அன்னதானம்

அன்னதானம்

அன்னதானம்அன்னதானம் போருக்குப் பின்பு மக்களின் பக்தி அதிகரித்து விட்டதோ என நான் நினைப்பதுண்டு.

வானுயர்ந்த ஆஞ்சனேயர்… சிவன்… திருவிழாக்கள். கவனிக்கப்படாது இருந்த எத்தனையோ ஆலயங்களின் மீள் புனருத்தானங்களும்… கும்பாபிசேங்களும்… வருடத்தின் அத்தனை நாட்களிலும் லவுட் ஸ்பீக்கர்களில் காலையில் முதல் வணக்கம் எங்கள் முருகன் தொடங்கி இரவில் காலத்தால் மறையாத காதல் பாடல்கள் வரை போய்க் கொண்டிருக்கும்.

பகலில் முழுத் திரைப்படங்கள்… இடைக்கிடை திரைப்பட நகைச்சுவைகள்.

பாவம் பரீட்சைக்கு செல்லும் மாணவ மாணவிகள்.

தான் தோன்றிப் பிள்ளையார் என்று சொல்வது போல யுத்தத்தின் பின்னரான தான் தோன்றிய விகாரைகளுக்குப் போட்டியாக இவையும் வேண்டும் என்ற நினைப்பைத் தவிர மற்றும் படி இதெல்லாம் தேவையா என நான் நினைப்பதுண்டு.

புத்தருக்கு அரசபணமும் அரசபடைகளும் பின்புலமாக இருந்தது போல… இந்தக் கோயில்களுக்கும் இந்தக் கும்பாபிசேகங்களுக்கு போருக்கு பின்புலமாக இருந்த புலம் பெயர் மக்களில் பெரும் பகுதியினரின் பங்களிப்புகள் பக்க பலமாக இருந்ததை அனைவருமே அறிவார்கள்.

குட்டிக் குட்டி கோயில்கள் எல்லாம் கோபுரங்கள் ஆன பொழுது அதன் அழகும் எளிமையும் போய் விட்டதோ என எண்ணத் தோன்றும்.

சென்ற வருடப்பிறப்பு அன்று என்னால் மருதடிப் பிள்ளையாருடன் ஒன்ற முடியவில்லை. கரகப்பான சீமெந்துத் தரைக்குப் பழக்கப்பட்ட கால்களால் கறுத்த நிற பளிங்கு நிலத்தில் ஒட்ட முடியவில்லை.

பல கோயில்களின் தீர்த்தக் கிணறுகள் மிஸ்ஸிங். அல்லது மிகப் பிரமாண்டமாய்…. அவ்வாறே குட்டிக் குட்டிக் கோயில்கள்…அதன் முன்னே இருந்த தேங்காய் உடைக்க இருந்த பெரிய கல்லும் கற்பூரம் கொளுத்தி கொளுத்தி கறுத்துப் போல சின்னக் கல்லும் மறைந்து போய் இப்போ வர்ண வர்ணத் தூண்கள்… தேங்காள் உடைக்க என்று ஒரு சீமெந்தால் ஆன தொட்டி… கற்பூரம் கொளுத்த இரும்பால் ஆன ஸ்ராண்டும்…. ஐயர் சுவிச்சைப் போட்டவுடன் சேமக்களம் அடிக்கவும் மேளம் அடிக்கவும் சங்கூதவும் வசதிகள் பெருகியிருந்தன.

இந்தக் குட்டிக் குட்டிக் கோயில்கள் ஒழுங்கைகளின் உள்ளே இருக்கும் பட்சத்தில் அந்தக் கோயில்களின் ஒழுங்கை முகப்பில் அந்த அந்த தெய்வங்களுக்கு ஏற்ப ஒரு சின்ன வழிப்பிள்ளையாரோ… வழிமுருகனோ.. வழிஐயனாரோ… வீற்றிருக்க தொடங்கி விட்டார்கள்.

அக்கம் பக்கம் சனங்கள் காலையோ மாலையோ அல்லது இரு நேரமோ கோயில் விளக்கை ஏற்றிக் கும்பிட்டு விட்டு அணைத்துச் செல்வார்கள். சில இடங்களில் சின்ன உண்டியல்களும் காணப்படுகின்றன.

சின்னக் கோயில்களின் நிலை இவ்வாறு என்றால் பெரிய கோயில்களின் வரிசையில் நல்லூர் எப்போதும் பணக்காரக் கந்தனாக இருந்தாலும் என் காதல் என்னவோ சன்னதி அன்னதானக் கந்தன் மேல் தான் இருந்தது. அதன் எளிமை… கடற்காற்று… குருமணல்… மனதை எப்போதும் உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கும்.

நல்லூர் வீதியில் நின்று என் சக வங்கி ஊழியர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடுவதை விட கடலில் குளித்து விட்டு சன்னதி வீதியில் நின்ற பெரிய பூவரசு மர நிழலில் எனது ஊரவர்களுடன் உட்கார்ந்திருந்து சோளப்பொரியுடன் கச்சான் கடலையை உண்பது மனதுக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆனால் இப்போ அங்கும் கட்டங்கள் ஆக்கிரமித்து விட்டன.

000

இந்த வருடமும் வானவேடிக்கைகளுடனும் சாம்பெயின் நுரையுடனும் விடிந்து இத்தியாதி இத்தியாதி கோயில் திருவிழாக்களையும்… அன்னையர் தினம்… காதலர் தினம்… தந்தையர் தினம்… இன்னும் என்னென்னவோ தினங்களுடன் கடந்து செல்லக் காத்திருந்தது.

இதில் பல தினங்கள் வியாபார நோக்குடன் மேலைநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே – மக்டொனால்ட்ஸ், கொக்கோ கோலா வகையறாக்கள் போல.

எங்கள் ஐயனார் கோவிலுக்கு தமிழுக்கு நடுப்பங்குனியில் கொடியேறி பத்து நாட்கள் திருவிழாவின் பின்பு கொடிஇறக்கி கும்பாபிசேகமும் வைரவமடையும் சிறப்பாக முடிய அடுத்த நாள் அதிகாலையோ மதியமோ அல்லது மாலையே வருடம் பிறந்து விடும்.

ஐயனார் கோயில் திருவிழா அத்தனை நாட்களும் அன்னதானத்திற்கு குறைவிராது. தேர்த்திருவிழா என்றால் சக்கரைத் தண்ணியும் மோர்த் தண்ணீரும் கொடுப்பார்கள் – தூரத்தில் இருந்து தாகத்துடன் யாரும் வருவதில்லையாயினும். திருவிழாக் காலங்களில் கோயிலின் முன்னே தகரக் கொட்டகை போடப்பட்டு விடும்.

இதற்காகவே கோயில் நிர்வாகத்தினர் பல பந்திப்பாய்களை தயார் நிலையில் வைத்து இருப்பார்கள். தை மாசி மாதத்தில் அதனை எடுத்து பொத்தல்கள் ஏதாவது இருந்தால் அவற்றைத் திருத்தி வைத்து இருப்பார்கள்.

மொத்தத்தில் அதிகாலையில் சந்தைக்குச் சென்று ஈரம் காயாத மரக்கறிகளை வாங்கி வந்து பெண்கள் ஒரு புறம் இருந்து அவற்றை வெட்டித் தயார் படுத்த ஆண்கள் பெரிய சட்டிகளை கல் அடுப்புகளில் வைத்து அடுப்பு மூட்டுவதில் தொடங்கும்.

திருவிழா நாட்கள் அத்தனையிலும்; அனைவரினுள்ளும் புது இரத்தம் பாயும். தானங்களில் சிறந்தது

அன்னதானம் என்பது இப்பொழுது புலம்பெயர்ந்த நாடுகள் உட்பட அனைத்துக் கோயில்களிலும் நடைமுறையாகி விட்டது – என்னதான் கொலேஸ்ரோல்… பிறசர்….சக்கரை… இத்தியாதி இத்தியாதி வியாதிகள் கூடிக் கொண்டு வந்தாலும். அனைத்து உபயகாரர்களின் வீட்டார்கள் உறவினர்கள்… மற்றும் கோயிலைச் சுற்றி உள்ள குடிமனைகள்… இடம் பெயர்ந்து வந்து இன்னமும் திரும்பிப் போகாமல் ஊர் வீடுகளிலும் ஊர்க்காரரின் தோட்டங்களில் நாட்கூலிக்கு வேலைசெய்பவர்கள்; எல்லோருக்கும்… அங்குதான் பந்தி போட்டு அன்னதானம் நடைபெறும்.

பிச்சைக்காரர்கள் என்று யாரும் அங்கு வருவதில்லை. அதிகுறைந்தது சோற்றுடன் தக்காளியோ கத்தரியோ போட்டு ஒரு குழம்பு… பருப்பு… ஏதாவது ஒரு மரக்கறி… ஒரு துவையல்… அப்பளம்… பொரித்த மிளகாய் என ஆரம்பித்து திருவிழாக்காரர்களின் பொருளாதாரத்திற்கு ஏற்ப இன்னும் உருளைக்கிழங்கு கறி;… பயிற்றங்காய்ப் பிரட்டல்… பாயாசம் வடை என அன்னதானத்தின் அளவு கூடலாம். அல்லது குறையலாம்.

மதிய உணவின் பொழுது உபயகாரர்கள் உட்பட அக்கம் பக்கத்து குடிமனைக்காரர் தங்கள் தங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கும் என்று சிறிய பிளாஸ்ரிக்; பைகளுடன் வந்து அதனுள் சாப்பாட்டை வாங்குவார்கள்.

அதுவே பின்பு சாப்பாடு அனைவருக்கும் போதாது என்று இரண்டொருதரம் சங்கடம் வந்த பொழுது முதலில் அன்னதானம் நடைபெற்று முடிய… பின் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பாடு கொண்டு செல்ல விரும்புவோர் வரிசையில் நின்று பிளாஸ்ரிக் பைகளில் சோறு வாங்கிச் செல்லலாம் என நிர்வாக சபை முடிவெடுத்து நடைமுறைப்படுத்தியது.

எனது காலம் சென்ற அண்ணா மாத்திரம் திருவிழா செய்து அன்னதானம் கொடுப்போர் தங்கள் தங்கள் வீட்டுக்கு சாப்பாடு எடுத்து செல்வது முறையில்லை என வாதிட்டுப் பார்த்தார்.

ஆனால் எவரும் காது கொடுப்பது போலத் தெரியவிலஇலை. எனவே குறைந்த பட்சம் எங்கள் திருவிழா அன்று எங்கள் வீட்டார் எங்கள் வீட்டிற்கு சாப்பாடு எடுத்து வரக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

அவர் இறக்கும் வரையும் அவர் இறந்த பின்பும் அதுவே தொடர்கின்றது. இரவுத் திருவிழா போராட்டக் காலத்தில் இருந்தே இரவு 7 மணிக்குள் முடிந்திருந்தமையால் தற்பொழுதும் அதுவே இந்த பத்து பதினொரு வருடங்களாக தொடர்கின்றது.

இரவில் அன்னதானம் இல்லை. நைவேத்தியத்திற்கு செய்த வெண்பொங்கலோ… சக்கரைப் பொங்கலோ… சுண்டலோ… மோதகமோ… அது அது அந்த அந்த திருவிழாக்காரரின் விரல் வீக்கத்திற்கு ஏற்ப அமையும்.

பகல் திருவிழாவிற்கு வரும் அளவு கூட்டம் இருக்காவிடினினும் சுவாமி வீதிவலம் வருவார். ஐயரும் சர்வமும் ஐயனாருக்கே சமர்ப்பணம் என நடையைச் சாத்துவார்.

000

செல்லாச்சிக் கிழவி வெப்பிகாரத்துடன் பனைவடலிகளுனூடு வந்து கொண்டிருந்தாள். வெயிலுக்கு ஒரு வடலிப் பனையின் ஓலையைத் தலைக்கு மேலாகப் பிடித்தபடி. கிழவன் பசி தாங்காது.

இப்போது வெறும் கையுடன் வீட்டுக்குப் போக கிழவன் தன்னைக் கொன்று கை கழுவி விடும் என்று பயத்துடன் தனது நடையை சின்னத்தம்பியர் கடைப்பக்கம் திருப்பினாள்.

கொடுக்க வேண்டிய கொப்பிக் கடனே ஐந்நூறு அறுநூறு இருக்க இன்று சின்னத்தம்பியர் துள்ளப் போறார் என்பது வேறு கிழவியை வெருட்டியது.


கொப்பிக் கடன் என்னும் பொழுது கடனுக்குரிய வட்டியையும் சாமான் விலைகளில் சின்னத்தம்பி வைத்து விடுவார் என்பது ஊருக்கே தெரிந்த விடயம். அதுவும் தெரிந்தே சின்னத்தம்பியரிடம் வந்திருந்தாள்.

ஆனாலும் கிழவனின் வெருட்டலை விட சின்னத்தம்பியரின் ஏச்சு அவ்வளவு மோசமாக இராது. அதனை விட கிழவனின் கை கால்கள் போல் ஒரு போதும் சின்னத்தம்பியரின் கை கால்கள் பேசாது என்ற தைரியத்துடன் அவரின் கடை வாசலில் போய் நின்றாள்.


இரண்டொருவர் சாமான்கள் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

கிழவி ஓரமாக நின்றதைக் கடைக்கண்ணால் கவனித்த சின்னத் தம்பியார் ”என்ன என்பது போல” கேட்டார்.
”இவையை முதலிலை அனுப்புங்கோ” என கிழவி பவ்வியமாக ஒதுங்கியே நின்றாள்.

அவர்கள் போன பின்பு, “என்ன ஆச்சி வேணும்?”.

“இல்லைத் தம்பி… ஒரு கிலோ உடைஞ்ச பச்சை அரிசியும் கால் கிலோ பருப்பும்” “காசை எடு”

“இல்லை மேனை. கொப்பியிலை தந்தால் இந்த மாதம் முடிய எல்லாம் தீர்த்துப் போடுவன்” “தீர்ப்பாய்… தீர்ப்பாய்… தைப்பொங்கலிலை இருந்து இதைத்தான் சொல்லிக் கொண்டு இருக்கின்றாய்”

“இல்லைத் தம்பி… வருசம் பிறக்கப் போகுது… எல்லாக் கைவியளக்காசையும் கொண்டு முதலிலை உன்ரை கடனைத் தந்திட்டுத்தான் வாயிலை பச்சைத் தண்ணி வைப்பன்”

“சரி… இதுதான் முதலும் கடைசியுமாய் இருக்க வேணும். இன்னும் இரண்டு கிழமைதானே வருசப்பிறப்புக்கு கிடக்குது. உன்ரை சத்தியத்தையும் பார்க்கத்தானே போறன்”

950 கிராம் அரிசியும் 225கிராம் பருப்பும் கை மாறின.

கொப்பியில் கணக்குப் பதிந்தது.

கிழவி கொதிக்கும் தார் றோட்டிலும் மீண்டும் பனைவடலிகளிக் கூடாக சுடு; மணலிலும் ஓட்டமும் நடையுமாய் வந்து கொண்டிருந்தார்.

வழியில் பறுவதத்தின் வேலிக்கு வெளியே நீண்டிக் கொண்டிருந்த கறிமுருங்கை மரத்தில் இருந்து இரண்டொரு கெப்புகளைப் பிடிங்கிக் கொண்டார்.

ஒரு நேரத்திற்கு முருங்கையிலைச் சுண்டல் செய்யப் போதும். பறுவதம் வீட்டு நாய் குலைத்துக் கேட்க இன்னமும் வேகமாக நடையைக் கட்டினார்.

கிழவன் எப்பிடியும் குழம்பிற்கு வழி செய்திருப்பார்.

வீட்டை நெருங்க நெருங்க கிழவன் மாங்காயும் போட்டு வைத்துக் கொண்டிருந்த கருவாட்டுக் குழம்பின் மணம் கிணற்றடியையும் தாண்டி மணத்துக் கொண்டிருந்தது.

கிழவிக்கே நாவூறும் போல் இருந்தது.

படலையைக் கிழவி திறந்ததும் திறக்க முதலே “கண்டறியாத கொரானா ஒண்டாலை கறிக்கடை கூடேலை… பறணிலை தொங்கிய கருவாட்டைத் தான் எடுத்து குழம்பு வைத்திருக்கிறன்” கிழவன் சொல்லிக் கொண்டிருக்க வந்த வெயில் வெட்கைக்கு கிழவி கிணற்றில் தண்ணியை மொட்டிக் குடித்து விட்டு சேலைத் தலைப்பாள் முகத்தைத் துடைத்தபn வீட்டுத் தாழ்வாரத்தில் குந்தினாள்.

“என்ன இண்டைக்கு வேளையோடை வந்திட்டாய். கெதியாய் பெட்டிச் சோத்தை எடு… கொடியேத்தத்துக்கு கணக்க மரக்கறியளோ இண்டைக்கு வைச்சவங்கள். கந்தையரிட்டை பொடி பெட்டையள் வெளியிலை இருக்கிறபடியாலை தங்கட லெவலை இண்டைக்கு காட்டியிருப்பினம்”.

கிழவி விக்கித்து நின்றாள்.

“என்னடி கேட்கிறன். முழுசிக் கொண்டு நிக்கிறாய்…”

கிழவன் கிழவியின் பையை தன் கையில் எடுத்துப் பார்த்தார்.

சின்னத்தம்பி கடையில் வாங்கி வந்த அரிசியையும் பருப்ப பைக்கற்யையும் பார்த்த பொழுது கிழவனுக்கு முகத்தில் ஆயிரம் கேள்விகள்.

”இந்த வருசம் கோயிலிலை அன்னதானம் இல்லையாம். கொரானா வந்ததாலை தனிய பூசைக்காரரும் ஐயரும் தானாம் பகல் பூஜையோடை முடிக்கப் போகினமாம். நீ பசி கிடக்க மாட்டாய் எண்டிட்டு பூசைக்கும் நிற்காமல் சின்னத்தம்பியிட்டை கெஞ்சிக் கூத்தாடி கொப்பிக் கணக்கிலை இதுகளை வாங்கிக் கொண்டு வந்தன்”;.

தூரத்தே கோயில் மணியோசை கேட்டது. கிழவி இரண்டு கைகளையும் எடுத்து கோயிலின் திசையில் குட்பிட்டாள்.

“கும்பிட்டது போதும்… கெதியாய் உலையை வை. கருவாட்டுக் குழம்பு ஆறிக் கொண்டிருக்குது. திருப்பிச் சூடாக ருசி குறைஞ்சு போகும்”

கிழவனுக்கு வெப்பீகாரம் வெடித்துப் பறந்தது.

அன்னதானச் சோறு + கருவாட்டுக் குழம்பு கொம்பினேசன் இன்று கிழவனுக்கு மிஸ்ஸிங் என்பது தான் கிழவனின் வெப்பீகாரத்துக்கு காரணம்.

“ஐயனார் கூட எத்தினை நாளைக்குத் தான் இந்தக் கூத்தைப் பொறுத்துக் கொண்டிருப்பார்”, தனக்குள் புறுபுறுத்தபடி சுளகில் அரிசியைக் கொட்டி அதிலிருந்த சிறிய கற்களைப் பொறுக்கத் தொடங்கினாள் செல்ம்மாச்சிக் கிழவி.

1 Comment on “அன்னதானம்

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)