இன்ரசிற்றி ரிக்கற்றின் விலை 1500 (சிறுகதை)

இன்ரசிற்றி ரிக்கற்றின் விலை 1500  (சிறுகதை)

மதெர்ஸ்டே 10-05-2015

நேற்று நடு இரவு விமானநிலையத்தில் நான் வந்திறங்கியது தொடக்கம் இன்று அதிகாலை நான் யாழ்.தேவி ஏறும் வரை என் முகநூல்பக்கங்கள் அனைத்தும் அன்னையர் தின வாழ்த்துகளால்நிறைந்திருந்தன.

ஆங்கிலம் . தமிழில் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட படங்கள்சித்திரங்கள்வாசகங்கள்.. அன்னை அல்லது அம்மா என்று வரும் சினிமாப்பாடல்களின் இணைப்புகள். சொந்த தாயார்களின் படங்கள்மேலாக நாளை வெளியாக இருக்கும் தமிழ்நாட்டின் அம்மாஎன விழிக்கப்படும் முன்னால் முதல்வருக்கான வழக்கின் தீர்ப்பிற்கான வாழ்த்துகளும் வேண்டுதல்களும் என நிறைந்திருந்திருந்தது.

ஆங்காங்கேஉங்க அம்மா வெளியில் வந்தால் பார்ப்போம்என்ற அரசியல் சவால்கள்.

உங்கள் ஐயா வெளியில் இருக்கும் பொழுது ஏன் எங்கள் அம்மா வெளியில் இருக்க கூடாதுஎன்ற எதிர் சவால்கள்.

இந்த அன்னையர் தின வாழ்த்து தெரிவிப்பது தேவையாஇல்லையா என என் மனம் தத்துவ விசாரணைகள் நடாத்திக் கொண்டிருந்தாலும் என் அம்மாக்கு முகநூலில் வாழ்த்து தெரிவிக்க வேண்டிய தேவை எனக்கு இருந்திருக்கவில்லை.

காரணம்முகநூல் எனக்கு அறிமுகமாக முதலே என்னுடன் இறுதி 16 ஆண்டுகள் வாழ்ந்து விட்டு அவர் அமைதியாக என் கரங்களில் போய் விட்டார்.

*

ஒரு விழாவிற்கு போவதற்கு கோட், சூட் எல்லாம் போட்டு அழகாக வெளிக்கிட்டு நின்ற பொழுது, சக்கர நாற்காலியில் இருந்தபடியே என் அழகை ரசித்தபடி எனக்கு நெஞ்சுக்கை ஏதோ செய்யுது. டாக்டரைக் கூப்பிடு என்று சொன்னது மட்டும் தான்.

 அவசரசேவை 118 வண்டி வைத்தியருடன் வந்த பொழுது அவர் கண்கள் செருகியிருந்தது.

என்னை அறைக்கு வெளியே போய் நிற்கச் சொன்னார்கள்.

பத்து நிமிடங்களுக்குப் பின்பு வெளியே வந்து மனம் வருந்துகின்றோம்என என்னைக் கட்டி ஆறுதல் சொன்னார்கள்.

64 60 52 46 வயதான நான்கு பிள்ளைகளின் தாய் உலகை விட்டுப் போன நாள் அது.

என் மூன்று சகோதரங்களையும் அழைத்து அம்மாஎன்று சொல்லத் தொடங்கிய வாக்கியம் சொல்லி முடிக்க முதல் வார்த்தைகள் சிக்கலடித்தன.

அவர்களாக மிகுதியைப் புரிந்து கொண்டார்கள்.

ஒவ்வொருவரின் தாயார்கள் ஒவ்வொருவருக்கும் எப்படியோ தெரியாது. ஆனால் கடைசி நிமிடம் எங்கள் நால்வரைப்பற்றி மட்டுமில்லாது எங்கள் கிராமத்திலும் கனடாவிலும் இங்கிலாந்திலும் இருக்கும் அவாவின் பெறாமக்கள், மருமக்கள் அனைவரிலும் அவர் அக்கறை கொண்டிருந்தார்.

அதனால்தான் அம்மாவின் இறுதிச் சடங்கிற்கு மண்டபம் கொள்ளாத கூட்டம்.

அனைத்து நாடுகளிலும் இருந்து அனைத்து உறவுகளும் வந்திருந்தனர்.

இறுதிச்சடங்குநாள் வரை அவாவின் பிரிவுச் சோகம் எனக்குத் தெரியவில்லை.

மரணவீட்டு லீவு முடிந்து முதன்நாள் வேலைக்குப் போய்விட்டு வீட்டை வந்த பொழுது, அம்மா தானாக சக்கர நாற்காலியில் வந்து கதவைத் திறக்கவில்லை என்ற பொழுது தான் இனி எனக்கு அம்மா இல்லை என்று தெரிந்தது.

ஆபீஸ் உடுப்பை மாற்றாமல் அப்படியே போய் சோபாவில் உட்காந்து கொண்டு இருந்தேன் – என் இரு பிள்;ளைகளும் மனைவியும் வேலையால் வரும் வரையும்.

*

அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட இருந்த யாழ்தேவிக்கு என் தமக்கையார் 4.30 மணிக்கே அழைத்து வந்து விட்டார்.

வழமையாக பிடிக்கும் வான்காரனுக்கு வேறு ஒரு சவாரி இருந்ததால் அந்த ஒரு மணித்தியாலம் பிளாட்பாரத்தில் தவநிலையில் இருக்க வேண்டிய நிலை.

வேறு ஒரு வானில் போகலாம் தானே என முதன்நாள் இரவு நான் கேட்ட பொழுது அவன் பாவம். பிள்ளை குட்டிக்காரன். உன்னால் அவனுக்கு கொஞ்ச காசு கிடைக்கட்டுமேஎன்றார்.

அம்மா ஒரு தடவை என கண்கள் முன்னால் வந்து போனார்.

அதன் பின் நான் எதுவும் பேசவில்லை.

4.30 தொடக்கம் 5.00 மணிவரை பிளாட்பாரம் சாமான்பொதிகளுக்குப் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டொரு நாய்கள் போல தூங்கிக் கொண்டு இருந்தது.

5.00 மணி போல சிங்களத்தில் ஒலிபரப்பம் அதனைத் தொடர்ந்து ஒரு புகையிரதம் வந்து நின்றது.

ஓலிபரத்தியதில் ஒரு சொல் கூட யாழ்ப்பாணம் என்றோ ஜவ்னா எனவோ கேட்கவில்லை.

மனம் சிங்கப்பூரை நினைத்தது.

ஓடும் றெயில் கூட ஒவ்வோர் ஸ்டேசன் வரும் பொழுதும் ஆங்கிலம், சீன மொழியுடன் தமிழும் கேட்கும்.

மறுகணமே ஆமிக்காவல் இல்லாத கோட்டை புகையிரத நிலையம் ஆறுதல் தந்தது.

5.05 போல ஒரு பெரிய குடும்பம் வந்திறங்கியது.

அது ஒரு தாயுடன் இணைந்த இரு சகோதரங்களின் குடும்பங்கள்; எனத் தெரிந்தது. ஒன்று என்னைப் போல வெளிநாட்டில் இருந்து வந்திறங்கிய குடும்பமாக இருக்க வேண்டும். தமையன் குடும்பம் இலங்கையில் வசித்துக் கொண்டு இருப்பவர்களாக இருக்க வேண்டும். சகோதரி குடும்பம் சுவிஸ் என அவர்களின் கதையில் இருந்து புரிந்தது.

மொத்தம் ஒன்பது பத்து பேராவது இருக்கும்.

அதன் நடுவில் ஒரு மெல்லிய வயதான அம்மா ஒருவர்.

நெற்றி முழுக்க விபூதி நிறைத்திருந்தது.

பேரப்பிள்ளைகளை பிளாட்பாரத்தின் கரைக்குப் போக வேண்டாம் என்று அறிவுரை சொல்லிக் கொண்டும் தங்களுடன் கொண்டு வந்த பொதிகளை எண்ணி சரிபார்த்துக் கொண்டும் இருந்தார்.

அதேவேளை அருகே நின்றிருந்த என்னையும் என் சகோதரியையும் பார்த்து நட்புரீதியில் புன்னகைத்தார்.

நாமும் புன்னகைத்தோம்.

நீங்கள் எதுவரை?…

சுன்னாகம் ஸ்டேசன்வரை

நாங்கள் எல்லாரும் யாழ்ப்பாணம் ஸ்டேசன். அதுதான் மானிப்பாய்க்கு கிட்ட…”என்று சொல்லிக் கொண்டே மிக அருகில் வந்தார்.

பின்பு, நீங்களும் 1500 ரிக்கற் பெட்டியிலைதான் வருகிறீர்களோஎனக் கேட்டார்.

எல்லாப் பெட்டிகளுக்கும் 1500 தானேஎன் சகோதரி சொன்னார்.

அது அவருக்கு விளங்கியதோ தெரியாது. ஆனால் சுவிஸில் இருந்து வந்திருக்கம் தனது மகள் 1500ரூபாய் ரிக்கற் எடுத்து தன்னை கூட்டிச் செல்லகின்றா என்பது தான் அவருக்கு பெருமையாக இருந்தது.

எவ்வளவு காசு சொல்லும் பார்ப்பம். என்ரை பிள்ளை அப்பிடி ரிக்கற் எடுத்து என்னைக் கூட்டிப் போக மருதடியானும் வேலக்கைப் பிள்ளையானும் தான் வைச்சிருக்கினம்;. ஆனாலும் தம்பி அவை இரண்டு பேரும் என்னை ஏமாத்தியும் போட்டினம். இப்ப மருதடியானுக்கு இத்தனை வருசத்துக்கு பிறகு கும்பாபிசேகம் நடந்திருக்கு. அவரோடை கோவம் எண்டாலும் பிள்ளையோடை போகாமல் இருக்கலாமோஅவரிட்டையும் போக வேணும். 101 மோதகம் செய்யுறன் எண்டு நேர்த்திக்கடன் வேறு வைச்சிட்டன் அந்த வண்டியனுக்கு

அவரின் வெள்ளாந்தி மனம் எனக்கு நன்கு பிடித்திருந்தது.

அப்போ உங்கடை அவர் என்ன மாதிரி?

அவர் படுக்கையிலைதான். ஒரு கிழமைக்கு கழுவித் துடைக்க ஆட்களை ஒழுங்கு செய்து போட்டுத்தான் இப்ப ஊருக்குப் போறம். அவரின்ரை செலவுகள் எல்லாம் மகனிட்ட பொறுப்புத் தான். என்ரை பொறுப்பு உவள் சுவிஸ்காரியின்ரை.

நான் ஊம் கொட்டினேன்.

மகனுக்குத்தான் கொழும்பு வீட்டை எழுதி கொடுத்து இருக்கிறம். அதுபடியாலை அப்பான்ரை செலவுகள் எல்லாம் அவர்தான் பார்க்கிறது

உங்களுக்கு இரண்டு பிள்ளைகள் மட்டும் தானே

உதட்டினுள் புன்னகைத்தார்.

அவர் எங்கை என்னை விட்டார். இதுகள் இரண்டும் தான் மூத்த இரண்டும். இதற்குப் பின்னாலை இன்னும் இரண்டுஅல்லாம் ஒரு வருசவித்தியாச பிள்ளையள்

அப்பிடியா? அவை எங்கை இருக்கினம்?

அவை நோர்வேயிலைபனிக் குளிருக்கைஎன்றவர் என் மீது பேச்சைத் திருப்பினார்.

தம்பி எங்கை?

நான் டென்மார்க்கிலை. இரண்டு பிள்ளைகளும் திருமணம் செய்து விட்டார்கள். இப்ப லீவுக்கு ஊருக்குப் போறன்

நீர் குடுத்து வைச்சனீர் தம்பி

நீங்களும் தானே அம்மா.

இல்லாட்டி என்ரை பிள்ளை வந்து 1500 ரூபாய் கொடுத்து என்னை கூட்டிக் கொண்டு போகுதோ…”

அவரின் கண்கள் பனித்தன.

நோர்வேயில் மட்டுமில்லைடென்மார்க் சுவீடன் ஆகிய எல்லா நாடுகளிலும் நாங்களும் பனிக்குளிருக்கை சூரியன் எழ முதல் எழுந்துபனிக் குளிருக்கை வேலைக்குப் போய்சூரியன் மறைந்த பின்பு அதே பனிக்குளிருக்கை வேலையால் திரும்புகின்றோம் என்பது தான் உண்மை.

அப்படி இருக்கும் பொழுது நோர்வேயில் இருக்கும் இவரின் பிள்ளைகளுக்கு மட்டும் என்ன பிரத்தியோகமாக கஸ்டம் என்று என் மனம் கொக்கி போட்டது.

ஆனாலும் அரைமணிநேரப் பழக்கத்தினுள் அவரின் அந்தரங்க விடயத்தில் உட்புகுவது அவ்வளவு நாகரீகம் இல்லை என மௌனமானேன்.

மீண்டும் சிங்களத்தில் ஒலிபரப்பு.

இந்த முறை யாழ்ப்பாணம் வவுனியா அனுராதபுர போன்ற சொற்கள் வந்து வருவது யாழ்தேவி என உறுதி செய்தது.

தம்பி இந்த 1500 ரூபாய் பெட்டி எதிலை வரும்?

எல்லாம் 1500 ரூபாய் தான். நீங்கள் இங்கை வாங்கோ அம்மாஎன தாயாரை அழைத்துக் கொண்டு மூத்த மகன்காரன் சென்றான்.

புகையிரதம் தனது வேகத்தை பிளாட்பாரத்தில் குறைத்த பொழுது, அனைத்தும் ரிசேர்வ் செய்யப்பட்ட சீற்றுகள் எனத் தெரிந்தும் பழக்க தோஷம் காரணமாக பாய்ந்து ஏறினர் சிலர் – அமெரிக்காவால் வந்தாலும் சென்னை விமானநிலைய இமிக்கிரேசன் கவுண்டரில் முன்னுக்கு செல்ல இடிபடுவது போல. என்னதான் முந்தி ஓடினாலும் இன்னமும் ½மணிநேரம் கழித்துதான் சாமான் பொதிகள் பொதிப்பட்டியில் வலம் வரப் போகின்றது என அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்த இந்தியருக்கு தெரியாதா என நான் வியப்பதுண்டு. பல தடவைகள் இறுதியாக வந்து நான் முதலில் என் பொதிகளுடன் வெளியே போனதுண்டு.

நானும் அக்காவும்; ஆறுதலாக யாழ்தேவியினுள் ஏறி எங்கள் ஆசனத்தில் போய் அமர்ந்து கொண்டோம்.

கண்கள் அந்த அம்மாவைத் துலாவியது.

எங்கள் கொம்பாட்மென்ற் பெட்டியுள் அவரைக் காணவில்லை.

அந்த மனுசிக்கு கொஞ்சம் சுகமில்லைப் போலைஇது என் அக்கா.

இல்லையக்காஅவரின் வாழ்க்கை காலத்தில் 1500ரூபாய்க்கு ஒரு பவுண் தங்கம் வாங்கி இருப்பார். ஏதோ ஒரு கோயிலில் முழுநாள் திருவிழாவை நடாத்தி முடிச்சிருப்பார். பிறகு போர் அது இது பிள்ளைகள் என வாழ்க்கை முன்னே ஓடினாலும் அவர் ஏதோ ஒரு காரணத்தாலை அங்கேயே நிற்கிறார்

அக்காவிற்கு என் தத்துவங்கள் புரிந்ததோ இல்லையோ தெரியாது. ஆனாலும் நான் சொன்னவற்றை ஆமோதிப்பது போலத் தலையாட்டினார்.

புகையிரதம் புறப்பட்டது.

*

முதன்நாள் இரவு பிந்தி வந்ததுஇன்று அதிகாலையே எழுந்ததுஅந்தக் களைக்கு யாழ்தேவியின் தாலாட்டு இதமாக இருந்தது.

கண்கள் தானாக செருக நினைத்தாலும் சிங்களப்பகுதியின் வயல்கள்குளங்கள்தென்னை மரங்கள்பாடசாலை செல்லம் பிள்ளைகள்.. தேமாப்பூக்களுடன் விகாரைகளுக்கு செல்லும் பெண்கள். இவர்களை ரசித்துப் பார்ப்பதில் எப்போதும் எனக்கு அலாதிப் பிரியம்.

எனவே கஸ்;டப்பட்டு கண்களை மூடாமல் பக்கத்தே போகும் பள்ளித் தோழியைக் கடைக்கண்ணால் பார்ப்பது போல கண்களை திறந்தும் மூடியும் விழிப்புக்கும் தூக்கத்திற்கும் இடையில் வெளியே பார்த்துக் கொண்டே இருந்தேன்.

சிங்களதேசத்தின் இயற்கை அழகு மாறாமலேயே இருந்தது.

இவ்வாறே கொக்குவிலும் இணுவிலும் வரும் பொழுது. செம்பாட்டு தரையில் இறைப்புத் தண்ணியோடும் வாய்க்கால்களின் அருகேயுள்ள பாத்திகளில் மதாழித்த புகையிலைக் கன்றுகளை பார்க்க வேண்டும் என மனம் வேண்டியது.

இளவயது வயல் குளிப்பை நினைத்து மனம் ஆனந்தித்தது.

பொல்காவலையைத் தாண்டிக் கொண்டு இருந்தோம்.

உனக்கு பசிக்கவில்லையா?

 

எனக்;கும் பசிக்குது ஏதாவது வேண்டுவோம் என்பது தான் அதன் அர்த்தம்.

நான் பார்த்து வருகின்றேன்என்று எழுந்து இருக்கைப் பெட்டிகளினூடு நடந்து சென்றேன்.

அதிகமானோர் தங்களுடன் தங்களுக்கான காலை உணவை எடுத்து வந்திருந்தார்கள் போலும்.

பிள்ளைகளுக்கு பட்டரும் ஜாமும் பூசி அழகாக வெட்டிய பாண் துண்டுகள்அப்பா அம்மாக்கு இப்போதும் வாட்டிய வாழையிலையில் சுற்றி வந்த இடியப்பமோபுட்டோ இறங்கிக் கொண்டு இருந்தது.

நான் கன்ரீனை நோக்கிப் போனேன்.

அங்கு குளிர்பானங்களும் பிஸ்கட்டுகள் மட்டுமே இருந்தது.

சிறுது ஏமாற்றமாய் இருந்தது.

ஆனாலும் அதனை வாங்கிக் கொண்டேன்.

காலைச்சாப்பாட்டுக்கு லெமன்பப் பிஸ்கட்டும் இஞ்சிசோடாவும் (ஜிஞ்சர்பியர்) ஜோடி சேராது எனத் தெரிந்தும் வாங்கிக் கொண்டேன்.

உனக்குப் பிடித்த மாங்காய் போட்டு கருவாட்டுக் குழம்பு செய்து வைக்கின்றேன்என தங்கை தொலைபேசியில் சொன்ன சோற்றில் கை நனைக்கும் வரை வயிறு என்ற ஒன்று இருக்கின்றதே எனக்கு!

பயணிகள் சாப்பிடும் இடத்தில் பெரிய பெரிய இறைச்சி துண்டுகளுடன் புத்த பிக்குகள் றொட்டி சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். ஒரு கணவனும் மனைவியும் அவர்களுக்கு அதனை பவ்வியமாக பரிமாறிக் கொண்டு இருந்தார்கள்.

கண்ணையும் மனதையும் குறிப்பாக மூக்கையும் மூடிக் கொண்டு என் இருக்கைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.

இடையில் உள்ள பெட்டியில் அந்த அம்மா தனித்து உட்கார்ந்திருந்து சீனி போட்ட சங்கிலி பனிசும் தேனீரும் பருகிக் கொண்டு இருந்தார்.

பக்கத்து ஆசனம் வெறுமையாக இருந்தது.

எனன தனிய இருக்கிறியள்?

இல்லை.. பேத்தி இருந்தவாதாயிட்டைப் போட்டாநீர் இதிலை இருமன்

அமர்ந்து கொண்டேன்.

கொஞ்ச தேத்தண்ணி குடியுமன்சுடுதண்ணிப் போத்தலுக்கை இருக்குது

தாருங்கள் என்ற விருப்பத்திற்கும் வேண்டாம் என்ற சங்கோயத்திற்கும் இடையில் நெளிந்தேன்.

நீரும் என்ரை பிள்ளையள் போலைத்தானேகுடியும்என தேனீரை குவளையுள் ஊற்றினார்.

அதிகாலையில் இருந்து மனம் ஏங்கிய ஒன்று எதிர்பாராமல் கிடைத்தது இதமாக இருந்தது.

ராசா. உமக்கு டென்மார்க்கிலை எவ்வளவு வரும்?

வெள்ளாந்தி மானிடப் பிறப்பிடம் அது.

சொல்வதற்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை.

வருமான வரி, வீட்டுவரி அது இது என்று கழித்தாலும் மனிசிக்கும் எனக்கும் சேர்த்து 2 அல்லது 3 மிஞ்சும்.

அங்கத்தைய இரண்டாயிரம் மூவாயிரமோ…”

இல்லையம்மா இங்கத்தைய 2 அல்லது 3 இலட்சம்

அவரின் முகம் மலர்ந்தது.

உங்கடை பெற்றார் கும்பிட்ட பலன்தான் ராசா அதுஅதுதான் உங்களுக்கு நல்லவழி காட்டியிருக்குது. நானும் வேலக்கை பிள்ளையாருக்கும் மருதடியானுக்கும் என்ரை 4 பிள்ளைகளுக்கும் சேர்த்து கும்பிட்டனான். அது மட்டுமில்லை மனுசனோடை சண்டை பிடிச்சு நாலு நாலு பரப்புக் காணியள் இரண்டு கோயிலுக்கும் எழுதி வைச்சனான். தம்பியும் ஏமாத்திப் போட்டார். அண்ணாவும் ஏமாத்திப் போட்டார்?…

ஒரு நிமிடம் மௌனம்.

யார் அண்ணா? யார் தம்பி??

மருதடியான் அண்ணன். வேலக்கை பி;ளளையான் தம்பிகொழும்பிலை இருக்கிறவனும் இப்ப சுவிசாலை வந்து என்னை இந்த 1500 ரூபாய் ரிக்கற் எடுத்து கூட்டிப் போறவளும்தான் கொஞ்சம் நல்லாய் இருக்குதுகள்

நோர்வையிலை இருக்கிற மற்ற 2 பேரும்?கோட்டையில் நான் கேட்கவிருந்த கேள்விக்கு மீண்டும் எனக்கு ஒரு சந்தர்ப்பம்.

அதுகள் தம்பிபிச்சை எடுக்குதுகள்

அவரின் கண்களில் இருந்து பொல பொல என்று உதிர்ந்தது.

நான் அதிர்ந்து போனேன்!

எங்கேயோ ஒரு பிழை நடந்திருக்கு என மனம் உறுதியாகச் சொன்னது.

நோர்வேயில் பிச்சை எடுப்பதா?என்னை என் மனம் விசாரணை செய்தது.

பின்பக்கம் யாரோ வருவது போலத் தெரிந்தது.

அவரின் சுவிஸ் மகள்.

அண்ணா குறை நினையாதையுங்கோஅம்மா இப்பிடித்தான் கொஞ்சம் கணக்க கதைப்பா.

எனக்கது விளங்குது தங்கச்சிஅவாக்கு நோர்வேயிலை 2 பிள்ளையள் இருக்கினமோ

ஓம் அண்ணாஅவை போய் இருபத்தைஞ்சு முப்பது வருசம் ஆச்சு. அம்மா ஐயாதான் சொத்துபத்துகளை வித்து அவையை அனுப்பி வைச்சவா. பிறகு கல்யாணம் பேசி அண்ணியவையும் அனுப்பி வைச்சவா. பிறகு கொஞ்ச நாளையாலை என்னை சுவிசிலை இருக்கிற இவருக்கு கலியாணம் செய்து அனுப்ப அம்மா காசு கேட்டு எழுதிவா 2 அண்ணாமாரும் அண்ணிமாரும் நாங்கள் இங்கை பிச்சை எடுக்கிறம். நீங்கள் தங்கச்சியை ஊருக்கையே கட்டிக் கொடுங்கோஎனக் கடிதம் போட்டவை. அதோடைதான் அம்மாக்கு இப்பிடிசிலநேரம் எல்லாத்தையும் மறந்து போவா. ஆனால் அண்ணாவை நல்லாய்த்தான் இருக்கினம் அறிஞ்சனான். ஆனால் அம்மா இப்பவும் அவை கஷ்ட்டப்படினம் என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறா

இந்த ராசாத்திதான் என்னை 1500 ரூபாய் ரிக்கற் எடுத்து மருதடியானிட்டையும் வேலக்கை பிள்ளையாரிட்டையும் கூட்டிக் கொண்டு போறாள்…”

மீண்டும் அவர் சொல்லிக் கொண்டேயிருக்க நான் என்னிடத்திற்கு திரும்புகின்றேன்.

இப்போ புகையிரதம் அதிகமாக ஆட்டுகிறது போல இருக்கின்றது.

இன்ரசிற்றி ரிக்கற்றின் விலை 1500 என்ற குரல் கட்டாயம் இனிக் கொஞ்சநாட்களுக்கு எனக்கு கேட்டு கொண்டே இருக்கும்.

இன்று மாலைக்குள் கட்டாயம் முகநூலில் என் பக்கம் அன்னையர் தின வாழ்த்துகளால் நிறைந்திருக்கும்.

கொக்குவிலும் இணுவிலும் வரும் பொழுது. செம்பாட்டு தரையில் புகையிலைக் கன்றுகளை பாhத்து என் மனம் குதூகலிக்குமோ தெரியாது.

இல்லையக்காஅவரின் வாழ்க்கை காலத்தில் 1500ரூபாய்க்கு ஒரு பவுண் தங்கம் வாங்கி இருப்பார். ஏதோ ஒரு கோயிலில் முழுநாள் திருவிழாவை நடாத்தி முடிச்சிருப்பார். பிறகு போர் அது இது பிள்ளைகள் என வாழ்க்கை முன்னே ஓடினாலும் அவர் ஏதோ ஒரு காரணத்தாலை அங்கேயே நிற்கிறார்என அக்காவிற்கு சொன்னதை மனம் மீண்டும் இரைமீட்டிப் பார்க்கின்றது.

இரவு மணி இரண்டிற்கு வந்தாலும் எனக்காக சக்கர நாற்காலியில் காத்திருக்கும் அம்மாவின் நினைவும் கூடவே வருகிறது.

ஏன் முழிச்சு உடம்பைக் கெடுக்கிறியள்

நான் உனக்காகவோ முழிச்சு இருந்தனான். நித்திரை வரேல்லைஅதுதான் கோப்பித் தண்ணி குடிக்க வந்தனான்

சக்கரநாற்காலியுடன் அவர் தனது அறையினுள் செல்கின்றார்.

தம்பியன் வந்திட்டானோ?இது அப்பா.

சத்தம் போடாமல் படுங்கோஏன் முழிச்சிருந்தனாங்கள் எண்டு பேசப்போறான்

கண்கள் கலங்கின்றன.

அக்கா அதனை கண்டு கொள்ளாமலிருக்க யன்னல் ஓரம் முகத்தை திருப்பிக் கொள்கின்றேன்.

லெமன்பப் பிஸ்கட்டும் இஞ்சி சோடாவும் அப்படியே இருக்கின்றன.

1 Comment on “இன்ரசிற்றி ரிக்கற்றின் விலை 1500 (சிறுகதை)

  1. உறவுகளின், இன்பம் துயரங்களை உரைக்கின்ற சிறுகதை. தாயை இழந்த மகனின் துக்கம், நீண்ட பயணத்தை தொடர வைக்கிறது.வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் , தாயக உறவுகளை நாடி விரைவாக விமானம் விரைவு தொடர்வண்டியில் ” பாச ” உறவுகளைத் தேடிவரும் இன்பமும் துன்பமும் நிறைந்த ” உறவுக் கதை ” இது தானோ ! தொடர் வண்டியில் முதிய தாய் ஒருவர் , தாயின் அக்கறையைக் காட்டுகிறார் ” கொஞ்சம் தேநீர் குடிங்கோ ” என்கிறார். இதுதான் ஒவ்வொரு தாயின் குணம். நல்ல கதை ஓட்டம். நன்று.

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)