ஆண்… சிறுகதை

ஆண்… சிறுகதை

”இன்னும் என்ன உங்களுக்கு வேணும்” அந்த அதிகாலையில் அவளின் அவல ஒலி இருட்டான குடோனின் சுவர்களில் பட்டுத் தெறித்தது.

இரண்டு கைகளாலும் தலைகளில் அடித்துக் கொண்டாள்.

அரிசியை சாக்கில் ஓட்டை போட்டு அதிலிருந்து விழுந்த அரிசியைக் கொறித்துக் கொண்டிருந்த இரண்டொரு எலிகள் சாக்குகளுக்கு பின்;னால் அமைந்திருந்த தம் பொந்துகளுள் ’கீச்’சு.. ’கீச்’சுக்கென்று ஒலி எழுப்பியபடி போய் ஒளிந்து கொண்டன.

எல்லாம் முடிந்தவனான அவன் எழுந்து காறித்துப்பியபடி எதுவுமே பேசாமல் வெளியேறினான்.

திகைப்பு விடுபடாத நிலையில் அழுதபடி கலைந்திருந்த பாவாடையை அவள் சரிசெய்தாள்.

கையில் ஏதொ ஒன்று ஒட்டியது போல இருந்தது.

அவளுக்கு குமட்டல் எடுத்தது.

*

செவ்வாய் – சனி.

கிழமையில் இந்த இரண்டு நாட்களில்தான் இங்கு சந்தை கூடும்.

அதிகாலை நான்கு மணிக்கு சந்தை விழித்துக் கொண்டால் பின்னேரம் மூன்று மணிவரை சனநடமாட்டத்திற்கு எந்தக் குறைவும் இராது.

அவ்வாறே சந்தையில் இருந்து இருநூறு மீற்றர் தொலைவில் இருக்கும் தேனீர்கடையும் காலை ஆறிலிருந்து கலகலப்பாகும். அது இரவுவரை தொடரும்.

அவ்வாறே மற்றைய உடுபுடவைக் கடைகள் ஒன்பது மணிக்கு வீதிக்கு தண்ணீர் தெளித்து, சந்தனக் குச்சிகளின் வாசனையுடன் திறக்கும்.

முன்பு சந்தையின் மூலையுடனேயே ஒரு தேனீர்க்கடை இருந்தது. சண்டையின் பொழுது ஆமியின் றக் பிரண்டதுடன் அதில் வேறெரு கடை கட்ட நகரசபை அனுமதி கொடுக்கவில்லை. இப்பொழுது அந்த இடத்தில் ஒரு புத்தர் சிலை வரப்போவதாக கதைக்கின்றார்கள்.

போராட்டத்திற்கு முன்பு இங்கு தினமும் பெரிய சந்தை கூடும்.

ஆனால் இப்போது யாழப்பாணப் பிரதேசத்தில் பல புதிய சந்தைகள் வந்ததால் கிழமையில் இரண்டு தரம் மட்டும் இங்கு பெரியளவில் கூடும்.

குறிப்பாக தீவப்பகுதி மக்கள் தங்கள் பிரதேசங்களுக்கு இங்கு வந்து கொள்வனவு செய்வதாலேயே இந்த இரண்டு தினமும் பெரியளவில் கூட்டப்படுகிறது.

முன்பைப் போல தரகு… நாட்டாமைகள் இல்லாததால் விவசாயிகளும், தோட்டக்காரர்களும், வாடிக்கையாளர்களும்.. சாதாரண மக்களும் அதிகளவில் வருவதில் நாட்டம் காட்டினார்கள்.

சந்தைக்கு முன்னால் உள்ள பஸ் ஸ்ராண்டில் அல்லது சந்தையின் நாலாப்புறமும் உள்ள மூலைகளில் இருவர் இருவராய் நிற்கும் ஆமிக்காரரைக் காணும் போது மட்டும் மக்களுக்கு தேவையில்லாது ஒரு சின்ன பயம் ஏற்படும். பின்பு அவர்களைத் தாண்டியதும் அது மறைந்து விடும்.

அவ்வாறுதான் இன்றைய வடமாகாண நிலைமைகள் இருக்கிறது.

ஆமிக்காரர்களும் நட்பு மிகுந்த புன்னகையை முகத்தில் வலிந்தே பரவவிடுவது நன்கு தெரியும்.

இந்த இரண்டு நாள் இலாபம்தான் மற்றைய பல வியாபாரிகளின் அடுத்த ஐந்துநாள் நட்டத்தை ஈடுகட்ட வேண்டும். அல்லது இந்த இரண்டுநாள் இலாபம் கிழமைச் சீட்டுக் கட்டவும் மற்றைய ஐந்துநாள் உழைப்பு அன்றாடம் வீட்டில் உலை கொதிக்கப் போதுமானதாய் இருந்தாலே போதும் என்ற நிலைப்பாடுதான் அனைவருக்கும் இருந்தது.

செவ்வந்திக்கு மட்டும் இது விதிவிலக்கு.

தாய் தங்கம்மாவுடன் அறியாத வயதில் ஒட்டிக் கொண்டு இந்த சந்தைக்கு வரத் தொடங்கியவள் அவள்.

மரக்கறிகளுள் உள்ள அழுகியவற்றையும் காய்ந்தவையும் பொறுக்கி அப்பால் எறிவது.. இடைக்கிடை தண்ணீர் தெளிப்பது… தாய் சொல்லும் தொட்டாட்டு வேலைகளை செய்வது… தாயார் மீன்கடைக்கு பத்து மணிக்கு மீன் வேண்டச் செல்லும் பொழுது தானாக வியாபாரம் செய்யாவிட்டாலும் யாரும் மரக்கறிகளை எடுத்துக் கொண்டு போகாமல் பார்ப்பது, தாய்க்கும் தனக்கும் காலையிலும் மாலையிலும் தேனீர் வேண்டி வருவது… மத்தியான வேலையில் எலுமிச்சைந்தண்ணீயோ அல்லது மலிந்த கலர் கலரான சர்பத் வேண்டி வருவது என தாயுடன் பின்னிப்பிணைந்த அவள்; வாழ்வும் சந்தையுடன் இணைந்து அதிகாலையில் விழித்துக் கொள்ளும். பின் மாலையில் கட்டாக்காலி மாடுகளும் மீன்கடையில் நின்று விட்டு வரும் நாய்களும் சந்தைக்குள் வரும் போது இவளின் அன்றைய பொழுது கழிந்து தாயுடன் வீடு திரும்பும்.

பாடசாலைப் படலை திறந்து அவள் அறிந்திருக்கவில்லை.

”எப்பிடியும் குந்தினபிறகு மறிக்கத்தானே போறன்… அதுக்கிடையிலை இந்தக் கழுதை என்னத்தை படிச்சுக் கிழிக்கப் போகுது”, என்பது தங்கம்மாவின் வாதம்.

”உவள் ஒருத்தி படிச்சுத்தான் இலங்கை அரசாங்கத்தின்ரை கடன்கள் எல்லாம் தீரப் போகுதாக்கும்” என கள்ளுக் கொட்டிலில் மணலில் சவரம் செய்யாத முகத்தின் மோவாயைத் தடவியடி ஆடு புலி ஆடும் தகப்பனின் ஆமோதிப்பு.

ஒருநாள் தாய்க்கும் தனக்கும் தேனீர் வேண்டி வரும் பொழுது சந்தையில் வரிபோடும் சாரங்கன், ”ஏய் எனக்கும் ஒரு தேத்தண்ணி வேண்டி வா…”இ என அவள் நின்று திரும்பி பார்த்து ஆம் அல்லது இல்லைச் சொல்ல முதல், ”கொஞ்சம் சீனியை குறைவாய்ப் போடச் சொல்லு… இந்தக் கண்டறியாத சலரோகம் வேறை” என்றபடியே காசை நீட்டினான்.

சாரங்கன் சந்தைக்கு வரி போடும் நகரசபையின் வேலையாள் மட்டுமில்லை. ஒரு சின்னச் சண்டியன். எந்த வியாபாரிக்கும் வெளியாட்களால் என்ன பிரச்சனை என்றாலும் மத்தியஸ்தம் செய்து அவன்தான் பேசித் தீர்த்து வைப்பான். அல்லது அடி போட்டுத் தீர்த்து வைப்பான்.

வெளியே நிற்கும் ஆமியின் துவக்கின் பின்பக்கத்தால் வேண்டும் அடிக்காயக் கண்டலை விட இவன் கையில் கிடைக்கும் வாழைத்தண்டோ… முருங்கைக்காயாலோ வேண்டும் அடி பறவாயில்லை என்பது குற்றமுள்ள மனங்களுக்குத் தெரியும்.

மற்றும்படி வரிக் கொப்பியை கக்கத்துள் வைத்துக் கெண்டு பீடியை வலித்துக் கொண்டு சந்தையைச் சுற்றி வருவான்.

வயது நாற்பதுக்குள்ளே தான். இரண்டு அல்லது மூன்று பிள்ளைகள் இருக்க வேண்டும் என சந்தையுள் பேசிக் கொள்வார்கள். மீன் கடைக்கு வந்து பெரிய மீன்கள் வேண்டிச் செல்லும் அந்த தடித்த மனைவிதான் அவன் மனைவி என்று பேசிக்கொள்வார்கள். சிலர் இல்லையில்லை அது அவனின் வைப்பாட்டி என்றும் சொல்வார்கள். ஆனால் யாரும் நேரடியாக அவனிடம் எதுவும் கேட்பதில்லை.

அப்பிடி ஒரு பய நிழல் அவன் மேல்.

அதே பயத்தினால் செவ்வந்தி அவன் கொடுத்த காசை வேண்டிக் கொண்டாள்.

தேனீர் வேண்டிக் கொண்டு வந்து மிகுதிக் காசு 2 ரூபாயை நீட்டும் பொழுது, ”அதை நீயே வைச்சிரு” என்றான்.

”இல்லை வேண்டாம்”

”ஏன்”

”அம்மா பேசும்”

”கொம்மாட்டை நான் சொல்லுறன். இந்தா பிடி”

அவள் மறுத்த போது அவளின் கையை வலுக்கட்டாயமாக பிடித்து கையினுள் திணித்தான்.

அவளும்; பயந்தபடியே அதனை வேண்டி வந்து தாயிடம் சொன்னாள்.

”அதுக்கேன் பயப்பிடுறாய்… நீ வேண்டி வந்து குடுத்ததுக்கு கூலி எண்டு வைச்சுக் கொள்”

”சங்கரன் நல்வனடி… எங்கடை சாதி சனம் தான்” தங்கம்மாக்கு பக்கத்தே இருந்து வெற்றிலை, பாக்குசீவல் விற்கும் சிவசம்புக் கிழவனார் சொன்னார்.

அப்போதுதான் அவளின் படபடப்பு நின்றது.

அடுத்தநாள் அவள் தேனீர் வேண்டக் கிளம்பிய பொழுது சிவசம்புக் கிழவனாரும் எனக்கும் ஒரு கிளாசிலை வேண்டிக் கொண்டு வா… நானும் இரண்டு ரூபாய் தாறன் என காசை நீட்டினார்.

தாயைத் திரும்பிப் பார்த்தாள்.

அவளும் வேண்டு எனத் தலையாட்டினாள்.

தேனீர்கடைக்கு செல்லும் வழியில் சங்கரன் நிற்பதைக் கண்ட பொழுது வேறுபக்கத்தால் அவள் நடக்க தொடங்க முதல் இரண்டு கைகளையும் தட்டிக் கூப்பிட்டான்.

”ஏய்.. குட்டி… இங்கை வா.. நேற்றைக்குப் போல சீனி குறைவாய் போட்டு ஒரு தேத்தண்ணி வேண்டி வா…”

அவருக்கு நான் என்ன வேலைக்காரியோ என நினைத்தாலும் மனத்தின் பயம் காசை கை நீட்டி வேண்ட வைத்தது.

அவள் ஏதும் பேசாமல் அவன் கொடுத்த காசை வேண்டிக் கொண்டாள்.

பின்பு சிறிது நேரத்தில் தேனீருடன் வந்து “இந்தாங்கோ அண்ணா” என தேனீரை நீட்டிய பொழுது இன்றும் அவளுக்கு இரண்டு ரூபா கிடைத்தது.

சிவசம்புக்கிழவனின் 2 ரூபாய் சங்கரனின் 2 ரூபாய். இன்று அவளின் சம்பாத்தியம் 4 ரூபாய்.

அதில் இரண்டு ரூபாய் தாய்க்கு கடனானவும் மற்ற இரண்டு ரூபாய் தகப்பனின் கள்ளுக் கொட்டிலுக்கும் போனது – இன்று மழை ஆனதால் கள்ளு அரைவிலையாம். எனவே அதிகமாக தகப்பன் ஏற்றிக் கொள்ள இவளின் இரண்டு ரூபாய் உதவியது.

அடுத்த நாளிலிருந்து செவ்வந்தி தேனீர் வேண்டிவந்து கொடுப்பது பற்றி சிவதம்புக் கிழவனார் மற்றவர்களுடன் சிலேகித்ததால் அவர்களும் தங்களுக்கு வேண்டிக் கொண்டு வந்து தரச்சொன்னார்கள்.

தங்கம்மாவும், “தானக வாற இலட்சுமியை வேண்டாம் எண்டு சொல்லாதே” என அவள் அந்த கட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் அனைவருக்குமே காலையிலும் மாலையிலும் தேநீர் வேண்டிக் கொடுக்கத் தொடங்கினாள்.

இப்போ வருமானம் அதிகமானதாலும் 2 ரூபாய் அதிகம் எனப்பட்டதாலும் அதனை ஒரு ரூபாயாகக் குறைத்துக் கொண்டாள்.

மகராசி என்று எல்லா வியாபாரிகளும் சொல்லிக் கொண்டார்கள்.

சங்கரன் மட்டும் தொடர்ந்து 2 ரூபாயே கொடுத்து வந்தான்.

வாடிக்கையாளர் கூடியதால் தேனீர்க்கடைக்காரனே அதிக தேனீர் கிளாஸ்களை வைத்து எடுத்துச் செல்லக் கூடிய ஒரு இரும்புக் கம்பி கூடையையும் கொடுத்து உதவினான்.

நாளாக நாளாக அவளுக்கு தாய்க்கு உதவி செய்வதை விட தேநீர் வேண்டிப் பரிமாறுவதற்கே நேரம் போதுமாய் இருந்தது. தாயை விடவும்; வருமானம் அதிகமான வந்தது. முதலோ முதலிற்கான வட்டியோ இல்லாத சம்பாத்தியம். தகப்பனும் அதிகமாய் குடித்து விட்டு மாலையில் தள்ளாடி தள்ளாடி வீடு வரத் தொடங்கினார்.

அவளின் தாய் வியாபாரம் செய்யும் கட்டடத்தைத் தவிர மற்ற இரண்டு கட்டத்தில் இருந்தவர்களும் இவளிடம் தேனீர் கேட்க இவள் மிகவும் சுறுசுறுப்படைய வேண்டி வந்தது.

அதே நேரத்தில் தேனீர்கடைக்காரனுக்யோ தனது தேனீரை வேண்டிக் கொடுத்து இவள் அதிகமாக உழைக்கின்றாள் என்ற எண்ணம் தொட்டு விட்டது.

அடுத்த நாளே தனது கடைக்காரப் பையனிடம் ஒரு கையில் மூடிபோட்ட தேனீர் வாளியையும் மறுகையில் கோப்பி வாளியையும் கொடுத்து சந்தைக்குள் அனுப்பினான்.

தேனீர் வேண்டிவரப் போன செவ்வந்தியின் முகம் இருண்டது.

வெறுங்கையுடன் திரும்பி வந்த செவ்வந்தியை சங்கரன் முறைத்துப் பார்த்தான்.

“என்ன உனக்கு கொழுப்பு மெத்திட்டுதா” என வினாவ முன் அவள் கண்ணும் முகமும் புடைக்க தேத்தண்ணிப் பையனை கையால் காட்டினாள்.

அவ்வளவுதான்!

“ஒருத்தியின்ரை பிழைப்பை இன்னொருத்தன்; கெடுக்கிறதோ” என்றபடி சங்கரன் நேராக சென்று தேநீர்ப் பையனின் கையில் இருந்த இரண்டு வாளிகளையும்; பறித்து நிலத்தில் ஒரே அடி!

தேனீரும் கோப்பியும் நிலத்தில் முற்றாக சிதறியது.

பையன் வாளிகளை அப்படியே விட்டு விட்டு சந்தையில் இருந்து தனது கடையை நோக்கி ஓரே ஓட்டம்.

பின்பு கொஞ்ச நேரத்திலை கடைக்காரன் வந்து கான்களை எடுத்துக் கொண்டு போனான் – சங்கரனை திரும்பி திரும்பி பார்த்தபடி….

சங்கரன் பீடி ஒன்றை இழுத்தவாறே, “அந்த பெட்டையின்ரை வயித்திலை அடிக்கப் பார்த்தால் சந்தைக்கு வெளியிலும் கடை வைச்சிருக்க ஏலாது கண்டியோ… திரும்பவும் கொழும்பு கண்டி எண்டு தான் போய் சாப்பாடு கடை போட வேணும்”.

இதற்கு பிறகு செவ்வந்தி சங்கரனை ஒரு கடவுளைப் போலத்தான் பார்ப்பாள்.

அவன் தேத்தண்ணி கேட்கா விட்டாலும் அவளாய் கொண்டு போய்க் கொடுப்பாள். அவன் இப்போதும் 2 ரூபாய் அதிகமாய் கொடுத்துக் கொண்டுதான் வந்தான்.

“அண்ணை நான் 1 ரூபாய்தான் கூட வேண்டுறனான்”

“இல்லை நீ வைச்சிரு”

*

அடுத்த இரண்டு நாள் செவ்வந்தி சந்தைக்கு வரவில்லை.

“நான் பதினாலு வயதிலை… இவள் பன்னிரண்டிலையே குந்தீட்டாள்…”

“இனியாவது கொஞ்சம் மனிசனை கல்லுக் கொட்டிலே தவம் எண்டு கிடக்க விடாதை”

“அந்த அறுவான் சொன்னாக் கேட்கிறானே…. குப்பைத் தண்ணி வார்க்கிறதுக்கும் தவறணையிலை போய்த்தான் இழுத்துக் கொண்டு வந்தது… இதெல்லாம் ஒரு மனுஷ சென்மங்கள்…”

“இனி சந்தைக்கு கூட்டி வருவியோ… என்ன மாதிரி…”

“என்னத்தை அக்கா செய்யுறது… அவளுக்கு நல்ல பிழைப்பு… கிழமைச் சீட்டு போட்டு போட்டு நல்லாய் வாறாள்… கிட்டத்தட்ட ஒண்டுக்கு கிட்ட வரப் போகுது… ஒரு நல்லவன் கையிலை பிடிச்சுக் குடுக்கும்வரை அவள் என்னோடை சந்தைக்கு வரட்டும்.. வீட்டிலை குமர்பிள்ளை தனிய இருந்து என்ன செய்யிறது… இங்க எண்டால் நானும் பாத்துக் கொண்ட மாதிரி இருக்கும்”

மூன்றாம் நாளே செவ்வந்தி சந்தைக்கு வந்து விட்டாள்.

“நீ வந்தால் தான் ஆச்சி சந்தையே களை கட்டுது”ணு தன் பொக்கை வாயால் சிவதம்புக் கிழவன் சிரித்துக் கொண்டு அவளுக்கு ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார்.

அவள் புரியாமல் பார்த்தாள்.

“கொம்மா எல்லாம் சொன்னவா… நீ இப்ப பெரிய மனுஷி… அதுதான் இது… சந்தோசமாய் வைச்சுக்கொள். எல்லாம் நிறைஞ்ச வாழ்க்கை உனக்கு வரவேணும்”

கிழவனை கும்பிட்டு விட்டு தனது தேனீர் காவும் கம்பி வலையை கையில் எடுத்துக் கொண்டாள்.

வீதியைத் தாண்டும் பொழுது சந்தையின் கிழக்கு மூலையில் நின்ற ஆமிக்காரன்,

“ஏ… பொட்டை இங்கை வா”.

அவள் மிரண்டபடி மெதுவாகச் சென்றாள்.

“இனிமேல் எங்களுக்கும் தேத்தண்ணி வேண்டித்தா…”

ஆம் எனத் தலையாட்டினாள்.

பின்பு அவ்விடம் விட்டு விரைவாக நகர்ந்தாள்.

மீண்டும் சந்தைக்குள் வந்த பொழுது, “கவனம் ஆ;மிக்காரர்… சும்மா பல்லைக்கில்லைக் காட்டிப் போடாதை” என சங்கரன் எச்சரித்து விட்டுப் போனான்.

அதையே தாய் தங்கம்மாவும்; அன்று பின்னேரம் சொன்னாள்.

“பார்த்தியே சங்கரனுக்கு உன்னிலை எவ்வளவு அக்கறை எண்டு. சண்டியன் எண்டாலும் அவன் எங்கடை பக்கத்து பிள்ளை…”

செவ்வந்தி தலை ஆட்டினாள்.

*

இந்த ஆறு மாதத்தினுள் செவ்வந்திக்கு வருமானம் நன்கு கூடிவிட்டது.

சந்தை கூடும் நாட்களில் வருகைதரும் வியாபாரிகளும் அவளிடம் தேனீர் வேண்டி குடிக்கத் தொடங்கினார்கள்.

அப்பொழுதுதான் சங்கரன் தங்கம்மாவிற்கும் செவ்வந்தியும் தானாக உதவி செய்ய முன் வந்தான்.

“பின் கட்டிட குடோன் திறப்பு என்னட்டைதான் இருக்கு… தேத்தண்ணிக் கடைக்காரன் ஆறு மணிக்குத்தான் கடை திறக்கிறவன்… நாலு மணிக்கோ.. ஐந்து மணிக்கோ… நீங்கள் இரண்டு பேரும் வந்தால் அந்த நேரத்திலை அதுக்கை தேத்தண்ணி வைச்ச வித்தால் நல்ல வருமானம் கிடைக்கும். ஆனால் ஆறு மணிக்கு பிறகு தேத்தண்ணிக் கடையிலை தான் நீ வழமைபோலை தேத்தண்ணி வேண்டித்தான் விற்க வேணும். இல்லாட்டி குடோன் திறப்பை தந்ததுக்கு எனக்குப் பிரச்சனை…”

இருவரும் ஒரே நேரத்தில் அவனை கை எடுத்துக் கும்பிட்டார்கள்.

பின்னென்ன?…

செவ்வாயிலும் சனியிலும் செவ்வந்தியின் கையில் நல்ல காசு பிரள ஆரம்பித்தது.

அதிகாலைக் குளிருக்கு அவளின் தேனீருக்கு நல்ல மவுசு.

வியாபாரிகளைத் தவிர்த்து சந்தைக்கு வெளியே நிற்கும் ஆமிக்காரர்களும் உள்ளே வந்து அவளிடம் தேனீர் வேண்டிக் குடிக்க ஆரம்பித்தார்கள்.

“செவ்வந்தி நோனாவின் ரீ சுப்பர்” ஒருவன் சொன்னான்.

“செவ்வந்தி நோனாவும் சுப்பர்” மற்றவன் சொன்ன போது அவளின் முகம் இறுகியது.

சங்கரன் அந்த இடத்துக்கு வந்த பொழுது, “சும்மா செவ்வந்தி நோனாவோடை ஜோக்குப் பண்ணுறம்..” என்றபடி அவர்கள் இருவரும் அந்த இடத்தை விட்டுப் போனார்கள்.

“கவனம் செவ்வந்தி… சிரிச்சப் பேசினியெண்டால் மேய்ஞ்சிடுவாங்கள்…” சங்கரனும் எச்சரிக்கை செய்துவிட்டு போனான்.

மனத்தின் கிலேசம் ஒரு வினாடி என்றாலும் சங்கரனின் ஆறுதல் அவளுக்கு அமுதமாய் இனித்தது.

தேனீர் வியாபாரத்தில் காலைச் சஞ்சலங்கள் எல்லாம் அவளுக்கு மறந்து போக மீண்டும் கலகலப்பானாள்.

கடை திறக்கும் வரை செவ்வந்தி குடோனில் வைத்து தேனீர் ஊற்றி விற்கின்றாள் என்ற செய்தி கடைக்காரனின் காதுக்கு எட்டினாலும் சங்கரனுக்குப் பயந்து அவனால் ஏதும் செய்ய முடியவில்லை. நகரசபைச் சட்டத்தின்படி ஆறுமணிக்கத்தான் கடை திறக்க முடியும் என்றாலும்; ஏதோ ஒருவகையில் செவ்வந்தியின் வியாபாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என மனம் கறுவியது.

*

அடுத்து சந்தை கூடும் சனிக்கிழமை வந்தது – அடுத்த நாள் பொங்கல் வேறு.

சந்தை அதிகாலையிலேயே நன்கு சூடு பிடிக்கத்தொடங்கி விட்டது.

கனகம்மா வழமையான தனது மரக்கறி வியாபாரத்துடன் பொங்கல் பானைக்கு கட்டும் மஞ்சள் – இஞ்சி இலையும் கரும்பும் வேண்டி பரப்பியிருந்தாள்.

எனவே செவ்வந்திக்கு பெரிதாக உதவ முடியவில்லை.

செவ்வந்தியே தனித்து அவசர அவசரமாக குடோனில் தேநீருக்கு தண்ணியை சூடாக்கிக் கொண்டிருந்தாள்.

குடோன் கதவு மெதுவாக திறப்பது தெரிந்தது – வெளியிருந்து வரும் வெளிச்சம் அவளுக்குச் அதைச் சொன்னது.

ஒரு ஆமிக்காரன் நின்றிருந்தான்.

அவளுக்கு ‘திக்’ என்றது.

“தே..த்..தண்ணி இன்னும் மு..டி..யே..ல்..லை” விக்கினாள்.

“என்ன.. நீ பெர்மிஷன் இல்லாமல் தேத்தண்ணி விக்கிறியாம்”

பதில் சொல்லத் தெரியாது விறைத்து நின்றாள்.

குடோனின் கதவை உள்ளே நின்றவாறு அவன் சாத்தினான்.

அவள் வெளியே ஒட முயற்சித்த பொழுது அவனின் இரும்புக் கைகள் அவளைக் கெட்டியாகப் பிடித்தது.

சலசலப்பில் குடோனினுள் இருந்த எலிகள் அங்;குமிங்கும் ஒடின.

சில நிமிடப் போராட்டங்கள் தான்…

அனைத்தும் முடிந்து விட்டது.

”குட்டி… எங்களையும் இடைக்கிடை கவனிச்சுக் கொள்ளு… உன்ரை வியாபாரம் நல்லாய் நடக்கும்…” தக்கித் தக்கி தமிழில் சொன்னவாறே துப்பாக்கியை தொளில் எடுத்துப் போட்டுக் கொண்டு வெளியேறினான்.

போகும் பொழுது மீண்டும் குடோன் கதவை மூடி விட்டுப் போனான்.

அவள் எழுந்திருக்க மனமில்லாது பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள்.

அடுப்பில் தண்ணீர் கொதித்துக் கொண்டு இருந்தது.

எல்லாம் கனவு போல இருந்தது…

ஒரு சில நொடிகளுள் எல்லாமே நடந்து போயிற்று…

மீண்டும் வெளியில் ஆளவரவம் கேட்டது.

பதப்பட்டு தனது பாவாடையை சரி செய்ய முன் குடோன் கதவு மெதுவாகத் திறந்தது.

சங்கரன் உள்ளே வந்தான்.

அவனைக் கண்டதும் “அண்ணை” என பெருங்குரல் எடுத்துக் கத்தத் தொடங்கினாள்.

அவனுக்கு எல்லாமே விளங்கி விட்டது.

“உதுலை போற ஆமிக்காரனா” என கிட்டவாக வந்தான்.

ஆமாம் எனத் தலையாட்டி விட்டு அவன் கைகளைப் பற்றிக் கொண்டு அழத் தொடங்கினாள்.

“பயப்பிடததை.. பயப்பிடாதை… அவங்களை நான் பார்த்துக் கொள்ளுறன்”

அவள் இன்னமும் அழுதாள்.

“சத்தம் போட்டு ஊரைக் கூப்பிடாதை” என ஆதரவாக அவள் தோளை அணைத்தான்.

“அண்ணை நான் தேத்தண்ணி வைக்க வந்தனான்…. அவன் தான்…”

“பயப்பிடாதை… பயப்பிடாதை…”

அவன் கைகள் அவளது கண்ணீரைத் துடைத்தன.

அவள் தொடர்ந்து விம்மினாள்.

தோளில் இருந்த அவனது கை அவளின் மார்புப் பகுதியை நோக்கி இறங்கியது.

“அண்ணை?….”

அவளாள் மீண்டும் திமிற உடலிலும் மனத்திலும் வலிமை இருக்கவில்லை.

ஆனாலும் முயற்சித்தாள்.

முடியவில்லை. கண்கள சொருகியது மாதிரி ஓர் உணர்வு…

அவளது தலை விறைத்துக் கொண்டு வந்தது.

சந்தையின் பின்புறத்தில் கட்டாக்காலி ஆண் நாய்கள் ஒரு பெட்டை நாயைத் துரத்திக் கொண்டு இருந்தன.

எல்லாம் முடிந்த பின்பு எழுந்த சங்கரன் கலைந்திருந்த உடையினூடே அவளின் தேகத்தை மீண்டும் பார்த்தான்.

”இன்னும் உங்களுக்கு என்ன வேணும்” அந்த அதிகாலை இரவில் அவளின் அவல ஒலி குடோனின் சுவர்களில் பட்டுத் தெறித்தது.

இரண்டு கைகளாலும் தலைகளில் அடித்துக் கொண்டாள்.

அரிசியைக் கொறித்துக் கொண்டிருந்த இரண்டொரு எலிகள் சாக்குகளுக்கு பின்;னால் அமைந்திருந்த தம் பொந்துகளுள் ’கீச்’ச்ச ’கீச்’சுக்கொன்று ஒலி எழுப்பியபடி போய் ஒழிந்து கொண்டன.

காறித்துப்பியபடி அவன் எதுவுமே பேசாமல் வெளியேறினான்.

திகைப்பு விடுபடாத நிலையில் அழுதபடி கலைந்திருந்த பாவாடையை அவள் சரிசெய்தாள்.

கையில் ஏதொ ஒன்று ஒட்டியது போல இருந்தது.

அவளுக்கு குமட்டல் எடுத்தது.

*

அடுத்த நாளிலிருந்து தங்கம்மாவையும் செவ்வந்தியையும் சந்தைப் பக்கம் காணவில்லை.

கிளிநொச்சிப் பக்கம் இடம் பெயர்ந்து போய்விட்டார்கள் என சந்தையடியில் பேசிக் கொண்டார்கள்.

ஆமிக்காரனுடன் ஓடிப் போய்விட்டதாயும் பேசிக் கொண்டார்கள்.

தேநீர்கடைக்காரனுக்கு மீண்டும் வியாபாரம் சூடு பிடித்திருப்பது குறித்து சந்தோசம்.

”ஐக்கிய இலங்கையில் இரண்டு இனங்களும் ஒற்றுமையாக….” என தேனீர்கடை வானொலிப் பெட்டி செய்தி வாசித்திக் கொண்டு இருக்கிறது.

கிழமைச் சீட்டுக் நடாத்தியவனுக்கும் செவ்வந்தி தன் காசை வேண்டாது போனது குறித்து மிகவும் மகிழ்வாய் இருக்கின்றான்.

வெற்றிலையும் பாக்குச் சீவலும் விற்கும் சிவதம்புக் கிழவனின் கண்கள் காய்ந்து போய் இருக்கின்றது.

சங்கரன் பீடியை வலித்தவாறு கக்கத்தில் வரிப்புத்தகத்தை கக்கத்துள் வைத்துக் கொண்டு மதிலில் குந்திக் கொண்டு இருக்கின்றான்.

கடைக்காரப் பையன் தேனீரைக் கொடுத்து விட்டுப் போகின்றான்.

ஆமி சந்தையின் நாலு மூலையிலும் இருவர் இருவராய் காவலுக்கு நிற்கிறார்கள்.

பொங்கல் முடிந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வெடிகளின் சத்தம் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.

1 Comment on “ஆண்… சிறுகதை

  1. I like this story by Jeeva. In fact I read it out to the Members of ELAB at our Monthly Meeting of 21/02/2015. All members liked it, But we all noted that the Market Administrator who started out as SAARANGAN becomes SANGARAN later. They were also sad for the heroine SEVVANTHY who was almost crushed and thrown away like a flower soon after it bloomed in the morning. Most importantly all of us felt that the TITLE of the story should have been AANKAL (Males) or AANMAI (Malehood or Manhhod) rather than AAN (Male) in the singular. After all there were several males involved who were eyeing her maliciously from the start — The Market Administrator, The Army Men, even the Old Man selling vegetables, and so on.

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)