உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?

இலக்கியச் சர்ச்சைகள், இலக்கியவாதிகளை அங்கீகரிக்கும் அல்லது புறம் தள்ளும் நிகழ்வுகள் அனைத்தையும் உள்ளடக்கி போட்டிகள் என்ற தலையங்கத்தில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று ஏனோ பல நாட்களாக என் மனதுக்குள் ஓர் எண்ணம் இருந்து கொண்டே வந்தது.

போட்டிகள் என்பதன் அர்த்தம் தோற்பது அல்ல என்ற கருத்துப்பட எழுதுவதற்கு ஏற்ற முன்னுரை தேடிக்கொண்டு இருந்த பொழுது அண்மையில் ஒரு நாள் விஜய் தொலைக்காட்சியில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியை மாலைத் தேனீருடனும் மனுசிக்காரி முதன்நாள் செய்த வடையுடன் சுவைத்துக் கொண்டு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

அன்றைய நிகழ்ச்சியில் இதுவரை வென்றுவந்த 30 போட்டியாளர்கள் இருவர் இருவராக சேர்ந்து நடனம் ஆடும் நிகழ்ச்சி. மேலும் அன்றைய போட்டியின் முடிவில் 4 போட்டியாளர்கள் விலக்கப்பட இருந்த நிலையில் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருந்தது. அதில் ஆடிய இரு பெண்கள் இதுவரை தனித்தனியாக ஆடிய பொழுதும் அன்று சேர்ந்து ஆடும் பொழுது அவர்கள் சிறப்பாக ஆடவில்லை. அதற்காக காரணத்தை மத்தியஸ்தர்களுக்குப் பதிலாக நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் ஆராய முற்பட்ட பொழுது வெடித்தது ஒரு காட்சி! இந்திய மற்றும் இலங்கைப் பாராளுமன்றங்கள் தோற்றது போங்கள்!! இதில் ஒரு படைவரிசையில் ஒரு பெண்ணின் ஆண் ஆசிரியரும் (65-70 வயதிருக்கலாம் – திருப்பதிக்கு செல்லும் சப்தகிரி எக்ஸ்;பிரசில் இவ்வாறான தோற்றமுடையவர்களை அதிகம் பேர் சந்தித்திருக்க கூடும்) மறுவரிசையில் மற்றப் பெண்ணின் பெரியதாயாரும் மூன்றாவது வரிசையில் (இப்பொழுதுதானே எங்கும் 3வது அணி உருவாகுதே!) நிகழ்சியைத் தொகுத்தளித்தவர்களும் சேர்ந்து அந்தப் பிள்ளைகளை பகடைக்காய்களாக மக்கள் முன்னிலையில் பந்தாடினார்கள்.

இரு பெண்களும் கண்கள் கலங்கி நிற்க… ஆசிரியரும் பெரியம்மாவும் ஒருவரை ஒருவர் சபையில் வார்த்தைகளால் எரித்துக் கொண்டு இருக்க… நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் அவர்களுக்கு எண்ணை ஊற்றியபடி நின்றிருக்க… மத்தியஸ்தம் செய்தவர்கள் இதற்கும் எங்களும் சம்மந்தம் இல்லை என்பது போல மௌனம் காக்க… இடைக்கிடை அப்பெண்கள் தங்கள் ஆசிரியர்களுடன் அறையில்பேசிய பேச்சுகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட… நாம் வாழ்வது 21ம் நூற்றாண்டா என பெரிய கேள்வி என்னுள் எழுந்தது.

எத்தனையே போட்டிகளில் தேறி இறுதி 30 பேருக்குள் வந்த அந்த இரு பெண்களும் இனியொரு மேடையில்?…ஏன் மேடைக்குப் போவான்… ஒரு தெருவில் தலைநிமிர்ந்து நடந்து செல்ல முடியுமா என்ற அளவிற்கு அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளாகள்; நடந்து கொண்டார்கள். அறிவிப்புக்கு கொடுத்த மைக்கை அத்துமீறி பாவிக்கும் பொழுது நிகழ்ச்சி நடத்துனர்கள் ஆவது அதனை தணிக்கை செய்திருக்க வேண்டாமா?

மத்தியஸ்தர்கள் தங்கள் மௌனவிரதத்தை கலைத்திருக்க வேண்டாமா?

தமிழகத்தின் அடுத்த பிரபுதேவா என்றாகாது விட்டாலும் முதல் 30க்கள் வந்த திறமையை பாராட்ட ஏன் அந்த நிகழ்ச்;சி தொகுப்பாளர்களுக்குச் சரி, அவர்களை அழைத்து வந்த ஆசிரியர் மற்றும் பெரியம்மாக்குச் சரி தோன்றவில்லை. இவ்வாறான தவறுகள் பாடசாலைப் பேச்சு போட்டிகள் தேவாரப் போட்டிகள் தொடக்கம் இலக்கிய உலகம் வரை வியாபித்துக் கொண்டிருப்பது வேதனையே.

இந்த சம்பவத்தை முற்றாக உள்வாங்கும் ஓர் இலக்கியவாதி என்றும் வாழ்நாள்விருது பெற்றவனாய் விளங்குவான். அவனுக்கு போட்டிகளில் வெல்லவேண்டுமென்றோ அல்லது விருதுகளால் கௌரவப்படுத்தித்தான் அவனது படைப்புகள் வாழவேண்டும் என்ற அவசியமோ இல்லை.

மீண்டும் சொல்கின்றேன் – போட்டி என்பது தோல்வியைச் சந்திப்பதற்கான களம் இல்லை.

திரும்பிப் பார்க்கின்றேன் – தேனீh ஆறியிருந்தது.

அன்புடன்

வி.ஜீவகுமாரன்

– நினைவு நல்லது வேண்டும் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

  (To Type in English, deselect the checkbox. Read more here)

(Spamcheck Enabled)

Scroll To Top