அது (சிறுகதை)

பெற்ற தாய்தனை மக மறந்தாலும்…

பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்…

உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்…

உயிரை மேவிய உடல் மறந்தாலும்…

கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்…

கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்…

***

”இப்போ எப்படி இருக்கு… ” அவுஸ்திரேலியாவில் இருந்து.

”நாங்கள் வரும் வரை அண்ணாவின் உயிர் தாங்கும் தானே அண்ணி” கனடாவில் இருந்து.

”எப்பிடியும் வாற கிழமை வரை தாங்குவார்” இலங்கையில் இருந்து வெற்றிலைச் சாத்திரியார்.

இந்த வாரம் முழுக்க 5 கண்டங்களிலும் இருந்து தொலைபேசிகளின் இரவு பகல் என்று பாராத தொணதொணப்புகளும்… அக்கறையுடன் கூடிய விசாரணைகளும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. 

அறிவு தெரிந்த வயது தொடக்கம் இந்த 71 வயது வரை ஓடிக்கொண்டிருந்த அவரை சென்ற வாரத்தின் ஒரு அதிகாலையில் அவரின் மூளையின் இடது பக்கத்தில் அமைந்திருந்த சிறிய இரத்தக் குழாயினுள் வந்த வெடிப்பு அவரின் வலது பக்கம் அனைத்தையும் இழுத்து அவரை கட்டிலில் கிடத்தி விட்டது.

”அடைப்பு என்றால் பயிற்சிகள் கொடுத்து கொஞ்சம் கொஞ்சம் சக்கர நாற்காலியில் வைத்து அவரின் வாழ்க்கையை நகர்த்தி இருக்கலாம். இது வெடிப்பு. இனி அவருக்கு எங்களால் உதவ முடியாது. நீங்கள் தான் வீட்டில் வைத்து நகரசபையின் சுகாதாரப்பிரிவின் ஒத்துழைப்புடன் அவரைப் பராமரிக்க வேண்டும்” தலைமை வைத்தியர் கூறியபடி தன் கைகளை கழுவி விட்டு பக்கத்து கட்டிலுக்கு நகர்ந்தார்.

”எவ்வளவு காலத்துக்கு டாக்டர்…? சுபத்திரா விக்கித்தாள்.

”இன்னோர் அடைப்பு அல்லது வெடிப்பு வராதவரை… அதுக்குத்தான் மருந்து கொடுக்கத் தொடங்கி இருக்கின்றோம்”

சுபத்திராவை மகளும் மூன்று பேரப்பிள்ளைகளும் அணைத்துக் கொண்டார்கள்.

”கோபி” என பள்ளிப்பருவத்தில் இருந்து எல்லோராலும் செல்லமாக அழைக்கப்பட்டும்… ஊருக்கே செல்லப்பிள்ளையாக இருந்து இன்று ஐரோப்பாவே அறிந்த ”கிருஸ்ணா” முதலாளியாக என வளர்ந்து வந்த கோபி கிருஸ்ணா டென்மார்க்கின் விசேட பெரிய ஆஸ்பத்திரிக் கட்டிலில் ஆடாது அசையாது படுத்தபடி முகட்டினைப் பார்த்தபடி இருந்தார்.

கண்களின் கரையோரங்களில் கண்ணீர் கசிந்து கொண்டிருக்க சுபத்திரா துடைத்துக் கொண்டு நின்றாள்.

தலைமை வைத்தியர் மற்ற நோயாளியைப் பார்த்து விட்டு அவர்களின் அறையை விட்டு சென்று சுமார் இரண்டு மணி நேரம் தான் இருக்கும்.

கிருஸ்ணா முதலாளியின்; தலை ஒரு தரம் உதறியது.

நேர்ஸ்மாருமாரும் தலைமை வைத்தியரும் அவரை மீண்டும் சூழ்ந்து கொண்டார்கள்.

சுபத்திராக்கு நடுக்கம் கண்டது.

”பயந்தபடி நடந்து விட்டது! அவரின் மூளைக்குள் மீண்டும் ஒரு வெடிப்பு வந்து அவரை கோமா நிலைக்கு கொண்டு போய் விட்டது”

சுபத்திரா பெரும் குரல் எடுத்து குழற ஆரம்பித்தாள்.

மகளும் மருமகனும் ஆறுதல்படுத்தினார்கள்.

பேரப்பிள்ளைகள் பயந்து போய் அறையின் ஒரு மூலையில் போய் நின்று கொண்டார்கள்.

”தயவு செய்து இவ்வாறு பலத்து அழாதீர்கள். அவரால் பேசமுடியாது இருக்கின்றாரே தவிர நீங்கள் பேசுவது அழுவது எல்லாம் அவருக்குக் கேட்கும். உங்களுக்குப் பதில் சொல்லவோ… அல்லது உங்களைத் தேற்ற முடியாது மிகவும் வருந்துவார்;”

அக்கணத்தில் தொடங்கிய தொலைபேசி வெளிநாட்டு அழைப்புகள் இந்த மூன்று நாளும் தொடர்ந்தபடியே இருக்கின்றன.

***

பகலிலும் இரவிலும் சுபத்திராவைச் சரி… பிள்ளைகளைச் சரி… அவரின் அறையில் தங்க ஆஸ்பத்திரி நிர்வாகம் அனுமதித்து இருந்தாலும் அவரின் தேவைகள் அனைத்தையும் வைத்தியத் தாதிமார்களே நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள் – ஒன்று அல்லது இரண்டுக்கு கூட சிறிய மின்தூக்கியின் உதவி வழங்கப்பட்டது.

இரவில் கூட சாரம் அங்கிங்கு அசைந்தாலும் எழுந்து அதனை சரியாக அணிந்து கொண்டு மீண்டும் தூங்கச் செல்லும் அவரைää நிர்வாணமாகத் தூக்கி அவரைத் துப்பரவு செய்வதைப் பார்க்க சுபத்திராக்கு அடிவயிறு வறுகியது.

”இப்பிடி இந்த மனுசன் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதை விட அம்மாளாச்சியே அவரைக் கொண்டு போய்விடு”  – சுபத்திரா தன் குல தெய்வங்கள் அனைத்தையும் வேண்டினாள்.

கோபியோ தன்னைச் சுற்றி என்ன ஏது நடக்கின்றது என்ற பிரக்ஞ்சை ஏதும் இல்லாமால் கனவுலவுக்கும் நிஜவுலகிற்கும் இடையில் அவரின் நினைவுகள் ஊசலாடிக் கொண்டிருந்தது.

கோபிகிருஸ்ணா என பெயர் வைத்ததாலோ என்னவோ பள்ளிப் பால்ய பருவத்தில் இருந்து அவரைச் சுற்றி பல கோபியர்கள். அல்லது பல கோபியர்களைச் சுற்றி இந்த கிருஸ்ணா.

அனைத்து முகங்களும் முதன் முதல் முகத்தில் அரும்பிய மீசையை எடுத்தது போல மறைந்து போனாலும்… நிம்மியின் முகம் மட்டும் நெஞ்சாங்கூட்டத்தைத் திறந்து இதயத்தில் பச்சை குற்றி நிலைத்து நின்றது.

நிம்மி என்ற பெயரே அவர்கள் இருவரின் இரண்டாவது சந்திப்புக்குப் பின்புதான் அவளது கொப்பியியின் முன் பக்கத்தில் இருந்து கண்டு கொண்டது தான்.

காலையிலும் மாலையிலும் பாடசாலைக்கு சைக்கிளில் போய் வரும் பொழுது கடந்து செல்லும் பொழுது எத்தனையோ பெயரறியாத மனிதர்கள் போலத்தான் ஒருநாள் நிம்மியையும் கடந்து போக நேர்ந்தது.

காலையில் வயலில் புல்லுப் பிடுங்க வரிசை வரிசையாக செல்லும் பெண்கள்… தோட்டத்திற்கு தண்ணி பாய்ச்ச துலாவில் ஏறி நின்று முன்னே பின்னே மிதிக்கும் ஆண்கள்… ஓட்டமும் நடையுமாக தண்ணி வடிய வடிய கீரைக்கட்டுகளை சந்தைக்குப் போகும் தோட்டக்காரர்கள்… மீன்களை கடற்கரையில் வாங்கி விற்க கூடையை இடுப்பில் காவியபடி கூட்டமாக செல்லும் பெண்கள்…

இந்த வரிசையில் காலையில் பஸ்சுக்காக நெஞ்சுடன் புத்தகங்களை அணைத்தபடி நின்றிருந்த அவளை கோபி முதன் முதலாகக் கண்ட பொழுது அவனது சைக்கிளின் வேகம் தானாகவே குறைந்த பொழுது அவனுக்கே வியப்பாய் இருந்தது.

கழுத்துப்பட்டிகள் பாடசாலைகளின் முகவரிகளைச் சொன்னாலும் இத்தனை நாட்களாக இவ்வாறான ஒரு கழுத்துப்பட்டியுடன் ஒருத்தியை  நான் காணவில்லையே… அல்லது இன்று போல் அவள் என்னைக் கூர்ந்து பார்க்வில்லையா என்ற எண்ணத்துடன் கடந்து போனாலும் பாடசாலையின் முதல் மணி அடித்தது தொடக்கம் கடைசி மணி வரை அவள் புத்தகக் கட்டுடன் அவன் முன்னே நின்றிருந்தாள்.

கழுத்துப்பட்டி மட்டும் அவனுக்குத் தெரிந்த எந்த பெண்கள் பாடசாலையுடனுடனும் சரி… இந்து மகளிர் கல்லூரிகளுடன் ஒத்துப் போகவேயில்லை.

”அடுத்தநாள் வரை காத்திரு” – அறிவு இடித்துரைத்தது.

ஆனால் அடுத்தநாள் சனிக்கிழமை என கலண்டர் கண் சிமிட்டிய போது ஞாயிறும் காத்திருக்க வேண்டியிருந்து எரிச்சலாக இருந்தது. அவனை இரு நாட்களும் கிறிக்கட் கிறவுண்டில் காணாதது அவனது நண்பர்களுக்கு வியப்பாய் இருந்தது.

தலையை கைளால் கோதி விட்டு சைக்கிளை எடுத்துப் பாடசாலை செல்லும் அவன் திங்கள் காலை கண்ணாடி முன் சற்று அதிக நேரம் நின்றது அவனது மூத்த தமக்கைக்கு கொஞ்சம் வியப்பாய் இருந்தாலும் ஏதும் அவனைக் கேட்கவில்லை – ஒரு நமுட்டுச் சிரிப்புடன் அவனை விலத்திச் சென்றாள்.

சைக்கிள் வீதியில் விரைந்தது.

தூரத்தில் அதே பஸ்தரிப்பு நிலையம் – அதே மாணவ மாணவிகள் கூட்டம் – வெள்ளை உடையுடனும் வௌ;வேறு நிற கழுத்துப்பட்டிகளுடன்.

அவர்களைக் கடக்க முதல் அவனது முகம் 30 பாகையிலும்… கடந்து கொண்டிருக்கும் பொழுது 45 பாகையிலும்… 60 பாகையிலும்… இறுதியான 90 பாகையிலும் திரும்பிப் பார்த்தது.

அவளைக் காணவில்லை.

120 பாகைக்கு தலையைத் திருப்பினால் சைக்கிள் எங்காயாது மோதிவிடும் என்ற அச்சத்தில் விக்கிரமாதித்தின் முயற்சி கை விடப்பட்டது.

சிறிது தூரம் முன்னே சென்றவன் தனது சைக்கிளை வட்டமடித்து திருப்பினான்.

”வீட்டை சொல்லி விட்டியா வந்தாய்  தம்பி” ஆட்டோக்காரன் ஏசிச் சென்றது அவனுக்குக்கு கேட்கவில்லை.

அவன் சைக்கிளைத் திருப்பியதை கண்ட ஒரு சிறுவன்ää ”என்ன அண்ணை இண்டைக்குப் பள்ளிக்கூடம் ஹர்த்தாலா?

பஸ்தரிப்பு நிலையமே கொல்லெனச் சிரித்தது.

பின் எத்தனையே நாட்கள் அந்த பஸ்தரிப்பு நிலையத்தைக் கடந்த பொழுதும் அவளை அங்கு காணமுடியவில்லை.

கழுத்துப்பட்டியின் நிறமும் வடிவமும்… அவனுக்குள்  பாடசாலையின் விலாசத்தைச் சொன்ன பொழுது அவனுக்கு அது பெரிய அதிர்ச்சியை தந்தாலும் நாகரீகம் கருதி அவளது பாடசாலை வாசலில் போய் நிற்க அவன் துணியவில்லை.

அடுத்த இரண்டு மூன்று மாதங்கள் வெறுமையாகவே காலை-மாலை சைக்கிள் பயணம் தொடர்ந்தது.

உயர்தரப் பரீட்சை கிட்டிய போது மிகவும் தூரத்தில் இருந்த ஒரு ரியூசன் நிலையத்துக்கு போய் வரவேண்டியிருந்தது.

எனவே அவனது சைக்கிள் பயணம் பஸ்சுக்கு தாவியது.

கிட்டத்தட்ட அவளின் நினைவும் முகமும் மறையத் தொடங்கிய ஒரு நாள் மாலை மிகவும் நெருக்கமான பஸ்சினுள் அவன் நசுங்கிக் கொண்டு நின்ற போதுää ”உங்கள் புத்தகப் பையை நான் வைத்திருக்கவா?”.

அவனால் நம்ப முடியவேயில்லை.

அவளே தான்.

”வித் பிளசர்”

”எங்கிருந்தடா உனக்கு ஆங்கிலம் வருகிறது?” பக்கத்தில் நின்ற நண்பன் காதுக்குள் குசுகுசுத்தான்.

பின்னங் காலால் அவனை உதைத்தபடி தன் புத்தகப் பையை அவளிடம் கொடுத்தான்.

புன்முறுவலுடன் அவள் வாங்கிக் கொண்டாள்.

அவளது மடியில் இருந்த அவளின் புத்தகங்கள் மீது இவனது புத்தகப்பை குந்திக்கொண்டது.

அவன் ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்தான்.

மெதுவாக குனிந்து அவளின் புத்தகங்களைப் பார்த்த பொழுது அவளின் பெயர் நிம்;மி  என ஆங்கிலத்தில் எழுதியிருதது.

”தம்பியாக்கள் முன்னாலை போங்கோ”

இவன் அசையவேயில்லை.

அவளின் அருகே நின்று கொண்டான்.

அவனை அறிந்தோ அறியாமலோ அவளின் தோள்மூட்டடின் தான் முட்டிக் கொண்டிருப்பது அவனக்குத் தெரிந்தது.

அவளும் கண்டு கொண்டது போலவோ அல்லது இவனது உரசலில் இருந்து விலத்திப் போனது போலவே தெரியவில்லை.

பயணம் தொடந்தது – மயிலிறகால் தடவும் உணர்வுடன்.

அவளை முதன்முறை சந்தித்த பஸ்தரிப்புக்கு எதிர்பக்கத்தில் இருந்த தரிப்பில் அவள் இறங்குவதற்காக எழுந்த புத்தபங்களை கைமாற்றிய பொழுது கைமாறியது புத்தகங்கள் மட்டுமில்லை என்பது இருவருக்குமே புரிந்தது.

அவள் இறங்கிவிட்டாள்.

பஸ் புறப்பட்டது.

அவனால் எதிலும் இருந்து இறங்க முடியவில்லை.

பஸ் செல்லும் திசையில் நடக்கின்றாளா… அல்லது எதிhஇ திசையில் நடக்கின்றாளா என நதிமூலம் ரிஷிமூலம் அறிய ஆசைப்பட்டான்.

”நானும் இறங்கி இருக்க வேண்டும்… இறங்கி இருக்க வேண்டும்…” என மனம் சொல்லிக் கொண்டே இருந்தது – அவன் வீடு வந்து சேரும் வரை.

மீண்டும் சந்திக்கலாம் தானே என அன்றைய தூக்கமில்லா இரவில் தன்னைத் தான் சமாதானப்படுத்தினாலும் மீண்டும் வந்த எத்தனையோ பஸ்பிரயாணங்களில் அவளைக் காணவில்லை.

தொலைக்காட்சியில் மாயமானை இலக்குவன் துரத்திக் கொண்டு இருந்தான்.

***

உயர்தரப்பரீட்சை முடிந்து ரிசல்ட் வரும்வரை காத்திருந்த ஒரு நாள் ரவுணில் இருந்த சினிமா கொட்டகைக்கு காலைக் காட்சிக்கு வந்திருந்தான்.

அதிகமாக ஆங்கிலப்படம் ஓடும் திரைஅரங்கு அது.

செவன் நைற்ஸ் இன் ஜப்பான் (7 Nights in Japan) என்ற ஆங்கிலப்படம்.

ஒரு இளவரசனுக்கும் சாதாரண ஒரு பெண்ணுக்குமான காதல் கதை.

இசையும் காதலும் இணைந்த இளம் காதலர்கள் இருவரின் காதல் காட்சி ரொம்ப ரம்மியாக இருக்கிறது என்ற விமர்சனம் வழமைக்கு அதிகமான அன்றைய கூட்டத்திற்குக் காரணமாக இருக்கலாம். 

எழுத்தோட்டம் போய்க் கொண்டிருந்து.

ஏழெட்டு மாணவிகள் தங்கள் கழுத்துப் பட்டிகள் இல்லாது இருட்டினுள் சிரித்து சத்தம் போட்டு சிங்களத்தில் பேசியபடி உள்ளே வந்து தாங்கள் ஒன்றாக அமர இடம் தேடிக் கொண்டிருந்தார்கள்.

படம் பார்ப்பவர்களுக்கு அவர்களுது சத்தம் எரிச்சலாக இருந்து.

இவனுக்குப் பக்கத்தே இருந்த வெறும் இருக்கைகள் அவர்களுக்குப் போதுமாய் இருந்தது.

அவர்களும் வந்து அமர்ந்து கொண்டார்கள்.

பக்கத்தே வந்து அமர்ந்தவளை திரும்பி பார்த்த இவனுக்கும் அவளுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.

அவளே தான்.

மூளை திடீரென கூகிள் போட்டு கண்டு பிடித்து விட்டது.

பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகேயிருந்த பேக்கரி முதலாளி தாடிமாமாமின் மகள்தான் அவள்.

என்றோ ஒரு நாள் தற்சமயமாக அவள் பஸ்ஸிற்காக காத்திருக்க வேண்டும் – அல்லது பஸ்ஸில் சென்றிருக்க வேண்டும். இந்த இரண்டு நாளும் இவள் இவனுக்காக என விதி கட்டம் போட்டிருக்க வேண்டும்.

இன்று மூன்றாவது தடவை.

அடுத்த வினாடி எதையும் அவன் யோசிக்கவில்லை.

இருட்டினுள் அவளது கையை அழுத்திப் பிடித்துக் கொண்டான்.

அவளும் ஏதும் மறுக்கவில்லை.

பின் இவனது கைகள் அவன் கையுனுள்.

அல்லது அவன் கைகள் அவள் கைகளினுள்.

படம் முடியும் வரை எதையும் பேச முடியாத சூழ்நிலை.

ஆனால் படம் முடியும் வரை இருவரும் இருவரையும் பார்த்துக் கொண்டும் புன்சிரிப்பும் உதிர்த்துக் கொண்டே இருந்தார்கள்.

அவளின் முகமும் வியர்த்து கைகளும் குளிந்திருந்ததை அவனால் உணரக் கூடியதாக இருந்தது.

படம் முடியும் போதுää “நாளையும்” என அவளுக்கு மட்டும் காதில் விழுமாறு சொல்லி விட்டான்.

அவளும் தலை ஆட்டினாள்.

ஆனால் அன்றிரவு தின்னவேலியில் நடைபெற்ற இராணுவ வாகனத்தின் மீதான தாக்குதல் அனைத்தையும் ரத்தாக்கி விட்டது.

பின் நாட்டில் அமைதி (?) நிலவிய போது… மலைநாடுகளிலும் கொழும்புப் பிரதேசங்களிலும் எங்களின் புகையிலைக் கடைகளும்… சாப்பாட்டுக் கடைகளும்.. மற்றும் மற்றும் வியாபார அங்காடிகள் திறக்கப்பட்ட பொழுதும்… தாடிமாமாவினது சரி… எந்த மாமாவினது சரி பேக்கரிகள் யாழ்ப்பாணத்தில் எங்கும் திறக்கப்படவேயில்லை.

எத்தனையோ காலைக்காட்சிகள்; வந்த பொழுதும் கூட அவளைக் காணவேயில்லை.

தாடிமாமாவின் வீடு வெறுமையாகவே இருந்தது.

நிம்மி என்ற அவளது பெயர் அவனுள் சுருக்கிக் கொண்டும்… நினைவுகள் வானுயரத்துக்கு விரிந்து கொண்டும் இருந்தது. 

***

வாழ்வின் முதல் அத்தியாயத்தைக் கடந்து பல்கலைக்கழகம் சென்று… பின் வெளிநாடு வந்து … அவனுக்காக பெண் பார்க்த் தொடங்கியவரை நிம்மி என்னும் நிர்மலாவை அவன் தேடிக் கொண்டு இருந்தான்.

அவளைக் கண்டு கொள்ளவே முடியவில்லை.

எதற்கும் காத்திராத காலம் அவனுக்கும் சுபத்திராக்கும் முடிச்சை போட்டு விட்டு அது தன் வழியில் சென்று விட்டது.

பின்பு விடுமுறைகளுக்கு ஊருக்குச் செல்லும் பொழுதும் சரி… பின் நாளில் லங்காசிறியில் மரணச் செய்திகளைப் பார்க்கும் பொழுதம் சரி… அவளின் முகத்தை அவன் கண்கள் தேடிக் கொண்டேயிருக்கும்.

வீட்டினுள் மனைவியுடன் சரி… மகளுடன் சரி… ஏதாவது வாக்குவாதம் வந்து மனம் நொந்திருக்கும் பொழுதும் சரி… நிம்மி என்ற நிர்மலாவே வந்து சமாதானம் செய்வாள்.

“நாங்கள் இருவரும் திருமணம் செய்திருந்தாலும் கூட நாங்களும் சண்டை போட்டுத்தான் இருப்பமடா”

இவனின் கைச்சிறையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு நெற்றியில் முத்தமிட்டுவிட்டுச் செல்வாள்.

***

கிட்டத்தட்ட நடுநிசி.

ஆஸ்பத்திரி அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தது.    

சுபத்திரா கதிரையில் நன்கு அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தாள்.

இரவு நேரத் தாதி இடைக்கிடை வந்து அவரை சுற்றி பூட்டியிருந்த கணனித் திரைகளின் தகவல்கள் வரி வரியாகப் போய்க் கொண்டு இருக்கின்றதா எனப் பார்த்துக் கொண்டாள்.

கோபிக்கு தான் ஏதோ ஒரு ஏகாந்தத்தில் இருப்பது போல இருந்தது.

நிம்மி – பஸ் தரிப்பில் புத்தபங்களை அணைத்தபடி…

நம்மி – அவரது புத்தகப் பையை அவளது வைத்தபடி…

நிம்மி – அவரின் கைகளுடன் தன் கைகளைத் கோர்த்த படி படம்பார்த்தபடி…

திடீரென கணணித்திரையின் வரைபுகள் நேர்கோட்டில் செல்ல… அலாரம் அடிக்கத் தொடங்க… சிவப்பு விளக்குகள் விட்டு விட்டு எரியத் தொடங்கியன.

நேர்ஸ்மாரும் ஓடி வர சுபத்திரா திடுக்கிட்டு எழுந்தாள்.

“சொறி சுபத்திரா” என்றவாறு ஒரு தாதி சுபத்திராவை அணைத்துக் கொண்டாள்.

இன்னுமோர் தாதி வெரின் தலைமாட்டில் ஒரு மெழுகுதிரியை கொளுத்தி வைத்து விட்டு யன்னல்களை நன்கு திறந்து விட்டாள்.

***

கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்…

கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்…

உயிரை மேவிய உடல் மறந்தாலும்…

உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்…

பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்…

பெற்ற தாய்தனை மக மறந்தாலும்…

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)