கமலி அக்காவும் பாலன் அண்ணாவும்
”தத்தெடுத்து ஒரு பிள்ளையை வளர் எனச் சொல்லிப் பார்த்தன். ”அப்பிடி வளர்த்தால் போலை என்னை மலடி எண்டு சொல்லுறதை நிற்பாட்டிப் போடுவியளோ… என்னையும் இவரையும் நல்ல விசயங்களுக்கு முன்னாலை விடுவியளோ” என எதிர்த்தல்லோ கதைக்கின்றாள்”
”3 மிளகோடையும் 3 மிடறு தண்ணியோடையும் எத்தனை வருசம் கந்தசஷ்டி இருந்திட்டாள.; அந்தக் கடவுளாவது கண் திறக்கவில்லையே”
திருமணம் நடந்து அடுத்தடுத்த மாதங்களிலே ” என்னடி… வயிற்றிலை ஒரு புழுப்பூச்சி இல்லையோ?” என தொடங்கிய ஊராரின் அக்கறையும்… விடுப்பும்… ஏளனப் பேச்சுகளும்… நல்ல காரியங்களுக்கு சற்று அவளை தள்ளி வைத்து அனைவரும் கடந்த பத்து வருடங்களாக நடந்திய முறையே அவளை அவ்வாறு ஒரு முடிவை எடுக்க வைத்தது.
குடித்து விட்டு போவோர் வருவோருடன் சண்டை போட்டு… அல்லது குடிபோதையில் றோட்டில் விழுந்து கிடப்பவனை கைத்தாங்கலாக கூட்டி வரும் அவனது கூட்டாளியின் கைகள் ஒரு நாள் இவள் கைகளில் பட்டது.
அவள் தடுக்கவில்லை.
அவனுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் வேறு.
”இந்த ஊராரின் வாயை அடைக்க வேண்டும்” என்ற வைராக்கியத்தை தவிர ஆண் சுகம்… கற்புக் கோட்பாடு… பாவம்… புண்ணியம்…அது… இது… எதுவும் அவள் முன் இருக்கவில்லை.
ஆரம்பத்தில் கூட்டாளிக்கு கூட்டாளியாக உதவுவதற்காக வந்தவன் இப்பொழுது கூட்டாளி வீட்டில் இல்லாத போதும் வரத்தொடங்கினான்.
அப்போதும் அவள் தடுக்கவில்லை.
கண்ணின் முன்னே தனது மடியில் தவழவிருக்கும் ஒரு பிஞ்சுக் குழந்தையின் ஸ்பரிசம் மட்டுமே அவளது கனவாய் இருந்தது.
*
கமலி அக்கா என அழைக்கப்படும் கமலாம்பிகைக்கும் பாலன் அண்ணா என அழைக்கப்படும் பாலசுந்தரந்திற்கும் திருமணம் நடந்த பொழுது ஊரே மகிழ்ந்து வந்திருந்து வாழ்த்தியது.
சாதி அடிப்படையில் நடைபெறும் கலப்புத் திருமணம் போல இது வட்டாரக்கலப்புத் திருமணம்.
ஒருவர் முதலாம் வட்டாரம். மற்றவர் பன்னிரண்டாம் வட்டாரம்.
இரு வட்டாரமும் ஒருவர் வீட்டில் ஒருவர் கை நகைக்கும் குடும்பங்களாய் இருந்தாலும் இரண்டு வட்டாரங்களுக்கும் இடையே நடைபெறும் முதல் திருமணம் இதுவாய்த்தான் இருந்தது.
முதலாம் வட்டாரத்தினர் அதிக நெல் மற்றும் பெரியளவில் தோட்டாக்காணி வைத்து விவசாயம் செய்பவர்களாயும்… பன்னிரண்டாம் வட்டாரத்தினர் முதலாம் வட்டாரத்தின் நெல்வயல்களையும் தோட்டக்காணிகளையும் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர்களாயும் அல்லது வாரத்திற்கு எடுத்துச் செய்பவர்களாயும் இருந்தார்கள். எனவே சாதி வேறுபாடு இல்லாவிட்டாலும் பெரிய பொருளாதார வேறுபாடும் இருக்கத்தான் செய்தது.
கலியாணங்களின் பொழுது இருபகுதிப் பெண்களும் தாலிகட்டு முடிந்தவுடன் கற்கண்டை மட்டும் கைகளில் எடுத்துக் கொண்டு தம்தம் வீடுகளுக்குப் போய் விடுவார்கள். ஆண்கள் தான் பந்தியில் அமர்ந்து உணவருந்தி வீடு திரும்புவார்கள்.
பின்பு மாப்பிள்ளை பெண்பிள்ளை பார்க்கும் இரண்டாம் நாள் அல்லது நாளாம் சடங்கிற்கு இருபகுதிப் பெண்களும் சென்று பலகாரம் சாப்பிட்டு தேனீரோ அல்லது சர்பத் அல்லது சோடா குடித்து விட்டு வருவார்கள்.
இப்படி ஒரு வினோதமான… வித்தியாசமான கலாச்சாரம் நிலவிய எங்கள் ஊரில் கமலி அக்கா பாலன் அண்ணாவின் திருமணத்தில் தான் முதன் முறை இரு வட்டாரத்து ஆட்களும் ஒருவர் வீட்டில் மற்றவர்கள் கை நனைத்துக் கொண்டனர்.
அது கூட பன்னிரண்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த பாலன் அண்ணா சவுதிக்கு சென்று 5 வருடத்தில் எங்கள் ஊரிலேயே பெரிய ஒரு பணக்காரனாக திரும்பியது தான் காரணமாக இருக்க வேண்டும்.
*
கமலி அக்கா அப்பிடி ஒரு வடிவு. பழைய படங்களில் நடனம் ஆடும் குமாரி கமலா போலத்தான் எங்கள் கமலி அக்காவும். கண்கள் பேசும் கமலி அக்கா.
அவ்வாறே பாலன் அண்ணா கழுத்திலும் கை மணிக்கட்டிலும் தங்கச் சங்கிலியுடன் முறுக்கி விட்ட மீசையுடன் மோட்டார் சைக்கிளில் சந்தைப் பக்கத்தால் வரும் பொழுது மலையாள நடிகர் மோகன்லால் போல இருக்கும்.
திருமணத்தின் பின்னால் அவரின் மோட்டார் சைக்கிளின் பின்னால் கமலி அக்கா அமந்திருந்து போகும் அழகு அலாதியாக இருக்கும்.
வீதியால் செல்லும் அனைவரும் ஒரு வினாடி அவர்களைத் திரும்பி பார்த்து விட்டுச் செல்வார்கள். அல்லது தங்கள் வேலைகளை மீண்டும் கவனிக்கச் செய்வார்கள்.
திருமணம் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் இந்த ஜோடிகளின் கதையாகவே எங்கள் ஊரில் இருந்தது.
பாலன் அண்ணாவும் சவுதிப் பணத்துடன் பெரிய ஒரு டிப்பாட்மென்ற் கடை கட்டி பெரிய ஒரு முதலாளி ஆகிவிட்டார்.
அதிகாலை ஐந்து மணி போல முதல் லொறியில் சாமான்கள் வந்து இறங்குவது தொடக்கம் இரவு ஒன்பது அல்லது பத்து மணிக்கு கடைசி லொறி புறப்படும் வரை பாலன் அண்ணாவின் குடோன் அமைந்திருந்த இடம் கலகலப்பாவே இருக்கும்.
கொஞ்சம் ஆட்கள் குறைந்த மதியப் பொழுதில் பாலன் அண்ணாவும் வீட்டை வந்து கமலி அக்கா ஆக்கிவந்திருந்த மதியச் சாப்பாட்டை அவருடன் அமர்ந்து இருந்து உண்டு… பின் அவருடன் குட்டித் தூக்கம் போட்டு விட்டு… பின் மூன்று மணி போல நித்திரையால் எழுந்து தேனீரும் சில வேளை தேனீருடனும் வடையோ முறுக்கோ அல்லது பகோடாவும் சாப்பிட்டு விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் கிளம்பிச் சென்றால்… பின்பு இரவு பத்து மணிக்குத் தான் வீடு.
ஊரில் ஏதாவது வீடுகுடிபூரல் அல்லது திருமணங்கள் வந்தால் அன்று இந்த பகல் நித்திரை அவுட்.
கமலி அக்காவுமன் புதுமாப்பிள்ளையாகப் போய் வருவார்.
*
திருமணம் முடிந்து ஒரு வருடம் வரை எதுவும் பேசாமல் இவர்களின் அழகையும் ஜோடிப்பொருத்தையும் பார்த்துப் பெருமைப்பட்டிருந்த ஊர் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் அந்தரங்க வாழ்வை எட்டிப் பார்த்து கேள்விகள் கேட்கத் தொடங்கியது.
”என்னடி கமலி?… ஒரு பூச்சி புழுக்களைக் காணவில்லை”
ஒரு வித வெட்கத்துடன் விலகி விலகி சென்றாலும் கமலி அக்காவுக்கு மனத்துக்குள் உறுத்தவே செய்தது.
”ஆட்கள் கேக்கினமப்பா” என் மார்பில் தலை வைத்துக் கேட்கும் பொழுது, ”நானென்ன வைச்சுக் கொண்டா வஞ்சகம் செய்கிறன்” என அவனின் அணைப்பில் அந்த விடயத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விடும் – இனி ஒரு முறை இதே விடயத்தை இன்னொருவர் மீண்டும் கமலி அக்காவிடம் கேட்கும் வரை.
*
நிறைவேற்றப்படாத கமலியின் விண்ணப்பங்கள் ஒரு பக்கம் நிறைவேறாமால் காலமும் கமலியின் மாதவிலக்கும் தள்ளித் தள்ளிப் போய்க் கொண்டிருந்தாலும் பாலன் அண்ணாவின் தொழில் ஏறுமுகமாய் போய்க் கொண்டிருந்தது.
பல லொறிகள் காலையிலும் மாலையிலும் பாலன் அண்ணாவின் டிப்பாட்மென்ற் ஸ்ரோர்ஸ் வாசலில் அணிவகுத்து நிற்கும்.
அவரது சொந்த nhறிகள் மட்டுமில்லாது சிங்களப் பெயர்கள் பதித்த கொழும்பு லொறிகளும் மலைநாட்டு லொறிகளும் அடங்கும்.
மொத்த யாழ்ப்பாண குடாநாட்டுக்கும் கோவா, கரட், லீட்ஸ்; எல்லாம் எடுத்துச் செல்லப்படுவது பாலன் அண்ணாவின் குடோனில் இருந்து தான்.
யாழ்ப்பாணத்தில் பல சமையல் வகுப்புகள் வந்து பிறியாணியும் நூடில்ஸ்சும் பெண்கள் பழகத் தொடங்கிய அத்தனை சமையலறையிலும் பாலன் அண்ணாவின் மலைநாட்டு மரக்கறிக்கு பெரிய பங்கு உண்டு.
சிலவேளைகளில் யாழ் குடாநாட்டுப் பிரதேசத்தின் மொத்த விலைகளையும் தீர்மானிக்கும் ஒரு மனிதனாக பாலன் அண்ணா மாறியது பலருக்கு மகிழ்ச்சியும் ஆச்சரியமும்.
அவ்வாறே பாலன் அண்ணா எங்கள் ஊரில் இருந்து கொழும்புக்கு அனுப்பும் லொறிகளின் எண்ணிக்கையையும் சாமான்களின் அளவையும் கொண்டே அதிகாலையில் தலைநகரில் சில பொருட்களின் விலையும் நிர்ணயிக்கப்பட்டன.
*
கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் விளையாடப்பட்ட பரமபதம் என்னும் விளையாட்டு 18ம் நூற்றாண்டளவில் இங்கிலாந்துக்கு சென்று பின் உலகமெங்கும் ஏணியும் பாம்பும் என்ற விளையாட்டாக பரவியதில், எவ்வாறு ஆச்சரியமும் கொள்ளத் தேவையில்லையோ…. அதேதான் பாலன் அண்ணாவின் தொழிலும் நேர்ந்தது.
தின்னவேலிச் சந்தியில் கண்ணி வெடிவத்துப் பிரட்டப்பட்ட இராணுவ வாகனத்தில் பயணித்த இராணுவத்தினரின் உடல்கள் கொழும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த பொழுது… கொழும்பிலும் மற்ற மற்ற பிரதேசங்களிலும் தமிழர் குடியிப்புகளையும் வியாபார ஸ்தாபன நிறுவனங்கயையும் நோக்கி எறியப்பட்ட தீப்பந்தங்களில் சில அநுராதபுரத்தை நெருங்கிக் கொண்டிருந்த பாலன் அண்ணாவின் லொறிகளிலும் விழுந்து கொழுந்து விட்டு எரியத் தொடங்கின.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும்…. யுhழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கும் சென்று கொண்டிருந்த பாலன் அண்ணாவின் ஆறு லொறிகள் தீக்கிரையாகின. மிகுதி அந்த அந்தப் பிரதேசங்களில் உள்ள காடுகளில் ஒளிந்து கொண்டன.
இலங்கை முழுக்க கொளுந்து விட்ட தீ அணைந்து கொழும்பில் இருந்து கப்பல்களில் சொந்த நாட்டின் குடிமக்களே சொந்த நாட்டினுள் அகதிகளாக வடக்கை வந்தடைந்த பொழுது விதி தனது கரத்தால் இலங்கை தமிழ் மக்களின் அடுத்த அத்தியாயத்தை எழுதத் தொடங்கியது.
அதிகமாக நான்கு ஆங்கில எழுத்துகளின் இணைப்புகளாக அறியப்பட்டிருந்த நாலைந்து போராளிக் குழுக்கள் பத்து பன்னிரண்டு வரை பெருகத் தொடங்கின.
அவர்களின் தேவைகளுக்கு வங்கிகள்… அரசுடமைச் சொத்துக்கள்… என்பன குறிவைக்கப்பட்ட பொழுது, கொடியேற்றி திருவிழா செய்யும் கோயில்களும் பாலன் அண்ணை போன்றோரின் வியாபார நிலையங்களும் உதவ வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
உதவியவர்களை மீண்டும் மீண்டும் உதவ வேண்டுகோள்கள் விடப்பட்டதும்… உதவி செய்யாதவர்கள் கடத்தப்பட்டு கப்பம் கேட்ட கிளைக்கதைகள் ஆயிரமாயிரம்.
யார் யார் இயக்கங்களுக்கு உதவினார்கள் என்பதை அரசபடைகளும் மோப்பம் பிடித்துக் கொண்டிருந்து.
ஏற்றிய எருதுக்கும் வேதனை. இறங்கிய முடவனுக்கும் வேதனை.
இதில் பாலன் அண்ணா மட்டும் விதி விலக்கில்லை.
எரிந்த லொறிகளுக்கு உரிய காப்புறுதிப் பணம் கிடைக்காமையும்… அவற்றை வாங்குவதற்காக பினான்ஸ் கம்பனிகளுக்கு கட்ட வேண்டிய பாக்கி பணத்தை கட்ட முடியாமையும்… அதேவேளை உள்ளுர் வெளியூர் வியாபாரிகளுக்கு கொடுக்க வேண்டிய கடன்பாக்கிகள்… இதனையே சாட்டாக வைத்து கண்டி கொழும்பு பக்கத்தில் இருந்து பாலன் அண்ருக்கு வரவேண்டிய பாக்கிகள் வராமையும்… இத்தனையும் இடையே போராட்டத்துக்கு உதவுகள் என நட்புடனும் மிரட்டலுடன் மிரட்டும் குரல்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அல்லது அடி பணிய வேண்டிய கட்டாயங்கள் என பல அழுத்தங்கள் அவரை அழுத்திக் கொண்டிருந்தன.
பகலில் வீட்டுக்குச் சென்று சாப்பிட்டு கமலி அக்காவுடன் தூங்கி எழுந்து மாலை மீண்டும் கடைக்கு வரும் சுழற்சி எல்லாம் மாறி விட்டன.
அதிகமான மதிய நேரச்சாப்பாடு ஏதாவது ஒரு சாப்பாட்டுக் கடைகளில் தான்.
கமலி அக்கா சாப்பாட்டுப் பாசலை யாரிடமாவது கொடுத்து விடுகிறேன் என்ற பொழுதும் அவர் மறுத்து விட்டார்.
இதனால் கமலி அக்காவும் தனக்கு மட்டும் மத்தியானச் சமைப்பதை தவிர்த்து விட்டு இரவுக்கு மட்டுமே சமைக்கத் தொடங்கியிருந்தார்.
எல்லாமும் இருந்து எதுவுமே இல்லாதது போல வாழ்க்கை நகர்ந்துக் கொண்டிருந்தது.
*
”மச்சான் இதிலை கொஞ்சம் அடி…எல்லாக் கவலையும் போகும்… உடம்புக்கும் மனதுக்கும் ஆறுதலாய் இருக்கும்”
வெளிநாட்டில் இருந்து வந்த அவனது பாலிய நண்பன் ஒருவன் மேசையில் எடுத்து வைத்த சிவாஸ்லீகலில்; வைத்த பாலன் அண்ணாவின் கைகளால் அதனை விட முடியவில்லை.
முதலில் சிவாஸ்றீகல்… பிளாக் லேபிள்… ஜேனி வாக்கர் பிஸ்கி வகைகள் எனத் தொடங்கி பின் கல்லோயா சாராயம்…. அதுவும் கிடைக்காவிட்டால் பனங்காணிகளுல் காச்சும் வெட்டிரும்பு வரை பாலன் அண்ணா கீழ் இறங்கிக் கொண்டிருந்தார்.
சிலவேளை தேவையில்லாமல் கடையடியில் யாருடனாவது வாக்குவாதம்… கைகலப்பு வேறு.
என்ன போதை என்றாலும் எந்த விதத்திலும் கமலி அக்காவைத் தொந்தரவு செய்யாது அன்பாக நடத்தினாலும் கமலி அக்காவின் முகத்தைப் பார்த்துக் கதைப்பதே குறைந்து விட்டது.
தனது மோட்டார் சைக்கிளில் தானே ஓடி வரமுடியாத நிலையில் சந்தையடியில் நிற்கும் யாரோ ஒருவர் அவரை வீட்டுக்கு கொண்டு வந்து விடும் நிலைக்கு மாறிவிட்டிருந்தது பாலன் அண்ணாவின் நிலை.
அதேவேளை கமலி அக்காவின் ஆழ்மனத்தி;ற்கு தனக்கும் பாலண் அண்ணைக்கும் வம்ச விருத்தியாகும் என்று நம்பிக்கையும் குறைந்து கொண்டே வந்தது.
ஆனால் கமலி அக்காவிடம் ஊரின் எதிர்பார்ப்பு எள்ளவும் குறையவில்லை.
”குடிச்சு குடிச்சு அவன்ரை சுண்ணாம்புச் சத்தெல்லாம் செத்துப் போயிட்டுதாக்கும். அதுதான் அவனுக்குப் பிள்ளைப் பாக்கியம் இல்லைப் போலும்” என ஊரில் கைநாடி பிடித்துச் சாத்திரம் சொல்லும் ஆலமரத்தடி நாட்டுப்புற சாத்திரியார் சொன்னதை கமலி முற்றாகவே நம்பினாள்.
ஆலமரத்தடிச் சாத்தியார் சொன்ன விடயமும் ஊரின் நாக்கு வளைப்பும் அவளை நிலை குலைய வைத்த அன்று இரவு தான் அது நடந்தது.
பாலன் அண்ணனை அவனது கூட்டாளி கைத்தாங்கலாக கூட்டி வந்து கமலி அக்காவிடம் ஒப்படைத்த இரவு.
*
எதற்குமே காத்திராக கடிகாரத்தின் சின்ன முள்ளும் பெரிய முள்ளும் கிட்டத்தட்டு நூறு தடவைகள் ஒன்றன் பின் ஒன்றாவும்… தம்மைத் தாம் தழுவியபடியும்… சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தன.
கந்தசஷ்டி முடிந்து திருவெம்பாவை நெருங்கிக் கொண்டிருந்தது.
இன்றுடன் மாமிச சட்டிகளை வீட்டின் பின்புறம் கவிழ்த்து வைத்தால் இனி சின்ன அம்மன் கோவில் பத்துநாள் திருவிழாவும் முடிய பொங்கலின் பின்புதான் சட்டிகள் முகம் நிமிரும்.
அன்று சந்தையடியில் போட்ட இடம் வலமாக போட்டு சுழி முதலாம் வட்டாரத்தையும் பன்னிரண்டாம் வட்டாரத்தையும் மட்டுமில்லை… அத்தனை வட்டாரங்களையும் அதிர வைத்தது.
புத்து மணிக்கு வீட்டடிக்கு வரும் மீன்கார சவேரியன் நேரம் தாழ்த்தி பதினொரு மணிபோல் வந்த பொழுது, ”உனக்கு இப்ப நேரத்தோடை வரச் தெரியாது… சிமியன்ரை மனுசி கூட ஒன்பது மணிக்கே நல்ல வெள்ளைக்கால் நண்டோவை வந்தவள். நான் தான் நீ பாவம் பிள்ளை குட்டிக்காரன் பாவம் எண்டு அவளிட்டை வாங்காமல் உனக்காக பொறுத்துக் கொண்டு இருந்தனான்” என கமலி அக்கா அவனைத் திட்டிய பொழுது, அவன்; தயங்கி தயங்கி சந்தையடியில் கேட்டதை சொன்ன அடுத்த வினாடியே கமலி அக்கா கிணற்றினுள் பாய்ந்தாள்.
”ஓம் தங்கச்சி… சந்தையடி முழுக்க இது தான் கதை. அமளி துமளி. சாராயம் விக்கிற சிவசம்புவின்ரை மூத்தவள்… அவளின்ரை புருஷன் வேறு தம்பின்ரை லொறியிலை கிளீரனாய் வேலை செய்தவன். கலவரத்துக்கை அனுராதபுரத்திலை புருஷனை சாகக் கொடுத்தவள்… அவளுக்கும் பாலன் தம்பிக்கும் ஏதோ தொடர்பாம்… நாலு மாதமாய்ப் போச்சுதாம்… இனி அழிக்கவும் ஏலாதாம்”
சவேரியனின் கூக்குரலால் ஒன்றுகூடிய அக்கம் பக்கம் அவளை வெளியே தூக்கிய பொழுது அவள் உயிர் அவளிடம் இருக்கவில்லை.
*
இந்தச் சின்ன வயதில் கமலி அக்கா போய் சேர்ந்திருக்கக் கூடாது என்பதில் அந்த ஊரார் எவர்க்கும் எந்தவிதமான அபிப்பிராய பேதமும் இருக்கவில்லை.
Skriv et svar