இன்றைய ஞாயிறு (03-04-05) தினக்குரல் வாரமலரில் வெளியாகிய எனது பேட்டி. நேர்கண்டவர் – நிரோஷா தியாகராசா

இன்றைய ஞாயிறு (03-04-05) தினக்குரல் வாரமலரில் வெளியாகிய எனது பேட்டி. நேர்கண்டவர் – நிரோஷா தியாகராசா

இளையவர்களைப் பொறுத்தவரை எழுத்துக்கான சரியான அங்கீகாரம் கிடைக்காமை அவர்களுக்குள் ஒரு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தி விடுகிறது என நான் கருதுகிறேன். ஆனால் சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரை எழுதுவதற்கான சூழல் தானாகவே அமைந்து விடுகிறது. தங்கள் எண்ணங்களை அவ்வப்போது வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். பத்திரிகைகளுக்கு அனுப்பி அதற்காக காத்திருக்கும் மனநிலையை இந்த அவசர  உலகம் அவர்களுக்கு கொடுக்க மறுக்கிறது. என்று கூறுகிறார் எழுத்தாளர் ஜீவகுமாரன்.

ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜீவகுமாரன் எண்பதுகளில் டென்மார்க்குக்கு புலம்பெயர்ந்தார். அங்கே உள்ள நகரசபையில் புவியியல் சார்ந்த கணினிப் பதிவுத்துறையின் பொறுப்பாளராகவும், அரச நூலகத்தின் தமிழ்ப்பகுதி ஆலோசகராகவும் பணியாற்றுகின்றார்.

சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு என எழுத்துத் துறைக்குள் பயணிக்கும் ஜீவகுமாரன். ஜீவகுமாரன் கதைகள், ஜேர்மனிய கரப்பான் பூச்சிகள் போன்ற சிறுகதைத் தொகுதிகளையும் “கடவுச்சீட்டு’ என்ற நாவலையும் எழுதியிருக்கிறார். இவர் தமிழியல் விருது, கு.சின்னப்பபாரதி விருது ப.சிங்காரம் விருது, “தகவல் விருது ஆகியவற்றைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இனி அவருடனான நேர்காணலிலிருந்து…

கேள்வி –   நீங்கள் எந்த சூழலில் புலம்பெயர்ந்தீர்கள் ?

பதில்-  எம்மவர்களில் பலரையும்  வெளியேற  வைத்த  போராட்ட சூழலில்தான்.1986 இல் நானும்  புலம்பெயர்ந்தேன். யாருக்கு என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு காலகட்டம் அது. என் புலம் பெயர்வுக்கு நேரடியான அரசியல் காரணம் எதுவும் இருக்கவில்லை.

புலம்பெயர்ந்த சூழல்  என்  எழுத்து  முயற்சிகளை வளர்த்துக்  கொள்ள  உதவியது. மேற்படிப்புக்காக ஆங்கில இலக்கியம் கற்றதனால் இங்கிருக்கும்போதே இலக்கியத் துறையில் பரிச்சயம்  இருந்தது.  ஆனால் எழுத்துத் துறைக்குள் அப்போது  நான் பிரவேசிக்கவில்லை.

 கேள்வி  –  புலம்பெயர் சூழல் உங்கள் எழுத்துக்களில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியது?

பதில்   –  எப்போதுமே ஓர்  எழுத்தாளன் வாழ்கின்ற சூழல் அவன்  எழுத்துகளில்  பிரதிபலிக்காமல்  போகாது. .

புலம்பெயர் வாழ்க்கை என்பது  ஓர்  இடத்தில் வேர் விட்ட  மரமொன்றை பிடுங்கி  முற்றிலும்  புதிதான இன்னோர்  இடத்தில்  நடுவதற்கு  ஒப்பானது. முற்றிலும்  புதுச்சூழல், வேறுவிதமான  பண்பாட்டுக்  கோலங்கள், நேரெதிர்  சீதோஷ்ண  நிலை, புது வாழ்வனுபவங்களை எதிர் கொள்ள  வேண்டி இருக்கும். அதன்  பிரதிபலிப்புகளை, அந்த அனுபவங்களை  என் எழுத்துக்களில்  காணலாம்.

அத்தோடு, என்னுடைய அத்தனை படைப்புகளிலும் சொந்த மண்ணை விட்டுப் பிரிந்து சென்ற வலி ஒரு பின்னணி  இசை போல் இழையோடிக் கொண்டே  இருக்கும். இந்தப்  புலம்பெயர் சூழல்  லௌகீக  ரீதியாக பல  விஷயங்களையும்  எனக்குப்  பெற்றுத் தந்திருக்கலாம். மேலோட்டமான  பார்வையில்  பூரணமான வாழ்வு வாய்க்கப் பெற்றதான  ஒரு தோற்றப் பாட்டைப்  பிறருக்குத்  தந்திருக்கலாம். ஆனாலும்  என் தாய் நாட்டை பிரிந்து  நிற்கும் வலி  எப்போதும்  என்னை  வதைத்துக்  கொண்டே  இருக்கின்றது..   அந்த இழப்பை, வலியை  நான் பதிவு  செய்து மனப் பாரத்தைக் குறைக்கக்  கூடிய  இடமாக   ‘எழுத்தை’ தேர்வு  செய்து  கொண்டேன்.

டென்மார்க்கில் கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது. அங்கிருந்து  எதையும் துணிந்து எழுதமுடியும் .

கேள்வி: ப.சிங்காரம்  அவர்கள்  தமிழின்  முக்கிய  நாவலாசிரியராகக்  கருதப்படுபவர். அவருடைய  ‘புயலிலே  ஒரு  தோணி’யை  மகத்தான நாவலாக முக்கியமான  விமர்சகர்கள்  பலர்  குறிப்பிட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவருடைய  பெயரால் நடத்தப்பட்ட  நாவல்  போட்டியில் தமிழ்ப்   படைப்பாளிகள் எனப்  பலரும்  கலந்து  கொண்டிருப்பார்கள். அத்தகைய பெரும் பரப்பைக் கொண்ட ஒரு போட்டியில் உங்கள் ”கடவுச்சீட்டு’ நாவல்  முதற்பரிசைப்  பெற்றிருக்கிறது.  ஒரு படைப்பாளியாக, போட்டியாளனாக   இது  உங்களுக்குள்  ஏற்படுத்திய  உணர்வலைகளைப்  பகிர்ந்து கொள்ளுங்கள் .

பதில் – புலம் பெயர் வாழ்வை ஒட்டுமொத்தமாக சொல்லும் நாவல் ஒன்றை எழுத வேண்டும்  என்ற எண்ணம்  எப்போதும்  என்னுடன்  ஒட்டிக்  கொண்டே  இருந்தது.என்னை விட்டுப் பிரியாமல் எப்போதுமே தொடரும் ஒரு நிழல்  போல்  அந்த விருப்பம் இருந்தது என்று  கூடச்  சொல்லலாம்..அந்த  விருப்பத்தின்  எழுத்துருவம்தான்  ‘கடவுச்சீட்டு’ .

இலங்கையிலிருந்து வெளிநாடு ஒன்றை சென்றடைந்து, கால் வைத்த மறுகணமே இலங்கையர்கள்  தங்கள் கடவுச்சீட்டுகளை கிழித்து விடுவதுதான்  இந்த நாவலின்  ஆரம்பம்.  கடவுச்சீட்டு என்பது ஒருவனின்  அல்லது ஒருத்தியின்  ஆளடையாளம். அந்த  அடையாளத்தையே  அழிக்கத் தூண்டியது எது ? தற்கொலைக்கு  ஒப்பான  ஒரு  முயற்சியை  நோக்கித்  தள்ளியது எது ? நம்மை  முகமற்றவர்களாக்கியது எந்தக்  கொடூரமான  சூழல் ? இதன்  தொடர்ச்சியாக  நம்மவர்கள்  எமது  முகமிழந்து, அடையாளம்  இழந்து  போவதை இந்த நாவல் விபரிக்கின்றது.

குறிப்பாக சராசரி யாழ்ப்பாண மனிதர்கள் அந்த அந்நிய சூழலை,புதிய கலாசாரத்தை  தாமரை  இலைத்  தண்ணீராகவா, அல்லது  சேற்றில்  புதைந்த  செந்தாமரையாகவா  எதிர் கொண்டு வாழ்கிறார்கள் என்பதையும்  இந்த  நாவல் சொல்கிறது.

அந்த கலாசாரத்தை பற்றியவாறு தங்களை மாற்றிக்  கொண்டு  புது விதமான  வாழ்க்கைப்  பாதையில்  பயணிப்பவர்களும்  இந்த நாவலில்  வருகிறார்கள். புதிய சூழலுடன்  ஒத்தோடவோ, ஒன்றிக்கவோ  முடியாமல்  இயலாமையின்  தோல்வியை  ஏற்றுக் கொண்டு  வாழ்க்கையுடன்  போராடும் மனிதர்களையும்  இந்த  நாவலில்  சந்திக்கலாம்.

பரிசு பெற்ற  இந்த நாவல் பற்றி  இன்னொரு  முக்கிய விடயத்தையும்  நான்  குறிப்பிட்டாக  வேண்டும்.  இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து சென்ற ஒரு குடும்பத்தின் கதைதான்   இந்த நாவலுக்கான  பின்னணி. ஆனால், அதில்     நேரடி அரசியலை  நான் பேசவில்லை.ராஜீவ் கொலை வழக்கு நடைபெற்றபோது இந்திய மக்கள் இலங்கை மக்களை எவ்வாறு பார்த்தார்கள் என்பது பற்றிய  விபரிப்புகள் இந்த நாவலின்  மூலப் பிரதியில்  இருந்தது. ஆனால்

இந்த விபரிப்புகள் தேவையற்ற  அரசியல் சர்ச்சைகளுக்கு  வழி  வகுத்து  விடலாம்  எனப்  பதிப்பகத்தார்  கருதினார்கள். இதன் காரணமாக  விருதுத் தேர்வுக் குழுவோடு  நானும் இணைந்து குறிப்பிட்ட அப்பகுதியை அகற்ற வேண்டி  ஏற்பட்டது..

ஆனால் எதிர்காலத்தில்  இந்த  நாவல் மீள் பிரசுரம் செய்யப்படும் போது குறிப்பிட்ட அந்தப் பகுதியையும்  அவசியம்  இணைத்தே  வெளியிடுவேன்.

இது ஜீவகுமாரன் என்ற தனிமனிதனுக்கு கிடைத்த அங்கீகாரம் அல்ல,  ஈழமும்,  புலம்பெயர் வாழ்வியலும்  பின்னிப் பிணைந்த என் எழுத்துக்களுக்கு  கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன்.

இழந்த  சொர்க்கத்தின்  துயரமும், விதிக்கப்பட்ட வாழ்க்கையின்  யதார்த்தமும்  தேர்வுக் குழுவைக்  கவர்ந்திருக்கலாம்.

கேள்வி : ஈழத்து  மொழிநடை  தமிழ் நாட்டிலுள்ள எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும்  புரிவதில்லை  என்றொரு  கருத்து  இருக்கிறது  அல்லவா? இந்நிலையில் தமிழகத்தின் பல எழுத்தாளர்களும் கலந்து கொண்டிருந்த போட்டியில் உங்களுடைய  நாவல் பரிசு பெற்றது  எதைக்  காட்டுகின்றது ?

பதில் :ஈழத்து மொழிநடை, வட்டாரவழக்குத் தொடர்பில் அங்குள்ள  சிலருக்கு  அலட்சியமும், அதிருப்தியும்  இருப்பதென்பது உண்மைதான்.

ஆனால்,இந்தக் கருத்தை  நாம்  புறந்தள்ள  வேண்டும்.

தமிழ்நாட்டிலிருந்து  வெளி வரும்  கொங்கு நாட்டுத் தமிழ், கரிசல்காட்டுத்  தமிழ், நெல்லைத் தமிழ், சென்னைத் தமிழ்  எல்லாவற்றையும்  படித்து  எம்மால்  கிரகிக்க  முடியுமென்றால்  அவர்களுக்கு  ஏன்  எங்கள்  தமிழைப்  புரிந்து  கொள்ள முடியாது ?

ஒரு படைப்பை  செயற்கை அலங்காரங்கள்  தூக்கி  நிறுத்தாது. அதன்  உள்ளடக்கத்தின்  உண்மைத்  தன்மையும், நியாயத்தின் பாற்பட்ட அக்கறையும் எல்லாவற்றையும்  விட மேலானது. இதனால்  இந்தப் படைப்பு  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்.

கேள்வி -இலக்கியத்தில்  பல விதமான  போக்குகள், நோக்குகள்  இருக்கின்றன. சித்தாந்தங்கள், கோட்பாடுகள்  என்ற  எல்லைக் கோட்டுக்குள்  நின்று  எழுதுபவர்கள்  உண்டு. இன்னும் சிலர்   வானமே  எல்லை  என்ற  அகலித்த  மன நிலையுடன்   எவற்றையும்  எழுதலாம்  என்ற  கொள்கைகளைக்  கொண்டவர்கள் . உங்களுடைய எழுத்துக்களை  நீங்கள்   எந்த வகைக்குள்  வரையறை  செய்து கொள்ளுகிறீர்கள் ?

பதில்  –   என்னுடைய எழுத்துக்கள் நிஜத்தை சொல்ல  முற்படுகின்றவை.. யதார்த்த பாணியில்  அமைந்தவை  என்று  சொல்லலாம்.

வெளிப்படையான  அரசியலை  என்  எழுத்தில்  நான் வெளிப்படுத்துவதில்லை. ஆனால்,  அது  ஓர் அரசியலை  வாசகன்  மனதில்  எழுதிச் செல்ல வேண்டும்,புரிய  வைக்க வேண்டும்  என்றே விரும்புகிறேன். நான் எழுதுவதற்கு

மிகவும் எளிய  மொழி நடையையே  தெரிவு செய்து கொள்ளுகிறேன். படைப்பு  என்பது  ஓர் எழுத்தாளனுக்கும், வாசகனுக்குமான  தொடர்பாடல். அது ஒரு கை ஓசையாக  அமைந்து விடக் கூடாது. நான் சொல்வது  எனக்கு முதலில் புரிய வேண்டும்.பின்னர் வாசகர்களுக்கு புரிய வேண்டும். வாசகர்களுடன்  அந்நியோன்னியமாக  உறவாட  இந்த எளிய நடை எனக்கு உதவுகின்றது.

எப்போதும் என் படைப்பில் முதல் வசனத்திலேயே வாசகர்களது கரங்களை பற்றிக் கொள்ளவேண்டும் என்று எண்ணுவேன். அவர்கள்  சலிப்படையும்  நிலைக்கு வந்து  விட்டார்கள்  என்றால் அதற்கு முன் பற்றியிருக்கும் அவர்களின் கரங்களை  விட்டு விடவும். எனக்கு தெரிந்திருக்கவேண்டும்.

என்னை  சுயவிசாரணை  செய்து  கொள்ளவும்  வேண்டும்.

எனக்கு யாரும்  முன்மாதிரி  கிடையாது.

கேள்வி   முக்கியமான  எழுத்தாளர்களான  எஸ்.பொ,  கி.பி. அரவிந்தன், ஜெயகாந்தன் ஆகியோர்    சமீபத்தில்  மறைந்து  போய்  விட்டார்கள். இவர்களைப் பற்றி  ஏதேனும்  மனப்பதிவுகள்  உங்களிடம்  உண்டா ?

பதில்  – இழப்புகள் என்றும் வேதனையளிப்பவையே.

எஸ்.பொ, ஜெயகாந்தன் ஆகிய இருவரும் இயற்கையான  வயோதிபத்தினால் மரணத்தை தழுவிக் கொண்டவர்கள்.

கி.பி.அரவிந்தனின் மரணம் இன்னமும் காலம் தாழ்ந்து  வந்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.

காலம்  ஒவ்வொருவரிலும்  எழுதிச் செல்லும்  மாற்றங்கள் .

எழுபதுக்கு முன் இருந்த ஜெயகாந்தனைப்  பின்னாட்களில்  காணக் கிடைக்கவில்லை.

சடங்கு போன்ற படைப்புகளைத்     தந்த எஸ்.பொ. பின்னாட்களில்  பதிப்பகத் துறையை  முன்னிலைப் படுத்திய  ஒரு வணிகராக மாறிப் போனார்.

ஈழத்தை விட்டு புலம் பெயர்ந்ததும்  தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாதவராக  கி.பி.அரவிந்தன் இருந்திருந்தால்  எவ்வளவு  மகிழ்ச்சியாக  இருந்திருக்கும்.

இந்த  மூவரின் எழுத்துக்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

கேள்வி  -இந்தத் தடவை இங்கு வந்த  போது  ஈழத்தின் பல பாகங்களுக்கும் சென்றிருக்கிறீர்கள். அந்த அனுபவங்கைள பகிர்ந்து கொள்ளுங்கள்.

பதில் – இந்த ஈழத்துப் பயணத்தில் பல தரப்பட்டவர்களை   சந்தித்திருக்கிறேன். அதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுடனான   சந்திப்பு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதொன்றாகும்.

மாணவர்களிடம் என்னுடைய ”ஜீவகுமாரன் கதைகள்’ நூலைக் கொடுத்து அது தொடர்பான அவர்களது பார்வையைத்  தெரிந்து கொண்டேன். அது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.

அத்தோடு நல்ல  இலக்கியம் பரிச்சயம்  உள்ள  பலரையும் சந்தித்தேன். என் எழுத்துக்கள் தொடர்பான அவர்களது பார்வை வேறாக இருந்தது. சாதாரண வாசிப்பு நிலையில் உள்ளவர்களையும் சந்திக்கக் கிடைத்தது. அவர்களது ரசனை, எண்ணங்கள் மாறுபட்டதாக இருந்தன. இந்த வித்தியாசங்கள் எனக்கு பிடித்திருந்தது.

”வித்தியாசங்களோடு வாழ்தல் இனிமையானது’ என டென்மார்க்கில் ஒரு பழமொழி இருக்கிறது. ஆனால்     இந்த வித்தியாசங்களைக் கண்டு பலர் முரண்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நான் வித்தியாசங்களில் இருந்து எப்போதுமே நல்ல அனுபவங்களையே பெற்றுக் கொள்வேன்.

நான் சந்தித்தவர்களில் சிலர் வெறுமனே கதையை மட்டுமே பார்த்தார்கள்.

சிலர் கதைகளில் கையாளப்பட்டிருக்கும் உத்திகள் பற்றி பேசினார்கள்.

நூல் வெளியீடுகளைப் பொறுத்தவரை புலம்பெயர் நாடுகளில் அது இலக்கிய விழாவாக மட்டும் இருக்காது. குடும்ப நிகழ்வுகள் போலவே அனைவரும் கலந்துகொள்வார்கள்.

ஆனால் இங்கு அவ்வாறல்ல. என் எழுத்துக்களைப் படித்து அதன் மூலம் என்னைத் தெரிந்து கொண்டவர்களே வெளியீட்டு நிகழ்வுக்கு வந்திருந்தார்கள். எனக்காக நிகழ்வில் கலந்து கொள்பவர்களை விட, என் எழுத்துக்களுக்காக வருவதே மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும்.

கேள்வி –    இணையத்தளங்களில் அதிகமாக எழுதும் இளைஞர்கள் மரபுவழி ஊடகங்களுக்கு எழுதுவது வெகுவாக குறைந்து போயுள்ளது. இது தொடர்பில்…

பதில்  –  இளையவர்களைப் பொறுத்தவரை எழுத்துக்கான சரியான அங்கீகாரம் கிடைக்காமை அவர்களுக்குள் ஒரு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தி விடுகிறது என நான் கருதுகிறேன்.

ஆனால் சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரை எழுதுவதற்கான சூழல் தானாகவே அமைந்து விடுகிறது. தங்கள் எண்ணங்களை அவ்வப்போது வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.

பத்திரிகைகளுக்கு அனுப்பி அதற்காக காத்திருக்கும் மனநிலையை இந்த அவசர  உலகம் அவர்களுக்கு கொடுக்க மறுக்கிறது. சமூக வலைத்தளங்களில் வரும் பின்னூட்டங்கள் மீதான கவர்ச்சிதான் அவர்களை  அந்தப் பக்கம் இழுக்கிறது என நினைக்கின்றேன்.

இன்னொரு விடயம் நல்ல எழுத்துவளம் இருப்பவர்களுக்குக் கூட நூலுருவாகுவதற்கான பொருளாதாரத் தடை இருக்கலாம். இவ்வாறான விடயங்கள்  சலிப்புத் தன்மையை ஏற்படுத்தும். வேகம் பின்னூட்டங்கள் மீதான கவர்ச்சி என்பனவைதான் இணையத்தளங்கள் பக்கம் இளைஞர்கள் செல்லக் காரணங்களாக இருக்கின்றன.

இளைஞர்களை பத்திரிகைகளுக்கு எழுதத்  தூண்ட பயிற்சிப்பட்டறைகளை  நடத்தவேண்டும்.

பத்திரிகைகளில் இளைஞர்கள்  பங்குபற்றக்கூடிய விடயங்களை எழுதவேண்டும். இளைஞர்களுக்கான வாய்ப்பை எந்தளவுக்கு வழங்குகின்றோமோ, அந்தளவு அவர்களது பங்குபற்றல் அதிகமாக இருக்கும்.

கேள்வி – ஈழத்து படைப்புக்கள் தொடர்பான உங்கள் அபிப்பிராயம்…

பதில் -ஈழத்தில் வெளிவரும் சகல  பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் தொடர்ச்சியாகப் படித்து வருகின்றேன்.

புதியவர்களின் வருகை வரவேற்கத்தக்கது. பழையவர்களின் பேசுபொருள் இன்னும் மாறாமலே இருப்பதை அவதானிக்கிறேன்.

சிலர் அரசியல் சார்ந்து மட்டுமே பேசுகிறார்கள்.

ஒரே பேசுபொருளோடு நிற்காமல், வெவ்வேறு தளத்தில் நின்று பேச வேண்டும். அதற்கு நல்ல வாசிப்பு இருக்கவேண்டும். வாசிப்பின் விசாலம் அதிகரிக்க அதிகரிக்க எமது எழுத்தின் ஆர்வம் ஆழமாகும். சிறுவயதில் இருந்தே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். வழமையான பாணியில் இருந்து மாறுபட்டு எழுதவேண்டும்.

கேள்வி – இதுவரை உங்களால் எழுதவில்லை என ஆதங்கப்படும் விடயம் என்ன?

பதில்  யாழ்ப்பாண சமூக அமைப்பின் மாற்றம் குறித்து எழுதவேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. போர், புலம்பெயர் வாழ்வு, தொழிற்புரட்சிகள் யாழ் மண்ணில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டன.

அதனை எழுத்தில் கொண்டுவரவேண்டும்.

இது ”யாழ்ப்பாணத்துக்கான கதை’ என்று சொல்லுமளவுக்கு ஒரு நாவல் படைக்கவேண்டும்​

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)