காக்க… காக்க… சிறுகதை

காக்க… காக்க… சிறுகதை

புதுமைப் பித்தனின் ”கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்;” என்ற கதையை எனது பதினைந்து வயதில் வாசித்ததில் இருந்தே எப்போதும் ஒரு பயம் இருந்து கொண்டே வந்தது… ரியூசனுக்கு என்று வீட்டில் சொல்லி விட்டு, மனோகரா தியேட்டரில் போய் 10 மணி காலைக்காட்சியையும், அக்காமாருடன் வந்து மூலைகளில் உட்கார்ந்திருக்கும் அண்ணாமாரையும் கடைக்கண்களால் ரசிக்கும் பொழுது ”கடவுள் என் பக்கத்தில் வந்து இருந்து எப்படி ரியூசன் போகுது என்று கேட்டால் என்ன சொல்வது?” என்ற பயம்தான் அது.

எனது ஐம்பதாவது வயதில் இருந்து தீவிரமாய் எழுதத் தொடங்கிய பின்பு இந்தப் பயம் இன்னமும் அதிகரிக்கத் தொடங்கியது – கடற்கரையில் பானை மூடியைத் திறந்து விட்டதும் எழுந்து வரும்  பூதம் போல.

சரி… கடவுள் வந்தால் வந்து விட்டுப் போகட்டும்… சைவச்சாப்பாடு கேட்டால் சரவண- பவனுக்கோ… அசைவ சாப்பாடு கேட்டால் மக்டொனால்ட்ஸ்க்கோ அல்லது கென்ரெக் சிக்கன் கடைக்கோ கூட்டிப் போய் விட்டால் போச்சு என்ற இருந்து விட்டேன்.

(கடவுள் எல்லாம் மாமிசம் சாப்பிடுவாரா… அப்பிடி எல்லாம் நீ நினைக்கலாமா… அபிஷ்டு என்று என்னை யாரும் திட்ட வேண்டாம்… வியாழக்கிழமை மாமிசம் உண்டு விட்டு சனிக்கிழமை பிறந்தநாள் பார்ட்டியையும் தண்ணிப் பார்ட்டியை நினைத்துக் கொண்டு வெள்ளிக்கிழமை ’அரோகரா’ என கடவுளின் கொம்புதடியை கூட்டத்தோடு கூட்டமாய் தோளில் தூக்கி வைக்கும் பொழுதும்…அல்லது சப்பாணி போட்டு பூமாலை கட்டும் பொழுதும்… கடவுள் மாமிசம் சாப்பிட்டால் தான் என்ன? சாப்பிடாமல் விட்டால்தான் என்ன? உங்களுக்கு வேண்டியதெல்லாம் நீங்கள் படைத்த மோதகம், வடை, சுண்டல், பொங்கலுக்கு பதிலாக இன்னும் பத்து  மடங்கு பலன்தானே? அல்லது இதற்கென்றே தவில்காரரும் நாதஸ்வரக்காரரும்  ஒரு தரம் வாசிக்க உபயம் இன்னார் என்று ஐயர் தர இருக்கும் காளாஞ்சியமும் தானே?)

*

அன்று ஒரு சனி; கிழமை. இரவு 9 மணியிருக்கும்.

திங்கட்கிழமை காலை எனது புத்தகம் பதிப்புக்குச் செல்ல வேண்டும்.

அதற்கிடையில் முழப் பிழை திருத்தங்களையும் செய்ய வேண்டும். அதுவும் இந்தியப் பதிப்பகத்தில் பிழை திருத்தத்திற்கு பொறுப்பாய் உள்ள பெண்ணுக்கு டென்மார்க்கில் கணனிக்கு முன்பு இருந்தபடியே சொல்லி சொல்லித் திருத்த வேண்டும்.


அவள் திருமணத்திற்கு முன் அதிக ஆண்கள் வேலை செய்யம் ஒரு நிறுவனத்தில் நடத்துனராய் இருந்திருக்கிறாள போலும்;. மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதை விட தான் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற எண்ணங் கொண்டவள்.  


எனது கதைகளின் பிழைகளை திருத்துவதற்குப் பதிலாக கதையின் போக்கையே தானே தீர்மானிப்பாள் போல் இருந்தது


ஸ்கைப்பில் உள்ள வீடியோ வசதியைப் பாவிப்பதில் அவளின் இரண்டாவது கணவனுக்கு உடன்பாடில்லை – தான் மூன்றாவது கணவனாய்ப் போள்விடலாம் என்ற பயம் அல்லது முன்னெச்செரிக்கை காரணமாக இருக்கலாம்…. எனவே தனியே தொலைபேசியையும் சற்பொக்ஸையையும் வைத்துத்தான் பிழை திருத்தம் செய்ய வேண்டியிருந்தது. 

பாலைப்பழம் என்று நான் எழுதியிருந்ததை அவள் பலாப்பழம் என்று எழுதியிருந்தாள்.

பல தடவை பாலைப்பழம் என நான் திருத்தியதை அவள் திருத்தியதாக தெரியவில்லை.


அவள் பலாப்பழத்துடனேயே ஒட்டிக் கொண்டு நின்றாள். பாலைப்பழப் பக்கம் வருவதாய் இல்லை.


இது மஞ்சள் நிறமான பழம் என்றேன்.


பலாப்பழமும் மஞ்சள் தான் சார் என்றாள்.


இதன் பால் கையில் ஒட்டும்.


பலாப் பழப்பாலும் ஒட்டும் சார்.


கடவுளே… இந்தப் பழத்தின் முட்கள் குற்றும் என்றேன்.


இந்தப் பழத்தில் உள்ள முட்களும் குற்றும்தான் என்றாள்.


கடைசியா ஒரு தாளை எடுத்து பலாப்பழத்தையும் பாலப்பழத்தையும் கீறி அதனை ஸ்கேன் செய்து அனுப்பும் பொழுது,

என் பின்னே இருந்து, ”பலாப்பழத்தை பஞ்சாமிருதத்துக்கு போடுவார்கள்… பாலைப்பழத்தை பஞ்சாமிருதத்தக்குள் போடுவதில்லை” என்று சொல்லியிருக்கலேமே என்று குரல் கேட்டது.

கூடவே குசினியுள் இருந்து ஒருவித கருக்கல் மணமும் வந்தது.


யார் பஞ்சாமிருதத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்?… ஏன் குசினிக்கள் இருந்து கருக்கல் மணம் வருகிறது என்ற எண்ணத்துடன் குசினிக்குள் போனேன்.


போன பொழுது அதிர்ந்து விட்டேன்.


நேற்று வெள்ளிக்கிழமை மனைவி கோயிலில் இருந்து வேண்டிக் கொண்டு வந்து பிறிச்சில் வைத்திருந்த குழையல் சோற்றை ஒருவர் சூடாக்கிக் கொண்டு நின்றார்.


கொஞ்சம் மனத்துள் பயத்துடன்; கிட்டவாகப் போய் பார்த்தேன்.


சாட்சாட் முருகனேதான்.


வள்ளி தெய்வானை இல்லாது தனியே ஆண்டிக் கோலத்தில் முருகன்.


காவி வேட்டி. காவி நிறச்சால்வை. சவரம் செய்யாத முகம். தோளில் பையினுள் ஒரு மடிக்கணனி;.


அதிர்ந்து போனேன்!


”பின்னேரம் கோயிலிலை ஒரே பிரச்சனை. குருக்கள் வேறு நிர்வாகத்துடன் கோபித்துக் கொண்டு போய்விட்டார். யாரும் ஏதும் படைக்கேல்லை. சம பசி எனக்கு”, என்றவாறு சூடாக்கிய சாப்பாட்டை ஒரு தட்டில் போட்டார் முருகன்.


”கடவுளே… அது மாமிசக் கோப்பை”


உதட்டினுள் சிரித்தார்.


அதன் அர்த்தம் எனக்கு விளங்கியது போலவும் இருந்தது. விளங்காதது போலவும் இருந்தது.


அப்பளம் மிளகாய் ஏதாவது பொரிச்சுத் தரட்டா?

”இல்லை வேண்டாம்”

”ஊர்ச் சின்ன வெங்காயம் இருக்கு… உரிச்சத் தரட்டா?…நல்ல தயிரும் இருக்கு…”

”ஓம் அது பறவாயில்லை… குழையல் சோற்றுக்கு நல்லாய் இருக்கும்”


சின்ன வெங்காயத்தை எடுத்து உரித்து அவர் தட்டில் வைக்கத் தொடங்கினேன்.


அவர் ’அவுக்’ ’அவுக்’ என்று சாப்பிட்டார்


நல்ல பசி போலும்.


பாலும்… தேனும்… பஞ்சாமிருதமும்… குத்தரிசிப் பொங்கலும்… பசுமதி அரிசிச் சோறும் கறியும் என சாப்பிட்டுக் கொண்டிருந்த மனுஷன் நேற்று இரவு தொடக்கம் சம பட்டினி.


”இன்னும் கொஞ்சம் சூடாக்கவா?”


”ஊம்…கொஞ்சமாய்… ”


தான் அடுப்பில் சூடாக்கியதை நான் மிக்கிரோ ஒவனில் செய்ததை வியப்பாக பார்த்தார்.


கோவிலில் மிக்கிரோ ஒவன் இல்லைப் போலும்!


மரவள்ளிக் கிழங்கு கருகும் வாசனை வெளிவர நான் சாப்பாட்டை வெளியில் எடுத்தேன்.


வாசனை மனைவியை நித்திரையால் எழுப்பியிருக்க வேண்டும்.


”இப்பிடி சாமம் ஏமம் எண்டு சோத்தை திண்டு டயபிற்றிஸைக் கூட்டுங்கோ… ஒரு நாள் நான் தாலியை இழக்கப் போறன்” படுக்கை அறையில் இருந்து கத்தினாள்.


”பயப்பிடாதை.. பயப்பிடாதை… தாலி போனாலும் சுiளாயாய் உனக்கு ஐந்து இலட்சம் குறோன்கள் வரும்”


”வாய் ஓயாமல் சொல்லுங்கோ. ஒரு நாளைக்கு நடக்கப் போகுது” தனது யானை உடம்பைப் பிரட்டியபடி அவள் மீண்டும் குறட்டை விட்டுக் கொண்டு தூங்கலானாள்;.


அவளின் குறட்டை யானை பீறிடும் போல் இருந்தது.


”எனக்கு அண்ணாவின் ஞாபகம் வந்து விட்டது” என முருகன் சிரித்தார்.


”எனக்கு வள்ளி தெய்வானையின் ஞாபகம் வந்து விட்டது முருகா”


”ஏன்?”


”எப்பிடி முருகா இரண்டு பேருடன்… எங்கள் வீட்டில் ஒவ்வொரு நாளும் ஒரு சூரன்போர்தான்”


முருகன் சிரித்தார்.


இப்போ எனக்கு பயம் போய் விட்டது.


அது என்றுமே எனக்கு முருகன் மேல் இருந்ததும் இல்லை. –
சிலவேளை சிவபெருமான் என்றால் பயந்திருப்பேனோ என்னவோ

”அது சரி… நீ செத்தால் ஐந்து லட்சம் குறோன்கள் கிடைக்கும் என்று உன் மனைவியிடம் சொன்னியே?”

”ஆமாம்… இன்சூரன்ஸ் பணம்”


முருகன் ஏதோ யோசனையில் தலையாட்டியபடி தன்னுடைய மடிக்கணனியைத்திறந்து ஏதோ ஒன்றை கூகிள் பண்ணினார்.


எட்டிப் பார்ப்பது மரியாதைக் குறைவான செயல் என்று என்னை நான் கட்டுப்படுத்திக் கொண்டு விட்டேன்.


எனக்குள்ள ஒரோயொரு ஆர்வம் முருகன் என்ன பாஷையில் கூகிள் பண்ணுவார் என்பதுதான்.


”முருகா…”

கணனியில் இருந்து தலையைத் தூக்காமல் ’ஊம்’ கொட்டினார்.

”ஏன் இன்சூரன்ஸ் பற்றியும் ஐந்து இலட்சம் பற்றியும் கேட்டீர்கள்?”


”இப்போ ஐந்து லட்சம் தான் பிரச்சனை”


”எனக்கு புரியவில்லை முருகா”


”நீ கோயிலும் வேண்டாம்… குளமும்; வேண்டாம் எண்டு நிம்மதியாய் இருக்கிறாய்… உனக்கு எதுவுமே புரிய வேண்டாம்… போய்ப்படு…ஆனால் நான் கடவுள்தான் என்று நிரூபிக்க எனக்கு இப்போ ஐந்து லட்சம் தேவை… அதுதான் யோசித்துக் கொண்டு திரிகிறன்…”


சோபாவைத் தட்டி துணி போட்டு முருகனுக்கு படுக்கையை ஆயத்தம் செய்து கொடுத்து விட்டு  தொடர்ந்தும் எனது

கதைகளில் பிழை திருத்தம் செய்வதற்காக போய்க் கம்பியூட்டர் முன் அமர்ந்தேன்.

கணனியின் திரை அணைந்திருந்தது.


ஆனால் கம்பிய+ட்டரின் மறுபுறம் சம்பாசணை கேட்டது.


”சாமம் சாமமாய் என்னடி பிழை திருத்தம்”

”இந்தியாவிலைதான் சாமம்… இப்போது டென்மார்க்கிலை இரவு பத்து மணிதான்”

”சரி அப்பிடியே இருக்கட்டும்… இப்ப வந்து படு…நாளைக்கு பிழை திருத்தலாம்”

”நீங்க ரொம்ம மோசம்… ஒவ்வொருநாளும்…”


கம்பியூட்டரை அணைக்காமல் அவர்கள் நடத்தும் சம்பாசணைகளும் சிலுமிஷங்களும்; கேட்டது.


”இது என்ன கொடுமை முருகா”

கம்பியூட்டரை அணைத்துவிட்டேன் – மனத்துள் முருகனைத் திட்டியபடி.

”கூப்பிட்டியா பக்தனே”


”நான் உன்னைக் கூப்பிடவும் இல்லை… நான் உந்தன் பக்தனும் இல்லை… ஆளை விடு முருகா”


”என்ன தொடர் தமிழ்ரியூப்பில் போகுது” – இது என் மனைவி.


இந்த இரவில் கோயிலில் இருந்து முருகன் வந்து எங்கள் வீட்டு ஹோலில் படுத்துக் கொண்டு… எனக்கு விசரைக் கிளப்பிக் கொண்டு இருக்கிறார் என என்று விளக்கிக் கொண்டு இருக்க முடியுமா?


பிழை திருத்தம் வேறு பிந்திப் போகிறது என்ற வெப்பிகாரம் வேறு.


”வாயைப் பொத்திக் கொண்டு படடி”


எல்லோரும் ஏன்தான் என்னை வெறுப்பேற்றுகிறார்களோ?

வெள்ளி மாலை வேiலையால் கிளம்பும் பொழுது ”உங்களின் சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் சந்தோசமாக இருக்கட்டும்” என சம்பிருதாய வார்த்தைகள் சொல்லும் என் சக ஊழியர்களை மனம் சபித்தது.

முருகனின் குறட்டைச் சத்தம் கேட்கத் தொடங்கியது.

இரவு பத்து மணிக்கு குழையல் சோறும் தயிரும் சின்ன வெங்காயமும் சாப்பிட்டு விட்டு  படுத்தால் குறட்டை வராதா என்ன? 

*
இரவு முழுக்க நித்திரைக்கும் நித்திரையின்மைக்கும் இடையே எழுந்து உலாவித் திரிவது போல இருந்தது.
விடிந்ததும் முருகனுக்கும் என் மனைவிக்கும் இடையே என்ன பாடுபடப்போகின்றேனோ என்ற தவிப்பு வேறு.
நல்ல காலம்!… வந்த கடவுள் ஒரு ஆண் கடவுள் என்றளவில் எனக்கு கொஞ்சம் மன ஆறுதல்.

இரவு இரண்டு தரம் ரொயிலற்றுக்குள் தண்ணீர் இழுத்துச் சத்தம் கேட்டது என்னை மேலும் குழப்பியது.


கடவுளுக்கு இந்தக் கக்கூசு, ரிசூ  பேப்பர் எல்லாம் சரிவருமா?… அல்லது படுக்க முதல் ஒரு சின்ன வாளியை எடுத்து வைத்திருக்கலாமே, சுடு நீரையும் குளிர் நீரையும் எப்படிக் கலந்து பைப்பின் வழியால் எடுப்பது என்றெல்லாம் காட்டிக் கொடுக்காமல் விட்டு விட்டேனே என்ற எண்ணங்கள் வேறு என் நித்திரையைக் குழப்பிக் கொண்டு இருந்தது. 


அதிகாலை ஐந்தரை மணிக்கே எழுந்து வந்து ஹோலுக்குள் எட்டிப் பார்த்தேன்.


கடவுளைக் காணவில்லை.


பெட்சீற் மட்டும் வடிவாக மடித்து தலையாணிக்கு மேல் வைக்கப்பட்டிருந்தது.


குசினிக்குள்ளும் இரவு சாப்பிட்ட அனைத்தும் வடிவாக கழுவி துடைத்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.


கடவுள் கொஞ்சம் உசத்திதான் என மனம் சொன்னது!

விருந்தினராக வீட்டுக்கு வந்தால் அதிகாரத் தோரணையுடன் எல்லாவற்றையும் நானும் என் மனைவியுமே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் உறவினர்கள் போல் அல்லாது முருகன் எல்லாத்தையும் சுத்தமாக செய்து விட்டுப் போய் இருக்கிறார் என்பது மகிழ்ச்சியாக இருந்தது.

ஆமா?… எதற்காக என்னிடம் வந்தார்?…  ஐந்து இலட்சம் தான் பிரச்சனை என்று சொன்னாரே… அதுதான் எனக்கு விளங்கவில்லை… அதுக்கு என்னிடம் ஏன் தேடி வந்தார்?


வீட்டில் உள்ள எல்லாவற்றையும்; இன்ஸ்ரோல்மென்ற்றில் வாங்கிப் போட்டு விட்டு பணக்கார தோரணையுடன் வாழும் நானா கிடைத்தேன் கடவுளுக்கு ஐந்து இலட்சம் கடன் கேட்க?


தொலைபேசிமணி அடித்தது.


பக்கத்து நகரில் இருந்து சேகர் அண்ணைதான் பேசினார்.


”இராத்திரி எங்கே போனீங்கள்?”

”ஒரு இடமும் இல்லையே… வீட்டைதான் இருந்தனாங்கள்”

”எத்தினை தரம் தொலைபேசி எடுத்தனாங்கள்… ரிங் டோன் வந்து கொண்டே இருந்தது… ஆனால் நீங்கள்தான் எடுக்க வில்லை”


”எத்தனை மணியிருக்கும்”


”பத்து மணியிருக்கும்”


அப்போ தான் கடவுள் வந்திருந்த நேரம்.


ஆனால் தொலைபேசி அழைப்பு எனக்குக் கேட்கவில்லை.


அது எனக்கு வியப்பாய் இருந்தது.


”சொல்லுங்கோ…”


”கோயில் எழுந்தருளிச் சிலையை காணேல்லை. இங்கே எல்லோரும் கூயா.. மாயா.. என்று கொண்டு இருக்கிறார்கள்…”

கோயிலடியில் நின்று பேசுகின்றார் எப் புரிந்தது.

”யாரும் போலாந்துக்காராத் திருடியிருப்பினமா?”


”அப்பிடி என்றால் வள்ளி தெய்வானையையும் சேர்த்தல்லவா கொண்டு போயிருப்பான்கள்… இங்கே முருகனை மட்டும் காணேல்லை…”


முருகன் தனியே ஆண்டியாக என் வீட்டுக் வந்ததுக்கும் இதற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருந்தது போல் இருந்தது.


மனைவி நித்திரைக் கலக்கத்தில் இருந்து கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்து, ”என்ன நடந்தது” எனக் கேட்டாள்;.


”கோயிலிலை முருகன்சிலையைக் காணேல்லையாம். எல்லாச் சிற்றியில் இருந்தும் சனம் சனமாய் கோயிலடிக்கு போகினமாம்”.


”ஏன்?”


”துக்கம் விசாரிக்கப் போலும்”


என் வார்த்தையில் இருந்த ஏளனம் அவளைக் கொஞ்சம் கோபப்படுத்தியது போல உணர்ந்தேன்.


”பார்த்துக் கொண்டே இருங்கோ… நீங்கள் கடவுளுக்கு செய்கிற நிந்தனைகளுக்கு ஒரு நாள் கடவுள் உங்களை தண்டிக்கப் போறார்”


அவள் சொன்ன பொழுது என்னையும் அறியாமால் எனக்கு மனத்துள் நடுக்கம் கண்டது.


இரவு வீட்டுக்கு வந்த முருகன் ஏதும் காரணத்தால் என் வீட்டுக்கு சிலையைக் கொண்டு வந்து ஏதாவது ஒரு இடத்தில் மறைத்து வைத்து இருப்பாரோ?


கோயிலுக்குப் போகாததையிட்டே சனம் என்னை ஒரு இனத்துரோகி போலை பார்க்குது… இதிலை முருகனின் சிலை என் வீட்டுக்குள் இருந்தால் கதை அவ்வளவுதான்!


மெதுவாக வளவையும் வீட்டையும் ஒருமுறை சுற்றி வந்தேன்.


எதையும் காணவேயில்லை.


”ஏன் ஹோலுக்குள் இராத்திரி படுத்தீங்கள்”


”இல்லையே”


”சோபாவிலை தலையாணியும்… பெட்சீற்றும் கிடக்குது… அதுகள் தானாய் நடந்து வந்ததா?”


நான் முழுசினேன்.


”நானும் தான் பார்க்கிறன்.. இப்ப எல்லாம் உங்களுக்கு தனியப் படுக்கத்தான் பிடிக்குது!”


”அடக் கடவுளே!”


நானும் வெகுவிரைவில் ஆண்டியாவேன் போல எனக்குள் ஒரு மனப்பிரமை.


*
எப்போதும் புதினம் பார்ப்பதில் எனக்கு ஒரு அலாதிப் பிரியம்.

இந்தியாவிலும் இலங்கையிலும் இருந்த பொழுது அக்கம் பக்கத்து வேலிச்சண்டைகள்….றோட்டில் நடக்கும் குடிகாரர்களின் இழுபறிகள்… கிராமக் கோட்டுக்கு வரும் சின்ன, சின்ன, மாமி-மருமகள் பிரச்சனைகள்…  கடற்கரையில் போடும் மீன் ஏலங்கள்;;…கூறுபோட்டு விற்கும் கறிக்காறிகளின் தூஷண வார்த்தைகள்…  மீற்றர் போட்டு ஓட வேண்டும் என்றாலும் அதனை மீறும் ஆட்டோக்காரனுடன் பக்கத்து வீட்டு ஐயங்கார் குமாஸ்தாவின் வாக்கு வாதம் எல்லாமே எனக்கும் தித்திக்கும்.


அது டென்மார்க்கில் ரொம்பவே மிஸ்ஸிங் – இங்கே எல்லாம் சிரித்துக் கொண்டும் கைகளைக் குலுக்கிக் கொண்டும் காலை வாருதல் தான்.


கோயிலடிக்கு போய் புதினம் பார்க்க வேண்டும் போல் இருந்தது.


”நீங்கள் கோயிலுக்கு பொதுவாக போறதில்லை… இப்ப ஏன் போறீங்கள்”’


”சாமி உள்ளே இருக்கும்வரைதானே கோயில்… இப்பதான் சாமியை காணேல்லையே” என்ற படியே போய்க் காரில் ஏறினேன்.


”இருந்தாலும் உங்களுக்கு வாய்க் கொழுப்பு ஜாஸ்தி” மனைவியின் அர்ச்சனை தொடர்ந்தது.


காரின் பின் சீற்றில் முருகன் தூங்கிக் கொண்டு இருந்தார்.


மனைவி அவரைக் காணமுதல் காரின் கறுத்த திரைச்சேலையை கீழே இறக்கி விட்டேன்.


சனிப் பெயர்ச்சி எனக்கு நல்லாய்த் தான் வேலை செய்கிறது எனப் புரிந்தது.


காரை ஸ்ராட் செய்தேன்.


முருகன் திடுக்கிட்டு எழுந்தார்.


”ஏன் என்னைப் பயப்பிடுத்திறமாதிரி காரை ஸ்ராட் செய்கிறாய்?”


”நீங்கள் மட்டும் சொல்லாமல் கொள்ளாமல் எழுந்து போனால் நான் மட்டும் பயப்பிட மாட்டேனா என்ன?”


”நடுக்ஹோலில் படுத்துக் கொண்டு உனக்கு இன்னமும் பிரச்சனை தரவா”


கார் வீதியில் இறங்கியது.


மனம் ஊரில் இருந்த எங்கள் முருகமூர்த்தி கோவிலையும் இங்கு உள்ள முருகன் கோவிலையும் ஒப்பீடு செய்து பார்த்தது.


அங்கு எங்களுக்கு முருகன் தேவைப்பட்டார்.

இங்கு முருகனுக்கு நாங்கள் தேவைப்படுகிறம்.

”நீ சரியாய்தான் யோசிக்கிறாய்”  நான் மனதினுள் நினைத்ததை முருகன் ஆமோதித்தார்.


காரை ஓட்டியபடியே பின் சீற்றில் இருந்த முருகனைப் பார்த்தேன்.


அவரின் கண்கள் ஏனோ கலங்கியிருந்தது.


மனிதர்கள் எல்லாம் தெய்வநிலையை அடைய இறைவனிடம் கையேந்திக் கொண்டு நிற்க இவர் மனிதரிடம் இறங்கி வந்திருக்கிறார். மனிதக் குணங்கள் இவரைத் தொற்றப் போகுதே என அவருக்காக என் மனம் கழிவிரக்கம் கொண்டது.


*

கோயிலினுள்ளும் வெளியிலும் ஒரே சனக்கும்பலாய் இருந்தது.


“பொலிசுக்கு சொல்லியாச்சோ?”


“இப்ப வேண்டாம்” – மிகக் கலவரப்பட்டுக் கொண்டு நின்றார் தலைவர்.


“நாங்களாய் தேடிப் பார்ப்பம். முடியாட்டி பொலிசிட்டை சொல்லுறதைப் பற்றி யோசிப்பம்;”இ அவரே தொடர்ந்தார்.


“எங்கை தேடிப் பார்க்கப் போறியள்… கோயிலுக்கையும் இல்லை… வெளிவீதியிலும்; இல்லை…. இனி ஒவ்வொரு

தமிழாக்கள் வீடு வீடாக போய் தேடப் போறியளா”இ  இது எப்போதும் தலைவருடன் முரண்டுபிடிக்கும் ஒரு நிர்வாகசபை உறுப்பினர்.

ஒருவர் என்னைப் பார்த்தபடி, “இது யாரோ கோயிலுக்கு எதிரான ஆட்கள்தான் செய்து இருக்க வேணும்… முருகன் பார்த்துக் கொண்டே இருக்கப் போறார்?”இ என்றவர் கொஞ்சம் மூச்சை உள்ளே இழுந்து வெளியே விட்டபடி, “இப்பதான் கணபேருக்கு கடவுள் நம்பிக்கையே சுத்தமாக இல்லையே” என தன் பங்குங்கு ஒரு வாங்கு வாங்கினார்.

நான் கண்டு கொள்ளவில்லை.

எல்லாவற்றையும் கண்டு கொள்வதும் புத்திசாலித்தனம் இல்லை என்பதுதான் என் புதிய ஆத்திசூடி.


“எது எண்டாலும் கெதியாய் முருகனைக் கண்டு பிடித்து பிரதிஷ்டை செய்ய வேணும்” புதிதாய் வந்திருந்த குருக்கள் பதற்றப்பட்டார்.


“இல்லாட்டி… உடனேயே வேறை ஒரு முருகனை கொண்டு வந்து வள்ளிக்கும் தெய்வானைக்கும் கல்யாணம் செய்து வைக்க வேணும்”, கோயிலுக்கு மாலைகட்டும் சைவம் கூறினார்.


என் காலில் யாரோ மிதித்தார்கள்.


திரும்பிப் பார்த்தேன்.


முருகன்தான்!


“எப்பிடியும் நிற்பாட்டு” முருகனின் கண்கள் மன்றாடியது.


“சிலைக்கு எங்கை போறது முருகா?”


“நான்தான் இங்கை நிற்கிறனே”


“அப்ப போய் வள்ளிக்கும் தெய்வானைக்கும் நடுவிலை நில்லுங்கோவன்”


“அதுதான் முடியாதே… என்னைத் தூக்கி விடுவான்களே?”


“குழப்பிறியள் முருகன்”


“நான் குழப்பேல்லை மகனே! நான் இருக்கிறது எண்டு நிருபிக்க எனக்கு ஐந்து இலட்சம் குநோன்கள் வேணும்.”


“அதுக்கு இப்ப என்ன செய்யுறது?”


“நீ செத்துப் போ”


நான் ஆடிப் போய் விட்டேன்.


“செத்துப் போனால்….”


“உன்னைப் போலை ஆட்களுக்கு ஐந்து இலட்சம் இன்சூரன்ஸ் வரும் எண்டு சொன்னியே”


“சுத்தம்”


“என்ன கோவிலுக்கு வந்திருக்கிறியள்… அதிசயமாய் இருக்கிறது”, முகத்தில் கலவரத்துடனும் எனக்காக வலிந்து இழுந்த புன்னகையுடனும் எனது உயர் அதிகாரியான எஞ்ஜினியர் சுந்தரமூர்த்தி.


“அவனருளாளே அவன்தாள் வணங்கி” என அச்சிட்டிருந்த காவி வேட்டியும் சால்வை சகிதம் நின்று கொண்டிருந்தார்.

பக்கத்தில் நின்றிருந்த முருகனை விநோதமாகப் பார்த்தார்.

“நம்ம மனைவி வழிச் சொந்தம்… பக்கத்து சிற்றியில் இருந்து வந்திருக்கிறார்” என நான் முந்திக் கொண்டேன்.

இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள்.

அதே வேகத்தில் முருகன் தனது மடிக்கணனியை எடுத்து ஏதோ தடவினார்.


பின்பு என் பக்கம் திரும்பி, “இவருக்கு ஐந்து லட்சத்தை விட அதிகமாய் வரும் போலை இருக்கே?”


எனக்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது போல் இருந்தது.


“குறைந்தது ஏழு இலட்சம் என்றாலும் வரும்”


முருகன் கிணற்றினுள் நின்று சொல்வது போலத் இருந்தது.


பின் எனக்கு எதுவுமே தெரியவில்லை.


*

முருகன் வள்ளி தெய்வானை சகிதம் வீதி வலம் வந்து கொண்டிருந்தார்.

அரோகரா என்ற கோஷம் வானைப் பிளந்தது.

ஜேர்மனியிலும் பிரான்சிலும் இருந்து வந்திருந்த மேளக்காரர் ஒவ்வோர் வீதியின் சந்தில் நின்று அட்டகாசமாக தவில் கச்சேரி நடாத்திக் கொண்டிருந்தார்கள்.

“இந்த வேளையில் சுந்தரமூர்த்தி அண்ணை எங்களோடை இருந்தால் எவ்வளவு நல்லாய் இருந்திருக்கும்? கோயிலுக்கு கடன், கடன் என்று சதா கவலைப்பட்டுக் கொண்டு இருந்தவர். இப்ப பணக்கார முருகனைப் பார்க்க அவருக்கு கொடுத்து வைக்கவில்லையே” ஆளுக்கால் தங்களுக்குள் பேசிக் கொண்டும்… மேளத்திற்கு தாளம் போட்டுக் கொண்டும்… “வேல் வேல் முருகா… வெற்றி வேல் முருகா…” என்று பெண்கள் பாடிக் கொண்டும்… பக்கத்தே வரும் மற்றப் பெண்களின் சேலையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டும்… வெளிவீதியைச் சுற்றிக் கொண்டு வந்தார்கள்.
இப்போ முருகனின் வங்கிக் கணக்கில் இரண்டு இலட்சம் மேலதிகமாக இருக்காம் – பணக்கார முருகன் என்று பக்தர்கள் அனைவர்க்கும் மகிழ்ச்சியாம்.

முருகனின் சிலையை உற்றுப் பார்த்தேன்.

சிலையின் இடக்கண்; என்னைப் பார்த்து சிமிட்டியது.

எனக்கு ‘திக்’ என்றது.

நம்பவே முடியவில்லை.

இப்படி எல்லாம் நடக்குமா?

உலகத்தின் சொர்க்கபுரி என்று எண்ணியிருந்த ஐரோப்பாவில்; வேலை இல்லாத் திண்டாட்டங்களும் பணத்தட்டுப்பாடுகளும் திருட்டுகளும் பெருகும்  போது…


டெனிஸ்காரனை விட வெளிநாட்டவர்கள் பெரிய கார்களும் படகுகளும் வைத்திருக்கும் பொழுது…

வங்கிகள் திவாலாகியதால் பெரிய பெரிய வீடுகள் மலிவு விலையில் ஏலத்திற்குப் போகும் பொழுது…

வயதுக்கு வந்ததும் தாய்மாமன் தென்னோலைத் தட்டி கட்டி வீட்டின் தாழ்வாரத்தில் இருந்த நிலைமாறி, பூப்படைந்த பெண்ணை விழா மண்டபத்திற்கு கெலிகொப்டரில் கொண்டு வந்து இறக்கி பல்லக்கில் வைத்து தோளில் வைத்துக் காவிக்கொண்டு போகும் பொழுது…


ஏழு பவுணில் கட்டிய தாலிக் கொடிகள் இருபத்தைந்தாவது திருமண நாள் அன்று இருபக்கமும் பூட்டிய புறோச்சருடன் சேர்த்து இருபத்தைந்து பவுண் ஆகும் பொழுது…


ராணித்தியேட்டரில் அடிமைப் பெண்படத்துக்கு எம்.ஜி.ஆருக்கு கட்அவுட் கட்டியது போல, புலம்பெயர் தேசத்து கோயில் ஒன்றின் தேர் முட்டியின் உயரத்துக்கு கோயில் நிர்வாகியின் கட்அவுட் தொங்க… தேருடன் அவரையும் தொலைக்காட்சி உலகமெங்கும் காட்டி நேர்முகவர்ணனை செய்யும்; பொழுது…


தாமரைக் கேணியுடன் கூடிய மிகப் பிரமாண்டமான ஒரு அழகிய கோவிலில் அம்மனின் அவதாரம் எனச் சொல்லிக் கொள்ளப்படும் என்தேசத்து சகோதரி ஒருவரை தூக்கி தேரில் வைத்து உள்வீதி சுற்றி தேரில் இருந்து இறக்;கியதும் காலைப்பட்டுத் துணியின் மீது வைத்து பன்னீராலும் விபூதியாலும் சந்தனத்தாலும் குங்குமத்தாலும் பாதபூஜை செய்யும் பொழுது… .


புலம் பெயர் தேசத்து தேர்களின் சக்கரங்கள் சனி, ஞாயிறுகளில் மட்டு;மே உருளும் பொழுது…


நடராசர் என்பவர் பரதநாட்டிய அரங்கேற்றத்னின் பொழுது ஒற்றைக் காலைத் தூக்கிக் கொண்டு நிற்கும் ஒரு சிiலையாக மாறியவிட்ட பின்பு…


மேலாக சைவம் என்பது நெற்றியில் மட்டும் வாழும் நிலை வந்த பின்பு…


பாலைவனங்களில் கூட பனி மழைப்பெய்யும் காலம் தொடங்கி விட்ட பின்பு…


ஊரில் பழையபடி கோயில்களில் கிடாய் வெட்டி வேள்விகள் தொடங்கி விட்ட பின்பு…


முருகன் வந்த அன்றிரவு பலமுறை பிழை திருத்தம் செய்த பொழுதும் அச்சாகிய சிறுகதை புத்தகத்தில் பாலைப்பழம் பலாப்பழம் என்றே அச்சாகியிருந்த பொழுது… 


முருகன் கோவிலுக்கு கடன் கொடுத்தவன் தலைவரிடம் கடனை கேட்டு மிரட்டி விட்டு, பணத்தை தராது விட்டால் அன்றிரவே முருகனைத் தூக்குவேன் என்று மிரட்டும் பொழுது…


நான் இறந்தால் என் சொத்து எல்லாம் உனக்கே முருகா என கோயிலே கதியென தனியே வாழ்ந்த என் மூத்த அதிகாரி எஞ்ஜினியர் சுந்தரமூர்த்தி… என்னுடன் கதைத்தபடி முருகனுக்கு கை குலுக்கிய அதே சுந்தரமூர்த்தி… முருகன் காணமல் போன அடுத்த தினத்திலேயே நித்திரையில் இறந்து போன பொழுது…..


நடக்க முடியாதது என்று எதுமேயில்லை!


இப்போது அதிகமாகவே முருகன் கோவிலுக்கு போகின்றேன் – தெய்வநிந்தனை செய்து கொண்டு திரிந்ததனால்தான் இவன் இந்த இளம் வயதில் போய்ச் சேர்ந்தவன் என்று என் மனைவி உட்பட யாருமே என் மரணத்திற்கு பின் மரணச்சான்றிதழ் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக…


ஆனால் முருகன் மீது எனக்கு இன்னமும் அதிக கோபம் இருந்து கொண்டே இருக்கிறது.


• ஒன்று… முருகன் வந்த குழப்பத்தினாலேயே பலாப்பழம் பாலைப்பழமாக கணனியில் சேமிக்கப்படாமல் புத்தகத்திலும் அதே பிழையுடன் அச்சாகியிருந்தது. .

• இரண்டாவது… எஞ்ஜினியர் சுந்தமூர்த்தியின் மரணம்.
(முற்றும்)

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)