எங்கே போனீர்கள்? – சிறுகதை
ஸ்பிரிங் காலத்து மெல்லிய குளிர்.
வீதிக்கரையெங்கும் தானாவே துளிர்த்தெழுந்த ரியூலிப்ரின் பூக்களின் அழகு.
இந்த இரண்டையும் அனுபவித்தப்படி வீட்டின் பின்புறம்வரை மெதுவாக சைக்கிளை
ஓட்டி வந்த குமாரின் கால்கள் வீட்டின் தபால் பெட்டியைக் கண்டதும்
அவனையுமறியாமல் தானாகவே பெடல்களை ஊண்டி அழுத்துவதை உணர்ந்தான்.
அன்று செவ்வாய்கிழமை.
அதிகமாக இலங்கையில் இருந்து கடிதங்கள் வரும் நாள்.
யாழ்ப்பாண கிடுகு வேலிகளுக்கு மத்தியில் இழுக்கவும் முடியாமல் இறக்கி
வைக்கவும் முடியாமல் சுமைகளை ஏற்றி வைத்துக் கொண்டு அவதிப்படும் ஒரு
சராசரிக் குடும்பத்தின் மூத்தபிள்ளை அவன்.
ஆசிரியத் தொழிலால் தனது தேவைகளை ஈடுகட்ட முடியாத பொருளாதாரத்
தேவைகளின் அவசரங்கள்,அவனால் ஏற்கவும் முடியாத மறுக்கவும் முடியாத. . .
மேலாக அவனுக்கே புரியாத கண்ணாமூச்சி அரசியல்கள்…ஊர்வலங்கள்…
போராட்டங்கள். . . எல்லாவற்றிலும் இருந்து தன்னைத் தானே காப்பாற்ற தானே
போட்டுக் கொண்ட ”அகதி”என்ற பட்டை நாமம்.
இங்கு வந்த காசுக்கும் அங்கு தாய் ஏற்கனவே பட்ட கடன்களுக்குமாய், சுமார்
14-16 மணித்தியாலங்கள் உழைக்கும் அவனுக்கு வெளிஉலகத்தை கிழமையில்
ஓரு; தடவையாவது காட்டும் கண்ணாடி தான் இலங்கையில் இருந்து அந்த தபால்
பெட்டியினுள் வந்து விழும் கடிதங்கள். யாருக்கு அவன் கஷ்ட நஷ்டங்கள்
புரிகிறதோ இல்லையோ அந்த தபால் பெட்டிகளுக்குப் புரியும்.
சைக்கிளில் இருந்து இறங்காது காலை படலையில் ஊன்றியபடி தபால் பெட்டியைத் திறந்தான்.
இரண்டொரு விளம்பரப் பத்திரிகைகள்,தமிழ் பாடசாலையின் வருடாந்த
அழைப்பிதழ்,வீட்டு வாடகைத் துண்டு,அத்தனைக்கும் கீழே இலங்கையில்
இருந்து வந்த ஏரோகிறாம்.
யார் அனுப்பியுள்ளார்கள் எனத்திருப்பி பார்த்தான்.
ஆசிரியர் பயிற்சிக் காலத்தில் இருந்து ஆரம்பித்த நட்பு – சிறிகணேசன்போட்டிருந்தான்.
மெல்லிய காற்று வந்து கண்களையும் மனதையும் குளிர்வித்ததுபோன்றிருந்தது.
சைக்கிளை படலையில் சாத்திவிட்டு,வாசலில் தான் அமைந்திருந்த றோஜாத்
தொட்டியின் விளிம்பில் அமர்ந்து கடிதத்தைப் பிரித்தான்.
பக்கத்து வீட்டுக் காணிக்குள் பூக்கண்டுகள் நட்டுக்கொண்டிருந்த அந்த வயோதிபத்தம்பதிகள் ”லெற்றேர்ஸ் புறம் சிறிலங்கா”என தமது அன்னியோனித்தை தெரிவித்தார்கள்.
தலையாட்டலாலும் தன் புன்சிரிப்பாலும் பதிலைச் சொல்லிவிட்டு கடிதத்துள்மூழ்கினான்.
கடவுள் வணக்கம்,வீட்டில் அனைவரும் சுகம்,ஆமி நேற்றும் சோதனை போட்டது,
தபால்கார செல்லத்துரையின் மகனை மூன்று நாட்களாக காணவில்லை என்ற
சம்பிரதாய வரிகளினூடாக வளர்ந்து கொண்டு சென்ற கடிதம் புவனம் ரீச்சர்
இப்பவும் உன்னை விசாரிக்கிறவா என்ற வரிகள் வந்த பொழுது ஆசிரியக்
கல்லூரியின் ஆட்டோகிராவ்கள் அரைகுறையாக கண்கள் முன்வந்து போனது.
இளமையை அனுபவிப்பதாய் இருப்பதானால் ஐரோப்பாவில் பிறந்திருக்க வேண்டும்
என தன்னுடன் வேலைசெய்யும் ஒரு சககூட்டாளி சொல்வதை குமார் ஒருதடவை
நினைத்துக் கொண்டான்.
கடிதம் தொடர்ந்தது.
”இப்போது நான் இடைக்கிடை கவிதை எழுதத் தொடங்கீட்டன். எம்
வாசிகசாலை ஆண்டுமலரில் உன்னை நினைத்து எழுதிய வரிகள். எப்படி
இருக்கிறது என்று பார்”என்று அடைப்புக்குறிக்குள் நான்கு வரிகள் எழுதியிருந்தது.
கோயில் வீதிகளில்என்னுடன் கிட்டியடித்தஎன்னருமைத் தோழர்களேஎங்கே போனீர்கள்
எங்கேயோ கேட்ட ஒரு கவிதையின் தொனி போல் இருந்தது. ஆனால் சொற்கள்
மாறியிருந்தது.
சிறிகணேசனும் கவிதை எழுதத் தொடங்கீட்டான் என்ற நமட்டுச் சிரிப்புடன்
”எங்கே போனீர்கள்”என மீண்டும் அந்த வரிகளை வாசித்துவிட்டு. . .
”விசரா”என சிறிகணேசனை தனக்குத் தானே உரிமையுடன் பேசிக்கொண்டு
வீட்டுக்குள் போனான்.
பூட்டிருந்ததால் வீட்டுக்குள் எழுந்த அந்த மணத்தைப் போக்க எல்லா
யன்னல்களையும் நன்கு திறந்து விட்டான்.
ஜக்கற்றைக் கழற்றி சோபாவில் போட்டு விட்டு சிறிகணேசனின் கடிதத்தை முன்னும் பின்னுமாய் திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டு நின்றான்.
அழகிய இலங்கைக் கடற்கரை. அதிலிருந்து எழும் சின்ன சின்ன அலைகள்.
கடலை வளைந்து தொடும் அழகிய தென்னை மரங்கள். வெள்ளை நிறத்
தேமாப்பூக்கள்.. . .
எதையோ எங்கேயோ தொலைத்து விட்டோம் என்ற மன ஆதங்கத்துடன்
சிறிகணேசன் கேட்ட கேள்வியின் பதிலை மனம் எல்லா மூலை முடுக்கிலும்
தேடியது.
மெல்லிய பெற்றோல் வாசனை மூக்கைத் தொட்டது. வெளியே எட்டிப் பார்த்தான்.
அந்த வயோதிபத் தம்பதிகள் தமது பழைய காரை ஸ்ராட் செய்து கொண்டுஇருந்தார்கள்.
கோயில் வீதிகளில்என்னுடன் கிட்டியடித்தஎன்னருமைத் தோழர்களேஎங்கே போனீர்கள்
குமார் யன்னலினூடு வானத்தின் எல்லைவரை பார்த்துக் கொண்டு நின்றான்.
”நாளை சிறிகணேசனுக்கு கடிதம் போட வேண்டும்” – மனம் சொல்லிக்கொண்டது.
* * *
தோட்டத்தால் வந்த களையில் தகப்பன் வெளிவிறாந்தையிலும், தாயும் இரண்டு
சகோதரிகளும் அறையிலும் நன்கு தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.
சிறிகணேசனுக்கு மட்டும் தூக்கம் வராமல் நடுக்கூடத்தில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருந்தான்.
கைக்கு எட்டும் தூரத்தில் இருந்த மணிக்கூட்டை எட்டி எடுத்து லைற்றை அழுத்தி நேரத்தைப் பார்த்தான்.
இரவு பதினொரு மணிக்கு பத்து நிமிடம் இருந்தது.
பாடசாலையிலும், ரியூசன் வகுப்புகளிலும் தொண்டை கிழிய கத்துவதால் ஏற்படும்
களைப்பும் பல்லாங்குழி ஆடக்கூடிய றோட்டுகளில் ஸ்கூட்டர் ஓட்டுவதால் எழும்
அசதியும் என வழமையாக பத்து மணிக்குள் தூங்கிவிடும் சிறிகணேசனுக்கு
இன்று இவ்வளவு நேரமாகியும் நித்திரை வராதது அவனுக்கே ஆச்சரியமாக
இருந்தது.
ஆனால் உடலின் அசதியை நன்கு உணரக் கூடியதாக இருந்தது.
கண்ணை எத்தனை தடவை மூடிப்பார்த்தாலும் நினைவுகள்தான் தாறுமாறாக
ஓடுகின்றதே தவிர நித்திரை என்பதனை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
லைற்றைப் போட்டுவிட்டு கண்கள் களைக்கும்வரை ஏதாவது புத்தகத்தை எடுத்து
வாசிக்கலாம் என்றாலும் திடீர் எனத் தோன்றும் வெளிச்சங்களுக்கு அடுத்தநாள்
எத்தனையோ பேருக்கு காரணங்கள் சொல்ல வேண்டிவரலாம். நாடு அப்படியான
ஒரு நிலையில் பிரகடனப்படுத்தப்படாத ஊரடங்குச் சட்டத்தை தனக்குத் தானே
வகுத்துக் கொண்டு வாழ்ந்து (?) கொண்டு இருந்தது.
வயிற்றுக்குள்ளும் ஒரு சின்னக் குடைச்சல் காண, வெளிக்கு ஒரு தரம் போய்
வந்தால் நித்திரை வரும் என்ற ஒரு எண்ணத்தில், கருக்கலுக்கு முதலே தண்ணி
அள்ளி நிரப்பி வைக்கும் தொட்டியில் இருந்து ஒரு வாளி தண்ணியை மொண்டு
கொண்டு போனான்.
அந்தக் கிணற்றை தன் சொந்த முயற்சியால் தோண்டி ஊற்றுத்தண்ணீர் கண்ட
மூன்றாம் நாளே அவனது பேரன் மாரடைப்பால் இறந்து போனார். அப்படிக்
கஷ்டப்பட்டுக் கட்டிய கிணற்றில் இரவு வேளைகளில் தண்ணி அள்ளும்
சலசலப்புச் சத்தம் கூட அண்டை அயலுகளில் போகும் ஆமி நேவிக்காரன்களை
பீதி கொள்ள வைத்து விடும் என்ற காரணத்தால் பின்னேரத்தில் தொட்டியில்
தண்ணி நிரப்பி வைக்கும் வாழ்க்கையை நொந்து கொண்டே கக்கூசுக்குள் போய்க் குந்தினான்.
கக்கூசினுள்ளும் ஊர் உலக நடப்புக் கவலைகள்தான் கூடியதே தவிர மலம் வரவில்லை.
நித்திரை வராததால் கண்கள் எரிச்சல் கண்டிருந்தது.
கால் இடுக்குளில் கையை எவ்வளவு நேரம் தான் கொடுத்துக் கொண்டு இருக்க
முடியும். கை விறைக்குமாப் போல் இருந்தது. சரி கால்களைக் கழுவிப் போட்டு
திரும்பிப் போய் படுப்போம் என நினைத்துக் கொண்டு எழுந்த பொழுது கக்கூஸை
அண்டியுள்ள வேலியால் நாலைந்து போர் ஓடிப்போகும் சத்தம் கேட்டது.
அவனுக்கு மனம் ‘திக்” என்றது.
வயிறு ஒரு தரம் நடுங்கியது.
மெதுவாக கக்கூசு சுவரின் ஓட்டையூடு எட்டிப் பார்த்தான்.
இருட்டில் எதுவும் தெரியவில்லை.
நாய்கள் மட்டும் அங்கும் இங்கும் குலைத்துக் கொண்டு ஓடின.
சிறிது நேரத்தில் அந்த சத்தமும் அடங்கி விட்டது.
சிறிகணேசனுக்கு கக்கூசை விட்டு வெளியே வர மனம் துணியவில்லை.
காதைக் கூராக்கி வெளியே விட்டான்.
பக்கத்து வளவுப் பனம் பாத்திக்கூடலைச் சுற்றி நாலைந்து பேர் கதைப்பது போலவும் குசுகுசுப்பது போலவும் இருந்தது.
”தாரோ இயக்கப் பொடியள் போலை”என நினைத்த மறுகணமே ”சிறியையும்
கூப்பிட்டு கிழங்கு சுடுவம்”என்று யாரோ சொன்ன மாதிரி இருந்தது.
அவ்வளவுதான் அவனுக்கு வியர்த்துக் கொட்டியது.
இவ்வளவு நேரமும் போராடியும் வெளியே வராத மலம் இப்பொழுது முந்திக் கொண்டு வந்தது.
மலக்குழியில் குந்திக் கொண்டான்.
மலம் தன்வழியில்.. . . மனம் வெளிவளவில் .. . . உடம்பு தெப்பமாக
வியர்வையில் தோய்ந்தபடி. . . காதை மீண்டும் வெளி நீட்டினான். . . எந்தச்
சத்தமும் இல்லை.. .. . ஆனால் மூக்கை நோக்கி ஒரு மணம் அண்மித்துக்
கொண்டு இருந்தது.. . . . இது. . .இது . . .பனம் கிழங்குசுடும் மணமே தான்!
உடல் மேலும் நடுக்கம் கண்டது.
வெளியில் நெருப்பைக் காணவில்லை. . .
பனங்கிழங்குப் பாத்தியடியில் இருந்து மணம் மட்டும். . . . .
கண்களை இறுக்கமூடி அரசடிப் பிள்ளையாரை வேண்டினான். இப்போது அவர்தான்
அவனுக்குத் துணை.
சின்ன வயதில் ”பிள்ளையாரப்பா …பிள்ளையாரப்பா”என தாயின் சேலையை
பிடித்தபடி அரசடிப்பி;ள்ளையாரை சுற்றி வந்து. . . .பின்பு அறிவு கொஞ்சம்
அதிகமாக ”ஆயிரத்தெட்டு இசும்களில் மனம் வயப்பட…”பிள்ளையார்
இருக்கிறாரா? இல்லையா? என்று ஓ. லு போட்டுப்பார்த்து. . . பிள்ளையாரை
மறுதலித்து. . . பின் இந்தியன் ஆமி வந்த போது மற்றவர்களுக்கு தெரியாமல்
ஸ்கூட்டரின் வேகத்தைக் குறைத்து பி;ள்ளையாருக்கு மெதுவாக தலையாட்டுப்
போட்டாலும் வராத பக்தி எல்லாம் இன்னமும் சுத்தம் செய்யப்படாத உடம்புடன்
கக்கூசில் இருந்தபடி வந்தது.
பிள்ளையார் காப்பாற்றித்தான் விட்டார்.
பனம் கிழங்கு சுடும் சத்தம் அறவே நின்று விட்டது. எந்தச் சத்தத்தையும்
கேட்கவில்லை. வெளியே வந்து கால்களை நன்கு கழுவிக் கொண்டு தெப்பமாய் நனைந்து போயிருந்த உடம்பை இருட்டு வெளிச்சத்தில் கொடியில் தெரிந்த
துவாயை எடுத்து நன்கு துடைத்துக் கொண்டான்.
சித்திரைக் காற்றுப் பட மனமும் உடலும் கொஞ்சம் ஆறுதல் கண்டது போலிருந்தது.
இப்போ அரசடிப்பிள்ளையார் கோயில் பக்கத்தில் யாரோ விளையாடும் சத்தம் கேட்பது போலிருந்தது.
அதுவும் கிட்டியடித்து விளையாடும் சத்தம் போலிருந்தது.
பாலுக்கே பச்சைமண்கள் அழப்பயன்படும் இந்த இரவில் யார் கோயில் வீதியில் கிட்டியடிப்பது.?
மெதுவாக வீட்டுக்குள் வந்து மீண்டும் படுத்துத் கொள்வதே பாதுகாப்பு என
நினைத்துக் கொண்டவன் மீண்டும் படுக்கைக்கு வந்து கொண்டான்.
நேரம் நடுச்சாமம் ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
ஆமியாள் சுடப்பட்ட எங்கள் ஊர்ப்பொடியன்களின் ஆவிகள் தான் இருட்டில் வந்து கூத்தடிக்கின்றதோ?. . . அதுகளுக்கு ஒரு சாந்தி, அந்தியோட்டி, துவசம் ஏதாவது இருக்கா?. . . ரயரைப் போட்டுக் கொழுத்திய உடம்புகள் தானே?. . .
விடை தெரியாத கேள்விகளை மனம் அடுக்கிக் கொண்டு போனது.
இப்போது சின்ன உதறலுடன் காச்சல் காய்வது போல் இருந்தது. போர்வையை எடுத்து தலைமுதல் கால்வரை போர்த்திக் கொண்டு தன்னைச் சுருட்டிக் கொண்டான். கண்களை இறுக மூடிக்கொண்டான். காது மட்டும் தன்பாட்டில்
பின்வளவுப் பக்கத்தை நோக்கித் திரும்பியது.
இப்போ கோயிலடியில் இருந்து அவன் வீட்டை நோக்கி சத்தம் நெருங்கிக் கொண்டு வந்து தென்னையில் யாரோ ஏறும் சத்தம் கேட்டது. சிறிகணேசனுக்கு
மீண்டும் நடுக்கம் கண்டது.
மீண்டும் பிள்ளையாரை தன்னருகில் இழுத்துக் கொண்டான்.
ஆனால் அடுத்தக் கணமே தென்னையில் இருந்து இளநீர் குலைகள் ”தொப்” ”தொப்பு”என்று விழத்தொடங்கியது.
இப்போ பிள்ளையாரும் அவனை விட்டு விட்டார்.
பின்பு நடந்தது எதுவுமே அவனுக்கு தெரியவில்லை.
* * *
”என்னடா சிறி! இண்டைக்குப் பள்ளிக்கூடத்துக்கு போகேல்லையோ…. கொப்பர்
காலமை இறைப்புக்கு போகேக்கை உன்னை எழுப்பேல்லையோ?”என்றபடி தாயார்
சிறிகணேசனை எழுப்பினார்.
”உந்த காண்டாவன வெயில் காலத்திலை. . . உங்கை பார் தலைமுழுக்க
போத்திக் கொண்டு கிடக்கிறதை”தங்கச்சியாரும் தன்பாட்டுக்கு தாயுடன் சேர்ந்து கொண்டாள்.
சிறிகணேசன் கண்களை அகலத் திறந்து சுற்றும் முற்றும் பார்த்தான்.. சூரிய
வெளிச்சம் வாசலில் பட்டு தெறித்து கண்களை கூச வைத்தது. இரவு நடந்தது
எல்லாம் ஒரு பிரமைபோல் பட்டது.
யாருடனும் ஏதும் பேசாமல் பின்வளவுப் பக்கம் எழுந்து போனான்.
”என்னடி பிள்ளை…கொண்ணைக்கு இண்டைக்குப் பள்ளிக்கூடம் இல்லையோ.
பிந்தி எழும்பின கவலைகூட இல்லாமல் பின் பக்க வளவுப் பக்கம் போறான்”
”அண்ணைக்கு உலக கவலையள் கூடிப் போச்சு. வகுப்புக்கு வந்தாலும் நாட்டுக்
கவலையள் தான். எரிஞ்சு விழுந்து கொண்டு நிற்கும்”
பின்வளவு, பனம் பாத்தி எல்லாம் சுற்றிப் பார்த்தான் –காலடிகள் ஏதும் தெரிகின்றதா என்று. எதுவுமே தெரியவில்லை. பனம் பாத்தியில் ஒரு துரும்புகூட அசைந்திருக்கவில்லை. வியப்பாய் இருந்தது. தென்னையடியில் வந்து பார்த்தான். ஒரேயொரு காவோலை மட்டும் விழுந்திருந்தது.
வீட்டுக்குத் திரும்பி வந்து இரவுக் களைப்பு முழுக்க நன்கு தீரக்குளித்து விட்டு பள்ளிக்கூடத்துக்கு புறப்படத் தயாராக தபாற்கார கந்தசாமி கடிதக்கட்டுகளுடன் வந்து இறக்கினான்.
”தம்பிக்குத்தான் வெளிநாட்டுக் கடிதமாக்கும். காசு கீசு வந்திருக்காக்கும்.”
கடிதத்தைக் கொடுத்து விட்டு தலையை சொறிந்து கொண்டு நின்றான்.
பொக்கற்றில் இருந்து ஒரு பத்து ருபாயை எடுத்துக் கொடுத்து விட்டு கடிதத்தை வேண்டிப் பிரித்துப் பார்த்தான்.
டென்மார்க்கில் இருந்து குமார் போட்டிருந்தான்.
”எங்கே போய் விட்டீர்கள் எனக் கவலைப்பட்டுக் கடிதம் எழுதியிருந்தாய். ”விசரா”,
பகலில் எங்களால் எங்கும் போக முடியாது. இயந்திரங்களுடன் இயந்திரங்களாக அதுகளின் தாளத்துக்கு நாங்களும் ஆடிக்கொண்டுதான் இருப்போம். ஆனால் இரவில் நாம் எங்கே இருக்கின்றோம் எப்படி இருக்கின்றோம் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். காரணம் உங்களுக்கு என்னதான் போராட்டம், வாழ்க்கைச் சுமைகள்கள் இருந்தாலும் அப்பா, அம்மா சொந்த பந்தங்கள் என்று அவர்களுடன் நீங்கள் நிம்மதியாக தூங்கி விடுவீர்கள். அப்படித் தூங்கின்ற உங்களால் நாங்கள் இரவு முழுக்க எங்கு அலைகின்றோம் என உங்களால் அறிய முடியாது –
அன்புடன் குமார்.”
கடிதத்தை வாசித்து விட்டு பொக்கற்றில் வைத்தவன் என்ன நினைத்தானோ மீண்டும் பின்வளவு முழுக்க ஒரு தடவை சுற்றி வந்தான்.
தென்னைமரத்துடன் சாய்ந்து கொண்டு மீண்டும் ஒரு முறை கடிதத்தைப் படித்தான்.
கடிதம் விளங்கியது போலும் இருந்தது. விளங்காதது போலும் இருந்தது.
அன்று சிறிகணேசன் பாடசாலைக்குச் செல்லவில்லை.
Skriv et svar