கடைக்குட்டியன் – சிறுகதை

கடைக்குட்டியன் – சிறுகதை

”ஐயோ”

நிலம் நன்கு வெளிக்காத அந்த அதிகாலைப் பொழுதில் கனகம் அலறிய பொழுது ஊரே கூடியது.

கிணற்றினுள் கணபதியின் உயிர் போய்; உடல் மிதந்து கொண்டிருந்தது.

அக்கம் பக்கத்தவர் அந்தக் காலைப் பொழுதில் கனகத்தின் குரல் கேட்டு முன் – பின்; வளவு வேலிக்கதியால்களை விலத்தியும் தள்ளியும் கொண்டு உள்ளே வந்து அவனை கிணற்றினுள் இருந்து தூக்கி வெளியில் கொண்டு வந்தார்கள்;.

சந்தையில் இருந்து கிழக்காகச் செல்லும் ஒழுங்கைப் பக்கத்தில் இருந்து யாரோ ஒருவரின் இழவுச் செய்தியை இரு இளைஞர்கள் சைக்கிளில் தம் அவலக் குரலில் மாறி மாறிச் சொல்லிக் கொண்டு போய்க் கொண்டு இருந்தது தெளிவாகக் கேட்டது.

”எங்கடை சுடலை சனிக்கிழமை எடுக்கத் தொடங்கினால் ஏழுபேரை எடுத்துப் போட்டுதான் போகும்” முணுமுணுத்தார்கள் கூடி நின்றவர்கள்.

பொலிசுக்கும் தகவல் போக அடுத்த அரை மணியாலத்துள் ஜீப் வண்டி சீறிக் கொண்டு வந்து ஒழுங்கை முகப்பில் நின்றது.

கணபதியின் உடலைச் சுற்றி நின்ற அனைவரும் பொலிசைக் கண்டதும் விலத்தி விலத்திப் போய் எட்டவாக நிற்று கொண்டார்கள் – அவனின் முகத்தில் மொய்த்துக் கொண்டு இருந்த இலையான்கள் போல.

கனகமும் நான்கு பிள்ளைகளும்; வீட்டின் தாழ்வாரத்தில் நடுங்கிக் கொண்டும் அழுது கொண்டும் நின்றார்கள். 

கூரையில் காகங்கள் வேறு கரைந்து கொண்டும் கத்திக் கொண்டு இருந்தன.

நாய்கள் அமைதியின்றி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தன.

கணபதியின் வீமன் மட்டும் அவனைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.

கணபதி தற்சமயமாக கிணற்றினுள் விழுந்தானா?

கணபதி கிணற்றினுள் குதித்து தற்கொலை செய்து கொண்டானா??

கணபதியை யாரும் கொலை செய்து விட்டு கிணற்றினுள் போட்டார்களா???

*

மூத்தது ஆண் பிள்ளை என்று கூரைதட்டி ஊர் எல்லாம் சொல்லி… மானிப்பாய் மருதடிப் பிள்ளையாரை நினைத்து கணபதிப்பிள்ளை என ஆசையுடன் தான் பெயர் வைத்தார்கள் சந்தையில் தரகு செய்யும் செல்லையாவும் மரக்கறி விற்கும் செல்லம்மாவும்.

சின்ன வயதிலேயே தாய்க்கும் தகப்பனுக்கும் பின்னால் சந்தைக்குப் போய் வந்த கணபதிபிள்ளையின் கவனம் முழுக்க சந்தையடிச் சண்டித்தனத்தில் ஐக்கியமாகிய பொழுது பள்ளிக்கூடம் என்பது எந்த விதத்திலும் அவனைக் கவரவில்லை.

பள்ளிக்கூடத்தில் தையலக்கா அடிக்க ஓங்கிய பிரம்பை தன் கையால் பிடுங்கிக் கொண்டு; நேரடியாக சந்தைக்கு ஓடி வந்து தகப்பனுக்கு பின்னால் ஒளிந்து கொண்டதுடன்; அவனின் பள்ளிக்கூட அத்தியாயம் முற்றுப் பெற்று விட்டது.

பின்பென்ன?

சந்தையடி… சண்டித்தனம்… தரகு…

கணபதிப்பிள்ளை என்ற பெயரில் ’பிள்ளை’ என்ற வால் அற்றுப் போக ’சண்டியன்’ என்ற முடி வந்து அமர்ந்து விட்டது.

’சண்டியன் கணபதி’ ஆகினான். 

சண்டித்தனத்துடனும் குடியும் கைகோர்த்துக் கொண்ட பொழுதும் கணபதி நல்லவன் நேர்மையானவன் என்ற அபிப்பிராயமே சந்தையடி முழுக்க நிலவி இருந்தது.

தரகு மட்டுமல்ல… சந்தையடியில் வரும் பஞ்சாயத்துகள் அனைத்தையும் அவனே தீர்த்து வைப்பான். கந்து வட்டி… ஏலப் பிரச்சனைகள்… வாடகைக்கடைக்களின் பாக்கி வசூல்கள்… இத்தியாதி… இத்தியாதி… எல்லாம்.

கை மடித்து விடப்பட்ட அரைக்கைச் சேட்டு… முழங்காலுக்கு மேலாக தூக்கிக்கட்டிய சரக்கட்டு… வாய் முழுக்க வெற்றிலை… காவி படிந்த பற்கள்…. முற்றாக சவரம் செய்யாத மோவாய்….

அவனுக்கு கிட்டவாக எவரும் வராமலே விலத்தி விலத்தி சென்று கொண்டிருந்த பொழுது அவன் கண்கள் மட்டும் பக்கத்தே உள்ள கலவன் பாடசாலைக்கு சென்று வந்து கொண்டிருந்த கனகவள்ளி மீது விழுந்தது. மரக்கறிச் சந்தைக்கும் மீன் சந்தைக்கும் நடுவே தேநீர் விற்கும் தகப்பனிடம் காசு வாங்கிச் செல்லும் பொழுதெல்லாம் அவளை அவனின் கால்கள் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தன.

ஆரம்பத்தில் முகத்தைச் சுழித்து அவனைத் தவிர்த்து வந்த கனகவள்ளி முன்னேயும் பின்னேயும் வந்து கொண்டிருந்த கணபதியனைப் பார்த்து ஒரு நாள் புன்முறுவல: காட்டி விட்டாள். 

சுனாமி வந்து மூன்றாம் வருட திருவிழாவின் கொடி இறக்கியதுக்கு அடுத்த நாள் இருவருக்கும் பூதாக்கலாச்சோறு கொடுத்து குடிசைக்குள் விட்ட பொழுது கனகவள்ளி கணபதிக்கு கனகம் ஆனாள்.

*

”என்னதான் குடித்துப் போட்டு அவளை அடித்து ஆக்கினைப் படுத்தினாலும் அவளிலை அவன் அவ்வளவு அன்பு”

”அவளை அடிச்சாலும் கொன்றாலும் ஒரு வேளை கூட பிள்ளையளை அவன் பட்டினி போட்டதில்லை… ஒருவேளை கூட ஒரு நேரச் சாப்பாட்டுக்கு யாரிடமும் கை நீட்ட விட்டதில்லை”

”பிள்ளைகளிலை அவ்வளவு உயிர்”

“மூன்று பெட்டைகள் பிறந்த பிறகு இனி ஒரு பொடியன் பிறந்தால் அவனுக்கு கூடாது என்று அராலிச் சாத்திரியும் சொன்னவராம். இவன் கேட்டால் தானே?. சாத்திரியையும் தூஷணத்தாலை பேசிப் போட்டு அடுத்தது பொடியனைப் பெத்துப் போட்டவன்”.

“இப்ப கனகத்தையும் அந்த நாலு குஞ்சுகளையும் அநாதைகளாய் விட்டுட்டு போய்விட்டான் ….”

ஆளுக்கொரு அபிப்பிராயம்.

அவனை உடற்கூறு செய்து மரணத்திற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என பொலிஸ் இன்ஸ்பெக்கடர் அம்புலன்ஸை வரச் சொல்லி அழைப்புக் கொடுத்தார்.

*

போர் மேகங்கள் குவிந்தும் கலைந்தும் சென்ற பொழுது சண்டியன் கணபதியின் சண்டித்தனமும் கிட்ட தட்ட முடிவுக்கு வந்து விட்டது.

எட்ட எட்டவாக இருந்த சின்ன சின்ன சந்தைகள் பக்கத்து ஊரில் உள்ள பெரிய சந்தையுடன் தன்னை இணைத்துக் கொள்ள கணபதியின் இந்த ஊர்ச் சந்தை மெலிந்து விட்டது.

இப்போது மட்டுப்படுத்தப்பட்ட தரகும் மட்டுப்படுத்தப்படாத குடியும் மட்டும் தான்.

ஊரையே அடித்த கை கனகத்தை மட்டும் வெறியில் அடிக்கத் தொடங்கியிருந்தது.

பொதுவாக மாலைச் செக்கல் பரவும் பொழுது கணபதி வெறியில் ஆடி ஆடி அந்த ஒழுங்கையுள் வருவதும்… வேலிக்கதியால்களை அதிåக நேரம் பிடித்துக் கொண்டு நிற்பதுவும்… சிலவேளை அவ்வாறே சிறுநீர் கழிப்பதும்… யார் யாரையோ திட்டுவதும்… அவன் செல்லமாக வளர்த்த நாயை உதைப்பதும்… அவனை அமைதிப்படுத்த முயற்சிக்கும் கனகத்தை போட்டு அடிப்பதும் என அவர்கள் ஒழுங்கையில் முதலில் மாதத்துக்கொரு முறையும்… பின் கிழமைக்கு ஒரு முறையும்… பின் நாளாந்தம் நிகழும் ஒரு நிகழ்வாக மாறி விட்டிருந்தது.

அவன் குரல் ஓங்கும் பொழுது ஒழுங்கையில் இருந்த மற்றைய குடும்பங்களுக்குள் ஒரு பதட்டம் நிலவும்.

பின்நேர வேளை நெருங்கி வர வர… இன்று என்ன சண்டையோ… குடித்து விட்டு வந்து அம்மாவை அடிச்சு என்ன ஆக்கினைப் படுத்தப் போறாரோ என்ற பதைபதைப்பு அவன் நான்கு பிள்ளைகளுக்கும் தொற்றிக் கொள்ளும். 

மூத்தவளுக்கு 14. அடுத்தடுத்த மருதடி கோயில் கொடியேற்றக்களுக்கு ஒவ்வொன்றாக ஒன்றாக  இரண்டு பெண்கள். கடைக்குட்டியனுக்கு 10.

மூத்தவளுக்கு குப்பைத் தண்ணி வார்த்தது போன மாதம் தான்.

அதனுடன் ஆவது கணபதி திருந்துவான் என ஊர் எதிர்பார்த்தது.

அது நடக்கவில்லை.

தாய்-தகப்பன் பாசம் என்பது பிள்ளைகளுக்கு தாய்ப்பாசம் மட்டும் என்றாகியது.

கடைக் குட்டியனின் உலகமே கனகம் தான்.

அவ்வாறே அவளின் உயிரே அவன் தான்;.

கணபதி குடித்து விட்டு தாயை அடிக்கப் போகும் பொழுது மூன்று பெண் பிள்ளைகளும் நடுங்கிக் கொண்டு நின்றாலும் கடைக்குட்டி முன்னே நின்று தடுப்பான்.

ஒரு நாள் கணபதி கனகத்தை அடிக்க கை ஓங்க கல் ஒன்றை எடுத்து எடுத்து தகப்பனை நோக்கி எறியப் போக கனகமே கண்டித்து அவனைத் தடுத்தாள்.

“அப்பாவுக்கு நீ கையை ஓங்க கூடாது”

“உன்னை மட்டும் அவர் அடிக்கலாமா?”

”என் கலி தீர்க்க வந்த தெய்வம் நீ” என்று அவனைக் கட்டிக் கொண்டு அழத் தொடங்கினாள்.

அவனும் அன்று நித்திரையாகும் வரை அவளின் கழுத்தைக் கட்டிக் கொண்டு இருந்தான்.

கணபதியின் குடியும் அதிகரிக்க அதிகரிக்க நான்கு பிள்ளைகளும் அவனிடமிருந்து இருந்து விலத்தி விலத்திப் போய்க் கொண்டு இருந்தார்கள்.

அதுவும் கனகத்திற்கு வேதனையாக இருந்தது.

குடியையும் கெட்ட வார்த்தைகளையும் சேர்த்து அவனை கனகம் ஏற்றுக் கொண்ட அளவிற்கு நான்கு பிள்ளைகளாளும்; அவனை ஏற்க முடியவில்லை.

அவன் வீட்டில் இல்லாத வேளைகளில் வீடு ஊரடங்குச் சட்டம் இல்லாத ஊர் போல கலகலப்பாக இருக்கும். அவன் வீட்டை வந்ததும் ஆமி றவுண் அப் பண்ணும் வீதி போல அமைதியாகும்.

தனியே தாயும் பிள்ளைகளும் இருக்கும் பொழுது கடைக்குட்டியன் தன் வயதுக்கு மீறிய கதைகள் சொல்லி கனகத்தை அதிசயிக்க வைப்பான்.

“என் கலிதீர்க்க வந்து பிள்ளை…. என் அம்மாளாச்சி தந்த சொத்து” என அவனைக் கனகம் கட்டி அணைத்துக் கொஞ்சுவாள்.

“அம்மா ஏனம்மா ஐயா உன்னை குடிச்சுப் போட்டு அடிக்கிறவர்?”

“தெரியாதடா….”

“ஏன் அம்மா ஐயா உன்னை தூஷணத்தால் பேசுறவர்”

“எனக்குத் தெரியாது குஞ்சு”

நீண்ட ஒரு மௌனத்திற்குப் பின், “அம்மா நான் கட்டப் போற பொம்பிளையை இப்பிடிப் பேச மாட்டன்… இப்பிடிப் போட்டு அடிக்க மாட்டன்… நீ ஐயாக்கு பதிலாக என்னைப் போல ஒருத்தனை கலியாணம் செய்திருக்க வேணும்” அந்த சிறிய வாய் சொல்லி முடிக்கு முதல் அவனைத் தாவி தன் நெஞ்சுடன் அணைத்துக் கொண்ட கனகத்தின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக ஓடத் தொடங்கியது.

அன்று அவன் அப்படியே தூங்கி விட்டான்.     

அந்த நான்கு பிள்ளைகளுக்கும் சரி… அந்த ஒழுங்கையில் வசித்தவர்களுக்கும் புரியாமல் இருந்த ஒரே புதிர் மாலையில் இடி மின்னல் சூறாவளி வந்தது போல அதிரும் கணபதி வீட்டு முற்றமும்… வீடும்… அடுத்த நாள் எதுவும் நடக்காதது போல அமைதியாக கடற்கரை போல விளங்குவதுதான்.

அதிகாலையில் எதுவும் நடக்காதது போல அவன் சந்தைக்கு செல்கின்றான் என்பதும்… அதேபோல் கனகமும் அவன் பின்னே அமைதியாகப் போகின்றாள் என்பது தான்.

*

அன்றும் அப்படித்தான்!

போயா தினம் ஆதலால் தவறணைகள் பூட்டு. எனவே வீடுகளில் கள்ளு மலிவு விற்பனையில். 

நிறை வெறியில் அதிகமாக கனகத்தை கிணற்றடியில் வைத்து அடிக்கவும்; உதைக்கவும்; தொடங்கி விட்டான்.

பயம் ஒரு புறம்… மரியாதை ஒரு புறம் என ஒதுங்கி ஒதுங்கி இருந்த அயல்வீட்டவர்கள் வந்து மறிக்க அது கை கலப்பாகி விட்டது.

அவனின் கோபம் மேலும் கனகத்தின் மேலே திரும்பி அவளை மேலும் மேலும் அடிக்கத் தொடங்கினான்.

மூன்று பெண் பிள்ளைகளும் கனகத்தை கட்டிக் கொண்டு கணபதியின் அடியில் இருந்து காப்பாற்ற முயற்சித்துக் கொண்டிருந்த பொழுது குசினிக்குள் இருந்து ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு கடைக்குட்டியன் ஓடிவர அனைவரும் அதிர்ந்து விட்டார்கள்.

இதனை சற்றும் எதிர்பாராத கணபதியின் தலைக்கேறியிருந்த வெறி கீழே இறங்கிக் கொண்டிருந்தது.

கனகம் தாவி ஓடிச் சென்று மகனைக் கட்டிக் கொண்டு அழத்தொடங்கினாள்.

கத்தி நிலத்தில் விழுந்தது.

அக்கம் பக்கம் மெதுவாக கலையத் தொடங்கியது.

கடைக்குட்டியனின் படபடப்பு குறைய அதிக நேரமாகியது.

இரவு நடுச்சாமத்தை தாண்டிக் கொண்டு இருந்தது.

சாக்குத் துணியே கதவான மண் அறையுள் பெண் பிள்ளைகள் தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.

வழமைபோல வெளி விறாந்தையில் கணபதி – கனகம் – கடைக்குட்டியன்.

கடைக்குட்டியனுக்கு தாய் அணுங்குவது போலச் சத்தம் கேட்டது.

அம்மா அழுகின்றாவா?

மெதுவாக கண் திறந்து பார்த்தான்.

இருட்டில் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.

அம்மாவை ஐயா தன் கைகளால் நெரிக்கின்றாரா?

’அம்மா’… ’அம்மா’… கடைக்குட்டியனின் மனம் படபடத்தது.

அம்மாவின் மீதேறி ஐயா கொலை செய்யப்பார்க்கின்றாரா?

அம்மா ஏன் நெளிகின்றா?

அம்மாவின் குரல் ஏன் கேட்கவில்லை??

படுக்கையில் இருந்து எழுந்து குரல் தர ஏனோ பயமாய்…பார்த்துக் கொண்டே இருந்தான்.

என் அம்மா…

என் அம்மாவை…

ஐயாவை விட நன்றாக நான் பார்த்துக் கொள்ள விரும்புகின்ற அம்மாவை….

பகலில் அடித்தும்… பேசியும் துன்புறுத்துவது போதாது என்று இப்போ இரவில் ஏறி இருந்து கழுத்தை நெரித்தும்… அம்மாவை நசித்தும்….

ஏன் அம்மா குழறவில்லை?

அம்மாவும் அவரின் கழுத்தை நெரிக்கின்றாவா??

’கொல் அம்மா’…

’அப்படியே ஐயாவின் கழுத்தை நெரித்துக் கொல் அம்மா’

அம்மாக்கு மூச்சு வாங்கின்றது போலும்….

ஐயாக்கும் மூச்சு வாங்கின்றது போலும்…

இருவருமே சண்டை பிடிக்கின்றார்களா?…

’கொல்லு அம்மா’… ’கொல்லு அம்மா’….

கடைக்குட்டியனுக்கும் மூச்சு வாங்கத் தொடங்க அவர்கள் இருவரின் மூச்சும் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாகத் தொடங்கியது போலும்.

கணபதி எழுந்து கிணற்றடிப் பக்கம் போனான்.

கனகம் பிணம் போல படுத்திருந்தாள்.

கடைக்குட்டியன் மெதுவாக எழுந்து தாழ்வாரத்தில் நின்று நிலவு வெளிச்சத்தில் பார்த்தான்.

கணபதி கிணற்றில் தண்ணி மொண்டு கொண்டு நின்றான்.

மெதுவாக பின்னே சென்று கணபதிக்கு பின்னால் நின்று கொண்டான்.

கணபதி தண்ணி வாளியை துலாக்கயிற்றில் இருந்து குனிந்து எடுத்த அந்த தருணத்தில்…

’துலைஞ்சு போ’

ஒரே தள்ளல்.

அந்த இரவில் கணபதி கிணற்றுள் விழுந்த சத்தமோ… தத்தளிப்போ… யாருக்கும் கேட்கவில்லை.

மெதுவாக தாயை வந்து அணைத்துக் கொண்டு படுத்துக் கொண்டான்.

தாய் கனகமும் அவனை அணைத்தபடி தூங்கிவிட்டாள்.

*

”வெறியில் கணபதி கிணற்றினுள் தவறி விழுந்திருக்க வேண்டும் அல்லது தற்கொலை செய்திருக்க வேண்டும்” என வைத்திய அதிகாரியும் பொலிசும் கணபதியின் பைலை முடித்துக் கொண்டார்கள். 

வீட்டின் பின்புறம் நின்றிருந்த பெரிய பூவரசு நெஞ்சாங்கட்டைக்காக தறித்து வீழ்த்தப்பட்டது.

முன் தட்டிப் படலைக்கு பக்கத்தே இருந்த வேலியையும் பிரிக்கத் தொடங்கினார்கள்.

அவலச்சாவு என்பதால கற்பூரத்தை கொளுத்தி ஒரு தேவாரத்தைப் பாடி ஈமக்கிரியைகளை சுருக்கமாக முடித்துக் கொண்டார்கள்.

இறுதியாக கொள்ளிக் குடத்தை தூக்கி கடைக்குட்டியனின் தோளில் வைத்த பொழுது கனகம் தன் தலையில் அடித்து குழறியது அங்கிருந்த அனைவரையும் கலங்க வைத்தது.

”ஐயாவை கொண்டு போறியோடா என்னைப் பெத்தவனே”

*

சுடலையின் நடுக்கட்டத்தில் அடுக்கப்பட்டிருந்த விறகு கட்டைகள் மீது சவப்பெட்டியை இறக்கி வைத்தார்கள்.  

தோளில் கொள்ளிக் குடத்தை வைத்து… கொள்ளியை பிறங்கையில் பிடித்தபடி விறைப்பாக நின்றிருந்தான் கடைக்குட்டியன். பக்கத்தே ஒருவர் அவனை ஆதரவாக அவனை அணைத்தபடி.

மற்றவர்கள் பெட்டியின் மூடியினைத் திறந்து கணபதியின் நெஞ்சின் மீது நெஞ்சாங்கட்டையை வைத்த பொழுது கடைக்குட்டியன் முதல் தடவையாக கதறி அழுதான்.

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)