எங்கெங்கு காணினும்… (சிறுகதை)

”புதிய மண்ணும் புதிய வாழ்வும்” என்ற பெயரில் நான் எழுதி வரும் வார மலருக்கான கட்டுரைகளை இரண்டு மூன்று இதழ்களுக்குப் போதுமானவற்றை முதலிலேயே டென்மார்க்கில் இருந்து அனுப்பி விடுவது என் இயல்பு.

எனது எழுத்துகளைக் கௌரவப்படுத்தும் பத்திரிகைகளைக் கடைசி நேர டென்சனுக்குள் இழுத்துச் செல்வதில் எனக்கு என்றுமே உடன்பாடில்லை.

ஆயுதங்கள் மௌனமாக்கப்பட்ட போருக்குப் பின்னான இலங்கையையும்…. அதற்கு  போருக்கு முன்னாக புலம் பெயர்ந்த மக்களின் வாழ்க்கையினையும் இணைத்து எழுதிக் கொண்டிருக்கும் தொடர்.

25 தொடருக்ளுக்கான… அதாவது அரை வருடத்திற்கான ஒப்பந்தம்.

இன்னும் 5 தொடர்களே பாக்கி உள்ளன.

ஆனால் திடீரென இலங்கைக்கு வர வேண்டியிருந்ததால் இலங்கையில் வந்து நிற்கும் இந்த ஒரு மாதத்துக்குள் அதனை எழுதிக் கொடுத்திட வேண்டும் என்ற நினைப்பில்  என்னை நானே அழுத்திக் கொண்டு இருந்தேன்.

”உலகத்தின் அதிசயங்களில் ஒன்று காலில் செருப்புக் கூட போடாது நடந்து திரிந்து கொண்ட ஒரு இனம் ஒரு 50 ஆண்டுகளுக்குள்… சுழற்றிப் போட்டுப் போட்ட சோழிகள் போல…. அல்லது கொத்தணிக் குண்டுகள் போல வெடித்து வெடித்துத் துண்டுகள் பரவுவது போல… உலகம் எல்லாம் சிதறிப் போய் கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு ஒரு பணக்கார சமுதாயமாக தலையெடுத்து நிற்பது எவரும்; கனவில் கூட கற்பனை பண்ணியிருக்காத ஒரு நிகழ்வு. அடுத்ததொரு தரப்படுத்தல் உலகம் முழுக்க என்றால் அது எம் பிள்ளைகளால் தான் என மகிழ்வுடன் வருகின்ற வாரத்திற்கான கட்டுரையை முடித்திருந்தேன்” தொடர் கட்டுரையை முடித்து விட்டு கையில் ஒரு சிகரட்டையும் எடுத்துக் கொண்டு வீட்டின் வெளிமதிலுக்கு வெளியே நின்று புகைத்துக் கொண்டு நின்றாலும் எழுதிய கட்டுரையின் ஒவ்வோர் வரியும் என் மனத்தில் ஓடிக் கொண்டே இருந்தன.

மனம் மீண்டும் மீண்டும் சில சொற்களை மாற்றியும்… சில வசனங்களை வெட்டி வெட்டித் திருத்தியும் கொண்டு  இருந்தது.

தானாகப் புகைந்து கொண்ட சிகரட்டின் நெருப்பு கை விரல் நுனியைச் சுட்டுää ” நீ எப்போ தான் முழுதாய் ஒரு சிகரட்டை குடிக்கப் போறாய். மற்றவன் புகைத்து தான் காசைக் கரியாக்கிறான். நீ புகைக்காமலே காசைக்கரியாக்கிறியே” என அது என்னைத் திட்டுமாப் போல் இருந்தது.

புன்னகைத்துக் கொண்டு எரிந்து போன சிகரட்டால் மற்ற சிகரட்டினை பற்ற வைத்து வைத்துக் கொண்டு உலகம் எல்லாம் எழுந்த எங்கள் இனத்தின் எழுச்சியை நினைத்துக் கொண்டு நின்றேன் – எனது கட்டுரைக்கு மேலும் மேலும்; ஆதாரங்களைத் தேடியபடி.

எங்கள் பிள்ளைகள் பலர் உயர் பதவிகளிலும் உயர் நிறுவனங்களுக்கு ஆலோசகர்களாக இருப்பதும் ஆரோக்கியமான நிகழ்வு தானே. அது மட்டுமில்லை அண்மையில் எனது கார் எஞ்ஜின் சூடேறி விரைவுப்பாதையில் நின்ற பொழுது வாகனப்பழுது உதவி நிறுவத்துக்கு தொடர்பு கொண்ட பொழுது ”சொல்லுங்கோ மாமா” என்கின்றான் எங்கள் நாட்டுப் பையன் ஒருவன்.

எஞ்ஜின் சூடு இறங்கியது போல இருந்தது. 

ஒரு 60 வயது மதிக்கத்தக்க அம்மா. ஒரு கையில் பூக்கள். காலையில் முழுகி தலையில் பூ வைத்திருப்பது தெரிகிறது. மறுகையில் இன்னோர் பை. கோயிலுக்குப் போகின்றார் போலும்.

என்னைத் தாண்டிக் கொண்டு செல்கின்றார் – குனிந்த தலை நிமிராமல்.

அவர் வாய்க்குள் ஏதோ ஒரு தேவாரம் ஓதிக் கொண்டு போவது போலத் தெரிகின்றது.

தூரத்தில்  ”இது மாலை நேரத்து மயக்கம்” என ஒரு பனை உச்சியில் இருந்து லவுட் ஸ்பீக்கர் பாடிக் கொண்டு இருந்தது. 

இந்த முறை சிகரட்டிடம் ஏச்சு வாங்காமல் இரசித்து உறிஞ்சி உள்வாங்கி புகைவளையங்களை விட்டு என் எழுத்துகளை நானே இரசிப்பது போல நான் விடும் புகை வளையங்களை நானே ரசித்துக் கொண்டு நின்றேன்.

”ஓரம்போ… ஓரம்போ…” என்ற பாட்டின் இசையை ஒலிக்க தூரத்தில் பாண் விற்கும் ஆட்டோ வந்து கொண்டிருக்கின்றது. இந்த இசை அந்தக் குறிப்பிட்ட பேக்கரிகாரனின் றேட்மார்க் மியூசிக். காலையும் மாலையும் எங்கள் வீட்டை; தாண்டி மெதுவாகச் செல்லும்.

இவ்வாறு எல்லாவற்றுக்கும் ஆட்டோ தான் – அதிகாலையில் சைக்கிளில் அவலக்குரலில் ”இன்னார் செத்துப் போனார்” என சொல்லிக் கொண்டு போகும் இழவு முதற்கொண்டு அனைத்துமே ஆட்டோக்களாயப்; போய் விட்டது. 

என்னைத் தாண்டிச் சென்ற அந்த அம்மா தூரத்தில் போன பின்பு அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்து விட்டு கையில் கொண்டு சென்ற பையை ஒரு வீட்டின் மதில் கரையில் போட்டு விட்டு விரைவாக நடக்கத் தொடங்கினார்.

எனக்கு ’திக்’ என்றது.

நிச்சயம் அது அவர் வீட்டுக் குப்பைப் பையாக இருக்க வேண்டும்.

ழூ  

இரவு முழுக்க ஏனோ பயங்கரமான கனவுகள்.

ஒன்றுடன் ஒன்று சம்மந்தமில்லாத மாதிரி.

கனவில் வந்தவர்கள் தெரிந்தவர்கள் போலும் இருந்தார்கள்.

தெரியாவர்கள் போலும் இருந்தார்கள்.

அதிகாலையில் புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தேன்.

நித்திரை வர மறுத்தது.

வாகனங்களின் சத்தமும்… றோட்டால் கதைத்துக் கொண்டு சந்தைக்கு போய்க் கொண்டு இருப்பவர்களின் சத்தங்களும் கேட்டுக் கொண்டிருந்தன.

மெதுவாக எழுந்து மனைவி பிள்ளைகளைக் குழப்பாமல் குசினியுள் சென்று தேனீரையும் ஊற்றிக் கொண்டு வெளிவிறாந்தையில் போடப்பட்ட அப்பாவின் ஈசிச்செயரில் சாய்ந்து கொண்டேன்.

கிட்டத்தட்ட நாற்பது வருடத்திற்குப் பின்பாக…. அப்போ இதில் அப்பா…. இப்போ நான்….

அப்பாவின் கால்களுக்கு நடுவே அவரின் சாரத்தினுள் தொட்டிலில் உட்கார்ந்து இருப்பது போல இருந்த சுகத்திற்கு என்றும் நிகரில்லை.

றோட்டில் திடீரென கலவரச் சத்தங்கள் கேட்கின்றன.

வாகங்களின் ஓட்டம் திடீரென அதிகமாகி வேகமாகப் போகத் தொடங்கின .

நாய்களின் குலைப்பும் ஊளையிடுதலும் அதிகமாகின.

மெதுவாக எழுந்து சென்று வெளிவாசல் கேற்றைத் திறக்காமல் உள்ளே நின்று கொண்டு வெளியே என்ன நடக்கின்றது என அறிய முற்பட்டேன்.

”பொறுக்கி வேலை செய்து போட்டாங்கள்…. பொறுக்கி வேலை செய்து போட்டான்கள்” என்ற குரல்கள் பலமாகக் கேட்டன.

மனைவி பின்னால் வந்து நிற்பது போலத் தெரிந்தது.

”இப்ப உள்ளுக்கை வாங்கோ…. வுpடிய எல்லாம் தெரியும் தானே…. இப்ப அறிஞ்சு என்ன பத்திரிகைக்கு எழுதவா போறீங்கள்… தலைதலையாய் அடிச்சனான் வேண்டாம் இலங்கைக்கு வர வேண்டாம் என்று….”

பாதுகாப்பு வலையங்களுக்குள் வாழ்ந்து பழக்கப்பட்டவள் அவள்.

எல்லா எல்லைகளையும் தாண்டி வாழ்பவன் அல்லது எழுதுபவன் நான்.

எனக்குள் ஆயிரம் குறுகுறுப்பு.

நிலம் வெளிக்க முதலே மெதுவாக வீதிக்கு வந்தேன்.

சலசலப்பு கொஞ்சம் ஓய்ந்திருந்தாலும்ää ஏதோ ஒரு அமைதி – அவைரின் முகங்களில்.

அவை இறுகியிருந்தது போல இருந்தன.

கடந்து போன போராட்டம் மக்களை மௌனித்திருக்கப் பழக்கியிருந்தது போலும்.

சற்றுத் தூரத்தில் இருந்த தேனீர் கடை திறந்திருந்தது.

சிவசம்புஅண்ணை அதிகாலையிலேயே அடுப்பு மூட்டி விடுவார்.

மெதுவாக அவரின் கடையடிக்கு கால்கள் தானாகவே நகர்ந்தன.

சாதாரணமாக நாலைந்து பேர் மட்டும் கடைக்கு வெளியே நின்று தேனீர் குடித்துக் கொண்டிருக்கும அவர் கடைக்கு முன்னால் பத்து பதினைந்து பேர் மட்டில் நின்றிருந்தார்கள்.

“ஒரு தேனீர் சீனி போடாமல்”

சிவசம்பு அண்ணை நிமிர்ந்து ஆச்சரியமாக பார்த்தார்.

சந்தைக்கு வருவபவர்கள் மட்டும் தான் அவரின் காலை நேர வாடிக்கையாளர்கள்.

“எப்ப தம்பி பயணம்”

”வாற கிழமை”

”வந்த விசயங்கள் முடிந்தால் போய்ச் சேருங்கோ… ஏன் வீணாய் இங்கை நின்று கொண்டு…”

அவரை ஏன் என்பது போல பார்த்தேன்.

”என்ன கோழைத்தனம் இது?.. தகப்பன் அல்லது பெட்டையின்ரை தமையன்மார் அல்லது தம்பிமார் அல்லது மாமான்மார் யாராவது  போய்க் கதைத்திருக்கலாம். விருப்பமில்லாவிட்டால் பிரச்சனையை வேறு விதமாய் முடித்து இருக்கலாம். இது முன்பின் தெரியாத யாரோ ஆட்களைக் கொண்டு வந்து படுத்துக் கிடந்ததுகளை படுக்கையிலை வைச்சு…. நினைச்சுப் பார்க்கவே ஏலாமல் கிடக்கு”

தேனீர் கிளாஸ் மெதுவாக நடுங்கியது போல இருந்தது.

சிவசம்பு அண்ணையிடம் இருந்து எதிர்பார்த்த பதிலைப் பின்னால் நின்று கதைத்தவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டேன்.

”வந்தவன்கள் யாராம்”

”யாருக்குத் தெரியும்?… வந்தவங்கள் வந்த கார் நம்பர் பிளேட் எங்கட பிரதேசத்தின்ரை இல்லையாம்”

பேசிக்கொண்டே நின்றார்கள்.

நான் மெதுவாக அவ்விடம் விட்டு விலகினேன்.

ழூ

மீண்டும் டென்மார்க் வந்து ஒரு கிழமையாயிற்று.

தொடரின் இறுதிப் பாகத்தை இன்று எழுதி முடித்து அனுப்ப வேண்டும்.

”புதிய மண்ணும் புதிய வாழ்வும்”

இலங்கைக்குச் சென்று வந்த பின்பு முதல் பாகத்தை எழுதும் பொழுது மனம் இருந்த உற்சாகம் இன்று ஏனோ இல்லாமல் இருப்பதை மனம் உணர்ந்தது.

ஆனாலும் தொடரை எழுதி முடிக்க வேண்டும்.

ஒரு தொடர்கதையை உடனே முடிக்க வேண்டும் என்றால் ஒரு தற்கொலையையோ… விபத்தையோ … அல்லது ஒரு புற்றுநோயையோ கொண்டு வந்து முடித்து விடலாம். ஆனால்  கட்டுரைக்குள் கொண்டு வந்து அதனை முடிக்க முடியாது.

வாழ்ந்து… போராடி… மௌனமாகி…. பின் மீண்டும் துளிர்த்துக் கொண்டிருக்கும் எனது சொந்த மண் பற்றியும்…. புலம் பெயர்ந்து நான் வாழும் புதிய மண்ணைளும்…; அதன் வாழ்க்கையின் பெருமைகளையும் சிறப்புகளையும் பதிவு செய்யும் கட்டுரைத் தொடரினை எழுதிச் சென்ற என் விரல்கள் ஏனோ தடுமாறுவது எனக்குத் தெரிகிறது.

தமிழ்த் தட்டெழுத்தின் சின்ன எழுத்தும் பெரிய எழுத்தும் என்னையும் அறியாமல் என்னுடன் கண்ணாமூச்சி ஆடுகின்றன.

உடல் என்று எழுதினால் ஊடல் என்று வருகிறது. கடல் என்று எழுதினால் குடல் என வருகிறது.

கொஞ்சம் அமைதியாக இருந்து விட்டு எழுதினால் நன்றாய் இருக்கும் போலிருக்க எழுந்து போய் ரி.வி.க்கு முன்னால் அமர்ந்து கொண்டேன்.

மகாபாரதம் போய்க் கொண்டிருக்கின்றது.

அதர்மத்தை தோற்கடிக்க இன்னோர் அதர்மத்தைக் கையில் எடுப்பதும் தர்மம்தான் என்று கிருஸ்ணன் சொன்னதை அவனவன் எல்லாம் கையில் எடுத்து விட்டானா என மனம் என்னையே கேட்டுக் கொண்டது – கண்ணப்ப நாயனார் கடவுளுக்கே மாமிசம் படைக்கும் பொழுது நாங்கள் வெள்ளியில் சாப்பிடக் கூடாதா என பேஸ்புக்கில் அறிவாளிகள் கருத்துத் தெரிவிப்பது போல.

ஏகலைவனின் கட்டை விரலை தானமாய் பெற்ற துரோணர் இறந்து போகின்றார்.

மனம் வேறு இறுதி யுத்தத்தை நினைத்து சஞ்சலப்படுகின்றது.

தொலைபேசி அழைக்கின்றது.

”சொல்லுங்கள்”

”பீற்றர் அண்ணையை மண்டையிலை போட்டுட்டாங்கள்”

”என்ன சொல்லுறீங்கள்”

”ஓம் அண்ணை…. பீற்றர் அண்ணையின்டை பொடியனின்ரை பிரச்சனை தெரியும் தானே?”

”ஓம்…. அந்த ஆள் கடைசிவரை செய்து கொடுக்க மாட்டன் என்று சொல்லிக் கொண்டு இருந்தது. அதிலை என்ன?”

” அதால பிரச்சனை இல்லை…. இந்த ஆள் பொது இடத்திலை பிழையாய் வாயை விட்டுட்டார்…. ஒருத்தன்ரை ரோச நரம்பை பிடிச்சு இழுக்கிற அளவுக்குப் பேசினால் யார் தான் பொறுத்துக் கொள்ளுவாங்கள்;?”

”அதுக்கு மண்டையிலை போடுறதோ… சரி நான் வந்து பார்க்கின்றன்?”

”இப்ப எங்கை வந்து என்னத்தைப் பார்க்கிறது. பிரேதத்தை பொலிஸ் கொண்டு போயிட்டுது. வீட்டைச் சுற்றி பொலிஸ் நிற்குது. யாரும் உள்ளேயும் வெளியேயும் போக முடியாது?

”பெடிச்சியின்ரை தகப்பன் தாய் சகோதரங்கள் எங்கே?”

”அவர்கள் எங்கேயும் போகவில்லை…. இப்போதும் சுப்பர் மாக்கற்றுக்கையும் தமிழ் கடைக்கேக்கையும் யாரோ கண்டவையாம்” 

”அப்ப யார் செய்தது?… அது தான் தெரியேல்லை…. ஆனால் சிவிரி கமராவில் ஒரு போலாந்து நம்பர் பிளேட்டுடன் ஒரு வான் நின்று போயிருக்கு”

அதிர்ந்து போனேன்.

இதுக்குப் பின்பு நான் எதனையும் கேட்கத் தேவையிருக்கவில்லை.

”புதிய மண்ணும் புதிய வாழ்வும்” தொடரை முடித்தே ஆக வேண்டும் – வெளியே வராத சில ஆராய்ச்சிகளின் முடிவுகள் போல.

இன்று எனக்கு உள்ள தெளிவு ஆரம்பத்தில் இருந்திருந்திருந்தால் இந்தத் தொடருக்கு ’எங்கெங்கு காணினும்” என்று பெயர் வைத்திருப்பேனோ என்னவோ! 

ழூ

எழுதிக் கொண்டே கணனி முன் தூங்கி விட்டேன் என்று நினைக்கின்றேன்.

கணனித் திரையில் ஆன்லைனில் ஓடர் பண்ணுவதற்கான இணையத் தளம்.

முதலில் எனது பெயர். விலாசம். வயது அனைத்தும் கேட்கப்பட்டது.

முன்னெச்செரிக்கையுடன் முழுக்க முழுக் தவறான தகவல்களையே கொடுத்தேன்.

புpன் எதிராளியின் விபரங்கள் கேட்கப்பட்டது.

முழுக்க முழுக்க துல்லியமாக சரியான தகவல்களையே கொடுத்தேன்.

எவ்வாறு தண்டிக்க வேண்டும் என்று பல தெரிவுகள் தரப்பட்டிருந்தன.

கை எடுப்பது – கால் எடுப்பது – உயிர் எடுப்பது இத்தியாதி… இத்தியாதி…

அது அதுக்கு எதிரே அதற்கான பணமும் போடப்பட்டிருந்தது.

சம்மந்தப்பட்டவரின் வாயை அடக்குவதற்;குரிய தெரிவு இல்லாதது குறையாக இருந்தது.

சரி… கை போனாலும் அவர் உயிர் வாழலாம் தானே என்ற நம்பிக்கையில் அதனைத் தெரிவு செய்தேன்.

அடுத்து வங்கி அட்டையின் எண் – முடிவடையும் திகதி – பின்னால் உள்ள இரகசிய எண்.

கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது கண் விழித்து விட்டேன்.

நிச்சயமாக இது எனக்கான இணையத்தளம் இல்லை என்று மட்டும் புரிகிறது.

ழூ

எங்கெங்கும்… எப்பொழுதும்… எவ்வகையிலும்…

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)