கடந்து செல்லும் 2015! நெருங்கி வரும் 2016!!
கடந்து செல்லும் 2015! நெருங்கி வரும் 2016!!
மீண்டும் ஒரு தடவை வாணவேடிக்கைகள்… சாம்பெயின் போத்தல்களின் உடைப்புகள்… புதிய பாத்திரத்தில் நடுநிசியில் பால் காச்சி சுவாமிக்கு படைக்கும் புலம் பெயர் புதிய கலாச்சாரம்… இந்த ஆண்டு வெள்ளிக்கிழமையில் புதுவருடம் பிறப்பதால் அனைத்துக் கோயில்களிலும் மக்கள் திரள…கணனிகளை புத்தாண்டு வாழ்த்துகள் நிறைக்க…
2016 ஆண்டு பிறக்க இருக்கின்றது.
நிச்சயம் சூழல் வெப்படைதல் காரணமாக 2015ஐ விட இன்னும் அதிக இயற்கை அனர்த்தங்களும்… வேலையில்லாத் திண்டாட்டங்கள் காரணமாக அதிக திருட்டுகளும்… மாறிவரும் உலகில் மாறாத இலங்கை தமிழ் அரசியலும் அப்பாவித் தமிழர்களும்… இந்திய தொலைக்காட்சிகளில் இன்னமும் இன்னமும் எம்மை இழந்தபடி… ”நாளை மற்றுமொரு நாளே” என்ற ஜி நாகராஜனின் நாவலின் தலையங்கம் போல 2016 பிறக்க இருக்கின்றது.
வானத்தில் இருந்து தேவதைகள் வெள்ளிக்குச்சி கொண்டு வந்து ஒவ்Nவுhர் தலையையும் தட்டி அதிஸ்டத்தை அள்ளி வழங்கப்போவதில்லை.
ஆனால் இதுவரை நடைபெறாத ஒன்றை எங்களால் நடாத்த முடியும்.
ஆம்!
நாங்கள் புதிதாகப் பிறக்க முடியும்!
புதிய சிந்தனைகளை வர விடுவதற்கு எங்கள் வேலிப்பொட்டுகளை கொஞ்சம் அகலப்படுத்தி வைக்கலாம்.
இத்தனை காலமும் வருடங்கள் தானே பிறந்தது.
நாங்கள் புதிதாய் பிறக்கவில்லைத் தானே!
எனவேதான் நாங்கள் புதிதாய் பிறக்க வேண்டும்.
புதிய சிந்தனைகளுக்கு வழிவிட வேண்டும்.
புதிய ஒளியை எங்களுக்கு காட்டும்.
அல்லது இன்ரசிற்றி றெயின் போல அதே தடத்தில்
மீண்டும் ஓடி… ஓடி… மீண்டும் 2017க்கு வெடியும் வாணமும் வேண்டும் காலம் விரைந்து வந்து விடும்.
மீண்டும் மீண்டும் ஒரே செக்கில் சுற்றி சுற்றி வரப் போகின்றோமோ அல்லது வாழ்விற்கு புது புது அர்த்தத்தை தேடப் போகின்றோமா என்பது அவரவர் வாழ்வின் தர்மம்..
ஆம்!
குறை ஒன்றும் இல்லை நிறை மூர்த்தி கண்ணா –
எம் குறைகளைக் களைந்து நாம் புதிதாய் பிறந்தால்!
களையெடுப்பு என்பதே ஆக்கத்திற்கு வழிசமைத்தல் என்பதுதானே பொருள்!
களை என்பது கண்ணுக்குத் தெரிவது!
பதர் என்பது கண்ணுக்குத் தெரியாதது
இவை அகலும் பொழுது புதிய வெள்ளாமை இன்னும் வீரியமாக இருக்கும்
அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்.
Skriv et svar