ஊமை உறவுகள் – சிறுகதை

ஊமை உறவுகள் – சிறுகதை

ஓரு மாதத்தின் முன்புதான் அன்னத்தின் மூத்தமகள் ராணி பெரியவளாகி இருந்தாள்.

அண்டை அயல்கள் கொண்டு வந்த நல்லெண்ணையிலும், உழுத்தம் மாவிலும், முட்டையிலும் இரண்டு ரின்கள் நிறைய முட்டைமா செய்தது போக எஞ்சியிருந்த முட்டைகள் பங்குனி வெயிலில் பழுதாகிப் போய் விடும் என்பதற்காக பக்கத்து வீட்டுப் பூரணத்திடம் இருந்த அடைக்கோழியை வாங்கி குஞ்சுக்கு வைத்ததில் தேறியவை ஏழு.

காகம் தூக்கியது, பூனை பிடித்தது, கிணற்றுள் விழுந்தது. . . .என விசாவை முடித்துக் கொண்டவை போக மிகுதி மூன்று. அதிலும் அடைக்கோழி அக்கிரிமன்றின்படி பகக்கத்துவீட்டு பூரணத்துக்கு ஒன்று போக தேறியவை கறுவலும் சிவலையும் தான்.

”அம்மா இஞ்சை பார்த்தியளோ. . . எப்பவும் இதுகள் ஒண்டாய்த் திரியுதுகள் ”

”ஓமடி பிள்ளை . . .ஒண்டாய் அடைவைச்சதுகள். . . ஒண்டாய்த் திரியுதுகள் ”

”ஒரு மாதக்குஞ்சுகள் எண்டாலும் நல்லாய் செட்டை முளைச்சிட்டுதுகள் ”

வீட்டின் தாழ்வாரம், பாவட்டை நிழல்கள், கிணற்றடி வாய்க்கால்கள் எங்குமே கறுவலினதும் சிவப்பியினதும் ஆதிக்கம் தான்.

நிலம் வெளுக்க இறங்கி வருவது தொடக்கம் சூரியன் படுத்துச் செக்கல் வரும்வரை அவையிரண்டும் ஒன்றாகவே வலம் வரும்.

எங்கேயாவது காகம், பருந்தைக் கண்டால் ஒன்றிற்கு ஒன்று தம் கீச்சிட்டு சத்தத்தால் சமிக்சை கொடுத்து விட்டு வேலிப்பற்றைகளுள் ஓடி ஒளிந்து விடும்.

அப்படி ஓர் உறவு அவையிடையே. . .

ஓர் மூன்று மாதம் போயிருக்கும்.

இருந்தாற் போல் எங்கிருந்தோ வந்த மழையினால் ஊரே கூதலால் விறைத்து நின்றது. ஆங்காங்கே சில பள்ளிக்கூடக் கூரைகளைக் கூட காற்றுப் பெயர்த்து விட்டது.

”இந்தக் காத்தும் மழையும் எப்ப விடப்போகுதாம். நீர்வேலியிலை ஒரு வாழைத்தோட்டமும் மிச்சமில்லையாம் ”

”ஒரு காய்கறி கூட வேண்டேலாமல் கிடக்கு. கடலுக்கும் செமியோன் போகேல்லையாம்”

”வெங்காயம் இனி முளை கக்கிப் போடும் கண்டியோ. காணி, வீட்டை அடைவு வைச்ச சனங்கள் தான் பாவங்கள்;”

”கடைக்கார சின்னவரின் பின் சுவர் பாறி விழுந்திட்டுதாம்”

ஊர் தன் கவலையில். . . .

கறுவலும் சிவப்பியும் மூன்று நாட்களாக குளிரில் நடுங்கிக் கொண்டு வீட்டுப் பின் தாழ்வாரத்துடன் ஒட்டியபடி நின்றன. காலைமையிலும் பின்நேரத்திலும் கூப்பிட்டு பழஞ்சோறு அல்லது தேங்காய்ப்பூ துருவலைப் போடும் அன்னம்மாவும் இந்த மூன்று நாளும் இவையிரண்டையும் தேடவில்லை.

நாலாம் நாள் காலை கொஞ்சம் மழையும் காற்றும் குறைய ஊர் வீட்டுகளுக்கு வெளியே வந்தது. சந்தையும் கூடியது.

சிவப்பிக்கு பசி பொறுக்க முடியாது உடம்பு நடுக்கத் தொடங்கியது. கண்களை முற்றாகத் திறக்க முடியாது முணகிக் கொண்டு இருந்தமையைப் பார்க்க கறுவலுக்கு பரிதாபமாகப் பட்டது.

அவ்வாறே சிறிது நேரம் சிவப்பியைப் பார்த்துக் கொண்டு இருந்து விட்டு மெதுவாக கால்கள் மறையும் தண்ணீரில் இறங்கி அப்படியே குசினிப் பக்கம் எட்டிப் பார்த்தது.

அப்போது தான் அன்னம் ஒழுங்கை மூலையில் காத்திருந்து சைக்கிள்காரனிடம் நாலைந்து கீரி மீன்குஞ்சு வாங்கி வந்திருந்தாள், ”கீரி மீனுக்கு அவன் சொல்லுற விலைக்கு ஒரு கிடாய் வேண்டி பங்கு போடலாம்” என மீன்காரனை வாய்க்குள் புறுபுறுத்துக் கொண்டு மீன் உமலைத் திண்ணையில் வைத்துவிட்டு, ”பிள்ளை ஒரு தேத்தண்ணி வை. ஒழுங்கை முகரியிலை நிண்டு கால் கையெல்லாம் விறைச்சுப் போச்சு”  என்றவாறே அரிமணை எடுக்க குசினியின் பின்பக்கம் போனாள்.

உமலை குந்தில் வைத்துவிட்டுப் போவதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த கறுவல் இதுதான் தருணம் என ஓர் கீரி மீனை ”லபக்”; என்று கொத்திக் கொண்டு ஓடியது.

”அம்மா உங்கை உந்தச் சேவல் ஒரு மீனைக் கொண்டு போகுது”

”கொல்லடி அதை”இ குளிரில் நின்ற களை, மீன்காரன் கூடக்காசு வேண்டிவிட்ட கோபம் இரண்டும் கறுவல் மீது திரும்ப திண்ணையில் இருந்த திருவலகையைத் தூக்கி கறுவலை நோக்கி எறிந்தாள்.

நல்ல காலம் கொஞ்சம் குறி தவறியதால் கறுவல் பிழைத்தது.

”உனக்கு எப்பவும் ஒரு கதைப் புத்தகமும் கையும். அதுக்கை தலையைப் புதைச்சுக் கொண்டு கிடக்காமல் உந்த மீனை ஒருக்கா பாக்கத் தெரியாதோ?” கறுவலி மீதிருந்த கோபம் மகள் மீது திரும்பியது.

”சும்மா கத்தாதை அம்மா”

”இப்ப கத்துற மாதிரித் தான் கிடக்கும்” தன் இயலாமையில் புறுபுறுத்தபடி மற்ற மீன்களை நோண்டத் தொடங்கினாள் அன்னம்மா.

கொத்தி வந்த மீனை சிவப்பிக்கு முன் போட்டு விட்டு அதனைப் பெருமிதமாகப் பார்த்தது.

இரண்டு மூன்று நாள் பசி சிவலைக்கு.. . .மீனை கொத்தி கொத்தி சாப்பிடத் தொடங்கிய சிவலை சிறிது நேரத்துக்கு பின் நிமிர்ந்து கறுவலைப் பார்த்தது. அது சிவப்பி சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டு நின்றது.

சிவப்பி என்ன நினைத்ததோ. . . மீனை கறுவலுக்கு கிட்டவாகப் போட்டது.

அது கறுவலுக்கும் புரிந்திருக்க வேண்டும். பின் இரண்டுமாக கொத்தி கொத்தி சாப்பிடத் தொடங்கின.

மீனின் முட்களை அப்படியே தாழ்வாரத்தில் விட்டு விட்டு பசி போன களையில் இரண்டும் முன்விறாந்தைப் பக்கமாக இறங்கிப் போயின.

“உங்கை பாத்தியே பிள்ளை. . . என்ரை மீனைத்திண்டுட்டு சோடிகட்டிப் போயினம்”

அன்னத்தின் புலம்பல் தீரவில்லை. மகள் கிளுக்கென்று சிரித்து விட்டு தாய் முழிசிப் பார்க்க முகத்தை மீண்டும் கதைப்புத்தகத்தினுள் புதைத்தாள்.

* * *

“பிள்ளையை ஒரு மாசம் அல்லது இரண்டு மாசம் தான் பள்ளிக்கூடத்தாலை மறிச்சு வைக்கிறது.. . . உன்ரை பிள்ளை தான் ஏதோ ஊரிலை பெரிசாய் சாமத்தியப் பட்டது போலை ஆறு மாசம் வீட்டுக்கை மறிச்சு வைச்சிருந்திட்டாய். . . இனியாவது அவளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பு”

* * *

இந்த ஆறு மாதத்துள் அழகாய் மாறியது அன்னத்தின் மகள் ராணி மட்டுமில்லை. கூடவே கறுவலும் சிவப்பியும் தான்

கறுவலுக்கு தலையில் சிவத்த கொண்டை துளிர்க்கத் தொடங்கியிருந்தது.

சிவப்பியின் செட்டைகள் பரந்து கொழு கொழுவென என்றிருந்தது.

அன்று சன்னதித் தேர். அதிகாலையில் ஊர்ச் சேவல்கள் கூவிய பொழுது கறுவலும் தன்னை மறந்து ஏதோ ஓர் உந்துதலில் தானும் செட்டையை அடித்துக் கொண்டு கூவியது.

சிவப்பி சிலிர்த்துக் கொண்டது.

கறுவலுக்கு அதுவே ஒரு பெருமையாக பட மீண்டும் மீண்டும் செட்டையை அடித்துக் கூவியது.

சிவப்பி தலையைத் தாழ்த்திக் கொண்டது.

நாணமோ?

அன்று முழுவதும் ஏனோ சிவப்பி வெட்கப்பட்டது போலத் தயங்கி தயங்கி தத்தி தத்தியே கறுவலுக்கு பின்னால் திரிந்தது.

அன்று செக்கலை நெருங்கிக் கொண்டு இருந்த வேளை பக்கத்து வீட்டுப் பூரணத்தின் வெள்ளடியன் சிவப்பியைக் கண்டவுடன் சிலிர்த்துக் கொண்டு கூவியபடி சிவப்பியைக் கலைத்துக் கொண்டு வந்தது.

சிவப்பிக்கு பயம் தொற்றி விட கதறிக் கொண்டுவந்து கறுவலுடன் ஒட்டிக் கொண்டது.

கறுவலின் ஆண்மை விழித்துக் கொண்டது.

சிலிர்த்துக் கொண்டு பூரணம் வீட்டு வெள்ளடையன் மீது பாய்ந்து தாக்கத் தொடங்கியது.

அதுவும் விடவில்லை. இரண்டும் பந்தயத்திற்கு கட்டி விட்ட சேவல்களாக ஒன்றை ஒன்று மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கியது.

இரண்டிற்கும் கீழ்த் தாடைகளில் இரத்தம் வழியத் தொடங்கியது.

சிவப்பி பயந்து நடுங்கியது.

சிவப்பியின் நடுக்கத்தை கண்ட கறுவல் தன் பலம் எல்லாவற்றையும் சேர்த்து வெள்ளடையனின் கழுத்தைக் குறி வைத்து ஒரு பாய்ச்சல் தான்.

வேலி இடுக்கினூடு பாய்ந்து ஓடியது வெள்ளடையன்.

அச்சமயம் வேலியோரம் சாம்பல் கொண்ட வந்த அன்னம் “சனியன்கள் கொழுப்பெடுத்து திரியுதுகள்” என்றவாறு தன் பங்கிற்கும் வெள்ளைடையன் மீது சுடுசாம்பலைக் கொட்டிவிட்டாள்.

கறுவலுக்கு தாடையடியில் மட்டும் சிறிது இரத்தம்.

சிவப்பிக்கு அடி வயிற்றை வறுகியது.

தன் அலகால் கறுவலின் தாடையை வருடி வழிந்த இரத்தத்தை தன் செட்டையில் துடைத்தது.

அது கறுவலுக்கு ஓர் இன்பானுபவமாகப்பட்டது.

 * * *

இரவு வீடே அமர்க்களப்பட்டது.

“பச்சை உடம்பு காய முதல் பாவி இப்பிடிச் செய்திட்டாளே என ஊர் வாயில் கை வைக்க முதல்” “மழைக்குள்ளை நனைஞ்சதாலை சன்னி கண்டுவிட்டது” என அதே ஊரை அனுதாபப்பட வைத்தது அன்னத்தின் சாதுர்யம் தான்.

வயிற்றில் வாங்கி வந்ததை வள்ளி ஆச்சியின் கை மருந்தால் வாய் வழியே அழித்து விட்டாலும் உடம்பு மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. அவசரப்பட்டு முந்தானை விரித்ததின் பலன். . .  ராணி முணகிக் கொண்டு இருந்தாள்.

“எதுக்கும் அன்னம் அராலி வைத்தியரிட்டை ஒருக்கா கொண்டு போய் காட்டு. உடம்பு தேற அந்த மனுசன் ஏதாவது உருண்டை தரும்” வள்ளி ஆச்சி சொல்லிவிட்டு நூறுரூபாய் காசையும் வேண்டிக் கொண்டு போய் விட்டாள்.

அடுத்த நாள் நிலம் வெளுத்த போது முதல் நாள் பட்ட நோ அனைத்தையும் மறந்து கறுவல் கம்பீரமாகக் கூவியது.

சிவப்பி கறுவலின் தாடையைப் பர்த்தது. இரத்தம் காய்ந்து போயிருந்தது.

கறுவலின் தாடையை சிவப்பி தன் அலகால் தடவியது.

கறுவலும் ஓர் உற்சாகத்துடன் சிவப்பியை செல்லமாகக் கொத்தியது.

சிவப்பிக்கு உடல் சிலிர்த்தது.

அதுவும் திரும்பக் கொத்தியது.

விளையாட்டாக இரண்டும் மாறி மாறிக் கொத்திக் கொண்டிருந்த பொழுது கறுவல் தன் சிறகால் சிவப்பிக்கு அடித்தது.

ஊடலோ. . . அல்லது கூடலுக்கான அழைப்போ. . .

சிவப்பிக்கு புரிந்து விட்டது.

சிவப்பி தாழ்வாரத்தில் இருந்து குதித்து ஓடியது.

பின்னால் கறுவல் துரத்தியது.

சிவப்பி நிற்பதும் பின் ஓடுவதாயுமர்ய் கறுவலுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டு இருந்தது. கறுவலோ களைக்கவோ அன்றி சளைக்கவோ இல்லாது ரொம்ப உற்சாகத்துடன் சிவப்பியுடன் விளையாடிக் கொண்டு இருந்தது.

மாறி. . .மாறி. . .கலைத்து விளையாடிக் கொண்டிருந்த கறுவல் ஓர் கட்டத்தில் ஓர் பாவட்டைப் பற்றையின் நெருக்கத்தில் வைத்து தன் அலகினால் சிவப்பியின் சின்னக் குடுமியை பிடிததுக் கொண்டது.

சிவப்பியின் நாணத்தில் எழுந்த பெண்மையின் திணறல் கொஞ்சம் கொஞ்சமாக கறுப்பியின் ஆளுமையுள் கட்டுண்டது.

அந்த காலைப் பொழுது சிவப்பிக்கும் கறுவலுக்கும் ஓர் புத்துணர்ச்சியைக் கொடுத்திருந்தது.

* * *

“காலமையே வைத்தியரிட்டை போட்டு வந்தது நல்லதாய் போச்சுது.. . . பிள்ளையை சாப்பாட்டாலை தானாம் தேத்த வேணுமாம்”

“என்னடி சொன்னவர்”

“கூவாத சேவலும் கன்னிப் பேடும் தான் நல்லதாம்”

“இப்ப கோழிவிக்கிற விலையிலை எங்கை போகப்போறாய். மருதனாமடம் சந்தையும் பெரிசா கூடுறேல்லை”

“உந்தக் கறுவலும் இப்ப இரண்டு நாளாய் தான் கூவுது. அதோடை உந்த சிவப்பியும் காலமை தொடக்கம் கொக்கரிச்சுக் கொண்டு திரியுது. முட்டை கிட்டை போடப்போகுதோ தெரியேல்லை.”

“அன்னம் முட்டை போடுற கோழியெண்டால் அதை விடு. இண்டைக்கு கறுவலைப் பிடிப்பம். நாளைக்கு ஊருக்கை பார்த்து வேண்டுவம்”

“பொறு. . .பொறு. . .உங்கை இரண்டு பேரும் ஆடி ஆடி வருகினம்.  பிள்ளை கொஞ்சம் அரிசியை எடு. இரண்டு பேரையும் பிடிப்பம். சிவப்பியை முட்டைக்கு அடைப்பம்”

அன்னம் அரிசியால் எறிந்த பாசக்கயிற்றால் இரண்டின்; ஆவியும் துடித்தது.

* * *

சுதந்திரமாக கறுவலுடன் ஊர் உலாத்தி வந்து கொண்டிருந்த சிவப்பிக்கு அந்த கடகத்துள் அடைபட்டுக் கிடந்த பொழுது உலகமே இருண்டு போய்; இருந்தது.

“கறுவா. . . நீ எங்கை போயிட்டாய்?” 

வேதனையில் சிவப்பி துடித்தது.

“கறுவா. . . நீ எங்கை போயிட்டாய்?”

அப்பொழுது அடிவயிற்றில் ஓர் நோ தொட்டது.

காலையில் கறுவலுடன் கலந்த அந்த சுவானுபவத்திதில் ஏற்படப் போகும் அந்த தலைப்பிரசவ வேதனை. . .

“கறுவா. . . வயிற்றுக்குள் நோகுது . . . நீ எங்கை போயிட்டாய்?”

அம்மிக் குழவியுடன் கால்கள் கட்டி வைக்கப்பட்டிருந்த கறுவல் சுற்றும் முற்றம் சிவப்பியைத் தேடியது.

“சிவப்பி….சிவப்பி . . நீ எங்கை போயிட்டாய்?”

அம்மிக் கல்லுடன் சேர்ந்து தெத்தி தெத்திப் பார்த்தது.

அம்மியின் கணமும் அன்னத்தின் கட்டும் அசைய விடவல்லை.

தன் சக்தி எல்லாவற்றையும் சேர்த்து பெரிதாக கூவியது.

சிவப்பியால் பெரிதாக கூவமுடியவில்லை. அவ்வளவு வலி. . . ஆனாலும் கதற முயற்ச்சித்தது. அது வெறும் முனகலாகவே வெளியே வந்தது.

ஆனால் அந்த முணகல் கடகத்தினுள் இருந்து வெளியில் வரவில்லை.

“மாணிக்கம்! உந்த அம்மிக் காலோடை கட்டியிருக்கிறது தான். அடிவளவுக்கை கொண்டு போ. . .நான் சட்டியும் தண்ணியும் கொண்டு வாறன்”

மாணிக்கம் செட்டையில் பிடித்து தூக்கினான்.

 கறுவல் கதறியது.

அந்தக் கதறல் கறுவலுக்கு ஏதோ ஒரு ஆபத்து என்பதனை சிவப்பிக்கு உணர்த்தியது.

“கறுவா. . .உனக்கென்ன நடந்தது?”

”சிவப்பி என்னைச் சாக்கொண்டு தின்னப் போறாங்கள்”

வேப்ப மரத்தடியில் கட்டியிருந்த உருவு தடத்தில் கறுவலின் தலையை வைத்து மாணிக்கம் கயிற்றை இறுக்கி உருவி விட்டான்.

கறுவல் மரணவேதனையில் துடித்தது.

செட்டையை பலமாக அடித்தது.

சிவப்பியால் தாங்க முடியவில்லை.

கடகத்தினுள் இருந்தவாறே எகிறிக் குதித்தது.

வயிற்றில் நோ தாக்கியது

இரண்டுக்குமே ஜீவமரணப் போராட்டம்

”கறுவா”

”சிவப்பி”

சிறிது நேரத்திற்கு பின் இரண்டின் குரல்களும் இரண்டிற்கும் கேட்கவில்லை.

* * *

”இஞ்சை பார்த்தியளே. . . காலமை கொக்கரிக்குது எண்டிட்டு அடைச்சு வைச்சன். இப்ப செத்துக் கிடக்கு. ஏதும் பாம்பு கீம்பு கடிச்சுதோ தெரியேல்லை”

அன்னம் அதனைத் தாழ்ப்தற்க்கு வேப்பமரத்தடிக்கு எடுத்துச்
சென்றாள்.

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)