இதற்காகத்தானா (?) –சிறுகதை.
இந்த 34 வருடத்தினுள் என்னவெல்லாமோ மாறி விட்டது.
ஒரு டென்மார்க் நாணயத்தின் பெறுமதி இலங்கை நாணயத்திற்கு 4.50ல் இருந்து 22.50 ஆகிவிட்டது.
பாவித்த ஒரு சோடா அல்லது பியர் போத்தலைத் திருப்பிக் கொடுத்தால் அன்று கடைகளில் 1 குறோனைத் திருப்பித் தருவார்கள்;.
இப்போது 1 – 1½குறோன்கள் தருகிறார்கள்.
ஆம்…அது இலங்கைப் பெறுமதிக்கு 4.50ல் இருந்து 33.75 ஆகியிருந்தது.
அப்போது நாங்கள் இந்த நாட்டிற்கு வந்த காலம்.
றோட்டின் கரையில் கிடக்கும் ஒரு போத்தலை எடுத்து கடையில் கொடுத்து 1 குறோனை வாங்க மனம் சொல்லும்.
ஆனாலும் மானா முதலியார் வழிவந்த அப்பப்பா காதில் கடுக்கனுடனும் மார்பில் பட்டு உத்தரியத்துடனும்…. அப்பம்மா எட்டு முழ கொய்யகச் சேலையுடனும் மார்புப் பதத்துக்கத்துடனும் நின்று ”மற்றவர்கள் வாய் வைச்சு உறிஞ்சிய அதனைத் தொடாதே”, என வெருட்டுவார்கள்.
தாண்டிச் சென்று விடுவேன்.
அடுத்தநாள் அதே வீதி வழியே வரும் பொழுது கடைக்கண்ணால் பார்ப்பேன்.
அதிகமாக அது அந்த இடத்தில் இராது.
எனக்கொரு நண்பன் இருந்தான் – அவனை அவனது அப்பப்பாவும் அப்பாம்மாவும் வெருட்டுவதில்லைப் போலும்.
ஓடியோடிப் பொறுக்குவான்.
எப்படியும் ஒரு நாளில் 10-15 போத்தல்கள் பொறுக்குவான்.
அந்தக் காசில் காம்பில் இன்னோர் தமிழ் ஆள் காட்டும் வீ.டீ.யோ. படத்திற்கு கூட்டிச் செல்வான்.
ஒரு ஆளுக்கு 2 குறோன்கள் தான் ரிக்கற்.
செஞ்சிலுவைச் சங்கத்தின் தொலக்காட்சிப் பெட்டியையும் வீ.டி.யோ. மெசினையும் இலவசமாகப் பெற்று ஜேர்மனியில் இருந்து தபாலில் வரும் வீ.டி.யோ. கொப்பியில் அவர் படம் காட்டுவார். எப்பிடியும் அவருக்கு ஒரு படத்துக்கு 100 குறோன்கள் தேறும்.
இன்னொருவர் என்னைப் போல் சிகரட் குடிக்காத ஆட்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் இலவசமாகத் தரும் சிகரட்களை எங்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி காம்புக்கு வெளியே இருந்த மற்றைய தமிழ் ஆட்களுக்கு அதிக விலைக்கு விற்பார்.
இவ்வாறு தனக்கு தனக்கு முடிந்த வகையில் சைற்றில் பணம் ஈட்டுதலில் எங்கள் மக்கள் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள்.
எங்களுக்கு கைச்செலவிற்காக கிழமை காசு தரப்படும் வியாழக் கிழமை ஒன்றில் தான் முதன் முதலாக மிகச் சிறிய அளவில் ஒவ்வோர் கிழமையும் கூறும் ஏலச்சீட்டு; ஆரம்பமாகியது.
அதனைத் தொடர்ந்து வட்டி.
முடிந்தவன் முன்னேறினான்.
முடியாதவர்கள் மௌனமாய் இருந்தார்கள் – என்னைப் போல் பார்வையாளர்களாய்…அல்லது விமர்சகர்களாய்.
ஒரு நாள் என் நண்பன் முகம் முழுக்க வீங்கியபடி கடைவாயில் இரத்தக் கசிவுடன் நின்றிருந்தான்.
காரணத்தை அறிந்த பொழுது அதிர்ச்சியாய் இருந்தது.
இவன் பிளாட்பாரத்தில் உள்ள சின்ன சின்ன குப்பைத் தொட்டிகளில் பியர் போத்தல்களைப் பொறுக்கிக் கொண்டு நின்ற பொழுது ஒரு டெனிஷ்காரன் வந்து தடுத்து இருக்கின்றான்.
இது அவன் நேரமாம். அவனது ஏரியாவாம்.
போதை வஸ்துக்கு அடிமையாகி புகையிரத்தின் வெளியே வாழும் கூட்டத்தில் அவனும் ஒருவனாம்.
தங்களுக்குள் எந்த எந்த பிளாட்பாரம் எவருக்கு என்றும்…. எந்த எந்த நேரத்தில் எவரவர் போத்தல் பொறுக்குவது என்றும் அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தமாம்.
என் நண்பன் ஜனநாயம் பேசியிருக்கின்றான்.
முகம் வீங்கியிருக்கிறது.
அவிழ்த்து விடப்படும் நெல்லிக்காய் மூட்டையில் இருந்து அவைகள் ஓடுவது போலத்தான் எங்கள் வாழ்வும் இங்கு ஓடத் தொடங்கியது.
ஓட்டம்!
பணத் தேடலுக்கான ஓட்டம்!!
கௌரத் தேடலுக்கான ஓட்டம்!!!
கார் – வீடு – இத்தியாதி இத்தியாதிக்கான ஓட்டம்.
ஓடிக்கொண்டு இருக்கும் பொழுதே எவருடன் எவருடன் இணைந்து ஓடுவது…. எவரை எவர் விலத்தி ஓடுவது…. எவரை எவர் காய் வெட்டுவது என்று அவதானித்தபடி ஓட்டம்.
எந்த ஊர்…எந்த வட்டாரம்…எந்த தெரு…எந்த இயக்கம்…என்ன கல்வி என்று அரிதட்டினுள் போட்டு அரித்து அரித்து இவர்களை வீட்டுக்கு சாப்பாட்டுக்கு கூப்பிடுவது…இவர்களுக்கு பிறந்தநாளுக்கு சொல்வது…இவர்களுக்கு கல்யாணத்திற்கு சொல்வது என கணிதபாடத்தில் தொடைப்பிரிவு பற்றி படித்தது போல அனைத்து வட்டங்களின் வெட்டும் பகுதியில் எங்களையும்…மற்ற மற்ற வட்டங்களின் வெட்டுப் பரப்புகளில் மற்றவர்களையும் நிறுத்தி நிறுத்தி அனைவருக்கும் நல்லவராய் ஓடும் ஒரு ஓட்டத்தில் அனைவருமே திறமைசாலிகள் ஆகினோம்.
டென்மார்கில ஒரு கிழமைக்கான வேலை நேரத்தை 38 மணித்தியாலத்தில் இருந்து 37 மணித்தியாலமாகக் குறைக்கு வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது நாங்கள் கிழமைக்கு 50 – 60 மணித்தியாலங்களைத் தாண்டி வேலை செய்து கொண்டிருந்தோம்.
முழங்காலுக்குள்ளும் முகுதுத் தண்டிலும் சாடையாக வலித்த பொழுதும் எங்கள் பிள்ளைகளின் பட்டப் படிப்புகளும் எக்ஸ்ரா ரியூசன்களும் மட்டும் தான் எங்கள் கண்களுக்குள் தெரிந்தது.
”உங்கள் பிள்ளை என்ன படிக்குது?”என்றெல்லாம் கேட்பதுக்கு பதிலாக ”உங்கள் பிள்ளை எந்த யூனி?”என்றுதான் கேட்கப் பழகிருந்தோம்.
பிள்ளைகளின் படிப்பைத் தவிர எங்களுக்கு எதுவுமே கண்களுக்கு தெரியவில்லை.
வெள்ளிக்கிழமைகளில் பிள்ளைகளுக்கு மாமிசம் இல்லாவிட்டால் சாப்பாடு இறங்காது என்றால் குறைந்த பட்சம் ஒரு நீலக்கால் நண்டுக்கறியையோ மீன் பொரியலையோ செய்து வைத்து விட்டுத்தான் பின்பு குளித்து தோய்ந்து கோயிலுக்குப் போவதை எங்களில் பலர் வழக்கமாய்க் கொண்டிருந்தோம்.
”கோயிலுக்கு போறதெண்டால் அவர் வெள்ளிக் கிழடமைகளில் மாமிசம் சாப்பிட மாட்டார்”என பெருமையாகப் பேசியபடியே ஐயரிடம் பவ்யமாக விபூதி வேண்டும் புதிய கலாச்சாரமும்….
”வெளிநாடு வந்து விட்டால் உதெல்லாம் பார்க்க ஏலாது – கடவுள் சொன்னவேரோ வெள்ளிக் கிழமைகளில் இப்படி இருக்க வேண்டும் என்று –கண்ணப்ப நாயனார் என்ன செய்தவர்”என்ற புதிய ஜனநாயக கொள்கைகள் இங்கு உருவாகின.
பாம்பு தின்னும் ஊரில் நடுத்துண்டுக்கு போட்டி போட்டுக் கொண்டு நானும் ஓடிக் கொண்டு இருந்தேன்.
இந்த ஓட்டத்தில் விழுந்த முதல் அடி என் மகள் பிரேமா திருமணத்திற்கு மறுத்த பொழுதுதான்.
பி. எச். டீ. முடித்த பின்புதான் திருமணம் என திட்டவட்டவாய் சொல்லியிருந்தாள்.
அவள் அதில் திறமைச் சித்தி எய்திய பொழுது அவளுக்கு 32 வயதாகியிருந்தது.
என்னதான் படித்திருந்தாலும்…என்னதான் அழகாய் இருந்தாலும் வயது என்பது டிஸ்குவாலிக்கேசனாய் போய் இரண்டொரு திருமணம் தள்ளிப் போகவே இனி எதற்காக ஒரு திருமணம் என முடிவுக்கு அவள் வந்திருந்தாள்.
”என்னைப் போலை எத்தினை பொம்பிளைப் பிள்ளையள் இருக்கினம். டெனிஸ் பிள்ளையள்…ஆப்கானிஸ்தான் பிள்ளையள்…பாக்கிஸ்தான் பிள்ளையள்…. ஏன் தமிழ் பிள்ளையள்…”தாயிடம் வாய் காட்டியிருக்கின்றாள்.
”இவள் இப்பிடிச் சொல்லுறாள். என்னப்பா செய்யுறது?”மனைவியிடம் கேட்டன்.
”நீங்களும் நானுமாய் அவளின்ரை காலை கட்டிப் போடாட்டி அவள் வேறு வாழ்க்கை வாழ்ந்திருப்பாள் தானே”
மனைவி குனிந்தபடியே கூறினாள்.
எனக்கு உறைக்கவே செய்தது.
நான் நிமிர்ந்து பார்த்தன்.
”16 வயதிலை ஓம் நாங்கள் செய்து தாறம் என்று சொல்லி லிவ்விங் ருகெதர் கலாச்சரத்துக்கை போக விட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறியோ?”
மனைவி ஏதும் பேசவில்லை.
அவள் கண்களால் ஒழுகிக் கொண்டிருந்தது.
பின்பு தன்னை ஆசுவாசுப்படுத்திக் கொண்டு கேட்டாள்.
”ஏனப்பா?… இவளுக்கு அந்தப் பொடியன்தான் எண்டு ஒரு நிச்சயிதார்த்தம் போலை செய்து போட்டு விடுவம். பிறகு படிப்பெல்லாம் முடிய கால நேரம் வரேக்கை செய்து கொடுத்தால் என்;ன?
”இஞ்சை பார்! வேணுமென்டால் நாளைக்கே தாலிகட்டுவம் எண்டு சொல்லு ஓம் என்னுறன். ஆனால்….”
என் மூச்சு மேலும் கீழும் வாங்கியது.
”ஆனால் இப்ப சேந்திருக்க விட்டு விட்டு பிறகு கண்டறியாத ஒரு கன்னிகாதானத்தை நீயும் நானும் சேர்ந்து நிண்டு செய்து வைக்கிறது எனக்கு சரிவராது”
நானே தொடர்ந்து உரத்த குரலில் கத்திக் கொண்டு இருந்தேன்.
பிரேமா வந்து கதவை அடித்துச் சாத்தினாள்.
அப்படி ஒரு வார்த்தையை என் வாய் உதிக்கும் வகையில் தவமணியக்காவின் அன்றைய கதைகள் என்னை காயப்படுத்தியிருந்தது.
ஒரு மகளின் தந்தையாக பெரும் வலியை அனுபவித்த நாள் அது.
நாங்கள் வசித்த தொடர்மாடிக் கட்டத்தின் பேஸ்மன்ரில் அவளும் கந்தசாமி அண்ணையின் மகனும் நெருக்கமாய் நின்றிருந்ததைக் கண்ட தவமணியக்கா, ”உடுப்பு தோய்க்கிற மெசினுக்கை உடுப்பு போட பேஸ்மன்றுக்கு போக வெட்கமாய் இருக்கு”, என போட்டு விட்ட சாம்பிராணி 16 வருடங்களுக்கு முன்பு எப்படி புகைத்தது என ஊருக்கே தெரியும்.
அன்று நாம் வசித்திருந்த ஊருக்கு அவல்.
செய்திகளை முந்தித் தருவதில் தவமணியக்கா மிகப் பெரிய கெட்டிக்காரி.
அதோடுதான் சிற்றி மாறி வந்தோம்.
கந்தசாமி அண்ணையும் மகனும் இப்போது வேறு இடத்திலை செய்து நல்லாய் இருக்கின்றானாம்.
இவள்தான் இப்பிடி….
இனி அவளுடன் கதைத்து ஏதும் பிரயோசம் இல்லை…வயது போனாலும் வேலையிடத்தில் யாரையாவது விரும்பி வந்து சொன்னால் செய்து வைப்போம் என்ற கையறு நிலையில் அடுத்த இரண்டு வருடம் ஓடியது.
அடுத்தது ஜெயன்.
ஜெயன் என்னும் ஜெயபாலகிருஷ்ணன்.
பிரேமாக்கு இரண்டு வயது இளமை.
கம்பியூட்டர் துறைக்கான பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் பொழுது ஒரு ஆபிரிக்காரியைக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தினான்.
அவனுடன் அன்று பட்டம் பெற்றவள்.
கறுத்த அங்கியூடு அவளின் வயிறு வீங்கியிருந்தது வடிவாகத் தெரிந்தது.
மனைவியையும் மகளையும் நிமிர்ந்து பார்த்தேன்.
மனைவி ஏதும் சொல்லவில்லை.
பிரேமா தம்பியாருக்கும் அந்தப் பெண்ணுக்கும் வாழ்த்துச் சொல்லி கட்டி அணைத்தாள்.
சிறிது நேரத்தில் அவளின் குடும்பத்தினரும் வந்து சேர்ந்து கொண்டார்கள்.
வலிந்திழுத்த புன்னகையை அவர்களுக்கு பரிமாறினேன்.
கை குலுக்கிக் கொண்டோம்.
அனைவரும் அன்று இரவு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விருந்துக்கு சென்ற பொழுது எதுமே என் தொண்டையால் இறங்கவில்லை.
என் பக்கத்தில் அமர்ந்திருந்த ஆபிரிக்கச் சம்மந்தி பல்லுக்கும் நாக்குக்கும் இடையே புகையிலை போன்ற ஒன்றை மென்று கொண்டிருந்தார்.
மணம் வயிற்றைக் குமட்டியது.
என் மனைவி இடைக்கிடை என்னைப் பார்த்தபடி வாட்டிய உருளைகு; கிழங்குடன் போராடிக் கொண்டிருந்தாள்.
எல்லாம் முடிந்து வீட்டிற்கு வர இரவு பதினொரு மணியாகி விட்டது.
அதிகமாக எங்கள் தொடர்மாடி வீடுகளின் லைற்கள் அணைக்கப்பட்டிருந்தன.
எங்கள் கட்டத்தில் மட்டும் 24 வீடுகள்.
பிரதான வெளிவாசலில் என் கால்களில் ஏதோ தட்டுப்பட்டது.
குனிந்து பார்த்தேன்.
வெறும் பியர் போத்தல் ஒன்று.
ஒரு கணம் அதனை விட்டு விலகமுடியாது இருந்தது.
எடுப்போமா.. விடுவோமான அன்று விலத்திப் போன அதே பியர் போத்தல் தான்.
அன்று அந்த ஒரு குறோன் தந்திருக்க கூடிய சந்தோசத்தை எனக்கு எதுவுமே வாழ்க்கையில் தந்திருக்க முடியாது.
கண் முன்னே ஒரு காட்சி விரிகிறது.
வெற்றுப் போத்தல்களால் என் வீட்டின் மூன்று அறைகளும் – வரவேற்பு அறை – குசினி –குளியலறை –நடைபாதை –பின்நேரத்தில் காற்று வாங்கும் அல்ரன் எல்லாமே சடுபுடு என்று நிறைகிறது.
ஒரு இலட்சம் போத்தல்கள் இருக்குமா?
இருக்கலாம்.
இப்போது அவை நகர்ந்து என் பக்கத்து வீட்டுக்காரன் – எதிர் வீட்டுக்காரன் – மேல் வீட்டுகாரன் – கீழ் வீட்டுக்காரன் – அனைத்து வீட்டுக்காரன்கள் வீட்டையும் நிரப்புகின்றன.
அந்த அந்த வீட்டில் இருப்பவர்கள் சத்தம் போட்டபடி வீட்டின் வெளியே ஓடி வந்து என்னுடன் நின்று கட்டடத்தைப் பார்க்கின்றார்கள்.
அவர்ரவர்கள் தம்தம் பாஷையில் சத்தம் போடுகின்றார்கள்.
எனது வீட்டில் இருந்துதான் அவை நகரத் தொடங்கியது என ஆளுக்கால் எம்மிருவரையும் காட்டிக் காட்டிக் கதைக்கின்றார்கள்.
இப்போது அவை அந்த தொடர்மாடியில் உள்ள 24 வீடுகளையும் நிரப்புகின்றன.
வீடுகள் நிரம்பியதும் தொடர்மாடி வீடுகளின் அனைத்துப் படிகளும் பியர் போத்தல்களால் நிரம்புகின்றன.
24 வீட்டு ஆண்கள் – பெண்கள் – குஞ்சு – குருமன்கள் அனைத்தும் கட்டத்திற்கு வெளியே.
குழந்தைகள் தங்கள் விளையாட்டுச் சாமான்களை விட்டு விட்டு வந்து விட்டொம் எனக் கதறுகிறார்கள்.
ஒரே அமளி துமளி…
என் பழைய நண்பன் என் காலில் தட்டுப்பட்ட ஒரேயொரு போத்தலை ஒரு ஊத்தைப் பிளாஸ்ரிக் பையில் போட்டபடி அப்பால் செல்கின்றான்.
மிகவும் அழுக்கான உடையுடன் போகின்றான்.
அவனும் அந்த போதை வஸ்து கும்பலுடன் சேர்ந்து விட்டானா என மனம் அவனுக்காகப் பரிதாபப்படுகின்றது.
அவன் கண்கள் பற்றைகளினுள் வேறு ஏதாவது போத்தல்களு; இருக்கின்நவா எனத் தேடுகின்றன.
என் கண்கள் எங்கள் தொடர்மாடிக் கட்டத்துக்கு தாவுகின்றன.
இப்போ அனைத்தும் வீடுகளும் வீட்டுக்கு ஒரு இலட்சப்படி 24 இலட்சம் போத்தல்களால் நிரம்பியிருகின்றன.
ஏதாவது ஒரு போத்தல் வெளியே வந்து விழுந்தால் அத்தனை போத்தல்களும் வெளியே வந்து விழுந்து உடைந்து விடும்.
அவற்றின் அன்றைய பெறுமதி 24 இலட்சம் குறோன்கள்.
இன்றைய பெறுமதி 36 இலட்சம் குறோன்கள்.
தலைக்குள் ஏதோ மின்னுகின்றது.
எனது வங்கியின் இன்றைய இருப்பு 36 இலட்சம் குறோன்கள்.
மனைவி என் கையைப் பிடித்து உலுப்புகின்றாள்.
நாங்கள் இருவரும் தனியே நிற்கின்றோம்.
எங்களைச் சுற்றி யாருமே இல்லை.
தொடர்மாடிக் கட்டடிடமும் அங்கேயுள்ள மனிதர்களும் நன்கு தூங்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.
தூரத்தில் பொதிகள் கொண்டு செல்லும் இரவுப் புகையிரத்தின் சத்தம் கேட்கின்றது.
கண்முன்னே வந்து கலைந்தது அனைத்தும் பிரமை என்றாலும் சில விடயங்கள் மட்டும் நிஜம்.
முதலாவது எனது வங்கியின் இருப்பு 36 இலட்சம் குறோன்கள்.
இரண்டாவது நானும் மனைவியும் இங்கு வாழ்ந்தது 34 வருடங்கள்.
மூன்றாவது எனது திருமணமாகாத பி.எச்.டி. படித்த மகளின் வயது 32.
நான்காவது எனக்கு பிறக்கு இருக்கும் ஆபிரிக்க பேரக்குழந்தையின் வயது 32 கிழமைகள்.
ஐந்தாவது தினமும் நான் போடும் சலரோக ஊசியின் அளவு 30 யூனிட்டுகள்.
இப்போதும் எண்ணளவில் என் பணத்தின் எண்ணிக்கைதான் உயர்ந்து நிற்கின்றது.
36 மற்றைய முப்பதுகளை விட பெரிது தானே?
இதற்காகத் தானே (?)
Skriv et svar