கிணற்றடி… – சிறுகதை

கிணற்றடி… – சிறுகதை

”ஆரம்பத்தில் அகதிகளாக புலம் பெயர்ந்து சென்ற  தமிழர்கள் ஒரு செஞ்சிலுகைச் சங்கத்தில் இன்னோர் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இடம் மாறும் பொழுது தங்கள் உடமைகளை எடுத்துச் செல்வதற்கு சாதாரணமாக குப்பைகள் போடப்பயன்படுத்தும் கறுத்த பிளாஸ்ரிப் பைகளையே பயன்படுத்தினார்கள் என்றும்… மிகவும்  ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும்  இருந்தார்கள் என்றும்… பின்பு படிப்பு – வேலை – வீடு – கார்கள் என வந்த பொழுது ஆளுக்கு ஆள் கௌரவச் சண்டைகள் பிடித்துக் கொண்டு ஐரோப்பியர்கள் போல தனித்து தனித்து வாழத் தொடங்கி விட்டார்களாம்.

எங்கள் இடையே கோயிலடியில் சிதறிய பொங்கல், வடை, சுண்டல்களுக்களுக்கும் மீன் சந்தையில் வெட்டி எறியும் வால் – செட்டை – குடல்களுக்கும் சண்டை போடுவது போல அவர்களுக்கு இடையிலும் சண்டையாம்.

வெளிநாடுகளில் இருந்து எனது எஜமான்; வீட்டிற்கு வரும் அவரது உறவினர்கள் சொல்வதை நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு கேட்டுக் கொண்டிருப்பேன்”

(வி. ஜீவகுமாரனின் சங்கானைச் சண்டியன் தொகுப்பில் உள்ள ’நானும் ஒரு அகதியாக’ என்ற சிறுகதையில் ’உஞ்சு’ என்ற ஒரு நாயின் வாக்கு மூலம்’)

*

பத்து ஏக்கர் அளவு கொண்ட அம்மம்மாவின் பெரிய சீதன உருத்துக் காணியின் நடுவில் அமைந்திருப்பதுதான் எங்கள் கிணற்றடி.

வடக்கு தெற்காகவும் கிழக்கு மேற்காக செல்லும் பெரிய தார் றோட்டுகளுக்கும்;…. அதே போல் அந்த இரண்டு றோட்டுகளுக்கு சமாந்தரமாக செல்லும் கல்லுப் போட்ட இரண்டு ஒழுங்கைகளையும் எல்லையாக கொண்டிருந்தது அம்மம்மாவின் அந்தப் பெரிய காணி.

இந்தப் பெரிய காணியின் நட்டு நடுவே அமைந்திருந்தது அந்த கிணற்றை அம்மம்மாவின் ஆறு பிள்ளைகளும் ’கிணற்றடி’ என்றே அழைத்தார்கள்.

வெறுமே தண்ணீர் மொள்ளவும் குளிப்பதற்கும் உடுப்புகள் தோய்ப்பதற்கும் என்பதனை தாண்டி அம்மம்மாவின் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் அனைவரும் கூடும் இடம் என்பதாவோ என்னவோ கிணற்றடி என்றே அந்தக் கிணறும் அதனுடன் சார்ந்த ஒரு பரபரப்புக் காணியும் அழைக்கப்பட்டிருந்தது.

பின்னாளில் வாழைத்தோட்ட கொட்டிலில் அம்மப்பா பகல் தூங்கிக் கொண்டிருந்த பொழுது அவரின் உயிரை ஒரு புடையன் பாம்பு காவு கொண்டதின் பின் தான் உயிருடன் இருக்கும் போதே ஆறு பிள்ளைகளுக்கும் தனது காணியை பிரித்துக் கொடுக்க வேண்டும் என அம்மம்மா முடிவெடுத்தா என அப்பா சொல்வார்.

அத்தோடு பெரியம்மாக்கும் திருமணங்கள் வந்து கொண்டிருந்தனவாம்.

ஊரே கண் வைத்திருந்த அந்தக் காணி மீது பெண்பார்க்க வந்த அனைவருக்கும் இருந்தது என்பதனை அம்மம்மா அறிவார்.

எனவே ஆறு பிள்ளைகளுக்கும் தான் உயிருடன் இருக்கும் பொழுதே சரிசமனாக பிரித்துக் கொடுக்கவும் கிணற்றடியை அறுவருக்கும் பொதுவாக வைத்து எழுதுவதாக முடிவெடுத்தார்.

பகலில் கலவன் பாடசாலையில் கணிதபாடம் கற்பித்துக் கொண்டும் மாலை அல்லது சனி ஞாயிறுகளில் நிலஅளவையாளராக இருந்த சுந்தரம் வாத்தியார் வந்து, காணியை அளந்த போது அதிசயித்து விட்டார்.

காணியை எந்தப் பக்கத்தால் அளந்து பிரித்தாலும் உறுதியில் சொல்லப்பட்டிருந்த அந்தக் கிணறு நட்ட நடுவே அமந்திருந்தது.

அம்மப்பா தன் கால்களால் அளந்து அந்த இடத்தை குறித்து கிணற்றை தோண்டியவராம்.

என்றோ ஒரு நாள் காணியை பிள்ளைகளுக்குப் பிரிக்கும் பொழுது அந்தக் கிணற்றின் பங்கும் பலனும் தனது எல்லாப் பிள்ளைகளுக்கும் இருக்க வேண்டும் என அம்மப்பா யோசித்திருக்கிறார் என்பதனை சுந்தரம் வாத்தியார் சொன்ன பொழுது அம்மம்மாவின் இரண்டு கண்களாலும் ஓடிக்கொண்டிருந்ததாம் என பெரிய மாமி அம்மப்பாவையும் அம்மம்மாவையும் பற்றிப் பெருமையாக சொல்லிப் பெருமைப்படுவார் – இதே கிணற்றுக் கட்டில் இருந்து.

பெரிய வட்டமான கிணற்றைச் சுற்றி நாற்சதுர வடிவில் சீமெத்துக் கட்டு.

மூலைக்கட்டில் இருந்து இருவர் தாயக்கட்டை உருட்டவோ… ஆடு புலி ஆட்டம் விளையாட போதியளவு இடம் இருந்தது.

கிணற்றுடன் சேர்ந்து பெரிய ஒரு நீள்சதுர வடிவில் ஒரு தொட்டியும்… சிறிய வட்ட வடிவில் ஒரு தொட்டியும்… அதன் அருகே நின்று கொண்டு உடுப்பு தோய்க்க கூடியவகையில் சீமெந்துக் கல்லும் அமைந்திருந்தது.

பொதுவான எல்லா வீடுகளிலும் பாவிக்கும் குதிரை மார்க் வாளியால் 30 வாளிகள் பெரிய தொட்டியின் முக்கால் பங்கை நிரப்பி விடும். சின்ன வயதில் எங்களில் நாலைந்து பேர் அதனுள் அமர்ந்து குளிக்கலாம். நாங்கள் அதனுள் அமரும் பொழுது தொட்டி நிறைந்து விடும்.

சின்னத் தொட்டி நிறைய 7 அல்லது 8 வாளிகள் போதும். ஒவ்வொரு வீட்டாரின்  உடுப்புகள் தோய்ப்பதற்கு.

உடுப்பு தோய்த்த, குளித்த தண்ணீர் வீணாகப் போகாமல் அம்மப்பா வைத்த இரண்டு வாழையும் ஒரு செவ்விளவினியும் நாலைந்து கமுகுவும் பின் பெருகி பெருகி கிணற்றைச் சுற்றி குளிர்ச்சியாக இருக்கும்.

குறிப்பாக சின்னமாமி தொடக்கம் அம்மம்ம்மா வரை வளர்ந்த அனைவரும் தங்கள் முதுகைத் தேய்த்து ஊத்தை அகற்றும் தூண்கள் போல அந்தக் கமுகமரங்கள் விளங்கின.

தவிரவும் நுங்குப்பாக்கு… கொட்டைப் பாக்கு… நாறல் பாக்கு என அவை தந்த பலன்கள் சந்தையில் வெற்றிலை சுண்ணாம்பு வாங்கப் போதுமானய் இருந்தது.

வெற்றிலை கொஞ்சத்தை முள்முருக்கையில் படரவிடுவோமா என அம்மம்மா கேட்ட பொழுது அம்மப்பாதான் விடவில்லையும், “பொம்பிளையள் வீட்டுக்கு விலக்கு தினங்களில் குளிக்கும் தண்ணீர் வெற்றிலைச் செடிகளுக்குப் போகக்கூடாதாம்” என்று.

“ஊருக்கை சிவன் கோயில் கட்டுவதும்… வீட்டுக்கை வெற்றிலைக் கொடி வைப்பதும் விளையாட்டான வேலையில்லை” எனச் சொல்வாராம்.  

அப்படி அம்மப்பா எல்லா சின்ன சின்ன விடயங்களிலும் கவனமாம்.

*

பெரியம்மாவின் கல்யாணத்தை தொடர்ந்து… அம்மா… சின்னம்மா… பெரிய மாh இருவர்… சின்ன மாமா என அறுவரின் திருமணத்தின் பொழுது அவரவர்கள் காணிகளுக்கான வேலிகள் முட்கிலுவையால் போடப்;பட்டது – ஒரு அறிக்கைக்காக.

அனைவரின் காணிகளின் பின் பக்கத்தால் அல்லது முன்பக்கத்தால் கிணற்றடிக்கு வந்து போக ஒருவர் இருகைகளிலும் இரண்டு வாளிகளை தூக்கிச் செல்லக் கூடியளவு பாதைக்கும் இடம் விடப்பட்டிருந்தது.

எங்கள் சின்ன வயது வாழ்க்கை குறிப்பாக சனி ஞாயிறு முழுக்க இந்த கிணற்றடியைச் சுற்றியும் வெறுங்காணிகளில் கள்ளன் பொலிஸ் விளையாடுவதில் தொடர்ந்து தாச்சி… கிறிக்கட்…புட்போல்… என அத்தனை விளையாட்டுகளுக்குமான மைதானமாக அமைந்திருந்தது. ஏன்?… வளைந்த கிளைவிட்ட பூவரசம் தடிகொண்டு கோக்கி விளையாட்டு வரை அங்கு அரங்கேறும். 

காலையில் மேச்சலுக்கு அவிட்டு விடப்பட்ட மாடுகள் மாலையில் வீடு திரும்புவது போல எவர் வீட்டில் எவர் சாப்பிடுகின்றோம் என எவர்க்கும் தெரியாது.

ஏதோ ஒரு வீட்டில் அன்னதானம் ஒழுங்காக நடைபெறும் என்ற நம்பிக்கைக்கை எல்லா வீட்டிலும் இருக்கும்.

இரவுக்குத் தான் மேச்சல் முடிந்து வீடு திரும்ப, எங்கள் எங்களுக்கு எங்கள் வீடுகளில் சாப்பாடு.

அதே போல் பெரியவர்களுக்கும் ஊர் விடுப்பு… ஊர் துலாவாரம்… ஊர் கிசுகிசுக்கள்… ஊர் உலக அரசியல்… பெரிய ரவுனில் வந்திருக்கும் திரைப்படம்… எங்;கள் ஊர் கொட்டகை சினிமாவில் வந்திருக்கும் திரைப்படம்… வானொலிp நாடகங்கள் என அனைத்தும் அங்கு வந்து போய்க் கொண்டிருக்கும்.

அத்துடன் இலுப்பம்பழம்… புளியம்பழம் உடைப்பது… வெங்காயம் உரிப்பது… என வீட்டு வேலைகளும் சேர்ந்தே நடைபெறும்.

இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பு வைப்பது போல நடைபெறுவது எங்கள் கிணற்றின் தூர்வாரும் தினம் தான்.

வற்றாக் கிணறு என்று பெயர் பெற்ற எங்கள் கிணற்றை இறைக்க இரண்டு தண்ணி இறைக்கும் மெசின்கள் ஒரே நேரத்தில் வரும்.

அல்லது பின்னேரத்துக்கிடையில் தூர்;வாரி முடியாது.

இன்று ஆழடி நீர் என தொலைக்காட்சிகளில் பேசப்படும் அரசியல் விஞ்ஞான விடயங்களை நிவர்த்தி செய்யும் அளவுக்கு எங்கள் கிணற்றில் அவ்வளவு தண்ணீர் நிறைந்திருக்கும்.

அன்று தண்ணி இறைக்கும் மெசினின் உபயத்தில் கிணற்றினுள் இறங்கி தூர்வாரவுள்ள சின்னமாமாவைத் தவிர அனைவருக்கும் போதும் போதும் என்றளவுக் குளிப்பு.

சின்ன மாமாவுக்காக முதலிலேயே பெரிய தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டு விடும்.

சின்னமாமா கிணற்றினுள் இறங்கிய பின்பு தான் ஒவ்வோர் குடும்பத்தில் தேடப்பட்ட பொருட்களுக்கான விடைகள் கிடைக்கும்.

பள்ளிக்கூடத்தில் தொலைந்து போய்விட்டது எனப் பொய் சொன்ன பேனா தொடக்கம்… மா இடிக்க வந்த கனகம் களவெடுத்துக் கொண்டு போய் விட்டாள் எனச் சந்தேகப்பட்ட சின்னமாமியின் கால் கொலுசு வரை வெளியே வந்து கொண்டிருக்கும்.

சில வேளைகளில் சின்ன சின்ன நண்டுகள்…. மிக மகிழ்வான தருணம் அது.

கடைசியில் கிணற்று வாளியில் சாப்பிராணியும்… தேங்காய்ச் சிரட்டைத் தணலும் இறக்கப்பட சின்ன மாமா கிணற்றின் அத்தனை மூலைகளுக்கும் சாபம்பிராணிப் புகை காட்டிவிட்டு வெற்றி வீரனாக வெளியே வர அனைனவரும் கை கொட்டுவோம்.

சின்னமாமாவுக்காக பெரிய தொட்டி தண்ணீர் காத்திருக்கும்.

அன்று எல்லோருக்கும் பொதுச் சமையல் தான்.

அனைவரும் வீட்டுக்கொரு கறி செய்து கிணற்றடிக்கு கொண்டு வர… நிலத்திலும் கிணற்றுக் கட்டிலிலும் அமர்ந்தபடி… பூவரம் இலை கோர்த்து கையில் ஏந்தியபடி குழையல் சாதம்.

சின்ன வெங்காயத்தை வாயால் உரித்துக் கடித்தபடி சாப்பிட அப்படி ஒரு சுவை.

*

இந்தச் சந்தோசங்கள் எல்லாவற்றிலும் யார் கண்கள் பட்டதோ?

பெரியம்மாவின் மூத்த மகன் – எங்களின் மூத்தண்ணா – சின்னமாமாவின் மூத்த மகளான எங்கள் ஆசை மச்சாளில் கண் வைத்த பொழுது அந்த இரண்டு குடும்பங்களுக்கிடையில் முதல் கீறல் விழுந்தது.

மிகுதியான அம்மா – சின்னம்மா – மற்ற இரண்டு பெரியமாமா குடும்பங்களில் அம்மாவும் சின்னம்மாவும் மௌனம் காத்தார்கள். இரண்டு பெரிய மாமாக்கள் குடும்பம் இரண்டும் சின்ன மாமா குடும்பத்திற்கு ஆதரவாய் நின்றார்கள் – நாளை தங்கள் தங்கள் பெண் பிள்ளைகளுக்கும் இது மாதிரி எந்தப் பிரச்சனைகளும் வர வேண்டாம் என்ற காரணத்தால் மாமாக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருக்க வேண்டும்.

இதன் எதிரொலிப்பு மூன்று மாமாக்களின் கிலுவைக்கதிகள் வேலிகள் சீமெந்து மதிலாக மாறின.

அதிலும் வசதியான சின்னமாமா தனது வளவினுள் குழாய்க்கிணற்றை ஒன்றை போட்டதைத் தொடர்ந்து அவரின் வளவிற்கும் கிணற்றடிக்கும் இருந்த பாதையையும் மதில் சுவரால் மூடிவிட்டார்.

ஆனாலும் தன் உரிமைக்காக கிணற்று துலா – கொடிக்கயிறு – வாளி போன்றவற்றிற்கான செலவை ஆறு பாகமாக பிரிக்கும் பொழுது தன் பங்கை மட்டும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அம்மாவிடம் செலுத்தி வந்தார்.

நாட்டுப் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சம் தலைவிரிக்க மற்ற பெரிய மாமாக்குடும்பங்களில் மச்சான்மாரும் நோர்வே டென்மார்க் எனப் புறப்பட்டு அங்கு அவர்கள் நல்லாய் வர அவர்களின் காணிகளிலும் மதில்களும் ஆழ்துளைக் கிணறுகளும் அவர்கள் காணிகளிலும் அமெரிக்கன் ஸ்ரையிலில் இரண்டு வீடுகள் எழுந்தன. குஅவர்கள் காணிகளில் இருந்து கிணற்றடிக்கு செல்லும் பாதையும் மதிலால் மூடப்பட்டது.

ஆனால் அம்மா மட்டும் எதையும் கண்டு கொள்ளாமால் எல்லாச் சகோதரங்களையும் அரவணைத்துப் போய்க் கொண்டிருந்தார்.

எனக்;கும் பல்கலைக்கழகம் முடிய கனெடியப் பல்கலைக்கழத்தின் ஸ்கொலசிப் கிடைத்தது.

மூன்று வருடங்கள் எங்கள் உறவுகளை விட்டுத் தள்ளி இருந்தால் வாழ்வில் நல்லாய் வரலாம் என்ற நம்பிக்கையில் அந்த ஸ்கொலசிப்பை ஏற்பது என முடிவெடுத்தேன்.

பயணத்திற்கு முதன் நாள் பெரியம்மா சின்னம்மா மாமாமார் குடும்பங்கள் வந்து நெடுநேரம் எங்கள் வீட்டில் கதைத்துக் கொண்டு இருந்தார்கள். அவரவர்கள் இடையே மதில் சுவர்கள் இருந்தாலும் என்னுடனோ அம்மாவுடனே எந்த எல்லைக் கதியால்களும் அவர்களுக்கு இல்லை என்பதனை நானும் அறிவேன். அம்மாவும் அறிவார்கள்.

அவர்கள் அனைவரும் போன பின்பு நிலவு வெளிச்சத்தில் கிணற்றுக் கட்டில் போய் அமர்ந்து வானத்தைப் பார்த்தபடி இருந்தேன்.

அழுகை அழுகையான வந்தது.

*

பின்பென்ன?

நவாலியில் பிறந்து நயகரா வீழ்ச்சிக்கருகே வாழ்க்கை தொடங்கியது.

கிழமைக்கொரு முறை வரும் அம்மாவின் கடிதம் ஊர்ப்புதினங்கள் அனைத்தையும் சுமந்து வரும் – மாவிடிக்க வரும் சரசின் மகள் வயதுக் வந்தது தொடக்கம் சிவலை இரட்டைக் கன்றுக் குட்டிகளை ஈன்றது வரை.

பின்பு வசதிகள் வரவர அம்மாவின் கடிதங்களும் கைத்தொலைபேசிக்கு மாறி தினமும் செய்திகளை சுமந்து வந்தது.

அதனிடைய பிறேக்கிங் நியூஸ் போல சில அவரச செய்திகளும் சாமம் ஏமம் என்று தெரியாமல் வந்து என் நித்திரையைக் களைக்கும். கனடாவிற்றும் இலங்கைக்கும் உள்ள நேர வித்தியாசத்தை எத்தனையே தடவை அம்மாக்கு விளங்கப்படுத்தியும் அவா விளங்கிக் கொண்ட மாதிரி தெரியவில்லை. நானும் மீண்டும் முருங்கை ஏறும் முயற்சிகைக் கை விட்டு விட்டேன்.

அப்படி வந்ததுதான் பெரியமாமி வீட்டாரும் சிறிய மாமி வீட்டாரும் ஆழ்துளைக் கிணறு அமைத்ததும் அவர்களின் வீட்டைச் சுற்றி மதில்கள் எழுந்ததும் என்ற செய்திகள்.

என் மனதிற்கு எதுவும் நல்லாய்ப் படவில்லை.

ஆனால் அம்மா ஒரு நாள் சிரித்தபடி ”தம்பி… செலவில்லாமல் எங்கள் வீட்டின் இரண்டு பக்கத்திற்கும் மதில் வந்துட்டுதடா. இனி நாங்கள் றோட்டுப்பக்கத்திற்கும் பின் பக்க கிணற்றடிப்பக்கத்திற்கும் மதில் கட்டிவிட்டால் காணி அறிக்கையாய்…” சொல்லி விட்டு கெக்கட்டும் விட்டுச் சிரித்தா.

”அம்மா, நீ விரும்பினால் முன்றோட்டுப் பக்கம் மதிலைக் கட்டு. கிணற்றிடப்பக்கம் எதுவும் வேண்டாம்” என்று உறுதியாக கூறிவிட்டேன்.

அடுத்த அடுத்த மாதங்களில் அம்மாவின் வயோதிகம் காரணமாக கிணற்றடியில் இருந்து வாளி தண்ணியுடன் வீட்டுக்கு வரும் போது விழுந்து நாரியில் நல்ல அடி” என செய்தி வந்தது.

பதைபதைத்துப் போனோன்.

அடுத்து வந்த கோடை விடுமுறை எப்போது வரும் எனக் காத்திருந்து ஊருக்குப் போய் இறங்கினேன்.

ஆனால் நான் போய்ச் சேரமுதல்  மாமாக்கள் பெரியம்மா சின்னம்மா ஆட்கள் எல்லாம் சேர்ந்து என்னிடமும் கேட்காமல் எங்கள் வளவுக்குள் ஒரு ஆழ்துளைக் கிணற்றைப் போட்டு அம்மாக்கு நேராக குசினினுக்கு ஒரு பைப் லையைப் போட்டு விட்டார்கள்.

அவர்கள் செய்யததை எனக்கு ஏற்கவும் முடியாது, மறுக்கவும் முடியாமல் இருந்தது.

இரவு முழுக்க ஏனோ தூங்க முடியாது இருந்தது.

அதிகாலையில் பற்களைத் தீட்டியபடி கிணற்றடிக்குப் போனேன்.

என் கண்களை என்னால் நம்ப முடியாது இருந்தது.

கிணற்றைச் சுற்றி நின்ற வாழை தோடை, தென்னை, கமுகு எல்லாம் களை இழந்து நின்றது போன்றிருந்தன.

கிணற்றில் தண்ணி அள்ளும் பொழுது ஆடுகால் ரொம்பவே ஆடி எப்போ விழும் போல் இருந்தது.

கிணற்று வாளி கூட கறள் பிடித்திருந்தது.

கயிறு வேறு தேய்ந்திருந்தது.

பெரிய தொட்டியும் சின்னத் தொட்டியும் மெல்லியதாகப் படர்ந்த பாசியால் நிறம் மாறி இருந்தது.

இது எனது கிணற்றடி அல்ல என என் உள்மனம் அழுதது என் காதுகளுக்கு கேட்டது.

*

அன்று முழுக்க ஏன் எதுக்கு என்று தெரியாமல் ரவுணுக்கு போய் கால் போகும் திசைகளில் எல்லாம் புதிதாக எழுந்திருக்கும் கட்டடங்களைப் பார்த்தபடி திரிந்து… பின்பு வெயில் நன்கு தலைக்கேற மனம் ஒட்டாமல் ஏதோ ஒரு திரைப்படத்தையும் பார்த்து விட்டு மாலை போல் வீட்டுக்குத் திரும்பினேன்.

அம்மா எனக்கு நல்ல ஏச்சு, ”எத்தனை நாட்களுக்கு பிறகு வந்திருக்கிறாய் என்று எத்தனை வகைச் சாப்பாடு செய்து வைத்திருந்தனான்”.

அம்மாவின் சத்தத்தில் நான் வந்து விட்டதை உணர்ந்து பெரியம்மா… சின்னம்மா… இரண்டு பெரிய மாமா மற்றும் சின்ன மாமா வீட்டுக் காரர்கள் அனைவரும் எங்கள் வீட்டு வெளி விறாந்தையில் குழுமினார்கள்.

அவரவர்கள் இடையே இருந்த மதில் சுவர்கள் இப்போது இன்னமும் இரும்புச் சுவர்களாக மாறி இருந்தன என்பதை அம்மா என்னிடம் காலை சொல்லியிருந்தாலும் இப்போ ஏதோ ஒரு தேவைக்காக தேர்தல் கூட்டணி போல சேர்ந்து வந்திருக்கின்றார்கள் எனப் புரிந்தன.

பெரிய மாமாவே தொடங்கினார்.

”நல்ல காலம்… அம்மாக்கு இப்ப குழாய் கிணறு அடிச்சுக் குடுத்ததாலை அவா நிம்மதியாய் இருக்கிறா. நீயும் நிம்மதியாய் அங்கை இருக்கிறாய்”

”ஆம்” எனத் தலையாட்டினேன்.

”அதுதான்… இப்ப எங்கடை ஆறு வீட்டிலும் குழாய்க் கிணறு அடிச்சாச்சு. இனி எதுக்கு கிணற்றுக்கு வீண் செல…”

நான் நிமிர்ந்து பார்க்க அவர் நிறுத்திக் கொண்டார்.

”இல்லைத் தம்பி…. இனி யாருக்கும் அந்தக் கிணறு உதவப் போறதில்லை. நீயும் சம்மதித்தால் அப்படியே அதை தூரவிட்டுட்டு அந்த ஒரு பரப்புக் காணிiயையும் ஆறு பேருக்கும் பிரிச்சம் எண்டால் அந்தச் சனியனிட்டை பிரச்சனை…”

நான் நிமிர்ந்து பார்க்க சின்னம்மாவும் தன் பேச்சை நிறுத்திக் கொண்டார்.

அனைவரும் கொஞ்சம் மௌனமான இருக்க… பெரிய மாமி ஏதோ சொல்ல வாயெடுத்தார்.

சைகையால் அவரை பேசாமல் இருக்குமாறு கையை காட்டினேன்.

”உங்களுக்கு எல்லாம் அதை பராமரிக்கிறது பிரச்சனை எண்டால்… அந்த இரண்டு பரப்பையும் ஆறாகாக பிரிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால்… உங்கள் ஒவ்வொருவருக்குமுள்ள பங்குகளை நானோ வாங்கிக் கொள்கிறன்”

அனைவரும் எந்த வார்த்தையும் சொல்லாமல் அவரவர்கள் வீட்டுக்குப் போனர்கள்.

நான் எழுந்து கிணற்றடிக்குப் போனேன்.

வேலியோர பூவரசு செழித்திருந்தது.

அதில் இருந்து பெரிய ஒரு இலையை எடுத்து நீளப்பாட்டுக்கு அதனை இருபகுதியாக்கி நடுநரம்பு இல்லாத பாதியைச் சுற்றி பீப்பி செய்து ஊதிப்பார்த்தேன்.

அதே சத்தம்!

இத்தனை வருடங்களாக மறந்திருந்த பீப்பீ சத்தம் என் மனதை நிறைத்தது.

கிணற்றை எட்டிப் பார்த்தேன்.

என் நிழல் பீப்பியை ஊதிக் கொண்டு இருந்தது.

திரு. ‘நிலக்கிளி’ பாலமனோகரனின் விமர்சனம்

மதில்கள் எழ குடும்ப அங்கத்தினர் மத்தியில் தொடர்புகளும் அறுகின்றன.

ஐம்பது வருடங்களுக்கு முன் தாயகத்தில் மண்ணும் மக்களும் எத்தனை ஒத்திசைவாக வாழ்ந்தனர் என்பதைத் சித்தரிக்கின்றது இக்கதை.

மூன்று தலைமுறைகளின் கதையை இறுக்கமாகச் சொல்கிறது இந்தக் கதை.

பத்து ஏக்கர் நிலப்பரப்பின் மையமான இடத்தைக் கிணறு கட்டுவதற்கு தேர்ந்தெடுத்த குடும்பத் தலைவரின் அனுபவ அறிவுதொட்டு, அக் கிணற்றைச் சுற்றி நாளாந்தம் நிகழும் காட்சிகள், கதையின் ஒவ்வொரு பகுதியையும் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

காலமாற்றம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

அதிகரிக்கும் சனத்தொகைக்கு ஏற்ப அவர்கள் வாழ்கின்ற நிலம் பெருகுவதில்லை. அவ்வாறே அவர்களின் பாவனைப் பொருட்களும், நவீன சாதனங்களின் வருகையினால் வழக்கொழிந்து போய்விடுகின்றன.

குடும்ப அங்கத்தினர் தமது காணியைச் சுற்றி மதில்களை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.

முன்னர் போன்று வேலிகளை அமைப்பதற்கான பொருட்களும் கிடைக்காமற் போக, அந்த வேலைகளைச் செய்யும் தொழிலாளர்களும் அருகிப்போன நிலையில் சுற்று மதில்கள் எழுகின்றன.

மதில்கள் எழ குடும்ப அங்கத்தினர் மத்தியில் தொடர்புகளும் அறுகின்றன.

பொதுக்கிணறு இருக்கும் வரையில் அதைச் சுற்றி நிகழும் பல நெஞ்சைத் தொடும் சம்பவங்கள் நிகழ்கின்றன.

அவற்றையெல்லாம் சொற்சித்திரங்களாக சொல்வதில் ஜீவாவின் எழுத்தாற்றல் மிளிர்கின்றது!

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ’நிலக்கிளி’ அ. பாலமனோகரன் – டென்மார்க்


Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)