இலையுதிர்காலம்
கார்த்திகை மாதம்!
கார்காலம்!!
அந்திமாலை!!!
செக்கச் சிவந்த வானம்!!!!
கார் மேகங்களுக்குப் பிரசவலி
குளிர்காற்று கூச்சலிடுகின்றது.
காது மூக்கு வாய் எங்கும்
கடித்துக் குதறும் கொடும் காற்று.
நான் நடக்கின்றேன் நடக்கின்றேன்
நடந்து கெண்டே இருக்கின்றேன்
மூங்கிலில் இசையை மீட்டி விட்டவன்
மூச்சுக் காற்றாய் எங்கும் இருப்பவன்
மகரந்த துகள்களைக் பரப்பி விடுபவன்
மண்ணிலே சக்தியை உற்பத்தி செய்பவன்
என்னிலும் – உன்னிலும் –
எறும்பிலும் – கரும்பிலும்
ஏகாந்தமாகக் கலந்து விட்டவன் நீயல்லவா!
என் இனிய பூங்காற்றே!
ஏன் இந்த வேகம்?
எதுக்கிந்தக் கோபம்?
வா நீ வா மெதுவாக வா!
என் கை பிடித்து நடந்து வா!
என் மேல் மூச்சுக்கும்
கீழ் மூச்சுக்கும் இழுபறி!
மூக்குத் துவாரத்தில்
போக்குவரத்து நெரிசல்!!
என் சுவாசப்பையில்
கிருமிகள் கும்மியடிப்பு!!!
வானில் மேகங்களின் சண்டை
இடிக்கும் மின்னலுக்கும் சண்டை
காற்றுக்கும் மழைக்கும் சண்டை
என் ஒரு முன்காலுக்கும்
மறுகாலுக்கும் சண்டை
ஆனாலும்
நான் நடக்கின்றேன் நடக்கின்றேன்
நடந்து கொண்டிருக்கின்றேன்
பக்கத்து தெரு
பறுவதம் ஆச்சி
மூச்சை நிறுத்தி விட்டா!
மூச்சும் அவாவை நிறுத்திக் கொன்றது
சண்டையில்லை சச்சரவில்லை
விடைபெறுவோம் எனக் கூறி
புறப்பட்டு விட்டன.
தொண்ணூறு வருடமாக
ஓயாது உழைத்த
அவாவின் சுவாசப்பையும்
இன்று பென்சன் எடுத்து விட்டது.
இனி என்ன
ஐந்து கண்டங்களிலும் இருந்து
சொந்த பந்தங்கள் வந்தபடியுள்ளன
அவைக்குத்தான் நான் இப்ப
சாப்பாடு கொண்டுபோறன்
முதுகுப் பையில் இடியப்பம்
மற்றக் கைகளில் கறியும் சொதியும்
நான் நடக்கிறேன் நடக்கிறேன்
நடந்து கொண்டேயிருக்கின்றேன்.
காற்று என்னைப் பின்னாலே தள்ளுது
சருகாகி உருமாறி நிறம்மாறி இடம்மாறி
விழுகின்ற இலைகள் காற்றின் பிடியில்
அலைந்தபடி அகதிகளாக
வேலியோரத்தில் தஞ்சம்
மண்ணோடு மண்ணாகி
மரத்துக்கு உரமாக
தவமிருக்கின்றன.
மொட்டையாய்ப் போனாலும்
வெட்டி யார் போட்டாலும்
நாம் வீழ்ந்திட மாட்டோம்
எனக் கூவிக் கூறிக் கம்பீரமாய்
நிமிர்ந்து நிற்கும் மரங்கள்
என்னைச் சென்றுவா என்கின்றன.
முன்வீதி தாண்டி பின்வீதி தாண்டி
சுடலையடிப் பக்கமாக வந்துவிட்டேன்
தேவாலயத்து மணி அடிக்கின்றது
அங்கே வெள்ளைக்காற பீற்றர் அப்புவை
அடக்கம் செய்ய ஆயத்தம் நடக்குது
அப்புவுக்கு சொந்தமில்லைப் பந்தமில்லை
தேடுவார் ஆருமில்லை அரசாங்கம் இங்கே
தன் கடமையைச் செய்கிறது.
”சனிப்பிணம் தனிப்போகாது ”
சொல்லிப் புறுபுறுக்க
ஆருமில்லை அப்புவுக்கு
நான் நடக்கிறேன் நடக்கிறேன்
நடந்துகொண்டே போகின்றேன்
இருள் பரவுகின்றது
பூசணிக்காய் விளக்குகளும்
மண்டையோட்டுப் பொம்மைகளும்
தெருவெல்லாம் கலோயின் விழாக்கோலம்
வானத்தில் பறவைகள்
கூட்டம் கூட்டமாய்
புலம் பெயர்கின்றன.
பாஸ்போட் இல்லை
விசாவும் ஏதுமில்லை
காற்றில் மிதந்து
கடும் குளிரை வெறுத்து
புலம்பெயர்கின்றன.
நான் நடக்கிறேன் நடக்கிறேன்
நடந்து கொண்டே போகின்றேன்
மீண்டும் மழை
ஊசியாகிக் குத்தும்மழை
இடி இடிக்கின்றது
மின்னல் பறக்கிறது
தெருவெங்கும் மக்கள்
கார்கள் ஓடுகின்றன.
பஸ்களும் ஓடுகின்றன.
காற்றும் மழையும்
நாட்டாமை பண்னுகின்றன.
இந்தப் பூமியம்மா மட்டும்
ஆடாமல் அசையாமல்
அப்படியே இருக்கின்றாள்
பர்வதம் ஆச்சியும்
ஆடாமல் அசையாமல்
ஐஸ் பெட்டியுள் உறங்குகின்றா
நான் நடக்கிறேன் நடக்கிறேன்
நடந்து கொண்டே இருக்கிறேன்
Skriv et svar