இடைவெளி

இடைவெளி

எனக்கு இப்போது ஆறு கால்கள்.

நாலு சிறிய சக்கரத்தில் உருட்டிச் செல்லும் இந்த கை வண்டியை நேற்றுத்தான் நகரசபை எனக்குத் தந்தது.

இரண்டு வருடமாய் நகரசபையுடன் இதற்கு பெரிய இழுபறி. இப்போது தான் அது எனக்கு கிடைத்திருக்கு.

கடைகளுக்குள் உருட்டிச் சென்று எனக்கு மட்டும் தேவையான வீட்டுச் சாமான்கள் வேண்டுவதற்கு இந்த வண்டி வசதியானது. எனது குடியிருப்பும் இந்த பெரிய அங்காடிக் கட்டடத்திற்கு பின்னாகவே உண்டு. இதனுடனேயே லிவ்ற்றுக்குள் சென்று ஐந்தாம் மாடியில் உள்ள வீட்டுக்குள் சாமான்களைக் கொண்டு போய் விடலாம்.

இது இல்லாமலும் இந்த ஐம்பத்தினான்கு வயதிலும் என்னால் நடந்து செல்ல முடியும். முள்ளந்தண்டில் ஒப்பிரேசன் செய்து கொண்ட பின்பு இது இருந்தால் கொஞ்சம் உதவியாக இருக்கம் எனப் பல பேர் சொன்னார்கள்.

அது மட்டுமில்லைக்; காரணம். இதனுடன் நடந்து போக வேண்டும் என்பது ஒரு கனா.

இல்லையில்லை

இது ஒரு தவம்!

தூரத்தில் இருக்கும் என் இரு மகள்களுக்கும் மருமகன்களுக்கும்; இதைப்பற்றிச் சந்தோசமாகச் சொன்னன்.

ஏன் மாமி! இதுக்குப் போய் இரண்டு வருடம் அவங்களோடை அடிபட்டுக் கொண்டு இருந்தனிங்கள். கொஞ்சக் காசுதானோ வேண்டியிருக்கலேமே?” – இது என் மருமகன்.

கொஞ்சக் காசு என்று முதலே எனக்குது; எனக்குத் தெரியாது> என சொல்லிவிட்டு ரீசீவரை வைத்து விட்டேன். 

என் சந்தோசத்தில் பங்கு கொள்ளாமல் காசு கணக்குச் சொன்னதில் மனதுக்கள் ஒரு சின்ன வருத்தம். மருமகன் நல்ல பிள்ளை. ”வரும் போது இரண்டு கத்தரிக்காய் வேண்டி வாருங்கள் என்றால் அதன் பில்லையும் கொண்டு வந்து தருவார். பின் மகள் அவருடன் சண்டை பிடிப்பாள். என்ன செய்வது அவரை? அப்படி இந்த நாடு இவர்களை வளர்த்து விட்டிருக்கு. எனக்கு வாய்த்தது போல இல்லாது என் மகளுடன் நல்ல கணவனாய் அவர் இருக்கிறார் என்றதே எனக்குப் போதும்.

பின் இளையமகளுக்கு தொலைபேசி எடுத்தேன்.

ஓமம்மா!… அத்தார் சொன்னது சரி! கொஞ்சக்காசு தான் என் இளைய மகளும்; டெலிபோனில் மருமகனை ஆமோதித்தாள்.

வையடி போனை என சின்னவளை செல்லமாய் கோவித்துக் கொண்டு ரீசீவரை வைத்து விட்டேன்.

அங்காடியில் உள்ள கோப்பி பாரில் ஒரு பால் கோப்பிக்கும் ஒரு சின்னத்துண்டு கேக்கும் வரிசையில் நின்று ஓடர் குடுத்துவிட்டு ஆட்கள் இருந்து குடிக்கும் இடத்துக்கு என் தள்ளுவண்டிலை மெதுவாக நகர்த்திக் கொண்டு வருகின்றேன்.

ஒவ்வொரு வட்டமான மேசையைச் சுற்றி நான்கு கதிரைகள். ஒவ்வோர் மேசையின் நடுவிலும் சிறிய தண்ணீர் சாடியினுள் ஒரு தாமரைப் பூ. அதன் நடுவில் ஒரு மெழுகுவர்த்தி எரிந்தபடி அழகாக இருக்கின்றது.  

என் இரு மகள்களும் தங்கள் தங்கள் குடும்பத்துடன் எட்டவாகவே இருக்கிறார்கள்.

தங்களுடன் வந்து இருக்குமாறு சொன்னபோது நான்தான் மறுத்து விட்டேன். குடும்பம் என்பதில் அவரவர்களின் சந்தோசங்கள்… துக்கங்கள்… சண்டைகள்… சச்சரவுகள்… ஊடல்கள் எல்லாத்துக்கும் இடம் வேண்டும். அதற்கிடையில் ஏன்தான் நான் நந்தி மாதிரி.

எனவேதான் தனித்து இருக்கின்றேன் – என் பசுமையானதும் கரமுரடானதும் ஆன நினைவுகளுடன்.

இப்போது எல்லாத்தையும் என்னால் தனியே கவனித்துக் கொள்ள முடிகிறது.

நான் இப்போது இருபத்தியேழு வருடங்களுக்கு முன்பிருந்த அசடு இல்லை.

எதுவுமே தெரியாத ஒரு மனைவியாய் பத்து வருடம் என்னை கவனித்து என்னுடன் வாழ்ந்து (?) விட்டு யாரோh ஒருவன் கென்றியைப் பற்றியும் என்னைப் பற்றியும் சொன்னதை மட்டும் வைத்துக் கொண்டு ஒருநாள் அவர் ஓடிய பொழுது பக்கத்து நகருக்குப் போவதற்கு கூட எங்கு பஸ் வரும் எப்போது வரும் என தெரியாது எட்டு வயதும் ஆறு வயதுமான பெண் பிள்ளைகளுடன் அலைந்தவள்தான் நான்.   

ஏன் போனார்? நான் என்ன பிழை விட்டேன்? எதுவுமே எனக்குத் தெரியாது? என்னிலை ஏதோ பிடிக்கவில்லை அதுபடியாலை போய்விட்டார் என எனக்கு நான் சமாதானம் சொல்லிக் கொண்டு இருக்கின்றேன். அதுக்கு கென்றி ஒரு சாட்டு. அவ்வளவுதான். இல்லாவிட்டால் என் வெகுளித்தனத்தின் மீது மற்றவர்கள் காட்டும் அன்பு அவருக்குள் ஒரு பொறாமையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதுக்கு சின்ன இரண்டு பெண் பிள்ளைகள் என்ன செய்ய முடியும்? நான் ஏதாவது பிழை விட்டிருந்தால் கூட அந்த பச்சை மண்ணுகளின் முகங்களைப் பார்த்து அவர் என்னை மன்னித்து இருக்க வேண்டும். மன்னிக்காட்டிலும் பிள்ளைகளுக்காக என்னுடன் வாழ்ந்திருக்க வேண்டும். இரண்டுமே நடக்கவில்லை. போய்விட்டார் என்பது மட்டும் நியம்.

வாழ்வின் மீது கொண்டிருந்த நம்பிக்கைகள் எல்லாம் தவிடுபொடியாகிய நாள் அது.

வாழாவெட்டி என்ற பெயர் மட்டும் தான் எனக்கு மிஞ்சியது. புருஷனோடைதான் வாழவில்லையே தவிர என் இரண்டு பிள்ளைகளையும் பல்கலைக்கழகம்வரை கொண்டு சென்று என் கடமையை சரிவரவே செய்தபோதும் வாழவெட்டி என்ற பெயர் இல்லாமல் போயிடவில்லை. அதனைப் பற்றிய கவலையும் எனக்கு இல்லை. நான் என் பிள்ளைகளுடன் நன்கு வாழ்ந்து அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வந்திருக்கிறன் அது போதும்.

எனது மேசையை நோக்கி சுசானா வந்து கொண்டிருக்கின்றாள். கிட்டத்தட்ட எனது வயது. ஆனால் என்னைவிட மிகவும் முதுமையாக இருப்பாள். தகப்பன் ஜேர்மனி. தாய் நோர்வே. நான் வசிக்கும் கட்டடத்தின் இரண்டாம் மாடியில் அவள் வசிக்கின்றாள். எனக்கு எதிர்மாறான வாழ்வு அவளுடையது. சின்ன வயதிலேயே குடிக்குப் பழக்கப்பட்டு பின் அதுவே நோயாக கணவன் அவளை நெடுங்காலத்துக்கு முன்னால் விட்டுப் பிரிந்து விட்டான். பிள்ளைகளை அவள் வளர்க்க அரசாங்கம் அனுமதிக்கவில்லை. எனவே அவனே பிள்ளைகளை வளர்த்து நல்லாக்கி இருக்கின்றான். என்னைக் காணும் போதெல்லாம் அவனின் கதையையும் பிள்ளைகளையும் கதைகளையும் தான் வளர்க்கும் நாயின் கதைகளையும் சுசானா சொல்லியபடி அழுவாள். எனக்கு தன் கதைகளை சொல்வதில் அவளுக்கு பெரிய ஆறுதல். நான் யாரிடமும் என் கதைகளைச் சொல்லி அனுதாபமோ ஆறுதலோ பெறுவதில்லை. அப்பிடி ஒரு வைராக்கியம் எனக்குள். அந்த வைராக்கியம் தான் இத்தனை வருடமும் என்னையும் பிள்ளைகளையும் வாழ வைச்சிருக்கு.

நெடுகலும் பிள்ளைகளுக்குச் சொல்லுவன்”நீங்கள் படிச்சு நல்லாய் வந்தால்தான் அப்பா அம்மா பிரிஞ்ச கதைகளை உலகம் மறக்கும். அப்பிடி இல்லாட்டி அதை மட்டும்தான் உலகம் ஞாபகம் வைச்சிருக்கும் என்று. அது என் இரண்டு பிள்ளைகளின் மனதிலும் உளியாலை செதுக்கினது போலை பதிந்திருக்க வேண்டும்.

மூத்தவளுக்கு மருத்துவபீடத்தில் மிகத்திறமையான சித்தி கிடைத்த அன்றுதான் முதலில் கென்றிக்கு டெலிபோன் எடுத்தனான். மற்றும்படி இத்தனை வருடம் எனக்கு தோன்றாத் துணையாக இருந்தது அவர்தான். ஒவ்வொரு கிழமையும் டெலிபோன் எடுப்பார். சொல்லி வைச்சாப் போல ஞாயிறு காலை பத்து மணிப் பூஜைக்குப் போய்விட்டு பன்னிரண்டு மணிக்கு வீட்டுக்கு வரவும் அவரின் தொலைபேசியும் வரவும் கணக்காக இருக்கும்.

நான் முதன் முதலாக அன்று டெலிபோன் எடுத்த பொழுது தலையில் இரத்தக்கட்டி வந்து கென்றி டென்மார்க்கின் மருத்துவபீட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் எடுத்திருக்கமாட்டேன்.

சொல்லுங்கோ மரியாணி

ஸ்வப்னாக்கு.” சொல்லத் தொடக்க முதலே அழத் தொடங்கி விட்டேன்.

என்ன ஸவப்னாக்கு?”

ஸவப்னாக்குத்தான் கம்பஸிலேயே அதி கூடிய மார்ஸ். சொல்லிவிட்டு அழத் தொடங்கி விட்டேன்.

அசடுஅசடு…” அப்பிடித்தான் அவர் என்னைக் பொதுவாக அழைப்பது.

பின்புதான் சொன்னார் தான் மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டிருப்பதாக.

எனக்குத் ’திக் என்றது.

சந்தர்ப்பம் தெரியாமல் அவருக்கு தொலைபேசி எடுத்து விட்டேனோ என்று.

ஆயிரம் தடவை மன்னிப்புக் கேட்டேன்.

சும்மா அசடுமாதிரிக் கதையாதை இனி அடுத்த வருடம் இதே மாதிரி கிறிஸ்ரியும்; பாஸ் பண்ணிட்டால் உனக்கு கொஞ்சம் விடுதலை தானே. அது எனக்கு எவ்வளவு சந்தோஷமாய் இருக்கு

எனக்கு கொஞ்சம் விடுதலை என்பதை எங்கிருந்து கதைக்கின்றார் எனக்கு நன்கு புரிந்தது. அவருக்கும் அது தெரியும்.

என் மனது ஆம் என்றது.

வாய் மௌனம் காத்தது.

எனது இந்த விடுதலைக்காக கென்றி பல வருடங்களாக காத்திருக்கின்றார் என்பதும் எனக்குத் தெரியும்.

அதை ஏற்கவும் நான் ஆயத்தமாய்த்தான் இருந்தேன்.

*

கென்றி!

அவரை ஊரிலேயே எனக்குத் தெரியும்.

என்னைவிட பதினைந்து வயது கூட.

அவரின் குடும்பம் எங்களுக்கு தூரத்து உறவு.

அந்தோனியார் ஊர்வலத்துக்கு அவர்களின் ஊருக்குப் போகும் போது கென்றியின் அப்பா என்னை ”மருமகளே வாடிஇ என்று பகிடியாக கூப்பிடுவார். 

மாமி என்னைக் கட்டிக் கொள்வதற்கு கென்றிக்குத் தம்பி ஏதும் பெத்து வைத்து இருக்கிறியளா?… மாமாக்கு சிவத்த மருமகள் வேணுமாம் என நானும் சிரித்தபடி கேட்பேன்.

அவனுக்கென்னடி பதினைஞ்சு வயதுதானே கூட நீ ஓம் எண்டால் நானே உந்தக் கிழவியை விலத்திப் போட்டு கூட உன்னைக் கட்டுவன் என சிரித்தபடி என் நெற்றியில் குருசு போட்டு கொஞ்சிவிட்டு பொக்கற்றில் என்ன இருக்குதோ அதைத் தந்து விடுவார் கென்றியின் அப்பா.

வாயடியில் கொஞ்சம் சாராயமும் வெற்றிலை பாக்கு மனத்தாலும் வஞ்சகம் இல்லாத பிறவி அவர்.

மாமியும் தோட்டத்தில் இருக்கிற மரக்கறி எல்லாம் பிடிங்கி கொண்டு வந்து கட்டித் தருவா. தங்களுக்கென வேண்டி வைத்திருக்கும் நல்ல பாரைக்கருவாடு அல்லது கணவாய்க் கருவாடு இருந்தால் அவற்றையும் தந்து விடுவா. புதுச்சேலை ஏதும் இருந்தால் அதனையும் தந்து விடுவா. நாங்கள் மிகவும் சந்தோசத்துடனும் சங்கோசத்துடனும் அவற்றை வேண்டிக் கொண்டு ஊர் திரும்புவோம்.

அவ்வாறே எங்கள் கோயிலில் மிகப்பிரமாண்டமாக நடக்கும் குருத்தோலை ஞாயிறு திருவிழாக்கும் அவர்கள் குடும்பம் எங்கள் வீட்டுக்கு வருவார்கள்.

அவர்கள் நிற்கும் அந்த மூன்று நாளும் கொண்டாட்டம் தான். ஆண்டவர் மரித்த வெள்ளிக் கிழமை எல்லாம் அமைதியாகத் தான் நடக்கும். அம்மாவும் மாமியும் உபவாசம் இருப்பார்கள். பின் அடுத்த இரண்டு நாளும் எங்கள் அப்பாவும் கென்றியில் அப்பாவும் மிகவும் கொண்டாட்டமாய் இருப்பார்கள். காலையில் இறக்கிய உடன் கள்ளில் இருந்து மாலையில் தவறணைச் சாராயம் வரை இருவருக்கும் வலு மொத்தமாய் இருக்கும். எங்கள் வீட்டின் பின்வளவில் குருத்தோலை ஞாயிறு விசேடத்துக்கு என வேண்டி வைத்திருக்கும் கிடாய் ஆடு வெட்டு… தோல் உரிப்பு… பங்கு போடல் எல்லாமே கென்றியின் அப்பாவின் தலைமையிலேயே நடக்கும்.

கென்றியின் அப்பாக்கு நல்லாய் வெறி ஏறி விட்டால் மீண்டும் மருமகள் படலம் தொடங்கி விடும். நல்லா வாட்டிய இறைச்சித் துண்டு தனக்கு அகப்பாட்டால் எனக்கு ஊட்டி விட பின்னால் திரிவார். அது நித்திரைக்குப் போகும் வரை குறையாது.

ஆனால் கென்றியோ நானோ இதுபற்றி பெரிதாக ஏதும் அலட்டிக் கொள்ளவதில்லை.

அப்போ எனக்கு 12. கென்றிக்கு 27.

வளர்த்தி மட்டும் இருபது வயது பெண்ணின் வளர்த்தி. 

பொடியளுக்கு பொடியலாய் நானும் பின்னேரங்களில் அவர்களுடன் கிளித்தட்டு மறிப்பேன். இரவில் காட்ஸ் விளையாட்டுக்கு ஒரு ஆள் குறைந்தால் நானும் கை குடுப்பேன்.

கென்றியின் அப்பாவும் அம்மாவும் பார்த்துக் கொண்டு நிற்பார்கள்.

ஒருநாள் காலை மீன் வேண்டிவர கடற்கரைக்கு கென்றியும் நானும் ஒரே சைக்கிளில் போனோம்.

கென்றியே என்னை முன்னால் வைத்து உழக்கிக் கொண்டு போனார்.

வேண்டி வரும் போது சைக்கிளுக்கு ஈச்சம் முள் குத்தி விட்டதால் மணலில் உருட்டிக் கொண்டும் கதைத்துக் கொண்டும் வந்தோம்.

அப்போது நான் பெரியபிள்ளை ஆகி விட்டேன் என நினைக்கின்றேன் சரியாக ஞாபகம் இல்லை.

மரியாணி!” அடித் தொண்டையில் இருந்து கென்றி கூப்பிட்டது போல இருந்தது.

திரும்பிப் பார்த்தேன்.

எங்கடை அப்பா மருமகளே மருமகளே என்று கூப்பிட நீ என்ன நினைக்கிறனி

எனக்கு ’திக் என்றது.

ஒன்றும் நினைப்பதில்லை எனச் சொல்லும் பொழுது ஏன் அன்று எனக்கு கண் கலங்கியது என்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை.

கென்றிக்கு என் மீது ஏதாவது?….’ அந்த நினைப்புடனே அந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு திருவிழா கழிந்தது.

*

எனக்கும் சுசானாக்கும் நாங்கள் ஓடர் செய்திருந்த பால் கிறீம் போட்ட கேக்கும் கோப்பியும் வந்தது. 

இன்று கேக் மற்ற நாட்களை விட கேக் மிகவும் நன்றாய் இருந்தது.

கிறீமை இன்னும் கொஞ்சம் தடிப்பாய் செய்திருக்கலாம் இது சுசானா.

இதுதான் எனக்கும் சுசானாக்கும் எப்போதும் உள்ள வேறுபாடு.

எதிலும் எப்போதும் திருப்தி எனது. எதிலுமே எப்போதும் குறைகாணுவது சுசானா.

ஆனாலும் இருவரும் இந்த மேசையில் சந்திப்பது இந்த இரண்டு வருடமாய் தொடர்கின்றது.

இதிலை யாரும் இருக்கிறார்களா என்று மிகவும் வயோதிப டெனிஷ்கிழவன் ஒருவரும் அவரது காதலியோ மனைவியோ ஒரு பெண்ணும் எங்கள் இருவரையும் கேட்டபடி தங்கள் சக்கர நாற்காலிகளை தள்ளியபடி எங்களின் அருகே வந்தார்கள்.

அவர்கள் இருவரும் மிக உயர்ந்த விலையான உடுப்பை அயன் பண்ணி மிகவும் நேர்த்தியாக அணிந்திருந்தார்கள். ஒருவேளை லோன்றியில் கொடுத்து அயன் செய்திருக்கலாம். நல்ல வேலையில் இருந்து தற்போது பென்சன் வயதை அடைந்திருக்க வேண்டும்.

கென்றி எப்பொழுதும் வைத்திருப்பது போல அந்தக் கிழவனும் கையில் ஒரு கைக்குட்டை.

அவர்களை மிகவும் உற்றுப் பார்த்தேன்.

என் கண்கள் கலங்கிக் கொண்டு வந்தது.

இதற்க்குத்தானா கென்றி ஆசைப்பட்டீர்கள்?”

இல்லை இதற்கும் மேலே என அந்தக் கிழவனுக்குப் பக்கத்தில் இருந்து கென்றி சொல்வது போலப்பட்டது.

*
கடற்கரையில் நானும் கென்றியும் கதைத்ததற்கு அடுத்த வருடமே கென்றிக்கு திருமணம் நடந்து டென்மார்க் வந்து விட்டார்;.

எங்கள் குடும்பம் முழுக்கப் போய் ஒரு கிழமையாக நின்று அவர்களுக்கு உதவினோம்.

அங்கு நின்ற அந்த ஒரு கிழமையும் கென்றியின் அப்பாவின் ”மருமகள் படலம் ஓயவில்லை.

நாலாம் சடங்கு முடியத்தான் நாங்கள் ஊர் திரும்பினோம். அன்றும் வழமை போல மாமா என் நெற்றியில் குருசு போட்டு கொஞ்சி காசு தந்தார். மாமி தன் கழுத்தில் இருந்த சங்கிலியைக் கழற்றிப் போட்டு விட்டு அழுதபடியே வழி அனுப்பினார்கள்.

அந்த அழுகையின் முழு அர்த்தம் இன்றுவரை எங்கள் குடும்பத்திற்கு விளங்கவில்லை. உண்மையில் வயது வித்தியாசம் பார்க்காமல்; என்னையும் மருமகளாய் ஏற்கத்தான் அவர்களும் விரும்பியிருந்தார்களா என்று அப்போதும் எங்கள் யாருக்கும் விளங்கவில்லை.

தொடர்ந்த அந்தோனியார் திருவிழாக்களிலும் குருத்தோலை ஞாயிறு விழாக்களிலும் இரண்டு குடும்பங்களும் சந்தித்துக் கொண்டுதான் இருந்தோம். கென்றியின் டென்மார்க் கதையளை மாமி அம்மாக்கு சொல்லும் போது பலமுறை அழுதிருக்கிறா. கென்றிக்கு வந்த பெண் தாங்களும் கென்றியும் எதிர்பார்த்த மாதிரி இல்லை என்பதுதான் காரணம். இது இப்பிடித்தான் இருக்கும் என சொல்ல வாழ்க்கை ஒன்றும் கணிதபாடம் இல்லையே?

காலமும் தன் பாட்டிலேயே நகர்ந்தும் ஓடியும் கொண்டு சென்றது.

எனக்கு 19 வயதாகிய பொழுது டென்மார்க்கில் இருந்து வந்திருந்த கென்றியின் மனைவியின் பக்கத்து ஊர் ஆட்களுக்கு என்னை பிடித்துப் போக பெண் கேட்டு வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் அவரசமாக போக வேண்டும் என்பதால் கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் கோயிலிலேயே திருமணம் நடந்தது. அதனால் கென்றியின் அப்பா அம்மா கூட வர முடியவில்லை. மனதுக்கு கஷ்;டமாய் இருந்தது. ஆனாலும் மாமி போட்டுவிட்ட சங்கிலி மணமேடையிலும்  என் கழுத்திலேயே இருந்தது.     

பின்பென்ன?

பனை வடலிகளுக்குள் வளர்ந்த என் வாழ்வு பனிப்பாறையில் கால் வைத்தது.

கென்றியும் விடயம் அறிந்து மனைவியுடன் விமானநிலையத்துக்கு எங்களை வரவேற்க வந்திருந்தார். டென்மார்க்கின் கொடி பூக்கொத்துகள் சகிதம் வந்து இருந்தார்கள். அன்று மதிய உணவையும் அவர்களே சமைத்து எங்களுக்காக எடுத்து வந்திருந்தார்கள்.

றெஸ்றோறண்டில் சாப்பிடுவம் என்றுதான் இவருக்கு சொன்னனான். இவர்தான் சமைக்க வேணும் என அடம் பிடிச்சு சமைச்சவர். எனக்கு வெளியிலை போற நாட்களிலை குசினிக்கை நின்று மல்லுக்கட்ட ஏலாது. தலை எல்லாம் மணக்கும் என கென்றியின் மனைவி சொல்லிக் கொண்டிருந்தாள்.

கென்றியின் அம்மா என் அம்மாக்கு தனது மருமகள் பற்றி சொல்லி வருத்தப்படுவதின் அர்த்தத்தை அப்போது தான் நான் அறிந்து கொண்டேன்.

கென்றி எங்கள் இருவரையும் நன்கு கவனித்தார்.

பின்பு புறப்படும் பொழுது எங்கள் இருவருக்கம் திருமணப்பரிசாகாக ஆயிரம் குறோன்கள் தந்து விட்டுப் போனார். எனக்கு மாமாவைப் பார்த்த போலவே இருந்தது. 

கோடையும் வின்ரரும் மாறி மாறி வர எனக்கும் அடுத்தடுத்து இரண்டு பெண் பிள்ளைகள். இரண்டும் சுட்டிகள். எனக்கு வாய்த்தவர் குடி கிடி என்ற எந்தக் கெட்ட வழக்கமும் இல்லாதவர். வாழ்க்கை தன் இயல்பில் பயணப்பட்டுக் கொண்டிருந்தது.

பிள்ளைகளுக்கு இருவருக்கும் ஐந்து வயதும் மூன்று வயதாகிய பொழுது ஊருக்குப் போகபோது தான் பிரச்சனையே கிளம்பியது.

எங்களைப் பார்க்க வந்த கென்றியின் அப்பா அம்மா என் மீது ”மருமகளே என அளவுக்கு அதிகமாக கொட்டிய அன்பும் என் பிள்ளைகளுக்கு அவர்கள் செய்த சீர்சிறப்புகளும் இவருக்குள் ஒரு கேள்வியைப் போட்டு விட்டது.

திரும்பி விமானத்தில் வரும் பொழுது கேட்டார் ”உனக்கும் கென்றிக்கும் எனக்கு உறவு.  

எனக்கு ’திக் என்றது.

வயது வித்தியாசம் இல்லாவிட்டால் கென்றி அண்ணையை திருமணம் செய்து வைத்திருப்பினம்

மிக இயல்பாகவே சொன்னேன்.

அண்ணை என்று சொல்லிக் கொண்டு எப்பிடி நீ?”

அதி உயரத்தில் பறந்தபடி மிகக்கீழ்த்தரமான வார்த்தைகள் அவர் வாயில் இருந்து வந்தன.

அது மட்டுமில்லை என்மீது அளவில்லா பாசம் கொண்டிருந்த கென்றியின் அப்பா அம்மாவின் பழக்க வழக்கங்கள் மீது அவரின் வர்ணனைகளும் பரிகசிப்புகளும் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. அந்த வெள்ளாந்தி மனிதர்களைப் பற்றி இவருக்கு என்ன தெரியப் போகிறது. இதற்காகத் தான் சொல்லுவதா தெரிந்த இடத்தில் கல்யாணம் செய்ய வேண்டும் என்று. எல்லோரும் அவரவர் தடி கொண்டு அளவெடுக்கும் போது எத்தனை மனங்கள் சுருங்கிப் போகின்றன.  

அப்போது போட்ட பிள்ளையார் சுழி தான். தொடர்ந்து எதற்கெடுத்தாலும் சந்தேகம்.

அதுவே அடுத்த அடுத்த வருடத்தில் விவாரகத்தில் வந்து நிறுத்தியது.

வாழ்க்கையில் என்னை நான் அகதியாக உணர்ந்த நாள் அது.

*

அதன் பின்பு இத்தனை ஆண்டுகளும் எனக்கு எல்லா உதவிகளையும் செய்தது கென்றிக்தான். ஆனால் அவர்தான் உதவி செய்கின்றார் என்றால் சுமத்தப்பட்ட களங்கம் உறுதி செய்யப்பட்டு விடும் என்பதால் அவரே எல்லாத்தையும் தோன்றாத் துணையாக இருந்து செய்தார். அவரின் மனைவிக்கு கூடத் தெரியாது. அவர் வீட்டுக்குள் அவருக்கு இருந்த பிரச்சனைகள் இன்னும் ஒரு விவாகரத்துக்கு காரணமாகி விடக்கூடாது என்று இருவருமே உறுதியாக இருந்தோம்.

மூத்தவள் யுனிவேசிற்றிக்கு போன அன்று உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறன் என்று கேட்கும் பொழுது என் கண்கள் கலங்கியது.

அவரும் ஆம் என்னுமாப் போல் தலையாட்டினார்.

எனக்கு என்ன சொல்லுகிறார் எனப் புரியவில்லை.

மரியாணி இப்பவும் உனக்கும் எனக்கும் இடையில் 15 வயது இடைவெளி தொடர்ந்து கொண்டுதான் இருக்கு. இப்ப உனக்கு 34. எனக்கு 49. அடுத்த இருபது வருசத்துக்குப் பிறகு உன் இரண்டு பிள்ளைகளும் எல்லாம் படிச்சு முடிச்சு தங்கள் வழியில் போய் விடுவார்கள். அப்ப உனக்கு 54வும் எனக்கு 69. அந்த நேரத்திலை நானும் தனித்துப் போய் இருந்தால் இந்த அங்காடிகளிலை சக்கர தள்ளு வண்டிகளை உருட்டிக் கொண்டு திரிகிற கிழட்டு கட்டையள் போல நீயும் நானும் திரிய வேணும். கோப்பி பாரில் இருந்து கோப்பியும் ஸ்ரோபெரி போட்ட கேக்கும் சாப்பிட வேணும். வெய்யில் காலங்களில் வெளியில் இருந்து ஐஸ்கிறீம் சாப்பிட வேண்டும். பென்சனியர்கள் போற பஸ்களில் சுவீடன் ஜேர்மனி என்று திரிய வேணும். அப்போது எங்களுக்கு காலிலும் கையிலும் பலம் இருக்காது இந்த சக்கர தள்ளு வண்டிகள் தான் உதவும்

கென்றி நேற்றுச் சொன்னது போலவே இருக்கிறது.

நானும் ஆம் எனவே தலையாட்டினேன் – 30ல் வாழவெட்டியாகிப் போய் 60ல் வாழப் போகின்றேன் என்ற ஒரு நினைப்புடன்.

தினம் தினம் மாதாக்கு செபம் சொல்லும் பொழுது கென்றியுடன் என் அந்திமக் காலம் பற்றிய நினைவாகவே இருக்கும்.

கனவுகளில் எல்லாம் நானும் கென்றியும் சக்கர தள்ளுவண்டியுடன் திரிந்து கொண்டு போன்றிருந்தது.

ஒருநாள் றோட்டுக் கரையில் இருந்த கல்லில் அவர் தடுக்கி விழுந்ததுபோல கனவு கண்டேன்.

அன்று காலையே ஸ்வப்னா எனக்கு தொலைபேசியில் ”கென்றி மாமா போயிட்டார் அம்மா என்ற செய்தியைச் சொன்னாள்.

நான் மாதாவின் காலடியிலேயே நேரம் போவது தெரியாமல் இருந்திருந்திருந்தேன்.

கண்களால் ஓடிக் கொண்டு இருந்தது.  என்னால் நிறுத்த முடியவில்லை.

*

மரியாணி உனது தள்ளு சக்கரவண்டி மிக அழகாக இருக்கிறதுஇ சுசானா சொல்ல பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த வயோதிபத் தம்பதியினர் ”இது தான் கடைசியாக வந்த மொடல். இதில் ஒருவரை வைத்துக் கூட மற்றவர் தள்ளிக் கொண்டு கூடப் போகலாம்இ தொடர்ந்தார்கள்.

திரும்பிப் பார்த்தேன். அவர்கள் சொன்ன அமரும் ஆசனத்தில் கென்றி சிரித்தபடி அவருக்குப் பிடித்த மெல்லிய நீலச்சேட்டும் கருநீலநிற ரையும் கட்டிக் கெண்டு கறுத்த சூட்டும் கோட்டும் போட்டுக் கொண்டு இருந்தார். நன்கு மடித்து அயன் பண்ணிய கைக்குட்டை கொண்டு தன் நடுங்கும் கையால் தன் கடைவாயினால்  வழியும் வாநீரைத் துடைத்துக் கொண்டு இருந்தார்;.

நான் எழுந்து வண்டியைத் தள்ளத் தொடங்கினேன்.

மரியாணி ஏன் கோப்பியையும் குடிக்காமல் கேக்கையும் சாப்பிடாமல்; போறாய் சுசானா பின்னால் கூப்பிடுகின்றாள்.

நான் தள்ளுவண்டியுடன் அங்காடியை விட்டு வெளியேறுகின்றேன்.

அவரை வைத்து தள்ளிச் செல்வது என் மனதுக்குள் இதமாக இருக்கிறது.

குளிர்ந்த காற்று வீசுகிறது.

அவர் சிரித்தபடியே இருக்கின்றார்.

இப்பிடியே அவரை ஊருக்கு கூட்டிச் செல்ல வேண்டும் போல் இருக்கிறது.

கென்றியின் அப்பாவும் அம்மாவும் துயில்கொள்ளும் சவக்காiலையினூடு அவருடன் செல்ல வேண்டும். அவர்கள் இருவரும் எழுந்து எங்கள் இருவருக்கும் குருசு முத்தம் இடவேண்டும்.

*

வயது போனதால் உங்கள் அம்மாக்கு கொஞ்சம் மாறாட்டக் குணம் வந்து விட்டுது என சுசானா ஒருநாள் ஸ்வப்னாக்கும் கிறிஸ்ரிக்கும் சொன்னவளாம். தள்ளு வண்டியுடன் அங்காடி முழுக்க தனியே கதைத்துக் கொண்டு தள்ளிக் கொண்டு திரிகிறனாம் எனவும் மேலும் சொல்லியிருக்கின்றாள்.

அவள் விசரி!

கென்றியையும் என்னையும் பற்றி அவளுக்கு என்ன தெரியும்!!

மற்றவர் எவருக்கத்தான் தெரியும் – என் பிள்ளைகள் உட்பட!!!

இடைவெளியின் அளவு இப்போது பதினைந்து வயதில்லை என்பது எனக்கும் கென்றிக்கும் மட்டும்தான் தெரியும்.

***