின்பென்ன சாராயாமும், சேலையும்; வாக்குகளை வேண்டப் பயன்படுத்தப்பட்டது. இதன் மொத்த விநியோகமும் சண்டியனின் மேற்பார்வையிலேயே நடந்தது.

 

எல்லா வட்டாரங்களிலும் தாங்களே வெல்ல வேண்டும் என்பதற்காக தமிழ், தனித்தமிழ், தனித்தமிழ்நாடு என்ற மூலமந்திரங்கள் இளைஞர்காதுகளில் ஓதப்பட்டது.

எங்கும் பச்சை, சிவப்பு, மஞ்சள்; கொடிகள் தான். எங்கும் கூட்டங்கள் தான்.

ஆங்காங்கே சில சுயேட்சை வேட்பாளாரும், கொழும்பில் ஐக்கிய தேசிக்கட்சி அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சிகளுடன் தொடர்புடைய ஆதரவாளர்களும் தேர்தலுக்கு விண்ணப்பித்து இருந்தார்கள்.

அவர்களின் கூட்டங்கள் நடைபெறும் பொழுது இருட்டில் பனைகளுக்குப் பின்னால் இருந்து கற்களை எறிந்து இந்தக் கூட்டங்களை குழப்பும் பணிக்கும் சண்டியனே நியமிக்கப்பட்டிருந்தான்.

முதல் இருண்டு கூட்டங்களில் கல் விழுந்தவுடன், பின்பு நடந்த கூட்டங்களுக்கு யாருமே போகவில்லை.

லவுட்ஸ் ஸ்பீக்கர்காரனுக்கும் லைற்மிசின்காரனுக்கும் காசை அழுதது தான் மிச்சம்.

தவிரவும் இந்த ஏழு வட்டாரத்திற்குமுரிய கூட்டணிக்கு ஆதரவு இல்லாத அனைவர்க்கும் தழிழ்த் துரோகிகள் என்ற ஒரு முத்திரை குத்தப்பட்டது. இந்த குத்து தங்களில் விழுந்து விடாமல் வேண்டும் என்பதற்காகவே இக்கூட்டணிக்குப் பலர் தம் வாக்குகளை அளிக்கத் தயாராய் இருந்தார்கள்.

 

எங்கே சாதிமாறிக் கல்யாணம் செய்தால் சாதிப்பிரதிஷ்ட்டை செய்து சமூகம் தங்களை தள்ளி வைத்து விடுமோ எனப் பயந்ததோ அவ்வாறே சேர்மன் பகுதிக்கு வாக்களிக்காவிட்டால் தம்மை தள்ளி வித்துவிடுவார்கள் என்ற ஒரு பயம் இருக்கத்தான் செய்;தது. . . அல்லது உருவாக்கப்பட்டிருந்தது.

இக்கூட்டங்களுக்கு ஆதரவாக பல முன்னாள், இந்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் வந்து பிரச்சாரம் செய்து விட்டுப் போனார்கள்.

அவ்வேளையில் தான் தமிழர் கூட்டணி என்பது உருவாகி இருந்தது. அது இலங்கையின் மூத்தகட்சி அல்ல. பல மூத்த கட்சிகளின் கூட்டு. அந்தக் கட்சி இந்த சின்ன பட்டினசபைத் தேர்தலில் களம் இறங்காவிட்டாலும், இறங்கிய வேட்பாளருக்கு பின்பக்குப் பலமாய் நின்றார்கள் – அந்த அந்த பழைய கட்சினருக்கு உரிய சுயத்தை இலக்காமல்.

இம்முறையும் தேர்தலில் நிற்கும் முன்னாள் தமிழ்க் காங்கிரஸ்கட்சியின் மூத்த வேட்பாளரின் உறவினரின் கூட்டத்தில் யாராவது கேள்வி கேட்டால் அவர்களுக்கு சொல்லப்படும் ஒரே பதில் – கேள்வி பதிலுக்கு என்று மட்டும் வைரவ கோயிலடியில்; ஒரு கூட்டம் வைத்திருக்கின்றோம் – அங்கே வந்தால் உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும், என்பது தான். அங்கே போனவர்களுத்தான் தெரியும் வைரவ கோயிலுக்குப் பக்கத்தில் சங்கானை ஆஸ்பத்திரி இருப்பதால் தான் அக்;கூட்டத்தை அங்கே ஒழுங்கு செய்திருக்கிறார்கள் என்று.

இவ்வாறு தம்தம் சுயத்தையும் இழக்காமல், கட்சியின் வெற்றியை மட்டும் தூரப்பார்வையில் கவனத்தில் கொண்டு வெள்ளைவேட்டிகளின் வீரப்படப்படப்பிலும், இளைஞர்களின் வீர ஆவேசப் பேச்சுகளிலும், பெண்பிள்ளைகளிக் தமிழ்க் கவிதைகளிலும், இன்னமும் தமிழ் உணர்ச்சி கூடியவர்கள் பிளேட்டால் கையைக்கீறி வேட்பாளருக்கு இடும் இரத்தத் திலகங்களினாலும் சங்கானை முழுக்க பட்டொளி வீறியது.

தவிரவும் எல்லாச் சந்தியிலும் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என உரக்கமாக சீர்காழி கோவிந்தராஜன் பாடிக்கொண்டிருந்தார்.

எங்கள் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயோஎனவும் வெள்ளையனே வெளியேறுஎன வெள்ளையர்களை நோக்கி வீர பாண்டிய கட்டப் பொம்மன் முழக்கமிட்டுக்; கொண்டு நின்றான்.

பக்கத்தில் உள்ள பள்ளிகளிலும் ரியூட்டரிகளிலும் பாடங்கள் நடாத்தவே ஆசிரியர்கள் கஷ்ட்டப்பட்டார்கள்.

வகுப்பாசிரியர்கள் தலைமை ஆசிரியரிடம் சொல்லிப் பார்த்தார்கள்.

சண்டியனுக்கும், தனது இடமாற்றலுக்கும் பயந்து அவரும் மௌனமாகி விட்டார்.

ஆகவே அனேகமான பாட நேரங்கள் மாணவர்களுக்கு விளையாட்டு மைதானத்திலேயே கழிந்தது.

இத்தனை எதிர்பார்ப்பும் அடங்கிய தேர்தலுக்கு வாக்களிக்க இன்னம் மூன்;று நாட்களே இருந்தது.

முதன்நாளுடன் தேர்தல் பிரச்சாரம் முடிந்திருந்தது.

அடுத்தநாளில் இருந்து சண்டியன் முற்று முழுதாக சாராயப் போத்தல்களுடனும் சீலை வேட்டி சாரங்களுடன் ஒழுங்கை ஒழுங்கையாக இறங்கினான். கடந்த ஒரு மாதமாக ஏற்றப்பட்ட சலைன்களின் வேகத்தை விட கடைசி நேரத்தில் ஏற்றுப்படும் இந்த டோஸ் நன்கு வேலை செய்யும் என்பது 1948ல் இருந்து பெற்று வந்த அனுபவக் கணிப்பு.

உண்மையில் பெரியளவில் எதிர்கட்சிப் பலம் இல்லாத இந்த தேர்தலுக்கு இந்த திரைமறைவு கொடுக்கல் வாங்கல்கள் தேவையில்லைத்தான். ஆனால் விகிதாசாரப்படி எந்த வேட்பாளர் அதிக வாக்குகள் பெறுகிறாரோ அவருக்கே அடுத்த தேர்தலில் சேர்மன் பதவிகாத்திருந்தபடியால் அவரவர்கள் தங்கள் செல்வாக்குக் தகுந்த மாதிரி சாராயப் பந்தல் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

சண்டியன் இந்த இரண்டு மாதமும் வீட்டுக்கே ஒழுங்காகப் போகவில்லை. சில வேளைகளில் தேர்தல் வேலைகள் முடிய, கொஞ்சம் தண்ணியும் அதிகம் ஏறினால், இரண்டாவது ஆட்டச் சினிமா முடிந்து ஊர் அமைதியாக பஸ் ஸ்டான்ட் வாங்கிலேயே படுத்துவிடுவான். அதே மாதிரி அதிகாலையில் முதல் பஸ்சும் வர பஸ் ஸடான்ட் அருகே உள்ள தேத்தண்ணிக் கடையும் திறந்து கொள்ள இவனும் முழித்துக் கொள்வான்.

தேத்தண்ணிக்கடை செல்லத்துரையண்ணையின் முட்டைக் கோப்பியில் தான் எப்போதும் இவன் வாய் கொப்பிளிப்பது. இப்போ அவனுக்கு ஏற்பட்டு இருக்கிற அரசியல் தொடர்பு காரணமாக செல்லத்துரை அண்னை அவனிடம் காசு வேண்டுவதே இல்லை எப்பவாவது அவன் உதவி தேவைப்படும் என்று.

மேலாக ஏழு வட்டார உறுப்பினர்களையும் ஐயா, ஐயா என அவன் கூப்பிட்டாலும் அவர்கள் தோள் மீது கை போடாத குறையாக நடந்து செல்வதை ஊர்; நன்கு அவதானித்துக் கொண்டிருந்தது.

அதேவேளை அவனின் செல்வாக்கு வளர்வதை காண மூன்றாம் வட்டார ஆட்களுக்கும் ஐந்தாம் வட்டார ஆட்களுக்கும் கொஞ்சம் வயிற்றைக் கலக்கத்தான் செய்தது.

தவத்தின் வீட்டாருக்கு தாங்கள் பக்க பலமாக இருந்து, அவனை கோடு கச்சேரிவரை கொண்டு இழுத்தததை மனதில் வைத்து தேர்தலுக்குப் பின்பு ஏதாவது செய்து போடுவானே என்பது தான் அந்தப் பயம். அதனால் தான் அவர்கள் கூட அவனுக்கு சார்பான வேட்பாளருக்கு வோட்டு போட்டு மறைமுக சமாதான ஒப்பந்தந்திற்கு ஆயத்தமாய் இருந்தார்கள்.

தேர்தல் நாளும் வந்தது.

சங்கானையில் இருந்த அனைத்துப் பாடசாலைகளும் வாக்குப்பதிவு செய்யும் நிலையமாக மாறியிருந்தது.

வயோதிப ஆட்களை ஏற்றி இறக்குவதற்காக அன்று வாடகைக்கு ஓடும் கார்களும் மிளகாய், வெங்காயம் கட்டும் தட்டி வான்களும் அன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

தவிரவும் ஊரை விட்டு, உலகை விட்டு போனவர்கள் அனைவரின் வாக்குகளைப் போடுவதற்காக மற்ற மற்ற கிராமங்களில் இருந்து ஆட்களை ஏற்றி இறக்கும் பணியில் சண்டியன் மிக மும்மரமாக இருந்தான்.

பகல் பன்னிரண்டு மணியிருக்கும். . .

தவமும் வந்து தனது வோட்டைப் போட்டு சண்டியனுக்கும் அவனது சக கூட்டாளி நாலைந்து பேருக்கும் தான் எடுத்து வந்த சாப்பாட்டு பாசலை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அவர்களும் தட்டிவானின் பின்னால் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இப்பொழுது தவத்தின் வயிறு நன்கு வெளித்தள்ளியிருந்தது – இன்னம் நான்கு மாதங்கள்தான் இருந்தது.

அண்ணைக்கு ஆம்பிளை பிள்ளைத் தான் – ஆட்டுக்காலை நன்கு உறிஞ்சியபடி ஒருத்தன் குறி சொன்னன்.

சண்டியன் புன்னகைத்தான்.

மெல்லிய புன்னகை அல்லது கடும் கோபம்! இது தான் சண்டியனின் இரு வேறுபட்ட துருவநிலைகள்.

அப்பொழுது தான் அந்த துன்பகரமான சம்பவம் நடந்தது.

யாரோ கள்ளவோட்டுப் போட போக. . . வாக்குபோடும் நிறையத்தில் உள்ள ஒரு பழைய தலைமை வாத்தியார் அவனை பிடித்து பொலிசில் கொடுக்க போக. . . அவன் திமிறிவிட்டு ஒடி வந்து சண்டியனிடம் முறையிட்டான்.

சாப்பாட்டை இப்படிNயு அரைவாசியில் விட்டு விட்டு சண்டியனும் இன்னும் நாலைந்து பேரும் உள்ளே போக இதைப்பார்த்துக் கொண்டிருந்த, தலைமை ஆசிரியரிடம் கற்ற பழைய மாணவர்கள் ஆசிரியரைக் காப்பாற்றுவதற்காக உள்ளே போக வாக்குவாதம் தொடங்கி கைகலப்பாக மாறத்தொடங்கியது.

இதைப்பார்த்ததும் வாக்களித்துவிட்டு வெளியில் நின்றவர்களும் உள்ளே ஓட ஒரே சனக்கும்பலாகியது தலைகள் மட்டும் தான் தெரிந்தது. நடுவே சண்டியனின் அதிகாரக் குரலும் தூஷணத்தால் மற்றவர்களை திட்டுவதும் துல்லியமாக கேட்டது.

அங்கு நின்றது இரண்டு பொலிஸ்காரர் மட்டுமே. அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை.

கூட்டத்தினுள் இருந்து உவன் என்ன சண்டியனோ. . .ஊர்ச் சேர்மனோஎன்று சங்கானைக்கு அந்நியப்பட்ட ஒரு குரல் கேட்டு அடுத்த கணம் அம்மா என்றவாறு சண்டியன் நிலத்தில் விழுந்தான்.

சண்டியனைக் குத்திப் போட்டாங்கள்ஊர் ஒரு கணம் அதிர்ச்சியாலோ அன்றில் பயத்தால் அதிர்ந்தது.

சண்டியனின் சாப்பிட்டு முடிக்காத அரைவாசிச் சாப்பாட்டை கையில் வைத்திருந்த தவம் பதறிக் கொண்டு பள்ளிக்கூடத்தினுள் ஓடினாள்.

காற்றுப்படுவதற்காக அவனை பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியேயுள்ள ஆலமரத்தடிக்கு தூக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள்.

அவன் அங்கே மயங்கிக் கொண்டிருந்தான்.

கண்கள் மேலே செருகிக் கொண்டிருந்தது.

ஒரு கணம் தவம் உறைந்து போனாலும், அடுத்த கணம் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு வானைக் கொண்டு வாங்கோ என பலத்துச் சொன்னாள்.

தவத்தின் மடியில் சண்டியனின் தலை சாய்த்துப்பட்டிருக்க வான் வீதி விதிமுறைகளை எல்லாம் தாண்டி யாழ்ப்பாண பெரியாஸ்பத்திரியை நோக்கிப் பறந்தது.

 

ஒரு அரை நேர இடைவெளியினுள் சந்தையுள் வியாபாராம் செய்து கொண்டிருந்த இரண்டு முஸ்லீம் பாய் வியாபாரிகளுக்கு, சண்டியனுக்கு போல் விசம் தோய்த்த கத்தியால் குத்து விழுந்து. . .ஸ்தலத்திலேயே மரணித்த அவர்களின் உடல்களைக் கொண்டு இன்னோர் வாகனமும் யாம்ப்பாண பெரியாஸ்பத்திரியை நோக்கிப் பறந்தது.

ஆஸ்பத்திரிக்கு வரும் பொழுது சண்டியன் முற்றாக நினைவிழந்து போனான்.

அவசர அவசரமாக சத்திரசிகிச்சை அறைக்கு எடுத்துச் சென்றார்கள்.

வாசலில் தவமும் சண்டியனது சக கூட்டாளிகளும். . .

தவம் அழுது கொண்டே இருந்தாள்.

அழாதையுங்கோ அண்ணைக்கு ஒண்டும் நடக்காதுஆறுதல் சொல்லிக் கொண்டு நின்றார்கள்.

இரண்டு மணித்தியாலத்திற்கு பின் சத்திர சிகிச்சையின் பின் அவன் உயிரைக் காப்பாற்றிய டாக்டர் வந்து சொன்ன தகவல் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

சண்டியனுக்கு குத்தப்பட்ட கத்தியில விசம் பூசப்பட்டிருந்ததாம்.

சங்கானையே விறைத்துப் போனது.

யார் செய்தது?

பழைய பகையை வைத்து மூன்றாம், ஐந்தாம் வட்டார ஆட்கள் செய்ததா? அல்லது அரசியல் நட்பைத் தேடிக் கொண்டதால் அரசியல் கட்சிகளுக்குள் இருக்கும் புகைபூச்சலினால் சண்டியனுக்கு ஏற்றிய கத்தியில் விசம் தடப்பட்டதா? அவ்வாறாயின் எப்போது பூசப்பட்டது? அல்லது அன்றைய தினத்தில் ஏதாவது சந்தர்ப்பத்திலாவது அவனுக்கு கத்திக் குத்து விழவேண்டும் என்ற திட்டமிட்டபட்டிருந்ததா?

கூட்டத்தினுள் இருந்து உவன் என்ன சண்டியனோ. . .ஊர்ச் சேர்மனோஎன்று கத்தியவன் யார்? சண்டியனுக்கு கத்திக்குத்து விழுந்ததும் அவன் எங்கே மறைந்தான்? அவனைக் கொல்ல வேண்டும் நோக்கம் இருந்திருந்தால.; . . இரவில் தன்னை மறந்து வெறியில் பஸ்ஸ்டான்டில் படுத்திருக்கும் பொழுது செய்திருக்கலேமே!

கேள்விகளாலும், சந்தேகங்களாலும் சங்கானை மூழ்கியிருக்க சண்டியன் இரவு பத்து மணிபோல் கண்விழித்தான்.

 

பட்டினசபைக்குப் பக்கத்தில் இருந்த கலாச்சார மண்டபத்தில் வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. அதில் சண்டியனின் ஆதரவில் நின்ற வேட்பாளர் விகிதாசாரத்தில் மற்றைய இடங்களில் நின்ற வேட்பாளர்களை விட முன்னே நின்றார்கள்.

யார் செய்தது? சுற்ற நின்றவர்களை சண்டியன் கேட்டான்.

தெரியாது அண்ணை

பின்னை சிரைக்கவா இஞ்சை நிக்கிறியள்

ஆளை ஆள் பார்த்து முழிசினார்கள்.

நான் தையல் பிரிச்சு வரேக்கை எனக்கு குத்தினவன் உயிரோடை இருக்க கூடாது. . . இல்லை நீங்கள் உயிரோடை இருக்க கூடாது.

பெலத்துக் கதைக்க வயிறு வலித்தது.

அனைவரும் இடத்தை விட்டு விலகினார்கள்.

தவம் மட்டும் அவனது நெற்றியை ஆதரவாகத் தடவிக் கொண்டு நின்றாள்.

வலி தெரியாமல் இருக்க நேர்ஸ் கொண்டு வந்து கொடுத்த மொபின் குளிசைகள் மீண்டும் அவனை மயக்க நிலைக் கொண்டு போய்க் கொண்டிருந்தது.

பக்கத்துக் கட்டிலில் இருந்தவர் தன் தலைமாட்டில் வைத்துக் கேட்டுக் கொண்டிருந்த பொக்கற் றேடியோவில் மறஇற மற்றைய பட்டின, நகரசபைத் தேர்தல் முடிவுகளை சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.

தவம் தன் காதுகளைக் கூராக்கிக் கொண்டு கேட்டுக் கொண்டு நின்றாள்.

இப்பொழுதும் சங்கானை வேட்பாளர்தான் முன்னே நின்று கொண்டு நின்றார்.

சண்டியனால் தான் அவர் முன்னால் நிற்கின்றார் என தவம் மனத்தினுள் மகிழ்ந்தாள்.

கச்சேரியடியில் நின்று நேரடியாக ஒலிபரப்பு செய்து கொண்டிருந்த வானொலி அறிவிப்பாளரின் பின்னால் வெடிச்சத்தங்களும் சந்தோஷ ஆரவாரங்களும் கேட்டுக் கொண்டிருந்தது.

நேரம் இரவு இரண்டு மணியை நெருங்கிக் கொண்டு இருந்தது.

சண்டியன் மீண்டும் கண் விழித்தான்.

பசிக்குது என வாய் முணுமுணுத்தான்.

பின்னேரம் தனக்காக அவனது கூட்டாளிகள் வாங்கி வந்து கொடுத்த இடியப்ப பாசலை தான் சாப்பிடாமல் இருந்தது ஞாபகத்துக்கு வந்தது.

முதுகிற்;கு தலையணை கொடுத்து அவனை நிமிர்த்தி இருக்க வைத்து விட்டு இடியப்பத்தைக் குழைத்துக் கையில் கொடுத்தாள்.

வலிக்குதே

ஓம்! கொஞ்சம் வலிக்குது தான். . .அவன்களை கண்டு பிடித்து உயிரெடுக்கேக்கை தான் எல்லா வலியும் போகும். . .

சண்டியன் கறுவினான்.

எல்லாம் பேந்து பாக்கலாம் இப்ப இதை சாப்பிடுங்கோ . . .கடவுளாய் காப்பாற்றினது. . .இல்லை என்ரை பிள்ளைக்கு காட்ட தேப்பன் இருந்திராது. . .தவத்தின் குரல் விம்மியது.

நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை. . . அவ்வளவு கெதியிலை உன்னை விட்டுட்டுப் போக மாட்டான். ஒரு தேப்பனுக்கு பிறந்திருந்தால் கம்மணாட்டியல் நேரிலை வந்திருக்க வேணும். இப்பிடி சனத்துக்குள்ளை ஒழிச்சு நிண்டு. . .தூ. . .

கொஞ்சம் சும்மா இருங்கோப்பா தவம் சொல்லி முடிப்பதற்குள் பக்கத்து கட்டில்காரனின் வானொலி விசேட செய்தி ஒன்று என இவர்களின் கவனத்தைத் திருப்பியது.

சங்கானை பட்டினசபைச் சேர்மனும் முதலாம் வட்டார வேட்பாளருமாகிய சீவரத்தினம் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று சங்கானை கலாச்சார மண்டபத்தில் வாக்குகள் எண்ணிக் கொண்டிருக்கும் சமயத்தில் வெளியே கூடியிருந்த வேட்பாளர்கள், ஆதரவாளர்களுடன் கூடிக்கதைத்துக் கொண்டிருந்த சங்கானைப் பட்டினசபை சேர்மன் சீவரத்தினம அவர்கள் இனம் தெரிந்தவர்களாள் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சண்டியனுக்கோ, தவத்திற்கோ எதுவும் புரியவில்லை.

செய்தி தொடர்ந்தது!

தேர்தல் முடிவுகளைப் பற்றி ஆராய்து கதைத்துக் கொண்டிருந்து விட்டு, தனது அலுவலகத்துள் நுழைந்த பொழுது ஒளிந்திருந்த யாரோ கத்தியால் உடலின் பல பகுதியில் குற்றி அவரை உயிரிழக்கச் செய்திருக்கிறார்கள். மேலும் இன்று மதியம் சங்கானையில் நடாந்த அசம்பாவிதத்திற்கும் இதற்கும் தொடர்பு இருக்குமா என புலனாய்வுத்துறை சங்கேகிக்கின்றது.

வானொலியில் செய்தி தொடந்து கொண்டு இருந்தது.

தவமும் சண்டியனும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.

மொட்டையன், சீனியன், முருகன், சின்னவன் – கூட்டாளிகள் நால்வரும் வாட்டுக்குள் புன்சிரிப்புடனும் பெருமையுடனும் வநது கொண்டிருந்தார்கள்.

சண்டியனுக்கு புரிந்து விட்டது.

தவத்திற்கு மட்டும்; சேர்மன் இந்த சதுரங்கத்துள் எப்படி வந்தார் என்பது தான் புரியவில்லை.

*

சுமார் ஒரு வருடத்துக்கு முதல்

சங்கானை கலாச்சார மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடாத்தப்பட்ட தினம்.

இதற்கு கலாச்சார மண்டபம் எனறு பெயர் சூட்டப்பட்டு இருந்ததே தவிர இதன் முக்கிய நோக்கம் சங்கானையில் இருந்த பத்து நாடக மன்றங்களும் தங்கள் தங்கள் நாடகங்களை மேடைச்செலவு, லைற் செலவு, ஸ்பீக்கர் செலவு இல்லாமல் பட்டினசபையின் அனுவரணையுடன் அரங்கேற்றுவதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருந்த சீமெந்து மேடையும் திரைச்சீலைகள் கட்டுவதற்கு வசதியாக ஆறு கொங்கிறீற் தூண்களும் தான்.

பின்னால் காற்றோட்டம் இல்லாத ஒரு சம்பாசணைக் கூடமும் கட்டியிருந்தார்கள். அது பொதுவாக பாவிக்கப்படுவதில்லை.

சனங்கள் புல்தாரையில் இருந்துதான் பார்க்க வேண்டும். குறிப்பிட்ட நாளில் மழைபெய்தால் அதற்கு பட்டினசபை பொறுப்பல்ல. நிகழ்ச்சி ஒழுங்காளர்கள் தான: பக்கத்தில் உள்ள அரசடி வைரவிடம் அன்று மழை வரக்கூடாது என்று நேர்;த்தி வைக்க வேண்டும்.

இதனைக் கட்டுமானப் பொறுப்பு முழுக்க முழுக்க எ.ஜி.ஏ. இடம் தான் இருந்தது. அவரே தனக்கு தெரிந்த கட்டிடக் கொன்ராக்காரரிடம் கதைத்து அதக் கட்டும் பணியை அவரிடமே கொடுத்து விட்டார்.

சேர்மன் ஆட்கள் கட்டடக்கலைஞர். துரைராஜாவைக் கொண்டு படம் வரைய வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார்கள். ஆனால் எ.ஜி.எ. இன் அதிகாரத்துள் அது இடம் பெறவில்லை.

இதனால் சேர்மன் மனத்துள் புளுங்கினாலும் அவராலோ அவரின் சக பாடிகளாளோ எ.ஜி.எ.ஐ எதுவும் செய்ய முடியவில்லை.

 

இதற்கிடையில் எ.ஜி.ஏயின் வீட்டின் முன்னே அமைந்திருந்த போர்ட்டிக் கோவை இடித்து விட்டு பெரிதாக கட்டப்படுகிறது என்றும், கலாச்சார மண்டபத்தைப் கட்டுபவர்கNளு அதனையும் கட்டுகிறார் என்று அரவல் புரவலாக கதைகள் வேறு வெளியாகத் தொடங்கியது. ஆனால் அடக்கியே வாசிக்கப்பட்டது.

சந்தர்;ப்பத்தை பாத்திருந்தார்கள்.

கலாச்சாரமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு பட்டினசபையிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

அதன் திறப்புவிழாவை ஒரு தமிழ்விழா போல சிறப்பாகச் செய்ய பட்டினசபை முடிவு செய்து சங்கானை பாடசாலைகளுக்கிடையில் கதை, கவிதை, கட்டுரைப் போட்டிகளும், சங்கானையில் இருந்த நாடக கழகங்களுக்கு இடையில் நாடகப் போட்டிகளும் நடாத்தப்பட்டு அனைத்திலும் முன்னின்ற முதல் மூன்று ஆட்களுக்கும் அல்லது குழுக்களுக்கும் மேடையில் திறப்புவிழா அன்று மேடையில் சந்தர்ப்பம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பின்பென்ன சங்கானை விழாக்கோலம் தான்!

 

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வட்டுக்கோட்டை எம்.பி.ஐயும் சிறப்பு விருந்தினராக

சங்கானை மக்கள் வங்கி முகாமையாளரையும் அழைத்திருந்தார்கள். மற்றும் யாழ். மாவட்டத்தில் உள்ள சிறந்து பேச்சாளார்கள், பிரமுககர்கள் எல்லோரும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

 

எ. ஜி. ஐத் தவிர!

சந்தர்ப்பம் பார்த்து எ.ஜி.எ.யின் மூக்கை அறுத்து விட்டதாக சேர்மன் மனத்துள் ஆனந்தப்பட்டுக் கொண்டார்.

ஒரு அரசாங்க அதிபர். . . கலாச்சார விழா மண்டபத்தை கட்டி பட்டினசபையிடம் ஒப்படைத்தவர். . . .சிறப்பு விருந்திராக இல்லாவிட்டாலும் மேடையில் இருக்க கூடிய பத்தோடு பதின்றாக கூட வேண்டாம். . . .ஆனால் ஒரு அழைப்பிதழ் ஆவது. . . .

எ.ஜி.எ. மனதுள் குமுறிக் கொண்டு வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவரின் சகதர்ம பத்தினி காலையிலும் மாலையிலும் தூபம் போட்டுக் கொண்டே இருந்தாள்.

கலாச்சார மண்டபத் திறப்பு நாளும் வந்தது.

சங்கானையே களைகட்டியது.

விழா மண்டபம் சந்தையடியில் இருந்து ஒரு மைல் தூரத்தில் அமைந்திருந்தாலும்

சந்தையடியையும் அதனுடன் சேர்ந்த பஸ் ஸ்டான்டையும் சிவப்பு, மஞ்சள், பச்சைக் கொடிகளால் அலங்கரிந்து. . . சந்தியின் நாலு பக்கமும் வாழைமரங்கள் கட்டி. . . சந்தையின் கலகலப்பையே பாடுங்கள் இவன் பைத்தியக்காரன்என்று லைட்ஸ்பீக்கரின் அலறலினால்; அமுக்கி. . . மேலும் அலங்காரப்பந்தல் போட்டு காலை முதல் மாலை வரை வௌ;வேறு மேளக்கச்சேரிகளை ஒழுங்கு செய்ததில் சண்டியனுக்கும் பெரிய பங்கிருந்தது.

பின்னேரம் ஐந்து மணிணிக்கு அரசடி வைரர் கோயிலில் விசேடப் பூஜை நடைபெற்று,

விழாத்தலைவர் சேர்மன் பிரதம விருந்தினரை அழைத்துக் கொண்டு முன்னே வர, அவரின் சக பாடிகள் பின்னால் வர. . .பகல் முழுக்க சந்தையடியில் வாசித்த அத்தனை மேளகாரரும்; ஒன்றாக வீதியில் நின்று கச்சேரி நடத்த. . .அதனைப் பார்த்து ரசிக்க. . .நன்றாய்த்தான் இருந்தது.

 

அந்த ஒரு மணித்தியாலமும் யாழ்ப்பாணத்தால் வந்த பஸ், கார்கள் சரி. . .காரைநகர், மாதகல் பக்கத்தால் வந்த பஸ், கார்கள் சரி அசையமுடியாமல் அங்கேயே நின்றன. பஸ்ஸில் வந்த பிரயாணிகளும் தம் அவசரத்தை மறந்து ஒரு மணித்தியாலமாக இலவசக் கச்சேரி பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

அதன் பின் ஊர்வலம் மண்டபத்தை அடையத்தான் றோட்டில் வாகனங்கள் நகரத் தொடங்கின.

 

இதனிடையே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெலத்தாக கோர்ன் அடித்துக் கொண்டு சனங்களை விலத்திக் கொண்டு முயற்சிக்க சனங்கள் விலத்த முடியாது அவதிப்பட அதால் வந்த சண்டியன் சொல்லிப் பார்த்தான். . . கொறு;சம் பொறுக்கும் படி. ஆனால் யாழ்ப்பாண கச்சேரியில் வேலை செய்யும் அவர்களோ பொலிவிட்டை பெர்மிஷன் அடுத்து தான் எல்லாம் நடக்குதா என்று சட்டம் கதைக்க தொடங்க முதலே ஒருவன் றோட்டின் கரையில் விழுந்தார். மற்றவர் தட்டுத் தடுமாறி மோட்டார் சைக்கிளை நிமிர்த்த முதல் இந்தா போய்க் காத்தடிச்சுக் கொண்டு வா. . .அப்ப ஏர்வலம் முடிஞஇசிடும் என இரண்டு சக்கரக்களினும் இருந்து காற்றைப் பிடிங்கி விட்டான்.

சனங்களுக்கும் அந்தச் சந்தர்ப்பத்தில் ஏனோ அவன் செய்தது சரி எனவே பட்டது.

 

ஊர்வலம் மண்டபத்துக்கு வரவும் வாணவேடிக்கை ஆரம்பிக்கவும் சரியாய் இருந்தது.

வானத்தில் இருந்து பூமழை பொலியுமாப் போல் இருக்க மக்களின் கரகோஷங்களுக்கு நடுவில் விறப்பு விருந்தினர் சிவப்பு நாடாவை வெட்டி கலாச்சார விழாவை ஆரம்பித்து வைத்தார்.

அதன்பின் பேச்சுகள், கவழதைகள்;, நடனங்கள் என ஒன்றன் பின் ஒன்றாக. . . .இப்படி ஒரு கலைவிழாவை சங்கானை தன் சரித்திரத்திலேயே கண்டிருக்கவில்லை என மக்கள் அனைவரும் பாராட்டியபடி அடுத்த அடுத்த நிகழ்ச்சிக்காக காத்திருந்த பொழுது கச்சேரி மோட்டார் சைக்கிள் கொடுத்த புகாரின் பெயரில் இரண்டு பொலிஸ்காரர் சண்டியனைத் தேடிக் கொண்டு சனத்துக்குள் வர ஒரு சின்ன பரபரப்பு உருவானது.

சண்டியனை உடனே தலைமறைவாசந் நொல்லி விட்டு சேர்மன் பொலிஸ்காரரின் முன் வந்து அவர்களை திரும்பிப் போகச் சொல்லியும் அடுத்த நாளே எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளலாம் எனச் சொல்லப்பட்டது. அவர்கள் மறுத்த பொழுது சேர்மனின் குரல் கொஞ்சம் உயர்ந்தது.

போலிஸ்காரர் இருவரும் இன்ஸ்பெட்டர் சில்வாக்கு போன் போட்டார்கள்..

.இன்ஸ்பெக்டர் எ.ஜி.எ.க்கு போன்போட்டார்.

ஐந்து நிமிடத்தின் பின் எ.ஜி.எ இடமிருந்து இன்ஸ்பெக்டர் சில்வாக்கு போன் வந்தது..

இன்ஸ்பெக்டர் பொலிஸ்நிலையத்தில் இருந்த அனைத்து பொலிஸ்காரருக்கும் போன் போட்டார்.

பத்தாவது நிமிடம் விழா நடந்த இடத்து மின்சாரம் நிறுத்தப்பட்டது.

தாடரா லைற்றை நிற்பாட்டியது என்று கேட்கமுதல் வானத்தை நோக்கி இரண்டு மூன்று துப்பாக்கி வெடிகள் தீர்க்கப்பட்டது.

அவ்வளவு தான்.

சுனம் கூயா மாயா என்று ஒடத் தொடங்கியது.

கரண்ட் இல்லாததால் மைக் செற்றும் வேலை செய்யவில்லலை. ஆகவே சனத்தை அமைதிப்படுத்த முடியவில்லை.

சனம் விழுந்தும் எழுந்தும் அலறியபடி ஒடினார்கள்.

ஐயோ உழக்கிறிங்கள் என்று சனத்தின் குரல்கள் இருட்டினுள் கேட்டாலும் அதையும் பொருட்படுத்தாமல் ஒருவரை ஒருவர் இடித்து தள்ளிய படி. . .

அடுத்து ஒரு மணி நேரமாகியும் லைற் வரவில்லை.

சேர்மன் ஆட்களைத் தவிர கலாச்சார மண்டபத்தடி காலியாகி விட்டது.

அவமானத்தாலும கோபத்தாலும் சேர்மன் சத்தம் போட்டுக் கொண்டு நி;ன்றார்.

சண்டியனுக்கு பின்;நேரம் வரை குடித்த அத்தனை சாராயத்தினதும் வெறி இறங்கிப் போயிருந்தது.

அவனையும் கோபமும் ரோஷமும் போட்டு வதைத்தது.

ஆனாலும் இது பொலிஸ்காரரின் வேலை என ஊகிக்க கூடியதாக இருந்ததால் சேர்மனே பார்த்துக் கொள்ளட்டும் என தனக்குள் கறுவிக் கொண்டு நினறான்.

அப்பொழுது மீண்டும் மின்வாசம் வந்தது.

எல்லாமே குலைந்து போயிருந்தது.

மேடை, சீன்கள், தட்டிகள், கடலை ஐஸ்கிறீம் – தும்பு மிட்டாய்காரர்களின் பொருட்கள். . .ஆட்கள் நிலத்தில் போட்டு இருக்க கொண்டு வந்த பாய்கள். . . எல்லாமே சிதறிப் போயிருந்தது.

எல்லாத்துக்கும் மேலாக கடைசியாக மேடையில் ஆடிக்கொண்டிருந்த ஒரு ஐந்து வயதுப் பெண்பிள்ளை. . . நிலத்தில் தலை குப்புறவாக கிடந்தது. சண்டியன் கண்டு விடு;டு ஓடிப்போய்த் தூக்கினான் – உயிர் பிரிந்து கணநேரமாய் போயிருந்தது.

யாரோ கழுத்தில் ஏறி மிதித்துக் கொண்டு ஒடியிருக்க வேண்டும்.

இஞ்சை வந்து பாருங்கோ ஐயா

சேர்மன் விறைத்துப் போனார்.

அவரின் அவசியல் வாழ்வில் முதன் முதல் படிந்து விட்ட கறை.

நேரடியாக பொலிஸ் ஸடேசனுக்குப் போனார்.

இன்ஸ்பெக்டர் சில்வா வெளியே சிகரட் குடித்துக் கொண்டு நின்றார்.

எதுக்காக இப்பிடிச் செய்தனிங்கள்

நாங்கள் எதுவும் செய்யேல்லை.

போலிசிட்டை பெர்மிஷன் இ;ல்லாமல் மீற்றிங், ஊர்வலம் எல்லாம் செய்தியள். சனத்துக்கு இடைஞ்சல் குடுத்தியள். . .கேட்க வந்து பொலிஸ்காரரை நீங்களே அவமானப்படுத்தியள். . .

அதுக்க இபு;பிடியே. . .இது பட்டினசபை ஒழுங்கு செய்தது. . .இதை நிப்பாட்ட எ.ஜி.எ.க்கு மட்டும் தான் பவர் இருக்கு

அவருக்கும் இது தெரியும்! சில்வா அடுத்த சிகரட்டை மூட்டினார்.

இத்தடன் சேர்மன் மௌனமானார்.

தன்னை நன்றாகவே இருட்டினுள் உதைத்து விட்டுப் போய்விட்டார் எனப் புரிந்தது.

ஐயோ உன்னை இங்கை ஆட வைச்சு பலி கொடுக்கவோ கூட்டிக் கொண்ட வந்தனாங்கள் கலாச்சார மண்டபத்தடியில் இருந்து வந்த தாயின் சத்தம் சேர்மனின் உயிரைக் குடித்தது. ஆவரால் அங்கு மேலும் அங்கு நிற்க முடியவில்லை.

எ.ஜி.எ.யை அழைத்து தான் இருக்கலாம் என மனதின் ஒரு மூலை குத்தியது.

 

இது காலம் கடந்த ஞானம். ஞானம் வருவதற்குப் பதில் மனதுள் பழி உணர்ச்சி தான் வந்தது.

 

சண்டியனையும் மற்ற தன் அங்கத்தினரையும் கூப்பிட்டு எல்லாவற்றைதையும் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு காரில் ஏறிப் போய்விட்டார்.

ஒரு உயிரை காவு எடுத்துவிட்டு உயிரிழந்து நின்ற அந்த கலாச்சார மண்டபத்தை

எல்லோரும் கொஞ்சம் வெறுப்பாக பார்த்தபடி சேர்மன் சொல்லி விட்டுப் போன வேலைகளை செய்து முடிக்கும் பொழுது அதிகாலை நாலு மணியாகி நிலமும் வெளிக்கத் தொடங்கி விட்டது.

எல்லோரும் மௌன ஊர்வலம் போவது போல் அதிகம் ஆளுக்கால் கதையாமல், ஆனால் மனதுள் மட்டும் குமுறியபடி தேத்தண்ணீர் குடிப்பதற்காக சந்தையடி செல்லத்துரையண்ணையின் கடையை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

பஸ் ஸ்டான்ட்க்கு கிட்ட வந்த போது சண்டியனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

அவன் போட்டிருந்த அலங்கார வளைவு, சோடனைகள், வாழை மரங்கள் எல்லாம் வெட்டியும் வீழ்த்தியும் சிதைக்கப்பட்டிருந்தன.

இண்டைக்கு சந்தை கூடும் போலத் தெரியேல்லையாரோ ஒரு வாழைக்குலை வியாபாரி சொல்லிக் கொண்டு போனார்.

*

இந்தச் சம்பவம் சங்கானையின் பாதி உயிரைக் குடித்து விட்டிருந்தது.

 

சேர்மனும் சண்டியனும் மனத்தளவில் நன்கு தாக்கப்பட்டிருந்தார்கள்.

அரசியல் ரீதியாக எ.ஜ.எ.யை ஏதாவது தண்ணி இல்லாக்காட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்க்த் தொடங்கியிருந்தார். அவ்வகையில் வட்டுக் கோட்டை எம்.பியை அணுகிய அதே நேரத்தில் ஆளும்கட்சியின் யாழ்ப்பாணப் பிரதிநிதியை யாழ்ப்பாண லைன் கிளப்பிலும், அதன் பின்னர் சுண்டுக்குளி பாரில் குளிர வைத்தும் பேச்சுவார்த்தை நடாத்தினார்.

 

ஆனால் சண்டியனுக்கு தெரிந்த ஒரே பாஷை போட்டுத் தள்ளுவது தான்.

அவனுக்குள் எரிந்து கொண்ட தீயை அணைக்க ஒரே வழி அது தான். பெரிய இடம் என்பதால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று நண்பர்கள் அனைவரும் ஆலோசனை சொன்னார்கள்.

இது சேர்மனுக்குத் தெரிய வந்த பொழுது சேர்மனே நேரடியாய் சொன்னார்.

நீ செய்யுறதாலை எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனக்கும் சந்தோஷம் தான். ஆனால் நீ அகப்பட்டுக் கொண்டால் எந்த விதத்திலும் உனக்கு உதவேலாது.

அது என்ரை பதவிக்கு இழுக்குத் தேடும். மற்றும்படி பெரிய சாமான் தேவையெண்டால் கள்ளியங்காட்டிலை போய் வேண்டு..

சேர்மனின் காரியம் ஆக வேண்டும் என்ற அவாவிலும், அதற்க்குப் பின்னால் இருந்த எச்சரிக்கையிலும்  நியாயம் இருந்தது.

சேர்மன் உட்பட எவரும் மறைமுகமாகவோ . . . அல்லது யாழ்ப்பாணத்தில் பிரசித்திபெற்ற எந்த வக்கீல்களும் நேரடியாகவோ சண்டியனுக்கு உதவமாட்டார்கள் என்பது உறுதி. எனவே மறைமுகமாகவே எதையும் நடாத்த வேண்டும் எனக் காத்திருந்தான்.

எ.ஜி.எ. காரணமாக சங்கானைக்கும் தனக்கும்; ஏற்பட்ட தலை குனிவு நிமிர வேண்டும் என்றால் அது எ.ஜி.எ.யின் தலைக்கு வைக்கும் குறிதான என உறுதியாக நம்பினான்;.

அவனும் அவன் நண்பர்களும் எ.ஜி.எயின் நடைவடிக்கைகளை கவனிக்கத் தொடங்கினான்.

திங்களில் இருந்து வெள்ளி வரை ஒரே அட்டவணை தான். எப்போதும் அரசவாகனமும், கூடவே சாரதியும். சனி, ஞாயிறுகளில் எப்போதும் குடும்பத்தினர் அவருக்குப் பக்கத்தில். தனியே அவர் அங்கே போவார் என்று கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது.

ஆனால் மனம் தளராத விக்கிரமாதித்தனாய் அவன் தொடரத்தான் செய்தான்.

அப்போது ஒவ்வோர் செவ்வாய்க்கிழமை காலமையும் தெல்லிப்பளை அம்மன் கோயிலின் அதிகாலைப் பூஜைக்கு மனைவியுடன் போய்வருகிறவர் என்று தகவல் கிடைத்தது.

அது போதுமாயிருந்தது.

 

சுமார் நான்கு கிழமை வீட்டில் இருந்து தொடர்ந்தார்கள்.

வீட்டில் இருந்து வெளிக்கிடும் நேரம், கோயிலுக்குப் போய்ச் சேரும் நேரம், திரும்பி வரும் நேரம், சங்கானை, தொட்டிலடி, மாசியப்பிட்டி, மல்லாகச் சந்திகளை கடக்கும் நேரம் எல்லாம் பொதுவாக ஒன்றாகவே அமைந்தது ஒரு நிமிடம் கூடியது. அல்லது குறைந்தது.

ஐந்தாவது கிழமை சண்டியன் மாசியப்பிட்டிச் சந்தியில் காத்திருந்தான் – முதன்நாளே கள்ளியங்காட்டில் போய் வாங்கி வந்த கைத்துப்பாக்கியுடன்.

எ.ஜி.எ. வீட்டில் இருந்து தனியே புறப்பட்ட செய்தியை அவரின் பின்னால் தொடர்ந்து வந்து. . . பின் அவரை விலத்தி வந்த தட்டிவான்காரன் ஐந்து நிமிடத்துக்கு முன்பே சொல்லி விட்டான்.

 

சண்டியன் உஷாரானான்.

நிலம் வெளித்துக் கொண்ட அந்த வேளையில் கார் தூரத்தில் வருவது தெரிந்தது.

சண்டியன் வேலியோரத்தில் மூத்திரம் பெய்வது போல இருந்தான்.

சந்தியில் திருப்புவதற்காக கார் தனது வேகத்தைக் குறைத்துக் கொண்ட பொழுது பின் சில்லுக்கு முதல் வெடி வைக்கப்பட்டது.

டயர் வெடித்து விட்டது என நினைத்தபடி இறங்கிய எ.ஜி.எ. சண்டியனைக் கண்டு திகைப்பதற்கு முன் நெற்றியில் அடுத்த வெடி!

மறைந்திருந்த தட்டிவான் சண்டியனை ஏற்றிக் கொண்டு பறந்தது.

காலமை யாழ்தேவி ரெயினுக்குப் போய்க் கொண்டிருந்த கார்காரர் கண்டு சுன்னாகம் பொலிசுக்கு சொன்ன பொழுது யாழ்ப்பாண மாவட்டமே உறைந்து போனது.

சேர்மன் இரண்டு கைகளாலும் அள்ளி விபூதியை அளவுக்கதிகமாகவே அன்று பூசினார்.

சண்டியன் எதுவும் தெரியாதது போல சந்தைக் கட்டில் போய்க் குந்தியிருந்தான்.

நான் முடித்திருக்க வேண்டும்; யாரோ முடித்து விட்டார்கள் என எல்லோருடனும் சேர்ந்து கதைத்துக் கொண்டு இருந்தான்.

கலாச்சார மண்ட நிகழ்விற்கு இது பழிக்குப் பழி என அனைவரும் நினைத்தாலும் சங்கானைக் கிராமத்திற்கு இது ஆரோக்கியமான நிகழ்வு இல்லை என அனைவருக்கும் பட்டது.

அதேவேளை புலனாய்வுத்துறையின் கண்கள் சேர்மனையும் சண்டியனையும் நோக்கித் திரும்பியது.

*

எப்பொழுதும் குற்றவாளி ஒரு தடயத்தை விட்டுச் செல்லுகின்றான் என்ற குற்றப்புலானாய்வுத்துறையின் அனுமானத்திற்கும் எதிர்வு கூறலுக்கும் சண்டியனும் சேர்மனும் மட்டும் விதிவிலக்கல்ல.

எ.ஜி.எ.ஐ சுட்ட கையுடன் வீட்டை போய்க் குளித்து விட்டு சந்தையடிக்குப் போயிருந்தால் பிரச்சனையில்லை.

எந்த தடயமும் தன்னிடம் இருக்க கூடாது என்பதற்காக மாசியப்பிட்டியில் இருந்து கள்ளியங்காட்டுக்கு போய் கைத்துப்பாக்கியை கொடுத்தது சண்டியன் விட்ட பெரும் தவறு.

மனோகரா தியேட்டர் பின்பக்க வீதியால் வேகமாக ஓடிய தட்டி வான் – அதனைக் கவனித்த ஒரு பொலிஸ்காரன் – கள்ளியங்காட்டானுக்கும் சேர்மனுக்கும் இருந்த பாலிய நட்பு அண்மைக் காலமாக சண்டியனுக்கும் சேர்மனுக்கும் இருந்த நெருக்கம் – கலாச்சார மண்டபக் கலவரத்தால் கொலை செய்யப்பட்ட எ.ஜி.எ.க்கும் சேர்மனுக்கும் இருந்த பனிப்போர் – இத்தனையும் கூட்டக் கழித்துப் பார்த்த பொழுது சேர்மனின் திட்டமிடலில் சண்டியன் கொலை செய்திருக்க வேண்டும் என காகிதத்தில் போட்ட கணக்கின் விடை காட்டியது.

ஆனால் ஆதாரம்?

அதன் முதல் கட்டமாக மூதூர் ஸ்டேசனில் கடமையில் இருந்த இருவர் யாழ்ப்பாண பொலிஸ் ஸ்டேசனுக்கு மாற்றப்பட்டு பாய் வியாபாரிகளாக சங்கானைக்குள் அனுப்பப்பட்டார்கள்.

சண்டியன் தேர்தல் வேலையில் வாக்குகளை ஒரு புறம் சேகரித்துக் கொண்டிருக்க, மறுபுறத்தில் பாய் வியாபாரிகள் இருவரும் சண்டியனைப் பற்றியும், அவனது நண்பர்கள் பற்றியும், சேர்மனைப் பற்றியும் தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருந்தார்கள்.

இடியப்பத்தில் உள்ள சிக்கலை மெல்ல மெல்ல எடுப்பது போல பாய் வியாபாரிகள் சேகரித்த தகவல்கள் சேர்மனை நோக்கியும் சண்டியனையும் நோக்கியும் தூக்குகயிற்றை ஆட்டிக் கொண்டு இருந்தது.

 

தேர்தலுக்கு இரண்டு நாட்கள் இருக்கும் பொழுது யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு ஆதராவாக முற்றவெளிக்கூட்டத்தில் பேசப் போன சேர்மனுக்கு, சங்கானைச் சந்தையுள் பாய் வியாபாரம் செய்யும் இருவரும் யாழ்ப்பாண பொலிஸ் ஸ்டேசனுக்குள் போனது சந்தேகத்தை கிளறி விட்டது.

 

கொழும்பு மட்டத்தில் தனது அரசியல் செல்வாக்கை கொண்டு விசாரித்த பொழுது சண்டியனை கைது செய்யும் நேரம் நெருங்கி விட்டது என்றும், அவன் கொடுக்கும் வாக்குமூலத்தில் தான் சேர்மனின் எதிர்காலம் இருக்கிறது என்றும் திட்டமிடப்பட்டது.

சேர்மன் நடுநடுங்கிப் போனார்.

ஒன்றை மறைக்க இன்னொன்று!

யாழ்ப்பாணம் வந்தவர் கள்ளியங்காட்டுக்குப் போனார்.

இரவிராக விழித்திருந்து திட்டம் போட்டார்கள் – சண்டியனின் ஆயுளைக் குறிவைத்து.

 

அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தது.

ஒன்று. . . சண்டியன் அப்புரூவராய் மாறினால் கயிறு சேர்மனின் கழுத்திற்குத் தான்.

இரண்டு. . . தேர்தல் நிலைமையைப் பார்க்கும் பொழுது புதிதாக ஏழாம் வட்டாரத்தில் சண்டியனின் செல்வாக்குடன் நிற்கும் வேட்பாளர் விகிதாசாரத்தில் அதிக வாக்குகள் பெற்றால் அடுத்த சேர்மன் பதவி தனக்கில்லாமல் போய்விடும் என்பது தான். எனவே வாக்கு நிலையத்தில் குழப்பத்தை உண்டு பண்ணினால் வாக்காளர் வருவதைக் குறைக்கலாம் என அரசியல் சாணக்கியம் ஆரூடம் சொன்னது.

 

இரண்டு மாங்காய்களையும் ஒரு கல்லில் விழுத்த நாளையும் நேரத்தையும் குறித்தார்கள்.

சண்டியனை முடிந்த கையுடன் அந்த இரண்டு முஸ்லீம் வியாபாரிகளும் உலகத்தில் இருக்க கூடாது என்ற ஒப்பந்தத்தில் மூன்று உயிர்களுக்கும் தலா ஒரு இலட்சம் படி மூன்று இலட்சம் பேசப்பட்டது.

பேசப்பட்ட ஒப்பந்தந்தை ஒரே நேரத்தில் நிறைவேற்றும் பொழுது இரண்டு முஸ்லீம் பொலிசார் கொலை செய்யப்படவும். . .சண்டியன் கத்திக் குத்தில் இருந்து உயிர் பிழைக்கவும். . .அதுவே சேர்மனுக்கு எமனாகியது.

சண்டியன் இப்பொழுது இன்னோர் தளத்துக்கு போக வேண்டிய கட்டாயத்துக் தள்ளப்பட்டதை நினைத்துக் கொண்டு நித்திரையில்லாது முகட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தவம் கட்டிலின் காலடியில் தூங்கிக் கொண்டிருந்தாள்.

பக்கத்துக் கட்டில்காரனின் வானொலியில் தேர்தல் செய்தி தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

சங்கானை பட்டினசபையில் சண்டியனின் ஆதரவில் நின்ற ஏழாம் வட்டார வேட்பாளரே அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். சேர்மன் கொலை செய்யப்பட்டாதால் அவரின் முதலாம் வட்டாரத் தொகுதிக்கு மீளவும் தேர்தல் நடாத்தப்படும் எனவும், எவ்வாறு இருப்பினும் விகிதாசாரத்தில் அதிக வாக்குகள் பெற்ற ஏழாம் வட்ட வேட்பாளரே அடுத்த சேர்மன் ஆவார் என அறிவிக்கப்பட்டது.

அந்த இரவில் சேர்மனின் துக்கத்தில் முதலாம் வட்டாரம் மூழ்கி இருந்தாலும் ஏராம் வட்டாரத்தில் ஆங்காங்கே வெடி கொளுத்திக் கொண்டாடினார்கள்.

ஜனநாயத்திற்கான தேர்தல் நடைபெற்ற அன்று மூன்று கொலைகள்என ஆசிரியர் தலையங்கத்துடன் ஈழநாடு பத்திரிகை அச்சாகிக் கொண்டிருந்தது.

அன்று வழமையை விட இருபதினாயிரம் பிரதிகள் அதிகமாகவே அச்சிட்டார்கள்.

*

ஒருவனின் இயல்பும் திறமையும் பிறப்பு, வளர்ப்பினால் நிச்சயிக்கப்பட்டாலும் கிடைக்கும் சந்தர்ப்பங்களும். . .அதனைப் பாவிக்கும் அல்லது தவற விடுதலினால் ஏற்படும் அதிஷ்ட துர்அதிஷ்ட நிகழ்வுகளும்; பாம்பும் ஏணியும் விளையாட்டுப் போல் அமைந்து விடுவதுண்டது.

அதைப்பற்றி நன்கு யோசிக்க இந்த மூன்று வார கட்டில் வாசம் சண்டியனுக்கு நன்கு உதவியது.

 

அவனுக்கு உள்ப்புண் மாறி கொஞ்சம் கதைக்க கூடிய நிலைக்கு வந்து பொழுது யாழ்ப்பாண பொலிஸ் ஒரு நாளும், கொழும்பில் இருந்து சி.ஐ.டி பிரிவைச் சார்ந்தவர்கள் ஒரு நாளும் வந்து விசாரித்தார்கள்.

தன்னைக் குத்தியது யார் என்பதில் இருந்து சேர்மனைக் கொலை செய்தவர்கள் யார் என்பது வரை பதில் தெரியாது என்பததாகத் தான் இருந்தது.

ஒரு எ.ஜி.எ!

ஒரு ஊர்ச் சேர்மன்!

இரண்டு மாறு வேடத்தில் இருந்த பொலிஸ்காரர்!

பொலிஸ்காரரின் கழுகுக் கண்கள் சண்டியனையே சுற்றி வளையமிட்டாலும் கொத்திச் செல்வதற்கு சாட்சியங்கள் இல்லாது தவித்தார்கள்.

அடுத்து அப்பூருவராய் மாற்றக் கூடிய ஒரே சாட்சி கள்ளியங்காட்டான் தான். ஆனால் அவனும்; தலைமறைவாகி விட்டான்.

இந்த மூன்று வாரமும் தினமும் மத்தியானமும், பின்நேரமும் நோயாளிகளைப் பார்க்கும் நேரத்தில் ஹார்லிக்ஸ் போத்தலும் கையுமாக யாராவது சங்கானை ஆட்கள் வந்து பார்த்துக் கொண்டே போனார்கள். இதில் சந்தையில் கீரைக்கட்டு விற்கும் செல்லாச்சிக் கிழவி தொடக்கம், மிகப் பெரிய பலசரக்கு கடை வைத்திருக்கும் வெற்றிவேலு முதலாளி வரை அடங்குவார்கள்.

தவமும் ஆஸ்பத்திரிக் கன்ரீனில் சுடுதண்ணீர் வாங்கி வந்து தனது ஒற்றைக் கையால் ஆட்களுக்கு தேனீர் அல்லது கோப்பி ஊற்றிக் கொடுத்து கவனித்தாள்.

வந்தவர்களும் இப்படி ஒரு சண்டியனுக்கு அப்படி ஒரு பொறுமைசாலி கிடைத்திருக்கிளாள் என மனத்துள் எண்ணிக் கொண்டார்கள்.

தவத்தின் பகுதி ஆட்கள் மட்டும் வரவில்லை கத்திக் குத்தில் சண்டியன் செத்திருந்தால் சிலவேளை வந்திருப்பார்களோ என்னவோ!

 

அவர்கள் வராததையிட்டு சண்டியன் எந்த விதத்திலும் அலட்டிக் கொள்ளவோ கவலைப்படவில்லை தவத்துக்குத் தான் அது கஷ்டமாய் இருந்தது.

ஆனால் யாருக்காக தான் உயிரைக் கொடுத்து வெற்றியும் வேண்டிக் கொடுத்து இன்று சேர்மன் கதிரையில் அமர்ந்திருக்கும் அந்த ஏழாம் வட்டார உறுப்பினர் வராதது தான் அவனுக்கு கஷ்டமாய் இருந்தது.

கைதுடைத்து விட்டு எறியும் காகிதம் போல தன்னை நினைத்து கவலைப்பட்டான்.

ஒரு நாள் பின்னேரம் கார் புறோக்கர் துரை வந்து கணநேரமாக கதைத்துக் கொண்டு இருந்தார்.

 

புறோக்கர் துரை தனியே கார் விவகாரங்களில் மட்டுமில்லாது உலக விவகாரங்களிலும் நன்கு அடிபட்ட பழுத்த அனுபவசாலி.

சங்கானையில் சாதிக்கலவரம் வெடித்த பின் இரண்டு பகுதிகளிடமும் சமரசம் பேசி கடைசியில் முடிவுக்கு கொண்டு வந்தவரும் அவர்தான்.

சண்டியன் மீது எப்பொழுதும் கரிசனை உடையவர். மாறாக சாதிப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தன்னுடைய சொல்லை மதித்து கேட்டதில் சண்டியன் ஒருவன் என்பதினால் அவன்மீது தனிப்பட்ட மரியாதை வைத்திருந்தார்.

தற்போது அவனுக்கு விழுந்த கத்திக் குத்து சங்கானைக்Nகு ஒரு சரிவு என கவலைப்பட்டார். இனி அவன் தன்னை காப்பாற்ற கட்டாயம் தன்னைச் சுற்றி ஒரு வேலி போட வேண்டும் என்பதை நன்கு உணர்த்தினார்.

இவ்வளவு காலமும் அவன் தன் உடல் பலத்தை மட்டும் நம்பி மற்றவர்களுக்கு ஒரு போடு தடியாகவே இருந்ததையும், அவனுடன் இருந்த சேர்மனே அவன் காலுக்கு கீழ் குழி பறித்தையும், முன் பின் தெரியாத ஒரு கள்ளியங்காட்டுச் சண்டியனை அவனுக்கொதிராக திருப்பி விட்ட அரசியல் யுக்திகளை அவனது மூளையில் ஏறும்படி எடுத்துரைத்தார்.

நிச்சயம் அவனுக்கு எப்போதும் இனியொரு காவல் அரண் தேவை என உணர்த்தினார்;.

இவ்வளவு நாளும் மற்ற மற்ற சண்டியர்களுக்கு உதவி தேவைப்படும் பொழுது அவனே போய் உதவியிருக்கின்றான் என்பது வேறு. இனி இந்த கள்ளியங்காட்டுச் சம்பவத்திற்குப் பிறகு எல்லாச் சண்டியர்களையும் அவனுக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என ஆலோசனை சொன்னார். அவனும் தலையாட்டினான்.

ஊருக்கொரு சண்டியன் இல்லாது எல்லா ஊருக்கும் சேர்த்து ஒருவனே சண்டியனாக வேண்டும்!

அது சங்கானை சண்டியனாக வேண்டும்!!

அரசியலில் செல்வநாயமும், ஜி. ஜி. பொன்னம்பலமும், திருச்செல்வமும் ஒன்று சேரும் பொழுது அவர்களுக்கு அடியாக்களாக இருக்கும் சண்டியர்கள்; ஏன் ஒன்று சேரக்கூடாது! அப்படி அவர்கள் சேர்ந்த பொழுது செல்வநாயகமே தலைவர் பதவியை எடுத்தமாதிரி இந்தக் சண்டியர்கள் கூட்டத்திற்கு அவனே தலைவனாக வேண்டும்.

 

புறோக்கர் துரையின் ஆலேசனைக்கு தலையாட்டிக் கொண்டு அவரின் பொக்கற்றில் இருந்த ஒரு சிகரட்டை எடுத்து வாயில் வைக்க, துரையே அதனைப் பற்ற வைத்தார்.

எதிர்காலத்தில் ஒரு நம்பிக்கை பிறந்தது போலிருந்தது.

துரை போன பின்பும் வாட்டுக்கு வெளியே இருந்த சீமெந்துக் கட்டில் சண்டியன் தனியே இருந்து யோசித்துக் கொண்எருப்பதைக் கண்ட தவம் வந்து பக்கத்தில் இருந்தாள்.

 

என்ன யோசித்துக் கொண்டிருந்கிறியள் என அவன் கைகளை ஆதரவாக பிடித்தாள்.

இல்லை. . .செத்துப் போன சேர்மனைப் பற்றி யோசிச்சுக் கொண்டு இருக்கிறன் . .எவ்வளவு நம்பிக்கைத் துரோகி. . .

அதுதானே கடவுளாய் அவருக்கு தண்டனை கொடுத்திட்டார்.

சண்டியன் மனதுள் சிரித்தான்.

ஏன் சிரிக்கிறிங்கள்?

 

பொறுத்திருந்து பாரன். . .உலகம் எப்பிடி மாறப் போகுது எண்டு. . .

தவத்துக்கு பெரிதாய் எதுவும் விளங்கவில்லை.

அவனது காலைக்கட்டிக் கொண்டு அவன் மடிமீது தலையைச் சாய்ந்தாள்.

அவனும் அவள் தலையைத்தடவிக் கொண்டு தூரத்தில் சிவத்திருந்த வானத்தில் வீடு திரும்பும் பறவைகளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

கலைந்திருந்த முகில்களில் ஒன்றில் ஒரு வீரன் குதிரை மேல் போவது போல் இருந்தது.

வேறொன்றில் ஒரு தாய் மகனுடன் நடந்து போவது போல இருந்தது.

தண்ணீரை எந்தப் பாத்திரத்ல் விட்டால் அது அந்த பாத்திரத்தின் வடிவத்தைப் பெறுகின்றதோ. . . அதே மாதிரி மனிதர்களின் கற்பனைகளுக்கும் காற்றில் கலையும் முகிழ்களின் வடிவங்களுக்கும் எப்போதுமே பெரிய தொடர்பு உண்டு.

அதைத்தான் சண்டியன் பார்த்து வியந்து கொண்டு இருந்தான்.

தாயுடன் நடந்து போகும் மகன். . . நாளை தன் மகனும். . . அவன் தாயுடனேNயு நடந்து போகட்டும். . . . இன்னொரு சண்டியனாக அவன் வளர வேண்டாம். . . . .இன்னொரு விசம் தோய்ந்த கத்திக்கோ அல்லது மதகுகளுக்குள் ஒளித்திருந்து பாயும் சனனங்களுக்Nகுh அவன் பலியாக வேண்டாம்.

அவனை நீ தான் வளர்க்க வேண்டும். . .தன்னையும் அறியாமல் அவனான வாய் உழறிய மாதிரிச் சொன்ன பொழுது மடியில் தலை வைத்துக் கொண்டிருந்த தவம் திடுக்கிட்டு முழித்தாள்.

என்ன சொல்லுறியள் – அவள் கேட்டாள்.

என்ன சொன்னனான் – அவன் தன்னைச் சுதாகரித்தான்.

பின் இரண்டு பேருமே சிரித்தார்கள்.

வாங்கோ வாட்டுக்கை போவம். நல்லாய் இருட்டீட்டுது. குளிர்காத்தும் வீசுது, அவனைக் கூட்டிக் கொண்டு வாட்டுக்குள் போனாள்.

வாட்டுக்குள் போனாலும் சற்றுதுன் தான் பார்த்த முகிலின் கோலத்தில் இருந்து அவனால் உடனே வெளியில் வர முடியவில்லை கண்களை முழித்த பின்பும் மீண்டும் கண்ணை மூடிப்பார்க்க விரும்பும் சில கனவுகள் போல.

*

இப்பொழுது மீண்டும் சண்டியன் சுகமாகி சந்தையடிக்கு வந்து விட்டான் – எந்த மாற்றமும் இன்றி.

காலையில் மரக்கறிச் சந்தை மதியத்தில் மீன் சந்தை பின் தவறணை மத்தியானச் சாப்பாட்டுக்குப் பின்னால் சின்னத் தூக்கம் – பின் கொழும்புக்கு சாமான்கள் ஏற்றப்பட்டு லொறிகள் ஒன்றன் பின் ஒன்றாக கிளம்பும் வரை மீண்டும் சந்தையடி.

ஆனால் இப்பொழுது அவனின் இரு கூட்டாளிகள் எப்பொழுதும் அவனுடயே இருந்தார்கள்.

கார் புறோக்கர் துரை அடிக்கடி அவனை தன் காருக்குள் கூட்டி வைத்துக் கதைத்துக் கொண்டு இருந்தார்.

இவ்வளவு நாளும் கண்டும் காணது விட்ட ஊர்ச் சண்டித்தனங்களை நிற்பாட்ட வேண்டும் என்று பொலிஸ் மேலிடம் முடிவெடுத்திருப்பாக தான் அறிந்;திருப்பதாக புறோக்கர் துரை சொன்னார்.

இது அரசியல் மட்;டத்தால் கொழும்பில் இருந்து பொலிசுக்கு கொடுக்கப்படும் நெருக்கடியாம்.

என்னதான் இந்த சண்டியர்களை அவர்கள் தங்களின் வீச்சரிவாள் போல் வைத்திருந்தாலும், சேர்மனின் கொலை மூலம் அது தங்களின் கழுத்துக்கே வந்து விட்ட பொழுது. . .அந்த வீச்சரிவாள்களை தலையைச் சுற்றி பற்றைக்குள் எறிவதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. ஆனால் அதை வெளியே தெரியாதவாறு கச்சிதமாக செய்யத் தொடங்கினார்கள்.

அப்ப என்ன செய்ய வேணும் அண்ணை

நீங்கள் எல்லாரும் ஒண்டு சேர வேணும்

எப்பிடி

நான் ஒழுங்கு செய்யுறன் – நீ யோசியாதை

கார்க்காராத் துரை சொன்னது மட்;டுமில்லாமல் கரியத்திலும் இறங்கினார்.

கொட்டடி, ஆரியகுளம், கீரிமலை, சுன்னாகம், கொடிகாமம் என யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்கில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் போய் மொத்தம் பதினாறு சண்டியர்களையும் சந்தித்து அடுத்த சனிக்கிழமை சங்கானை அரசடி வைரவ கோயிலில் சந்திப்பது என ஏற்பாடு ஆகியது.

எல்லாருமே ஆளுக்கொரு கேள்விகள் அவரிடம் கேட்டார்கள். அதில் அனேகம் பேர் கேட்டது இதற்கு சண்டியனா தலைவர் என்றது தான் – ஆனால் அப்பிடியல்ல என மிக ராஜதத்திரமாக கதைத்து கள்ளியங்காட்டானைத் தவிர அனைவரையும் வரவழைத்தது துரை அண்ணையின் கெட்டித்தனம் தான்.

தனது துவக்கால் எ.ஜி.ஏ சுடப்பட்ட விடயத்தில் தன் மீது இரகசியப் பொலிசுக்கு சந்தேகக்கண் விழுந்திருக்கும் வேளையில் இப்போது இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டால் மேலும் சந்தேகம் வலுக்கும் என்ற காரணத்தால் கள்ளியங்காட்டான் வரவில்லை.

ஆனால் அதுதான் மேலும் சந்தேகத்தைக் கிளறிக் கொண்டு இருந்ததை அவன் அறியவில்லை.

சொல்லி வைத்த நேரத்துக்கு மற்றப் பதினைந்து பேரும் சங்கானைக் குளத்தடிக்குப் பக்கத்தில் இருந்த பாரில் சந்தித்துக் கொண்டார்கள்.

எல்லா மேசைகளிலும் சாராயப் போத்தல்களும், கலப்பதற்கு லங்கா லைம் சோடாவும், தொட்டுக்கொள்ள கணவாய் கறியும் இறால் பொரியலும் ஆட்டு இரத்தவறுவலும் வைக்கப்பட்டிருந்தது.

ஏதாவது பிரச்சனை வந்தாலும் தங்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அவரவர் வான்களுக்குள்ளும், கார்களுக்குள்ளும்; கத்திகளும் வாள்களும் இருந்தது வேறு கதை.

துரையண்ணைதான் கூட்டத்தை அமைதியாகத் துவக்கி வைத்தார்.

அதில் சொல்லப்பட்ட பிரதான விடயம் இவ்வளவு காலமும் அடியாக்களாக வைத்து தங்கள் காரியங்களைச் சாதித்த பட்டினசபை உறுப்பினர்கள், சேர்மன்மார்கள், மேலாக அவர்களுக்குப் பின்னால் நின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சேர்மனின் கொலைக்குப் பின்னால் இந்த அடியாக்களின் சகவாதத்தை முறித்துக் கொள்ளவும், முடிந்தால் கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளுக்குள் தூக்கிப் போடவும் முடிவு செய்துள்ளார்கள். அதற்கு அரச உதவிகளையும் நாடியிருக்கிறார்கள்.

இப்பிடியே தனித் தனியாக ஊருக்கொரு சண்டியனாக இருந்தால் தனித்தனியே எல்லோரையும் இல்லாமல் பண்ணிப் போடுவார்கள். எனவே ஒரு கூட்டாய் செயல்பட்டால் யாராலும் அசைக்க முடியாத பலத்தைப் பெறுவதுடன், அந்த அரசியல்வாதிகளை ஆட்டி வைக்கலாம்.

எல்லோரும் தலையாட்டினார்கள்.

அடுத்த கேள்வி எழுந்தது யார் தலைவர் என்று.

துரையண்ணை இந்தக் கேள்விக்கான பதிலை நன்கு தயார் பண்ணிக் வைத்திருந்தார்.

 

நான் நினைக்கிறன் இங்கு 3 பெரிய அரசாங்கப் பிரிவு இருக்கு. மூன்று பிரிவுக்கும் ஒவ்வொருவரைத் தெரிவு செய்தால் அந்த மூவரும் சோந்து கூடிக்கதைத்து எதையும் செய்யலாம். மற்றவர்கள் இவர்களுக்கு உதவி செய்யலாம். இப்பிடியே அடுத்த பட்டினசபைத் தேர்தல் வரை தொடர்ந்து இயங்கினால் அடுத்த தேர்தலுக்கு முதல் புதிய மூன்று தலைவர்களை தெரிவுசெய்யலாம்.

அவைவரும் ஆம் என ஆமோதித்தார்கள்.

அடுத்தது யார் இந்த மூவர் என்ற கேள்வி வந்த பொழுது முதலில் ஆறுகால்மடத்தானின்; பெயரும் பின்பு கீரிமலையான் பெயரும் பிரேகரிக்கப்பட்டது. மூன்றாவது யார் என ஆளுக்காள் குசுகுசுக்கத் தொடங்கிய பொழுது துரை அண்ணர் செற் பண்ணி வைத்திருந்தது போல சுன்;னாகத்தான் எழுந்து சங்கானையானின் பெயரைப் பிரேரித்தான்.

முதலில் தெரிவு செய்யப்பட்டிருந்த ஆறுகால்மடத்துத்தானுக்கும் சரி, அடுத்து தெரிவு செய்யப்பட்ட கீரிமலையானுக்கும் சரி சங்கானையான் வந்தது பெரிதாக மகிழ்ச்சி இல்லாவிட்டாலும் மரியாதையின் நிமித்தம் அனைவருக்கும் முன்னால் சங்கானையுடன் கைகுலுக்கி கொண்டார்கள்.

அத்;துடன் அன்றைய கூட்டம் இனிதே முடிவுற்றாலும் கள்ளியங்காட்டானுக்கு வேண்டப்பட்ட ஒருவன் அங்கு நடந்த அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டு இருந்தான். அதை துரை அண்ணையர் கடைக்கணணால் கண்ட பொழுதும் வெளிக்காட்டவில்லை.

எல்லோரும் போன பின்பு சண்டியன் துரையண்ணையிடம் கேட்டான்,

 

அடுத்த நாளு வருஷத்துக்குப் பின்பு நான் தொடர்ந்து இருக்க முடியாதோஎன்று.

துரை அண்ணை கொடுப்புக்குள் சிரித்தபடியே சொன்னார்,

அடுத்த தேர்;தல் வரும் பொழுது நீ மட்டும் தான் இருப்பாய்

நீ மட்டும் என்று அழுத்திச் சொன்னது சண்டியனுக்கு புரிந்தது மாதிரியும் இருந்தது.

புரியாத மாதிரியும் இருந்தது.

அதை ஆறுதலாய் சொல்லுறன். ஆனால் உன்ரை தலைக்கு நேராய் இன்னமும் ஒரு பழைய கத்தி தொங்கி கொண்டு இருக்கு. அதை எடுத்துப் புதைத்தால் தான் சேர்மன், எ. ஜி.ஏ. யின் விடயத்தில் இருந்து நீ முற்றாய் விடுபடுவாய்.

சண்டியனுக்கு ஏதும் விளங்கவில்லை.

கொஞ்சம் விளக்கமாய் சொல்லுங்கோ அண்ணை

இண்டைக்கு கல்வியங்காட்டான் வரேல்லையே தவிர. . . அவன்ரை ஆள் ஒருத்தன் வந்திருந்தவன்.

அப்பிடியோ என்றவாறு சண்டியன் அவனைப் பார்த்தான்.

ஓம். இஞ்சை நடந்தது முழுக்க அவனுக்குப் போயிருக்கும். தான் இல்லாது மூண்டு சண்டியர் முழு யாழ்ப்பாணத்துக்கும் எண்டது அவனுக்கு பொறுக்காது. அதோடை அவன்; எப்பவும் சேர்மனின்டை ஆள். . . கள்ளியங்காட்டானிட்டை பொடியன் சேர்மனின்டை பெட்டையோடை ஏதோ அப்பிடி இப்பிடி எண்டு கதையும் வந்தது. அதுபடியால் அவன் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்திலை அப்புரூவராய் மாறினால் அது உன்ரை தலைக்குத்தான் ஆபத்து

ஆளிலை காரை ஏத்த வேண்டும் எண்டு சொல்லுறிங்கNளூ

ஓம்! ஆனால் நீயாய் செய்யக்கூடாது. இப்ப நீ ஒரு குழுவிலை இருக்கிறாய். மற்ற இரண்டு பேரும் பிறகு உன்னை சந்தேகப்பட்டுத்தான் பார்ப்பாங்கள். . .அதுபடியாலை நீங்கள் மூண்டு பேரும் பிளான் பண்ணிப் போட்டு செய்யுங்கோ. . .பதினாறு பதினைந்தாய் குறையும். ஒவ்வொன்றாய் குறைக்கிற திட்டம் அவனிலையே தொடங்கட்டும்

அண்ணை நீங்கள் சுப்பர் ஆள்

துரை அண்ணை பெருமையாய் சிரித்துக் கொண்டு மீண்டும் தன்னுடைய கிளாசை சாராயத்தால் நிரப்பினார்.

தனக்குப் பக்கத்தில் இருந்த இறால் வறுவலை அவருக்கு கிட்டவாக சண்டியன் அரக்கி வைத்தான்.

*

எல்லா சாணக்கிய சம்பாஷணைகளும் முடிந்த பிறகு துரை அண்ணர் சண்டியனைக் காரில் கொண்டு வந்து அவன் வீட்டடியில் இறக்கிய பொழுது செக்கலாகி விட்டது.

தவம் வீட்டுப் படியிலேயே காத்திருந்தாள்.

ஏய் ஏன் செக்கலுக்கை இருக்கிறாய். . . .வயித்துப் பிள்ளைக்காறி. . .வீட்டு விளக்கை கொளுத்திப் போட்டு இருக்கலாம் தானே. . .பூச்சி புழு வந்தாலும் தெரியாது

பெரிய அக்கறை தான்

என்ன சலிச்சுக்கிறாய்

பின்ன என்ன. . .எனக்கு என்னவோ நீங்கள் உந்த ஆளோடை திரியுறது பயமாய்க் கிடக்கு. . . கடவுள் ஒருக்கா விசக்கத்தியிலை இருந்து காப்பாற்றீட்டார். . . நெடுக காப்பாற்றுவார் எண்டதுக்கு என்ன நிச்சயம்

சும்மா தொணதொணக்காதை. . . கடவுள் எப்பவும் காப்பாற்ற ஏலாது எண்டதுக்காகத் தான் எதிரியையே இல்லாமல் செய்யப் போறம்

கடவுளே . . .திரும்ம வெட்டுக்குத்து வெளிக்கிட்டு என்னையும் வயித்துக்கை இருக்கிறதையும்; அநாதை ஆக்கப்போறீங்களோ

சும்மா நொய்நொய் எண்டு தொனதொனக்காதை. . .நான் வேணுமெண்டோ போனனான். . . அவனவன் தான்தப்ப என்னை பலிகடாவாக்கப் பாத்தாங்கள். . .இப்ப மற்றவனை பலிகடா ஆக்கினால் தான் நான் உயிர் வாழலாம்

கடவுளே. . . உது எங்கை கொண்டு போய் விடப்போடுதோ. . .சரி இப்ப வாங்கோ சாப்பிட.. .என்றவாறு வாழையிலையை எடுத்துக் கொண்டு போட்டாள்.

என்ன இண்டைக்கு மரக்கறியா. . . அப்ப மத்தியானம் குடுத்து விட்ட பாரையை என்ன செய்தனி

உமலிலை தொடாமலே அதை பறுவதம் அக்காட்டை குடுத்து விட்டனான். பொரிச்சு வைக்கச் சொல்லி நாளைக்கு நான் வந்து எடுக்கிறன் எண்டு. . . உங்களுக்குத் தான் நாளும் கிழமையும் மறந்து போச்சு. . .

நிமிர்ந்து பார்த்தன்.

சரியாய் என்ரை கழுத்திலை நீங்கள் தாலிகட்டி ஒன்பது மாதம். . . என்ரை வயித்துக்கை இருக்கிறதுக்கும் ஒன்பது மாதம். . .அம்மாவோடை இருக்கேக்கை ஒவ்வொரு வருஷமும் துர்க்கை அம்மன் கோயிலுக்குப் போய் அம்மா சுமங்கலி பூஜை செய்யேக்கை பக்கத்திலை இருக்கிறனான்.. . .பேந்தென்ன உங்களைக் கட்டின பிறகு எல்லாம் மறந்து போனன். . . கத்திக் குத்து விழுந்து பிறகு இப்ப மாதம் பிடிக்கத் தொடங்கீட்டன். போன மாதம் நீங்கள் யாருக்கோ கார் எடுக்க எண்டு வவுனியாக்குப் போயிட்டியள். . .இண்டைக்கு காலமை மீன்கறி வேண்டாம் எண்டு சொல்ல முதலே நீங்கள் வெளிக்கீட்டுப் போயிட்டியள். . .

சண்டியனுக்கு கண்கள் கொஞ்சம் கலங்கத்தான் செய்தது.

சாப்பாடு போட்டுக் கொண்டிருந்த அவளது கரண்டியை வேண்டி ஒரு கரையில் வைத்து விட்டு கிட்டவாக அவளை இறுக்கி இழுத்து நெற்றியில் முத்தமிட்டான்.

அவளது நெற்றிக் குங்குமம் அவன் மீசையிலும் ஒட்டிக் கொண்டது.

அவனது இறுக்கிய பிடி அவளுக்கு இனிதாக இருந்தாலும் சப்பாணி போட்டிருந்த முழங்கால் அவளது வயிற்றை அழுத்தியது.

ஐயோ விடுங்கோ . .பிள்ளைக்கு நோகுதுஎன்றவாறு அவனிடம் இருந்து தன்னை விடாமல் விடுவித்துக் கொண்டாள்.

சரியான முரடுஎன மனத்துள் ஆசையாய் சொல்லியபடி. . .

நீ பாத்துக் கொண்டே இரு. . .என்ரை பிள்ளை என்னைவிட பெரிய வீரனாய் வருவான்

அவன் வீரனாய் வரவேண்டாம். . . பெரிய படிப்பு படிச்சு நல்ல பெயர் எடுத்தால் போதும் . . .

ஏன் எங்களுக்கு நல்ல பெயரில்லையோ. .

ஆனால் ஊர் உங்களைப் பார்த்து பயப்பிடுதே

அந்தப் பயம் வேணும். . .இல்லாட்டி இன்னொருத்தன் விஷம் தோய்த்து கத்தியோடை வந்திடுவான்

கடவுளே. . .முருகையா. . .எப்பதான் இந்த பயங்கள் இல்லாமல் வாழுறதோ. . தெரியாது. . ., சண்டியன் சாப்பிட்டு விட்டு எழுந்த வாழையிலையில் அவள் தனது சாப்பாட்டைப் போட்டாள்.

சண்டியன் ஒரு சிகரட்டை மூட்டிக் கொண்டு போய் வாசல் திண்ணையில் உட்கார்ந்தான்.

வெறும் சண்டியனாய் வளர்ந்த அவனுக்கு உறவு என்று ஒருத்தியைக் கொடுத்து. . .அவளின் வயிற்றில் இப்பொழுது எட்டுமாதத்தில் ஒரு சிசுவையும் கொடுத்து. . .மீண்டும் தனக்கு ஒரு உயிரையும் கொடுத்து. . . .எண்ணும் பொழுது முருகையாவை மறுதலித்து வந்த அவன் மனம், தவத்துடன் சேர்ந்து அவரை ஏற்கத்தான் வேண்டும் என்ற நிலைக்கு வந்ததை எண்ண அவனுக்கே அவன் மேல் வியப்பாய் இருந்தது.

மாற்றம் என்பது உலக நியதி. அதற்கேற்று மாறுபவர்கள் தப்பித்துக் கொள்வார்கள்.

இப்பொழுது துரையண்ணையுடன் சேர்ந்து தலைக்கு பட்டம் கட்டப் புறப்பட்டிருப்பது மாற்றமா?. . .இல்லை. . .மாற்றத்திற்கு எதிரான ஓட்டமா . . . அவனால் விடை காண முடியவில்லை.

சாப்பிட்டு முடிந்த பின் தவம் வெற்றிலைத் தட்டுடன் வந்து பக்கத்தில் இருந்தாள்.

சுண்டியன் ஆசையாக தவத்தின் வயிற்றைத் தடவினான்.

அவள் அவன் தோள் மீது சாய்ந்து வானத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

சின்னச் சண்டியன் இடப்பக்க வயிற்றில் குத்த அவளுக்கு கூச்சமாய் இருந்தது.

தொட்டுப் பாருங்கோ என்றவாறு சண்டியனின் கையை எடுத்து தன் இடுப்பின் மீது வைத்தாள்.

இருவருக்குமே அந்தப் பிஞ்சுக் காலைத் தொட்டுப் பார்ப்பது ஆனந்தமாய் இருந்தது.

*

கள்ளியங்காட்டானிடம் எத்தினை கைத்துப்பாக்கி இருக்கு

மொத்தம் எட்டு

அவை எங்கே இருக்கிறது எண்டு உனக்குத் தெரியும் தானே

ஓம்

அவை அத்தனையும் சண்டியனின் கைக்கு மாற வேண்டும்

ஓமண்ணை. . செய்யலாம். . .

உனக்கு என்ன வேண்டும.; . . .

கள்ளியங்காடான் போன பிறகு அவன்ரை இடம் வேண்டும்

சண்டியனுக்கு ஒத்துழைப்பாய் இருப்பியா

நாயாய் காலடியிலை கிடப்பன் அண்ணை

கள்ளிங்காட்டானின் வலது கையை துரை விலைபேசியதில் வெற்றி கண்டார்.

இதே வேளையில் கள்ளியங்காடானுடன் பொலிஸ் இரகசிய பேச்சு வார்த்தை நடாத்திக் கொண்டிருந்தது.

நீ கொடுத்த துப்பாக்கியால் தானே எ.ஜி.எயைச் சுட்டது

ஓம்

யார் சண்டியனுக்கு கொடுக்கச் சொன்னது

செத்துப் போன சேர்மன்

யார் துப்பாக்கியை உன்னிடம் வேண்டிக் கொண்டு போனது

சண்டியன்

யார்; துப்பாக்கியை திருப்பி கொண்டு வநு;து தந்தது

சண்டியன்

இவ்வளவையும் நீ கோர்ட்டில் பயமில்லாமல் சொல்லுவியா

சொல்லுவன். . .ஆனால் பிறகு அவனாலை என்ரை உயிருக்கு. . .

அதைப்பற்றி பயப்பிட வேண்டாம். . . சண்டியன் உள்ளுக்கை போனால் பிறகு வெளியிலை வரவே மாட்டான்

கள்ளியங்காட்டான் நிமிர்ந்து பார்த்தான்.

பயப்பிடாதே. . .அது அப்பிடித்தான் என்னுமாப் போல் இன்ஸ்பெக்டர் கண்ணசைத்தார்.

கள்ளியங்காட்டானும் ஒத்துக் கொண்டான்.

இதிலை கை எழுத்துப் போடு.

கை எழுத்துப் போடப்பட்டது.

கள்ளியங்காட்டான் வீட்டை திரும்பிக் கொண்டிருந்தான்.

பொலிஸ் இன்ஸ்பெக்டர் சண்டியனை கைது செய்வதற்காக நீதிபதியிடம் அனுமதிப் பத்திரம் வேண்டுவதற்கு விரைந்து கொண்டிருந்தார்.

கள்ளிங்காட்டான் துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருக்கும் இடத்திற்கு துரையண்ணையரும் கள்ளியங்காட்டானும் போய்பு; பார்த்தார்கள்.

அங்கு ஏழு துப்பாக்கிகள் மட்டும் இருந்தது.

மற்றது எங்கே?

அவர் தன்னுடன் எடுத்துக் கொண்டு போயிருக்க வேண்டும்

சரி ஒன்றை நீ கையில் எடு. மற்ற ஆறையும் இந்தப் பைக்குள் போடு

தூரத்தே கள்ளியங்காட்டானின் கார்; வந்து கொண்டிருந்தது.

துரை தனது காரை பற்றைக்குள் ஒழித்து வைத்துகொண்டு நின்றார்.

வலது கைக்காரன் கள்ளியங்காட்டானின் காரை மறித்தான்.

அவன் வேகத்தை குறைத்த போது ஒரு வெடிதான்.

கள்ளியங்காட்டானின் கார் தாறுமாறாய் ஒடி றோட்டோரமாய் இருந்த மரத்தில் மோதி நின்றது.

அண்ணை ஆள் அவுட்என்றவாறு செத்துப் போன கள்ளியங்காட்டானின் துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு திரும்பிய வலது கைக்காரனை நோக்கி துரையண்ணரின் வெடி தீர்ந்தது.

அவனின் கை இப்பொழுது இன்னமும் துப்பாக்கியை இறுக்கிப் பிடித்திருந்தது.

தனது துப்பாக்கியை கள்ளியங்காட்டானின் கையில் திணித்து விட்டு ஆறு துப்பாக்கிகளுடன் மட்டும் துரையண்ணர் சங்கானையை நோக்கி வேகமாக காரைச் செலுத்தினார்;.

கள்ளியங்காட்டானும் அவனது வலது கையும் ஆளை ஆள் சுட்டுக் கொண்டார்கள் என்ற செய்தி காட்டுத் தீ போல யாழ்ப்பாணம் எங்கும் பரவியது.

நீதிபதி வீட்டில் இருந்து சண்டியனைக் கைது செய்வதற்காக வாங்கிக் கொண்டு வந்து உத்தரவை பாதி வழியிலேயே இன்ஸ்பெக்டர் கிழித்துப் போட்டார்.

இடியட்என வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டார்.

யார் செய்தார்கள் என்ற கேள்விக்குறியுடன் அன்று யாழ்ப்பாணம் இரவுறக்கத்திற்கு போனது.

*

ஈழநாடு கொண்டு வந்த அதிகாலைச் செய்திடன் காலைச் சந்தை பரபரப்புடன் கூடியது.

சண்டியன் வழமையாக குந்தியிருக்கும் திண்ணையில் குந்திக் கொண்டு பேப்பரை பிரட்டிக் கொண்டு இருந்தான்.

;ஆ. . .ஊ. . .எண்டால் துவக்கை தூக்க தொடங்கீட்டாங்கள். . .நம்ம காலத்திலை அரிவாளும் கோடாலியும் தான்பலமாகக் கதைத்துக் கொண்டு வந்த ஒரு பெரியவர் சண்டியனைக் கண்டதும் தனது குரலைத் தாழ்த்திக் கொண்டு, சௌக்கியமா தம்பி. . . எனச் சுகம் விசாரித்துக் கொண்டு அப்பால் விலத்திச் சென்றார்.

சண்டியனின் கண்கள் கார்க்கார துரையண்ணையை துலாவியது.

இது துரையண்ணைதான் செய்வித்து இருப்பர். . .அல்லது செய்திருப்பர். . .

எது என்றாலும் எனக்கு சேதி சொல்ல வந்திருப்பர்.

ஆனால் அவரை அங்கு காணவேயில்லை.

மனம் பதட்டப்பட்டது.

கல்லியங்காட்டானை சிலவேளை ஆறுகால்மடத்தானோ. . .கீரிமலையானோ போட்டுத்தள்ளிருக்காலாமோ. . .என எண்ணி முடிப்பதற்கிடையில் அவர்கள் இருவரும் நேர் எதிரில் இருந்த செல்லத்துரையிண்ணையின் கடையில் இருந்து தேனீர்குடித்துக் கொண்டு தன்னைக் கண்காணித்துக் கொண்டு இருப்பதை சண்டியன் கண்டுவிட்டான்.

இவன்கள் ஏன் இங்கே. . .என்ற நினைப்புடன் எழுந்து அவர்களிடம் போனான்.

அவர்கள் இருவரும் தம்மை சுதாகரித்துக் கொண்டார்கள்.

கிட்டப் போன சண்டியன். . . இதிலை எதுவும் வேண்டாம். . . மீன் சந்தையடிக்கு போறன். . பின்னாலை வாங்கோ, சொல்லிவிட்டுப் போய் மீன் சந்தையில் மீன்பரப்பி விற்கும் மேடையில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஒரு சிகரட்டை மூட்டினான்.

என்ன சண்டியா. . .மொத்த பழத்தையும நீயே திண்டிடலாம் என்று முடிவுகட்டீட்டியா?  

என்ன அண்ணை சொல்லுறியள்

கள்ளியங்காட்டானை நீயே போட்டுட்டு எட்டு துப்பாக்கியையும் எடுத்திட்டியா?

என்ன அண்ணை விசர்கதை கதைக்கிறிங்கள். . .நேற்று முழுக்க நான் எங்கையும் போகேல்லை. . . தவத்துக்கு இடப்பக்கத்திலை ஒரே குத்து. . .இன்னும் ஒரு மாதம் இருக்கு. . .குறைமாதப்பிள்ளை பிறந்திடுமோ எண்டு பயந்து கொண்டு அவளுக்கு பக்கத்திலேயே இருந்தனான்

நம்ம சொல்லுறியா

பின்னே. .. நான் பொய் சொல்லுறனா. . .அண்ணை நான் சண்டியன் மட்டும் தான். எனக்கு பொய் சொல்லத் தெரியாது. . பிடிக்காட்டி போட்டுத்தள்ளி விட்டுப் போய்க் கொண்டு இருப்பன். . .

போட்டுத் தள்ளுறத்துக்கு தான் அவனிட்டை எட்டுத் துப்பாக்கி இருந்தது.. .இப்ப அத்தினையும் யாரிட்டை போயிருக்கோ. . .

என்ன கணக்கு பாக்கிறியங்கள். . .கீரிமலையும் ஆறுகால்மடமும் சேர்ந்து. . .

அவனிட்டை இருந்தது எட்டு. . . சாகேக்கை அவன்ரை கையிலை ஒண்டு இருந்திருக்குது. . . அவன்ரை மற்றவனிட்டை கையிலை ஒண்டு இருந்திருக்குது. ஆக மொத்தம் ஆறு கை மாறி இருக்குது. . . இல்லை அவன் ஒழித்து வைச்ச ஏதோ ஒரு இடத்திலை இருக்க வேணும். . .அவன்டை காரியங்கள் முடிய மகனைத் தூக்கி கொண்டு தாயிடம் கேட்டாள் நிச்சயம் அது கிடைக்கும்.. .

ஊஹ{ம். . .சங்கானைக்கு மூளை வேலை செய்யுதுதான்கீரிமலையும் ஆறுகால்மடமும் ஒத்துக் கொண்டது.

சண்டியன் சிரித்தான்.

எப்பிடியும் நாங்கள் மூண்டு பேருமாய் அதைத் தேடுவம். . .சண்டியன் சொல்லுற மாதிரி. . .ஆறு கைத்துபு;பாக்கிகளையும் ஆளுக்கு இரண்டு இரண்டாய் பிரிப்பம்

மீன் சந்தைப் பக்கம் ஒன்றிரண்டு மீன் வான்கள் வரத்;தொடங்கியது.

மூவரும் மெதுவாக அந்த இடத்தை விட்டுக் கலைந்தார்கள்.

சண்டியனின் கண்கள் துரையண்ணையைத் தேடியது.

மீன் சந்தை கூடி பின் அது கலையும் வரை அவரைக் காணவில்லை.

அவன் மனம் மேலும் சஞ்சலப்பட்டது.

ஏதாவது மாட்டிக் கொண்டாரோஎன மனம் பயப்பிட்டாலும், மூன்று வருஷத்தில் இந்தக் காரில் இன்ன பிழைவரும் எனத் தெரிந்து அதற்கேற்றமாதிரி கார்களைத் தரகு செய்யும் துரையண்ணர் இப்படிப்பட்ட விடயங்களில் மாட்டிக் கொள்ள மாட்டார்என தன் பயந்த மனதை தானே சமாதானம் செய்து கொண்டிருந்தான்.

சரி பின்னேரமும் சந்தையடிக்கு வராவிட்டால் அவரின் வீட்டடிக்குப் போவோம் என நினைத்துக் கொண்டு மத்தியானம் சாப்பிட தனது வீட்டுக்கு போனான்.

அங்கு போன பொழுது வீட்டின் வாசலில் துரையண்ணை சிரித்தபடியே இருந்தார் – தவம் ஊற்றிக் கொடுத்த தேனீரைக் கையில் வைத்தபடியே.

என்னண்ணை நான் சரியாய் பயந்து. .என்று தொடங்க தவம் அஙகு வந்ததால் அதை அப்படியே நிற்பாட்டினான்.

என்னடி சாப்பாடு கொடுக்காமல் இந்த வெயிலுக்கை வந்த மனுஷனுக்கு தேத்தண்ணி குடுத்திருகு;கிறாய்பேச்சை மாத்தினான்.

நீங்களும் வர ஒன்றாய் சாப்பிடுவம் எண்டு அவர்தான் சொன்னவர். . .அப்பிடித் தானே துரையண்ணை

ஏனடா. . வாயோடையும் வயித்தோடையும் இருக்கிற பிள்ளையை பேசுறாய். . .நீ போய் மூண்டு பேருக்கும் போடம்மா

சண்டித்தனங்களை சந்தையோடை மூட்டை கட்டி வைச்சுப் போட்டு வரச்சொல்லுங்கோ அண்ணை

சண்டியன் சிரித்தான்.

ரொம்பத் தான் வாய்

அப்பிடியென்டால் நீ வாயில்லாத ஒரு பொம்பிளையைத் தான் செய்திருக்க வேணும்

இல்லை அண்ணை அவள் தெய்வம்மெதுவாய் சொன்னான்.

தவம் இரண்டு பேருக்கும் சாப்பாடு பரிமாறிக கொண்;டிருக்கும் பொழுது வாசலில் வித்தியாசமான ஒரு வாகனத்தின் சத்தம் கேட்டது.

தவம் குசினி யன்னலினூடு எட்டிப் பார்த்தாள்.

பொலிஸ்இன்ஸ்பெக்டரும் இன்னும் மூன்று நான்கு பொலிஸ்காரரும்.

தவத்துக்கு திக்¨’என்றது.

இங்கை இரண்டு பேரும் என்ன செய்கிறிங்கள்

இன்ஸ்பெக்டர் ஜோக் அடிக்கிறிங்கள். . சாப்பிட்டுக் கொண்டிருக்கிறம்

நக்கல்.. . . துரை நீ நேற்று எங்கை இருந்தனீ

காரை கராஜ்ஜிலை விட்டுட்டு மனேகரா தியேட்டரிலை படம் பார்த்துக் கொண்டு இருந்தனான். . .இங்கை ரிக்கற் பாத்தீங்களா. . .

படத்துக்கு பிறகு எங்கை போனனீ

தவம். . .கொஞ்சம் நீ அங்காலை போ அம்மா. . . படம் முடிய சின்ன சரோஜா வீட்டை போனனான். . .நீங்களும் அடிக்கடி வாறனீங்களாமே

இன்ஸ்பெக்டரின் முகம் சிவந்தது.

கள்ளியங்காட்டான் செத்திட்டான் தெரியுமா

பார்த்தன். . .எல்லாப் பேப்;பரிலையும் அந்தக் கறுமம் தான்

யார் செய்து இருப்பாங்கள் எண்டு நினைக்கிறாய்

என்ன இன்ஸ்பெக்டர் பகிடி விடுகீங்கள். . . காரிலை எங்கை என்ன சத்தம் வருது எண்டு சொல்லுங்கோ. . .பிழையை உடனை சொல்லுறன். . .இது உங்கடை வேலையை என்னட்டை கேட்கிறியள்

துரையரை விசாரிக்கும் முழு நேரமும் இன்ஸ்பெக்டரின் கண்கள் சண்டியன் மேலேயே இருந்திருந்தது.

சண்டியனின் முகத்தில் எந்த அசுமாத்தத்தையும் காணவில்லை.

நீ நேற்று எங்கை இருந்தனிகேள்வி சண்டியனின் பக்கம் திரும்பியது.

அவர் நேற்று முழுக்கு என்னோடை தான் ஆஸ்பத்திரியிலை நிண்டவர். . .இராத்திரியும் இங்கை தான் படுத்திருந்தவர். . .போதுமா. . .

தவம் ஆவேசப்பட்டு குசினியால் வெளியே வந்து பதில் சொன்னாள்.

ஏ. . உன்னை யார் கேட்டது. . .நீ யார்

பெண்டாட்டி

பேப்பரி இருக்கா

பேப்பர் என்ன பேப்பர். . இது இருக்கு. . தாலியைக் காட்டினாள்

ரைட்ஸக்குப் போனால் எல்லாரும் உதைத்தான் எல்லாரும் காட்டுறாளாவை

தவம் விறைத்துப் போனாள்.

விம்மி வந்த கண்ணீரை அடக்க முடியாமல் குசினிக்குள் ஓடினாள்.

இன்ஸ்பெக்டர் விசாரிக்க வந்தால் மரியாதையாய் விசாரிச்சுப் போட்டு போங்கோ. வீணாய் தேவையில்லாமல் கதையாதையுங்கோ

சண்டியன் கறுவினான்.

காலமை எதுக்காக ஆறுகால்மடத்தானும். . .கீரிமலையானும் உன்னட்டை வந்தவங்கள். . .எதுக்காக மீன் கடைக்கு போயிருந்து கதைச்சனிங்கள். . .அப்பிடி தனிச்சிருந்து கதைக்க என்ன இருக்கு

சண்டியன் தான் பொறிக்குள் மாட்டப்பட்டு விட்டதாக உணர்ந்தான்.

பொலிஸ் என்னைக் கண்காணித்திருக்குஅவனுக்கு உறைத்தது.

கார் விசயமாய் துரையண்ணையிட்டை வந்தவங்கள். . . அவரைக் காணததாலை என்னோடை இருந்து கதைச்சவங்கள். . . சந்தையடியிலை நிய்டு கதைக்க சனம் வேடிக்கை பார்த்ததுகள். . .அதுதான் ஒதுக்குப் புறமாய் போய்க் கதைந்தனாங்கள்

இன்ஸ்பெக்டர் ஒரு தரம் மூச்சை உள்ளே இருத்து வெளியே விட்டுக் கொண்டார்.

நீங்கள் இரண்டு பேரும் கேட்டுக் கொள்ளுங்கோ. . .ஏ.ஜி.ஏ, சேர்மன், இப்ப கள்ளியங்;காட்டான். . இந்த மூன்று கேஸையும் ஒழுங்காக முடிக்காமல் நான் கொழும்புக்கு போகமாட்டன். . .அப்பிடிப் போனால் நான் ஒரு நல்ல கறுவாக்காட்டானுக்கு பிறக்கேல்லை எண்டு அர்த்தம்

இன்ஸ்பெக்டர் சொல்லி விட்டுப் போய்விட்ட மறு கணம் குசினியில் இருந்து எழுந்த தவத்தின் அவல அழுகுரல் சத்தம் சண்டியனையும் துரைணரையும் பதற வைத்தது.

உனக்கு கழுத்தை நீட்டினத்துக்கு எனக்கு நல்ல பெயர் வேண்டித் தந்திட்டாய். . .என்னை எங்கையாவது கொண்டு போய் கிணத்துக்கையே குளத்துக்கையோ தள்ளி விடு. . .உனக்கேன் மனுஷி. . பிள்ளை குட்டியள். .. .போ. . .போ .போய் இன்னும் நாலைஞ்சு பேரைக் கொண்டு போட்டு வா   

சண்டியனுக்கு உடல் எல்லாம் பற்றி எரிந்தது. . . .

கண்கள் எல்லாம் சிவந்தது. . . .

அண்ணை காரை எடு

தவம் எவ்வளவோ மறித்தப் பார்த்தாள்.

அவன் கேட்கவில்லை.

துரையின் கார் பாருக்குள் நுழைந்தது.

முதலிலை உவன் இன்ஸ்பெக்டரை போடவேணும். . .தவத்துக்கு பிள்ளை பிறக்க முதல் உவனைப் போடவேணும். . .எனக்கு இப்பவே ஒரு துவக்கு வேணும்

துரை அண்ணர் நிமிர்ந்து சண்டியனின் கண்களுக்குள் பார்த்தார்.

சண்டியனுக்கு பார்வையின் அர்த்தம் புரியவில்லை.

துரை அண்ணர் அமதுசாக புன்னகை புரிந்தார்.

உனக்கு ஒரு துவக்கு மட்டும் இல்லை. . .ஆறு துவக்கு வைச்சிருக்கிறன்

அண்ணை

அவனை மட்டும் நேற்றுப் போடாட்டி அவன் அப்புறூவராய் மாறினதாலை நீ இப்ப உள்ளுக்கை. . . அதுதான் நானே. . .நேற்று. . .

சண்டியன் துரையண்ணையின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதான்.

கட்டாயம் காரமை பொலிஸ் சந்தேக்கை வரும எண்டு தான் நான் வரேல்லை. . .ஆனால் நீ மோட்டுத் தனமாய். . .கீரிமலையானோடையும். . .ஆறுகால் மடத்தானோடையும் மீன்கடைக்கேக்கை வைச்சு வட்ட மேசை மகாநாடு நடாத்தி இருக்கிறாய் . . .இப்ப நேர இன்ஸ்பெக்கடர் அவன்களிட்டடை தான் போவன்

அண்ணை அவன்கள் தங்களுக்கு கட்டாயம் ஆளுக்கு இரண்டு துப்பாக்கி தரச்சொல்லிப் போட்டு போறான்கள். . .

குடுப்பம். . . குடுப்பம். . . .ஆளுக்கு இரண்டு இரண்டு ரவையள் குடும்பம். . .நான் கூப்பிடுறன். . நீ குடு . . .

அண்ணை. . .

வேறு வழியில்லை. . .

ஏ.ஜி.ஏயிலை தொடங்கினாய் . . இந்த இரண்டோடை ஐந்தாகும். . . .

இல்லை அண்ணை. . .இன்ஸ்பெக்டரோடை சேர்ந்து ஆறு

துரையண்ணை சிரித்தார்.

முதல் ஐந்தும் நீ விரும்பியோ விரும்பாமலோ நடக்கிற அரசியல் கொலைகள்

ஆறாவது தவத்துக்கு நான் செய்யுற. . . அந்த கறுவாக்காட்டான் அவளை வேசி எண்டு சொல்லிப் போட்டான் அண்ணை. . .ஒரு நாள் நான் அவளுக்கு கை நீட்டினது இல்லை. . ஒரு சொல்லு சொல்லுச் சொல்லுறதில்லை. . . இப்பிடி அழுது நான் கண்டதில்லை

துரையண்ணர் சாராயத்தை சண்டியனின் கிளாஸில் ஊற்றிக் கொண்டிருந்தார்.

தவம் இன்னமும் விம்மியபடியே சண்டியனின் வருகைக்காக வாசல் கதவைத் திறந்து விட்டு முன் விறாந்தையில் படுத்துக் கொண்டிருந்தவள அயர்ந்த விட்டாள்;.

எங்கேயோ ஒரு சாமக்கோழி கூவியது.

துரையண்ணை வீட்டுக்குள் வராமல் அவனை வீதியில் இறக்கி விட்டு காரை எடுத்தக் கொண்டு போகும் சத்தமும் வெளிச்சமும் தெரிந்தது.

சண்டியன் தட்டு தடுமாறி வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தான்.

தவத்தை எழுப்பாது அவளின் காலடியில் படுத்தக் கொண்டான்.

என்னை மன்னிச்சுக் கொள்ளடி. . .உன்னை கட்டி அசிக்கம் பண்ணியிருக்க கூடாதடி. . .கொஞ்சம் வெறி. . கொஞ்சம் சுயநினைவு. . .அலட்டிக் கொண்டு கிடந்தான்.

அவனின் அசுமாத்தம் கேட்டு எழுந்த தவத்தற்கு அவனின் நிலை பரிதாபமாயிருந்தது.

அவனை தன் மார்புடன் இறுக்க கட்டி அணைத்துக் கொண்டாள்.

*

கள்ளியங்காட்டானின் மரணத்திற்கு பின் சண்டியனுக்கு சந்தையடியில் கொஞ்சம் மரியாதையும், மரியாதை கலந்த பயமும் அதிகரித்திருந்தது.

எல்லோரும் சண்டியன் தான் செய்திருக்க வேண்டும் என நம்பினார்கள்.

யாரின் தேர்தலின் வெற்றிக்கு பாடுபட்டு கத்திக் குத்து வேண்டினானோ. . . பழைய சேர்மனை போட்டுத் தள்ளியதால் யார் புதிய சேர்மனாக அவதாரம் எடுத்தாரோ. . . தன் சால்வையில் எந்தக் கறையும் படக்கூடாது என்பதற்காக ஆஸ்பத்திரியில் கூட அவனைப் போய்ப் பார்க்காத அதே அரசியல்வாதி. . . இப்பொழுதெல்லாம் காரில் சந்தையடியை தாண்டும் பொழுது சண்டியனைக் கண்டால் கையை அசைத்து விட்டுப் போகத் தொடங்கினார்.

சண்டியனுக்கு அரசியல் தெரியாது.

உவங்களுக்காக ராத்திரியும் பகலும் போய்ப் பாடுபட்டமே. . .சண்டியன் சலித்தக் கொள்ளும் பொழுது,

பொறு சண்டியா.. .உனக்கான காலம் வரும். . .கார்க்கார துரையண்ணை தைரியம் சொல்லுவார்.

எனக்கு அது எல்லாம் வேண்டாம் அண்ணை. . . இன்ஸ்பெக்டரை போட வேண்டும். . .அதுவும் என்ரை கையாளாலை போட வேண்டும். . .தவத்துக்கு வயிற்றுவலி வாறத்துக்கிடையிலை அவனைப் போட வேண்டும். . .அதுக்கு பிறகு எனக்கு எதுவும் வேண்டாம் அண்ணை. . .நீங்கள் சொல்லுற பெரிய சண்டியன் பட்டம் எதுவும் வேண்டாம் அண்ணை

இன்ஸ்பெக்டர் தவத்தைக் கேட்ட கேள்வி அவனை எவ்வளவு தூரம் தாக்கிப் போட்டது என்பதை துரையண்ணருக்கு விளங்க கூடியதாய் இருந்தது.

பொறு சண்டியா. . .எனக்கு ஒரு கிழமை தா. . .எங்கடை பொடியளை விட்டு எங்கை போறார். . .எங்கை வாறார் எண்டு கண்காணிப்பம்

ஆனால் அண்ணை. . . கள்ளியங்காட்டானை முடிச்சமாதிரி நீங்கள் இதைச் செய்து போடாதையுங்கோ. . .இவனை நான் தான் போடவேண்டும். . .

துரையண்ணை ஓம் எனத் தலையாட்டினார்;.

துரையண்ணையின் உளவுப்படை இன்ஸ்பெக்டரை தொடரத் தொடங்கியது.

இன்ஸ்பெக்டர் இப்பொழுது ஏதாவது வழியில் கீரிமலையானையும்; ஆறுகால் மடத்தானையும் தன் வசம் விழுத்தி சண்டியனுக்கு எதிராக திசை திருப்ப சமயம் பார்த்துக்கொண்டிருந்தார்.

மேலிடத்தில் தொடர்பு கொண்டார்.

முடிந்தால் இருவருக்கும் ஆயுதம் கொடுக்கும் படி கட்டளை வந்தது.

ஆளை ஆள் அடித்துக் கொண்டு சாகட்டும் என்று

இந்த சதுரங்க ஆட்டத்தில் யாரை யார் வெட்டி வீழ்வது. . .யாருக்கு யார் செக் வைப்பது என்ற போர் தொடங்கியது.

துரையண்ணையின் சாதுரியம் ஒவ்வொரு தடவையும் சண்டியனைக் காப்பாற்றிக் கொண்டு வந்தது.

முதலில் இன்ஸ்பெக்டரா. . .இல்லை கீரிமலையானும் ஆறுகால் மடத்தானுமா. .

காலம் செல்ல செல்ல தவத்திற்கு வயிற்று வலி தொடங்கும் நாளும் கிட்டியது.

சண்டியனுக்கு நெஞ்சில் வலி ஏறிக்கொண்டு வந்தது.

வேலுபு;பிள்ளை பரியாரியார் கையைப் பிடித்து பார்த்து விட்டு, டே சண்டியா. . மூண்டு நாலு நாள் தான் இருக்கு. . .அவளை விட்டுட்டு எங்கையும் போயிடாதைஎச்சரித்து விட்டுப் போனார்.

அடுத்தநாள் துரையண்ணை அவசர அவசரமாய் சண்டியனைச் சந்தித்தார்.

இண்டைக்கு இரவு இன்ஸ்பெக்டர் கொழும்புக்கு ஜீப்பில் போகப் போறார்

அண்ணை தவத்துக்கு வயித்து வலி

நீ கிட்டவாய் இருந்தாலும் பிறக்கும். . இல்லாட்டியும் பிறக்கும்.. .ஆனால் பிறக்கும் பொழுது அவன் இந்த உலகத்திலை இருக்க கூடாது என நீ நினைத்தால் நீ இங்கை இருக்க கூடாது

சண்டியன் மௌனமாக தலையாட்டினான்.

சண்டியன் பகல் முழுக்க பதட்டத்துடன் திரிந்தான். . .

யாரையோ கட்டி நல்லாய் இருந்திருக்க வேண்டியவள் . . .கையையும் வெட்டி. . . கழுத்pலை தாலியையும் கட்டி. . .எப்ப அந்த தாலி அறும் எண்டு தெரியாமல் எனக்காக விரதங்கள் பிடித்துக் கொண்டு. . .கடைசியிலை வேசி எண்ட ஒ ருபட்டத்தை அந்த கறுவாக்காடனிடம் வேண்டி. . .இப்ப வயிற்றுவலி வரேக்கை பக்கத்திலும் இருக்காமல். . . .

தன்னை நினைக்கவே அவனுக்கு கொஞ்சம் அசிங்கமாய் பட்டது.

ஆனால் பலி வேண்டும் உணர்வு அவனை வென்று கொண்டு இருந்தது.

தவம் கொஞ்;சம் அயர்து தூங்கிக் கொண்டு இருக்கும் போது மெதுவாக திண்ணையில் இருந்து வீதிக்கு வந்தான்.

அங்கே துரை அண்ணை காத்திருந்தார்.

கட்டாயம் முறிகண்டியிலை வாகனத்தை நிற்பாட்டுவான். . .அப்ப சீனியன் வந்து எங்களுக்கு தகவல் சொல்லுவான்;. . .முதலாங்கட்டையில் கயிறைப் போட வேண்டியது தான். . . .அவன் வெளிக்கிடும் பொழுது அவனுக்கு முன்;னாலை மொட்டையண்டை மோட்டர் சைக்கிள் வெளிக்கிடும். மோட்டார் சைக்கிள் பாஸ் பண்ண நான் கயிறை இழுத்து இறுக்குவன். அதுக்கு பிறகு உன்ரை பாடு. . .அவன்ரை பாடு

சண்டியனுக்கு விளங்கி விட்டது.

அப்ப பின்னாலை வாற. . .முன்னாலை வாற வாகனங்கள். . .

அதைப்பற்றி நீ கவலைப்படாதை.

பின்னாலை வாறதுகளை றோட்டிலை யானை என்று சீனியன் நிற்பாட்டுவான். முன்னாலை வாறதை யானைக்கதை சொல்லி மொட்டையன் நிற்பாட்டுவான். உனக்கு ஐந்து நிமிடம் தான் இருக்கும்

சரி அண்ணை

முறிகண்டிக்கு முதலில் வந்தவுடன் சண்டியன் கால், முகம் எல்லாம் நன்கு கழுவி தவத்தை நினைத்து கற்பூரமும் கொளுத்தி தேங்காயும் உடைத்தான்.

சுற்றாடல் முழுக்க பரவியிருந்த கற்பூர மணமும், கட்டையில் தேய்த்து பூசும் சந்தன மணமும் அவனுக்கு ஏதோ ஒரு நிம்மதியை கொடுத்துக் கொண்டிருந்தது.

கொலை செய்யப் போகின்றேன் என்ற எந்தப் பதட்டமும் அவனுக்குள் இருக்கவில்லை. மாறாக தவத்திற்காக ஒரு சங்காரம் செய்யப் போகின்றோம் உன்ற ஓர்மம் தான் இருந்தது.

சாப்பிடுவம் வாவன்முறிகண்டியில் இருந்த கடைக்கு துரையண்ணர் கூப்பிட்டார்.

இல்லை அண்ணை. . .எல்லாம் முடியட்டும்

சரி. .சோடா வேண்டிக் கொண்டு வாறன்

துரையண்ணை சோடா வேண்டிக் கொண்டு சீனியனுக்கு சைகை கொடுத்த விட்டு காரை ஸ்டாட் சௌ;தார்.

கார் முதலாம் கடடையடியில் போய் பற்றைக்குள் மறைந்து நின்றது.

வெளியே கயிறும் நடுவே பலமான கம்பியும் கொண்ட கயி;ற்றை றோட்டின் ஒரு கரையில் இருந்த மரத்தில் துரையண்ணை கட்டினார். றோட்டின் குறுக்காக கயிறைப் போட்டு மறுகரையில் இருந்த கொப்புகளுக்குக்கு நடுவால் அதனை இழுக்க கூடியதாக செற் பண்ணினார்.

சண்டியன் பார்த்துக் கொண்டு கல்லில் உட்கார்ந்திருந்தான்

காருக்குள்ளை துவக்கு இருக்கு. . .வாள் இருக்கு . . .எது வேண்டும் எண்டாலும் எடுத்துக் கொள். . .ஆனால் ஐஞ்சு நிமிடம் தான்

சண்டியன் ஓம் எனத் தலையாட்டினான்.

அந்த தலையாட்டலில் அவன் விபரமாய் இருக்கிறான் எனத் தெரிந்தது.

இருட்டினுள் றோட்டால் கார்களும், கொழும்பு லொறிகளும், பஸ்களும் போய்க் கொண்டு இருந்தது.

இருவருமே சீனியனின் சமிக்கைக்காக காத்திருந்தார்கள்.

எதிர்பார்த்திருந்த நேரத்திற்கு முன்பாகவே சீனியன் வந்து சமிக்கை கொடுத்து விட்டுத் திரும்பினான்.

துரையண்ணர் கயிறை இருக்க காத்திருந்தார்.

சண்டியன் ஒய்யாரமாக மரத்தடியில் சாய்ந்திருந்தான்.

துரையண்ணருக்கு வியப்பாக இருந்தது.;

அடுத்து ஐந்து நிமிடத்துள் மொட்டையனின் சமிக்கை வெளிச்சத்துடன் மோட்டார் சைக்கிள் வந்தது.

பின்னால் ஜீப்.

மோட்டா சைக்கிள் அவர்களைத் தாண்டியதும் துரையண்ணை கயிற்றை விட்டார்.

வேகமாக வந்த ஜீப் கயிற்றில் இழுபட்டு சுழன்றபடி கயிறு கட்டியிருந்;த மரத்துக்கு பக்கத்தில் இருந்த பற்றையினுள் ஜீப் புகுந்து கொண்டது.

இன்ஸ்பெக்டர் தன்னைச் சுதாகரிக்க முதல் சண்டியனின் கைப்பிடியுள் இன்ஸ்பெக்டரின் கழுத்து.

தவத்தைப் பார்த்து என்ன கேட்டாய். . .கறுவாகாட்டு நாயே

சொல்லியபடி பின்னங்கழுத்தில் ஒரு அடிதான்.

கழுத்து தொங்கியது.

போடண்ணை கழுத்திலை கயித்தை

இது போன்று சண்டியனின் குரலை என்றுமே துரையண்ணை கேட்டதில்லை.

காருக்குள் இருந்த தடக்கயிற்றை எடுத்து. . .மரத்தில் ஒரே தூக்கு. . .

இன்ஸ்பெக்டரின் இடுப்பில் இருந்த துப்பாக்கியையும், ஜீபஇபில் இருந்த சண்டியன் பற்றிய அனைத்து பைல்களையும் எடுத்துக் கொண்டு காரினுள் ஓடிப்போய் ஏறிக் கொண்டான்.

மொத்தம் நாலரை நிமிடங்கள்.

கார் மீண்டும் முருகண்டியை நோக்கி. . .

சீனியனும்.. .மொட்டையனும் முன்னால் போய்க் கொண்டு இருந்தார்கள். . .

வா கோயிலடியிலை தேத்தண்ணி குடிச்சுட்டு போவம்

வேண்டாம் அண்ணை. . .கொலை செய்துட்டு போறன். . .கோயிலுக்கு வேண்டாம்

துரையண்ணருக்கு கண்கள் பனித்தது.

நீ மனுஷப் பிறவி தாண்டா

கார் வீட்டைநோக்கி விரைந்து கொண்டிருந்தது தவத்திற்கு எப்பிடியோ என்ற தவிப்பில்.

அதிகாலையாகும் பொழுது கார் ஊருக்குள் நுழைந்தது.

வீட்டு வாசலில் அவனை இறக்கி விட்டு துரையண்ணை போய்விட்டார்.

கட்டாயம் தவம் நிதி;திரையால் எழுந்து என்னைத் தேடியிருப்பாள். . .

 

வீட்டுக்குள் போகும் பொழுது நன்றாக வேண்டிக் கொள்ள வேண்டும் என்று என்ற நிபை;ப்புடன் வீட்டுக்குள் போனான்.

தவத்தைக் காணவில்லை.

அவனுக்குகு திக்என்றது.

பின்வளவுக்குள் போய்ப் பார்த்தான்.

அங்கும் காணவில்லை.

அவன் வீட்டுக்கும் வெளியிலும் குரல் கொடுப்பதைக் கேட்டு பக்கத்து வீட்டு பறுவதம்,

அண்ணை. . .தவம் அக்காக்கு இராத்திரி வயித்துக் குத்து தொடங்கீட்டுது. . .நீயும் இல்லையாம். . .ஐயா தான் சைக்கிளிலை வைச்சு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனவர். . .ஐயா இன்னும் வரேல்லையாம் எண்டுட்டு அம்மா காலமை எழும்பி போட்டுதுசொல்லி முடிக்கு முதல் சண்டியன் தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓடினான்.

சுற்றிப் போனால் கொஞ்ச நேரம் போகும் என்பதால் கரடு முரடு என்றாலும் கல்லு றோட்டாலும் பனைவெளிக்குள்ளாலும் சைக்கிள் பறந்தது.

மனம் அடித்துக் கொண்டது தனியே அவளை விட்டு விட்டுப் போய்விட்டோம் என்று.

ஆனாலும் அதே மனம் குகூகலித்தது அவளை கண்கலக்க வைத்தளின் கண்களை மூடியாயிற்று என்று.

ஆஸ்பத்திரிக்கு வெளியே இருந்த வாங்கில் இருந்து தேனீர் குடித்தக் கொண்டிருந்த சின்னராசா அண்ணைக்கு சண்டியன் தூர சைக்கிளில் வேகமாக வருவது தெரிந்தது.

றோட்டின் கரைக்கு வந்து சண்டினுக்கு கை காட்டினார்.

எப்பிடி இருக்கு அண்ணை

ராத்திரி முழக்க குத்து. . .குழறிக் கொண்டு இருந்தவள். . .உன்னைக் காணேல்லை எண்டும் அழுது கொண்டு இருந்தவள். . .இப்ப தான் என்ரை மனுஷி வர அவளை பக்கத்திலை விட்டுட்டு நான் இதிலை தேத்தண்ணி குடிக்கு வந்தனான்

சண்டியன் ஆஸ்பத்திரியுள் போனான்.

லேபர் அறைக்கு முன்னால் சின்னக்கிளியக்கா நின்று கொண்டிருந்தா.

உள்ளே தவம் குழறுவது கேட்டது.

 

லேபர் அறையின் கதவை மெதுவாக நீக்கி, தவம் தம்பி இஞ்சை வந்திட்டார் . . நீ ஒண்டுக்கும் கவலைப்படாதைஎன்று சொல்லி முடிக்கு முதல் தவத்தின் நீண்ட ஒரு அழுகைச் சத்தமும். . .அதைத் தொடர்ந்து ஒரு குட்டிச் சண்டியனின் குரலும் வெளியில் கேட்டது.

சண்டியன் அப்படியே தூணுடன் சாய்ந்து ஆஸபத்திரியின் விறாந்தையில் கீழே இருந்தான்.

அவன் கண்களால் ஓடிக்கொண்டு இருந்தது.

இப்பிடி நிறைமாதத்திலை இருக்கிற பிள்ளையை தனிய விட்டுட்டு போகலாமோ. . .எங்களிட்டை ஆவது ஒரு சொல்லு சொல்லிப் போட்டுப் போயிருக்கலாமே. . . அவளுக்கு யாரிட்டை உதவி இருக்கு. . .தாயோ. . .தேப்பனோ இருக்கினம் . . .

இப்பவும் கண்டறியாத ரோஷப்பூலலை வைச்சுக் கொண்டிருக்குதுகள்

சின்னக் கிளியக்கா கதைத்துக் கொண்டு இருக்கு நேர்ஸ் வந்து உள்ளே போய்ப் பார்க்கும்படி கூறிவிட்டுச் சென்றாள்.

சண்டியன் ஏதோ ஒரு தயக்கத்துடன் மெல்ல எழுந்தான்.

பின்னால் வந்த சின்னராசா அண்ணை தானும் அறையுள் போக வெளிக்கிட, ஏய். . .எங்கை போறாய். . .புருஷன்காரன் முதன் முதலிலை மனுஷி பிள்ளையைப் பார்க்க போறான். . . .இரத்த சீலையையே ஒழுங்காய் எடுத்து கரையிலை போட்டிருக்கிற மாட்டாளவை நீ எங்கை போறாய். . .பொம்பிளை நானே வெளியிலை நிக்கிறன். . .பொறு வாட்டுக்கு கொண்டுவரட்டும் இரண்டு பேருமாய் போய்;ப் பார்ப்பம்சின்னக்கிளியக்கா தடுத்தா.

தவத்தின் நெஞ்சில் குட்டிச் சண்டியன் குப்புறமாக கிடத்தி வைக்கப்பட்டிருந்தான்.

தவம் களைப்பில் கண்களை மூடியபடியே படுத்திருந்தாள் – ஆனாலும் கை பிள்ளையை கவனமாக அணைத்திருந்தது.

சண்டியன் பக்கத்தில் வரும் அசுமாத்தத்தை தன் காலடிச்சத்தத்தை வைத்தே அறிந்து கொண்டாள்.

சண்டியன் மெதுவாக தலையைத் தடவினான்.

கண்ணைத் திறந்து பார்த்தாள்.

வந்திட்டியாஎன்று மெதுவாக கேட்க முதலே இவ்வளவு நேரமும் தன்னைத் தனியே தவிக்க விட்டு விட்டுப் போன கோபம், ரோஷம் எல்லாம் சேர்ந்து குபீரென அழுகையாக வெடித்தது.

அழாதை. . .தவம். . .அழாதை. . .அவள் தலையைத் தூக்கி தன் மடியில் வைத்தான் – பிள்ளையை பார்த்தபடி.

தாரும் உன்னைக் கேக்க ஆளில்லை எண்டு தானே என்னை தனிய விட்டுட்டு போனனீ. . . . அம்மா. . .அப்பா. . .தங்கச்சி. . .யார் .ருக்கினம் எனக்கு

தவம். . .நல்ல பிள்ளை. . . அமைதியாய். . .இரு. . .பச்சை உடம்பு. . . நீ அழ பிள்ளையல்லோ பயப்பிடும். . .

பெரிய பிள்ளைப் பாசம் வந்திட்டுது. . .கதைக்கேக்கை நல்லாய் கதை. . .பிறகு துரை அண்ணை வந்த உடனை பின்னாலை ஓடு. . .சத்தியமாய் சொல்லுறன். . நீ அந்த ஆளொடை சேர்ந்து திரியுறது எனக்கு நல்லாய் படேல்லை. . .

சத்தியமாய் தவம் எனக்கோ. ..உனக்கோ. . .அந்த ஆள் எந்த தீங்கும் செய்யேல்லை. . . . நேற்றைக் கூட. . .

சண்டியன் தன் நாக்கை கடித்துக் கொண்டானு;.

சொல்லுறுகோ நேற்று. . .

குழந்தை முணகியது.

சும்மா இருப்பியா. . .பிள்ளை அழுகுதுஎன்றவாறு பேச்சைத் திசைமாற்றி இரண்டு கைகளாலும் பிள்ளைத் தூக்கப் போனவன் என்ன நினைத்தானோ, பின் வாங்கினான்.

என்னைத் தூக்கி கொண்டு போன உனக்கு பிள்ளைத் தூக்கப் பயமா?

இப்பொழுது தவம் சிரித்தாள்.

நான் இன்னும் கைகால் கழுவேல்லை. . . மத்தியானம் வீட்டை போய் குளிச்சுட்டு வந்து பின்னேரமாய் தூக்கிறனே

தவத்திற்கு அவனுக்கு பெரிய பொறுப்பு வந்து பேசுமாப் போல் இருந்தது.

அறையுள் இருந்தவாறு சின்னக்கிளியக்காஎன குரல் கொடுத்தான்.

அவா உள்ளே வந்தா.

அக்கா. . .எனக்கு உந்தப் பத்தியம். . சரக்கு அரைக்கிறது எதுவுமே தெரியாது. . .அவளாய் எழும்பி. . .சமைக்கத் தொடங்கும் வரை நீங்களே எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளுங்கோ. . .என்றவாறு தனது பொக்கற்றுக்குள் இருந்து பெரிய காசுக்கட்டை எடுத்தான்.

சீ. . உதை வை. . . மண்ணாங்கட்டிக் காசு. . . எனக்கு அவளுக்கு என்ன என்ன எல்லாம் செய்ய வேண்டும் எண்டு தெரியும். . . பெரிய காசோடை வந்திட்டார். . .அவள் வீட்டை வரும் வரை நீயும் எங்கடை வீட்டிலை வந்து சாப்பிடு

சண்டியனுக்கும், தவத்திற்கும் கண்கள் கலங்கியது.

*

கொழும்பின் நாலாம் மாடிக்கட்டத்தில் கலந்துரையாடல் நடக்கும் அறையினுள் அனைவரும் கூடியிருந்தார்கள்.

யாழ்பபாண மாவட்டத்தில் நடைபெறும் சின்ன சின்ன சண்டித்தனங்கள். . . அண்மையில் நடைபெற்ற ஆறு கொலைகள் – ஏ.ஜி.ஏ, பழைய சேர்மன், இரண்டு முஸ்லீம் பொலிஸ்காரர், கள்ளியங்காடான், அவனது வலது கை பற்றி ஆராயந்து அவை அத்தனையும் அடக்குவது தான் நோக்கமாய் இருந்தது.

பொலிஸ் சிரேஷ்ட மகா அத்தியேட்தகர். . .இரகசியப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் சிலர். . . பாதுகாப்பு அமைச்சின் பிரதிநிதி ஒருவர், மேலாக இந்தக் கூட்டத்தை நடாத்த வேண்டும் தன் கட்சியின் மேலிடத்தை வற்புறுத்து அதற்கு ஒழுங்கு செய்த சங்கானையின் புதிய சேர்மன். . . இன்னும் வர வேண்டியது யாழ்ப்பாண இன்ஸ்பெக்டர்தான்.

காலை பத்து மணியாகி விட்டது.

இன்ஸ்பெக்டரைக்காணவில்லை.

யாழ் பொலிஸ் நிலையத்திற்கு போன் போட்டுப் பார்த்தார்கள்.

மூன்று நாட்களுக்கு முன்பே ஜீப்பில் புறப்பட்டு விட்டதாக தகவல் வந்தது.

கொழும்பில் கறுவாக்காட்டு வீட்டிற்கு போன் போட்டார்கள்.

அங்கு வரவில்லை என பதில் வந்தது.

என்ன நடந்திருக்கும் . . . வாகனத்திற்கு ஏதாவது. . . வாகனத்திற்கு வயலர்ஸ் மூலம் தொடர்பு கொண்டார்கள்.

சமிக்கை போய்க் கொண்டிருந்தது.

பதிலில்லை.

அனைவருக்கும் குழப்பாமாய் இருந்தது.

அவர் வராமல் கூட்டத்தை நடாத்துவதில் பிரயோசனம் இல்லை. . .முற்றாகவோ. .. அரைகுறையாகவே ஆதாரங்களை திரட்டி வைத்திருப்பவர் அவர் தான்.

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் கட்டளை இடப்பட்டது சமிக்கையின் ஒலிஅலை வீச்சை வைத்து ஜீப்பை அணுகும்படி. . . ஆனையிறவுக்கும் வவுனியாக்கும் மன்னாருக்கும் முல்லைத்தீவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் இருந்து அது வருவதாக ஆரம்ப சமிக்கைகள் காட்டியது.

நாலு நகர்களிலும் இருந்து ஒன்றை ஒன்று நோக்கியபடி நாலு பொலிஸ் வாகனங்கள் நகரத் தொடங்கியது.

அதே வேளை முருகண்டி வீதியின் முதலாம் கட்டையில் நின்ற வாகை மரத்தின் மேலாக காகங்களும் கழுகுகளும் பறக்கத் தொடங்கியது.

றோட்டால் போய்க் கொண்டிருந்த மற்றைய வாகனங்கள் இதனை அவதானித்தாலும் ஏதோ மிருகம் செத்துப் போயிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அந்த இடத்தை தாண்டிப் போய்க் கொண்டு இருந்தார்கள்.

காட்டுப் பிரதேசத்தில் இது ஒன்றும் அதிசயமில்லை. . .காட்டு மிருகங்கள் இறப்பதும் . . பின் அழுகுவதும். . .பின் கழுகுகள். . .காகங்கள். . நரிகள் வந்து தின்பதும் . .

ஆனையிறவில் இருந்து புறப்பட்ட பொலிஸ்ஜீப் முதலாவதாக சமிக்கையை அண்மித்துக் கொண்டு இருந்தது.

அதேவேளை அச்சமிக்கைக்கு கிட்டவாக வட்டமாய் காகங்கள் பறந்து கொண்டிருக்க மனத்தினுள்ளும் கொஞ்சம் பயம் தொட்டது.

சமிக்கைக்கு பக்கமாக வந்து விட்டார்கள்.

றோட்டின் கரையில் தமது வாகனத்தை நிறுத்தி விட்டு பார்த்த பொழுது ஜீப் றோட்டைவிட்டு விலகி ஓடிய தடம் தெரிந்தது.

தடம் சென்ற திசையில் பார்த்த பொழுது பற்றையினுள் ஜீப் நின்றது தெரிந்தது.

ஆள் ஜீப்பினுள் மயக்கமாய் இருக்க வேண்டும் இல்லது செத்துப் போயிருக்க வேண்டும் என்ற நினைப்பில் ஜீப்பினுள் மெதுவாய் எட்டிப் பார்த்தார்கள்.

அங்கு யாரும் இல்லை.

ஆனால் கிட்டவாக ஒரு மணம் வந்து கொண்டிருந்தது.

காகங்களின் சத்தம் வந்த திசையை நோக்கி மேலே பார்த்தார்கள்.

உச்சாணிக் கொம்பில் தலை கழன்று விடும் நிலையில் இன்ஸ்பெக்டர். . .

கொழும்பும் யாழ்ப்பாணமும் ஒன்று சேர உறைந்தது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒலிபரப்பு 1, வர்த்தக ஒலிபரப்பு 2 – இரண்டிலும் முருகண்டி முதலாம் கட்டை தலைப்புச் செய்தி ஆனது.

வீரகேசரி தொடக்கம் ஈழநாடு வரையிலும் அவ்வாறே ஆங்கில, சிங்கள பத்திரிகைகளிலும்; செய்திகள் அச்சாகத் தொடங்கியது.

*

இன்று பிள்ளை பிறந்து மூன்றாம் நாள்.

துண்டு வெட்டிக் கொண்டு போகலாம் என டாக்டர் சொல்லி விட்டார்.

 

இன்று பிள்ளையின் பெயர் கொடுக்கவேண்டும்.

நீ கட்டாயம் ஏதாவது யோசிச்சு வைச்சிருப்பாய் சொல்லுசண்டியன் சொல்ல தவம் மெதுவாய் புன்னகைத்தாள்.

எப்பிடி கரெட்டாய் சொல்லுறியள்

வீட்டுக் கணக்கு கொப்பியிலைi பார்த்தன் . . .பாதிக்கு மேலை ஆம்பிளைப் பேரும் . .. பொம்பிளைப் பேருமாய் இருந்திச்சு

பாத்தீட்டிங்களா. . . . தவமோகன். . ..

தவம் என்ற தனது பெயரின் முதல் இரண்டு எழுத்தையும் மோகனராசு என்ற அவனின் பெயரின் முதல் மூன்று எழுத்தையும் சேர்த்து வைத்திருந்;தாள்.

சண்டியனுக்கு அது பிடித்திருந்தது.

தவத்திற்கு கிட்டவாக வந்து நெற்றியில் முத்தம் இட்டான்.

என்ரை பேர் ஊரிலை ஒருத்தனுக்கும் தெரியாது. . . . பள்ளிக்கூட இடாப்போடை சரி . .. இனித்தான் ஆளுக்கால் பாதிப் பேரைக் கூப்பிடப் போறான்கள் – டே மோகன் எண்டு

என்ரை பிள்ளையை யாரும் டேஎண்டு கூப்பிட்டால் அறுத்திட மாட்டன்

இருவரும் சிரித்தார்கள்.

இந்த மூன்றுநாளும் பிள்ளைப் பெற்றைப் பார்க்க வந்தவர்கள் கொண்டு வந்து கொடுத்த அன்பளிப்பு பொருட்கள் அறையை நிறைத்திருந்தது. முன்பென்றால் இப்படியில்லை. . .இப்போ நிலைமை அப்பிடியில்லை. . .என்றும் அவனின் ஆதரவு அவர்களுக்கு வேண்டும் . . .அல்லது அவனுக்கு பயம் இல்லாது இருக்க வேண்டும் . . .அதுக்காக ஊர்க்கடைக்காரர். . .பணக்காரர்கள் கொடுத்த அன்பளிப்புகள்.

மத்தியானம வரை நின்று விட்டு பின்னேரம் துரைஅண்ணையினன் காரையும் கொண்டு வருவதாக சொல்லி விட்டுப் போய் விட்டான்.

பக்கத்தில் துணைக்கு எப்போதும் சின்னக்கிளியக்கா அல்லது மகள் பறுவதம் – எப்பொழுதும் கையில் கொண்டு திரியும் பொக்கற் றேடியோவுடன்.

எனக்கு உந்த றோடியோவைத் தான் கட்டித் தரவேணும் . . . பிறந்த பொடியனும் உன்ரை றேடியோக்கு பின்னாலை திரியப்போகுதுஎன்று செல்லமாக தன்மகளை ஏசிவிட்டு, துண்டு வெட்டிக் கொண்டு வீட்டுக்கு வரும் தவத்திற்கும் சண்டியனுக்கும் இரவுச் சாப்பாடு செய்ய சின்னக்கிளி அக்கா போய் விட்டா.

நீங்கள் கேட்டவையில் பூமாலையில் ஓர் மல்லிகை தவழ்ந்து கொண்டு இருந்தது.

தவமும் அரைத்தூக்கத்தில் பாட்டைக் கோட்டுக் கொண்டு இருந்தாள்.

பூமாலை அரைவாசியில் தடக்கி நிற்கு அவசரச் செய்தி என்று ஒன்று ஒலிபரப்பாகியது.

சேகுவாராக் காலத்தில் தான் இப்படியான செய்திகள் ஒலிபரப்பப்படுவதுண்டு – இப்போ அப்படி என்ன என்று காதை பறுவதத்தின் மகளின் பக்கம் திருப்பினாள்.

இன்ஸ்பெக்டரின் மரணச் செய்தி.

வயிற்றில் பாலை வார்த்தது போல இருந்தது.

ஆனால் இது சண்டியனின் வேலையா என நினைத்த பொழுது அவளை பயம் கவ்வியது.

முந்த நாள் இரவு. . .

அவன் வீட்டை விட்டுப் போன நேரம். . .

அவன் வீட்டுக்கு திரும்பி வந்த நேரம். . ..

பிள்ளையைக் கையாமல் தூக்காமல் தயங்கி கொண்டு நின்ற விதம். . .

எப்பிடிக் கணக்குப் போட்டு பார்த்தாலும் இரண்டும் ஒன்றும் மூன்றாவது போல அவளுக்குள் அது சண்டியனும் துரைஅண்ணருமாய் தான் இருக்க வேண்டும் என்று உறுதியாகிக் கொண்டு இருந்தது.

அவன் வரும் வரை காத்திருந்தாள்.

பின்நேரம் ஆக துரைஅண்ணையோடை சண்டியன் வாட்டுக்குள் நுழைந்தான்.

அவன் முகம் பிரகாசமாகவே இருந்தது.

நீயா செய்தாய்

என்னத்தை கேக்கிறாய். . .

இன்ஸ்பெக்டரைப் பற்றி றேடியோவிலை. . .

பைத்தியம் மாதிரிக் கதையாதை. . .பிள்ளைக்கு பாலைக் குடுப்பியாம். . .அதை விட்டுட்டு நீ சி.ஐ.டி வேலை பார்க்க வெளிக்கிடுறியா

அண்ணை எனக்கு சகோதரம் தாய் தகப்பன் யாரும் இல்லை. உங்களைத்தான் சொந்த அண்ணை போலை நம்பியிருக்கிறன்.. . .சொல்லுங்கோ. . .

துரை அண்ணை தலை குனிந்தார்.

தவம் திரும்பி சண்டியனைப் பார்த்தாள்.

சண்டியன் கை விரலை பற்களுக்கிடையில் வைத்து கடித்துக் கொண்டு நின்றான்.

அண்ணை இரண்டு கையும் எடுத்துக் கும்பிடுறன். . .இவ்வளவு காலமும் நடந்தது போதும். . .இனி எல்லாத்தையும் நிற்பாட்டுங்கோ. . .இந்த பிள்ளையை அநாதை ஆக்கிப் போடாதையுங்கோ. . .

கட்டிலில் இருந்தபடி தவம் அழத்தொடங்க மடியில் இருந்த பிள்ளையும் பக்கத்தில் நின்று பறுவதமும் அவளை பரிதாபமாக பார்த்தார்கள்.

துரை அண்ணை வாட்டில் இருந்து வெளிNயுறி காருக்குள் போய் உட்கார்ந்து கொண்டார்.

*

இன்ஸ்பெக்டர் கொலை!

எல்லா மட்டத்திலும் ஒரு பதற்றத்தை உருவாக்கி இருந்தது.

அது அரசியல் மட்டம் என்றாலும் சரி. . . பாதுகாப்பு மட்டம் என்றாலும் சரி . . . மற்றைய சண்டியர்கள் மட்டும் என்றாலும் சரி. . . . பொதுசனங்கள் மட்டும் என்றாலும்; சரி. . .

சண்டியனாக இருக்கலாமோ என்ற சின்னக் கீறல் அனைவர் மட்டத்திலும் இருந்தாலும்

எதற்காக இன்ஸ்பெக்டரை இவ்வளவு கோரமாக கொலை செய்திருக்க வேண்டும் என்பதற்காக காரணங்களை யாராலும் ஊகிக்க முடியாதிருந்தது.

ஒன்றில் மட்டும் காவல்துறை உறுதியாய் இருந்தது.

யாழ்ப்பாணத்தில் அ+ங்காங்கே திரியும் சண்டியர்களை அடக்குவது என்பது தான்.

அதற்குப் பின்னால் இல்லாமல் அவர்களாகவே இல்லாமல் போய்விடுவார்கள் என சேர்மன் ஆரூடம் சொன்னார்.

நீங்கள் தானே அவன்களை வளர்க்கிறது. . . . புது இன்ஸ்பெக்டர்.

தப்புத் தான். . .இனிமேலும் அது நடக்காது. . .சேர்மன் உறுதியாய்ச் சொன்னார்.

அதை மட்டும் செய்யுங்கோ. . .மிஞ்சம் எல்லாத்தையும் நாங்கள் பார்க்கிறம். . தூக்கி கொண்டு போக நீங்கள் வருவியள். . .இல்லாட்டி உங்கடை ரெலிபோன் வரும். . .பிணையிலை விடச் சொல்லி

அது பிழைதான். . .நாங்கள் வளர்த்து விட எங்கடை தோளிலை கை போடுற நிலைக்கு வந்திட்டான்கள். . .

அது போதும்

அனைத்து பொலிஸ் ஸடேசனுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

எந்த சண்டியனை கைது செய்ய வேண்டி வந்தாலும் எவ். ஐ. ஆர் போடமுதல் என்கவுண்டரில் போடச்சொல்லி அந்த அறிக்கையில் இருந்தது. சுhத்தியப்படாத இடத்து வேறு வழிகளை கையாளுமாறு அதில் நாசூக்காக சொல்லப்பட்டிருந்தது.

அடுத்த கிழமையே அது சாவகச்சேரி சந்தையில் நிறைவேறியது.

பிரச்சனை மிகச் சின்னது தான்.

தரகுகாரனை சாவச்சேரியான் அடித்து விட்டான்.

சமாளித்துப் போங்கோ என ஆட்கள் சொன்னதால் அடி வேண்டிய தரகர் தனக்குள் அழுது கொண்டு மௌனமாய் போய்விட்டாலும். . . இதைப் பார்த்துக் கொண்டிருந்து தரகனின் மகன்; ரோஷத்தில்; பொலிசுக்கு போய் விட்டான்.

இதைத்தானே காவல்துறை எதிர்பார்த்திருந்தது.

அடுத்து நாள் காலை றிபேக் கல்லூரி வாசலில் சாவகச்சேரியானின் பிணம் கிடந்தது.

எந்த அடிகாயமோ.. . ..சூட்டுக் காயங்களோ இருக்கவில்லை.

மரண விசாரணை அதிகாரி வரவழைக்கப்பட்டார்.

பாடசாலையின் விளையாட்டு மைதானத்திலேயே உடல் கீறப்பட்டது.

நஞ்சு உண்டு இறந்திருக்கின்றான் என மரண அறிக்கை சொன்னது.

பின்னேரம் நாலு மணிக்கே அவனை வெளியே விட்டு விட்டோம் என பொலிஸ் அறிக்கை சொன்னது.

அதற்குப் பின் நடந்தது என்ன?

ஆளுக்கால் தலையைப் பிரித்தார்கள்.

நஞ்சைக் குடித்தானா? நஞ்சு கொடுக்கப்பட்டதா??

காவல் துறை உள்ளாற மகிழ்ந்தது.

*

சாவகச்சேரியானின் மரணம் சண்டியர்கள் மட்டத்தில் பெரும் பரபரப்பையும் கலக்கத்தையும் உண்டு பண்ணியது.

உடனே கூடவேண்டும் என சங்கானையானுக்கும், ஆறுகால் மடத்தானுக்கும், கீரிமலையானுக்கும் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

இந்த முறை கொடிகாமத்தில் கூடுவது என முடிவெடுக்கப்பட்டுது.

ஆனால் துரைஅண்ணை வரவில்லை.

அது எல்லோருக்கும் பெரிய குறையான இருந்தது சண்டியனுக்கு மட்டும் குற்ற உணர்வாக இருந்தது.

சாவகச்சேரியானைக் கொன்றது யார் என்றது பிரச்சனை அங்கு இருக்கவில்லை.

பதிலாக கள்ளியங்காட்டானை யார் போட்டுத் தள்ளியது?. . .கள்ளியங்காட்டானின் துவக்குகள் எங்கோ?.. .. இன்ஸ்பெக்டரை யார் மரத்தில் தூக்கியது?. . .இதுகள் தான் சாவச்சேரியானின் மரணத்தில் வந்து நிற்கிறது என ஒருவன் கருத்துச் சொல்லு அனைவரும் ஆமோதித்தனர்.

இதற்கு என்ன செய்யலாம் என கேள்வி எழுந்த பொழுது தன்னுடன் சேர்ந்து பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருந்த கீரிமலையானும், ஆறுகால்மடத்தானும் மற்றவர்களுடன் நிற்க தான் தனித்துப் போனதாக சண்டியன் உணர்ந்தான்.

துரையண்ணையை மனம் தேடியது.

ஆஸ்பத்திரியில் தவம் கதைத்ததிற்குப் பின் துரையண்ணர் வீட்டுப் பக்கமே வந்தேயில்லை.

சண்டியனாக தேடிப் போன பொழுதும் அவர் வீட்டில் இருக்கவில்லை.

இப்பொழுது அனைவரும் கேட்கும் கேள்விக்கு தனியே பதில் சொல்லத் தடுமாறினான்.

கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசிக்கலாம். அதுதான் புத்தி

அனைவரும் கொல் எனச் சிரித்தார்கள்.

அடிக்கு அடி அவன்தான் வீரன்கூடியிருந்தவர்களில்; ஒருவன்.

அப்ப அதைச் செய்யுங்கோவன் . . .சாவச்சேரியானுக்கு நடந்ததை பார்த்தனீங்கள் தானே. . .

அப்ப சேலைக்கட்டிக் கொண்டு சைக்கிளோட்டப் போட்டிக்கு போக வேண்டியது தான்

சண்டியனுக்கு சுள்என்றது.

நேரே போய் கழுத்திலை ஒரு பிடி.

வாய் இருக்கிறது எண்டதுக்காக எதுவும் கதைக்கலாம் எண்டால். . . .இன்ஸ்பெக்டர் போலை நீயும் மரத்திலை தொங்க வேண்டியது தான்

சண்டியன் தன் நாக்கை தானே கடித்துக் கொண்டான்.

அத்தனை பேரும் விறைத்துப் போனார்கள்.

அதற்குப் பிறகு யாரும் ஏதும் கதைக்கவில்லை.

மெதுமெதுவாக ஆளுக்காள் கலையத் தொடங்கினார்கள்.

தங்களைப் பொலிசிடம் இருந்து காப்பாற்ற என்ன செய்யலாம் என கதைக்க வந்த இடத்து இப்ப சண்டியனுக்கும் பயப்பிட வேண்டிய நிலையாக இருக்கிறது என மனத்துக்குள் கறுவினார்கள்.

கூட்டம் அரைவாசியில் கலைந்ததினால் வெங்காயும் கட்டும் சீவரத்தினத்திடம் இரவலாய் வேண்டிய தட்டி வானை எடுத்துக் கொண்டு சீனியன் உடனும், மொட்டையனுடம் தனியே திரும்பி விட்டன்.

ஆனால் மற்றவர்களோ சண்டியனும் துரையும் உயிரோடை இருந்தால் எல்லோருக்கும் ஆபத்து என முடிவு கட்டினார்கள்.

மோட்டுத் தனமாய் நடந்து விட்டமோஎன அவன் மனம் அவனையே பல முறை கேட்டுக் கொண்டது.

நேராக துரை அண்ணையின் வீட்டை போனான்.

துரையண்ணையின் தமக்கைகாறி தான் வாசலுக்கு வந்தாள்.

அக்கா அண்ணை எங்கை

தெரியேல்லையடா தம்பி. . .மனம் சரியில்லை சன்னதிக் கோயிலிலை போய் இருக்கப் போறன் எண்டு சொல்லிக் கொண்டு இருந்தது. . .இப்ப இரண்டு நாளாய் காணேல்லை. . .சன்னதிக்கும் ஆட்களை விட்டுப் பார்த்திட்டுன். . .ஆளைக் காணேல்லை.. .

சண்டியனுக்கு எதுவுமே புரியவில்லை.

தவம் சொன்ன ஒரு வார்த்தை அவரை அப்பிடி பாதித்ததா?

நான் நாளைக்கு போய் பார்க்கிறன்

பொறு தம்பி . . . நீ வந்தால் இந்தச் சாக்கை கொடுக்கச் சொன்னதுஎன விறகுக் கும்பிகளுக்குள் இருந்து எரு பழைய சாக்கை எடுத்து வந்தாள்.

சண்டியன் வேண்டிப் பார்த்தான்.

அதனுள் ஆறு துவக்குகள்.

கண் கலங்கியது.

சரி அக்கா வாறன்

போய் மீண்டும் தட்டி வானில் ஏறினான்.

வீட்டை போன பொழுது தவம் வாசலில் பிள்ளைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அவளைப் பார்க்க அவனுக்கு வெறுப்பாய் இருந்தது.

ஆனாலும் எதுவும் கதைக்கவில்லை.

தவத்திற்கு அவன் நடத்தை விசித்திரமாக இருந்தது.

அடுத்த நாள் கெதியாக விடிய வேண்டும் பிரார்த்தனையுடன் அவன் சாப்பிடாமலே படுக்க போய்விட்டான்.

சாப்பிட்டு படுங்கோவன்

சாப்பாட்டைக் கொண்டு போய் உன்ரை . . .

நிற்பாட்டிக் கொண்டான்.

ஏன் என்னிலை கோவப்படுறியள். . .

உன்னாலை தான் எல்லாம் வந்தது.. .

நான் என்ன அப்பிடிச் செய்தனான். . . .

துரை அண்ணை மூண்டு நாளாய் வீட்டுக்கு வரேல்லையாம்

தவம் விக்கித்து நின்றாள்.

அதுக்கு மேல் ஏதும் அவள் கதைக்கவில்லை.

அவனும் கதைக்கவில்லை.

மௌனம் இருவரையும் கொன்று கொண்டு இருந்தது.

*

முதன் நாள் சொல்லிக் கொண்ட மாதிரி சீனியனும், மொட்டையனும் விடியப்பிறத்துடனேயே வந்து விட்டார்கள் – சன்னதிக்கு போய்ப்பார்ப்பதற்காக.

மூவரும் ஒரே மோட்டர் சைக்கிளில் போவோம் என பேசிக்கொண்டார்கள்.

மோட்டார் சைக்கிளில் ஏறப்போன சண்டியன் என்ன நினைத்தானோ. . .முதன்நான் இரவு வீட்டுப் பற்றைக்குள் வைத்த கைத்துப்பாக்கியை எடுத்து இடுப்பினுள் செருகி கொண்டான்.

சீனியனுக்கும் மொட்டையனுக்கும் ஒவ்வொன்றைக் கொடுத்தான்.

சீனியனே மோட்டார் சைக்கிளை ஓட்டினான்.

அண்ணை செல்லத்துரை அண்ணை கடை திறந்திருப்பர். . .ஒரு கோப்பி குடிச்சுசிட்டு போவம்

சரி. . .

சந்தையடிக்கு கிட்டவாகப் போக சந்தையடி கலபுலப்பட்டது.

என்ன நடந்தது

சண்டியனைக் கண்டதும் எல்லோரும் மௌனமானார்கள்.

ஏதோ நடந்து விட்டதுசண்டியனின் உள்மனம் சொன்னது.

சொல்லித் துலையுங்கோவன். . .என்ன நடந்தது. . .

தேத்தண்ணிக்கடைக்கார செல்லத்துரையண்ணை தான் குரலைச் செருமிக் கொண்டு,

பொறுமையாய் கேள் தம்பி. . .எங்கடை துரை. . .

துரை அண்ணைக்கு என்ன

அவர் சன்னதிக்கு போறன் எண்டிட்டு அங்கை போகேல்லை. . . கீரிமலை மடத்திலை போய் இருந்திருக்கிறார். . .நேற்று ராத்திரி . . . அவரை தாரோ போட்டுட்டாங்கள் தம்பி. . .

சண்டியன் விறைத்துப் போனான்.

எல்லோரும் அவன் கோபப்படுவார்கள் எனப் பார்த்தார்கள்.

அழுது புரள்வான் எனப் பார்த்தார்கள்.

எதுவுமே செய்யவில்லை.

சீனியன் மோட்டர் சைக்கிளை எடு

மொட்டையனும் தொற்றி ஏறிக் கொள்ள, கீரிமலைக்கு விடுசண்டியன் கட்டளை இட்டான்.

கீரிமலையான் வீட்டுக்கு தூரத்தில் டோட்டர் சைக்கிளை விட்டு விட்டு சண்டியன் மட்டும் மதிலால் பாய்ந்து உள்ளே போனான்.

கீரிமலையான் கட்டிலில் படுத்திருந்தான்.

தலைமாட்டில் இரண்டு சாராயப் போத்தல்கள் வேறு.

ஒரு வெடி.

குசினிக்குள் இருநஇத மனைவி குழறிக் கொண்டு வருவதற்கு முதல் சண்டியன் போய் மோட்டார் சைக்கிளில் ஏறினான்.

ஆறுகால் மடத்தடிக்கு விடு

நிலம் நன்கு வெளித்து விட்டது.

ஆறுகால் மடத்தான் வீட்டை போன பொழுது அவன் வாசலில் உட்கார்ந்திருந்தான்.

சுண்டியனைக் கண்ட பொழுது எழுந்து ஓட வெளிக்கிட்டான்.

ஒரு வெடிதான்.

பின் மண்டை சிதறியது.

சீலைகட்டிக் கொண்டு சைக்கிள் ஓடுற கதை சொன்னவன் எந்த ஊர்

கொடிகாமம் அண்ணை

அங்கை விடு

தேடி வந்தவன் கொடிகாமச் சந்தையில் ஒரு பெண்ணுடன் உரசிக் கொண்டு நின்றான்.

அண்ணை கவனம் – சுற்றிவரச் சனங்கள்மொட்டையன் எச்சரித்தான்.

ஆம்எனத் தலையாட்டிவிட்டு அவனுக்கு மிகப்பக்கமாக சண்டியன் போனான்.

அவன் இப்பவும் பெண்ணின் உரசலில் சுகம் கண்டு கொண்டு நின்றான்.

சண்டியன் கைத்துப்பாக்கியால் இடுப்பை அழுத்திய போது மெதுவாக திரும்பி பார்த்து விறைத்துப் பார்த்தான்.

அண்ணை எனக்கு ஒண்டும் தெரி. . .

சத்தம் போடாதை. . .கக்கூ;சகடிக்கு வா

இடுப்பில் அழுத்தம் இருந்து கொண்டே இருந்தது.

அண்ணை உன்ரை ஊர் சேர்மன் தான் துரையண்ணை போட்டால் தான் உன்னை விழுத்தலாம் எண்டு கீரிமலையானுக்கு ஐடியாவும் காசும் துவக்கும் கொடுத்த. .

சொல்லி முடிக்க வெடி தீர்ந்தது.

மூத்திரவாடை வீசிக்கொண்டிருந்த மண்ணில் போய்ச் சாய்ந்தான்.

மூவரும் மீண்டும் மோட்டர் சைக்கிளில் ஏறிக்கொண்டார்கள்.

சீனியன். . .மொட்டையன். . .இரண்டு பேரும் வடிவாய் கேளுங்கோ. . .

துரை அண்ணையின்ரை பிரேதமும் எங்கடை சேர்மனின்ரை பிரேதமும் சங்கானைச் சுடலைக்கு ஒண்டாய் போகவேணும்

இருவரும் தலையாட்டினார்கள்.

அடுத்தடுத்த துப்பாக்கி சண்டைகளால் யாழ்ப்பாணம் கலங்கிப் போயிருந்தது.

லயன்ஸ் கிளப்பிற்கு பக்கத்தில் இருந்த பாரில் புதிய இன்ஸ்பெக்டருடன் சியர்ஸ் சொல்லிக் கொண்டே, பார்த்தீங்களா. . .இன்ஸ்பெக்டர். . .உங்களுக்கு வேலையே இல்லாமல் போயிட்டுது.. ..நாங்கள் தொடக்கி விட்டால். . .அவன்களே அடிபட்டுச் சாவான்கள். . .அதைத்தான் நான் செய்திருக்கிறன். . .

நல்ல வக்கீல் . . .அசல் மூளை. . .

சங்கானையின்ரை பெருமை சொல்ல ஒருத்தன் மட்டும் இருக்க வேண்டும் – அது நான் மட்டும் தான் – சண்டியன் அவன். . .இவன். . .வளர விட்டதே எங்கடை பிழை. . .வளர்த்ததே நாங்கள் தான். . .இதோடை எல்லாம் சரி

இன்ஸ்பெக்டரின் தோளில் கை போட்டுக் கொண்டு வெளியில் வந்தார்.

கவனமாய் போங்கோஎன இன்ஸ்பெக்டர் சொல்லி விட்டு தன் ஜீப்பில் ஏறிக்கொண்டார்.

டோன்ற் வொறி

இன்ஸ்பெக்டரின் ஜீப் நகர்ந்தது.

ஜீப் மறைந்த அடுத்து கணம் சீனியன், மொட்டையன், சண்டியன் மூவரும் லயன்ஸ் கிளப்பின் மூன்று மூலைகளிலும் இருந்து வெளியே வந்தார்கள்.

மூவரின் கைத்துப்பாக்கிகளும் சேர்மனை நீட்டியபடி. . .

சேர்மனுக்கு குடித்தது எல்லாம் இறங்கியிருக்க வேண்டும்.

என்ன சண்டியா. . .ஏதும் என்ரை உதவி தேவை. . . .

ஒமடா. . தேவடியாள் பய மகனே. .

மூவரின் துப்பாக்கிகளும் ஒரே கணத்தில் நெருப்பைக் கக்கியது

(பாகம் 1 முற்றிற்று)

 

 

 

 

 

(பாகம் 2)

 

இந்தப் பத்து வருடங்களுக்குள் எத்தனையோ மாறிவிட்டது.

தவமோகனுக்கும் பத்து வயதாகி விட்டது.

ஐந்தாம் வகுப்பு சோதனை இந்த வருடம் எடுக்க வேண்டும்.

சின்னப் பிள்ளை என்றாலும் காலை, மாலை என்று சணடியனும், தவமும் எல்லா ரியூஷன்களுக்கும் அனுப்பிக் கொண்டு இருந்தார்கள்.

துரையண்ணர் கனவு கண்டது போல இப்போ யாழ்ப்பாணம் முழுக்க சண்டியனின் கட்டுப்பாட்டில்தான்.

இப்பொழுதும்; முன்புபோல் பிரதேசப் பிரிவிலும் பதினைந்து சண்டியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அனைவரும் சண்டியனின் ஆட்கள்.

அதேவேளை அவர்களுக்கும் தெரியாமல் அவர்களைக் கண்காணிக்க. . .அந்த அந்த கிராமங்களை கண்காணிக்க. . .அங்கு நடைபெறும் ஊழல்களைக் கண்காணிக்க. .

சீனியனின் கட்டுப்பாட்டில் ஊர்; பிரிவுகளுக்கு பதினைந்து பேராக மொத்தம் முப்பது பேர்.

இந்த முப்பது பேரையும் ஒருவர்க்கு ஒருவர் தெரியாது சீனியக்கும் சண்டியனுக்கும் மட்டும் தான் தெரியும்.

அதேமாதிரி பதினைந்து கிராமத்திலும் உள்ள கடைகள், வியாபார ஸ்தாபனங்களில் கப்பம் வசூலிப்பது முருகனின் பொறுப்பில் இருந்தது. முதல் ஐந்து வருடமும் அது மொட்டையனின் பொறுப்பில் தான் இருந்தது. ஆனால் ஒன்பது வருடத்திற்கு முன்பு சண்டியனே மொட்டையனைப் போட்டுத் தள்ள Nவுண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிகழ்ச்சி. ஆதன் பின் அந்த இடத்துக்கு மொட்டையனுக்கு உதவியாக முருகன் நியமிக்கப்பட்டான். முருகன் சரி, அவனுக்கு கீழே இருந்த வரி வசூலிப்பவர்கள் சரி சண்டியனுக்கு துரோகம் செய்து விடாமல் அவர்களையும் சீனியனின் ஆட்களே கண்காணித்துக் கொண்டார்கள்.

 

ஒவ்வோர் கச்ச தீவுத் திருவிழாக்களின் பொழுதும் இந்தியவில் இருந்து வரும் துணி வியாபாரிகளிடம் இருந்து களவாக வேண்டி வரும் நாட்டு வெடிகுண்டு. . .எறி வெடிகள். . .கைத்தூப்பாக்கிகள். . .அதற்கான ரவைகள் அனைத்தும் சண்டியனின் வசம் இருந்தது.

இப்பொழுது எல்லாம் ஒரு ரவைக்கு கூட அவசியம் இல்லாமல் எல்லாம் ஒழுங்காக நடைபெற்றுக் கொண்டு இருந்தது.

அதையும் தாண்டி எங்காவது ஒழுங்கீனம் நடந்தால் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள். அவ்வளவு தான்.

இந்தப் பயம் அனைவரின் கால் அடிக்கும் கீழே இருந்ததால் அனைத்தும் ஒழுங்காக நடந்தது.

இலஞ்சம் இருக்கவில்லை. . .அதிகார மிரட்டல்கள் இருக்கவில்லை. . .ஊழல் இருக்கவில்லை. . .கற்பழிப்பு, கொலை, கொள்ளை இருக்கவில்லை. . . கிரமக்கோட்டுக்கோ. . யாழ்ப்பாணக் கோட்டுக்கோ ஒரு வழக்குப் போவதாயின் அது சண்டியனின் கோட்டைத் தாண்டித்தான் போக வேண்டியிருந்ததால் அங்கெல்லாம் வழக்குகள் குறைந்து விட்டது.

 

பட்டினசபைக்கு ஒழுங்காக லைற் பில் கட்டவில்லை, மாநகர சபைக்கு வீட்டு வரி ஒழுங்காக கட்டவில்லை என்ற வழக்குகள் மட்டும் கிராமக் கோட்டுகளிலும், யாழ்ப்பாண கோட்டிலும் நடந்து கொண்டிருந்தது.

கிராம சபையிலோ, பட்டினசபையிலோ, நகரசபையிலோ, மாநகரசபையிலோ நிறைவேற்றப்பட்ட எந்த தீர்மானமும் அனைந்து அங்கத்தினரின் ஏகோபித்த கைத்தூக்கலுடன் நிறைவேறியது.

 

அங்கு எதிர்கட்சி என்ற ஒன்று இருக்வில்லை அனைத்தும் ஆளும் கட்சிதான்.

 

காரணம் அனைவரும் சண்டியன் நிறுத்திய ஆட்களாய் இருந்தார்கள்.

 

அரசாங்கச் சம்பளமும், அரசவானகனங்களின் வசதிகளும், மக்களின் கை தட்டல்களும், மாலைகளும் அவர்களுக்கு கிடைத்துக் கொண்டு இருந்தாலும் பின்னால் சண்டியனின் கையில் தான் அனைத்து வெள்ளி வேட்டிகளின் முடிச்சுகளும் இருந்தன.

 

சிலருக்கு கொஞ்சம் வேதனை தான். . .

மனங்களுக்குள் கறுவல் தான். . .

ஆனாலும் உயிர்ப்பயம்!

அடக்கியே வாசித்து, ஆளும் கட்சியின் அரசியல் நீரோட்டத்தில் கலக்கின்றோம் என்று ஆளுக்கால் சொல்லிக் கொண்டார்கள்.

ஆனாலும் மனதுள் ஒரு நப்பாசை. . .சண்டியன் ஒரு நாள் சாக மாட்டானோ என்று.

இந்தப் பயம் பதினாங்கு வருடத்தின் முதல் தொட்ட பயம்!

பதினான்கு வருடத்தின் முன்பு தொட்ட பயம்.

சங்கானைச் சேர்மனை யாழ்ப்பாண லயன்ஸ் கிளப்பில் வைத்து சண்டியன், சீனியன், மொட்டையன் மூவரும் சுற்றி நின்று தங்கள் துப்பாக்கிகளில் இருந்த குண்டுகள் தீரும் வரையும். . .சேர்மன் இறந்த பின்பும் அவரின் ஆமல் தீட்டிய வேட்டுக்கள் கொடுத்த பயம்.

அதை விடவும் முதன்நாள் இரவு கீரிமலையானுக்கும், ஆறுகால் மடத்தானுக்கும், கொடிகாமத்துக்கானுக்கும் வைத்த வெடிகள் கொடுத்த பயம்.

அதே பயத்தில் துரையண்ணையின் கடைசி ஊர்வலத்திற்கு முழு ஊரே திரண்டது.

துரையண்ணைக்கு கலியாணமோ. . பிள்ளை குட்டி இல்லாததால் சண்டியனே முன்னால் கொள்ளிக்குடத்துடன் போனான்.

 

ஊர்வலத்திற்கு பின்னால் அவர் வளர்த்த நாய் சுடலை மட்டும் போனதாம் – பின் வீட்டுக்கு வரரே இல்லையாம் என இப்பொழுதும் சனங்கள் கதைப்பதுண்டு.

அவரின் காரியங்கள் சுடலையில் மத்தியானம் அளவில் முடிந்த பின்பு தான் சேர்மனின் சவ ஊர்வலம் பின்னேரம் போல் போனது.

அதுவும் சந்தையடியால் போகாமால் ஊரைச்சுற்றிப் போனது.

முன்னே பொலிஸ் ஜீப் – பின்னால் சேர்மனின் நெருங்கிய உறவினர்கள்.

அவருடன் அரசியல் தொடர்பு வைத்திருந்த எந்த வெள்ளை வேட்டிக்காரரும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை சிலர் முதன்நாள் வந்து மாலை சாத்திவிட்டுப் போயிருந்தார்களாம்.

பயம்!

மரணபயம்!!

சண்டியனைப் பகைக்க விரும்பாத மரணபயம்!!!

*

இந்த மரண அல்லோலங்கள் முடிந்த பொழுது சேர்மனின் இடத்தை நிரப்புவதற்காக அரசவர்த்தமானியில் வேட்பாளர்களை சங்கானை ஏ.ஜி.ஏ. ஒவ்வீசில் பதியும்மாறு கேட்கப்பட்டிருந்தது.

ஆளுக்கால் பதவி நாற்காலியில் இருக்க ஆசைப்பட்டாலும் நடந்து முடிந்த அனர்த்தங்களின் பயம் இன்னும் முற்றாய் போய் விடவில்லை.

சண்டியன் மதியம் சாப்பிட்டு விட்டு, தவழத் தொடங்கிய தன் மகனுடன் கொஞ்ச நேரம் விளையாடிக் கொண்டு இருந்து விட்டு, வீட்டுக்குள் அதிக வெட்கை என்பதால் சாய்மணைக் கதிரையை கொண்டு வந்து போட்டுவிட்டு ந்றாக கால்களை நீட்டிக் கொண்டு படுத்திருந்தான்.

வீட்டிலை இருக்கிறதே கொஞ்ச நேரம். . .இராத்திரிலை வர அவன் படுத்திடுவான். . கொஞ்ச நேரம் கூட விளையாடினால் என்ன குறைஞ்சே போவியள் . . .என்றவாறு மகனைக் கொண்டு வந்து நீட்டிப்படுத்திருக்கும் இரு கால்களுக்களுக்கிடையில் தொய்வாக இருந்த சாரத்தினுள் தவம் இருத்தினாள்.

இது மகனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

பெரிய ஏணைச் சீலையுள் எழுந்து இருப்பது போல. . . மகிழ்ச்சியில் அவன் துள்ளிக் கொண்டு இருந்தான்.

பா. .பா . .பா. . .

ஆறுமாதத்தில் இதுதான் அவனின் மொழி.

எட்டவாக வாசலில் இருந்து சுளகில் அரிசியில் கற்களைப் பொறுக்கியபடி தகப்பனையும் மகனையும் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டு இருந்தாள்.

ஏணை விளையாட்டு கொஞ்சம் அலுத்தப் போக அப்படியே மடியில் இருந்து தகப்பனுக்கு மேலே தவழ்ந்து போய் வயிற்றில் இருந்து கொண்டு சண்டியனின் நெஞ்சு மயிரைப் பிடுங்கத் தொடங்கினான்.

டே. . .நோகுதடா. . .

சண்டியன் நெளிந்தான்.

அவன் நெளிவது குழந்தைக்கு வேடிக்கையாய் இருந்தது.

கீ. .கீ. .கீ. . .எனத் தவத்தையும் சண்டியனைம் பார்த்தபடி மேலும் சண்டியனின் நெஞ்சு மயிரைப் பிடுங்கினான்.

தவம் இவனைத் தூக்கடி. . நோகுது. . .படுக்க விடுறான் இல்லை

வேணும். . . பெரிய சண்டியன். . . அவன் வளர்ந்து தான் உங்களை அடக்குவான் பாருங்கோ. . .

ஓம். . ஓம்.. .அவன் அடக்கட்டும். . .இப்ப தூக்கடி. . .

சண்டியன் பாவம். . கொஞ்ச நேரம் படுக்கட்டும் என நினைத்தபடி, வாடா. . நீதான் இவருக்கு பாடம் படிப்பீக்க வேணும் என்று சொல்லிக் கொண்டு தவம் வந்து அவனைத் தூக்கி கொண்டு போய் தனக்கு கிட்டவாக சைத்து கொஞ்ச அரிசியை எடுத்து சீமெந்து தரையில் போட்டாள்.

இப்பொழுது அவன் அதனுடன் விளையாடத் தொடங்கி விட்டேன்.

அதிக நாட்களுக்கு பின்பு தவம் ஆக்கிய இறால் போட்ட முருங்கையிலைச் சரக்கு கஞ்சி. . வேப்ப மரத்து நிழல். . . குளிர்த்த காற்று. . . குழந்தை மார்பு மயிரை இழுந்த விளையாடிய இனிமையான சுகம். . .இப்பவும் அவன் சிரித்த வாயில் இருந்து வடிந்து தன் நெஞ்சில் காயாமல் இருக்குத வாநீர் . . அவன் சிரிப்பொலி. . .

 

திண்ணையில் நடசாரா வாத்தியார் போல் கிடக்கு. . .

தவத்துடன் இருந்து கதைத்துக் கொண்டு இருக்கிறார்.

துரையண்ணை என்னைத் தானாம் எலக்ஷனில் நிற்கட்டாம்

துரை அண்ணை எங்கை

நீ பேசிப்போட்டாய் எண்டு வளவுக்கை வர மாட்டாராம். .

அவ்வளவு ரோஷமோ அவருக்கு. . .தமையனை தங்கச்சி பேசக்குடாதே

அப்ப போய்க் கூப்பிடுன். .நீ கூப்பிட்டால் அந்த ஆள் வரும்

தவம் எழுந்து தலைமயிரை முடிந்தபடி றோட்டடிக்கு போகின்றாள்.

துரை அண்ணை அழுது கொண்டு நிற்கிறார்

என்ன அண்ணை உள்ளுக்கை வராமல் இதிலை நிண்டு அழுது கொண்டு

எனக்கு உள்ளுக்கை வரப் பயமாய்க் கிடக்கு

ஏன் அண்ணை

உன்ரை பொடியன் என்னைச் சுட்டாலும் சுட்டுப் போடுவான்

தவம் கலகல எனச் சிரித்தாள்.

அரிசியுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கையில் துவக்குடன் துரையண்ணையை நோக்கி வந்து கொண்டு இருந்தான்.

டே. .விளையாட உனக்கு ஒண்டும் கிடைக்கேல்லையே . . கொப்பற்றை துவக்கு தானோ கிடைச்சது

சொல்லி முடிக்க முதல் ஒன்றன் பின் ஒன்றாக ஆறு வெடிகள். . .

துரையண்ணை வேப்பமரத்தடியில் வந்து விழுந்தார்.

சண்டியன் திகைத்துப் போய் எழும்பினான்.

உடம்பு எல்லாம் வியர்த்திருந்தது.

நெஞ்சு வேகமாக அடித்தது.

குழந்தை அரிசியுடன் விளையாடிக் கொண்டு இருந்தது.

தவம் இப்பொழுது கொஞ்சம் அயரத் தொடங்கிய மாதிரி இருந்தது.

கண்ட கனவின் பயம் மாற கிணற்றடியில் போய் நன்;கு முகம் காலைக் கழுவி விட்டு மகனை மீண்டும் தூக்கி கொண்டு வந்து தன் நெஞ்சின் மேல் வைத்து விளையாடத் தொடங்கினான்.

சந்தோஷமாக இருந்தாலும் கனவின் பயங்கரத்தில் இருந்து விடுபடக் கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது.

வாசலில் சைக்கிள் மணி அடித்துக் கேட்டது.

திரும்பிப் பார்த்தான்.

கேற்றடியில் நடராசா வாத்தியார் நின்றிருந்தார்.

சண்டியனுக்கு நம்பவே முடியவில்லை.

தம்பி விட்டுக்கை வரலாமோ. . .

 

வாங்கோ.. .வாத்தியார்.. . தவம் எழும்பு வாத்தியார் வாறார்

தம்பியிட்டை ஒரு அலுவலாய் வந்தனான்என்றபடி கனவில் அவர் வந்து இருந்த அதே திண்ணையில் உட்காந்திருந்தார்.

சண்டியனுக்கு வியப்பாய் இருந்தது.

சொல்லுங்கோ வாத்தியார். . .என்ன விஷேசம்

இல்லைத் தம்பி. .நாங்கள் குமர்பிள்ளையை வைச்சு இருக்கிற நாங்கள். . .

சொல்லுங்Nகுh

உங்களோடை பின் வளவிலை இருக்கிற சின்னராசா. . சின்னக்கிளி ஆக்கள் நல்ல மாதிரி

நடராசா வாத்தியார் கொஞ்சம் பயப்பிட்டு சொல்லுற மாதிரி இருந்தது.

ஓம் நல்ல மாதிரித் தான். . . அதுக்கென்ன

அவையின்ரை மகள் பறுவதத்தோடை தான் என்ரை பிள்ளையும் படிக்குது. . .

அவையின்ரை மகன்காரன் பள்ளிக்கூடம் போற வழி தெரு எல்லாம் பிள்ளைக்கு பிரச்சனை குடுக்கிறான். . .பிள்ளைக்கு என்னை தங்கச்சின்ரை மகனை சின்னனிலேயே பேசி வைச்சிருக்கு. . .என்ரை மகன் கேட்கப் போக உன்ரை தங்கச்சியோடை ஒருநாளாவது படுத்துட்டுதான் விடுவன் என்னுறானாம் . எங்களை ஒண்டும் செய்யேலாது. . .எங்களுக்கு சண்டியன் மாமா இருக்கிறார் எண்டு சொன்னவனாம். . அது தான் தம்பி உங்களைப் பார்த்து. . .

சண்டியனுக்கு கண்கள் இருண்டு சிவந்து கொண்டு வந்தது.

மன்னிச்சுக் கொள்ளுங்கோ. . .தாய் தேப்பன் எங்களோடை நல்ல மாதிரித் தான் . .

அதுக்காக. . . பொறுங்கோ. . .தவம். . .போய் சின்னக்கிளியக்காவையும் சின்னராசா அண்ணையையும் பொடிப்பிள்ளையையும் கூட்டிக் கொண்டு வா

கொஞ்ச நேரத்திலை மூவரும் வந்தார்கள்.

நடராசா வாத்தியாரைப் பார்த்ததும் பையன் கொஞ்சம் பயந்து விட்டான்.

 

எப்ப வாத்தியாரிட்டை பெட்டையோடை படுக்கிற யோசினை. . .முதலே சொன்னால் பாதுகாப்பு தருவோமல்ல

சின்னக்கிளியக்காக்வுக்கும் சின்னராசா அண்ணைக்கும் விளங்கி விட்டது.

தம்பி நீங்கள் இவனைக் கொண்டாலும் நாங்கள் கேட்க மாட்டம்

கேட்டியா. . .உன்ரை அப்பா அம்மா எங்களுக்கு பிள்ளைப் பெத்து பார்த்து இப்பவும் அவனுக்கு எண்ணை வைச்சு உடம்பு பிடிச்சு குளிக்க வார்த்து சாம்பிராணி போடுறதுக்கு உனக்கு கூலி வேணுமா. . .

இல்லை அண்ணை மன்னிச்சுக் கொள்ளுங்கோ

உன்னை இண்டைக்கு கொல்லாமல் விடுறனே. . அது தான் கூலி. . இனிமேல் என்ரை பேரை நீ எங்கையாவது சொன்னாலும் கொப்பர் கொம்மாக்கு பறுவதம் தான் கொள்ளி வைக்க வேண்டி வரும்

அத்துடன் அவன் ஓடிவிட்டான்.

 

சின்னக்கிளி அக்காவின் பக்கம் திரும்பி, மன்னிச்சுக் கொள்ளுங்கோ அக்கா. . அவனை வெருட்டா வேறை வழி தெரியேல்லை

 

சும்மா கிட தம்பி. . உன்னை எங்களுக்கு தெரியாதே . . உன்னை என்ரை மூத்த பிள்ளை மாதிரித்தான் நாங்கள் வைச்சிருக்கிறம். . .அவனை உதைக்காமல் விட்டியே. . ராத்திரி கொட்டிக்க வருவர். . அப்ப நாங்கள் பார்த்துக் கொள்ளுறம்

தம்பி. . .வீணாய் நான் வந்து உங்களை குழப்பி போட்டனோ தெரியாது. .. ஆனால் இந்த உதவியை ஆயுளுக்கும் மறக்க மாட்டன்

துரை அண்ணையின் கனவு மீண்டும் அவன் முன் வந்தது.

எனக்கு ஒரு உதவி நீங்கள் செய்ய வேணும்

சொல்லுங்கோ. . .தம்பி

நீங்கள் செத்த சேர்மனின்ரை இடத்துக்கு தேர்தலிலை நிற்க வேணும்

எல்லோரும் வியப்புடன் பார்த்தார்கள் – நடராசா வாத்தியார் உட்பட.

தம்பி. . .அது ஒரு சுத்துமாத்து உலகம். . .அதிலை நேர்மையாய் தாக்குப் பிடிக்க முடியாது

இல்லை வாத்தியார். . இனி அந்த சுத்துமாத்துகள் இல்லாமல் இருக்கத் தான் உங்களை நிற்கச் சொல்லுறன் – உங்களுக்குப் பின்னாலை நான் நிற்பன கடவுளாய்த் தான் உங்களை இண்டைக்கு இஞ்சை அனுப்பினது

ஆவன் கண் முன்னே துரை அண்ணை வந்து போனார்.

வாத்தியார் ஓம் எனத் தலையாடினார்.

*

வாத்தியார் சேர்மன் நின்ற இடத்துக்கு நிற்கிறார் என்ற பொழுது, உவரோஎன ஏளனமாகக் கேட்ட வாய்கள், சண்டியனாம் பின்னாலை நிற்கிறான்என்று அறிந்த பொழுது அடைத்துக் கொண்டன.

யாரும் அவரை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

நடசாரா வாத்தியார் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார் என அறிவிக்கப்பட்டது.

இப்படி நடந்தது பல பழைய வெள்ளை வேட்டிகளுக்கு வயிற்றைக் கலக்கியது அடுத்த தேர்தலுக்கு அவனின் ஆட்களே ஏழு தொகுதிகளிலும் நிற்கப் போகின்றார்கள் என்று.

எதிர்பார்த்த மாதிரி அதுவும் நடந்தது.

அனைத்து தொகுதிகளிலும் அவன் சுட்டு விரல் நீட்டிய வேட்பாளர்கள். துணிவுடன் எதிர்த்து கேட்டவர்களிடம் எந்த வன்முறையையும் அவன் பாவிக்கவில்லை ஆனால் எதிர்த்தவர்கள் கட்டுக்காசை இழந்தார்கள்.

சங்கானையின் ஏழு வட்டாரங்களிலும் நடந்த இந்த மாற்றம் யாழ்ப்பாணத்தில் இருந்து அனைத்துக் கிராமங்களிலும், நகரங்களிலும் நிகழ்ந்தது.

எல்லோருக்கும் பின்னால் அந்த அந்த இடங்களில் நின்ற சண்டியர்கள் பின்னால் நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் சங்கானைச் சண்டியன் நின்றான்.

துரை அண்ணை கண்ட கனவு.

யாழ்ப்பாணம் முழுவதிற்கும் ஒரு சண்டியன் இருக்க வேண்டும். . .அது நீயாக இருக்க வேண்டும்

இப்பொழுதும் அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

என்ன உங்கடை யாழ்ப்பாணத்திலை பாதாள அரசாங்கமா நடக்குது

சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் அரசியல்வாதிகளை நையாண்டி செய்த பொழுது அவர்கள் ஏதும் செய்ய முடியாது மௌனமாய் இருந்தார்கள்.

அவர்கள் எம். பி. கள் அது இது என்று இருந்தாலும் முழு நிர்வாகத்தையும் கிராம, பட்டின, நகர, மாகர சபைகள் நடாத்திக் கொண்டு செல்வதைக் காண அவர்களுக்கும் பொறாமையாய் இருந்தது.

ஒரு றோட்டுக்கு தார் போடவே தங்களிடம் பத்து நடை நடந்த சேர்மன்மார் யாரும் தங்களைக் கண்டு இல்லாமல் இருப்பது மனதுக்கு வருந்தம் தான்.

அவர்களிடம் பதவி இருந்தது. ஆனால் அதன் பவுசைக் காட்ட முடியாது இருந்தது பெரும் வேதனையாக இருந்தது.

வட்டுக்கோட்டை எம். பி. யின் ஆளுகைக்கு உட்பட்ட சங்கானையின் சேர்மன் நடராசா வாத்தியாரை ஒரு நாள் எம். பி. கேட்டாராம், என்ன உங்களுக்கு எம்.பி. சங்கானையானோஎன்று.

இல்லை ஐயா. . ஆனால் நீங்கள் இப்பிடி என்னிடம் கேட்டனீங்கள் என்று நான் அவருக்கு சொல்லமாட்டன்

அன்று எம். பி. கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே தண்ணி போட்டிருந்தார்.

ஏன் சொன்னால் கிழிச்சுப் போடுவனோ

இல்லை ஐயா. . .வட்டுக்கோட்டை தொகுதிக்கும் மறு எலக்ஷன் வைக்க வேண்டி வந்திடும்

அத்துடன் அவர் காலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் அடித்தது அனைத்தும் இறங்கி விட்டது.

இந்தக் கதை அரவல் புரளலாக சண்டியனுக்கும் அவன் தோழர்களுக்கும் எட்டியது.

அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு சண்டியனே எல்லாத் தொகுதிகளிலும் ஆட்களை நிறுத்த வேண்டும் என்று பிடிவாதமாக நின்றார்கள்.

ஆனால் சண்டியன் மறுத்து விட்டான்.

 

ஆனால் எம். பி. கள் மட்டத்தில் ஒரு பயம் தொட்டது சண்டியன் தேர்தலில் ஆட்களை நிறுத்தாது இருக்க என்ன செய்ய வேண்டும் என்று.

ஆளுக்கால் தங்கள் கறுத்தக் கோட்டை மாட்டிக் கொண்டு ஆடு புலி வெட்டி யோசித்துப் பார்த்தாhர்கள்.

யாழ்ப்பாணத்துள் ஏதோ ஒரு பெரிய கட்டட்தை, கோயிலை, கடைகளை எரித்து பயங்கரவாத சட்டத்தை பாய விட்டால் அரசாங்கம் தேர்தல் நடாத்துவதை நிறுத்தி வைக்கும் – நாங்களும் எங்கள் பதவிக் காலத்தை நீட்டிச் செல்லலாம் என்று.

இதை நிறைவேற்றுவதற்காக பெருமளவில் பெரிய இடங்களில் கை மாறவும் தொடங்கியது.

சீனியனுக்கு வேண்டிய வங்கி ஊழியர் ஒருவர் இந்த பணமாற்றம் பற்றி தகவல் சொல்ல சண்டியன் உஷாரானான்.

சம்மந்தப்பட்ட எம். புp: க்களில் இருவர் ஒன்றாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது நேரடியாக அவர்கள் வீட்டிக்குப் Nபுhய் இறங்கினான்.

ஒரு பக்கத்தில் சீனியன். மறு பக்கத்தில் மொட்டையன்.

நீங்கள் நினைக்கிற மாதிரி என்ரை ஆட்கள் யாரும் தேர்தலிலை நிற்கேல்லை. ஆனால் உங்களுக்கு பதவி வேண்டும் எண்டதுக்காக ஏதாவது கோயில், கடைகள், லைபிறறி என்று ஏதாவது செய்ய வெளிக்கீட்டால் உங்களிலை ஒருத்தர் கூட உயிரோடை இருக்க மாட்டீங்கள். சனங்களின்ரை பொதுச் சொத்துக்கு ஏதாவது நடந்தால் உங்களுக்கு என்று எந்த சொத்தும் இருக்காது.

இரண்டு நிமிட உரையாடல் அவ்வளவு தான்.

போய் விட்டார்கள்.

உவன் செத்தால் தான் எங்களுக்கு நிம்மதி

நல்லாய் வளர விட்டிட்டம்

அன்று இரவு முழுக்க. . .குடித்ததின் வேகம் இறங்கும் வரை பேசிக் கொண்டே இருந்தார்கள்.

*

தவமோகனுக்கு ஐந்து வயதாகி விட்டது. பக்கத்து வீட்டு சின்னக்கிளி அக்காவின் மகள் பறுவதம் தான் அவனின் மிக நெருங்கிய தோழி. அவளுக்கு இருபத்தியொரு வயதானாலும் அவளுக்கும் நெருங்கிய தோழன் அவன்தான்.

பறுவதம் கிழமையின் ஐந்து நாட்களும் நெசவு வேலைக்குப் போகும் நேரம் தவிர, காலையில் தான் வேலைக்கு போகும் பொழுது பாலர் பாடசாலைக்கு கூட்டிச் செல்வது . . பின் வேலையால் இரண்டு மணிக்கு திரும்பி வரும்பொழுது மீண்டும் போய் கூட்டி வருவது. . .பின் மத்தியானச் சாப்பாடு தீத்துவது. . .மாலையில் அவனுடன் விளையாடுவது. . .எல்லாம் அவனுக்கு அவள் தான்.

சின்னக் கிளியக்கா பகிடியாகவே சொல்லுவா, உனக்கு மாப்பிள்ளைத் தோழன் உவன் தான்டி. கொண்ணன்ட்டை உயரம் உனக்கு ஒத்த வராது

என்ரை பிள்ளைக்கு இரண்டு விரலுக்கும் மோதிரம் போட்டால் தான் அவனை அனுப்புவன்என தவமும் பதிலுக்கு சொல்ல எல்லோரும் சிரிப்பார்கள்.

தவமோகனுக்கு எதுவும் விளங்காது. . .தானும் ஏதாவது சொல்ல வேண்டும் என்று விட்டு, எனக்கும் பறுவதத்துக்கும் நாளைக்கு கலியாணம்என்று விட்டு ஓடிப்போய் அவள் மடியில் இருப்பான்.

அவளும் அவனைக் கட்டிக் கொண்டு, அவனனின் கன்னத்தோடை கன்னம் வைத்துக் கொண்டு ஏதாவது பாட்டுப் பாடுவாள்.

அவனும் அப்பிடியே அவள் மடியில் தூங்கிப் போனாள்.

சனி, ஞாயிறுகளில் பின்நேரங்களில் கிழமைக் கணக்குகள் பார்க்க சண்டியனிடம் சீனியனும், மொட்டையனும்; வரும் பொழுது தவமோகனுடன் வீட்டுக்கு வெளியில் நின்று பந்தடித்து விளையாடுவார்கள்.

தவமோகன் பறுவதத்தைக் கண்டால் விடமாட்டான். அவளையும் விளையாட வரும்படி

வற்புறுத்துவான்.

 

அவளுக்கும் ஆண்களுடன் விளையாடக் கூச்சமாய் இருந்தாலும் தவமோகனின் வற்புறுத்தலுக்கு அவளால் மறக்க முடியாது அப்படி மறுத்தால் அவன் மணலில் விழுந்து புரண்டு அழுவான். பின் அவள்தான் அவனைத் தோயவார்த்து பேன் சீப்பால் மண்ணை வார வேண்டும்.

சீனியனுக்கு கலியாணம் ஆகி இரண்டு வயதில் ஒரு பெண்குழந்தை இருந்தது. ஆனால் மொட்டையனுக்கு இருபத்தியெட்டு வயது. கலியாணம் ஆகவில்லை. அது தான் அவளுக்கு கூச்சம்.

அவர்கள் விளையாடும் பொழுது தவமோ. . சண்டியனோ. . .இல்லை இருவருமோ வீட்டுத் திண்ணையில் இருந்து பார்த்து ரசித்துக் கொண்டு இருப்பார்கள். சில வேளையில் சண்டிணனும் இறங்கி பந்தை இரண்டு உதை உதைப்பான்.

விளையாடி முடிய எல்லோரும் ஒன்றாய் இருந்து இரவு சாப்பிடுவார்கள்.

பறுவதம் மட்டும் தனது வீட்டை போகின்றேன் எனப் போய்விடுவாள்.

ஒருநாள் இரவு எல்லோரும் போனபிறகு வாசற்படியில் இருந்து கதைத்துக் கொண்டு இருக்கும் பொழுது, உங்கடை மொட்டையன் பறுவதத்தை பார்க்கிற பார்வை சரியில்லை. . .சின்னக்கிளியக்காவும் சின்னராசா அண்ணையும் எங்களை நம்பித் தான் அவளை இங்கை அனுப்புறவா. . பிறகு ஏதும் பிரச்சனை எண்டால் எங்களுக்கும்; தான் கூடாதுதவத்தின் குரலில் கொஞ்சம் எச்சரிப்புத் தொணி இருந்ததை சண்டியன் அவதானித்தான்.

நீ சொல்லுறது சரி தான். . .ஆனால் எதுவுமே இல்லாமல் இருக்க நாங்களாய் போய் அதுகளைக் கேட்ட. . . இல்லாமல் இருந்த ஒன்றை அதுகளாக தொடங்கினால் அதுவும் எங்களுக்கு கூடாது. முங்றம்படி நீ சொல்லுறமாதிரி அதுகளுக்கை ஏதும் இருந்தாலும் எனக்குப் பிரச்சனை இல்லை. மொட்டையன் என்னோடை எட்டு வருஷமாய் இருக்கிறான். இதுவரை அவன் எனக்கு நேர்மையாய் இருந்திருக்கிறான்

சின்னக்கிளியக்கா ஆட்களின்ரை மனத்திலை என்ன இருக்குது எண்டு தெரியாதே. . .அவையின்ரை பொடியன் நடராசா வாத்தியாற்றை பெட்டையை விரும்புது எண்ட பொழுது நீங்கள் அதை தடுத்தியள். . .இப்ப மொட்டையன் உங்கடை ஆள் எண்டோடை சேர்ந்து நிக்கிறயள் என்று ஊர் அல்லோ சொல்லும்

முகட்டு வளையில் இருந்த ஒரு பல்லி சொல்லும் சத்தம் கேட்டது.

இது வேறை. . .நடராசா வாhத்தியார் தானே வந்து முறையிட்டதாலை தான் நான் தலையிட்டனான். . .அப்பவும் எனக்கு மனத்துன்னுள்ளை ஒரு குறை. . நானே உன்ரை கையை வெட்டித் தூக்கிப் போட்டு இப்ப பஞ்சாயத்து செய்யுறன் எண்டு . . ஆனால் சின்னக்கிளியக்காவோ . . சின்னராசா அண்ணையோ தங்களுக்கு விருப்பம் இல்லை எண்டு சொன்னால் நான் இந்தப் பிரச்சனையிலை கால் வைக்க மாட்டன். . சரி தானே?

தவமும் ஓம்எனத் தலையாட்டினாள.

அப்படியே, நானும் ஒரு கத்தியாலை என்னைத் தூக்கிய இந்தக் கையை போட்டிருக்க வேண்டும்என்றவாறு அவனது கைகளை எடுத்து தன்னைக் கட்டிக் கொண்டாள்.

இந்த கதகதப்பில் அப்படியே இருந்தார்கள்.

இரவு இனிதே கழிந்தது.

*

அவர்கள் கதைத்து ஒரு மாதம் கூட ஆகவில்லை.

வைர கோயில் திருவிழா நடந்து கொண்டிருந்தது.

ஏழாம் திருவிழா அன்று நெசவுக்கு போற பிள்ளைகளுடன் இரவு நாடகம் பார்க்கப் போன பறுவதம்; வீட்டுக்கு வரவில்லை.

சின்னக்கிளியக்கா சண்டியனிடம் தான் ஓடி வந்தா.

பொறு அக்கா பயப்பிடாதை. . .கூட வேலை செய்யுற பிள்ளைய் வீட்டை போயிருப்பாள். . .வந்திடுவாள்

இல்லையடா தம்பி. . இவர் எல்லா வீட்டையும் போட்டு வந்திட்டார்

சண்டியனுக்கு எங்கோ உறைத்தது.

தவம் இருந்து தன்னுடன் மொட்டையனைப் பற்றி கதைத்தது ஞாபகம் வந்தது.

பொறு அக்கா நான் எப்பிடியும் ஆளோடை வாறன்

 

மோட்டார் சைக்கிளை எடுத்தக் கொண்டு, மொட்டையனைத் தேடிப் போனான்.

வழியில் சீனியன் வந்து கொண்டிருந்தான்.

மொட்டையனைக் கண்டணியா

இல்லை அண்ணை

கண்டால் வீட்டை ஒருக்கா வரச் சொல்லு

ஓம் அண்ணை ஏதும் அவசரமோ

இல்லை

அப்பால் நகர்ந்தான்.

வைரகோவிலுக்கும் சந்தைடிக்கும் இடையில் இருந்த குளத்தடியில் ஆட்கள் குழுமி நிற்பது போல இருந்தது.

 

பொலிஸ் ஜீப் வேறு நின்றது.

சண்டியன் கிட்டவாகப் போக கிட்டவாக நின்றவர்கள் எட்டவாகப் போனார்கள்.

பறுவதம் உயிரற்று கிடந்தாள்.

அரைத்தாவணி கொஞ்சம் கலைந்திருந்தது.

சண்டியனின் அருகே வந்த பொலிஸ்கார ஆறுமுகம், அண்ணை இது தற்கொலை இல்லை கொலை அதுவும் கற்பழிச்ச பிறகு கழுத்தை திருகி இருக்கு எண்டு இன்ஸ்பெக்டர் சொல்லுறார்

உஷ். .. இன்ஸ்பெக்டரிட்டையும் டாக்குத்தரிட்டையும்; சொல்லி தற்கொலை எண்டு எழுதச் சொல்லு . . உடம்பைக் கீறிக் கிழி;க்க வேண்டாம். . .நானே வந்து ஒரு மணித்தியாலத்துக்கை கொண்டு போறன்

மோட்டர் சைக்கிளில் ஏறிப் பாய்ந்தான்.

மீண்டும் சீனியனையும். . .மொட்டையனையும் தேடி. . .

சீனியன்தான் மீண்டும் அகப்பட்டான்.

பறுவதம் செத்துப் போனாள் தெரியுமோ

ஓமண்ணை. . .நான் இப்ப கேள்விப்பட்டனான்

வேறை ஏதாவது. . .கேள்விப்பட்டணையோ. . .

ஓமண்ணை மொட்டையன் அவள் நெசவுக்கு போகேக்கையும் வரேக்கையும் பின்னாலை திரிஞ்சவனாம். . .

அப்ப என்னத்து என்னட்டை நீ சொல்லேல்லை

இரண்டு பேருக்கும் விருப்பம் எண்டு நினைச்சனான் அண்ணை. .

உன்ரை ஆட்களிட்டை சொல்லி மொட்டையனைத் தேடச் சொல்லு. . . எங்கை இருந்தாலும். . . எனக்கு தகவல் தா. . .சின்னராசா கொள்ளிக்குடம் உடைக்கேக்கை அவன் இந்த உலகத்திலை உயிரோடை இருக்க கூடாது

திரும்ப குளத்தடிக்கு வந்தான்.

பறுவதத்தின் பிரேதத்தை வானில் ஏற்றிக் கொண்டு இருந்தார்கள்.

ஆஸ்பத்திரியிலை வந்து வேண்டிக் கொள்ளுங்கோ அண்ணை

வான் புறப்பட்டது.

பின்னால் சண்டியன் மோட்டார் சைக்கிளில்.

அடுத்த ஐந்து பத்து நிமிடத்துள் ஊருக்குள் கதை பரவி விட்டது.

பறுவதம் குளத்துக்குள் விழுந்து தற்கொலை செய்து விட்டாளாம் என்று.

சின்னக்கிளியக்கா வீட்டு முற்றத்தில் ஊரே கூடிவிட்டுது.

சின்னராசா அண்ணை பயித்தியம் பிடித்தவர் போல அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்.

தவம் கல்லாய் இறுகிப் போயிருந்தாள்.

மடியில் மகன் எதுவும் புரியாமல் முழிசிக் கொண்டு இருந்தான்.

என்ன குறையடி உனக்கு வைச்சனாங்கள்என்ற சின்னக்கிளியக்காவின் அலறல் அனைவரையும் பிழிந்தெடுத்தது.

எவராலும் அவயால் ஆறுதல் படுத்த முடியவில்லை.

தவமும் போய் கட்டிப் பிடித்துப் பார்த்தாள்.

தவத்தின் கையில் இருந்த பிள்ளையைப் பிடுங்கி எடுத்தபடி, யாரோடையடா. .. .இனி நீ விளையாடுவாய் . யாரடா இனி உன்னை பள்ளிக் கூடம் கூட்டிக் கொண்டு போறது. . .யாராட உனக்கு சாப்பாடு தீத்திறது. . . .

இவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த தவம் இப்பொழுது உடைந்து போனாள்.

அவளின் அலறல் சின்னக்கிளியக்காவினதை விட மோசமாய் இருந்தது.

தாரும் இல்லாமல் வந்த எனக்கு தங்கச்சி போலை இருந்தியேடி. . .இப்ப ஏமாத்திப் போட்டுப் போட்டியே . . . இவனுக்கு இனி நான் டின்னத்தை சொல்லுவன். . .பள்ளிக்கூடத்தடியாலை வந்து உன்னைத் தேடப் போறானே . .சாப்பாடு தீத்த

இப்போ அங்கிருந்தவர்களுக்கு சின்னக்கிளியக்காவுடன் சேர்த்து தவத்தை சாந்தப்படுத்துவதே பெரிய வேலையாகப் போய் விட்டுது.

அடுத்த ஒரு மணித்தியாலத்துக்கிடையில் வீட்டு வாசலில் ஆஸ்பத்திரி வாகனம் வந்து நின்றது.

பின்னால் சண்டியனின் மோட்டார் சைக்கிள் வந்து நின்றது.

அவனே இறங்கி பெட்டியை மற்றவர்களுடன் தூக்கிக் கொண்டு வந்தான்.

எப்பிடியும் பிள்ளையோடை வருவன் எண்டுட்டு போனியே. . இப்ப என்ரை பிள்ளையை இப்பிடிக் கொண்டு வாறியே. . . .

சின்னக்கிளியக்காவின் ஒப்பாரி அவனை பிழிந்தெடுத்தது.

முற்றத்தில் போடப்பட்டிருந்த வாங்கில் பெட்டியை வைத்து விட்டு, அதைத் திறக்கும் பொழுது அதைப்பாக்க்கும் தையிரியமோ. . .இல்லை. . . எல்லோருமாய் குழற இருப்பதைக் கேட்கும் தையிரியமோ இல்லாமல் பின்வளவுக் கீணற்றடியில் போய் உடகார்ந்து கொண்டான்.

இரு நிமிடம் தான்.

எல்லோருமாய் சேர்ந்து ஐயோஎன ஒலித்த சத்தம் அவனின் உயிரின் ஆணிவேர்வரை சென்று ஆட்டியது.

*

அடுத்தநாள் கிரியைகள் நடந்து கொண்டிருந்தது.

தவமோகன் கிட்டக் கிட்டாகப் போய் மாலையும் கழுத்துமாய் கிடத்தி வைக்கப்பட்டிருந்த பறுவத்தை பாhத்துக் கொண்டு நின்றான்.

மாப்பிளைத் தோழனாய் வாறதிற்கு இரண்டு மோதிரம் கேட்டகதைகள் ஞாபகத்திற்கு வந்து வந்து சின்னக்கிளியக்காவையும் தவத்தையும் போட்டு வாட்டி வாட்டிக் கொண்டிருந்தது.

இருவரும் தம்மை அடக்க முடியாது விம்மிக் கொண்டு இருந்தார்கள்.

ஐயர் கிரிசையை முடிக்கட்டும். .பிறகு அழலாம். . .கொஞ்சம் பொறுங்கோ. . .பின்னால் இருந்த செல்லம்மா ஆச்சி அவர்களை அமைதிப்படுத்தினாள்

அராலிப் பாட்டுக்காரர் பாடிக் கொண்டு இருந்தார்கள்.

ஒரு மடமாதும் ஒருவனும் ஆகி

இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி

உணர்வு கலங்கி ஒழுகிய விந்து

ஊறு சுரோனித மீது கலந்து

 

பனியில் ஓர் பாதி சிறு துளி மாது

பண்டியில் வந்து புகுந்து திரண்டு

பதுமம் அரும்பு கமடம் இதென்று

பார்வை மெய் வாய் செவி கால் கைகள் என்ற

 

உருவமும் ஆகி உயிர் வளர் மாதம்

ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை

உதரம் அகன்று புவியில் விழுந்து

யோகமும் வாரமும் நாளும் அறிந்து

மகளிர்கள் சேனை தர அணை ஆடை

மண்பட உந்தி உதைந்து தவிழ்ந்து

மடமயில் கொங்கை அமுதம் அருந்தி

ஓரறிவு ஈரறிவு ஆகி வளாந்து

 

சின்னராசா அண்ணையும் மகனும் அழுதபடி உலக்கையை பிடித்தபடி. . .சுண்ணம் இடித்தபடி. .  .

முதலில சின்னராசா மட்டும் தான் கிரியை செய்வதாக இருந்ததாம். . .தமையன்காரன் தான் தானும் தங்கச்சிக்காரிக்கு கடமை செய்ய வேண்டும் என்று பிடிவாதமாய் நின்றானாம்.

சண்டியன் எட்டவாகவே நின்றான்.

சீனியன் தூரத்தில் வருவது தெரிந்தது.

சண்டியன் வீட்டுக்கு வெளியில் போனான்.

சொல்லு

மொட்டையன் தான் அண்ணை செய்திருக்க வேண்டும். நேற்று பாஷையூர் மணியத்திற்றை தன்னை இந்தியாவிலை கொண்டு போய் இறக்கி விடச்சொலலி காசு குடுத்தவனாம் – மணியன் பழைய கள்ளியங்காட்டானிட்டை ஆள் – ஓம் எண்டு ஒத்துக் கொண்டுட்டானாம்

எப்ப போகப் போறாங்கள்

இண்டைக்கு இரவு

இப்ப எங்கை நிற்கிறான்கள்

மீன் வாடியிலை

மோட்டர் சைக்கிளை எடு

கடற்கரைக்கு எட்டவாக மோட்டர் சைக்கிளை நிற்பாட்டி விட்டு மெதுமெதுவாய் இருவரும் நடந்து போனார்கள்.

மணியன் கையில் பாசலுடன் வாடியை நேக்கிப் போய்க் கொண்டு இருப்பது தெரிந்தது.

சாப்பாட்டுப் பாசலாய் இருக்க வேண்டும்.

 

இன்னமும் கிட்டவாக நெருங்கினார்கள்.

கள்ளியங்காட்டானைப் போட்ட உடனேயே அவனைத் துலைச்சு இருக்க வேணும்,

மணியம் வெறியில் கதைப்பது வெளியே கேட்டது.

 

மெதுவாக எட்டிப் பார்த்தார்கள்.

விரித்து வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டுப் பாசலுக்கும் சாராயப் போத்தலுக்கும் முன்பாக இருவரும் இருந்தார்கள்.

நீ மணியனைப் போடு. . .மற்றதை நான் பார்த்துக் கொள்ளுறன்

சண்டியன் சொல்லி வாய் மூட முதல் வாடிக்கு முனு;னால் பாய்ந்த சீனியனின் கைத்துப்பாக்கியில் இருந்து ஆறு ரவைகளும் ஒன்றன் பின் ஒன்றாகப் பாய்ந்தது.

பின்பக்கத்தால் ஓட வெளிக்கிட்ட மொட்டையனை சண்டியன் மறித்தான்.

அண்ணை நான் வேணுமெண்டு . . .

மொட்டையன் சொல்லி முடிக்க முதல்,

அண்ணை எண்டு சொல்லாதை நாயே

ஒரு வெடிதான்.

மொட்டையனின் மண்டை சிதறியது.

தலையைக் குனிந்தபடியே றோட்டை நோக்கி நடந்தான்.

பின்னால் வந்த சீனியனிடம்,

சீனி. . .இரண்டு பேரிட்டையும் கையிலை துவக்கை வைச்சுப் போட்டு வா

ஏனண்ணை இரண்டை வீணாக்குவான்

நான் சொல்லுறதை இப்ப செய்

சண்டியன் சொன்னதை சீனியன் செய்து விட்டு வந்தான்.

சீனி. . .உன்ரை உயிர் இருக்கிறவரை தவத்திற்கோ. .. உன்ரை மனிஷிக்கோ. . .சின்னக்கிளியக்காவைக்கோ. . .மொட்டையன் ஏன் செத்தான் எண்டு தெரியக்கூடாது

அண்ணை எனக்கும் பறுவதத்திணு;டை வயதிலை ஒரு பொம்பிளைச் சகோதரம் இருக்கு . . .நான் யாருக்கம் சொல்லமாட்டன்  

சரி. .நீ வண்டியை ஓட்டு. . ..ஐந்து வருஷசமாய் தொடாமல் இருந்த சவத்துக்கு இண்டைக்கு வேலையை வச்சிட்டான்

மொட்டையனின் பிரிவின் வேதனை சண்டியனை எவ்வளவு தூரம் உள்ளுக்குள் போட்டு வதைத்துக் கொண்டிருக்கிறது. . .இனியும் எதிர்காலத்தில் போட்டு வதைக்கும் என்று எண்ணியபடியே சீனியன் சுடலையை நோக்கி மோட்டர் சைக்கிளைச் செலுத்தினான்.

எல்லாம் முடிந்து ஆட்கள் போய் விட்டு இருந்தார்கள்.

தூரத்தில் சிதை எரிந்து கொண்டிருந்தது.

மோட்டர் சைக்கிள் சின்னக்கிளியக்கா வீட்டுப் பக்கமாய் திரும்பியது.

திண்ணையில் சின்னராசா அண்ணைக்குப் பக்கத்தில் இருந்த பரியாரி வேலுப்பிள்ளை , பிள்ளைக்கு வாய்க்கரிசி போட உன்னைப் பார்த்துக் கொண்டு நின்றனாங்கள; என்று சொல்லி முடிக்க முதல் சண்டியன் என அழறத் தொடங்கினான்.

அவன் இப்படி அழுது யாருமே பார்க்கவில்லை.

தவம் ஓடி வந்து கட்டிப் பிடித்து ஆறுதல் படுத்தப் பார்த்தாள்;

முடியவில்லை.

மகன்காரன் பயந்து போய் ஒரு தூணைக்கட்டிக் கொண்டு நின்றான்.

சின்னக்கிளியக்கா. . .சின்னராசா அண்ணை. . .அங்கு நின்று எல்லோரும். . .

முயற்ச்சித்துப் பார்த்தார்கள். . .

யாராலும் முடியவில்லை.

ஏதோ சொல்லிச் சொல்லி அழுதான்.

 

யாருக்கும் புரியவில்லை.

சீனியன் மொனமாக அழுது கொண்டி நின்றான்.

அனைவரும் அவனுடன் சேர்ந்;து அழுதார்கள்.

*

எப்பவும் பக்கத்திலேயே திரிந்து கொண்டிருந்த மொட்டையன். . . சின்ன வயதில் இருந்து கையுக்கும் காலுக்கும் இடையில் திரிந்து கொண்டிருந்து. . .பின் வளர்ந்து. . பெரிய பெண்ணாகி. . .தவமோகனுக்குப் பின்னால் எப்பவும் திரிந்து கொண்டிருந்த பறுவதம். . .இரண்டு பேரும் ஒரே தருணத்தில் அவனை விட்டுப் போனது. . . தனித்துப் போய்விட்ட உணர்வே அவனுக்குள் நிறைந்திருந்தது.

சின்னக்கிளியக்காவையோ. . .சின்னராசா அண்ணையையோ பார்க்கும் பொழுது அவனுக்குள் ஒரு குற்ற உணர்வு அவனைக் கொன்று கொண்டு இருந்தது தன் வீட்டை அவன்கள் வரத்தொடங்கியபடியால் தானே பறுவதத்திற்கு அந்த நிலை வந்தது என்று.

தவம் எச்சரித்த பொழுது கொஞ்சம் முழித்திருக்கலாம் தான்.

ஆனால் காலம் கடந்த ஞானம் – தோல்வி வந்த பின் தானே அனுபவம் வருகிறது.

வெற்றி வரும் பொழுது அறிவை அது மறைக்கிறது.

இப்பொழுது தவம் தான் காலையிலும் பின்னேரத்திலும் மகனை பள்ளிக்கூடத்துக்கு கொண்டு போய்க் கொண்டு வருவது.

எல்லோரையும் விட மகன் சரியாக பாதிக்கப்பட்டு இருந்தான்.

விளையாட்டுக் குறைவு . . . சாப்பாடு குறைவு. . . அதிலும் பிடிப்பில்லாதவன் போல். . .சிலவேளை பறுவதம் வீட்டு வேலியஎயில் போய் நின்று வேலிக்கு காரணமில்லாமல் தடியால் அடித்துக் கொண்டு நிற்பான்.

 

சூறாவளி ஒன்று வந்து எல்லாவற்றையும் பிரட்டிப் போட்டு போனது போல அந்த மரணம் அனைத்து பேரின் சந்தோஷங்களையும் வாரி எடுத்துக் கொண்டு போயிருந்தது.

சண்டியனும் அந்தியேட்டிவரை பெரிதாய் சந்தையடிப் பக்கம் போக வில்லை எல்லாத்தையும் சீனியனும், சீனியனின் சிபார்சில் மொட்டையனுக்கு அடுத்ததாய் இருந்த முருகனும் கவனித்துக் கொண்டு இருந்தார்கள்.

 

அந்தியேட்டி அன்று முழுக்க சின்னக்கிளி அக்கா வீட்டை நின்று விட்டு பின்னேரம் போல் தனியே கீரிமலைக்குச் சென்று மொட்டையனுக்கு ஆத்மசாந்திப் பூஜை செய்துபோட்டு வந்தான்.

அதன் பின் தான் அவன் மனம் கொஞ்சம் நிம் மதியாய் இருந்தது.

*

காலம். . .

அது ஓடிக் கொண்டு தான் இருந்தது.

கவலைகள், சோகங்கள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள். . .அத்தனையுடனும் அது ஓடிக்கொண்டு இருந்தது.

தவமோகன் இப்பொழுது ஐந்தாம் வகுப்புக்கு போய்க் கொண்டிருந்தான்.

அடுத்த வருடம் மானிப்பாய் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும் .. .அதற்கு நல்ல மார்க்குகள் வேண்டும் என்பதால் தவம் எப்பொழுதும் அவனுக்கு முன்னாலும் பின்னாலும் தான்.

சண்டியன் இப்போ சந்தையடிக்கும் மற்ற மற்ற ஊர்களுக்கும் போகத் தொடங்கி விட்டான். வழமையோல ஊர்ப் பஞ்சாயத்துகள் பார்ப்தற்கே அவனுக்கு நேரம் சரியாய் இருந்தது.

கோட்டுக்குப் போனால் அப்புக்காத்து, தவணைகள், அது இது என்றெல்லாம் இழுபட்டு போவதைவிட சண்டியனிடம் போனால் அவன் தீர்த்து வைப்பான் என்று சனம் நம்பத்தான் செய்தது.

இங்கு மேல் கோட்டு அது இது என்று எதுவுமில்லை.

தீர்ப்பு இறுதியானது.

அதனால் வழக்குகளில் தோற்றவர்களிடம் அவன் தன் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டே போனான். தனக்கு எவ்வளவு ஆதரவு இருக்கின்றதோ அதேயளவு எதிர்ப்பும் இருக்கிறது என்பதை அவன் அறியாமலும் இல்லை.

சிவப்புக்கம்பளத்தில் அவன் நிற்கும் தோற்றம் தான் எல்லோருக்கும் தெரியும். . .அனால் எத்தனையோ பேர் அதை இழுத்துக் கவிழ்ப்பதற்கு சந்தர்ப்பம் பார்த்திருக்கிறார்கள் என அவனுக்கு மட்;டும் தான் தெரியும்.

எனவே தான் மிகக் கவனமாக இருந்தான் – ஆனால் யாரையும் முன்னைய காலங்களைப் போல் வேட்டை ஆடுவதில்லை.

ஐந்து வருடத்துக்கு முதல் மொட்டையனைச் சுட்ட பின் யாரையும் நோக்கி அவன் துப்பாக்கிகள் நிமிர வில்லை. அதற்;கு தேவையும் இருக்கவில்லை.

இந்த வேளையில் மீண்டும்; பாராளுமன்றத் தேர்தல் வந்தது.

இந்த முறை தேர்தலில் கட்சிகள் தனித்தனியே போட்டி போடாமல், இலங்கை முழுக்க எல்லோரும் கூட்டாக சேர்ந்து குதிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

 

எங்கு எங்கு தமிழர்கள் இருக்கின்றார்களோ அங்காங்கு எவ்வாறு வாக்குவேட்டை நடாத்துவது என்று அனைத்து அரசியல்வாதிகளும் சேர்ந்து மண்டையைக் குழப்பிக் கொண்டு இருந்தார்கள்.

யாழ்ப்பாண பிரதேசப் பிரதேச. . அதிலும் குறிப்பாக சங்கானையினதும் அதைச்சார்ந்த சுற்று வட்டப் பிரதேச வாக்குகளுக்கு சண்டியனிடமே சமரசம் செய்ய வேண்டியிருந்தது.

வெறுமே சாராயத்துக்கு சண்டித்தனம் செய்து கொண்டு இருந்த தன்னை காலத்திற்கு காலம் எல்லா அரசியல்வாதிகளும் தான் இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டதை மிகவும் விளக்கமாய்ச் சொல்லி தன்னை இந்;த விளையாட்டுக்கு சேர்க்க வேண்டாம் எனச் சொன்னான்.

அவர்கள் பணத்தால் பேசிப்பார்த்தார்கள்.

பயனில்லை.

தாம் இலங்கையில் பெரிய எதிர்கட்சி ஆகினால் தமது அரசியல் எவ்வாறு இருக்கும் என்று கொஞ்சம் மிரட்டல் தொனியில் கதைத்துப் பார்த்தார்கள்.

பயனில்லை.

சரி நல்லாய் குடும்பம் குட்டியளோடை சந்தோஷமாயிருஎன்று சொல்லிவிட்டுப் போனார்கள்.

ஆனால் சொன்ன தொனி அவனுக்கும் பக்கத்தில் நின்ற சீனியனுக்கும், முருகனுக்கும் பெரிதாக பிடிக்கவில்லை.

போட்டுத் தள்ளியிருக்க வேணுமண்ணை

சும்மா இரடா. . சீனி. . .அவனைப் போட்டதுக்கு பிறகு எனக்கு துவக்கை தொடவே அரியண்டமாய் இருக்கு

நீ சொல்லு அண்ணை. . .நாங்கள் செய்யுறம். .

சும்மா விடுங்கடா.. . இனியும் முறுகினால் பார்ப்பம். . .

அண்ணை அவன்கள் குடும்பம் குட்டியளோடை சந்தோஷமாயிரு என்று சொல்லிப் போட்ட தொணி சரியில்லை அண்ணை அக்காவையும் பிள்ளையும் கொஞ்சம் கவனமாய் இருக்கச் சொல்லு அண்ணை

அவனும் சரி எனத் தலையாட்டி விட்டு போய்விட்டான்.

வீட்டை போன பொழுது, இஞ்சை பாருங்கோ. . .சொல்லக் சொல்லக் கேட்கிறானில்லை. . .நாளையிண்டைக்கு சோதினை. . படிக்காமல் படுத்து படுத்து கிடக்கிறான்.. .எனக்கு இவனோடை கத்தி கத்தி தொண்டை வறண்டு போச்சுதவத்தின் முறைப்பாடு தொடர்ந்தது.

தகப்பனைக் கண்டவுடன் எழும்பி சுவர்கரையில் இருந்தான்.

டே. .உனக்கு என்ன குறைவிட்டனாங்கள். . .படி ராசா. . .அடுத்த வருஷம் நீ மானிப்பாய்க்கு போய் படிக்கிறதுக்காகத் தானே கொம்மா குழறுறா. . .நீ நல்லாய் வந்தால் போதுமடா. .

பெயில் விட்டால் அடிப்பீங்களா

கொன்று போடுவன். . .

பிள்ளைக்கு புத்தி சொல்லுற வடிவோ இதுஇப்பொழுது தவம் மகனின் பக்கம் மாறிவிட்டாள்.

சண்டியனிடம் இருந்து அவமானப்பட்டுத் திரும்பிய அரசியல்வாதிகள் அனைவரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

ஒன்றில் புதுச்சண்டியன் ஒருவனை உருவாக்க வேண்டும்.

அல்லது சண்டியனின் கூட்டத்தை உள்ளுக்குள்ளால் உடைக்க வேண்டும்.

அல்லது அவனை மனத்தளவிலை ஆடவைக்க வேண்டும். . . அவன்ரை மனுஷி. . .பிள்ளை. . .கூட்டாளிகள். . ..

அவர்களில் வயதில் கூடிய பழுத்து அனுபவம் மிக்க ஒருவர் சொன்னார், அது மூன்றும்; ஒரு நேரத்திலை நடக்க வேண்டும்

இந்த சம்பாஷனை நடந்து ஒரு கிழமை கூட ஆகவில்லை.

 

பள்ளிக் கூடத்தால் தவமோகன் வீட்டை வரவில்லை.

சண்டியனுக்கு உலகமே சுத்தியது. . .தவம் தலைதலையாய் அடித்துக் கொண்டாள்.

அண்ணை அண்டைக்கு சொன்னதை அவன்கள் செய்து போட்டான்கள்முருகன் ஞாபகப்படுத்தினான்.

யார் என்ன சொன்னவங்கள். . .சொல்லுங்கோ. . .என்ரை பிள்ளைக்கு என்ன நடந்தது. . .

சும்மா இரு.. .அவனுக்கு எதுவும் இல்லை. . .சும்மா எலக்ஷனுக்கு நிண்டவங்கடை கதையை இவன்கள் தேவையில்லாமல் கதைச்சுக் கொண்டு நிற்கிறான்கள்

தவத்தை சமாதானப்படுத்தினாலும் அவன் மனம் அடித்துக் கொண்டது.

முருகன். . .வண்டியை எடு

தன்னுடன் வந்து சமரசம் பேசினவர்களை நேரே தேடிப்போனான்.

சொல்லுங்கோ. . .பிள்ளையை என்ன செய்தனிங்கள். . .

சண்டியனின் தோற்றம் அவர்களை நடுங்க வைத்தது.

உங்களுக்கு எத்தினை வோர்ட்டு வேணும் . . .பிள்ளையைத் திருப்பி தாங்கோ

அவனின் கெஞ்சல் அவர்களுக்குள் வெற்றிக் கழிப்பை உண்டு பண்ணியது.

என்ரை பிள்ளைக்கு ஏதும் நடந்திருந்தால் இஞ்சை எங்கேயும் எலக்ஷன் நடக்காது

அவனது மிரட்டல் இப்போ அவர்களுக்கு ஏளனமாகப்பட்டது.

அதற்காக காரணம் அப்பொழுது சண்டியனுக்கு விளங்கவில்லை.

சீனியன் வீட்டை வண்டியை விடு

கார் சீனியன் வீட்டை போய் நின்றது.

வீடு பூட்டியிருந்தது.

அண்ணை.. . . .முருகன் தயங்கினான்.

 

என்ன சொல்லு. . எதை எண்டாலும் சொல்லித் துலை

அண்ணை நான் தானே காசு சேர்க்கிறனான். . .

ஓம். . .

ஆனால் நான் இருவரை காணாத அளவு காசுக்கட்டோடை சீனி அண்ணை முந்தநாள் பாங்குக்கு போய்க்கொண்டு இருந்தவர்

சண்டியனுக்கு ஏதோ விளங்கிக் கொண்டு வருவாப்போல் இருந்தது.

அண்ணை அவனை வேண்டிப் போட்டாங்கள் எண்டு நினைக்கிறன்

இந்தப் பொறுக்கியும் எனக்கு துரோகம் செய்து போட்டுதோ. . .டே அவன் எங்கை இருந்தாலும் தூக்கு.. . நான் என்ரை பொடியயை தேடிக்கொண்டு வாறன்

சண்டியன் விரைந்தான்.

கட்சி அலுவலகம் பெரிய ஆரவாரப்பட்டுக் கொண்டிருந்தது.

சீனியனை தங்களுக்குள் கொண்டு வந்ததை பெரிய வெற்றியாக அவர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

சண்டியன் வீட்டு முற்றத்தில் பெரிய கூட்டமே கூடியிருந்தது.

தவம் தலை தலையாய் அடித்துக் கொண்டிருந்தாள்.

 

சங்கானையின் மூலை முடுக்குகள் எல்லாம் பிள்ளையைத் தேடிக்கொண்டு இருந்தார்கள்.

குளத்தடி. . . கிணறுகள். . . கோயில் கேணிகள். . .ஒன்றும் விடாமல் சல்லடை போட்டுத் தேடினார்கள்.

விசயம் அறிந்து நடராசா வாத்தியாரும் தனது சைக்கியில் வீட்டை வந்து இறங்கினார்.

தம்பி. . . நீ பிள்ளை எதுக்கும் பேசினனீயோ

இல்லை ஐயா

பிள்ளையை எதுக்கும் வெருட்டினனியோ

இல்லை. . .ஐயா

வடிவாய் யோசிச்சு சொல்லு. . . ஏதும் கொண்டு போடுவன் எண்டு சொன்னனியோ

ஏனய்யா இப்பிடிக் கேட்கிறியள். . .அவனைச் சும்மா பேசுறது தான்

நடராசா வாத்தியார் ஒரு கணம் மௌனமாய் இருந்தார்.

அந்த மௌனம் சண்டியனுக்கு பயத்தை கொடுத்தது.

ஏனய்யா இப்பிடிக் கேட்கிறியள். . .எனக்கு பயமாய் கிடக்கு

நடராசா வாத்தியார் அதிக நேரம் சண்டியனோடு கதைத்துக் கொண்டிருப்பதையும்,

சண்டியனின் முகம் கறுத்துப் போய்க் கொண்டு இருப்பதையும்; அவதானித்த தவம் எழுந்து சண்டியனுக்கு கிட்டவாக வந்தாள்.

 

சண்டியன் தவத்தின் கையை இறுகப் பிடித்தான்.

அவனின் கை உதறுவது நன்கு தெரிந்தது.

நேற்று சோதினையில் அவன் பெயில். . . வீட்டுக்கு போனால் அப்பா கொண்டு போடுவர் எண்டு சொன்னான். .நான் சிரித்துக் கொண்டு உன்ரை அப்பாவை எனக்கு நல்லாத் தெரியும். . .நீ பயப்பிடாமல் போஎண்டு சொல்லி அனுப்பி வைச்சன்

நடராசா வாத்தியார் சொல்லி முடியவில்லை.

Nயுh தவம் அவன் எங்களை எல்லாம் ஏமாற்றிப் போட்டு எங்கடை தோட்டத்துக் கொட்டிலுக்கை கிடக்கிறான். . .சின்னக்கிளியக்கா குழறிக் கொண்டு வந்தாள்.

தவம் அந்த இடத்திலேயே விழுந்தாள்.

சணடியனுக்கு தான் என்ன செய்கின்றேன் என்றே தெரியவில்லை.

ஐயோ என்ரை பிள்ளையைக் கொண்டு போட்டனேஎன்று வீடு. . .வளவு. . றோட்டு. . .கிணற்றடி எல்லாம் ஓடிக்கொண்டு இருந்தான்.

அனைவருக்கும் அவனைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது.

சங்கானையின் சண்டியன். . .ஒரு பைத்தியக்காரன் போல். . .

சண்டியன் கிணற்றுக்குள் ஏதாவது விழுந்து விட்டாலும் எனப் பயந்து அவனின் பிடித்து ஒரு நிலைப்படுத்த கொஞ்சப் பேர் முயற்சித்துக் கொண்டு இருக்க மற்றைய ஆட்கள் சின்னக்கிளியக்காவின் தோட்டத்தின் நடுNவுயிருந்து குடிலைச் சுற்றி சூழ நின்றார்கள்.

தவமோகன் குப்புறப்படுத்திருந்தான் – கைகளில் பொலிடோல் போத்தல்.

Nயுh உன்ரை கொக்காட்டை நீயும் போட்டியோ

பறுவதத்தை நினைத்து சின்னக்கிளியக்கா ஒப்பாரி வைத்துக் கொண்டு இருந்தாள்.

*

மகனின் அந்தியேட்டிவரை சண்டியன் வீட்டை விட்டு வெளிக்கிடவே இல்லை.

தவத்தை நிமிர்ந்து பார்க்கவே அவனுக்கு கஷ்டமாய் இருந்தது.

எதிலும் அவன் தப்பு எதுவுமில்லை.

ஆனால் மனம் கஷ்டப்பட்டது.

ஒருநாள் தவம் சொன்னாள்.

இப்பதான் எனக்கு ஒரு கை இல்லாமல் இருக்கிற மாதிரி இருக்கு.

சண்டியன் அவளைப் பரிதாபமாய் பார்த்து விட்டு மீண்டும் தலையைக் குனிந்து கொண்டான்.

சீனியன் பார்த்த எல்லாக் காரியங்களையும் முருகனே பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

பல இடங்களில் ஆட்கள் காசு கொடுத்து சறுக்கப் பார்த்தார்கள்.

 

இதைவிட சீனியனும் புதிதாக தனக்கு என்று காசு கேட்க தொடங்கி விட்டானாம் என்ற செய்திகள் வரத்தொடங்கியது – இது சண்டியனுக்கு செலுத்திய கப்பத்தை விட அதிகமாய் இருந்ததாம்.

 

முருகன் தகவல் சொன்ன பொழுது, பிள்ளையின்ரை அந்தியேட்டி முடியட்டும் நான் வந்து பார்க்கிறன்என முருகனை ஆறுதல் படுத்தினான்.

 

தோல்வி என்பது சரிவு.

இந்தச் சரிவு மலையிலிருந்து மெதுவாய் இறச்கிப் போகும் நடை பாதை மாதிரியும் இருக்கலாம். . . .அல்லது மண்ணரிப்பு வந்து திடீரெனத் தோன்றும் பெரிய பள்ளம் மாதிரியும் இருந்கலாம்.

சண்டியனுக்கு இந்த இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்கிறது.

மொட்டையனின் மறைவு. . .சீனியனின் துரோகம். . . நடைபாதைச்சரிவு என்றால் மகனின் மறைவு .. .அது பள்ளத்தாக்கு. . . .

இது இரண்டிலும் இருந்து மெதுமெதுவாகத்தான் எழும்பி வர வேண்டும்.

அந்தியேட்டிக் காரியங்கள் முடிய அடுத்தநாள் சந்தைக்கு வந்திருந்தான்.

சவரம் செய்யாத முகம். . . .ஒழுங்காய் வாராத தலை.. . .அயன் செய்யாத சேட்டு . . .வேட்டி. . .

பழையகாலச் சண்டியன் போல இருந்தான்.

போனமாதம் வரை அவனைப் பார்க்கும் இருந்த களை. . .தோற்றம். . .கம்பீரம் . . .அனைத்தும் எங்கேயோ தொலைந்து போயிருந்தது.

எலக்ஷனுக்கான கொடிகள் எங்கும் பறந்து கொண்டிருந்தது.

புதுச்சந்தை கட்டுவதற்காக பழையசந்தையை இடித்துக் கொண்டு இருந்;தார்கள்.

எங்கும் புழதியும். . .கட்டடம் இடிக்கும் எந்திரங்களும். . .றைக்டர்களும். . .

செல்லத்துரை அண்ணையின் கடையில் போய் உட்கார்ந்தான்.

அவன் வழமையாக காலையில் குடிப்பும் முட்டைக் கோப்பியை கொண்டு வந்து கிட்டவாக வைத்தார்.

தம்பி. . .இந்த ஒரு மாதத்துக்கு இடையிலை சந்தை நல்லாய் மாறிப்போச்சுது

நிமிர்ந்து பார்த்தான்.

எல்லாம் உங்களோடை இருந்தவன்ரை கூத்து. . .நீங்கள் வளர்த்து விட்டீங்கள். . .அவங்கடை அட்டகாசம் தாங்குதில்லை. . .அவனுக்கு பின்னாலை நல்ல அரசியல் பலம். . .பொலிசு வேறை

முருகன் எல்லாம் சொன்னவன். . .நான் வந்திட்டனில்லை. . .. இனிப்பார்த்துக் கொள்ளுறன்

கோப்பியைக் குடித்த விட்டு சந்தை இடிப்பதை புதினம் பார்ப்பதற்காக எழுந்து போனான்.

பழைய சந்தையின் முக்கால்வாசியைச் சுற்றி கம்பி வேலி போட்டிருந்தார்கள்.

வெளியே கொஞ்சப் பிரதேசத்தில்தான் சந்தை நடந்து கொண்டிருந்தது.

அவனைக் கண்டதும் எல்லோரும் துக்கம் விசாரித்தார்கள்.

மகனின் இறுதிச் சடங்கிங்கு செல்லாத தூர இடத்து வியாபாரிகள் தங்கள் அனுதாபத்தையும் ஆறதலையும் சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.

சண்டியனின் மனனுக்கு எப்பொழுதும் நல்ல கயர் உள்ள விளாம்பழங்களை வைத்திருந்து கொடுக்கும் சீரணி ஆச்சி அவனைக் கண்டதும் விம்மியழத் தொடங்கி விட்டா.

ஏன் ஆச்சி. . .நடு வெய்யிலுக்கை இருக்கிறிங்கள். . .

அந்தக் கரையிலை ஒரு பத்தியை போட்டுட்டு உரச்சாக்கை மேலை போட்டுட்டு இருக்கலாமே

தார் மேனை உதுக்கு காசு செலவளிக்கிறது

பொறு ஆச்சி . . உங்கை பார். . .எத்தினை பழைய தடி தண்டுகள் அந்த கட்டிடத்துக்கை கிடக்கு. . .அதிலை நாலு தடி எடுத்தால் காணும். . .

டே சிவலிங்கம். . .அதிலை போய் நாலு தடி எடுத்துக் கொண்டு வா

சிவலிங்கம் கம்பி வேலிக்கு மேலால் தாவிப் போய் இடித்த தூ;களுக்கு இடையில் கிடந்து தடிகளை இழுத்தொடுத்தான்.

அப்பொழுது பழைய சந்தையை இடிப்பதற்கு ஏலத்தில் எடுத்த நவாலியான்

டே தாரடா கம்பி வேலியாலை பாய்ஞ்சு வந்;து தடி எடுக்கிறது

சுpவலிங்கம் திரும்பி சண்டியனைப் பார்த்தான்.

நான் எண்டு சொல்லடா

நுவாலியான் சண்டியனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றான். . . ஆனால் கண்டதெல்லை.

எந்தக் கொம்பன் எண்டாலும். . .ஏலத்திலை எடுத்தவனுக்கு தான் எல்லாம் சொந்தம் . .. கறள் பிடிச்சு ஆணி எண்டாலும்

சங்கானைக்குள்ளை வந்திட்டு என்ன நியாயம் கதைக்கிறியோஎன சண்டியன் வேலியை தாண்டப் பார்த்தான்.

கால்கள் சறுக்க கீழே விழுந்து விட்டான்.

ஆனாலும் எழுந்து பின் நிதானமாக வேலிமீது ஏறி உள்ளே போனான்.

ஒருவன் முதலாளியுடன் சண்டிதனத்துக்கு வருகிறான் என்று புரிந்து கொண்டதும் நவாலியானின் வேலையாக்கள் அனைவரும் தண்டு தடிகளை எடுத்துக் கொண்டார்கள்.

சண்டியன் யாரைப்பற்றையும் கவலைப்படவில்லை.

நவாலியானுக்கு காலால் எட்டி ஒரு உதை.

நவாலியான் எட்டவாகப் போய் விழுந்தான்.

அடுத்து காலை சண்டியன் தூக்க முதல் நவாலியானின் ஆட்கள் எல்லாம் அவனைச் சூழ்ந்து விட்டுடார்கள்.

சண்டியக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை.

அனைவரும் சேர்ந்து தாக்கத் தொடங்கினார்கள்.

சிவலிங்கம் தடுக்ப் பார்த்தான்.

அவனுக்கும் அடி விழுந்தது.

வேலியால் பாய்ந்து போய், பஸ் ஸடான்ட் பக்கம் ஓடிப்போய் அண்ணைக்கு அடிக்கிறாங்கள்என்று குரல் கொடுத்துப் பார்த்தான்.

யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை சண்டியனுக்கு உதவினால் சீனியனைப் பகைக்க வேண்டும் என்று.

முருகன் வேறு யாழ்ப்பாணம் போயிருந்தான்.

சண்டியன் மயங்கிக் கொண்டு போனான்.

இப்பொழுது எல்லோரும் சண்டியனை விட்டு விலத்திப் போய்விட்டார்கள்.

முகம் எல்லாம் வீங்கியிருந்தது.

மூக்கடியால் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

செய்தி தவத்துக்கு அறிவிக்கப்பட்டது.

சின்னக்கிளியக்கா, சின்னராசா அண்ணையுடன் ஒடி வந்தாள்.

ஒரு மலை புரண்டு போய்க்கிடந்தது போன்றிருந்தது.

எல்லேருமாய் அவனைத் தூக்கி வானில் கொண்டு போய் ஏற்றினார்கள்.

சங்கானை ஸ்தம்பித்து நின்றது.

சண்டியனுக்கு துரை அண்ணை வந்து தன்னை தூக்கி கொண்டுபோவது போல இருந்தது.

நீ தவத்தோடை சன்னதிக்கு வந்திடடா

துரை அண்ணை சொல்லுவது போல இருந்தது.

*

இப்பொழுது சங்கானை முற்றாக மாறி விட்டது.

சீனியனின் அடக்கு முறையும் அதிகாரமும் கொடிகட்டிப்பறந்தது.

நீதி. . .அநியாயம் என்ற கதைக்கே இடம் இருககவில்லை.

எல்லாத்துக்கும் கப்பம். . .எதற்கெடுத்தாலும் வரி. . .

சண்டியன் காலத்தில் கடைக்காரர் மட்டும் வரி செலுத்த வேண்டியிருந்து.

இப்பொழுது சந்தைக்கு வரும் கடலைக்காற ஆச்சி தொடக்கம் வரி செலுத்த வேண்டி இருந்தது.

சண்டியனை இப்பொழுது தான் தாம் இழந்து விட்டதாக சங்கானை கவலைப்பட்டது.

அவன் இருக்கேக்கையும் கொஞ்சம் மனக்;டங்கள் இருக்கத்தான் செய்தது. ஆனால் இப்ப அவன் இல்லாமல் இருக்க முடியாமல் இருக்குசில பெரிசுகள் பேசிக்கொண்டன.

 ண்டியன் எங்கே போனவன்?

ஆறு மாதத்திற்கு பிறகு யாரோ சன்னதி மடத்தில் கண்டதாக தகவல் சொன்னார்கள்.

முருகனும் நாலைந்து பேருமாய் சன்னதி மடத்துக்கு வானில் விரைந்தார்கள்.

நேற்றுவரை உதுலை தான் இரண்டு பேரும் இருந்தவை. . .தாரோ துரைஅண்ணை வரச் சொன்னவர் எண்டு கதிர்கமத்துக்கு நடையாய் போட்டினம்சுவாமி மடத்தில் இருந்த ஒரு சாமியார் சொன்னார்.

முருகன் குனிந்த தலையுடன் வானில் வந்து ஏறினான்.

 

(முற்றும்)

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)