என் பெயர் உஞ்சு. (சிறுகதை)

என் பெயர் உஞ்சு. (சிறுகதை)

என் பெயர் உஞ்சு.

எங்கள் வீடு… வீட்டோடு சேர்ந்த ஒரு பூனை… நாலைந்து கோழிக்குஞ்சுகள்… வீட்டின் பின் கொட்டிலில் கட்டியிருக்கும் ஒரு கிடாய் ஆடு… இரண்டு மறியாடுகள்.. மூன்று குட்டியாடுகள் எல்லோருக்கும் நான்தான் எப்போதும் காவல்.

எனது வீட்டு எஜமான் சுத்தக் கஞ்சன்.

இரவு வேளைகளில் நாலைந்து வீடுகளுக்கு கேட்கக் கூடியவாறு கோப்பையை திண்ணையில் தட்டி, ”உஞ்சு…உஞ்சு…” என மிகப் பலத்த சத்தத்துடன் கூப்பிடுவார்.

எங்கு நின்றாலும் ஓடிப் போவேன்.

கோப்பையில் ஒரு சோற்றப் பருக்கை கூட இருக்காது.

பின்புதான் தெரியும் அவர் பக்கத்து வீடுகளுக்கு பவுசு காட்டுகிறார் என்று.

மனைவி;க்காரி பரவாயில்லை… பழைய சோறு கறியைக் குழைத்து தோட்டத்துப் பெண்களுக்கு கொடுத்து மிகுதி இருந்தால் எனக்கும் கோழிகளுக்கும் கொஞ்சம் கிடைக்கும்.

அதிகமாக மீன் முட்கள்தான் எனக்குக் கிடைக்கும். தொண்டையில் சற்றுக் குத்தினாலும் சமாளித்துக் கொள்வேன்.

வீட்டை விட றோட்டு முகப்பில் உள்ள முருகன் கோயில் பரவாயில்லை. மாமிசம் இல்லைத்தான் – ஆனாலும் பிள்ளைகள் ஐயரிடம் அடிபட்டு வாங்கிவிட்டு சாப்பிட முடியாமல் வீதியோரத்தில் போடும் பொங்கல்…சுண்டல்… அவல்.. சிலவேளைகளில் வடை.

அங்கு நான் மட்டும் இல்லை… என் இனத்தவர் கொஞ்சம் பேரும் நிற்பார்கள்…. ஆளுக்கால் கொஞ்சம் முறுக்கிக் கொள்வோம்… ஆனால் பெரிதாக சண்டை எதுவும் வருவதில்லை – ஐரொப்பிய அவுஸ்திரேலிய தமிழர்கள் போல!

அப்படிச் சண்டை வருவது மீன் கடைப்பக்கம் தான். XXX தழிழர்களைப் போல். (XXX தணிக்கை செய்யப்பட்டுள்ளது) பெரிய திருக்கை அல்லது சுறாவின் குடலை வெட்டி கறிக்கார ராசம்மா எறியும் போது அதற்கு பெரிய போராட்டமே நடைபெறும். எம்மினமே எம்மினத்தை இரத்தம் வரும்வரை குதறிப் போடுங்கள்…. அவ்வளவு தூரம் சண்டை நடக்கும்.

எனக்கு இந்தச் சண்டைக்கான காரணங்கள் விளங்குவதேயில்லை…. பஞ்சத்தால் மடிந்து கொண்டிருக்கும் எதியோப்பியா என்றாலும் சரி… பணத்தில் புரளும் அமெரிக்கா என்றாலும் சரி…. இந்த இரண்டின்நடுவே தத்தளிக்கும் எங்கள் நாடுகள் என்றாலும் சரி… எங்கள் மக்கள் புலம்பெயர்ந்து போய் வாழும் நாடுகளிலும் சரி… இந்தச் சண்டைகளுக்கு குறைவேயில்லை. அங்கே நடைபெறும் சண்டைகள் சாப்பாட்டுச் சண்டைகள் அல்ல…. பதிலாக கௌரவச் சண்டைகளே….தாங்கள் தாங்களாக தமக்கு முடிகளைத் தூக்கி வைத்துக் கொண்டு தங்களுக்குள் தாங்கள் பிடிக்கும் சக்கரவர்த்தி சண்டைகள்.

எண்பதுகளில் ஒரு கைப்பையுடனும்…சில வேளை கைபை போதாது என்று சாமான்கள் கட்டும் கறுத்த பிளாஸ்ரிப் பைகளுடனும் ஒரு அகதி முகாமில் இருந்து இன்னோர் அகதி முகாமிற்கு அலைந்த பொழுது இருந்த ஒற்றுமை சொகுசுக் கார்கள்… சொந்த வீடுகள் என்று வந்த பொழுது இல்லாமல் போய்விட்டாதாம் என வெளிநாட்டால் கோடை விடுமுறைக்கு வந்த குடும்ப ஆட்கள் சொல்லிக் கொண்டு இருந்தினம்.

நானும் திண்ணையில் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு கேட்டுக் கொண்டு இருந்தேன்.

இவர்களுடன் ஒப்;பிடும் பொழுது சாப்பாட்டுக்காக அடிபட நான்சந்தைப் பக்கம் போவதில்லை என நினைக்கப் பெருமையாக இருந்தது.

இவ்வளவு தூரம் என் அப்பப்பா காலத்தில் இருக்கவில்லையாம்.

எனது அப்பப்பா காலத்தில் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையில் றெயின் ஓடியதாம்.

அதன் தண்டவாளங்கள் அதிகமான இடங்களில் பெயர்க்கப்பட்டு விட்டாலும் அதற்கான அடையாளங்களை வடிவாக காண முடியும்.

எங்கள் பளை ஸ்டேசனில்தான் கொழும்புக்குச் செல்லும் மெயில் றெயின் சாப்பாட்டிற்கும்…கை கழுவுவதற்கும்.. போத்தல்களில் தண்ணீர் நிரப்பி எடுத்து வருவதற்கும் அதிக நேரம் தங்கி நிற்குமாம்.

வடமாராச்சிப் பிரதேசத்தில் இருந்து கொழும்பு செல்லும் அத்தனை பாசல் பொதிகளையும் புகையிரதத்தினுள் ஏற்றவதற்கு அதிக நேரம் எடுக்கும் என்பது அடுத்த காரணம்.

எது எப்படியோ…. பளையே சாப்பாட்டுக்குரிய நிலையமாகப் போய்விட்டதால் அப்பப்பா ஆட்களுக்கு பிரச்சனை இல்லையாம்.

வயிறு முட்ட சாப்பாடு கிடைக்குமாம் – எல்லாம் ஜன்னல் வழியே எறிந்த வாட்டிய வாழை இலையிலும் வாசித்த பழைய வீரகேசரி செய்தித் தாளிலும் கட்டியசாப்பாட்டுப் பாசல்கள் தான். பொதுவான பாசல்கள் இடியப்பம் அல்லது புட்டை,முட்டை அல்லது இறால் பொரியலுடன் சேர்த்துப் பிரட்டியதாக இருக்கும். சிலவேளை எக்ஸ்ராவாக ஒரு சின்ன மீன் பொரியல் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

இறைச்சியுடன் கட்டப்பட்ட சோற்றுப் பாசல்கள் மிகக் குறைவாகவே இருக்கும். ஒன்றில் யாழ்ப்பாண வெய்யிலுக்குள் சோறு வேர்த்து விடும் என்பது காரணமாக இருக்கலாம்… அல்லது அன்றைய இறைச்சிக் கறி மத்தியானத்துடனேயோ தீர்ந்து போய் இருக்கலாம்.

பொதுவாக யன்னலினூடு வெளியே வந்து விழும் சாப்பாட்டுப் பாசலில் நிச்சயம் மிச்சம் மீதியாக ஏதும் இருக்கும். எதுவும் இல்லாது வந்து விழுவன மிகக் குறைவு. ஒருநாள் முற்ற முழுதாக ஒரு சாப்பாடுப் பாசல் வெளியே வந்து விழுந்ததாம்…. தோடர்ந்து ஒரு பெண்ணின் விக்கலுடன் கூடிய அழுகைச் சத்தமும் கேட்டதாம்… அப்பப்பா காதைக் கொடுத்துக் கேட்டிருக்கின்றார்.

”கொம்மா கொப்பாட்டை எத்தனை தரம் புகையிலைக் காணியை ஈடுவைச்சுத் தரச் சொன்னனான்…. கொழும்பிலை வியாபாரத்திலை போட்டுட்டு இரண்டு வருஷத்திக்கை மீண்டு தருவன் எண்டு… அதுக்குப் பயம்… மருமகன் கொண்டு போய் குடிமுழுகிப் போடுவன் எண்டு… இப்ப கணவாய்க் கறியும்… புட்டும்…. தாருக்கடி வேணும்… உன்ரை கொப்பர் கொம்மாவும் அவையின்ரை சாப்பாடும்…”

”கொஞ்சம் பேசாமல் இருங்கோ… ஆக்கள் பாக்கினம்” அவள் விம்மினாளாம்.

”ஆக்கள் பாக்கட்டுமன்… நாலு சனத்துக்கு தெரியட்டுமன் கொப்பர் கொம்மான்றை…” சொல்;லிக் கொண்டிருக்க றெயின் புறப்பட்டு விட்டதாம்.

அன்று அப்பபப்hக்கு நல்ல வேட்டையாம்.

அரைவாசியைச் சாப்பிட்டு விட்டு வாயால் கௌவ்விக் கொண்டு வந்து அப்பம்மாவிடம் மிகுதியைக் கொடுத்தவராம்.

எனக்கு மாமிசச் சாப்பாடு என்றால் எங்கள் வீட்டுக்கு யாராவது விருந்துக்கு ஆட்கள் வந்துஅன்று அவர்களுக்காக ஆக்கப்பட்ட பிரத்தியோக மாமிசச் சாப்;பாட்டை வெளியே கொண்டு வந்து வெளிவிறாந்தையில் எனக்கு கிட்டவாகக் கொட்டும் பொழுதுதான்.

அன்றைய விருந்துக்கு எங்கள் வீட்டில் வளர்ந்த கோழியையோ அல்லது சேவலையோ அவர்கள் கறியாக்கியிருந்தால் நான் சாப்பிடமாட்டேன்.

எனக்கு எப்பவும் ஆச்சரியமாக இருக்கும்….. எப்படித்தான் காலையும் மாலையும் அரிசியும் கீரைம் தண்டுகளும் போட்டு வளர்த்துப் போட்டு ஒரே கழுத்துத் திருக்கலில் கதையை முடித்துவிட்டு சட்டிக்குள் போடுகிறார்களோ என்று.

நாய் நன்றியுள்ள மிருகம் என திண்ணையில் இருந்து பிள்ளைகள் பலமாக படிக்கும் பொழுது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும்… அதை மனப்பாடமாக்கும் மனிதர்கள் நன்றியுணர்வு உள்ளவர்களா என எண்ணி நான் கவலைப்படுவதுண்டு.

கோழிகளை விடப் பாவம் கிடாய் ஆடுகள்… .இலை… குழை…பள்ளிக் கூடத்தால் வந்த பிள்ளைகளைக் கொண்டு பலா இலைகளைக் கம்பியால் குற்றி குற்றி சேர்த்து… அதை இரண்டு மூன்று நாட்களுக்கு கொடுத்து… அதுவும் போதாது என்று தவிடும் பிண்ணாக்கும் கொடுத்து… கடைவாய்ப் பல்லு வந்து விட்டதா எனத் தனம் தினம் பார்த்து வளர்த்து… பின் வைரவர் கோயில் வேள்வி என்று வரும் பொழுது அதற்கு மாலை போட்டுக் கொண்டு போய்… அதன் வேளை வரும்வரை காத்திருந்து… சில சமயம் அவ்வாறு காத்திருக்கும் பொழுது ஆட்டுக்கு விடுபவனிடம் கொண்டு போனால் ’ஐந்தோ பத்தோ அழவேண்டும்’ என்பதற்காக இங்கேயே சிலர் தம் மறி ஆடுகளை ஆட்டுக்கு விட்டு தம் சேமிப்புத் திறமையை சுருட்டைக் குடித்தபடியும் எச்சிலை வேலியில் துப்பியபடி கதைத்துக் கொண்டு நிற்க…’பா’ என்று ஒரு சத்தம் அவலமாகக் கேட்கும்.

எங்கள் வீட்டுப் பின் கொட்டிலில் பச்சைப் பனை ஓலைகளைப் பிரித்து அதில் பங்கு இறைச்சி வாங்குவதற்கு வந்த நாலைந்து பேர் குந்தியிருந்து பங்கு சரியாகப் பிரிபடுகின்றதா எனப் பார்த்படி அரசியல் கதைத்துக் கொண்டிருக்க…என் கிடாய்த் தோழனின் அவயவங்கள் ஒவ்வோர் உமலிலும் போய் விழும்…ஈரல் – நுரையீரல் – இதயம் – சதை – கொட்டை – மாங்காய் – முன்னங்கால் சதை – பின்னங்கால் சதை – கழுத்தெலும்பு – விலா எழும்பு இத்தியாதி இத்தியாதி….

பின்பு சட்டிக்குள் கிடந்து கொதிக்கும் மணம் பிறம்பாய் காணிஎங்கும்; மணக்கும்…

எங்கள் வீட்டில் பழத்தேசிக்காய்மரம் இருந்ததால் அன்றைய தினம் அக்கம் பக்கத்து வீட்டார் அவர்களின் குழந்தைகளை எங்கள் வீட்டுக் அதனை வேண்டி வரும்படி அனுப்பி வைப்பார்கள்.

மத்தியானம் எல்லோருக்ம் எண்ணை வைத்து…. அதைக் காய விட்டு… கிணற்றடியில் நின்று பிள்ளைகள் எல்லாம் கூயோ… மாயோ… எனச் சத்தமிட்டபடி முழுகி.. அதற்கிடையில் வீட்;டு எஜமானிகளுக்குத் தெரியாமல் அலுமினியப் பாத்திரத்தில் கல்லோயாச் சாரத்தை அடித்து… கடைசியில்அனைவரும் வரிசையாக அமர்ந்திருந்து… அம்மா ஆட்டுக் கறி போடு.. ஈரல் போடு… சுவரொட்டி போடு…என்று கூப்பாடு போட்டபடி கால் எலும்பை எடுத்து கடைவாய் வழியே எச்சில் வழிய அதன் மச்சையை உறிஞ்சும் பொழுது என் அடி வயிறு வறுகும்.

சாப்பிட்டு முடிந்த பின் வெளியே கொண்டு வந்து போடும் என் கிடாய் நண்பனின் எலும்புத் துண்டுகளை நான் மறுதலித்த பொழுது, ”இவருக்கு இப்ப கொழுப்பு மெத்திப் போச்சு” என்ற விமர்சனங்களைக் கேட்கும் பொழுது என் மனம் என்னையே நினைத்துப் பெருமைப்படும்.

*

எங்கள் ஊரில் நடந்த எத்தனையோ நன்றி கெட்ட… அல்லது துரோகச் சம்பங்களுக்கு நான் சாட்சியாய் இருந்திருக்கின்றேன்.

அவற்றை இப்போது சொல்லி என்ன பிரயோசனம்? பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்கள்தான். அவர்கள் வாழ்வு திரும்ப போவதில்லை. பின்பு என்ன நடந்ததுஎன தெரியாது.

எத்தனையோ நிகழ்ச்சிகளை மறக்கவே நினைக்கின்றேன்….. சிலவற்றை மறக்க முடியவில்லை. – அமைதியாகப் போய் விட்டது கடல் என நினைக்கும் பொழுது மீண்டும் எழுந்து வரும் அலைகள் போல!

இயக்கங்கள் என்ற சொல் அப்போதுதான் எங்கள் ஊருக்குள் அறிமுகமாகியது.

திடீரென புதுப்புதுப் பையன்கள் வருவார்கள்.

கூட்டம் கூட்டமாக வருவார்கள்…கூட்டம் கூடுவார்கள்… அல்லது கூட்டம் போடுவார்கள்…. வீடு வீடாக நகை பணம் கேட்டு வருவார்கள்….

இரவில் பக்கத்து பனை வெளியில் இரகசியமாக ரஷ்ய – சீனப்புரட்சிப் படம் போட்டுப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.

நான் கிட்டவாகப் போனால் கல்லெடுத்து எறிந்து கலைப்பார்கள்.

நாளுக்கு நாள் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

பெண் பிள்ளைகளும் சேர்ந்து வரத் தொடங்கினார்கள் – ரவுசர் போட்டபடி.

ஒரு நாள் ஊர் எல்லாம் வெடிச்சத்தம் கேட்டது.

அது பொங்கலுக்கு கேட்கும் வெடிச்சத்தம் இல்லை.

 

வித்தியாசமான சத்தம்.

நானும் என் அக்கம் பக்கத்து உறவினர்களும் அமைதியின்றி ஓடித்திரிந்தோம் – உடலில் உதறல் எடுத்தபடி.

அன்று பின்னேரம் போல் அந்தச் சத்தம் அடங்கி விட்டது.

இரவு வந்த பொழுதும் என்னால் தூங்க முடியவில்லை.

மனத்துள் ஒரு குறுகுறுப்பு – பனைவெளியைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று.

அங்கே போன பொழுது ஏங்கி விட்டேன்.

ஒன்றாய் திரிந்த பையன்களில் ஆறு பேரும் ஒரு பெண்ணும் பனைமரத்துடன் சேர்த்துக் கட்டப்பட்டு இருந்தார்கள்.

மற்றவர்களின் துப்பாக்கிகள் அவர்களை நீட்டியபடி.

அவர்கள் பேசிக்கொள்வதில் அவர்கள் இரு குழுவாகப் பிரிந்துpவிட்டார்கள் எனப் புரிந்தது.

ஒரு கணம் தான்.

படபடவென்று துப்பாக்கிகள் நெருப்பைக் கக்கின.

நான் இளைக்க இளைக்க துரத்திற்கு ஓடிப்போய் நின்று பார்த்தேன்.

ஏழு சடலங்களையும் ஒரு ரைக்கறில் ஏற்றினார்கள்.

ஏதோ ஒரு கடற்கரையில் புதைக்கப் போகிறார்களோ எனப் பேசிக் கொண்டார்கள். எந்தக் கடற்கரை என்று தெளிவாகக் கேட்கவில்லை.

ஆனாலும் எங்கள் கிராமத்திற்கு அண்மையில் உள்ள கடற்கரையாகத்தான் இருக்க வேண்டும் என்று உள்மனம் சொல்லிற்று.

“ஐயோ யார் பெற்ற பிள்ளைகளோ… பிள்ளைகளின் பிணங்களையாவது பெற்றதுகள் பார்க்க வேண்டாமா?”என மனம் பரிதவித்தது.

அடுத்த நாள் கடற்கரையில் அமைதியில்லாது அங்கும் இங்கும் ஓடித்திரிந்து கொண்டு திரிந்தேன்.

சில இடங்களை காலால் கிளறிப் பார்த்தேன்.

ஏற்கனவே பரபரப்பாய் இருந்த ஊருக்கு என் சமிக்கைகள் ஏதோ ஒரு சங்கேதத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும்.

கடற்கரையில் அதிதக காலடிகள் தெரிந்த இடத்தைச் சுற்றி தோண்டத் தொடங்கினார்கள்.

நான் எட்டவாகப் போய் பார்த்துக் கொண்டு நின்றேன்.

“தலை முடி தெரியுது” என யாரோ ஒருவன் உரக்கமாகச் சொன்னான்.

சனம் எல்;லாம் குவிந்தார்கள்.

ஒன்றின் பின் ஒன்றாக ஏழு சடலங்களும் கடற்கரையில் வரிசை வரிசையாகக் கிடத்தப்பட்டார்கள்.

“உன்னை உதுக்கோ படிக்க அனுப்பி வைச்சனாங்கள்” ஒரு தாய் கடற்கரை மண்ணில் தலைதலையாய் அடித்துக் கொண்டு ஓடிவர எனக்கு வலித்தது.

மறுபுறம் என்னை நினைக்க எனக்கே பெருமையாக இருந்தது.

*

அப்படி நான் என்னைப் பற்றி பெருமைப்படும் பொழுதெல்லாம் ஏனோ எனக்கு என் அப்பப்பாவின் ஞாபகம் வரும்.

அத்துடன் றோஸியின் ஞாபகமும் வரும்.

அப்பப்பா ஒருநாள் இரவு றோட்டுக் கரையில் படுத்திருந்த பொழுது யாரோ ஒருத்தர் செக்கன்ட் ஷோ சினிமாக் காட்சி பார்த்து விட்டு சைக்கிளில் போகும் பொழுது விளையாட்டுக்கு அப்பாப்பாவின் வயிற்றில் எட்டி உதைத்து விட்டுப் போய் இருக்கிறார். தனது வலியை ஒரு நிமிடத்தில் சுதாகரித்து விட்டு அடுத்த பாச்சலில் அரைக் கிலோ மீற்றர் தூரம் கலைத்துக் கொண்டு போய் சைக்கிளுடன் அவரை ஒரு வேலியுடன்விழுத்திகடி கடி என்று குதறி எடுத்தவராமஇ.

குறிப்பிட்ட நபர் அடுத்த 21 நாட்களும் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்குப் போய் தொப்புளைச் சுற்றி ஊசி போட்டக் கொண்டு திரிந்தவராம்.

அது மாதிரித்தான் நானும்.

றோஸி அப்போது ஒரு சின்னக்குட்டி. கொழும்பில் இருந்து பக்கத்து வீட்டுக்காரார்கள் கொண்டு வந்து வைத்திருந்தார்கள். வெள்ளை வெள்ளேரென பஞ்சு பூத்த தேகம். நீண்ட மயிர்கள். பள்ளிக் கூடம் விடம்டு வரும் சிறுவர்கள் அதனைத் தடவி விளையாடுவார்கள். எனக்குப் பொறாமையாக இருக்கும். என்னை யாருமே தொட்டு விளையாடுதே இல்லை. ஆனாலும் என் றோஸியை மற்றவர்கள் ஆசையாக தொட்டுப் பார்த்து மகிழ்கின்றார்கள் என்பதில் அந்தப் பொறாமையிலும் ஒரு மகிழ்ச்சி.

அந்தப் பிள்ளைகளிடையே ஒரு குறும்புக்காரப் பையன். அதன் வாலை நன்கு நோகத்தக்கவாறு நன்கு இழுத்துவிட்டு ஓஎ விட்டான். ஆன்று முழுக்க றோஸி முனகிக் கொண்டு இருந்தது.

எனக்கு பார்க்க பாவமாய் இருந்தது.

அடுத்த நாள் அவனுக்காக் காத்திருந்தேன். யாரோ வீட்டில் பறித்த மாங்காயைத் தன் தோழர்களுக்கும் கொடுத்தவாறு அந்தச் சிறுவன் வந்து கொண்டிருந்தான்.

ஒரே பாய்ச்சல் அவன் மேல்.

எட்டு இடத்தில் இழைகள் போடப்பட்டதாம்.

அதன் பின் அந்த ஒழுங்கையால் வருவதே இல்லை.

அதன் பின்பு றோஸி என்னுடன் நன்கு ஒட்டிக் கொண்டு விட்டது.

என் சக பறட்டை நாய்களுக்கு எல்லாம் நான் ஒரு கொழும்பு பெட்டையை வளைத்துப் போட்டுவிட்டேன் என்பதில் கொஞ்சம்… இல்லையில்லை… அதிக பொறாமை.

பின்பு எப்போதும் பின்னேரங்களில் நான் றோஸி வீட்டில்தான்.

உரசல்கள்… முத்தங்கள்… உருளல்கள்… பிரளல்கள்…

இதுதான் காதலா….

இதற்காகத்தான் கோயில் குருக்களின் மகள் குளத்தில் விழுந்து தற்கொலை செய்தவள் என்றால்… பவானி ரீச்சருக்காக பியோன் மணி பள்ளிக் கூடத்திலேயே பொலிடோல் குடித்து உயிரை விட்டவன் என்றால்… இதற்காகவே எதுவுமே செய்யலாம் போல் இருந்தது.

ஒரு நாள் மைமல் பொழுது.

பின் வளவில் இருந்த பாவட்டைப் பற்றையடி.

ரோஸி என்னிடம் வந்தது.

நான் றோஸியிடம் போனேன்.

என்னிடம் அது எதனையோ கேட்டு குனிந்து நின்றது.

தலை நிமிர்ந்த எனக்கு என் ஆண்மை எனக்குப் புரிந்து விட்டது.

விட்டுவிடுதலறியாத விருப்படன் நேரம் காலம் தெரியாமல் சங்கமித்து நின்றோம்.

நேரம் போனது தெரியவே இல்லை.

அதன் முனகல் என்னை உயிர்ப்பித்துக் கொண்டு இருந்தது.

அங்கே வந்த றேஸியின் வீட்டுக்காரி பின்னிப் பிணைந்து நின்ற எங்களைக் கண்டு விட்டாள்.

ஒரு பெரிய கல்லை எடுத்து எங்கள் மீது வீசினாள்.

என் பின்னங்கால் முறிந்தது போல ஒரு வலி.

பிணைந்து நின்ற ரோஸியை விட்டு விட்டு ஓட முடியவில்லை.

அடுத்த கல்லெறியில் பிணைந்தபடி இருவருமே இழுபட்டு… இழுபட்டுக் கொண்டு அழுதபடி கொஞ்சத் தூரம் ஒடி… பின் பிரிந்து விட்டோம்.

அன்றிரவு சரியான வலி… காலிலும்… மனத்திலும் … ஆண்குறி கூட உடம்பை விட்டு விலகி வந்தது போல வலித்துக் கொண்டு இருந்தது.

றோஸியை நினைத்து மனம் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தது.

 

அடுத்த நாள் எப்போது விடியும்… அவளை எப்போது போய்ப் பார்ப்பேன் என மனம் துடித்துக் கொண்டு இருந்தது.

விpடியற்காலை வேலியடியில் நின்று றோஸீ வீட்டுக்கார ஆட்களும்எனது வீட்டுக்கார ஆட்களும் கதைத்துக் கொண்டு நின்றார்கள்.

“நீங்கள் கவலைப்படாதையுங்கோ… நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்” என்று எங்கள் வீட்டார் சொன்னது கேட்டது.

சிறிது நேரத்தின் பின்னால் என்னை சங்கிலியால் பிடித்துக் கட்டினார்கள்.

ரோஸியை காரில் எங்கேயோ ஏற்றிக் கொண்டு போவது வேலி நீக்கலினூடு தெரிந்தது.

மதியம் போல யாரோ ஒருவன் எனது வீட்டு எஜமானுடன் வந்து கொண்டிருந்தான்.

நான் வாயைத் திறக்க முடியாமல் எஜமான் என் வாயை அழுத்திப் பிடிக்க, வந்தவன் என் பின்னங்கால் தொடையில் ஒரு ஊசியை ஏற்றினான்.

மயங்கிக் கொண்டு போனேனானா?

எனது விதைகளை அவன் தன் கைகளாள் நசுக்குமாப் போல் இருக்கின்றது.

உயிர் போகின்றது.

பின்பு எனக்கு எதுவுமே தெரியவில்லை.

கண்ணைத் திறந்த பொழுது மாலையாகி விட்டது.

கட்டியிருந்த கழுத்துச் சங்கிலியைக் கழற்றிவிட்டிருந்தார்கள்.

நொண்டி நொண்டி ரோஸியிடம் போனேன்.

என்னுள் எதனையோ காணவில்லை – தொலைந்து விட்டது போன்றிருந்தது.

என்னைக் கண்டதும் ரோஸி வீட்டுக்காரர்கள் கல்லால் எறிந்தார்கள்.

வேலிக்கு அப்பால் ஓடி வந்து விட்டேன்.

வேலி இடுக்கினூடு ரோஸியைப் பார்த்தேன்.

ரோஸியின் கண்கள் – முகம் எல்லாம் வீங்கியிருந்தன.

மிருக வைத்தியரிடம் கொண்டு போய் ஊசி ஏதோ போட்டவர்களாம்.

இப்போதைக்கு ரோஸி குட்டி ஒன்று போடாதாம்.

வீட்டுக்காரர் விரும்பினால் என்றோ ஒரு நாள் ஓர் அல்வேஷன் இனத்துடன் சேர்த்து வைப்பார்களாம்.

அதன்பின் எனக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை.

வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன்.

பள்ளிக் கூடம்… கோயிலடி… சந்தையடி…. இங்கேதான் என் காலம் இப்போது கழிகின்றது.

என்றோ ஒருநாள் அப்பப்பாவின் ஞாபகம் வரும்… ரோஸியின் நினைவு வரும்… இடைக்கிடை வீட்டுக்குப் பின்னால் கட்டப்பட்டிருந்த கறுத்தக் கிடாய் ஆடு… அந்தப் பனை மரத்தில் கட்டப்பட்டு சுடப்பட்ட பிள்ளைகள்….எல்லாம் என் நினைவில் வந்து போகும்.

(முற்றும்)

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)