இரண்டு கண்கள் – சிறுகதை

இரண்டு கண்கள் – சிறுகதை

இது ஜீவகுமாரனின் சிறுகதையா? அல்லது ஜீவகுமாரனின் கதையா என்பது அல்ல கேள்வி.

அவரின் இரண்டு கண்களிலும் ஒரேவேளையில் எவ்வாறு இரண்டு வௌ;வேறு பெண்கள் தோன்றினார்கள் என்பது தான் கேள்வி.

ஒருவர் கோயிலில் பூக்கட்டிக் கொண்டு… மற்றவர் சந்தையில் மீன் விற்றுக் கொண்டு..

இது அதிசயம் தான்.

நாம் அறிந்திராத அல்லது அனுபவித்த ஒன்றைச் சந்திக்கும் பொழுதுதானே அதனை அதிசயம் என்று சொல்லுகின்றோம்.

*

நாகரத்தினம்!

இந்தப் பெயர் ஆண்களினுடையதா அல்லது பெண்களினதுடையதா என்ற ஆராய்ச்சி எனக்கு அறிவு தெரிந்த காலம் முதல் தொடங்கி விட்டது.

காரணம் நாகரத்தினம் என்பது அதிகமாக ஆண்களின் பெயர்கள் என அறியப்பட்டிருந்த வேளையில் ”வேவி” எனவே நினைத்திருந்த என் அம்மாவின் பெயர்; நாகரத்தினம் என கூப்பன் அட்டையில் தெளிவாக எழுதப்பட்டிருந்தது.

அப்போது நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

அம்மாவிடமே கேட்டேன்.

”ஆம்” என்றார்.

”ஏன் ஆம்பிளைப் பெயர் உங்களுக்கு?” இடுப்பில் கை வைத்துக் கொண்டு கேட்டேன்.

”மூத்த அக்காக்கு தங்கரத்தினம்.. இரண்டாவது அக்காக்கு இரத்தினம்… எனக்கு நாகரத்தினம் என உன் அம்மப்பா வைச்சிட்டார்”

”அவருக்கு டேஸ்டே இல்லையம்மா… நான் என்றால் என்ன சுப்பராய் வைச்சிருப்பேன்” எனச் சொல்லிக் கொண்டே அம்மா சுட்டு வைத்திருந்த பனங்கிழங்கைகளை கிட்டி விளையாட வந்திருந்த எனது நண்பர்களுக்கும் எடுத்துக் கொண்டு ஓடிப் போனது எனக்கு நல்ல ஞாபகம்.

இதே அம்மா எனக்கு காதல் திருமணம் ஆன பொழுது என் மனைவியின் பெயர் ”குலமங்களேஸ்வரி” என்று நான் சொன்னபோது தனது கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டு, ”நல்ல ஸ்டையிலான பெயர்” என சொன்ன பொழுது பொழுது நினைத்துக் கொண்டேன் – இத்தனை வருடங்களுக்குப் பின் அம்மா என்னை பழி வாங்கி விட்டா என்று – ராஜீவ்காந்தியின் கொலையும் 18 வருடங்களுக்கு பின்பு நடந்த இனப்படுகொலையும் போல.

அம்மாக்கும் எனக்கும் இ;ப்படி சின்ன சின்ன உரசல்களும் ஊடல்களும் வந்து போனாலும் எல்லோருக்கும் போல என் அம்மா என் அம்மாதான்.

தங்கச்சி பிறந்திருந்த பொழுது அவருக்காக செய்திருந்த சரக்குகறியில் இருந்த கோழித்துண்டுகளை எனக்கு ஊட்டி ஊட்டி விட்டு அவர் வெறுமே சோற்றை உண்டது… பள்ளிக் கூட நாடகத்தில் அரச வேடத்திற்காக தனது கூறைச் சேலையை உடுக்க தந்து அதை நான் கிழித்துக் கொண்டு வந்த போது ”நீ வளர்ந்து அம்மாக்கு வாங்கித் தருவாய் தானே எனச் சொன்னது”, வெளிநாட்டுக்கு போக காசு தேவை வந்த பொழுது தனது சீதனக் காணியை ஈடு வைத்தும் போதாமைக்கு தனது தாலிக் கொடியையும் விற்று… ஏணிப்படிகளின் ஒவ்வோர் படியிலும் என்னை ஏற்றி விட்டுக் கொண்டு வந்தவர் அவர்.

ஓவ்வோர் ஆண்டு இறுதிச் சோதனைகள் வரும் பொழுது ஒவ்வோர் தெய்வத்துக்கும் ஒவ்வோர் வகையான நேர்த்திக் கடன்கள்… பொங்கல்கள்…

நடுத்தரச் சோதனை என்றால் வெள்ளிக் கிழமைப் பூசை மட்டும்… அதுவே வருடாந்த சோதனை என்றால் மார்கழித் திருவெம்பா பூஜை… உயர்தரப் பரீட்சை என்றால் மருதடிக்கு 1001 மோதகமும் ஊர் அம்மாளாச்சிக்கு கோவிலில் அன்னதானமும்…. அன்று எங்கள் சொந்தங்களும் 7ம் வட்டாராமும் கோவிலில் நிறைந்திருப்பார்கள்.

எனது முன்னேற்றம் எல்லாவற்றிற்கும் தான் கும்பிடும் தெய்வங்கள் தான் முழு முதற்காரணம் என நம்பியிருந்தவா. நானும் அந்த நம்பிக்கையைக் குழப்பவில்லை. அவரது தெய்வங்களும் தரப்படுத்தல் வரும் வரை எதையும் குழப்பவில்லை.

அம்மாவின் இறைபக்தி எங்கள் வட்டாரமே அறிந்தது தான். கோயில் திருவிழாக்கள் என்று வந்து விட்டால் கொடியேற்றத்திற்கு முதன்நாள் வீட்டின் பின்னே தலைகவிழும் சட்டிகள் பூங்காவனத்துக்கு அடுத்த நாள் தான் தலை நிமிரும்.

எங்கள் வீட்டு நாய் குட்டியும் பூனையும் கூட சில வேளை பக்கத்து பக்கத்து வீடுகளுக்கு சென்று விடுவார்கள். சிலவேளை நானும் தங்கச்சியும் அன்ரி வீட்டுக்கு போய் நல்ல வெட்டு வெட்டிவிட்டு நல்ல பிள்ளைகள் போல சப்பாணி கட்டிக் கொண்டு வாழையிலையில் பருப்புடனும் உருளைக்கிழங்குடனும் மரவள்ளிக் கிழங்குடனும் அப்பா அம்மாவுடன் அமர்ந்திருப்போம்;.

அம்மாவின் விரதங்களிலே பார்க்க மிகக் கஷ்ட்டமானது கந்தசஷ்டி தான்.

ஆறுநாளும் இரவில் பாலும் பழமும் மட்டும் தான். சூரன்போர் முடிந்து அடுத்தநாள் பாறணை அன்று அதிகாலையில் வீட்;டில் சமைத்து வைத்து விட்டு கோயிலுக்கு சென்று ஐயருக்கு தானம் கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்து அண்டை அயல்கள் எல்லோரையும் அழைத்து அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு தனது விரதத்தை முடித்துக் கொள்வார்.

பாடசாலை நாட்கள் ஆயின் அன்று எனக்கும் தங்கச்சிக்கும் லீவு தான். பின் அடுத்த நாள் ”எனது மகன் சுகவீனம் காரணமாக நேற்று பாடசாலை வர முடியவில்லை” எழுதி வைக்கப்பட்டிருக்கும் கடிதத்துடன் பாடசாலை செல்வோம். அவ்வாறே கந்தசஷ்டி இனிது நிறைவேறும்.

கந்தசஷ்டி விரதமும் அம்மாவின் பெயர் நாகரத்தினம் என்னும் பொழுது எனக்கு ஞாபகம் வரும் இன்னோர் பெண் நபர் மீன்கார நாகரத்தினம்.

சுமார் பத்து மணிக்கு கூடும் எங்கள் மீன் சந்தையில் கணவன்மார் கொண்டு வந்து கொடுக்கும் மீன்களை கூறுபோட்டு விற்கும் பெண்களின் மொழிநடையில் அதிகம் நான் கவரப்பட்டிருந்த காலம். மரக்கறி சந்யையில் அவ்வாறான மொழிநடையைச் சந்திக்க முடியாது.

”வா ராசா.. என்ன வேணும்… நல்ல வெங்காயம் இருக்கு… கீரைப் பிடி இருக்கு” இவ்வாறுதான் மரக்கறிச் சம்பாஷணைகள் இருக்கும்.

ஆனால் மீன் சந்தையிலோ அது ஒரு ரகமாக இருக்கும். தூஷணம் கூட ஒரு இலக்கிய இலக்கணத்துடன் வரும்.

சனி ஞாயிறுகளில் 50 சதத்திற்கு இறால் வேண்ட அனுப்பினால் கூட சந்தை முழுக்க அவர்களின் பாஷை பரிவர்தனைகளை கேட்டு விட்டு பின்பு வீட்டை வர 1½ அல்லது 2 மணித்தியாலங்கள் எடுக்கும். அதனை கேட்பதில் அப்படியொரு ரசனை – முழுக்க முழுக்க சமுதாயத்தினால் ஏற்க முடியாததும் அதே வேளை புறக்கணிக்க முடியாததுமான சில பாலச்சந்தரின் திரைப்படங்கள்போல அந்த சம்பாஷணைகள் அமைந்திருக்கும்.

அப்படித்தான் ஒரு நாள்.

ஒரு சனி. அட்வான்ஸ் லெவல் படித்துக் கொண்டிருந்தேன்.

89 அல்லது 90ம் ஆண்டு என நினைக்கின்றேன்.

அம்மா 3 ரூபாய் தந்து “உனக்கு எனது விருப்பமோ அதனை வாங்கி வா” என அனுப்பினார்.

நானும் சந்தோசமாய் பிளாஸ்டிக் பாக்கினுள் பனையோலையாலான உமலை வைத்துக் கொண்டு போனேன்.

முதல் எதுவும் வேண்டாமல் ஒரு தடவை சந்தையைச் சுற்றி வந்தேன்.

அன்று மெல்லிய குளிரும். சிறிய மழைத்தூவலும் வேறு.

அடுத்த தடவை சுற்றி வந்த பொழுது நாகரத்தினம் மிக அழகாக ஐந்து நீலக்கால் நண்டுகளை தன் முன்னே பரப்பி வைத்திருந்தா.

அதனை ரசித்துப் பார்த்துக் கொண்டு நின்றேன்.

நாகரத்த்pனம் ஒரு பெரிய திருக்ககை துண்டை தன் கைகளால் தராசு இல்லாமலே எடை போட்டு… தானே புன்முறுவல் பூத்து ” எப்படியும் 3 கிலோ தேறும்” என தன் விற்பனைத் திறனைஇன்னொருவரிடம் காட்டிக் கொண்டு இருந்தார்.

”கிலோ சரி… விலை தான் கொஞ்சம்…” வாங்க வந்தவர் இழுத்தார்.

”நாளைக்கு வாங்கோ… வேண்டிக் கொண்டு போகலாம்” என்று விட்டு திருக்கையை அப்படியே கோபத்துடன் தராசு தட்டில் போட்டார்.

அது நாலு கிலோ காட்டியது.

வந்தவர் பேச்சு மூச்சு இல்லாமல் காசைக் கொடுத்து விட்டுப் போனார்.

”எல்லாம் நிருபிக்க வேணும்…. எப்பிடித்தான் வீட்டுக்காரி குடும்பம் நடத்துறாளோ” என்றபடி என் பக்கம் திரும்பினார்.

”பெரியவருக்கு என்ன வேணுமாம்”

திருக்கை வேண்டியவரிடம் கொண்ட கோபம் தீரவில்லைப் போலும்.

எனக்கு ஏனோ உடம்பு நடுங்கியது.

”நண்டு”

”அதிகாலை பிடிச்சது. இன்னும் செத்திராது. சதையும் கரைஞ்சிராது ராசா”

”என்ன விலை”

”எட்டு ரூபா விக்கும்… பிள்ளைக்கு என்றபடியாலை 6 ரூபா”

”மூன்று ரூபா தரட்டோ” சொற்கள் சிக்கலடித்தன.

அவர் அத்தனை நண்டுகளையும் தனக்கு கிட்டவாக இழுத்து வைத்துக் கொண்டு ”தம்பி சட்டி கழுவி வைச்சுப் போட்டோ வந்தனீர்” என்றதும் சுற்றி நின்றவர்கள் அனைவரும் ’கொல்’எனச் சிரித்தனர்.

எனக்கு அவமானத்தால் உடம்பு குறுகியது.

மெதுவாக நடையை கட்ட வெளிக்கிட,

”நண்டு நறுநறுக்க…

பெண்டில் புறுபுறுக்க…”

என்று தொடங்கி பின்பு மிகத் தூஷணமாக வரும் மற்ற இருவரிகள் என் காதுகளுக்கு கேட்க முதல் சந்தையை விட்டு ஓடியே வந்து விட்டேன்.

3 ரூபா காசையும் எங்கே விழுத்தி விட்டேன்.

வேலியில் இருந்த முருங்கைக்காய்தான் அன்று எங்கள் வீட்டில் குழம்பானது.

*

இதற்கு அடுத்த அடுத்த நாள் அம்மா மீன் சந்தைக்குப் போகச் சொன்னாலும்; ஏதோ சாட்டுகள் சொல்லி தவிர்த்;து வந்தேன் என்பது ஞாபகம் வருகிறது.

என்னதான் தவிர்த்து வந்தாலும் தினசரிப் பத்திரிகைகளில் இன்றைய நாள் எப்படிப் பகுதிகளில் காணும் கடக ராசிக்கான நண்டின் படமும்…. ஆனந்த விகடனில் வரும் வரும் நண்டு மார்க் லுங்கிகளின் விளம்பரமும்…. பஸ் நிலையத்தில் நிற்கும் பொழுது துரத்தே தெரியும் மீன் சந்தையையும் தவிர்க்க முடியாமலே இருந்தது.

நல்ல காலம் அடுத்த கிழமை முருகன் கந்தசஷ்டி விரத வடிவில் வந்து என்னைக் காப்பாற்றினார்.

அம்மா பாலும் பழமும் சாப்பிடும் அந்த ஆறு நாளும் சரி விரதத்தை முடித்து வைக்கும் அடுத்தநாள் வரும் பாறணை தினமும் சரி இந்த ஏழுநாட்களும் மாமிசச் சட்டிகள் வீட்டின் பின்புறத்தில் கவிட்டே வைத்திருக்கப்படும்.

மாமிசம் இல்லாமல் மரக்கறியை மெண்டு விழுங்குவது கஷ்டமாய் இருந்தாலும் நாகரத்தினத்தின் கண்களில் முழிக்காமல் இருப்பது மனதுக்கு நிம்மதியாய் இருந்தது.

அம்மா பாவம்! மரக்கறி எங்களுக்கு இறங்குவது கஷ்டம் என்று தெரிந்தபடியால் இந்த நாட்களில் அப்பளம், மோர் மிளகாய், வடகம், பலாக்கொட்டை, சுண்டங்கத்திரிக்காய் என பல பொரியல்கள் செய்வார்.

அதனைத் தவிர இரவில் தன்னுடன் பாலும் பழமும் நாமும் சேர்;ந்து உண்ண வேண்டும் என்று அதிகமாகவே பழங்கள் வாங்கியிருப்பா. இப்பவும் விளாம்பழத்தினுள் சக்கரை போட்ட தித்திப்பு நுனி நாக்கில் சுவைக்கின்றது.

ஒரு மாதிரி ஐந்து நாட்களை வீட்டில் ஓட்டி விட்டோம்.

இன்னும் இரண்டு நாட்கள் தான் பாக்கி.

அன்று சனிக்கிழமை.

யாழ்ப்பாண பஸ் நிலைய கந்தோரில் வேலை செய்யும் அப்பா ஓவர்ரைம் செய்ய வேண்டி இருந்ததால் தனக்கு சாப்பாடு அனுப்பும்படி சொல்லி விட்டிருந்தார். நடத்துனராய்; வேலை செய்யும் பக்கத்து வீட்டு பரமண்ணை வந்து சொல்லி விட்டுப் போயிருந்தார்.

அவர் வந்து சொல்லும் பொழுதே மணி 1 ஆயிற்று. அம்மா அவசர அவசரமாக எல்லாவற்றையும் ஆக்கி முடித்து என்னைக் கொண்டே பின் வளவில் வாழையிலை வெட்டிவித்து அதனை வாட்டி சாப்பாட்டு பாசலை அழகாக கட்டி முடித்தார். சின்ன சின்ன போத்தல்களில் சொதியும் குழம்பும் தனித் தனியாக.

சைக்கிளில் விரைந்து எங்கள் பஸ்நிலையத்துக்கு விரைந்தேன்.

அங்கு யாழ்ப்பாணம் செல்லும் எந்த பஸ் ரைவரிடம் சாப்பாட்டு பாசலைக் கொடுத்தாலும் போதும். அது அப்பாவிடம் சேர்ப்பிக்கப்பட்டு விடும்.

எங்கள் ஒழுங்கையால் மிதந்து றோட்டுக்கு இறங்கும் நேரம் பின் சில்லின் காற்று குறைந்து இடித்தது.

ஓட்டை விழுந்திருக்கலாம். ஆனால் சைக்கிள் கடைக்கு போக அது நேரமில்லை.

வியர்க்க வியர்க்க காற்றை அடித்துக் கொண்டு மீண்டும் சைக்கிளில் ஏறி ஓடினேன்.

மணி வேறு இரண்டு மணியாகிக் கொண்டிருந்தது.

“அப்பா பாவம்…! பசிக்கப் போகுது!!”, என மனம் சொல்லிக் கொண்டது.

பஸ் நிலையத்தை மட்டு மட்டாக அடையும் பொழுது கீரிமலை-யாழ்ப்பாண பஸ் புறப்பட்டு விட்டது.

நான் கையைக் காட்டியும் பஸ் ரைவர் கவனிக்கவில்லை.

இனி காரைநகர் – யாழ்பாண பஸ்சுக்கு காத்திருக்க வேண்;டும்.

போய் வாங்கில் உட்கார்ந்து கொண்டு பஸ்நிலைய சுவர்களிலும் கூரைகளிலும் ஒட்டியிருந்த புதிய பழைய நோட்டீஸ்களை பார்த்துக் கொண்டு இருந்தேன்.

அவற்றில் பல நிறம் மாறியிருந்தன.

அடுத்த நாள் முருகன்கோவிலில் நடக்க இருக்கும் சூரன்போர் பற்றியதும் அதில் ஒன்று.

வழமைபோல அடியார்கள் வந்து முருகனின் அருளைப் பெற்றுச் செல்லுங்கள்… இத்தியாதி இத்தியாதி பழக்கப்பட்ட வாசகங்களாகவே இருந்தது. கொஞ்சம் மாற்றி எழுதலாமே என என் சின்னவயது மனசு சொன்னது.

பஸ் நிலையத்தின் அமைதியைக் குலைப்பது போல ஏழெட்டு பெண்கள் பலத்த குரலில் கதைத்துக் கொண்டு வருவது என் பின்னால் கேட்டது.

தெரிந்த குரல்கள் போலவும் இருக்கவே மெதுவாக தலையைத் திருப்பி பார்த்தேன்.

மீன் சந்தையில் இருந்து நாகரத்தினம் உட்பட வியாபாரம் முடித்த பின்பு பொன்னாலை, காரைநகர்ப்பக்கம் செல்வதற்காக வந்து கொண்டு இருந்தார்கள்.

நான் மெதுவாக தலையைக் குனிந்து கொண்டேன்.

நிச்சயமாக எனக்குத் தெரியும் – நாகரத்தினம் என்னை ஞாபகம் வைத்துக் கொண்டு இருக்கப் போவதிலலை என்று. ஆனாலும் மனதுள் ஒரு….

என்னைப் போல் எத்தனை பேர் நாகரத்திடம் தினம் தினம் வாழ்த்துப் பெறுபவர்கள் – அத்தனை பேரையுமா அவரால் நினைவில் வைத்திருக்க முடியும்?

பஸ் நிலையத்துக்கு வந்த அனைவரும் வாங்குகள் இருந்த பொழுதும் நிலத்தில் சுற்றிவர இருந்து கொண்டு தங்கள் சம்பாஷனைகளைத் தொடர்ந்தார்கள்.

ஆனால் அவர்களின் கடகங்களின் மணம் மட்டும் மூச்சைத் திணற வைத்தது.

கொஞ்சம் எழுந்து போய் அப்பால் அமர்ந்து கொண்டேன்.

ஆனால் காதுகள் மட்டும் அவர்களிடம் – பொழுது போக வேண்டுமே!

அனைவரின் குரல்களிலும் இருந்து நாகரத்தினத்தின் குரல் சற்று வித்தியாசமானதாயும் மேலோங்கியும் இருந்தது.

“என்னென்டு அக்கா இந்த ஐந்து நாளும் மூன்று மிளகோடையும் மூன்று மிடறு தண்ணீரோடையும் சமாளித்தனி”

எனக்கு ‘திக்’ என்றது.

கந்தசஷ்டி விரத்தைப் பற்றித்தான் கதைக்கின்றார்கள் என்பது உறுதியாயிற்று.

“முதல் இரண்டு நாளும்தான் கஷ்டமாய் இருக்கும். பிறகு எல்லாம் பழகிப் போயிடும். இனி நாளை ஒரு பொழுதுதானே?”

இது நாகரத்தினத்தின் குரலே.

”ஏனக்கா தொடர்ந்து பிடிக்கிறாய். சிலபேர் ஐஞ்சாறு வருசத்திலை நிற்பாட்டுறவைதானே?”

”என்னெண்டு நிற்பாட்டுறது… கட்டி ஐஞ்சு வருசமும் ஒரு புழுப்பூச்சியும் இல்லாமல் இருந்து இது பிடிக்கத் தொடங்கத்தானே முதல் பொடியன் வந்தவன். இப்ப பதினாறு வயது. அதிலை இருக்கிற பொடியன்டை அளவு இருக்கும். அடுத்த வருசம் கட்டாயம் டொக்டருக்கோ எஞ்சிஜினியருக்கோ படிக்கப் போவான். அவன்ரை படிப்பு முடியும்வரை நான் இதை நிறுத்த மாட்டன்”

நான் அதிர்ந்து போனோன்.

அம்மா மாமிசச் சட்டிகளை கவிழ்த்து விட்டு கோவிலில் சுவாமிக்கு பூக்கட்டிக் கொடுத்துக் கொண்டு பாலும் பழத்துடன்…. நாகரத்தினமோ கூறுபோட்ட திருக்கை துண்டை கையில் ஏந்தி விற்றுக் கொண்டு 3 மிளகுடனும் 3 மிடறு தண்ணியுடனும்…

என் இரண்டு கண்களிலும் இந்த இரண்டு காட்சிகள் ஒரே வேளையில் …

என்ன அதிசயம் இது?…

என்னால் நம்பவே முடியவில்லை…

*

அடுத்தடுத்த வருடங்களில் வந்த இடம்பெயர்வுவரை நான் எந்தப் பேரமும் பேசாமல்

அவரிடமே தொடர்ந்து மீன் வாங்கிக் கொண்டிருந்தேன்;.

சிலவேளை அவரே சொன்ன விலையில் இருந்து விலை குறைத்து தருவார்.

”அதிகமாக மிச்சக் காசு தந்து இருக்கின்றீர்கள்” என்று அவரிடம் கேட்டால், ”அதெல்லாம் கணக்கு சரி ராசா ” என்று வெற்றிலை நிறைந்த வாயால் புன்முறுவலுடன் சொல்வார்.

இடம்பெயர்வு முடிந்து மீண்டும் ஊருக்கு வந்த பொழுது அவரை சந்தையில் காணவில்லை.

(முற்றும்)

(பி.கு.: நான் முதன் முதலில் எழுத நினைத்த சிறுகதை இது. இன்றுவரை ஏன் இது எழுதப்படாமலேஇருந்து வந்தது என்று எனக்குப் புரியவேயில்லை. முன்பு எழுதியிருந்தால் சிலவேளை அது இந்த வடிவத்தைப் பெற்றிருக்காதோ என்னவோ!)

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)