இலைமறைதாய் – வி. ஜீவகுமாரன்

இலைமறைதாய் – வி. ஜீவகுமாரன்

லக்சுமியக்கா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் மனைவி கனகலக்சுமியிடம் இருந்து குமாரசாமியார் தள்ளியிருக்கும் தருணங்கள் இரண்டு தான்.

ஓன்று வீட்டுக்கு விலக்காகும் காலங்கள்.

இரண்டாவது ஆண்டுக்கொரு முறை வரும் கந்தசஷ்டி விரத காலங்கள்.

இப்போது வந்திருப்பது மூன்றாவது.

இது ஆயுட்காலத்திற்குமானதா என்ற மனப்போராட்டம் கடந்த ஒரு கிழமையாக நடந்து கொண்டிருக்கிறது.

அறிவு சொல்லும் நியாஜங்களை மனம் ஏற்றுக் கொள்ளாமையும்… மனம் சொல்லும் நியாஜயங்களை அறிவு ஏற்றுக் கொள்ளாமையும் மனித வாழ்வில் புதிதில்லையே!

*

காரீனுக்கு 40வது பிறந்தநாளும் இரண்டாவது திருமணமும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள புரட்டஸ்தாந்து தேவாலயத்தில் நடைபெற இருக்கின்றது.

கணவனாக வரப்போகும் ஹன்சுக்கு இது முதல் திருமண வைபவமே தவிர காரீன் அவரது முதல் மனைவி இல்லை.

இருபது வருடங்களாக தன் காதலியுடன் ஓன்றாக வாழ்ந்து இரண்டு பிள்ளைகளுக்கும் தந்தையாகி பின் 18ம் 16ம் வயதுடைய மகனும் மகளும் வீட்டை விட்டு தங்கள் தங்கள் காதலர்களுடனும் சென்ற பின்பு… புதிதாக பக்கத்து வீட்டுக்கு குடி வந்த ஒரு ஈரான்காரனின் ஈர்ப்பில் இருபது வருட தாம்பத்தியம் ஆட்டம் கண்ட பொழுது அவர் தனித்துப் போய்விட்டார்.

கோடை கால இறுதியில் குப்பை கூழங்களை கடற்கரையில் குவித்து… எரித்து… குதூகலிக்கும் சென்ற். ஹன்ஸ் மாலை என அழைக்கப்படும் தினமொன்றில் அதிக நேரமாக கடற்கரையில் இருந்து அந்த ஈரான்காரனுடன் வைன் குடித்துக் கொண்டிருந்த ஹன்சின் மனைவி அன்றிரவு அவனுடனேயே போய் விட்டாள்.

அவள் போன காயம் அடுத்ததடுத்த மாதங்களில் போய் விட்டாலும் அவள் போக முதல் சொன்ன வார்த்தைகள் தான் அவரை அதிக நாட்கள் வாட்டி எடுத்துக் கொண்டிருந்தன.

”இப்போது தான் முதன் முதலில் ஒரு ஆண்மகனைச் சந்தித்து இருக்கின்றேன்”

ஹன்சுக்கு கன்னத்தில் அறைந்தது போல இருந்தது

கணவனும் இறந்து ஒரே ஒரு மகளும் தன் காதலனுடன் கூடி வாழச் சென்ற பின்பு தனியே வாழ்ந்த கரீனா சென்ற ஆண்டு அவர்களின் நிறுவனத்தின் கிறிஸ்மஸ் கொண்டாத்தில் தான் முதன் முதலில் ஹன்சைச் சந்தித்தாள்.

டென்மார்க்கில் அதிக கிளைகளைக் கொண்ட நிறுவனம் அது. டென்மார்க்கின் சிறியதும் பெரியதுமான அனைத்து தீவுகளிலும் இருந்தும் அனைத்து திசைகளினதும் இருந்து அன்று வந்து கூடுவார்கள்.

முதன்நாள் மதியம் தொடங்கும் ஒன்று கூடல் அடுத்த நாள் காலைவரை தொடரும்.

அங்கு வழங்கப்படும் குடிவகைகளில் உள்ள அற்ககோல்களின் விகிதமும் 4வீதத்தில் தொடங்கி 40வீதம் வரை அதிகரித்துச் செல்லும்.

இரவுப்படுக்கை நேரத்தை அவரவர்களே தீர்மானித்துக் கொள்வார்கள்.

அவ்வாறான ஒரு கொண்டாட்ட தினத்தில்தான் ஹன்சும் கரீனாவும் தங்கள் மனங்களையும் அறைகளையும்; பரிமாறிக் கொண்டார்கள்.

அடுத்த ஆறு மாதம் தொலைபேசிகளில் தொடர்ந்த உறவு பின்பு சனி ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஒன்றாக வாழ்ந்து பார்த்து… அதுவே பிடித்துப் போன பின்பு எதற்காக இரண்டு வீட்டிற்கு வாடகை… இரண்டு சமையல்கள்… இரண்டு தொலைக்காட்சி லைசென்சுகள்… என இரண்டு இரண்டாக செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தினால் ஒன்றாக வாழ்வது என முடிவெடுத்துக் கொண்டார்கள்.

கரீனா அடிக்கடி சொல்லும், ”யூ ஆர் ஏ ஜென்ரில்மன்” என்ற வார்த்தை அவருக்கு மிக இதமாகவும் பழைய காயங்களுக்கு களிம்பு போடுவதாயும் இருந்தது.

வாழ்வு கற்றுக் கொடுக்கும் கசப்பான அனுபவங்களினால் இரசிக்க மறந்து போன நான்கு கால இயற்கையின் அழகை இருவருமே இரசிக்கத் தொடங்கினார்கள்.

எந்த மை கலவையாலும் கொண்டு வர முடியாத மரங்களின் பசிய குருத்து இலைகள்… தம் மக்கள் மழலையும் தாண்டிய குருவிகளின் ’கூ’க்கு ஓசைகளுடன் கூடிவரும் இலைதளிர் காலம்.

ஆடைகளே பாரமாக அவற்றைத் திறந்த மானிட அழகுகள்… கடற்கரைகள்… குதூகலங்கள்… ஒன்று கூடல்கள்…. வீதியெங்கும் மணக்கும் இறைச்சி வாட்டல்கள்…. என கோடை வெயில் மனத்துக்குள் பூக்கள் விரிக்கும்.

இலைகள் பழுப்பாகி… சிலதுகள் விழ சிலதுகள் தொங்க… காட்டு வழிப்பாதையெல்லாம் வண்ண வண்ண காளான்கள் முளைத்திருக்க… கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்ல… முட்டையிட்ட பறவைகளின் தாய்மைக் குரல்கள் ஒளிக்க…. அந்திமக் கால இலையுதிர்காலம். மௌனமாக கூதல் காற்றுடன் வந்திறங்கும் பனி காலம் மெல்லிய வெள்ளாடையை மேதினிக்கே போர்த்து விட்டது போல இருக்கும். வானத்தில் இருந்து இறங்கும் பனி மழையும் அதில் சந்திரனின் ஒளி தெறித்து இரவையும் பகலாக்கும் நிலவையும் இரண்டு கண்கள் இரசிப்பதை விட நிச்சயம் இரண்டு காதலர்களின் நான்கு கண்கள் அதிகமாமகவே இரசிக்கும்.

இது கரீனாவின் கண்களாயும் இருந்தது. ஹன்சின் கண்களாயும் இருந்தது.

அவ்வாறான ஒரு இரவில் யன்னல் கரையோரம் நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்த கரீனாவின் இடையை பின்னால் வந்த ஹன்சின் கைகள் அணைத்தபடி, ”நாங்கள் திருமணம் செய்து கொள்வாமா” என்று கேட்டான்.

கரீனாவுக்கு காதினுள் பனி பொழிந்தது.

”உண்மையாகவா?”

மெதுவாக திரும்பி அவனது கண்களுக்குள் சிறைப்பட்டுக் கொண்டாள்.

”ஆம்… இந்த தேவதையுடன்…” ஹன்சன் தொடக்கிய வார்த்தையை,

”இந்த ஜென்ரில்மென் கை கோர்க்கப் போகின்றாரா?”இ கரீனா வார்த்தைகளை முடித்க முன் அவளைத் அணைத்தபடியே வந்து சோபாவில் வந்தமர்ந்து அன்றிரவு முழுக்க தன் திருமணம் எவ்வாறு நடைபெற வேண்டும் என பேசிக் கொண்டேயிருந்தான்.

திருமணத்திற்கு தனது இரண்டு பிள்ளைகளையும் கரீனாவின் மகளையும் மருமகனையும் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என கிட்டத் தட்ட 60 பேரை அழைப்பது… முதன் நாள் மாலை தொடக்கம் அடுத்தநாள் மதியம் வரை அனைவரும் ஒன்றாக ஒரே ஹோட்டலில் தங்குவது என தன் எண்ணங்களை ஹன்ஸ் வரைந்து கொண்டே போனான்.

கரீனாக்கு எது தான் கதை;தாலும் அழுது வெடித்துவிடுவேன் என்ற அச்சத்தில் ’ஆம்’ என்ற தலையாட்டலைத் தவிர வேறு பதில் ஏதும் இருக்கவில்லை.

அன்றிரவு தூங்கியும் தூங்காத இரவாக இருவருக்கும் கழிந்தது.

*
திருமண ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு திருமணத்திற்கு அடுத்த நாள் நைல்நதிக்கரையில் ஒரு வாரம் விடுமுறை எடுத்து தங்கியிருப்பதற்கான விமான ரிக்கற் மற்றும் தங்குவிடுதி வசதிகள் எல்லாம் ஒழுங்கு செய்தாயிற்று.

சரியாக இரண்டு கிழமைகள் இருந்தது.

திங்கள் போய் செவ்வாய் மாறி வரும் நடுநிசியில் கரீனாவின் மகளின் தொலைபேசி அழைப்பு வந்தது.

செய்தியைச் சொல்ல முதலே அழுகை வெடித்தது.

மருமகன் ஒரு கார் விபத்தில்….

மகளின் வாழ்வின் இந்த அத்தியாயத்தை ஒரு கார் விபத்து ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விட்டிருந்தது.

கரீனாவும் ஹன்சனும் உடனேயே காரில் புறப்பட்டு அதிகாலையில் மகள் வீட்டை வந்தடைந்தார்கள்.

சோபாவில் மகள்.

அவளின் மடியில் மூன்று வயதும் ஒரு வயதுமான பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். குரலெடுத்து அழப்புறப்பட்ட கரீனாவை ”பிள்ளைகள் பயந்து எழுந்து விடுவார்கள்” என மகள் சைகை மூலம் காட்டி நிறுத்தினாள்.

கரீனா மகளை அணைத்துக் கொண்டு ஒரு குழந்தையை வாங்கி தன் மடியில் கிடத்திக் கொண்டாள்.

இரவு அழுது அழுது கொண்டு மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.

அடுத்த நாள் மரணவீட்டை பொறுப்பெடுத்து செய்யும் நிறுவனத்தினர்… தேவாலய பாதிரியார்… சில நண்பர்கள்… அக்கம் பக்கத்தில் உள்ள சில தமிழர்கள் எல்லோரும் வந்து போனார்கள். மதிய இரவு உணவை ஹன்ஸ் கடையில் சென்று வாங்கி வந்து அனைவருக்கும் பரிமாறினார்.

தொடர்ந்து வரும் சனிக்கிழமை இறுதிச் சடங்கிற்கான ஆயத்தம் செய்வதாக முடிவெடுத்தார்கள். க

ரீனா வெள்ளிவரை அங்கேயே தங்கி நிற்க ஹன்ஸ் தனது அலுவலக வேலைகளைப் பார்ப்பதற்காகவும்… இரண்டு கிழமையால் நடைபெறவிருக்கும் திருமண அலுவல்களைப் பார்ப்பதற்காகவும் செவ்வாய் அன்று மாலையே மீண்டும் திரும்பி வருவாதாக கூறி தனது நகரத்திற்கு திரும்பினார்.

தொடர்ந்து வந்த சனி காலை பத்து மணிக்கு தேவாலயத்தின் மரணச் செய்திக்கான மணி ஒலிக்கப்பட்டதைத் தொடர்ந்து இறுதிச் சடங்கிற்கான திருப்பலிப்பூஜையும் கொடுக்கப்பட்டு மண்ணிலிருந்து வந்தவரை மன்ணுடனேயே செல்ல உரிமைக்காரர் முதலில் மூன்று பிடி மண் போட… பின்பு மற்றவர்களும் தொடர்ந்தார்கள்.

தொடர்ந்து தேவாலயத்திற்கு அருகேயுள்ள சிறிய மண்டபத்தில் அனைவரும் தேனீரும் கோப்பியும் கேக்கும் பகிர்ந்துண்டு கொண்டிருந்த பொழுது கரீனாவின் வேலையிடத்து நண்பரான ரவிச்சந்திரன் கரீனாhவிடம் மெதுவாகக் கேட்டார், ”அடுத்த கிழமை நடக்க திட்டமிட்டிருந்த தங்கள் திருமணம் என்ன மாதிரி?….” என்று கேள்ளியை இழுத்தார்.

”அது திட்டமிட்டபடியே நடைபெறும். ஹன்ஸ் இதற்காக கடந்த ஒரு மாதமாக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்;?” கரீனா பதில் சொன்னாள்.

அதன் பின்பு ரவிச்சந்திரன் எதுவும் கேட்கவில்லை.

மண்டபத்தில் இருந்த அனைவரும் ”;அடுத்த கிழமை சந்திப்போம்” என்றவாறு கைகளைக் குலுக்கியபடி மெது மெதுவாக தத்தம் வீடுகளுக்கு திரும்பினார்கள்.

*
லக்சுமி அக்காவும் குமாரசாமி அண்ணையும் எவ்வாறு ஊருக்கெல்லாம் அக்காவும் அண்ணாவுமாய் இருந்தார்களோ அவ்வாறே அவர்களின் மகன் சுந்தரேசனும் ஊருக்கெல்லாம் மகனாய் இருந்தான்.

அவனது கல்வி, அது கொடுத்த நல்ல பதவி, இரண்டும் கொடுத்த அடக்கம், இளமையின் துடிப்பு, யாருக்கு என்ன ஏது என்றாலும் அந்த வட்டாரத்தில் சுந்தரேசனைக் கேட்டே நடக்கும் என்றளவில் அவன் இளையோரிடத்தும் பெரியோரிடத்தும் நன்மதிப்பைப் பெற்றிருந்தான். கூடவே பழைய மாணவர் சங்கத் தலைவனாக பாடசாலையின் வளர்ச்சிக்காகவும் ஊர் நூலகத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டுக் கொண்டே இருப்பான்.

அவனின் வழிகாட்டலில் எதுவே தப்பித்தது இல்லை.

யாழ்ப்பாண இடம் பெயர்வு தொடக்கம் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர்வரை ஊர் மக்களுக்கு என்ன என்ன உதவிகள் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்து வந்தான். இதனால்தான் என்னவோ திருமணப் பேச்சு வந்து ஊரே அவனை மருமகனாக்க ஆசைப்பட்டதில் வியப்பு ஏதுமிருக்கவில்லை.

பெண் பார்க்க அவனை அழைத்த பொழுது, ”ஒரு பெண்ணைப் பார்த்து இவள் எனக்கு பொருத்தம் இல்லை என்று சொல்லுற தகுதி எனக்கில்லை. மேலாக என்னைப் பார்த்து ஒரு பெண் பிடிக்கவில்லை என்றால் எனக்கு எப்படி வலிக்குமோ அப்பிடித்தான் அவளை நான் வேண்டாம் என்றால் எனக்கும் வலிக்கும. நீங்களாக பார்த்து யாரைக் கட்டிக்க சொன்னாலும் நான் கட்டி நானும் நல்லாய் இருப்;பேன். அவளையும் நல்லாய் வைச்சிருப்பேன்” என அவன் சொன்ன பொழுது உறவினர்கள் எல்லாரும் பூப்போட்டுக் கும்பிடாத குறையாக அவனைக் கும்பிட்டார்கள்.

இதனை அறிந்த சம்பந்தபகுதி கூட, ”வருகிற மருமகன் எங்களைப் பின்னடியிலை பார்ப்பாரோ என்ற தயக்கத்தில் தான் வீடு வளவு எல்லாத்தையும் சீவிய உரிமை வைத்து எழுதுறதாய் இருந்தம். இனி அப்பிடி எழுதினால் எங்கடை மாப்பிள்ளையை நாங்கள் மகனாய் பார்க்கேல்லை. மருமகனாக பார்க்கின்றோம் என்று அர்த்தம்” என கன்னிகாதானம் செய்த பொழுது அவர்களின் அனைத்துச் சொத்தையும் சேர்த்து கையளித்தார்கள்.

ஊரே இதுவரை கண்டிராத திருமணம் எனவும் சொல்லலாம். ஊர் கண்பட்ட திருமணம் என்றும் சொல்லலாம்.

அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளில் அழகான ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் அவனை தந்தை ஸ்தானத்துக்கு உயர்த்தினார்கள்.

வாழ்வின் நிறைவு இதுதான் என அவனும் மனைவியும் மனம் நிறைந்து பானை பொங்கிய பொழுது முன்னால் சென்ற லொறி திடீர் பிரேக் போட்டதால் பின்னால் சென்று சுந்தரேசனின் கார் அதில் மோதியதால் அனைத்துமே உடைந்து விட்டது.

எல்லாமுமாய் இருந்த வாழ்வு அனைவருக்கும் எதுவுமில்லாமல் போய் விட்டது.

ஊரின் ஒவ்வோர் வீடும் மரணவீடாக மாறியது.

சாவீடு… ஆட்டத் திவசம்… அந்தியேட்டி வரை மருமகள் வீட்டுடனே குமாரசாமி அண்ணையும் லக்சுமி அக்காவும் தங்கியிருந்து அனைத்துக் காரியங்களையும் பார்த்து விட்டு நேற்றுத் தான் வீட்டை திரும்பி வந்தார்கள். வீடு வந்தாலும் உற்றார் உறவினர்கள் வந்து ஆறுதலுக்கு இருந்து கதைப்பதுவும் கவலைப்படுவதும் குறையவேயில்லை.

பக்கத்து வீட்டு பறுவதம் அக்கா… சிவபாக்கியம் அக்கா ஆகியோர் வந்து போவோர்களுக்கு தேனீர் கொடுத்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். நிலவு மேலே போக போக உறவினர்களும் மெதுமெதுவாக அகன்று போக குமாரசாமி அண்ணை கட்டிலை விரித்தார். அறைக்குள் வந்த லக்சுமியக்கா, ”அந்த பச்சைமண் தாலி அறுத்துப் போட்டு இருக்க நாங்கள் எப்படி ஒன்றாக படுக்கிறது” என்ற பொழுது அதிர்ந்து போய் நின்றார் குமாரசாமி அண்ணா.

ஆனாலும் தன்னை சுதாகரித்துக் கொண்டு போய் திண்ணையில் போய் இருந்து நலவு காலித்துக் கொண்டிருந்த வானத்தைப் பார்த்தபடியே இருந்தார்.

வானம் வெறிச்சோடிக் கிடந்தது. மிக தூரத்தில் கட்டாக்காலி நாய்கள் குலைப்பது கேட்டுக் கொண்டிருந்தது.

பின்பு அதுவே மாறி ஒன்று ஊளையிடத் தொடங்க மற்ற நாய்களும் அதனைத் தொடர்ந்து ஊளையிடத் தொடங்கின.

மனம் எந்தவொரு இடத்திலும் நிற்காமால் குமாரசாமி அண்ணை ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தார்.

லக்சுமியக்கா அறை வாசலிலேயே தூங்கி விட்டா. குமாரசாமி அண்ணை என்ன நினைத்தாரோ,” லட்சுமி…..” என மெதுவாக அழைத்தார். ”என்னப்பா… நித்திரை கொள்ளேல்லையோ….” ”ஒரே யோசினை… நித்திரை வரேல்லை… அதுதான்…”

”சொல்லுங்கோ”

”நீயும் நானும் வாழ்ந்து முடிச்சிட்டம். நாங்கள் ஒண்டாய் படுத்தாலும் தள்ளி தள்ளி படுத்தாலும் பறவாயில்லை… ஆனால் நீ சொன்னதிற்கு பிறகு அந்த பச்சை மண்ணைப் பற்றி யோசித்துப் பார்த்தன்”

லக்சுமி அக்கா எழுந்து சுவரில் சாய்ந்திருந்தபடியே குமாரசாமி அண்ணை என்ன சொல்ல வருகின்றார் என வியப்பாகப் பார்த்தார்.

”இன்னும் ஒரு வருசத்திலை தம்பியன்ரை ஆட்டத்திவசம் முடிய அந்தப் பிள்ளையை யாரோ ஒரு நல்லவன்ரை கையிலை பிடிச்சுக் கொடுக்க வேணும்” லக்சுமி அக்காவின் கன்னங்களில் கண்ணீர் ஓடியது நிலவு வெளிச்சத்தில் நன்கு தெரிந்தது.

குமாரசாமியாருக்குள் தன் மகனைக் கண்டார் லக்சுமி அக்கா.

(முற்றும்)

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)