எங்கே என் நாடு (சிறுகதை)

எங்கே என் நாடு (சிறுகதை)

மனதை ஏதோ சூனியம் கவ்விக் கொண்டிருக்கிற மாதிரி ஓர் பிரமை. அப்படி ஏதும் நடந்து விடவில்லை. யாருடன் எந்தக் கொடுக்கல் வாங்கலோ, வாக்கு வாதமோ எதுவுமே இல்லை. ஆனால் மனம் மட்டும் வெறுமையில் போன மாதிரி. . . கண்கள் மட்டும் ரிவீயில் பதிந்திருக்க, கைகள் மட்டும் ஏனோ தானோ என்று ரிமோட் கொன்றோலில் சனல்களை மாற்றி மாற்றி அழுத்திக் கொண்டிருக்கிறது.

றொஸ்கில் பெஸ்ரிவலில் அப்படி என்னதான் இருக்கின்றது. இவ்வளவு சனக்கூட்டம்.

ஆண்களில் தோள்களில் பெண்களும், பெண்களின் தோள்களில் ஆண்களுமாக. . .

ஏதோ அதில் இருக்க வேண்டும். எனக்குத்தான் அந்த இசையை சுவைக்கத் தெரியவில்லை. டனிஷ்காரர்களால் மட்டும் வைரமுத்துவின் கூத்தை விடிய விடிய இருந்து ரசிக்க முடியுமா என்ன?

கை ஆபிரிக்காவுக்குத் தாவுகிறது. மக்கள் நாலா பக்கமும் சிதறி ஓடுகின்றார்கள்.

கண்முன்னே ஒரு குண்டனின் தடியடியில் ஓர் கறுப்பனின் தலையிலிருந்து இரத்தம் பீறுகிறது. கற்கள் எங்கேயோ எங்கேயோ இருந்து வந்து விழுகிறது. ஓர் பெண்ணை நாலு பேர் தரதரவென்று பற்றை மறைவுக்குள் இழுத்துக் கொண்டு போகின்றார்கள்.

அந்தப் பெண்ணின் கதறலில் புதர்ச் செடிகள் குலுங்கிறது.

மேல் அறையில் எனது மூன்றாவது பிள்ளை வயிற்றுக் குத்தால் அழுகிறது.

மனைவி இரண்டு மணித்தியாலமாக சமாதானப்படுத்துவது கேட்கிறது. ஆனால் எனக்குத்தான் மேலே போய் ஆறுதல் படுத்த மனம் ஏவுதில்லை. சோபாவின் சொகுசிலும் மனத்தின் மூட்டத்திலும் மீண்டும் ரீவிக்குள் அமிழ்கின்றேன்.

அந்த அண்ணாமலைச் சித்தர் ஏதோ எனக்கு சொல்லுமாப்போல் இருக்கின்றது.

சிக்கடித்த முடியும், அரைத்துண்டு துணியும், கால் வயிற்றுக் கஞ்சியுடனும் அந்த சித்தர் நிமிர்ந்து நிக்கிற மாதிரி ஏன் என்னால் சுதந்திரமாய் திரியமுடியவில்லை.

சுமைகள், பொறுப்புகள், கடமைகள் என்று எல்லாத்தையும் தூக்கிப் போட்டுக் கொண்டு ஏன் அமிழ்ந்து அமிழ்ந்து போகின்றோம். சித்தருக்கு என்ன கவலை?

எந்த சீட்டு, என்ன கழிவு, என்ன வட்டி, என்ன பில், என்ன கவலைகள். . .

ஒரு சோற்றுப் பருக்கையையாவது எந்த யோசனையும் இல்லாமல் சாப்பிட முடிகிறதா? கையும் மனமும் ஒன்று சேரச் சாப்பிட்டு கவலை இல்லாது கண்மூடித் தூங்கி எத்தனை நாளாச்சு?

டெலிபோன் மணி பயங்கரமாக அலறுகிறது. செல்லத்துரை அண்ணை தனது மகளின் ஐந்தாவது பிறந்த நாளுக்கு வரட்டாம். காலம் எவ்வளவு கெதியாக ஓடுகிறது. இப்போதுதான் நாலாவது பிறந்த நாள் வந்நது போலிருக்கு. நாலாவது பிறந்த நாளுக்கு மூன்றாவது பிறந்த நாளுக்கு வந்ததில் அரைவாசிப் பேரும் இருக்கவில்லை.

இம்முறை அதிலும் அரைவாசியாத்தான் இருக்கும். இலங்கையில் இருந்து வந்தோம் என்பதைத் தவிர ஏன் பழகின்றோம்? எதுக்காக பழகின்றோம்? எவருடன் பழகின்றோம்? என்று எந்தவித தொடுப்பும் இல்லாது அண்ணா, அக்கா, அன்ரி, அங்கிள் உறவுமுறை வேறு. ஆனால் அண்ணர் அக்காவிடம் அறாவட்டி வேண்டுவார். அன்ரி அங்கிளுக்கு ஆயிரம் பொய் சொல்லி அடித்து சத்தியம் செய்வார். இந்த உறவு முறைகளால் ஏற்படும் பிச்சுப் பிடுங்களில் செல்லத்துரையண்ணரின் சுற்று வட்டாரமும் ஆண்டுக்கொரு முறை அரைவாசியாகக் குறையும்.

ஏன் என் மனம் இந்த உலக வியாக்கினங்களில் இன்று அலைந்து கொண்டு இருக்கின்றது.

”உந்த ரீவியிலை இருந்தது காணும். ஒருக்கா வயித்தாலை போற மருந்தை வேண்டிக் கொண்டு வாங்கோ. அதைக் குடுத்தால் ஆவது சுகமாய் இருக்கும்”

மகளை ஆற்ற முடியாத இயலாமையை மனுசி என்;;மேல் கோபமாய் காட்டுகிறாள்.

நேரத்தைப் பார்க்கின்றேன். இரவு 10 மணியாகிவிட்டது. மூலைத்தெருவில் உள்ள

மருந்துக் கடைதான் இரவு முழுக்கத் திறந்திருக்கும். காரில் போவதைவிட நடந்து போனால் மனதுக்கு நல்லாய் இருக்கும் போல இருக்கு. ஜக்கற்றையும் கைப்-போனையும் எடுத்துக் கொண்டு றோட்டில் இறங்கின்றேன்.

றோட் வெறிச்சோடிப் போய் இருக்கிறது – என் மனம் போல். யாரையும் காணவில்லை.

விடிய விடிய திருவிழாக்கள் நடந்த யாழ்ப்பாண வீதிகள் கேர்வியூ சட்டம் வந்த பொழுது இருட்ட முதலே இருட்டி விட்டது போல இந்த டென்மார்க் தெருக்களும் இருக்கிறது.

கைத்தொலைபேசி அடிக்கிறது. மாமாவுக்கு ஊரிலை கடுமையாம். ஓரு தரம் அதிர்ந்து போனேன். ஏதோ ஓர் தொப்புள் கொடி உறவு அறுந்தது போலை. திருவிழாவுக்கு,

பள்ளிக்கூடத்துக்கு, படத்துக்கு சைக்கிளில் முன் இருத்திக் கொண்டு போய் விட்டது தொடக்கம், டென்மார்க் வர வெளிக்கிட ஸ்ரேசன்வரை வந்து அழுது அழுது பயணம் அனுப்பியது வரை ஒன்றன் பின் ஒன்றாக வருகின்றது.

”எனக்கு என் மாமா வேண்டும். . . நீ வேண்டும் மாமா”

கண்கள் கலங்கிறது. மிக அருகில் ஓர் கார் வந்து விலத்திப் போகின்றது.

அடுத்த ரெலிபோன் வருகிறது.

”நீங்கள் ஊருக்கு வருவியளாமோ”

மனம் நிஜத்தை நோக்கித் திரும்புகிறது. பக்ரறியில் லீவு கிடைக்குமா? எக்ஸ்ராவாகச்

செய்யும் கழுவுற வேலையை எப்படிச் சமாளிக்கிறது? பதிவில்லாமல் களவாய் செய்யும் பிற்ஸாக்காரன் நான் திரும்பிவர நிற்பாட்டிப் போடுவானோ? இல்லாட்டி வேறை தமிழ் ஆட்களை எடுத்துப் போடுவானோ?. . . என்ன இது? என்னை நினைக்க எனக்கே விசராய்க் கிடக்கு.

இப்படியா இங்கு டென்மார்க் வர முதல் என்னுடைய யோசனைகள் இருந்தது.

நான் மாறிவிட்டேனா? இல்லை சில நிஜங்களை யோசித்து இலங்கைக்கு போகாமல் இருப்பதற்கு நியாயம் கற்பிக்கின்றேனா? இலங்கைக்கு போக ஏன் நான் பயப்பிட வேண்டும்? இலங்கை என் நாடு இல்லையா? எதுக்காக பயப்பிட வேண்டும்? நான் என்ன துரோகியா? இல்லையே? ஆனாலும் மனம் பயப்பிடுகிறது.

ஒன்று மட்டும் உண்மை. நான் வளர்ந்த இலங்கை அல்ல அது. காணி உறுதி மட்டும் என் பெயரில். ஆனால் யாரோ அளவெட்டி ஆட்களை இருத்தி இருக்கினமாம்.

வீட்டுக்குப் போனாலும் வீட்டுத் தாழ்வாரத்திலை தான் கட்டில் போட்டுப் படுக்க வேணும். இல்லாட்டி மூத்தக்கா வீட்டை போய் தங்க வேணும்.

மருந்தை வேண்டிக் கொண்டு திரும்புகின்றேன். சந்தின் மூலையில் நாலைந்து டெனிஷ்காரர் பியர்ப் போத்தலுடன் நிற்கிறார்கள். அவர்களைப் பொருட்படுத்தாமல்

வீதியின் மறுபக்கத்தால் அவர்களைத் தாண்டிச் செல்லுகின்றேன்.

”சோட்ட சுவின. . . கோ ஜெம்” (கறுத்தப் பன்டியே நாட்டுக்குப் போ)

பின்னால் கத்திக் கேட்கிறது.

உடல் பதறிப் போகிறது.

துணிவினை வரவழைத்துக் கொண்டு அவர்களை நெருங்குகின்றேன்.

”உங்களுக்குத் தெரியுமா. எனக்கு டென்மார்க்கில் பிரஜாவுரிமை இருக்கிறது.

நானும் இந்த நாட்டுப் பிரஜைதான்”இ சொல்லி முடிக்கவில்லை ஓர் வெற்று பியர் போத்தல் என் கன்னத்தருகால் பறக்கின்றது. அவர்கள் கை, கால்கள் எல்லாம் என்மீது பாய்கிறது. மூக்கடியும் முகமும் விறைப்பது போல் இருக்கிறது. எனது வலு எல்லாம் போய் விட்டது. றோட்டுகரையிலுள்ள குப்பைத் தொட்டியருகே ஒதுங்கி கிடக்கின்றேன். உடல் மட்டும் உதறுகிறது.

என்னை அடித்த மகிழ்ச்சியில் மீண்டும் ஓர் பியரைக் குடித்துக் கொண்டு அவங்கள்

போய்விட்டார்கள். ஆனால் கடைசியாக அவங்கள் சொன்ன வார்த்தை மட்டும் காதில் ஒலிக்கிறது.

”உந்த நியாயங்களை உன்ரை நாட்டிலை போய்க் கதை”

எனக்கு நாக்கு வரண்டு போய்க்கிடக்கிறது.

”எங்கே என் நாடு???”

ஜக்கற் பொக்கற்றில் இருந்த பிள்ளையின் மருந்துப் போத்தல் உடைந்து போய் இருக்கின்றது.

1 Comment on “எங்கே என் நாடு (சிறுகதை)

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)